ஒரு தேர்ந்த வாசகனுக்கே மொழிபெயர்ப்பு படிப்பது என்பது சற்றுக் கடினமான விஷயம். காரணம் கதை நடக்கும் களம், பழக்கப்படாத இடங்கள், அவற்றின் பெயர்கள், கதாபாத்திரங்களின் பெயர்கள், ஆணா, பெண்ணா என்பதில் அவ்வப்போது ஏற்படும் குழப்பங்கள், கதையின் தொடர்ச்சியை மனதில் வைத்துக் கொள்ள படித்து முடித்த பக்கங்களை அடிக்கடி புரட்டி நினைவு கூற வேண்டியிருப்பது, அதனால் பக்கங்கள் வேகமாய் கடக்க முடியாமை, என்று பலவுண்டு. இன்னொரு கஷ்டம் அப்படியே மொழியைப் பெயர்த்து எழுதி, அதாவது வார்த்தைக்கு வார்த்தை....வரிக்கு வரி...என்று பெயர்த்து எடுத்து தமிழில் நிறுவி விடும் அவலம். நம்ம ஆளுங்க எழுதினதையே இன்னும் படிச்சு முடிக்க முடில...இதுல மொழிபெயர்ப்புக்கு எங்க போறது? என்கிற சலிப்பு....இப்படிப் பல...
இதெல்லாம் எதுவுமில்லாமல் முழுக்க முழுக்க ஒரு நாவலை உணர்வுபூர்வமாய் உள்வாங்கி, காட்சிக்குக் காட்சி மனதில் நிறுத்தி, மொத்தக் கதையின் அனைத்து சம்பவங்களையும் ஒரு சினிமாவின் காட்சிகளைப் போல் உள்ளே விஷூவலாகப் படிய வைத்துக் கொண்டு, தனக்குக் கை வந்த தேர்ந்த மொழி நடையில் விறுவிறுப்பாக, ஒரு மொழி பெயர்ப்பைப் படிக்கிறோம் என்கிற உணர்வே இல்லாமல், இவரே எழுதினதுதானோ என்று நினைக்க வைக்கும் அளவு கதையில் ஆத்மார்த்தமாய் சஞ்சரித்து, தங்கள் திறமையைப் பளீரென்று வெளிப்படுத்துபவர்கள் ஒரு சிலர்.
அப்படி ஒரு அருமையான, மொழிபெயர்ப்பு நாவல் வந்திருக்கிறதென்றால் அது திரு எஸ்.ஷங்கரநாராயணன் அவர்கள் இப்போது புதிதாய் மொழிபெயர்ப்பு செய்து வெளியிட்டுள்ள “யோசே சரமாகோ” வின் “பார்வை தொலைத்தவர்கள்” என்ற நோபல் பரிசு பெற்ற நாவல்தான். கதையின் ஆரம்பத்தில் அறிமுகப்படுத்தப்படும் கதாபாத்திரத்திற்கு திடீரென்று பார்வை தொலைந்து போகிறது. அந்த அதிர்ச்சியிலிருந்து அவனும் நாமும் மீள வேண்டும் என்கிற பதைபதைப்பிலேயே உடனடியாக அவனோடு கைகோர்த்து பயணம் செய்ய ஆரம்பித்து விடுகிறோம்....திரு எஸ்.ஷ விற்கென்று ஒரு தனி நடையழகு உண்டு. அந்த வசீகரம் நம்மை அயர வைக்கிறது....பேசப்பட வேண்டிய பல படைப்பாளிகளில் அவர் முக்கியமானவர்...காலம் அவரைக் கண்டிப்பாக உச்சியில் கொண்டு நிறுத்தும்....நாவல் தொடர்கிறது என் விடாத வாசிப்பில்...அவசியம் வாங்கிப் படியுங்கள். ஒரு முழுமையான தேர்ந்த மொழிபெயர்ப்பு அனுபவத்தை உணருங்கள்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக