உஷாதீபன் – தன் குறிப்பு
1987 முதல் எழுத ஆரம்பித்த இவர் தனது எழுத்துப்
பணியை இன்றுவரை தொடர்ந்து கொண்டிருக்கிறார். வார, மாத இதழ்களிலும் இலக்கியச் சிறு பத்திரிகைகளிலும்
இவரது கதைகள் வெளி வந்துள்ளன. இணைய இதழ்களிலும் தொடர்ந்து எழுதி வருகிறார்.
உள்ளே வெளியே, பார்வைகள், நேசம், சில நெருடல்கள்,
தனித்திருப்பவனின் அறை, திரை விலகல், நினைவுத் தடங்கள், வாழ்க்கை ஒரு ஜீவநதி, நான்
அதுவல்ல, தவிக்கும் இடைவெளிகள்,வெள்ளை நிறத்தொரு பூனை, செய்வினை-செயப்பாட்டு வினை ஆகிய
12 சிறுகதைத் தொகுப்புகளும், புயலுக்குப் பின்னே அமைதி, மழைக்கால மேகங்கள், உஷாதீபன்
குறுநாவல்கள் ஆகிய மூன்று குறுநாவல் தொகுப்புகளும், லட்சியப் பறவைகள் என்ற ஒரு சமூக
நாவலும், நின்று ஒளிரும் சுடர்கள் என்கிற தமிழ்த் திரைப்படக் குணச்சித்திரங்களின் நடைச்
சித்திரம் என்பதான உரைநடைச் சித்திரக் கட்டுரைத்
தொகுப்பும் இதுவரை வெளி வந்துள்ளன.
சென்னை இலக்கியச் சிந்தனை அமைப்பின் சிறந்த
மாதச் சிறுகதையாக (1987) இவரது வெள்ளை நிறத்தொரு பூனை மற்றும் 2015 டிசம்பர் மாதச்
சிறுகதையாக “கைமாத்து” என்ற சிறுகதையும் பரிசு
பெற்றுள்ளன. கல்கி நினைவுச் சிறுகதைப் போட்டிப் பரிசு, அமுத சுரபி பொன் விழா சிறுகதைப்
போட்டிப் பரிசு, குங்குமம் நட்சத்திரச் சிறுகதை, இளைய தலைமுறைச் சிறுகதைப் பரிசு, தினமணி
கதிர் நெய்வேலி புத்தகத் திருவிழாக் குழு நடத்திய
சிறுகதைப் போட்டிப் பரிசு ஆகியன இவர் பெற்ற பரிசுகள்.
2007-ம் ஆண்டுக்கான அமரர் ஜீவா – பி.இராமமூர்த்தி
நூற்றாண்டு விழா திருப்பூர் தமிழ்ச் சங்கம்
மற்றும் கலை இலக்கியப் பெருமன்றம் ஆகியன இணைந்து நடத்திய விழாவில் இவரது “வாழ்க்கை
ஒரு ஜீவநதி” சிறுகதைத் தொகுப்பு பரிசு பெற்றது. இத்தொகுதி மதுரை டோக் பெருமாட்டி கல்லூரியில்
நவீன கலை இலக்கியப் பயில் நூலாக அமைந்தது. இவரது சிறுகதைத் தொகுதிகள் பல மாணவர்களால்
M.Phil., P.Hd., ஆய்வுகளுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன. தினமணி கதிரில் வந்து கொண்டேயிருக்கும்
இவரது கதைகள் தொடர்ந்து மாணவ, மாணவிகளால் “கதிர் கதைகள்” என்கிற வரிசையில் ஆய்வு செய்யப்படுகின்றன.
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் இலக்கியப் போட்டி 2011 ல் இவரது “நினைவுத்
தடங்கள்” சிறுகதைத் தொகுதி அந்த ஆண்டின் சிறந்த சிறுகதைத் தொகுப்பாகப் பரிசு பெற்றது.
நெய்வேலி புத்தகக் கண்காட்சி மற்றும் காரைக்குடி புத்தகக் கண்காட்சிக் குழு நடத்திய
சிறுகதைப் போட்டிகளில் இவரது சிறுகதைகள் பரிசு பெற்றுள்ளன. கு.சின்னப்பபாரதி அறக்கட்டளை
விருது 2014 – இவரது “தவிக்கும் இடைவெளிகள்” சிறுகதைத் தொகுப்பிற்குக் கிடைத்தது.
2016 ல் உஷாதீபன் குறுநாவல்கள் – சென்னை நிவேதிதா
பதிப்பக வெளியீடாக வெளி வந்துள்ளது. மாற்றுத் திறனாளிகள் பதிப்பகமான “காகிதம் பதிப்பகம்”
வெளியீடாக இவரது “செய்வினை-செயப்பாட்டுவினை” சிறுகதைத் தொகுதி (2016) வெளிவந்துள்ளதை
மனமுவந்து அவர்களோடு கைகோர்த்ததாகப் பெருமையோடு முன் வைக்கிறார். சென்னை கவிதா பப்ளிகேஷனின்
வெளியீடுகளாக “லட்சியப் பறவைகள்” என்ற சமூக நாவலும், “நின்று ஒளிரும் சுடர்கள்” என்ற
திரைச் சித்திரமும் 2016 க்கான தனது படைப்புக்களின் மற்றும் இரண்டு முக்கிய வெளியீடுகள்
என்று தெரிவிக்கிறார். அமேஸான் கி-ண்டிலில் இவரது “முரண் நகை” என்ற சிறுகதைத் தொகுப்பு
2018
வெளியீடு இ.புக்காக வெளிவந்து விற்பனையில் உள்ளது.
குடும்பப் பிரச்னைகளை மையமாக வைத்து சமூக நாவல்களை
விவாத நோக்கில், உள்மன வியாபகங்களோடு சுவைபட
வழங்குவது இவரது கைதேர்ந்த கலை வெளிப்பாடு. சிறுகதைகளில் தனக்கென்று படிந்துபோன சரளமான
நடையில் தொடர்ந்து பயணித்துக் கொண்டிருக்கும் இவரின் தடம் நினைவு கூறத்தக்கது.
முழு முகவரி; உஷாதீபன், ushaadeepan@gmail.com எஸ்2. இரண்டாவது தளம் ( ப்ளாட் எண். 171, 172 ) மேத்தா’ஸ் அக்சயம் ( மெஜஸ்டிக்
Nஉறாம்ஸ் ) ,
ராம் நகர் ( தெற்கு ) 12-வது பிரதான
சாலை, ஸ்ருஷ்டி ப்ளே ஸ்கூல் அருகில், மடிப்பாக்கம்,
சென்னை
– 600 091 (செல் – 94426 84188)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக