‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாட...சிறு பொன்மணி அசையும்
வணக்கம். நலமாயிருக்கிறீர்கள் என்றே உணர்கிறேன். மலேசியப் பயணம் அதை உணர்த்தியது.
இரவு நாவல் இப்பொழுதுதான் முடித்தேன். யட்சினி என்ற தலைப்பும் பொருந்தும் என்று தோன்றியது.இரவில் விழித்திருப்பவர்கள் என்ற காரெக்டர்களே புதிதாய்த் தோன்றி விடாமல் படிக்க வைத்து விட்டது.
இருட்டில் நடக்கும் எல்லாமும் தவறுகளாய்த்தான் இருக்கும் என்று மகாத்மா சொல்லிப் படித்ததாக நினைவு. கடைசி இரண்டு அத்தியாயங்களில் மனசு அதிர்ந்து போனது. மேனன் கமலாவோடு வாழ்ந்த நாட்களை சிலிர்ப்போடு நினைவு கூறுவதும், அது நானில்லை வேறு என்று கனவில் இருவருக்கும் வந்து சொல்வதும், அங்கே இன்னொரு கதாபாத்திரமாய் நானும் நின்று கொண்டிருந்தேன்.
நீலிமாவைத் திருமணம் செய்து கொள்ளாமல் திரும்பியதில் மனது திருப்தி கொண்டது. ஆனாலும் அவர்களின் காதல் வகைமாதிரியை அந்த ரீதியில் கொள்ள வேண்டியதில்லை என்று உணரவைத்திருப்பது ஆறுதல்.
யட்சினி என்ற வகைப் பெண்ணை நானும் சந்தித்திருக்கிறேன். செய்வினை, செயப்பாட்டுவினை என்ற தலைப்பில் ஒரு சிறுகதையும் எழுதியிருக்கிறேன். எனது ஆப்த நண்பர் ஒருவரையும் இழந்திருக்கிறேன். அந்தக் கதை அவரின் சாவோடு ஆரம்பிக்கும். எனக்கு அது நினைவுக்கு வந்து விட்டது.
உங்களின் இரவு படித்து முடித்ததில் மனசு நிறைந்தது. நன்றி.
அன்பன்
உஷாதீபன்
அன்புள்ள உஷாதீபன் அவர்களுக்கு
யட்சி, யட்சிணி என்பவை இரவின் மீதான அச்சத்தின் பருவடிவங்கள் அல்லவா? யட்சி என்றால் கண்ணுடையவள் என்று பொருள் என்பார்கள். இரவில் நம் கண்கள் அழியும்போது தான் கண்பெறும் தெய்வ வடிவங்கள். இரவில் நம் கண்கள் அழிகின்றன என்பதனாலேயே கண்கள் உருவாக்கும் உலகமும் மறைந்துவிடுகிறது. நாம் வாழும் புழக்க உலகம் என்பது கண்களால் உருவாக்கப்படுவது அல்லவா? ஆகவேதான் துயத்தில் கண்களை மூடிக்கொள்கிறோம். பிரார்த்திக்கையிலும் தியானிக்கையிலும் கண்களை மூடிக்கொள்கிறோம். அப்படி மூடிக்கொண்டபின் உருவாகும் உலகமே அகம். அதுவே நம் ஆழம். அந்த ஆழமே இரவாகவும் உள்ளது. இரவில் வாழ்வதென்பது அந்த ஆழத்தில் வாழ்வது மட்டுமே. அது அபாயகரமான ஓர் விளையாட்டு. அதைவிளையாடி நிறைவுடன் மீள்வது எளியதல்ல.
யோகி இரவில் விழித்திருக்கிறான் என்று சொல்லப்படுவதுண்டு. யோகியின் இரவு என்று சொல்லப்படுவது நாம் நம் உலகியல் தேவைகளுக்காக உருவாக்கியிருக்கும் அனைத்தும் மறைன்ந்து போய் எஞ்சும் இருள்வெளியைத்தான் என்பார்கள். அந்த இரவை நோக்கித்தான் இரவில் விழித்திருக்கும் ஒவ்வொருவரும் சென்றுசேர்கிறார்கள். கமலா பலியாகிறார். மேனன் தப்பி ஓடுகிறார். கதாநாயகனைப்போல சிலர் அதை உதறமுடியாது மேலும் நீந்துகிறார்கள்
ஜெ
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக