20 ஜனவரி 2019

“மக்கள்-தேவர்-நரகர்-எஸ்.ஷ. சிறுகதை - வாசிப்பனுபவம்


கட்டுரை                     உஷாதீபன், 

“தருணம்” சிறுகதைத் தொகுதி – “மக்கள்-தேவர்-நரகர்“ –எஸ்.ஷங்கரநாராயணன்  

சிறுகதை வாசிப்பனுபவம்.(வெளியீடு =  நிவேதிதா பதிப்பகம், சென்னை)
     
 

புத்தகத்திற்கு வைக்கும் தலைப்பில், உள்ளே கதையில்லாமல் பார்த்துக் கொள்பவர் இவர். இப்படியான ஒரு முறைமையை, புதுமையை வகுத்துக்கொண்ட எழுத்தாளர் வேறு எவருமில்லை எனலாம். தலைப்பிலிருந்து உள்ளே அடங்கியுள்ள படைப்புக்கள் வரை எல்லாவற்றிலும் ஒரு புதுமை படிந்திருக்க வேண்டும் என்கிற இவரது எண்ணமும் முயற்சியுமே வித்தியாசமான இலக்கிய வகைமையைச் சார்ந்தவர் இவர் என்பதை நமக்கு அடையாளம் காட்டுகிறது.  
தொகுப்பிற்கெனத் தேர்வு செய்யப்பட்ட எல்லாக் கதைகளும் எதை மையமிட்டுச் சொல்கிறதோ அந்தக் கருத்துக்கு அல்லது அந்த நிகழ்வுகளுக்குப் பொருத்தமான, அழகான ஒரு தலைப்பிட்டு தொகுதியின் தகுதியை நிர்ணயித்து, தூக்கி நிறுத்தும் வல்லமை கொண்டவர்
    . சாதாரண வாசகர்கள் என்ன இது, வச்சிருக்கிற தலைப்புக்கு உள்ளே கதையைக் காணோம் என்று தேடுவார்கள். அப்படித் தேடுபவர்கள் எதற்காக இந்தத் தலைப்பு என்ற அடுத்த கட்டத்திற்கு வரக் கூடும். அப்போது புரிபடும் இந்த சூட்சுமம். சம்பிரதாயமாக, தொகுதியில் அடங்கியுள்ள பத்துப் பதினைந்து கதைகளில்  சிறப்பாக, படைப்பாளி எதைக் கருதுகிறானோ அல்லது சிறந்த தலைப்பாக எதைத் தேர்ந்தெடுக்கிறானோ அதை வைத்துவிட்டுப் போவதுதான் இன்றுவரையிலான சடங்காக இருக்கிறது. அப்படித் தேர்ந்தெடுத்த சிறுகதை, தொகுதியின் சிறந்த கதையாக இருக்க வேண்டுமென்கிற அவசியமில்லை. இல்லாமலும் போயிருக்கிறது. படைப்பாளிக்கே பெருமையாய் நினைத்துக் கொள்ளும் அளவில் அவரே எதிர்பாராத வகையில் சிறப்பாகத் தோன்றிவிட்ட ஒரு தலைப்பை, அதன் மீது ஏற்பட்டுவிட்ட மையலில், ஏதேனும் ஒரு கதைக்கு சற்றேறக் குறையயப் பொருத்தமாகச் சூடி அதுவே புத்தகத்தின் தலைப்பு என்று வரித்துக் கொள்ளும் அதிசயமும் நிகழ்ந்திருக்கிறது. இந்தத் தொகுதியின் வகைப்பாடு முற்றிலும்  அர்த்தம் பொருந்தியதாக அமைந்த ஒன்று.  
எண்ணற்ற வாசகர்களை எட்டுவது என்பது கேளிக்கை எழுத்தாளனின் நோக்கம். இலக்கிய எழுத்தாளனின் நோக்கம் எழுத்தாளர்கள் போற்றும் எழுத்தாளனாயிருத்தல் என்பது மரபு.  எங்கோ, எதிலோ படித்ததாக நினைவு.  அப்படியானால் இலக்கிய எழுத்தாளனுக்கு வாசகர்கள் வேண்டாமா? இருக்கும் மற்றைய எழுத்தாளர்கள் மட்டும் அவன் படைப்பைப் படித்தால் போதுமா? அதில் திருப்தி கண்டு விடுமா மனம்? வளமான வாசக எண்ணிக்கையை அவன் நாடுவதில்லையா?
     அது அப்படி அல்ல. படைப்பாளி முதலில் தன் திருப்திக்கு எழுத வேண்டும். அந்த திருப்தி இலக்கியத் தகுதியுடையதாய் இருக்க வேண்டும். அந்தத் தகுதியை அவன் வளர்த்துக் கொண்டு படைப்பவனாய் இருத்தல் வேண்டும். அப்படியானால் முதலில் அவன் ஒரு சிறந்த வாசகனாய் இருந்தாக வேண்டும். அவனே வாசகன் என்கிற நிலையில் இருந்துதானே கடந்து வந்து படைப்பாளியாய் மாறுகிறான்? படைப்பாளியாய் மாறிய பின்பும், தொடர்ந்த வாசகனாய் இருப்பதில்தானே தன் தகுதியைத் தக்க வைத்துக் கொள்கிறான்?
     ஆக, வாசகனைப் புறக்கணிப்பது என்பது சற்றும் சாத்தியமில்லை. அவனின் பாராட்டுதல்களுக்காக, அந்தச் சொல்லுக்கு ஏங்கும் அற்புதத் தருணங்களுக்காக தன்னை அடையாளப்படுத்தும், நிலை நிறுத்தும் கதையாடல்களுக்கு அவன் முயற்சித்துக் கொண்டேயிருக்கிறான்.
     அப்படி முயற்சித்து, அழியாது நிலை பெறுகிற சம்பவங்களையும், நிகழ்வுகளையும் உள்ளடக்கிய காத்திரமான சிறுகதைகளைக் கொண்ட முக்கியமான தொகுப்புதான் எழுத்தாளர் திரு.எஸ்.ஷங்கரநாராயணன் கொண்டு வந்துள்ள “தருணம்” என்கிற பல்வேறு எழுத்தாளர்களின் கதைகளடங்கிய  சிறுகதைத் தொகுப்பு.
     புதிய இலக்கு, புதிய தடம் என்கிற மெய்மொழியைச் சுமந்து வரும் சென்னை, நிவேதிதா பதிப்பகம் இத்தொகுப்பின் தகுதியறிந்து வெளிக் கொணர்ந்திருப்பது சாலச் சிறந்ததாய் அமைகிறது.
     பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்.. எனும்போது அதை நிறைவேற்றும் நிமித்தம் இந்த நல்ல தொகுதிக்குக் காரணமாயிருந்த படைப்பாளி திரு.எஸ்.ஷங்கரநாராயணன் அவர்களின் கதையையே இந்தக் கட்டுரையின் வாசிப்பனுபவத்திற்கு எடுத்துக் கொள்வது என்று முடிவாயிற்று.
     எழுத்தில் சொல்லியதைவிட, சொல்லப்படாததைப் புரிந்து கொள்வதில்தான் ரசனை அதிகம். அப்போதுதான் படைப்பின் மகிமை தெரியவரும். அந்தச் சொல்லப்படாததைப் புரிந்து கொள்வதற்கு படைப்பாளிகள் ஒரு வார்த்தை, ரெண்டு வார்த்தை அல்லது ஒரு சின்ன வாக்கியம்தான் உதிர்ப்பார்கள். மற்றது நம் கற்பனையில் ஓட வேண்டும். உள்ளொளி பரப்பும் விஷயம் இதுதான் என்பதை உணரும் அதிசயத் தருணங்கள் அவை. எஸ்.ஷ. இதைத்தான் செய்கிறார். யாரும் எழுதாத, யாராலும் எழுதப்படாத வரிகளை ஒரு படைப்பாளி எழுதியாக வேண்டும். அந்தக் கடப்பாடு ஒரு இலக்கியப் படைப்பாளிக்கு இருந்து கொண்டேயிருக்கிறது. அதை உணர்ந்து நகருவதே அவனுக்கு அழகு.
பெண் அனுபவிக்கும் பிரசர வலியைத் தானே அனுபவிப்பதுபோல் எழுதியுள்ளதுதான் இக்கதையின் சிறப்பு.  படிப்பவர்கள், எழுதியது ஒரு பெண் எழுத்தாளரோ என்று ஐயப்பட வாய்ப்பிருக்கிறது. அடிப்படை ஆழ்ந்த  ரசனைதான். அழகியல் ரசனை. இலக்கியத்தில் அழகியல் என்பது ரொம்ப ரொம்ப முக்கியம். இல்லையானால் அது வெறும் பிரச்சாரமாய்ப் படிந்து நிற்கும் அபாயம் உண்டு. அந்த வானளாவிய, வரிசையான மரங்களைப் பார்க்கும்போது இவனுக்கு இவன் மூதாதையர்களைப் பார்ப்பது போன்ற உணர்வு ஏற்பட்டது என்று எழுதுவதுதான் அழகியல். வெறுமே வரிசையாக நின்ற பெரிய பெரிய மரங்களைப் பார்த்துக் கொண்டே நடந்தான் என்றால் அது என்ன ரசனை? பசுமை அடர்ந்த மரக்கிளைகளின் நடுவே இருள் படுத்துக் கிடந்தது என்று சொல்லத் தெரிய வேண்டும்…அப்போதுதான் வாசகனுக்கு அவன் அவ்வாறு ஏற்கனவே பார்த்து ரசித்திருந்த காட்சிகள் கண் முன்னே விரியும். ஆஉறா…ஆஉறா…என்று முன் நகர்த்திச் செல்லும். ஒரு சிறு விஷயத்தைக் கூடப் பெரிதாக்கிச் சொல்ல முடியும். உடம்பாலும் மனசாலும் அதை அனுபவிக்கத் தெரிந்திருந்தால்…!  
இந்தக் கதையைப் படித்தபோது பாலுவாய் நான் இருந்தேன். என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தேன். முடிவெடுக்க முடியாமல் திணறினேன். இதையெல்லாம் வாசகனாகிய நான் உணரும்போது அந்தப் படைப்பை ஆழ்ந்து படித்திருக்கிறேன் என்பதும், என்னை உள்ளே இழுத்துக் கொண்டு செல்லும் திறன் அந்த எழுத்துக்கு இருந்திருக்கிறது என்பதும், அதனால்தான் அந்தக் கதாபாத்திரத்தின் வலிகள் என் வலிகளாகி என்னை இம்சித்திருக்கின்றன என்பதும் சத்திய வாக்குகளாய் அமைகின்றன.
ஆண்கள் எப்போதுமே பலவீனமானவர்களாகவே இருக்கிறார்கள். அதனால்தான் பெண்களுக்குக் குழந்தை பெறும் பாக்கியத்தை இறைவன் வழங்கியிருக்கிறான். நம் வீட்டில் முக்கியமான கால கட்டங்களில் அவர்களின் செயல்பாடுகளில் உள்ள நிதானமும், நம்மின் இயங்கு முறையில் படிந்துள்ள பதற்றங்களும் இதற்கு உதாரணமாகக் கொள்ளலாம். மனைவியின் பிரசவவலி, அவள் படும் அவஸ்தைகள் இவனைப் பாடாய்ப் படுத்துகின்றன.
இந்த உலகத்தில் உள்ள எல்லா ஆண்களும் தாயின் வயிற்றிலிருந்து வந்தவர்கள்தானே! அவர்கள் எத்தனை வயதை அடைந்தாலும், எவ்வளவு பெரியவர்கள் ஆனாலும், அம்மாவுக்கு அவர்கள் என்றும்  குழந்தைகள்தான். தாயின் மனம் அப்படித்தான் நினைக்கும்.
“அவனுக்குத் தூக்கம் வரவில்லை…அம்மாவின் பக்கத்தில் வெறுமே கண்மூடிப் படுத்துக் கிடந்தான். இந்த நெருக்கடியில் அம்மா கூட இருப்பது தெம்பாய் இருந்தது. பிரசவம் அறிந்த ஒரு ஜீவன். அவளை அணைத்துக் கொண்டு படுத்துக் கிடந்தான். என்றைக்கும் அவன் அவள் குழந்தைதான். எத்தனை வயதானால்தான் என்ன?”
மனைவி வலியில் திணறுவதைக் கண்டு அவன் மனம் பதறுகிறது. எந்தவகையிலும் உதவ முடியவில்லையே என்றும், ஏதோவொரு வகையில் அவளின் இந்த வலிக்குத் தானும்தானே காரணம் என்ற குற்றவுணர்வும் அவனை வாட்டுகிறது.
அம்மா அவனைப் பார்த்துப் புன்னகைத்தாள். அவனுக்கு வெட்கமாய் இருந்தது.
பல ஆண்களுக்கு இவ்வளவுதான் முடியும் என்பதே நடப்பியல் உண்மை.
மணி என்ன தெரியவில்லை என்றுவிட்டு வெளிவரத் துடித்துக் கொண்டிருக்கும் குழந்தை ஒரு முண்டு முண்டிவிட்டு, ஏதோவொரு அசதியில் மீண்டும் தூங்க ஆரம்பித்துவிட்டதை, இரண்டு முறை வலி வந்து, தன்னைப் போல் அடங்கி விட்டது என்று  விவரிக்கிறார்.
அந்தந்த மக்களின் வாழ்வியல் கலாச்சாரச் சூழல், மனிதர்களுக்கு எவ்வளவோ விஷயங்களைக் கற்றுக் கொடுக்கிறது. பெரிய பெரிய பத்திகளாக, வியாக்கியானங்களாக, நம் படைப்பாளிகள் விளக்கிக் கொண்டிருப்பவைகளை ஓரிரு வார்த்தைகளில், வாக்கியங்களில், ஒரு சில சொற்களில் நம் முன்னோர்கள் சொல்லி வைத்துச் சென்றிருக்கிறார்கள். அப்படி வந்ததுதான் “தன்னைப் போல் அடங்கி விட்டது” என்ற சுருக்கமான விவரிப்பு. அந்த மூன்று வார்த்தைகளிலேயே எவ்வளவோ அர்த்தங்கள் உள்ளடங்கிக் கிடக்கின்றன. படைப்பாளியின் மிகுந்த ரசனையை வெளிப்படுத்தும் விதமாய் அமையும் எழுத்தின் போக்கை ஒரு தேர்ந்த வாசகன் தன்னுணர்வாய்ப் புரிந்து ரசித்து மகிழ்வான் என்பதுதான் இங்கே காணக் கிடைக்கும் உண்மை. குறிப்பிட்ட அந்த இடத்தில் அதைச் சொல்லும் திறமை படைப்பாளிக்கு வேண்டும். அதுதான் பாராட்டத் தக்கது.
திடுக்கென்று விழித்துக் கொள்கிறான் அவன். அவளுக்குத் திரும்பவும் வலியெடுக்கிறது. ஒரு கையால் இடுப்பைப் பிடித்துக் கொண்டு பெரிசு பெரிசாய் மூச்சு விட்டுக் கொண்டிருக்கிறாள். இடுப்பு எலும்புதான் விரிந்து கொடுக்க வேண்டும். வில்லிலிருந்து
புறப்பட்ட அம்புபோல குழந்தை வெளிவர வேண்டும்…..
சற்றே அந்தப் பிரசவ வலியை மனதிற்குள் கொண்டு வந்து பாருங்கள். நீங்களும் உங்கள் சொந்த வாழ்க்கையின் இந்த அரிய, முக்கிய தருணங்களை உணர்ந்திருப்பீர்கள். ஆனால் எத்தனை பேர் மனைவியின் வலியைத் தன் வலியாய் உணர்ந்திருக்கிறோம்? என்பது கேள்வி.
இப்படி வாடா…நான் பார்த்துக்கிறேன்….என்று அம்மா அவளருகில் வந்து பூமாவின் வயிற்றை அமுக்கிப் பார்த்து, நல்லா நெகிழ்ந்திருக்கு….என்று ஒரு சூசகம் தெரிவிக்கிறாள். ஒரு தாயின் அனுபவம் பேசும் இந்தத் தருணம்….எத்தனை முக்கியமானது. அம்மா அருகிலிருப்பதும், ஆறுதலாய்த் திகழ்வதும், எவ்வளவு அனுசரணையான விஷயம். . அனுபவங்கள்தான் இந்த வாழ்க்கையின் பெரும் துணை என்கிற மகத்தான உண்மையை இம்மாதிரியான வெவ்வேறு சந்தர்ப்பங்களில், நம் வாழ்வின் கணங்களில் நம்மோடிருப்போரிடம், நாம் சந்திக்கும், அளவளாவும் மனிதர்களிடம்  உய்த்துணரும் தன்மை நமக்கிருந்தாக  வேண்டும்.
நர்ஸ் பூமாவை அழைக்க வாசலுக்கே வருகிறாள். அம்மாவும் சேர்ந்து கைத்தாங்கலாய் பூமாவை இறக்க, அவன் என்ன செய்வது என்று தெரியாமல் கையைப் பிசைந்தபடி நிற்கிறான். இப்படிப்பட்ட நேரங்களில் ஆண்களால் அவ்வளவுதான் முடியும். அதிகபட்சம் கடவுளை வேண்ட முடியும். அவ்வளவே. முடிந்தால் மனைவிக்குக் கண்களால் ரகசியமாக, அன்பான வார்த்தைகளால் தைரியம் சொல்லி, இறையருளை வேண்டி உள்ளே அனுப்ப முடியும்.
அவனின் நிலை கண்டு, அவனுக்கு ஆறுதல் போல், இணக்கமாய்  நர்ஸ் அவனைப் பார்த்துப் புன்னகைக்கிறாள். அவனும் பதிலுக்கு சிரிக்கத்தான் முயல்கிறான். அந்தப் படபடப்பில் அது முடியவில்லை. உதடுகள் இழுத்துக் கொள்கின்றன அவனுக்கு. ஆண்கள் பயந்தவர்கள். மன வலிமையற்றவர்கள்….இதெல்லாவற்றிற்கும் மேலாக ஒரு சீரான குடும்ப வாழ்க்கையை நடத்த நினைக்கும், நடத்தி வரும் ஒரு பண்பாளனுக்கு இயல்பாக அவனிடம் படிந்திருக்கும் இயக்கங்களின் அடையாளங்களே இவை.
முழுக்க முழுக்க ஒரு பெண்ணின் பிரசவ வலியையும், அவளைச் சுற்றியுள்ளோரின் மன ஓட்டங்களையும் நுணுக்கமாக, நெகிழ்வான முறையில்  சித்திரிக்கும் ஆசிரியர், படிக்கும் வாசகனின் முழுக் கவனமும் அதிலேயே படிந்திருப்பதைப் போலப் பண்ணி விடுகிறார்.
அந்த நேரத்தில் வாசகனுக்கு சொந்த வேலை என்று ஏதும் இருந்தாற்கூட எல்லாவற்றையும் பிறகு பார்த்துக் கொள்ளலாம், முதல்ல இது முடியட்டும், பிரசவம் ஆகி குழந்தை நல்லபடியாப் பிறக்கட்டும் என்று இவனையும் அதற்காகக்  காத்திருக்கச் செய்து விடுவதில்தான் படைப்பாளியின் வெற்றியே அடங்கியிருக்கிறது என்று நம்மையும் சேர்த்துக் கதாநாயகனுக்குத்  துணையாக உள்ளே இழுத்துக் கொள்கிறார். எழுத்தின், படைப்பின் வெற்றி இங்கேதான் நிற்கிறது என்று சொன்னால் அது சற்றும் மிகையில்லை.
நேரமாக,நேரமாக அவனுக்கு பயம் அதிகரிக்கிறது. காத்திருத்தல் பெரிய இம்சை. எதிர்பாராததை எதிர்பார்த்துக் காத்திருத்தல்….உள்ளேயிருந்து சத்தமேயில்லை? ஏன் இல்லை…என்று சொல்லி நம்மை மேலும் பயமுறுத்துகிறார் படைப்பாளி. எதிர்பாராததை எதிர்பார்த்துக் காத்திருத்தல் என்று ஏன் எண்ண வேண்டும்? மனசு என்ன வேணாலும் நினைக்கும்….சரியாய்த்தான் நினைக்க வேண்டும் என்கிற கட்டாயமில்லையே? சரியாய் மட்டுமே நினைக்க வேண்டும் என்பதற்காகத்தானே அல்லது குரங்கான இந்த மனம் வேறு எவ்விதமாயும் நினைத்து விடக் கூடாது என்ற பாதுகாப்பிற்காகத்தானே இறைவனிடம் நாம் தஞ்சமடைவது? கையில் ஸ்லோகப் புத்தகத்தை வைத்துப் படித்துக் கொண்டிருக்கிறாள் அம்மா. முன்னோர்கள் நமக்குக் கற்றுக் கொடுக்கும் பாடம் அது. நீ சாதாரண மனிதன். வெறும் நரன். உன்னால் எதையும் உன் கட்டுக்குள் வைத்திருக்க ஏலாது. கட்டுத் தெறித்தது இந்த மனம்.அது ஒரு குரங்கு.  அதை அத்தனை எளிதாக உன் கட்டுக்குள் அடக்கி விட முடியாது. அதனால்தான் உனக்கு இந்த வழி….என்று தன் செய்கை மூலம் அமைதி காத்து அம்மா வழி காட்டுகிறாள். அந்த நேரம் மனம் படும் பாட்டில் நட்சத்திரங்கள் இல்லாத உம்மென்ற வானம் ஆளை மிரட்டுவது போல் இருப்பதைக் கண்டு பயம் கொள்கிறான் அவன்.
டாக்டரம்மா அறைக்குள் அவனை மட்டும் அழைத்து, அம்மாவைப் பிரித்து விடுகிறாள் அந்த நர்ஸ். எதற்காக இப்படி? குழந்தை இறந்தே பிறக்கவில்லை. அப்படியானால் அப்போதே தாதி சொல்லியிருப்பாள். அது அம்மாவுக்குத் தெரியக் கூடாத விஷயமொன்றுமில்லை. பிறகு ஏன் அம்மாவை மட்டும் தனியாக…? குழம்புகிறான் அவன்.
டாக்டர் வருகிறாள்.
பிரசவம் ஆயிட்டதா டாக்டர்…?-கேட்க…தலையாட்டுகிறாள்.
என்ன குழந்தை…?
பெண்…..
தாயும் சேயும் நலம்தானே?
நலம்….ஆனால்…..?
கேள்வி விழுகிறது.
என் கூட வாங்க….. என்று அழைக்கும் டாக்டர்… சூம்பிப் போய், வளர்ச்சி குன்றிய, சிறு காரட் அளவிலான கைகளையுடைய அந்தப் பெண்  குழந்தையைக் காண்பிக்கிறாள்.
இந்த இடத்திலிருந்து படிக்கும் வாசகர்களாகிய நீங்கள் உங்கள் கற்பனையில்தான் பிற எல்லாவற்றையும் நினைத்துக் கொள்ள வேண்டும்.  அது பெண் குழந்தை என்பதை மனதில் வைத்து சிந்தியுங்கள். என்ன பேசலாம், என்ன பேசுவார்கள், என்ன செய்யலாம், என்ன செய்யக் கூடாது….எல்லாமும் விவாதமும் சிந்தனையாகவும் உணர்ச்சிப் பிழம்பாய் நகர்கின்றன காட்சிகள். டாக்டருக்கும் மருத்துவருக்குமான டிஸ்கஷன் ஒரு கட்டத்தில் அந்த முடிவையும் எட்டுகிறது.
ஆனால் அதுதான் படைப்பாளியின் திறமை. அந்த முடிவை அவன் சொல்வதைவிட, அவள் சொல்வதுதான், அவன் மனைவி சொல்வதுதான் பொருத்தமாய் இருக்கும் என்பதும், பெற்றவளுக்கே அந்த உரிமை நூறு சதவிகிதம் பொருந்தும் என்பதும், அவளின் அந்த முடிவை எவரும் எதிர்க்க இயலாது என்பதும், அதுவே சாலச் சிறந்த முடிவாய்த் திகழும் என்பதும்…..அந்தக் கணங்களில் அங்கே தீர்மானமாகிறது.
ஐயோ…என்றாள் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு. உடம்பு ஒரு முறை தூக்கிப் போட்டது அவளுக்கு. “எப்படிங்க…அடுத்தவர் உதவி இல்லாம அதால…வயசாக ஆக..ஆக…அவ என்னங்க பண்ணுவா…..அதுலயும் பொண்ணு பெரியவளா ஆயிட்டா….முகஞ் சுளிக்காம யாருங்க அவளுக்கு உதவி பண்ணுவா…?அதை அவதான் எப்படி ஏத்துக்க முடியும்?
டாக்டர்……….என் பொண்ணைக் கொன்னுருங்க….மாசா மாசாம் அவகிட்டே என்னால சாபம் வாங்க முடியாது…..என் பொண்ணைக் கொன்னுருங்க…..கதறுகிறாள் பூமா…..!! 
ஏன் அவள் அப்படிக் கதறுகிறாள் என்கிற உண்மையின் வெப்பத்தைத் தாங்க முடியாமல் நாமும் பயந்து போய் பின் நகர்கிறோம்….
ஒரு படைப்பின் வலி….நம் சொந்த வலியாய்த் தொற்றிக் கொள்ள….நடுங்கி நின்று, நிதானிக்க முடியாமல் தடுமாறிக் கலங்கி, அந்தக் கொடுமையான  கணங்களோடு…ஐக்கியமாகி, வெகு நேரம் கழித்தே .நம்மைத் தேற்றிக் கொள்ள முயல்கிறோம்….!!!
இறைவா…இந்த உலகத்தில் யாருக்கும் இம்மாதிரி ஒரு கொடுமையை விளைவித்து விடாதே…என்று மனம் நம்மையறியாமல் கைகூப்பி மேல்நோக்கி இறைஞ்சுகிறது.
மனித நேயமும், மனிதாபிமானமும், அன்பும் கருணையும் உள்ள ஒருவனால் இதைத் தவிர வேறு என்னதான் செய்ய முடியும்?
“மக்கள்…தேவர்….நரகர்…..” – எஸ்.ஷ. இந்தக் கதையில் ஏற்படுத்தியிருக்கும் பிரமிப்பை,  தவிர்க்க முடியாத அரிய பல  தருணங்களை, நம் வாழ்க்கையிலும்  வெவ்வேறு கோணங்களில், வேறு வேறு அனுபவங்களாகக் கடந்து வந்திருக்கலாம். ஆனால் இம்மாதிரியான கொடூரங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாய் எங்கேனும் நடந்துவிடுகிறதுதானே…! அந்த அனுபவங்களை உணர்வு பூர்வமாய் உள்வாங்கி, ஆழமாய்ப் பிரதிபலிப்பவனே சிறந்த படைப்பாளியாகிறான்.
இச்சிறுகதை இத்தொகுதியின் தலையாய சிறப்பு வாய்ந்த படைப்பு என்பேன் நான்.
                 -----------------------------------------------------------------------------------        


கருத்துகள் இல்லை: