

சிறுகதை “எனக்கென்ன குறைச்சல்…?”
ஏதோ
வெறி பிடித்தவர்போல் ஓரமாய்க் கிடந்த ஒரு கல்லை எடுத்து அந்த நாயை நோக்கி ஆவேசமாய்
வீசினார் குருமூர்த்தி. . ஏற்கனவே குமைஞ்சிட்டிருக்கேன்…இதுல இது வேறே…?-ஆத்திரம் பீறிட்டது. வீட்டு
கேட்டைத் தாண்டி வெளியில் குதித்திருந்த அது குலைத்துக் கொண்டே மீண்டும் உள்ளே போய்
வாசல் மாடிப் படியில் ஏறி எட்டிப் பார்த்து மறுபடியும் குலைத்தது. என்ன ஒரு ஆக்ரோஷம்?
தனக்கும்
நாய்களுக்கும் ஏதேனும் முந்தின ஜென்மத்துப் பகையோ? மறந்து போன குறிப்பிட்ட இரண்டு கருப்பு
நாய்களைத் தவிர்ப்பதற்காக அந்த வேறொரு தெருவையே கடந்த சில ஆண்டுகளாய்த் தவிர்த்து விட்டிருந்த
இவர், இப்போது இந்தத் தெருவிலும் அப்படி ஒன்று புதிதாய் முளைத்திருப்பதைக் கண்டபோது
ரொம்பவும் வருத்தத்திற்கு ஆட்பட்டார். சாலையை அடைய இன்னும் வேறு எந்தத் தெரு வழியைத்தான்
தேர்ந்தெடுப்பது? எப்படி வெளியேறுவது? உலகில் எது எதற்குத்தான் யோசிப்பது? வருந்துவது?
பயப்படுவது? அன்றாட வாழ்க்கையையே இன்னும் என்னென்ன காரணிகள்தான் தடைப்படுத்தும்? அவரவர் வீட்டுப் பாதுகாப்புக்கு என்று வளர்த்து,
பிறரை இடைஞ்சல்படுத்துவது என்ன நியாயம்? தெருவே
பயப்பட வேண்டுமா? போவோர் வருவோர் நடுங்கிச் சாக வேண்டுமா?
எந்த வெள்ளை நாய், தான் வண்டியில் செல்லும்போது விரட்டு விரட்டு என்று விரட்டி, முள் செடியில் விழுந்து உடம்பு பூராவும் காயம் பட்டு, தெருவில் உள்ள அனைத்து வீட்டுக்காரர்களும் பார்த்துப் பரிதாபப்படும்படி கேவலப்படுத்தியதோ, அது இப்போது இல்லை என்றும், அதை வளர்த்த அந்த வீட்டுக்காரர்களையே காணவில்லையே என்று மனது பூரித்துப் போயிருந்தது அத்தனை சீக்கிரத்தில் பொய்யாகிவிடும் என்று நினைக்கவேயில்லை.
அதே நாய்தானா இது, அந்த வீட்டுக்காரர்களே இங்கே மறுபடியும் குடி வந்து விட்டார்களோ? நினைவு வைத்துக் கொண்டு இப்படிப் பாய்கிறதே? நாய் மனதில் வைத்துப்
பழி வாங்குமோ? அப்படியாக தான் ஒன்றும் அதற்கு பாதகம் செய்யவில்லையே? எதை நொந்து கொள்வது? அந்தப் பழைய நாய் போல்தான் தோன்றியது இதுவும். . இத்தனை நாள் நிம்மதியாய்க் கழிந்ததே…! அட கர்மமே…மறுபடியும்
இப்படியொரு அனுபவ யோகமா?
நாங்களும் எவ்வளவோ சொல்லிட்டோம்யா…கட்டிப் போடுங்க…கட்டிப்
போடுங்கன்னு…அவுக கேட்டாத்தான….? – எதிர் வீட்டு வாசலில் அமர்ந்திருந்த ஒரு அம்மாள்
பரிதாபப்பட்டது.
தன்
மீது கழிவிரக்கம் கொண்டு இதை அவர்கள் சொன்னதாகத் தோன்றியது இவருக்கு. இப்படி ஊரில்
இருப்பவர்களெல்லாம் பச்சாதாபம் கொள்ள வேண்டும் என்று என்ன தலைவிதி? அடுத்தவர்கள் இரக்கத்திற்கு
ஆட்பட்டுக் கிடக்க என்ன வந்தது? அப்படியான
கௌரவத்தில்தானே தனியாய்க் கிளம்பி வந்தது? எந்தப் பயலின் இரக்கமுமோ, கருணையுமோ தேவையில்லை
என்று சொல்லித்தானே வீச்சும் விறைப்புமாக இங்கு வந்து ஒண்டியாய்க் கிடப்பது?
தனிமை எனக்குப் பிடிக்கும். அமைதி ஆத்மார்த்த
விருப்பம். அது ஒருவகை தியானம். நான் போகிறேன்…..
சொல்லப்போனால்,
தான் இந்தப் பகுதிக்கு வீடுகட்டிக் குடி வந்த பின்னால் வந்தவர்கள்தானே? நான் பார்க்க
வந்த வந்தேறிகள்தானே இவர்கள்? எல்லாப் புற வசதிகளும் நாயாய்ப் பேயாய் அலைந்து செய்து வைக்கப்போக, சொகுசாய் வந்து ஒண்டிக் கொண்டார்கள்.
சுயநலக் கும்பல்கள்….தன் வீடு, தன் மனைவி, தன் பிள்ளைகள், தன் பேரன் பேத்திகள்…என்று
மரவட்டையாய்ச் சுருண்டு கிடப்பவர்கள்….இரண்டு கண்ணுக்கும் சேணம் பூட்டிக் கொண்டவர்கள்…!
படபடப்பி்ல் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கியது. சூழலே மனுஷனை எப்படிக் கெடுக்கிறது? என்ன பாடு படுத்துகிறது?-
நெஞ்சு வேகமாய் அடித்துக் கொள்கிறது குருமூர்த்திக்கு.
எதற்காக இத்தனை கோபம்? ஏன் இந்த அசூயை? யார் அல்லது
எவர்கள் மீது இந்த ஆத்திரம்? இந்த ஊரின் மீதா? இந்த உலகத்தின் மீதா? இந்த மனிதர்கள்
மீதா? அல்லது இங்கிருக்கும் இந்த நடைமுறைகள் மீதா? அல்லது எவற்றையுமே சகிக்க முடியாமல்
போன தன்னுடைய பிரத்தியேகமான மனநிலை மீதா? அல்லது வீம்புக்குப் புறப்பட்டு வந்த தன்
அகங்காரத்தின் மீதா? போதிய மனத் தெம்பும், உடல் நலமும் இல்லாமல் போனதே இதற்கெல்லாமான
காரணமா?
இப்படி எதையுமே காணப் பிடிக்காமலும், பேசப் பிடிக்காமலும்
போகுமானால் பிறகு இந்த உலகத்தில் எப்படித்தான் வாழ்வது? வெறுப்பாக மண்டிப்போன அனைத்துக்
குறைபாடுகளையும் கொண்ட இந்த உலகத்தில்தானே மீதிக் காலத்தைக் கழித்தாக வேண்டும்?அது
போல் தன் குறைபாடுகள் மற்றவர்களுக்கும் தோன்றும்தானே? அது ஏன் அறிவில் எட்டவில்லை?
கணத்தில் ஆயிரம் சிந்தனைகள். தறி கெட்டு ஓடும்
எண்ண ஓட்டங்கள்… தன் கையே தனக்கு உதவி….எவன் வந்து என்னாகப் போகிறது…? எல்லாவற்றையும் புறந்தள்ளிவிட்டுத் தலையை நீட்டும்
வீம்பு.
இன்று
மிகுந்த தைரியத்தோடு கல்லை விட்டு அடித்ததும், அது பயந்ததுபோல் மீண்டும் வீட்டுக்குள்
சென்று மாடிப் படியில் ஏறிக் கொண்டதும் இவருக்குள்ளே சற்று மகிழ்ச்சியைக் கொடுத்ததுதான்.
கண்ணிலிருந்து மறையும் வரை உன்னை விரட்டி விட்டுத்தான் ஓய்வேன் என்று …அடிவயிற்றிலிருந்து
பிளிறுகிறதே…! என்னை ஏன் இப்படி எதிரியாய் நினைக்கிறது?
இந்த
வயதில் நாயைக் கல்லை விட்டு அடிப்பது என்பது எவ்வளவு கேவலமான செயல்…? மனது வெட்கப்பட்டது
குருமூர்த்திக்கு. மரமாய் இத்தனை வயது வளர்ந்து நிற்பது இதற்குத்தானா? போயும் போயும் இந்த இழி செயலைச் செய்யவா?
ஒரு ஆபீசராய் வேலை பார்த்து ஓய்வு பெற்று கடைசியில் இப்படித் தெரு விடலைகள் போல், நாய்
மீது கல்லடிக்கும் நிலை வந்து விட்டதே? என்ன கேவலம்? வேலை பார்க்கும் காலத்தில் வாசல்
படியில் ஜீப்பில் கால் வைத்து ஏறி ஏறிப் பறந்ததனால், ஊர் நிலை கணக்கிட முடியாமல் போயிற்றோ?
தெருவில் வசிப்பவர்களின் சிரமங்கள் தெரியாமல் போயிற்றோ? இப்போதுதான் எல்லாம் மண்டையில்
ஏறுகிறதா?
இப்படி
ஒரு ஆளைத் தெருவில் பார்த்ததேயில்லையே என்று அதிசயித்து, அல்லது பழைய ஞாபகம் மீண்டு
வரத்தான் அப்படிக் குலைக்கிறதோ? அதற்காக…? பார்ப்போரையெல்லாம் கேவலமாய் நினைத்துக்
குலைத்து விடுவதா? ஒரு கண்ணியம் வேண்டாமா? படித்தவன், படிக்காதவன், நாகரீகமானவன், ஆபீசராய்
இருந்தவன், அதிகாரம் மிக்க பதவியில் இருந்து ஓய்வு பெற்றவன், கௌரவமானவன்,நேர்மையாளன்,
…இதில் ஏதேனும் ஒன்றையேனும் அது அறிந்திருக்க வேண்டாமா? ஐந்தறிவுதான் என்றாலும், ஆள்
பார்த்துக் குரைப்பதற்கும், விரட்டுவதற்குமான நாகரீகம் வேண்டாமா? அப்புறம் இந்த மனிதர்களை
அண்டி வாழ்வதற்கு என்னதான் அர்த்தம்? அவர்களிடமிருந்து எதுவும் படியவில்லையா? அவர்கள் போடும் சோற்றுக்காகக் காத்திருப்பதில் என்னதான்
பொருள்? தின்று கொழுப்பதற்கு என்ன உரிமை? இந்த
ஜன சமூகத்தோடு கலந்து கூத்தடிப்பதற்கு என்னதான் அருகதை? மனதில் இருந்த ஆத்திரத்தில்
என்னென்னவோ தோன்றி விகசித்துக் கொண்டேயிருந்தது குருமூர்த்திக்கு. ஊரிலிருந்து வந்தாலும்
வந்தோம், ஒரு நாய்ப்பிரச்னை தலையெடுக்கும் என்று நினைக்கவேயில்லை.
அதனிடமிருந்து
எப்படித்தான் தப்பிப்பது? ஒரே மண்டைக் குடைச்சல் இவருக்கு. பல பேர் இந்த வழி போகிறார்கள்,வருகிறார்கள்…யாரும்
அதைச் சட்டை செய்வதில்லை….அவர்களையெல்லாம் பார்த்து அது குலைப்பதும் இல்லை…விரட்டுவதும்
இல்லை…தன்னிடம் மட்டும் ஏனிந்தக் கோபம்? தெருவோரத்தில் இருந்த வேப்பமரத்தில் ஒரு குச்சியை
ஒடித்துக் கையில் வைத்தவாறே கடக்கிறார் ஒருவர். கையில் கம்பிருந்தால் பயப்படுமோ? எத்தனை
சுலபமான வழி? தனக்குத் தெரியாமல் போயிற்றே? மாட்டுக்காரன் போல் கையில் குச்சியோடு நடக்க
முடியுமா? ஒரு அந்தஸ்தில் இருந்த தனக்கு அது பொருந்துமா? பதிலாக ஒரு கைத்தடியை ஊன்றிக்
கொள்ளலாமா? அப்படியா தனக்கு வயதாகிவிட்டது? தொண்டு கிழமா நான்? அந்த நிலையில் இருந்திருந்தால்
இப்படிப் புறப்பட்டு வந்திருப்பேனா? தனியாய்ப் பயணம் மேற்கொண்டிருப்பேனா?
நானாகக்
கிளம்பி, நானாக ரயிலேறி, நானாகப் பயணம் செய்து,
நானாக இறங்கியல்லவோ இந்த என் வீட்டை அடைந்திருக்கிறேன்? எவன் துணையும் எனக்குத்
தேவையில்லை என்று தீட்சண்யமாய் நிரூபித்திருக்கிறேனே? அப்படியிருக்கையில் போயும் போயும்
இந்தத் தெரு நாய்க்குப் பயப்படுவதா? ஆஃப்டரால் ஸ்ட்ரீட் டாக்ஸ்….ஒரு காலத்தில், ஃபோன்
செய்தால் அடுத்த ஒரு மணி நேரத்தில் வந்து விரட்டு விரட்டு என்று விரட்டி விசுக் விசுக்கென்று
இன்ஜெக் ஷனை எறிந்து விரைக்க வைத்து, வண்டிக்குள் தூக்கி வீசி அள்ளிப் போட்டுக் கொண்டு
போய்விடுவார்கள். இன்று அதனைச் செல்லமாய்ப் பிடிக்க ஓடுகிறார்கள். வலைக் கம்பி போட்டு
சுருக்கிடுகிறார்கள். கொல்லக்கூடாதாம். புதிய
கண்டுபிடிப்பு….காயடித்து விடுகிறார்களாம். என்ன வார்த்தை இது? அசிங்கமாய்…. இனப் பெருக்கம்
இருக்காதாம் அதற்குப் பின்னே.
இங்குதான்
தெருவுக்கு ஐந்தாறு குட்டிகளை ஈன்று அலைய விட்டிருக்கிறதே…! பிறகு எங்கேயிருந்து எண்ணிக்கையைக்
குறைப்பது? வெறி பிடித்து யாரையேனும் நாலு பேரைக் கடித்துக் குதறினால் விழிப்படைவார்கள்.
பிறகு கொஞ்சம் அலெர்ட் ஆவார்கள். என் கதையும்
ஒரு நாள் அப்படியாகி விடுமோ? இதென்னடா விபரீதம்? தேவையா இது? நாயை அடிப்பானே…பீயைச்
சுமப்பானே…?
.அதெல்லாம்
சரி, கிடக்கட்டும்… இந்த எரிச்சலும், கோபமும்
அதற்கு மட்டும்தானா? மனதிலுள்ள என்னென்னவோ ஆதங்கங்கள்தான் தன்னை இப்படி இயக்குகிறதோ?
போயும் போயும் ஒரு நாயைக் கல்லை விட்டு அடிப்பதிலா அந்தத் திருப்தி? என்னவோவொரு வீம்பில்
கிளம்பி வந்தாயிற்று.
பெரிசு
சொன்னாக் கேட்காது…! - காதில் விழுந்ததே…!
“பெரிசு”
– இந்த ஒரு வார்த்தை போதாதா…கேவலப்படுத்தியதற்கு அடையாளமாய்? என்னையா கேவலப்படுத்தினார்கள்…அவர்கள்
தங்களைக் கேவலப்படுத்திக்கொண்டார்கள்….அதை உணர்ந்தால் சரி…..
இனிக்
கெஞ்சிக் கதறி அழைத்தாலொழிய அந்தப் பக்கம் தலை வைத்துக் கூடப் படுப்பதில்லை.. சாகும்வரை
இங்கேயே இருந்து கழித்து விடுவதுதான் கௌரவம்.
யார்
அப்படி வருந்தி அழைக்கப் போகிறார்கள்? இந்த மட்டுக்கும் நிம்மதி என்றுதான் இருப்பார்கள்.
கிளம்பும்போது இங்கேயே இருங்கள் என்று ஒன்றும் வற்புறுத்தவில்லையே…! போகக் கூடாது என்று
பையைப் பிடுங்கி வைக்கவில்லையே! வாசலுக்கு வந்து வழி மறிக்கவி்ல்லையே…! கண் கலங்கி
குற்றவுணர்ச்சியோடு நிற்கவில்லையே…! ஆனால் என்னவோ சொல்லத்தான் செய்தார்கள்…
நீங்க
இங்க இருந்தா எங்களுக்கு எவ்வளவு உபயோகமா இருக்கும்…பேசாம இருங்கப்பா…உங்க வயசுக்கு
சில அசௌகரியங்கள் இருக்கத்தான் செய்யும்…எங்களுக்காகப் பொறுத்துக்கக் கூடாதா? அம்மா
இருக்கைல மட்டும் எப்டிப்பா எல்லாத்தையும் பொறுத்துக்கிட்டீங்க…? சதா அவங்க கூட சண்டை
போட்டாலும், சரி சரின்னுட்டு அட்ஜஸ்ட் பண்ணிட்டுத்தானே இருந்தீங்க…! சண்டை போடுவீங்க…பேசுவீங்க…சண்டைபோடுவீங்க…பேசுவீங்க…மூஞ்சியைத்
திருப்பிட்டா கிடந்தீங்க…? இப்ப எங்க கூட மட்டும் ஏம்ப்பா இப்டி இருக்கீங்க…? நாங்க
நாங்கபாட்டுக்குத்தானே இருக்கோம்…நீங்க நீங்கபாட்டுக்கு இருங்க…அதிலென்ன சிரமம் உங்களுக்கு…?
உங்களை கடை கண்ணிக்குன்னு அலைக்கழிக்கிறோமா…? அத வாங்கிட்டு வாங்க…இத வாங்கிட்டு வாங்கன்னு
விரட்டுறோமா…அம்மா இருக்கச்சே… …என்னதான் சண்டை போட்டாலும், சரின்னு வாயை மூடிட்டுப்
போயிட்டு வருவீங்க…இல்லன்னா நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து போவீங்க… அம்மாவத் தூக்க
விடாம நீங்களே சுமந்திட்டு வருவீங்க….என்னதான் ஆனாலும் அம்மாட்ட இருந்த இரக்கமும்,
கரிசனமும் உங்களுக்கு எங்ககிட்ட இல்லப்பா….உங்கள ஒரு பாரமா நாங்க நினைக்கல…ஏன் உங்களுக்கு
அப்டித் தோணுது….? அப்டி வலிய நினைச்சு வருந்துறதுதான் உங்களுக்கு ஆறுதலா இருக்கா?
நீங்களா
எங்களப்பத்தி அதயும் இதயும் கற்பனை பண்ணிக்கிட்டா அதுக்கு நாங்க என்னப்பா பண்ண முடியும்?
உங்க கூடப் பேசறதேயில்லன்னு சொல்றீங்க…எதையும் சொல்றதில்லைங்கிறீங்க…நாங்களே ஒருத்தருக்கொருத்தர்
நேரடியாப் பேசிக்கிறதில்லையே…! எல்லாத்தையும், ஃபோன்லயும், வாட்ஸ்அப்லயும்தான பரிமாறிக்கிறோம்?
நா ட்யூட்டி முடிச்சு வர்றபோது அவ அசந்து தூங்கிட்டுக் கிடக்கா…அவ ட்யூட்டிக்குப் புறப்படுறபோது
நான் பொணமாட்டும் கிடக்கேன்…வாரத்துல ஒரு நாளைக்கு மட்டும்தான் முகம் பார்த்துக்கிறோம்…சனிக்கிழம
கூட ஆபீஸ் போய்த்தான் ஆக வேண்டியிருக்கு….ப்ராஜெக்ட்டை லேட் பண்ணாம, டயத்துக்கு முடிச்சாகணும்னு
தலைக்கு மேல கத்தி தொங்கிட்டேயிருக்கு….இல்லன்னா சேலரி இன்கிரீஸ் பர்சன்ட்டேஜ் குறைஞ்சு
போகுமேங்கிற பயம் இருக்கு. வேலையும் நிரந்தரமில்லே….எங்க பொழப்பே அப்டி இருக்கைல… நிலமையை
உணர்ந்து நீங்க எங்களுக்கு சப்போர்ட்டா இருக்கலாமில்லப்பா… வீட்டுல ஒரு ஆள் இருக்கு.
அதுவும் அப்பா இருக்காருங்கிற ஆறுதல், தைரியம் இருக்குமில்லப்பா…..இதெல்லாம் உங்களுக்குத்
தெரியாததல்ல… பெரிய மனுஷன் மாதிரிப் பேசறதா தயவுசெஞ்சு நினைக்க வேண்டாம்ப்பா. …ஆனாலும்
ஏன்தான் இப்டி மாறிப் போயிட்டீங்கன்னு எனக்கு சங்கடமா இருக்குப்பா ….உங்களுக்கு அம்மாதான்
உலகம்னு எங்களுக்கும் தெரியும்…அந்த இடத்த யாராலும் நிரப்ப முடியாதுங்கிறதும் புரியும்….அதுக்காக
எங்களை வெறுப்பீங்களா? வலிய உங்களை நீங்க தனிமைப் படுத்திக்குவீங்களா…? அதுலதான் ஆறுதலா
உங்களுக்கு? சேர்ந்திருந்தாலும் ஆறுதல்தானேப்பா…சந்தோஷமா இருக்கும்ல…?
தனியாக்
கிடந்து கஷ்டப்பட்டு, அம்மா இல்லாத துன்பத்தை அனுபவிக்கிறதுலதான் உங்களுக்கு நிம்மதியா?
அப்பத்தான் அம்மா உங்க மனச விட்டு அகலாம இருப்பாங்கன்னு
நினைக்கிறீங்களாப்பா? அம்மா இருக்கிறபோது பல விஷயங்கள்ல அவளுக்கு ஒத்துழைக்காம முரண்பட்டுப்
போயிட்டமேன்னு உங்களை நீங்களே வலிய தண்டனைக்கு ஆட்படுத்திக்கிறீங்களா…? எனக்கு உங்களோட
இந்தப் பிடிவாதத்த நினைக்கிறபோது அப்படித்தாம்ப்பா மனசுக்குத் தோணுது….ஏன்னா நீங்க
நல்லவரு….எங்களுக்கு வேணுங்கிறதையெல்லாம் ஒண்ணுவிடாமச் செய்தவரு…ஓடி ஓடிச் செய்தீங்க…ஓய்வில்லாமச்
செய்தீங்க…எல்லாமும் இது என் கடமை…கடமைன்னு
நினைச்சு செய்தீங்க…கடமை அல்லாத பலதையும் கடமைன்னு சொல்லிட்டு செய்திட்டேயிருந்தீங்க…எங்களுக்காக
உழைக்கிறதுல மனசுல உங்களுக்கு வித்தியாசமோ சலிப்புமோ இருந்ததில்ல…அப்படிப்பட்ட நீங்க…அம்மா
இல்லாத இந்த நேரத்துல உங்களை வேணும்னே தனிமைப்
படுத்திக்க நினைக்கிறதைப் பார்க்கிறபோது ரொம்பவும் வருத்தமா இருக்குப்பா…. அம்மா மாதிரி
எங்களால நிச்சயமா இருக்க முடியாதுதான்…அதுல சந்தேகமேயில்லை….அதுக்காக உங்களை விட்டுடணும்னு
நாங்க நினைக்கலப்பா …அத நீங்க புரிஞ்சிக்கிட்டா சரி….
எல்லாமும்
சொல்லத்தானே செய்தார்கள்…அப்புறமும் சினிமா பாணியில் வாசலுக்குக் குறுக்கே வந்து கையை நீட்டி நின்று வழி
மறித்து, காலில் விழுந்து அழுது, போகக் கூடாது என்று சொன்னால்தான் நீ சமாதானமாவாயா?
இன்னும் எப்படியெல்லாம்தான் உன்னைப் போஷிக்க வேண்டும்? வயதுக்கு வந்து ஒரு நல்ல ஸ்தானத்தில்
இருக்கும் இருவரும் இன்னும் என்னெல்லாம்தான் சொல்லி உன்னைத் தாங்க வேண்டும்? அக்கம்
பக்கத்தார் கூடிப் பார்த்து நிற்க, உன்னைத் தாங்கித் தடுக்கி ஓங்கிக் குரலெடுத்து அழுது
அரற்றி, பலரும் பார்க்க காலில் விழுந்து மண்டியிட்டு
உள்ளே அழைத்துச் சென்று இருத்தி வைக்க வேண்டுமா?
அப்போதுதான் நீ சமனப்படுவாயா? அதுதான் கிழட்டுப் புலியான உன் கௌரவமா?
எதையுமே
பொருட்படுத்தாமல் புறப்பட்டு வந்தவன்தானே நீ? ஏன் மனது கிடந்து இப்படி அடித்துக் கொள்கிறது?
எதற்குக் கண்ணால் காண்பவற்றிலெல்லாம் மறைமுகமாயும, வெளிப்படையாயும் இப்படி எரிச்சல்
பற்றிக் கொண்டு வருகிறது? தனியாய்க் கிடக்க சக்தியில்லாமல் அசட்டு வீம்பில் புறப்பட்டு
வந்துவிட்டு அரற்றிக் கொண்டிருக்கும் உனக்கு இனியும் மிச்சமிருப்பது ஒன்றுதான். இந்த
நிலையே நீடிக்குமானால் சீக்கிரம் உன்னை மனநல விடுதியில்தான் சேர்க்க வேண்டி வரும்
…! அதற்கும் அவர்கள்தான் வந்தாக வேண்டும்….!
ஸ்ஸ்ஸ்….ச்சே……என்னதிது….கண்ட
கண்ட நெனப்பெல்லாம் வருது?...அவ்வளவு பயந்து கிடக்கிறனா நான்? சும்மாக் கெடந்த சங்கை
ஊதிக் கெடுத்திட்டனா? கூறு கெட்டுப் போச்சா எனக்கு?
கையில் ஒரு புத்தகத்தை வைத்துக் கொண்டு படிக்க ஓடாமல் என்னென்னத்தையோ நினைத்துக்
குழம்பிக் கொண்டிருந்த குருமூர்த்தி…சட்டென்று நாற்காலியைச் சத்தமெழ நகர்த்தி எழுந்தார்.
நூலகத்தின் அமைதி கெட , படித்துக் கொண்டிருந்த
அத்தனை பேர் பார்வையும் அவரை நோக்கித் திரும்பியது.
“நாள் பூராவும் நீயே கைல வச்சிட்டுப் படிச்சிட்டிருப்பியா?
…நீ ஒருத்தன் மட்டும் படிச்சாப் போதுமா…மத்தவன்லாம் படிக்க வேணாம்? …நல்ல ஆளுய்யா….?
”–
நாளிதழ்
ஒன்றை வைத்து முகத்தையே மூடிக் கொண்டு, செய்திகளை விழுங்குவது போல் நீந்திக் கொண்டிருந்த ஒருவரைப் பார்த்துக் கோபமாய்ச்
சொல்லிவிட்டு வெளியேறினார் குருமூர்த்தி.
அதே
சமயம் கைப்பைக்குள் பத்திரமாய் வைத்திருந்த செல் ஃபோன் மணி சிணுங்கியது. காலில் செருப்பை
மாட்டிக் கொண்டு பதற்றத்தோடு எடுத்து, பச்சைக்
குறியை இணுக்கிக் காதில் வைத்தவாறே “உறலோ…” என்று அரச மரத்தடி மேடையை நோக்கி நடந்தார்.
உட்கார்ந்து பேசினால் தேவலை.
அப்பா…நான்தான்
ரமேஷ் பேசறேன்…நல்லாயிருக்கீங்களா…?
தான்
இல்லாமல் ரொம்பவும் சந்தோஷமாய் இருக்கிறான் போலிருக்கிறது. குரலில் எத்தனை உற்சாகம்….?
திருட்டுப் பயல்….
நல்லாத்தான்
இருக்கேன்….எனக்கென்ன குறைச்சல்…?
சரிப்பா…ஒரு
உறாப்பி நியூஸ்……சொல்லட்டா….கேட்கிறீங்களா…?
எனக்கென்ன
இனிமே சந்தோஷம்….எல்லாம் உங்களுக்குத்தான்…சொல்லு…கேட்கிறேன்…மாட்டேன்னு சொல்ல முடியுமா?
ஏம்ப்பா
இப்டிச் சொல்றீங்க…? உங்களுக்குத்தான் முதல்ல சொல்லணும்னுட்டுப் பேசினா….? கேளுங்கப்பா….…
சொல்லேம்ப்பா….கேட்டுக்கிட்டுத்தான்
இருக்கேன்…
.நீங்க
தாத்தாவாகப் போறீங்க…உங்களுக்கு பேரன் பிறக்கப் போறான்…
பார்றா….?
ஒரு வருஷத்திலயேவா….படு ஜூட்ரா நீ…! கங்கிராஜூலேஷன்ஸ்….
அதுக்குள்ளயும் முடிவு பண்ணிட்டியா…? ஏன்…பேத்தி பொறந்தா ஆகாதா? பேரப்பிள்ளன்னு நீயே
முந்திண்டு சொல்லிக்குவியா?-அதிலும் அதிகாரம் தெறித்தது அவரை மீறி.
எதுவானா
என்னப்பா…சந்தோஷம்தானே….? எதானாலும் எங்களுக்கு ஓ.கே.தான். கடவுள் கொடுக்கிறதை மகிழ்ச்சியா ஏத்துப்போம்ப்பா….
தான்
சொல்ல வேண்டியதை அவன் சொல்கிறான்….தனக்குத்தான் பாங்காய்ச் சொல்லத் தெரியவில்லையோ…!
சந்தோஷச் செய்தியை, தன்னை மதித்து ஆசையோடு சொல்லும் அவனை இப்படியா எதிர்கொள்வது? பெற்ற
மகனிடமே அப்படி என்ன கெத்து?
இன்னிக்குத்தான்
செக்கப்புக்குப் போயிட்டு வந்தோம்…டாக்டர் கன்ஃபார்ம் பண்ணிட்டாங்க…பெட் ரெஸ்ட்ல இருக்கணும்னு
ஸ்ட்டிரிக்டாச் சொல்லியிருக்காங்கப்பா…அப்பா…அப்பா….!
கேட்குறீங்களா….?
சொல்லுப்பா…லைன்லதான்
இருக்கேன்….கேட்குது…சொல்லு….
நீங்க
வந்துருங்கப்பா…எங்களுக்கு யாருமே இல்லப்பா…நீங்க வந்திட்டீங்கன்னா மனசுக்குத் தைரியமாவும், ரொம்பப் பாதுகாப்பாவும், உதவியாவும் இருக்கும்ப்பா…இன்னிக்கே
உங்களுக்கு டிக்கெட் போட்டுடறேன்…தட்கல்ல…..வாட்ஸ்அப்புல அனுப்பிடறேன்…நாளைக்கு ராத்திரி
கிளம்புற மாதிரி….ஓ.கே.யா…? தயாரா இருந்துக்குங்கப்பா…
நான் ஸ்டேஷனுக்கு வந்துடறேன்…-
லைன்
துண்டிக்கப்பட்டதா…?. தனக்கு மேற்கொண்டு பேச சந்தர்ப்பமே அளிக்கவில்லையே…!. எங்கே மறுத்துவிடுவேனோ
என்கிற பயமோ….!
உடம்பில்
ஊறிய இனம் புரிந்த சந்தோஷத்தில், என்ன செய்வது
என்று தெரியாமல் விக்கித்துப் போய் நின்றார் குருமூர்த்தி.. நாளைக்கே புறப்பட்டாக வேண்டுமாமே…!
படபடப்புக் கொள்ளச் செய்தது அவசரச் செய்தி. நான் தாத்தாவாகப் போறனா? எனக்கு அந்த யோகம்
வேறே அடிச்சிருக்கா…? பேரப் பிள்ளைய கையிலெடுத்துக் கொஞ்சற பாக்கியம் இன்னும் மிச்சமிருக்கோ?
என்னை என் போக்கிலயே ஆட விட்டு, இன்னும் என்னவெல்லாம் கொடுக்கப் போறான் அந்த ஆண்டவன்?
கடவுளுக்கு அவ்வளவு பிரியமானவனா நான்?
அப்பா…யப்பா….ஓ.கே.யாப்பா….?
கண்டிப்பா வந்துடணும்…..இன்னும் அரை மணி நேரத்துல டிக்கெட் அனுப்பிடுவேன்….தட்கலுக்கு
ரிசர்வ் பண்ண டைம் ஆயிடுச்சு…வச்சுடறேன்……-லைன் துண்டிக்கப்பட்டது.
சற்று
நேரத்தில் மறுபடியும் ஃபோன் மணி அடித்த போது…மீண்டும் பதறித்தான் போனார் குருமூர்த்தி.
எதற்கெடுத்தாலும்
பதற்றம்…படபடப்பு…கோபம்…தாபம்…இதத்தவிர வேறென்ன தெரியும் உங்களுக்கு…? –விலாசினியின்
குரல் உள்ளுக்குள் அமிழ்ந்து ஒலித்தது.
“.அப்பா…நான்
சுமதி பேசறேன்…..நல்லாயிருக்கீங்களாப்பா….நீங்க கிளம்பி வந்துருங்கப்பா…எங்ககூட இருக்கலாம்ப்பா….எங்களுக்காக
வாங்கப்பா….அவர் டிக்கெட் போட்டுட்டார்…இப்ப அனுப்பிடுவார்…நாளைக்கே கிளம்புறீங்க…ஸ்டேஷனுக்கு
வந்து உங்களைக் கூட்டிண்டு வருவார்…சொல்லியிருக்கேன்…
மரு-மகளின்
கனிந்த குரலைக் கேட்டு உணர்ச்சி மேலிட கண்ணீர்
கசிந்தது குருமூர்த்திக்கு. பிரிவில்தான் அருமை தெரியும் போலிருக்கிறது. நான்தான் இவர்களின்
அன்பைப் புரிந்து கொள்ளவில்லையோ…! பிள்ளைகளுக்காக எத்தனை பேர் வெளிநாடெல்லாம் ஒத்தையாய்ப்
பறக்கிறார்கள்? இங்கிருக்கும் சென்னைக்குப் போக என்ன கிராக்கி? ஏறிப் படுத்தால், விடிந்ததும்
ஊர்…..இந்த மகாராஜாவை அழைத்துச் செல்ல மகராசனாய் வருவான்….புதல்வன்…! ராஜபோகம்தான்…!
சுற்று முற்றும் பார்வை படர்ந்தது.
ஃபோன்
ஸ்பீக்கரில் சத்தமாய்க் கேட்டுக் கொண்டிருந்த
அந்த வாய்ஸை உணர்ந்து மரத்தைச் சுற்றிய மேடையில்
அமர்ந்திருந்த பலரின் கவனமும் இவரை நோக்கித் திரும்பியிருக்க….அறிந்த அந்தக் கணத்தில் மிகவும் பெருமிதமாயும், கௌரவமாயும்
உணர்ந்தார் குருமூர்த்தி….
மனம்
சமனப்பட, அழுத்தமான புன்னகையோடு, கம்பீரமாய் எழுந்து சுற்று முற்றும் தீர்க்கமாய்ப்
பார்த்துக் கொண்டே எதிர்த்தாற்போல் இருந்த கோயிலை நோக்கி பக்தி ததும்ப நடக்கலானார். --------------------------------------------------------------------------
-
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக