01 அக்டோபர் 2018

இ.பா. சிறுகதைகள் கட்டுரை - 2 இலக்கியவேல் மார்ச் 2018

"இலக்கிய வேல்" இதழ் ஐந்தாம் ஆண்டில் நடைபோடுகிறது வெற்றிகரமாக.
மார்ச் 2018 இதழில் எனது கட்டுரைத் தொடர் ஆரம்பம்.
இவ்விதழில் "இந்திரா பார்த்தசாரதி சிறுகதைகள்" .
படியுங்கள் நண்பர்களே.....
‘கட்டுரை“   -2             .     
      
லக்கியம் தனி மொழியன்று. உரையாடல். உரையாடல் எனும்போது நடையைப் பொறுத்த விஷயம். நடை என்பது சிந்தனையின் நிழல். இது இ.பா.வின் கருத்து.
     ஒரு கருப்பொருளை எடுத்துக் கொண்டு எப்படி உரையாடலைக் கொடுக்கிறோம் என்பதைப் பொறுத்துத்தான் அந்தக் கதையின் கரு பலம் பெறுகிறது, வாசக மனதில் நிலை நிற்கிறது. அப்படி ஒரு படைப்பு நிலைக்க வேண்டுமானால் உரையாடல் எப்படி வடிமைக்கப்படுகிறது என்பதைப் பொறுத்தே அதைக் கணிக்க முடியும். வெகு சாதாரண நடப்புகளை உள்ளடக்கியதாக விளங்குவதில் எந்தப் பலனுமில்லை. அது வரிகளைக் கூட்டவும், பக்க எண்ணிக்கையை அதிகரிக்கவும், சொல்ல வந்த கதையைப் பலவீனப்படுத்தவும், நீர்த்துப் போகவுமே செய்யும். அதெல்லாம் கிடக்கட்டும், விஷயமென்ன என்று வாசகன் நகர்ந்து விடும் அபாயம் கண்டிப்பாக உண்டு. பதிலாக அந்த உரையாடலை, எடுத்துக் கொண்டுள்ள கருவை நோக்கி நகர்த்தும் விதமாக….அதனை மறைமுகமாக உணர்த்தும் சாயலில், அதோடு தொடர்புடையதான நிகழ்வுகளாய் அல்லது சம்பாஷனையாய் அமைக்கும் பட்சத்தில்….என்னவோ சொல்ல வருகிறாரே என்று தேடிக்கொண்டே உள்ளுக்குள் பயணிக்கும் நிலையை வாசகன் அடைகிறான். அதிலும் படைப்பாளிக்கென்று ஒரு சிறப்பான, தனி அழகு நடை அமைந்து விட்டது என்றால் அந்த அடையாளமே வாசகனுக்கு நம்பிக்கையைக் கொடுக்கும். விஷயத்தைச் சொல்லிக் கொண்டு செல்லும் அழகுதான் எத்தனை அருமை என்று வியந்து வியந்து ஆழ்ந்து படிக்கச் செய்யும். அதுவரை யாராலும் கையாளப்படாத, விவாதிக்கப்படாத பொருளாக அந்தக் கதையின் மையக் கரு இருக்குமாயின், புதிய விவரணைகளை நோக்கி, அறிதல் என்கிற ஆசைக்குட்பட்டு வாசிப்பை விடாது தொடருபவனாய் வாசகன் படைப்பாளியின் மேல் மதிப்பு வைத்து தன்னை மேம்படுத்திக் கொள்வதில் முனைந்து நிற்பான்.
     அந்த வகையிலே இ.பா.வின் சிறுகதைகள் இத்தொகுதியில் வெவ்வேறு களங்களைக் கொண்டு, வெவ்வேறு விதமான நிகழ்வுகளை உள்ளடக்கி, காத்திரமான விவாதங்களுடன் குடும்ப, சமூக நிகழ்வுகளை, மனித மனங்களை விரிவாக விவாதித்து, சமூக நடப்புகளுக்கேற்ப மனிதச் செயல்பாடுகள் எப்படியெல்லாம் மாறிச் சீரழிந்து போகின்றன, நியாயங்களை நிலை நிறுத்த முடியாமல் எவ்வாறெல்லாம் தடுமாற்றங்கள் நிகழ்கின்றன, அதனால் அன்றாட மனித வாழ்க்கை எங்ஙனமெல்லாம் சீர் குலைந்து போகின்றன என்பதான மாறுபட்ட அனுபவங்களை நமக்குத் தருகிறார்.  ஒரு தேர்ந்த வாசகனாய் நாம் இத்தொகுதியில் அடங்கியுள்ள ஆழமான, அழுத்தமான கதைகளை பெரு வியப்போடு  உய்த்துணர ஆரம்பிக்கிறோம்.
     சமூக அக்கறையுள்ள, நம்மால் இயன்றதை இந்தச் சமூகத்துக்குச் செய்து கொண்டேயிருக்க வேண்டும் என்கிற பொது நல நோக்குள்ள ஒருவன், தான் விரும்பும் ஒரு எளிய சிறிய காரியத்தைக் கூட  தன் விருப்பப்படி நிறைவேற்ற முடியாமல் எவ்வாறெல்லாம் அலைக்கழிக்கப்படுகிறான், அதற்கு இந்நாட்டின் அரசாங்க சட்ட திட்டங்கள், நிர்வாக நடைமுறைகள் எப்படியெல்லாம் பாடாய்ப் படுத்தி, ஏதும் செய்ய லாயக்கற்றவனாய் மாற்றிவிடத் துடிக்கின்றன அல்லது ஏதும் செய்து என்ன ஆகப் போகிறது என்பதான மனநிலைக்குத் தள்ளிக் கொண்டு போகின்றன, நமக்கென்ன வந்தது, ஏன் இதற்காக. தான் மெனக்கெட வேண்டும், எல்லோரையும் போல் அரசாங்கம் பார்த்துக் கொள்ளும் என்று நாமுண்டு, நம் வேலையுண்டு என்று எதையும் கண்டு கொள்ளாமல்  நிம்மதியாய், சந்தோஷமாய் இருந்து விட்டுப் போய்விடலாமே என்ற முடிவுக்கு எப்படிக் கொண்டு வந்து நிறுத்துகிறது என்பதை அழகாக, சிக்கனமான, அர்த்தம் பொதிந்த வார்த்தைகளில், புத்தி பூர்வமாய் நினைத்துப் பார்த்து விவாதித்து “யக்ஞம்” என்ற சிறுகதையின் மூலம் நமக்கு ஒரு சிறந்த வாசிப்பு அனுபவத்தைத்  தருகிறார் இ.பா.
     புது டெல்லியில் இருக்கும் மோகன் ஒரு இன்டர்வியூவுக்குப் போகையில்  ரயில்வே ஸ்டேஷனுக்கருகே பாலத்திற்கடியில் ஒரு பிணத்தைப் பார்க்கிறான். பல நாள் பிணம் என்று தோன்றுகிறது. போக்குவரத்து சிக்னல் போலீஸ்காரனிடம் போய்ச் சொல்கிறான்., டெல்லி கார்ப்பரேஷனுக்கு ஃபோன் செய்யுங்கள் என்று கூறுகிறான் அவன். பிச்சைக்காரன் இயற்கை மரணம்தான் எய்தியிருக்கிறான் என்று போலீஸ் உறுதி செய்ய வேண்டாமா, வாருங்கள் என்கிறான் மோகன். அப்படீன்னா போலீஸ் ஸ்டேஷனுக்குச் செல்லுங்கள் நான் போக்குவரத்துக்குத்தான் போலீஸ், இது என் வேலையில்லை என்று தள்ளி விடுகிறான். இதைக் கொலை என்று நான் நினைக்கவில்லை, பட்டினிச்சாவுதான் என்கிறான் மோகன். அப்படியானால் கார்ப்பொரேஷனுக்கு செல்லுங்கள் என்று அவன் மறுபடியும் சொல்ல டைரக்டரியில் எண்ணைக் கஷ்டப்பட்டுத்  தேடி  ஃபோன் போடுகிறான். அவர்கள் எந்த இடம் என்று கேட்டுவிட்டு, முனிசிபல் கமிட்டிக்கு ஃபோன் செய்யுங்கள் என்கிறார்கள். அலுப்பு வருகிறது மோகனுக்கு. எதுக்கு இந்தப் பாடு தனக்கு? ஆனாலும் கௌரவப் பிரச்னையாகத் தோன்றுகிறது. எடுத்த காரியத்தை முடிக்காமல் விடுவதா என்ற வீம்பு பிறக்கிறது. அநாதைப் பிணத்தை தகனம் செய்ய உதவுவதே பெரிய யக்ஞம் என்ற மனிதாபிமான அடிப்படையில் கிழிந்த பழைய டைரக்டரியில் எண்ணைத் தேட அது கிழிந்து பறக்கிறது. கடைசியில் அருகே வேறொரு கடைக்குச் சென்று ஒரு வழியாக ஃபோன் செய்ய அவர்கள் அது கார்ப்பொரேஷன் பொறுப்பு என்கிறார்கள்.
     மோகனுக்கு 10.30 மணிக்கு இன்டர்வியூ. மணி 10.20 ஆகிறது. தனக்கு வேலை கிடைக்காது என்ற விரக்தி உணர்வுதான், மனிதாபிமான உணர்வாக மாற்றுரு எடுத்து காலத்தை விரயம் செய்யும்படி தூண்டியதோ என்று சந்தேகம் ஏற்படுகிறது அவனுக்கு. 10.50 க்கு தாமதாய் போகிறான். ஏன் தாமதம் என்பதற்குரிய உண்மையைச் சொல்கிறான். அவர் 50 ரூ. இவனுக்குக் கொடுத்து போய் அநாதைப் பிணத்தை தகனம் செய் என்று அனுப்பி விடுகிறார். ஒரு தமிழர்  நீங்கள் இதில் தலையிடாமல் இருப்பது நல்லது, தொந்தரவுதான் வரும், யாரும் பாராட்ட மாட்டார்கள் என்கிறார். எமர்ஜென்ஸியின்போது வம்பில் மாட்டிக் கொள்ளாமல் பல சாகசங்களைச் செய்ததைப் பற்றிச் சொல்கிறார். பாதிப்பில்லாமல் எதையும் செய்யணும் என்று உணர்த்துகிறார்.
     சோர்வோடு வெளியேறுபவன் யோசிக்கிறான். செத்துப் போனவன் போய்விட்டான். உயிரோடு இருப்பவனைப் பாதுகாப்பதே யக்ஞம் என்று மாற்றுச் சிந்தனை பிறக்கிறது. கையில் ஏற்கனவே அவனிடமிருந்த பணத்தை வைத்து வயிறாரச் சாப்பிடுகிறான். தானம் கிடைத்த ஐம்பது ரூபாயை ஒரு ஊனமுற்ற பிச்சைக்காரனுக்குப் போட்டுவிட்டு நிம்மதியாய் நடக்கிறான். இந்த உலகில் பலரும் இப்படித்தான் நிம்மதியடைகிறார்கள் என்று தோன்றுகிறது அவனுக்கு.
     சாகசங்களோடு சாமர்த்தியமாய் வாழ்வதுதான் வாழ்க்கை. நேயம், கருணை தொண்டு, என்பதெல்லாம் பிறகுதான் என்பதை கதாபாத்திரங்களின் வழி உய்த்துணரும் வகையில் சொல்லப்பட்டுள்ள யக்ஞம் என்ற இச்சிறுகதை இ.பா.வின் சிறப்பான எழுத்துத் திறனை இயம்புவதாகும்.
     “ந்தணர் என்போர் அறவோர்”- என்றொரு சிறுகதை. இந்தத் தலைப்புக்கு ஏற்றாற்போல்தான் கதையைப் புனைந்திருக்க வேண்டும் என்பதைக் கதையைப் படித்தவுடனேயே சொல்லிவிடத் தோன்றுகிறது. ஒரு சிக்கலான விஷயத்திற்கு நேரடியான தீர்வு உண்டெனினும், அந்தஸ்தும், கௌரவமும் தடுக்க, பணபலம் அதற்கு வேறொரு முடிவைத் தேடுகிறது. அந்த வேறொரு முடிவையும் தன் கௌரவமான இடத்திலேயே நின்று கொண்டு, எதிராளிக்கு நன்மை செய்வதுபோல் தீர்க்க முனைவதும், தன் சார்பான தவறினை சாமர்த்தியமாய் மறைக்க முயல்வதும், பணம் இருந்தால் அதை எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்தலாம், எதையும் எப்படியும் வளைத்துக் கொள்ளலாம், சாதித்துக் கொள்ளலாம் என்கிற முடிவுக்கு ஆணவமாய் வரக் கூடியவர்கள், மனசாட்சி என்ற ஒன்றைப் பற்றி கிஞ்சித்தும் நினைத்துப் பார்க்கத் துணியாதவர்களாயும், அலட்சியமாய் ஒதுக்கித் தள்ளி விடுபவர்களாயும், அதுவே அறத்தன்மை கொண்டோர்க்கு சீரிய சிந்தனையுடையோராய் அந்த மனசாட்சியைக் காப்பாற்றும் தன்மை உடையவர்களாயும், அதுவே அந்தணர்க்கான பூரண அடையாளம் என்பதாயும் பரிணமிக்கிறது  இந்தப் புனை கதை எடுத்துக் கொண்ட கருத்தை திடமாய் முன் வைப்பதில் வெற்றி கொள்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.
     “தெளிவு“ என்றொரு சிறுகதை. ஆசிரியர் எந்தத் தெளிவை உணர்த்துகிறார் என்று நாம் ஊகித்து அறியும் முன், கதையில் உள்ள ஒவ்வொரு கதாபாத்திரங்களும் தெள்ளத் தெளிவாய் தங்களின் தரப்பு வாதங்களை அல்லது தங்களின் பேச்சினை பளிச்சென்று எடுத்து முன் வைப்பதன் மூலம் ஒரு சிறுகதையை எந்தவித இடர்பாடும் இன்றி  சுலபமாக நகர்த்திச் செல்ல முடியும் என்பதற்கு இக்கதை ஒரு சான்றாக விளங்குகிறது. முதிய தலைமுறை மற்றும் இளைய தலைமுறைகளுக்கிடையே ஒரு விவாதம் எழுமாயின் அல்லது ஒரு விஷயம் சிக்கலுக்குள்ளாகுமாயின் அது அந்தந்தத் தலைமுறையினரால் எப்படிப் பார்க்கப்படும் என்பதை ஓரளவுக்கு நாம் யூகித்து அறிய முடியும்தான். ஆனால் அதே விஷயத்தை ஒரு படைப்பாளி முன் வைக்கும்போது வாசகனுக்கு ஆசிரியன் கண்டடையும் புதிய உலகத்தை உய்த்துணரும் வகையில் தேர்ந்த வாசகனால் அந்த உலகம் புரிந்து கொள்ளப்படும்போது அந்தப் படைப்பின் சாராம்சமும் இலக்கியத்தின் மேன்மையும் அங்கே உயர்ந்து நிற்கிறது.
இந்தச் சிறுகதையில் வெளியூரில் இருக்கும் பாலன் தான் அங்கு ஒரு பெண்ணை விரும்புவதை எப்படித் தந்தையிடம் வெளிப்படுத்துவது என்று யோசித்துக் கொண்டிருக்கையில், தந்தையால் முறைப்பெண் சரோஜாவை அவனுக்குத் திருமணம் செய்விக்க முயற்சி நடந்து கொண்டிருக்கையில் தன் காதலை தந்தைக்குத் தெரிந்த ஒரு டாக்டர் மூலம் அவர் காதுக்குக் கொண்டு செல்ல, ஏற்கனவே இந்த விஷயத்தை அரசல் புரசலாக அறிந்திருந்த தந்தை நண்பர் மூலம் உறுதி செய்யப்பட்டவுடன் அதிர்ந்து போய் படுக்கையில் விழுந்து விடுகிறார். அவரை உயிர்ப்பித்து எழுப்பி உட்கார்த்த என்று டாக்டரும் பையன் திருமணத்திற்கு ஒத்துக்கொண்டு விட்டான் என்று மொட்டையாய் ஒரு பொய்யைச் சொல்ல பாலனும் புரியாமல் அமைதி காக்க, சரோஜா முகத்தில் எந்தவித உணர்ச்சியும்  எழாதது கண்டு தந்தை தீட்சிதர் அமைதியிலாழ்ந்து ஒரு நிதானத்திற்கு வருகிறார்.
எனக்காக அவர் தன் லட்சியங்களையும் கனவுகளையும் தியாகம் செய்ய வேண்டாம்…நான் அவரைக் கல்யாணம் செய்துக்கப் போறதில்லை என்கிறாள் சரோஜா. அவர் என்னை வேண்டாம்னு சொல்ல உரிமையிருக்கிறபோது நான் ஏன் அவரை வேண்டாம்னு சொல்லக் கூ்டாது என்று கேள்வி வீசுகிறாள்.
சரோஜாவுக்கு இஷ்டமில்லன்னா வேண்டாம் என்கிறார் தீட்சிதர்.
பாலனுக்கு அவமானம். அவள் தன்னை நிராகரித்தது அவன் சுய கௌரவத்துக்குச் சவால்.தனக்காக அவள் காத்திருப்பாள், அவளைத் தேற்றிச் சமாதானப்படுத்த வேண்டும் என்ற அனுதாபத்துடன் அவன் வந்திருக்க, அவளோ அவனை அனுதாபத்திற்குரியவனாக்கி விடுகிறாள்.அவன் பலஉறீனப்பட்டு நிற்கும்போது அவள் தன் முழு பலத்துடன் நிற்கிறாள்.
சரோஜாவின் இந்தத் தெளிவுதான் கதையின் உச்சம்.
ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம். மொத்தம் 43 கதைகள் உள்ள இத்தொகுதியில் இ..பா.வின் எழுத்துச் சிறப்புக்கு நாம் முன்னே வைப்பது மூன்று நான்கு சிறுகதைகளைத்தான். கிட்டத்தட்ட நாற்பதாண்டுகளில் தான் எழுதிய சிறுகதைகளின் தொகுப்புதான் இவைகள் என்கிறார். ஒரு படைப்பாளி வாழும் காலத்திலேயே அவரின் முழுத் தொகுப்பு வருவது என்பது பெருமைக்குரியதுதான். இலக்கியம் மனித சமுதாயத்தோடு கொள்கின்ற உறவுகளை நிச்சயப்படுத்தும் உணர்ச்சிகளின் பரிமாற்றம்  என்று விளம்பும் இந்திரா பார்த்தசாரதி அவர்களின் இந்த முழுச் சிறுகதைத் தொகுப்பின் பகுதி-2 னை அனைத்துத் தமிழிலக்கிய வாசகர்களும் தவறாது படித்து ரசிக்க வேண்டும் என்பது அவசியமாகும்.
                     ---------------------------------------------
                 
Comments


கருத்துகள் இல்லை:

  'குற்றம் புரிந்தவன்'  - சிறுகதைத் தொகுப்பு - புஸ்தகா.கோ.இன்  - ல் வெளியிடப்பட்டுள்ளது.    (www.pustaka.co.in) --------------------...