30 நவம்பர் 2018

அழகிய சிங்கரின் “திறந்த புத்தகம்” - கட்டுரைகள்


அழகியசிங்கரின் திறந்த புத்தகம் கட்டுரைத் தொகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். பெயருக்கேற்றாற்போல் உண்மையிலேயே அது திறந்த புத்தகம்தான். மனிதர்கள் எளிமையாய்த் தங்களைக் காட்டிக் கொள்வது எவ்வளவு வசதியாய் இருக்கிறது மற்றவர்களுக்கு? இவர் செயற்கையாய்த் தன்னை அப்படிக் காட்டிக் கொள்பவர் அல்ல. இயல்பாகவே அப்படியானவர். அவரோடு பழகியவர்கள் சில நிமிடங்களிலேயே அவரை அந்தவகையில் புரிந்து கொள்ள முடியும். நான் அவரைச் சந்தித்த முதல் பார்வையிலேயே பல நாள் பழகிய உணர்வை அடைந்தேன். என் வீட்டிற்கு முதன்முறையாய் அவர் வந்த அன்று அந்த எளிமை அவரிடம் பளிச்சிட்டது எனக்குப் பிடித்திருந்தது. இது எல்லோருக்கும் வருவதல்ல.
அவருடைய எழுத்துக்களும் அந்தவகையினதாய்த்தான் இருக்கின்றன. அது எனக்குப் பிடித்திருக்கிறது. மற்றவருக்குப் புரியும்படி எழுதுகிறார். முதலில் இதைச் சொல்லித்தான் ஆக வேண்டும். வலிய நடை மொழியைத் திருகி அழிப்பதில்லை அவர்.
மறதி என்கிற பிசாசு என்று என்று ஒரு கட்டுரை. உண்மையிலேயே அது பிசாசுதான். நானும் அப்படி உணர்ந்து அனுபவித்திருக்கிறேன். என்னுடைய மறதியினால் எத்தனையோ நஷ்டம். இதுபற்றித் தனியே நானும் எழுத வேண்டும் என்று இவருடைய பத்தியைப் படித்தபோது எனக்குத் தோன்றியது.
அசோகமித்திரன்தான் இவரது ஆதர்ஸப் படைப்பாளி. அவரது எழுத்துக்களைத் தினந்தோறும் படித்துக் கொண்டேயிருப்பேன் என்கிறார். நானும் அப்படித்தான் என்பதை இங்கே பதிவு செய்தாக வேண்டும். அ.மி.யின் படைப்புக்களைத் தினந்தோறும் படிப்பதில் ஒரு ஆத்ம திருப்தி ஏற்படுகிறது. ஒழுக்கமும், பண்பாடும், இரக்கமும், கருணையும் மிகுந்த ஒரு மனிதனை நாம் அடையாளம் கண்டுகொண்டே, மனதில் வைத்துக் கொண்டே நகர முடியும். எளிமையான அந்த எழுத்தின் தன்மை, வரிகள் நகரும் பாங்கு, ஒரு சிறந்த மனிதனை மிக அணுக்கமாக உணர வைத்து அவரோடு கைகோர்த்துக் கொண்டு நகருவதான உணர்வை ஏற்படுத்தும்.
அவரது பிறந்த நாளான செப்.22 அன்று பாரதி நினைவு இல்லத்தில் ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்கிறார் அழகியசிங்கர். எங்கே கூட்டம் வராமல் போய்விடுமோ என்கிற பயத்தில் பேசுபவர்களையே 25 பேர் இருக்குமாறு அழைப்பு செய்கிறார். ஆட்கள் வரவில்லையானால் பேசுபவர்களையே பார்வையாளர்களாய் அமர்த்தி கூட்டத்தை வெற்றிகரமாய் நடத்தி முடித்து விடலாம் இல்லையா? இங்கே இலக்கியக் கூட்டங்களின் கதி அப்படித்தானே இருக்கிறது. (நான் பெரும்பாலும் இலக்கியக் கூட்டங்களைத் தவிர்த்து விடுபவன். இதற்கு ஒரு பெரிய கதையே உண்டு. அதைத் தனியேதான் எழுதியாக வேண்டும்) ஆனால் அவர் எதிர்பார்த்ததை விடக் கூட்டம் உண்மையாகவே அதிகமாய் வந்து விடுகிறது. வெற்றிகரமாய் நடந்தேறுகிறது. இம்மாதிரியான முயற்சிகளில் திரு அழகியசிங்கர் பல்லாண்டுகாலமாக இயங்கி வருகிறார். அவரது விருட்சம் இதழ் காலாண்டு தவறாமல் வருகிறதோ இல்லையோ மாதம் தவறாமல் இலக்கியக் கூட்டங்களை அவர் நடத்தி விடுகிறார். விருட்சம் வருவதில் தாமதம் இருக்கலாம். ஆனால் விடாது நூறு இதழ்களுக்கு மேல் ஒரு சிற்றிதழை பெரும் நஷ்டங்களைப் பொருட்படுத்தாது கொண்டு வந்த பெருமை அவருக்குண்டு. அதற்கே அவருக்கு ஒரு தனிப் பாராட்டு விழா நடத்த வேண்டும். (இரண்டு மூன்று முறை என்னை அழைத்திருக்கிறார். நான்தான் வேறு வகையாயிற்றே...மடிப்பாக்கத்திலிருந்து வருவது கஷ்டம்தான் என்று அவரே சொல்லிக் கொள்வார். எனக்கு இந்தச் சென்னையில் டூ வீலர் ஓட்டப் பயமாய் இருக்கிறது எங்களூர் மதுரை என்றால் பறந்து விடுவேன்.இங்கே அந்தப் பாச்சா பலிக்காது என்று உணர்கிறேன்)
அப்பாவும் நானும்...ஆத்மாநாம்...சில குறிப்புகள்...சிவாஜியும் எம்.ஜி.ஆரும்...சார்வாகன் இறந்துதான் போய்விட்டார்...விஷ்ணுபுர விருதும் தேவதச்சனும், என் நாடக முயற்சி, நகுலன் கவிதைகளை வாசிக்கலாமா...சி.சு.செல்லப்பாவும் சுதந்திர தாகம் நாவலும், ஐராவதமும் புத்தக விமர்சனமும் ...என்று பலகட்டுரைகள் இப்புத்தகத்தை அலங்கரிக்கின்றன. எளிமையான நடை நம்மைக் கீழே வைக்க விடாமல் படிக்க வைக்கிறது. எதைப் பற்றி எழுதினாலும், யாரைப்பற்றி எழுதினாலும், கோள் சொல்லாமல், பொறாமைப் படாமல், குறை சொல்லாமல், அதிலுள்ள, அவரிடமுள்ள நல்லதனத்தை மனதில் வைத்து, தன்னுடைய உயர்ந்த பண்பாட்டினை இப்புத்தகம் மூலம் நிலைநிறுத்தியிருக்கிறார் திரு.அழகியசிங்கர் அவர்கள்.
எதைக் கொண்டு வந்தோம், கொண்டு செல்ல....என்கிற கீதையின் சாரம் இவரிடம், இவரது பெற்றோர்கள் மூலம் பிறப்பிலேயே படிந்திருக்கும் போலும்...இலக்கிய நண்பர்கள் கட்டாயம் படிக்க வேண்டிய நூல் இந்தத் திறந்த புத்தகம்.
உஷாதீபன்
Like
CommentShare
Comments

கருத்துகள் இல்லை:

  'குற்றம் புரிந்தவன்'  - சிறுகதைத் தொகுப்பு - புஸ்தகா.கோ.இன்  - ல் வெளியிடப்பட்டுள்ளது.    (www.pustaka.co.in) --------------------...