21 நவம்பர் 2016

”விடுதலை…? “

சிறுகதை

 

ழிப்பறைக்குள் அமர்ந்திருந்தபோது அந்த சத்தம் கேட்டது. பயணத்தில் உடம்பு சூடாகியிருப்பதை உணர முடிந்தது. வெறுமே அமர்ந்து முக்கிக் கொண்டிருப்பதில் புண்ணியமில்லை. நேரே, நேரத்திற்கு சாப்பிட்டு, நன்றாகத் தூங்கி எழுந்தால்தான் உடம்பில் உள்ள கழிவு வெளியேறும். அதுவரை சங்கடம்தான். பயணத்திலேயே ரெண்டு பாட்டில் தண்ணீரைக் காலி பண்ணியாயிற்று. அப்படியும் வயிறு இளகவில்லை. வெறும் யூரினாகப் போனதுதான் மிச்சம். ஒரு நாள் பயணத்திற்கே இந்தப் பாடாக இருக்கிறது. செல்லும் இடங்களில் முதலில் கழிப்பிட வசதி இருக்கிறதா என்றுதான் கண்கள் தேடுகின்றன. உறவுகளின் வீடுகளில் போய் உட்கார்ந்து கொண்டு அடிக்கடி கழிப்பறை நோக்கிச் செல்வதில் ரொம்பவும் சங்கோஜமும், சங்கடமும் ஆகிப் போகிறது. அவனவன் வீடுதான் சொர்க்கம். இதற்காகவே சில பயணங்களை ரத்து செய்த சமயங்களும் உண்டுதான். எல்லாவற்றையும் அப்படியே கடக்க முடிகிறதா என்ன? அவரவர்க்கு அவரவர் சிரமங்கள். யார் வந்து தாங்க? சரியாகச் சொல்லப் போனால் ஒவ்வொருவருக்கும் அவரவரின் விதித்த வழியேதான் வாழ்க்கை கழிந்து கொண்டிருக்கிறது.

அந்தச் சத்தம் மீண்டும் இவனைச் சங்கடப் படுத்தியது. பெரும்பாலும் நினைவிலேயே இருந்து கொண்டிருக்கும் விஷயம். அனுதினமும் கண்கொண்டு பார்க்கும் விஷயம். மனதை இன்றுவரை விடாமல் தொந்தரவு செய்யும் விஷயம். வாழ்க்கையில் சிலவற்றை அப்படிச் சட்டென ஒதுக்கிவிட முடிவதில்லை.

இப்டிப் படிலெல்லாம் அசிங்கப்படுத்தி வச்சா என்ன செய்றது? உங்க அப்பாவக் கொண்டு ரோட்டுல விடுங்கோ….என்னால கூட்டி அள்ள முடியாது தோட்டி மாதிரி….வீட்டுக்குள்ளயேன்னு எல்லாமும் ஆயிப்போச்சு….

கக்கூஸ்ல விடுங்கோன்னு சொல்லு…ரோட்டுல விடுங்கிறியே? அப்டியா பேசுறது? அடக்க முடியாமப் போயிருப்பார், பாவம்…

அதுக்காக? போய் முடியட்டும்னு பார்த்துண்டிருக்கச் சொல்றேளா? இங்க வச்சு ஏன் அசிங்கம் பண்றார்….ஒரேயடியா அங்க போய் இருக்க வேண்டிதானே….

அடக்க முடியாம வந்திருக்கும்டி…அதுக்கு அவர் என்ன பண்ணுவார்….தெரிஞ்சு செய்வாரா? முடிஞ்சாத்தான் நகர்ந்திடுவாரே…?

முடிலன்னா? இருக்கிற எடத்துலயேவா? வாய் திறந்து சொல்ல மாட்டாளோ?

நாந்தான் சொல்றேனே…வர்றதே தெரியாமப் போயிடும்டி. அதெல்லாம் நமக்கும் வயசானாத்தான் தெரியும்…முதுமை எல்லாருக்கும் பொது. அத மனசுல வச்சிக்கோ…

அப்ப நீங்க அள்ளிப் போடுங்கோ….

தினமும் நாந்தானே போட்டுண்டிருக்கேன். உன்னைச் சொல்ல முடியுமா? என்னவோ புதுசாச் சொல்றே? நீ எங்களுக்குப் பிண்டம் பண்ணிப் போடறதே பெரிசு…இதுல இத வேறே நான் சொல்லிட்டாலும்…..

இதற்கு என்ன பதில் வந்தது என்று காதைக் கூர் தீட்டிக் கொண்டான் ரமணன். எந்தச் சத்தமும் இல்லை. எதற்கும் ஒரு எல்லை உண்டுதானே…? இன்று காலைக் காட்சி அவ்வளவுதான் போலும்…ஆனாலும் வெறும் பொழுதுபோக்கு அல்ல இது…வேதனையான சமாச்சாரம்.

தினமும் இம்மாதிரி அந்தப் பெரியவரை முன் வைத்து எழும் வாய்ச் சண்டைகள். கை ஓங்குதல் என்பது இல்லை. அது அநாகரீகம் என்கிற உணர்வு இருக்கும் குடும்பம். மனிதப் பிரயத்தனங்கள் சோர்வுறும் போது எழும் புகைச்சல்கள். வெட்டிப் பேச்சுக்கள்.

வாசல் பக்கம் போய்ப் பார்க்க மனம் பரபரத்தது.

காபியைக் குடிச்சிட்டுப் போங்கோ…அதுக்குள்ளே அங்க என்ன அவசரம்? என்றவாறே வந்தாள் சுமதி. கொடுப்பதிலும் ஒரு அதிகாரம். உரிமை. வீட்டு வேலைகள் முழுமையாக அவர்கள் கையில் இருக்கும்போது, இந்த எடுப்பு கூட இல்லாமல் இருந்தால் எப்படி?

வாயைக் கொப்பளித்துவிட்டு, கால் அலம்பி நின்ற நான் காபியை வாங்கிக் கொண்டு திண்ணையை நோக்கி நகர்ந்தேன். நமக்கு நம் அனுபவங்களை விட அடுத்தவன் பாடுகளைப் பார்ப்பதில் ஸ்வாரஸ்யம் அதிகம். ஒன்றுமில்லாததற்கெல்லாம் ரோட்டில் கூட்டம் கூடுவதைப் பார்த்ததில்லையா? மனித இயற்கையே இப்படித்தானோ? எதிர் வீட்டில் நடப்பவற்றை அத்தனை சுலபமாய்த் தவிர்த்து விட முடியுமா? வேண்டாம் என்றாலும், காதிலும், பார்வையிலும் வந்தும், பட்டும் தொலைக்கத்தானே செய்கிறது. ஆனால் ஒன்று. இது அப்படித் தொலைக்கும் விஷயமல்ல. மனசு இரங்கும் விஷயம். ஏதாவது செய்யணுமே…..! மனசு அரிக்கத்தான் செய்கிறது.

சற்றே இடப் பக்கமாக எதிரே திரும்பும் தெருவின் உயரமான அந்தக் காங்க்ரீட் பாலத்தின் நட்ட நடுவில் குத்திட்டு உட்கார்ந்திருந்தார் அந்தப் பெரியவர். தொண்ணூறு தொட்டிருப்பார், நிச்சயம். வேட்டியைச் சரியாக இழுத்துவிட்டுக் கொள்ளவில்லை. கீழ்ப்பகுதி உறுப்பு தொங்கிய நோக்கில் தரையில் இடித்துக் கொண்டிருந்தது. வாயிலிருந்து எச்சிலும், கோழையுமாக இழையாய் வழிந்து கொண்டிருந்தது. மார்புக் கூடு இழுபட்டுக் கொண்டிருந்தது. கலங்கி மங்கிப் போன கண்கள். அதற்குள் அங்கே எப்படி வந்தார்? பக்கத்து ஃப்ளாட்டின் மாடியை நோக்கினேன். ஃபஸ்ட் ஃப்ளோர்தானே அவர் வீடு? பையனே தூக்கிக் கொண்டு வந்து விட்டிருப்பானோ? கத்திக் குடியைக் கெடுப்பாரே…மனுஷன்… முடியாதே…மாடிப் படியில் வெளிக்கிருந்த ஆளுக்கு அலம்பி விட்டார்களா? இல்லை அப்படியே கொண்டு வந்து போட்டு விட்டார்களா? அவரே நகர்ந்து நகர்ந்து வந்து சேர்ந்து விட்டாரோ?

அன்றொரு நாள் வெளி வராண்டாவில் இருக்கும் குழாயைத் திருகி, தன்னைத் திருப்பிக்கொண்டு, கை விட்டு அவர் அலம்பிக் கொண்டிருக்க, அந்த நேரம் பார்த்து மாடிப் பெண்மணிகள் அங்கே வர, என்ன ஒரு அமர்க்களம்?

அநாச்சாரம்…அநாச்சாரம்….எப்டித்தான் இங்க குடியிருக்கிறதோ தெரில…என்ன கண்றாவி இது?

கொஞ்ச நேரத்தில் வாளியில் தண்ணீரைப் பிடித்து, பெருக்குமாரைக் கொண்டு அவர் பையன் கூட்டிச் சுத்தம் செய்வதைப் பார்த்தேன்.

வெறுமே அலம்பினாப் போறாது…குழந்தைகள் வெளையாடுற எடம்.. டெட்டால் விட்டுக் கழுவி சுத்தம் பண்ணுங்க… இன்ஃபெக் ஷன் ஆயிடும்...அந்த வெராண்டா மொத்தத்தையும், சொன்ன இடம், சொல்லாத இடம் என்று க்ளீன் பண்ணினார் அவர் பையன். அருமை, அருமை என்றிருந்தது. இது என் ட்யூட்டி. அதனால செய்றேன் என்ற மனப்பூர்வமான அர்ப்பணிப்பு.

உங்க ஒருத்தருக்காக நாங்க அத்தனை பேரும் இந்த ஃப்ளாட்டைக் காலி பண்ணிட்டு ஓட வேண்டிதான் போலிருக்கு….வாடகைக்குன்னாலும், இந்த விஷயம் தெரிஞ்சா எவனும் வரமாட்டான்….காசையும் கொடுத்திட்டு, கஷ்டத்தையும் ஏன் வாங்கிக்கணும்னு…? எதாவது சீக்கிரம் ஒரு முடிவுக்கு வாங்க சார்…இல்லன்னா அடுத்த மீட்டிங்ல நாங்க ஒரு முடிவு எடுக்க வேண்டிர்க்கும்…பிறகு நீங்க வருத்தப்பட்டுப் புண்ணியமில்லை…

சொல்பவர்கள் எல்லாருடைய பேச்சையும் தலையைக் குனிந்து வாங்கிக் கொள்வார் கணபதி. ஒரு வார்த்தை பதில் பேச மாட்டார். ஒரு வேளை அவர் அப்படி மௌனியாய் இருந்து கழிப்பதே அவர்களுக்கு இவர் மேல் ஒரு கழிவிரக்கத்தை ஏற்படுத்தி விட்டிருக்கலாம். பச்சாதாபமாய் உணரலாம். சொன்னார்களே ஒழிய இன்றுவரை ஒன்றும் செய்யவில்லை. அதுவே பெரிய மனித நேயம்தான். அந்தப் பாபம் நமக்கெதுக்கு என்று கூட….. பூனைக்கு யாராவது மணி கட்டட்டும் என்றும் இருக்கலாம். சொந்த வீட்டில் குடியிருக்கும் கணபதி சாரின் பாடு இப்படி. தனி வீடாய் இருந்தால் யார் கேட்கப் போகிறார்கள். மனதில் பரிதாபப்படுவார்கள். அத்தோடு சரி.

வீட்டுக்கு வீடு வாசல்படி. இப்போ எங்கே தனி வீடு? அசோசியேஷன் கூட்டங்கள் வழக்கம்போல் நடந்து கொண்டுதான் இருந்தன. கூட்டம் நடக்கும் அன்று கரெக்டாக ஆப்ஸென்ட் ஆகி விடுவார் கணபதி. அன்று பார்த்து நிச்சயம் லேட்டாகத்தான் வீடு வந்து சேருவார். அதற்கு முதல் நாளும் அப்படி ஆக்கிக் கொள்வார். இதற்கென்று லேட்டாய் வருவதாய் யாரும் சந்தேகப்பட்டு விடக் கூடாதே. இயல்பாய்த் தெரிய வேண்டுமே…! போய் உட்கார்ந்தால் நிச்சயம் பிரச்னை வெடிக்கும். ஆதரவாய் யாரும் பேச மாட்டார்கள். மனமிருந்தாலும் மார்க்கமிருக்காது. செக்ரட்ரி பஞ்சாபகேசன்தான் சற்றுக் கெடுபிடி. என்னவோவொரு விதத்தில் தள்ளிப் போய்க்கொண்டிருந்தது விஷயம். அவ்வளவுதான். ஏதாச்சும் செய்துதான் ஆக வேண்டும். இல்லையென்றால் நாறிப் போகும். ஏற்கனவே நாறிக்கொண்டுதானே இருக்கிறது. தவியாய்த் தவித்தார் கணபதி. ஒரு முடிவுக்கும் வர இயலவில்லை. மனசு கேட்டால்தானே…!

அவர் ஒய்ஃப்கிட்டயே என்ன வாங்கு வாங்குறார் தெரியுமா? பிள்ளப்பூச்சிய்யா… பாவப்பட்ட மனுஷன்….அப்பாவி….அது தெரிஞ்சிதான் அந்தாளும் அவரை இந்தப் பாடு படுத்துறார் போலிருக்கு….நல்லாச் சொல்றதுன்னா அப்பன் புள்ள பாசம் ரெண்டு பேருக்கும் ரொம்ப ஜாஸ்தி….ஆனா அது வெளில தெரியாது….அவ்வளவுதான்…எங்கப்பாவும் இப்டித்தான் இருந்தார். ஆனா அவுருக்கு கெத்து ஜாஸ்தி. இவ்வளவு நகர முடியாமப் போகாட்டாலும், தேய்ச்சு தேய்ச்சு நகர்ந்து டாய்லெட்டுக்குப் போயிடுவார். ரொம்பக் கூச்சம். ஏதோ ஜந்து மாதிரி இருக்கிறதா ஃபீல் பண்ணிட்டார்…அவரே ஃபோன் பண்ணி ஆட்களை வரவழைச்சு வேனைக் கொண்டு வரச் சொல்லி, தன் ஜாமான்களையெல்லாம் தானே எடுத்து வச்சிண்டு, தயாரா நின்னு கிளம்பிப் போயிட்டார். பக்கத்து ஆத்துலகூட யார்கிட்டயும் சொல்லலை…வீட்டைப் பூட்டி வெளில செக்யூரிட்டிகிட்டக் கொடுத்திட்டு, வந்தாச் சொல்லுன்னு ரெண்டே வார்த்தை…யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா போங்கன்னு பாடிண்டே போனாராம்…வாட்ச்மேன் சொல்லிச் சொல்லி சிரிக்கிறான்…அவர் ஒரு தனி காரெக்டர்…ராத்திரி அவரே ஃபோன் பண்றார்…இப்படியாக இங்க வந்து செட்டிலாயிட்டேன்னு….எல்லாருக்கும் அப்டி அமையுமா? இல்ல எல்லாருந்தான் அப்டி இருப்பாளா? அப்டி ஒருத்தர்னா இப்டி நாலு பேர்…என்ன பண்றது கஷ்டந்தான்….காசும், பணமும் தவழ்ற எடத்துல ஒரு மாதிரி, அது இல்லாத எடத்துல வேறேமாதிரி….தட்டுப்பாடா இருக்கிற எடத்துல இன்னொரு மாதிரி…ஆனா எல்லா எடத்துலயும் மனசுன்னு ஒண்ணு இருக்கே….அதுதான் மனுஷாளக் காப்பாத்துறதும், பொரட்டிப் போடுறதும்….அந்த மனசு மட்டும் எல்லாத்தையும் சகிச்சிண்டுதுன்னு வச்சிக்குங்கோ…அப்புறம் எதுவும் முன்னால நிக்க முடியாது…

போன மீட்டிங் நடந்த சமயம், முடிந்திருக்கும் என்ற நினைப்பில் சற்றுச் சீக்கிரம் வந்துவிட்டார் கணபதி. பைய இவர் வீட்டுக்குள் பூனையாய் நுழைந்து, சார்…என்றுகொண்டே உள்ளே வந்தவரை எப்படி வாயிலிலேயே நிறுத்துவது? இதற்குத்தான் என்று அவர் நோக்குப் புரியும்தான். வந்தவருக்குப் பேச ஒன்றும் இல்லாததே சொன்னது ஒளிந்து கொள்ளத்தான் என்று. காபியைக் கொண்டு வந்து நீட்ட,

ஆஉறா…அருமை…அற்புதம்….உங்காத்துக் காபியோட மஉறிமையே தனி…என்று புளகாங்கிதம் அடைந்தார். அரை மணியாவது போக்க வேண்டுமே…!

நாங்க பாலுக்குத் தண்ணியே விடறதில்லை மாமா என்றாள் என் பாரியாள்.

இப்போ அதை அவர் கேட்டாரா…? எதுக்கு இந்த வெட்டிப் பெருமை? என்றேன் நான்.

இருக்கட்டும் சார்…பொம்மனாட்டிகள்னா அப்படித்தான்…எங்காத்துலயும் ஒண்ணு இருக்கே….தலைல கொம்பு முளைக்காத குறைதான் ….தெனமும் தாடகை வதம்னா நடந்துண்டிருக்கு…அவ மத்தவாள துவம்சம் பண்ணின்டிருக்கா…அதச் சொல்றேன்….

எல்லா வீட்லயும் உள்ளதுதானே… என்றேன் நான் யதார்த்தமாக.

அப்டிச் சொல்லாதீங்கோ…எங்காத்துக்காரி இருக்காளே…அவளோட கீர்த்தி சொல்லி மாளாது. பிராப்தம், அனுபவிச்சிண்டிருக்கேன் நான். அவ்வளவுதான்…எங்கப்பாவைக் கரை சேர்க்கணும்…அதுக்காகப் பல்லைக் கடிச்சிண்டிருக்கேன்….பகவான் என்னைக்குக் கருணை வைக்கிறாரோ அன்னைக்குத்தான்….

ஆனாலும் உங்களுக்குப் பொறுமையும், பொறுப்புணர்வும் ஜாஸ்தி…என்னாலெல்லாம் இந்த அளவு இருக்க முடியாது….

வேறென்ன மாமா பண்ணச் சொல்றேள்….அவளை ஆத்த விட்டு வெரட்ட முடியுமா? எங்கப்பாதானே பண்ணி வச்சார்…சொந்தத்துல வேண்டாம் வேண்டாம்னு கதறினேன். காதுலயே வாங்கலையே…இன்னைக்கு அவரும் சேர்ந்து அனுபவிக்கிறார். காலத்துல விலைபோகாத தனக்கு வாழ்வு கொடுத்த தெய்வம்ங்கிற,தெய்வமென்ன மனுஷன்ங்கிற நெனப்பு வேண்டாம்? ஆனாலும் அவ பேசற பேச்சுக்களும், சொல்ற வார்த்தைகளும் அந்த ஆண்டவனுக்கே அடுக்காது. பொறுத்துண்டிருக்கோம் ரெண்டு பேரும். அவ பொங்கிப் போடுறதைத்தானே அன்றாடம் கொட்டிக்க வேண்டிர்க்கு…ஒரு துளி விஷம் வச்சுக் கொடுத்துருடி…ரெண்டு பேரும் போய்ச் சேர்ந்திடுறோம்னு எத்தனையோதரம் சொல்லியாச்சு…அதுக்கும் வேளை வரும், செய்றேங்கிறா….என்ன திமிருங்கறேள்… அந்த நாக்குல நர்த்தனம் ஆடுற வார்த்தைகளப் பார்த்தேள்னா….பக்கத்து வீடெல்லாம் பொத்திண்டு சிரிக்கிறா…

கொட்டித் தீர்த்த திருப்தி அவருக்கு. மேலும் புலம்பிக் கொண்டேதான் போய்ச் சேர்ந்தார் அன்று.

உண்மையில் சொல்லப்போனால் நான் அங்கு குடி போயிருக்க வேண்டிய ஆள்தான். தற்போதைய இந்த வீட்டைக் கட்டும் முன்பு, ரெடியாகிவிட்ட அந்த ஃப்ளாட்டில்தான் முதலில் ஒரு இடம் வாங்க எண்ணினேன். அப்போது அது வெறும் ஏழு லட்சம்தான். இன்றைய அதன் மதிப்பு நாற்பது, ஐம்பது தேறும். எதிரே குடியிருந்தமேனிக்கு இங்கே கட்டட வேலைகளைக் கவனிக்கலாம் என்பது என் எண்ணம். எண்ணமெல்லாம் மணமாய்த்தான் இருந்தது. யாரிடம் இருக்கு ஐவேஜூ? ஆசையிருக்கு தாசில் பண்ண…அதிர்ஷ்டம் இருக்கு கழுதை மேய்க்க…! அவ்வளவுதானே? அளவுக்கு மேல் வீங்கினால் வெடித்துத்தானே போகும். வெளி லோனும், அரசுக் கடனும் வாங்கி ரெண்டையும் சமாளிக்க முடியாது என்று விட்டாயிற்று. ஒரு வீடே என்ன பாடு படுத்தி விட்டது? வாடகைக்குக் குடியிருந்த பகுதியிலிருந்து தினமும் சைக்கிளில் வந்து வந்து கட்டட வேலைகளைக் கண்காணித்ததும், வாங்கிப் போட்டிருக்கும் சிமிண்ட் மூடைகள், இரும்புக் கம்பிகள், மரங்கள், ஸ்லாப்புகள், மணல், செங்கல், ஜல்லி என்று பார்த்துப் பார்த்து பிரமித்து, அவைகளின் பாதுகாப்பின்பேரில் பயந்து, பயந்து, வாட்ச்மேனிடம் வேண்டிக் கொண்டதும், சீலிங் போட்டதும், தண்ணீர் ஊறுகிறதா என்றும், தினமும் எழும்பிய கட்டடம்வரையில் தண்ணீர் அடிக்கிறானா என்று அக்கறையாய்க் கண்காணித்ததும், நானே மாய்ந்து மாய்ந்து ரப்பர் குழாயை இழுத்துக் கொண்டு ஈரப்படுத்தியதும், நினைத்ததுக்கு மேல் இழுத்துக் கொண்டு போனதும், எனக்கே நான்கு கைகள் எப்படி முளைத்தது என்று தெரியாததும், அப்பப்பா….யானை அசைந்து தின்னும், வீடு அசையாமல் தின்னும்….! அப்பொழுதே இந்த ஃப்ளாட்டை ஏக்கமாய்ப் பார்ப்பேன். வாங்கி, வாடகைக்குக் கூட விட்டிருக்கலாமே…? எதிர்த்தாற்போல் மாசா மாசம் கை மேல் காசு…ஆஉறா, நினைக்கத்தான் என்னவொரு சுகம்….நடந்ததா? நடக்கலியே…!

அன்னைக்கே நான் சொன்னேன்…அந்த ஃப்ளாட் ஒண்ணை வாங்கியிருந்தா இந்தக் கஷ்டம் உண்டா இன்னைக்கு? அவனை நம்பி விடவும் முடில உங்களால….போனது போகட்டும், இருந்தது இருக்கட்டும்னு இருக்க வேண்டிதானே…சதா சந்தேகப்பட்டு மாய்ஞ்சிண்டிருந்தா? நிம்மதி ஏது? எங்க, எந்த வாட்ச்மேன்தான் ஒழுங்கா இருக்கான்…எதாச்சும் காசு பார்க்கத்தான் செய்வான்….அதுக்காக அவனுக்குத் தொடர்ந்து வாட்ச்மேன் உத்தியோகம் கிடைக்காமயா இருக்கு? யாரு வேண்டாம்னு ஒதுக்குறா? அப்டி அப்டியே எச்சரிக்கையா சொல்லிண்டே நகர வேண்டிதான்…இல்லன்னா நாமதான் அந்தக் குடிசைல போய்ப் படுத்துக்கணும்…முடியுமா உங்களால…? போன வாரம் அஞ்சடி நீள சாரை வந்ததுன்னு நீங்கதான சொன்னேள்? ராத்திரி வேண்டாம்…பகல்ல போங்கோன்னு நான்கூட எச்சரிக்கலையா?

இம்புட்டு அனுபவமாய் எப்படிப் பேசுகிறாள்?. அன்று அந்த முதல் தளத்தில் ஒரு வீட்டை நான் வாங்கியிருந்தேனென்றால், இன்று நான் இங்குதான் குடியிருப்பேன் என்றாலும், கொஞ்ச காலத்திற்கேனும் கணபதி சாரின் அவஸ்தைகளை அன்றாடம் நானும் அனுபவித்திருப்பேனே…! குறைந்த பட்சம் பார்த்துப் பார்த்தேனும் மனம் புழுங்கியிருக்க மாட்டேனா? அப்பொழுது என்னவெல்லாம் சண்டை வந்திருக்குமோ? எப்படியெல்லாம் மனஸ்தாபம் கொண்டிருப்போமோ? நான் எதுவும் பேசியிருக்க மாட்டேன் என்றாலும், என் சகதர்மிணியின் வாய் சும்மா இருக்காதே…! அதென்ன, பெண்கள் தங்கள் வசதி இம்மி குறைந்தாலும் இந்தப் பாடு படுத்துகிறார்கள்? அதிகமான சகிப்புத்தன்மை உடையவர்கள் என்கிறார்களே? எங்கே ஒருத்தியைக் காட்டுங்கள் பார்ப்போம்? கணபதி சாரின் ஒய்ஃப்பும், என் மனையாளும் தலையை விரித்துப் போட்டுக் கொண்டு உர்…..உர்….என்று சதிருக்கு நிற்கும் காட்சிகள் பல சமயங்களில் என் மனத் திரையில் வந்து போவது உண்டுதான். நமக்குக் கொஞ்சம் கற்பனை அதீதம்தான் என ஒதுக்கி விடுவேன்.

என்னவோ அன்னைக்கு வீடு வாங்குங்கோ, வாங்குங்கோன்னு என்னைப் போட்டு அனத்தி எடுத்தியே…வாங்கியிருந்தா என்ன நிலைமை புரிஞ்சிதா? என்றேன் நான் சுமதியிடம்.

என்ன நிலைமை? ஒரு நிலைமையுமில்லே…வாடகைக்கு விட்டுட்டு வந்திருக்கப்போறோம்…அவாதானே அனுபவிக்கப் போறா? நமக்கென்ன வந்தது? ஆள் மாறினா வேறொருத்தர வச்சிட்டுப் போறோம்… அதான் வந்து கேட்டுண்டேயிருக்காளே…இப்பத்தான் என்ன வாழுதுங்கிறேள்…எதிர்த்த ஃப்ளாட்டுக்கு நாந்தான் ப்ரோக்கர் மாதிரி ஆயிடுத்து…எல்லாரும் சொல்லி வச்ச மாதிரி எங்கிட்டதான் வந்து கேட்கறா…பேசாம வீடு, வாங்க, விற்க இங்கே அணுகவும்னு போர்டு போட்டுடலாம் போலிருக்கு….

என்னவொரு சுயநலம் பார்த்தீர்களா? இந்தப் பொம்பளைங்ஞளே இப்டித்தான் சார்….

திரே அவர் இருமும் சத்தம். உடம்பே நடுங்கிக் குலுங்க, அடைத்திருந்த கபம் வெளிறிப் பாய, மூக்கிலும், வாயிலுமாகச் சளி பீறிட்டுத் தெறித்தது. எல்லாச் சத்தத்தோடும் டர்ர்ர்….டர்ர்ர்ர்…டர்ர்ர்ர்…. என்று முக்கி இரும இருமக் கூடவே வரும் அடக்க முடியாத அபான வாயுவும் கிறீச்சிட்டு வெளியேறிக் கொண்டிருக்க, அந்தப் பகுதியே அலறித் தவித்துக் கொண்டிருந்தது.. அந்தந்தப் பக்கத்து வீடுகளின் ஜன்னல்களில் சுளிக்கும் முகங்கள். பட் பட் என்று அடைக்கப்படும் ஜன்னல்கள். பரிதாபப்படுவோரே ஏனிப்படிக் குறைந்து போனார்கள்?

இன்னும் கொஞ்சம் போனால் ஆட்டோவும், டூ வீலர்களும், மினி வேன்களும் அமர்க்களப்படும். இருக்கும் அவசரத்தில், களேபரத்தில், யாருய்யா இது சாவுக் கிராக்கி….என்று பதவாகமாய் வந்து, ஆளைத் தூக்கி மூலையிலா உட்கார்த்தப் போகிறார்கள்? ஒரே இடி….ஆள் சட்னிதான்….அந்த அளவுக்கான காலை நேர வேகமும், பரபரப்பும்தான்….காலை மட்டுமென்ன, எந்நேரமும் அங்கே அப்படித்தான். சந்து, பொந்து எங்கிருந்தும் வாகனங்கள் உதிக்கலாம்.

எல்லாக் காலங்களிலும் ரோடு போட்டுக் கொண்டேதான் இருக்கிறார்கள். அல்லது போட்ட ரோடைப் பிளந்துகட்டிக் கொண்டிருக்கிறார்கள். எதாவது ஒன்று என்று சொல்லி அங்கங்கே தோண்டிப் போட்டு, மேடும் பள்ளமுமாக….யாராவது தவறி விழுந்து செத்தால் ஒழிய விடிவு பிறப்பதில்லை. அப்படிப்பட்ட இடத்தில் இந்த மனுஷன் இத்தனை அசால்ட்டாய் உட்கார்ந்திருக்கிறாரே…! நடு ரோடு என்பது தெரியவில்லையா என்ன? அல்லது எவனாவது இடிச்சித் தள்ளட்டும், செத்து ஒழிவோம் என்று வெறுத்து விட்டாரா?

மாமா…மாமா…கொஞ்சம் ஓரமாய் உட்கார்ந்துக்கோங்க…நான் இங்கிருந்து ஆதங்கமாய்க் கத்திய வேளைகளில், ஒரு கூரிய பார்வை…

பொத்திட்டுக் கெடடா… என்கிறாரோ?

உட்கார்த்திய இடத்திலிருந்து அவரால் நகரக் கூட முடியாது என்று தெரிகையில் எப்படி இதைச் சொல்கிறோம்…? அப்படியானால் உட்கார்த்தியவர்கள் நடு ரோட்டிலா கொண்டு வந்து போட்டார்கள்? கணபதியா அப்படி வந்து போட்டிருப்பார்? யார் செய்தது இதை…?

ரொம்பவும் கஷ்டப்பட்டு ஒதுக்கிக் கொண்டு போனார்கள் வண்டியை. சிலர் சடனாக ரூட்டை மாற்றிக் கொண்டார்கள். மூசு மூசுவென்று இழுத்துக் கொண்டிருந்தது அவருக்கு. அந்த ஜீவன் படும்பாடு சொல்லி மாளாது.

டேய்…என்னை விடுறா…என்னை விடுறா….நானாப் போய்ப்பேண்டா…. தூக்கி வெளில வீசறியா? நீ உருப்படாமப் போயிடுவ…வௌங்க மாட்டே….

பேசாம இருங்கோப்பா….காலம்பற நேரம்…எல்லா வீட்லயும் வேலை நடக்கணும்…எல்லாரும் ஆபீஸ் போகணும்…உங்க சத்தமும், நீங்க பண்ற அசிங்கமும் பெரிய ரோதனையாப் போச்சு….சகிக்கமுடில… பத்து பத்தரை வரைக்கும் இப்டி வெளில இருங்கோ…ஒண்ணும் குறைஞ்சு போயிடாது…மாடிப்படில ஒண்ணுக்குப் போயி வச்சிருக்கேள். அது வழிஞ்சி நடக்கிற எடமெல்லாம் ஓடறது…நார்றது…மேலே ரெண்டு மாடி இருக்கு…எத்தனை பேர் கடந்து போக வர இருக்கா? எதாச்சும் நினைச்சுப் பார்த்தேளா? ஒரு சத்தம் கொடுக்க மாட்டேளா? இப்டியா பண்ணுவேள்? எத்தனைவாட்டிதான் அலம்பித் துடைச்சு விடுவேன். நானும் ஆபீஸ் போக வேண்டாமா? இதப் பண்ணின்டிருந்தா போதுமா? உங்களோட பாடாப்பட்டு, வரவர எனக்கும் உடம்புல திராணியே இல்லாமப் போயிடுத்து…. ரொம்பக் கஷ்டப்படுத்தறேள்ப்பா….என்னால வரவர முடியவே இல்ல…

கணபதி சாரின் பேச்சு என்னை ரொம்பவும் சங்கடப்படுத்தியது. இத்தனை செய்யும் மனிதனுக்கு. ரெண்டு வார்த்தை சொல்லிச் சலித்துக் கொள்ளக் கூட உரிமையில்லையா என்ன?

வெளில கொண்டு தள்றயா என்னை…? நாம்பாட்டுக்கு ஒரு ஓரமாக் கெடக்கேன்…உன் பொண்டாட்டி பேச்சைக் கேட்டுண்டு என்னை ரோட்டுக்கு உருட்டி விடுறியா? நாசமாப் போறவனே…நீ ஆயுசுக்கும் நன்னாயிருக்கமாட்டே…

சரி, நன்னாயில்லாட்டாப் போறேன்…உங்க ஆசீர்வாதம்…இப்ப இங்க இருங்கோ நீங்க….

தாயோளி…கழிச்சல்ல போறவனே….சொல்லச் சொல்ல அம்புட்டு அலட்சியமாடா ஒனக்கு…..நா ஒருநாளைக்கு சாக்கடைக்குள்ள கெடக்கப் போறேன்டா…என்னை அள்ளித் தூக்கிப் போட்டுரு…செய்வையோல்லியோ…அந்தப் பாவம் பூரா ஒன்னையே சேரும்….சாபமிடறேன்…..உங்கம்மா இல்லாமப் போயிட்டா….பாவி, என்னை ஒத்தைல தவிக்க விட்டிட்டுக் கம்பி நீட்டிட்டா…அவ இருந்தா நா ராஜாடா…உன்னை இந்த வீட்டுக்குள்ள நுழைய விட்டிருப்பேனா….போடா நாயே…எங்கயாச்சும் போய்க் கெட….இது என் வீடுன்னு கெடந்திருப்பேன்…..எல்லாம் போச்சு…எல்லாம் போச்சு….

ஆம்மா…அம்மாவ விரட்டி விரட்டிப் பரத்தினது போதாதா? என்ன சந்தோஷப்பட்டா அவ….காலம் பூராவும் உங்களுக்குப் பீ மூத்திரம் எடுத்ததுதான் மிச்சம்…. மனசுக்குள்ள அழுதது உங்களுக்குத் தெரியுமா? ஆதங்கப்பட்டது அறிவேளா? அம்மா புண்ணியவதி, அதத் தெரிஞ்சிக்குங்கோ….இத்தனை முடியாம இருக்கறச்சே, இவ்வளவு பேசறேளே…இது நன்னாயிருக்கா…? பக்கத்துல எல்லாராத்துலயும் கேட்டுண்டிருக்கா…

குலுங்கிக் குலுங்கி கணபதி சார் என்னிடம் அழுத காட்சி என் கண் முன்னே இன்னும் அப்படியே நிற்கிறது.

சார்…எங்கப்பா என்னை என்ன திட்டினாலும் எனக்குக் கஷ்டமாயிருக்காது சார்….ஏன்னா அவர் எனக்கு அவ்வளவு செய்திருக்கார்…என்னைப் படிக்க வைக்கணும்னு அந்தப் பாடு பட்டிருக்கார்…எனக்கு ரொம்ப உடம்பு முடியாமப் போன சமயமெல்லாம் ராத்திரி பகலா அவர் கிடந்த கெடப்பெல்லாம், ஆயுசுக்கும் என் உடம்பைச் செருப்பாத் தைச்சுப் போடலாம் சார் அவருக்கு….காலம் பூராவும் என் படிப்புக் கடனை அடைக்கவே உழைச்சு உழைச்சு மாய்ஞ்சு போயிட்டார் சார்…வாழ்க்கைல எந்தச் சொகமும் அனுபவிக்காத மனுஷன்னா அது எங்கப்பாதான் சார்….மனசுல ஆசைங்கிறதே இல்லாத மனுஷன். தனக்குன்னு எதுவும் செய்துக்காத புனித ஆத்மா….அவருக்குப் போய் இப்டி முடியாமப் போயிடுத்தே சார்…. …என்னை எல்லாமும் சொல்ல அவருக்கு அத்தனை உரிமையுமிருக்கு…இவ்வளவு பேசறாரே… மனசோட சொல்றாருன்னு நினைக்கிறீங்களா? கிடையாது சார்…சத்தியமாக் கிடையாது. ஒடம்பு முடியாம, இப்டி ஆயிட்டமேன்னு வயித்தெரிச்சல்ல, சாகமாட்டாமக் கெடக்கனேன்னு நொந்து வர்ற வார்த்தைகள் சார் அது….என் பேரனோட கல்யாணத்தைப் பார்க்காமப் போக மாட்டேன்னு அடிக்கடி சொல்வார் சார்….அவர் பிரியமாப் பேசறது என் பையன் விதுர்கிட்ட மட்டும்தான் சார்…அவன் கல்யாணத்தப் பார்க்கணுமாம்…எம்புட்டு ஆசை பார்த்தீங்களா?நடக்கிற காரியமா?

.தாத்தா மடில, மடில போய் உட்கார்ந்துப்பான்….என் பொண்டாட்டி விரட்டுவா…எதாச்சும் வியாதி வந்துரும்பா…மாடில இருக்கிற அவன் ஃப்ரெண்டு வீட்டுக்கு அனுப்பிச்சிடுவா….இங்கிருந்தாத்தானே கூப்டுவார்…என்ன கொஞ்சல் வேண்டிக் கெடக்கு…இம்புட்டு வியாதியோடன்னுவா…அங்க கொண்டுபோய் அவனுக்குச் சாப்பாடு கொடுப்பா….என்னெல்லாம் கொடுமைங்கிறீங்க….

எதுவும் சொல்ல வாய் வராமல் நான் அவரையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தேன். பிறகு கேட்டேன்.

அது சரி கணபதி சார்…ஒரு நல்ல முதியோர் இல்லத்துல சேர்க்கலாமில்லியா? இப்பத்தான் வேண்டிய பணத்தைக் கட்டினா எல்லாம் நல்லாப் பார்த்துக்கிறாளே…? குளிப்பாட்டி விட்டு, உடம்பு துடைச்சு விட்டு, டிரஸ் மாத்தி, வேளா வேளைக்கு மாத்திரை கொடுத்து, ரெகுலர் செக்கப் பண்ணி, குழந்தை மாதிரிப் பார்த்துக்கிறாங்களே…அப்டிச் செய்ங்களேன்…இங்க உங்களுக்குப் பொழுது விடிஞ்சு பொழுது போனாப் பிரச்னையாத்தானே இருக்கு…

இல்ல சார்…அது மட்டும் என்னால முடியாது சார்…என் வாழ்க்கையே போனாலும் பரவாயில்லை. என் பெண்டாட்டிய அனுப்பினாலும் அனுப்புவேனே தவிர, எங்கப்பாவ அனுப்ப மாட்டேன்…எங்கம்மாட்ட சத்தியம் பண்ணிக் கொடுத்திருக்கேன் சார்…கடைசி வரைக்கும் கொண்டு செலுத்தி அவரைக் கரையேத்துவேன்னு…அதைச் சொல்லித்தான் அவளையே கைபிடிச்சேன்.. - சொல்லிவிட்டுக் குழந்தை போல் விசித்து விசித்து அழுதார் அன்று. அவர் வாழ்க்கையில் என்னென்ன மாதிரியெல்லாம் அனுபவங்களோ…? எல்லாவற்றையும் கேட்க முடியுமா? இல்லை சொல்லத்தான் செய்வாரா? தந்தைக்குச் செருப்பாய் இருப்பேன் என்ற அந்த ஒரு வார்த்தை போதாதா?

அன்று அவர் போனபோது, உள்ளேயிருந்து வந்த சுமதி சொன்னாள். பாவந்தான்…என்னண்ணா…எப்டியெல்லாம் மனுஷா? என்று அவள் கலங்கியபோது எனக்குப் பெருமையாய்த்தான் இருந்தது.

தினமும் பார்க்கும் காட்சிதானே என்பதுபோல் நடந்து செல்வோரும், இரு சக்கர வாகனங்களில் செல்வோரும், பெரிய வாகனங்கள் சிலவும், அது பாட்டுக்கு நேர் பார்வையில் போய்க் கொண்டிருந்தன. சிலர் மூக்கை இறுக்கிப் பிடித்துக் கொண்டு முகத்தைச் சுளித்தவாறே அவசரமாய் நகர்ந்தார்கள்.

இப்டியே வச்சிட்டிருந்தீங்கன்னா நாங்கள்லாம் இங்க குடியிருக்கிறதா, வெளில போறதா? எதாச்சும் செய்யுங்க…?

என்ன சார் செய்யச் சொல்றீங்க? வெளில விரட்டச் சொல்றீங்களா? உங்கப்பான்னா அப்டிச் செய்வீங்களா?

ஆஸ்பத்திரில கொண்டு அட்மிட் பண்ணுங்க சார்…இல்லன்னா முதியோர் இல்லம் எதுலயாச்சும் சேர்த்து விடுங்க….நீங்கபாட்டுக்குப் பேசாமா இருந்தீங்கன்னா? இந்த ஃப்ளாட்டுல மொத்தம் மூணு ஃப்ளோர் இருக்கு…பன்னெண்டு வீடு…….அத்தனை பேருக்கும் எவ்வளவு டிஸ்டர்ப்பா இருக்கு… தெரியுதுல்ல…எல்லாரும் எங்கிட்ட வந்து மோதறாங்க…என்னால பதில் சொல்ல முடில…

எல்லாரையும் சேர்த்து நீங்களா ஏன் சார் சொல்லிக்கிறீங்க? உங்களுக்குத் தொந்தரவுதான். அத நான் ஒத்துக்கிறேன். அனாவசியமா அம்புட்டுப்பேரையும் ஏன் இழுக்கிறீங்க?

யாராச்சும் ஒருத்தர்தான் சார் உங்ககிட்ட வந்து சொல்வாங்க…மத்தவங்க கேட்டுட்டு இருப்பாங்க….அவர்தான் சொல்றாரேன்னு….அதுக்காக அம்புட்டுப் பேரும் வந்து கத்தினாத்தான் கௌப்புவீங்களா….? இன்னும் கொஞ்ச நாள் போச்சின்னா அதுவும் நடக்கும்…தெரிஞ்சிக்குங்க….அசிங்கப்படுறதுக்கு முன்னால வண்டிய விடுங்க….

சார்…கௌப்புறது, அது இதுன்னு அநாவசியமாப் பேசாதீங்க….எங்கப்பாவ எப்டிப் பார்த்துக்கணும், என்ன செய்யணும்னு எனக்குத் தெரியும். நீங்க சொல்ல வேணாம்….

அப்ப சட்டுப் புட்டுன்னு உங்க இஷ்டப்படி எதாச்சும் செய்ங்க சார்….நீங்கபாட்டுக்குப் பேசாம இருந்தீங்கன்னா…

அவர் சொல்றதுல என்ன தப்பு… இங்க நம்மளாலயே இந்தப் பாடைத் தாங்க முடில….இதென்ன தனி வீடா? வச்சி, கட்டிண்டு அழுதிண்டிருக்கிறதுக்கு…அப்டியிருந்தா நாந்தான் ஓடணும் இந்த வீட்டை விட்டு….ஏன்னா நீங்க நிச்சயமா நா சொல்றதக் கேட்கப் போறதில்லை…எல்லாம் என் தலையெழுத்து….கர்மாந்திரம்…

ஏய்…என்ன வாய் நீளுது? அடக்குடி….ரொம்பப் பேசுற…?

ஆம்ம்மா…உங்களுக்கு எங்கிட்டதான் எல்லாம்….இப்டி அன்றாடம் கத்திக் கூட்டிட்டு எனக்கென்னன்னு நீங்க ஆபீஸ் போயிடுவேள்….யார் படறது? நீங்க போனப்புறம் அவர் என்னென்ன செய்றாருன்னு உங்களுக்குத் தெரியுமா? சொன்னா மலையாக் கோபம் வரும் உங்களுக்கு….என்னால முடில….என்னைக்கு என்ன ஆகப்போறதோ ஆகட்டும்…

எத்தனை நேரம்தான் நான் அங்கே நிற்பது? நானும் அன்று ஆபீஸ் போயாக வேண்டுமே…அவரவருக்கு இருக்கும் அரிபரியில் யாரும் அவரைக் கவனித்ததாகவே தெரியவில்லை. எனக்கோ கேம்ப் முடித்துத் திரும்பி ரிப்போர்ட் சப்மிட் பண்ண வேண்டுமே என்ற ஓரே எண்ணம். ரெண்டு நாளில் ரெவ்யூ. திரும்பவும் ஒரு பயணமுண்டு ஆபீசருடன்.

மதியம் மணி மூன்று இருக்கும். அலுவலகத் தொலைபேசியில் சுமதி என்னை அழைப்பதாகப் பியூன் வந்து சொல்ல,

எப்பப்பாரு, செல் நம்பருக்குப் பேசத் தெரியாது இவளுக்கு …ஆபீசுக்கேதான் கூப்பிடுவா….கேட்டா ஆறு நம்பர், வசதியாயிருக்கும்பா... .என்ன பழக்கமோ…? என்றவாறே போய் எடுத்தேன். அந்த உறாலில் அமர்ந்திருந்த எல்லோர் முகங்களும் என்னையே நோக்குவது போலிருந்தது.

நாந்தான் சுமதி பேசறேன்…எதுத்தாத்துத் தாத்தா மாடிப்படில உருண்டுட்டாராம்…தலைல பலத்த அடியாம்….ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போயிருக்கா…கணபதி சார் உங்களுக்குச் சொல்லச் சொன்னார். சார் பக்கத்துல இருந்தா கொஞ்சம் வசதியாயிருக்கும்னார்…..நீங்க உடனே கிளம்பி சாந்தீபனி மிஷன் போங்க….அங்கதான் கொண்டு போயிருக்கா….

இருந்த வேலைகளை அப்படியே போட்டுவிட்டுக் கிளம்பினேன். என்னைப் பார்த்த முதல் பார்வையிலேயே பொங்கி வந்த அழுகையை அடக்க முடியாதவராய், “அநேகமா முடிஞ்சிரும் போலிருக்கு சார்….” என்று கைகளைப் பிடித்துக்கொண்டு விசிக்க ஆரம்பித்தார். தோளை அரவணைத்து ஆறுதல் படுத்தினேன். ஒருவகையில் விடுதலைதானே என்றுதான் எனக்குத் தோன்றியது. இப்படியே இன்னும் இருந்து என்னதான் செய்ய? என்றேனும் ஒரு முடிவு வந்துதானே ஆக வேண்டும்? அவருக்குக் கிடைக்கப்போகும் நிம்மதி குறித்து அப்போழுதே என் மனம் ஆறுதல்பட ஆரம்பித்தது. கணபதி சார் சொன்னார் –

எப்பயும் ஆபீசுக்குப் போறதுக்கு முன்னாடி வீட்டுக்குள்ள தூக்கிக் கொண்டு விட்டிட்டுப் போவேன் சார்…இன்னைக்கு என்னாச்சுன்னு தெரில…எந்த மூலைல இருந்தாரோ, இல்ல நாந்தான் மறந்திட்டனோ…நாம்பாட்டுக்கு ஒரேபோக்கா ஆபீஸ் வந்து சேர்ந்துட்டேன்…எப்டி வந்தேன்னு எனக்கே தெரில…இத்தனை வருஷத்துல என்னைக்குமே நடக்காதது இது. வெளில கண்ணுல அவர் படாததுதான் காரணமோன்னு இப்போ தோணுது. .பிறகுதான் சார் ஞாபகம் வந்தது. வீட்டுல சொன்னேன். ….“ இங்கதான் இருக்குங்கிறா சார் அவ…எப்டிப் பேச்சு பார்த்தீங்களா?

ஒரு வேளை இந்த வார்த்தையே அவர் காதுல பட்டு அந்த வேதனைலயே பாதி செத்திருப்பாரோ என்னவோ, கொஞ்ச நேரத்துல இந்த நியூஸ் வந்திடுத்து….

அன்று முழுக்கவும், பிறகு அனைத்திற்கும் கூடவே துணையிருந்து எல்லாமும் செய்து விடுவது என்கிற முடிவோடு அவரை அரவணைத்தவாறே ஆறுதலாய் யோசிக்கலானேன் நான்.

----------------------------------------

உஷாதீபன், 8-10-6 ஸ்ருதி இல்லம், சிந்து நதித் தெரு, மகாத்மாகாந்தி நகர், மதுரை – 625 014.

--------------------------------------------------------------- செல் – 94426 84188

---------------------------------------------------------

ushaadeepan@gmail.com

----------------------------------------------------------

“வாழ்க்கை வாழ்வதற்கே…!”

சிறுகதை

 

ப்படித் தேடிக் கண்டு பிடித்து வந்தாள் என்று தெரியவில்லை. கோயிலில் வைத்துப் பார்த்தபோது இருப்பிடத்தைச் சொன்னோமோ? என்று தோன்றியது. வெறுமே ஓரமாய் உட்கார்ந்து கொஞ்ச நேரம் பேசிவிட்டு, வச்சுக்கோங்க என்று பணம் கொடுத்துத் திரும்பியதுதான். பெயர் மட்டும் சொன்னதாக ஞாபகம்.

என் பேரனின் பேரும் சுந்தர்தான்… பாட்டியின் முகத்தில் பூரிப்பு. அதே பெயர் கொண்ட எவனோ ஒருவனைப் பார்த்ததற்கா இவ்வளவு மகிழ்ச்சி? கன்னத்தை வழித்துச் சொடுக்கிக் கொண்டாள். உடனேவா ஒருத்தரோடு இப்படி ஈஷ முடியும்?

ஒரு வேளை அந்தப் பெயரே அவளை ஈர்த்து, இங்கு அழைத்து வந்து விட்டதோ என்னவோ? ஏதோவோர் சக்தி என்று சொல்வார்களே, அப்படியிருக்கலாம்.

அந்தப் பாட்டியைப் பார்த்தபோது இவனுக்கு அப்பாவைப் பெற்ற மரகதம் பாட்டியைத்தான் ஞாபகம் வந்தது. அச்சு அசலாக அப்படியேவா…? ஆனால் இந்தப் பாட்டி சற்றுக் கறுப்பு. வயசு கூடக் காரணமாய் இருக்கலாம். அந்த முகத்தின் வாட்டத்தைக் கண்டு மனசே அதிர்ந்து போனது. வெளியே கூட்டிப் போய் டிபன் வாங்கிச் சாப்பிட வைத்து, மீண்டும் கோயிலுக்குள் வந்து அந்த மண்டப நிழலில் உட்கார்ந்து பேச ஆரம்பித்தது. விட்டு வரவே மனசில்லை. அய்யோ, அந்தப் பாட்டி இனிமேல் எங்கு போவாள்? எங்கு படுப்பாள்? எது அவள் இடம்? ஒரு இடம் என்று இல்லையென்றாளே? கடவுளே…! எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்துவிட்டு, பிறகு எப்படிப் புறப்பட்டு வந்தோம்? இந்த நிமிஷம் வரை அதே நினைவுதான். ஆனால் இதோ பாட்டி தன் முன்னால்…! எந்த சக்தி இழுத்து வந்தது அவளை? என்னவொரு ஆச்சரியம்…?

எங்கெங்கிருந்தோ புறப்பட்டு, நாலைந்து பேராகச் சேர்ந்து, ஏற்கனவே பழகிய இடம் போல் வீடு வீடாக ஏறி இறங்கி கோயில் கொடை பெற்றுச் செல்லும் தீட்சிதர்களை அடிக்கடி எங்கள் தெருவில் நான் சமீபமாய்ப் பார்க்கிறேன். அதுபோலவே இந்தப் பாட்டியும் அறிந்த, பழகிய வீதி போல, வீடு போல வந்துவிட்டாளே?

சீதா, பாட்டிக்குக் கொஞ்சம் சாம்பார் விடேன்….வெறும் தோசையைச் சாப்பிடுறா பாரு.. – தயங்கியவாறே சொன்னான் சுந்தர்.

இருக்கட்டும், போறும்…… - அவளின் முகத்தைப் பார்த்துக் கொண்டே மறுத்தாள் பாட்டி.

கையைத் தள்ளிக்கிங்கோ…. –படக்கென்று பாத்திரத்தினை அப்படியே கவிழ்த்தாள். இவ்வளவுதான்…இதுக்கு மேலே இல்லை….என்பதான அடையாளம் அது. அப்பொழுதுதான் கவனித்தேன் நான்.

ச்சே….! என்ன சீத்தா இது….? –கைப் பாத்திரத்தைப் பார்த்துக் கொண்டே கேட்டேன்.

ஏன்? என்ன? ஃபிரிட்ஜ்ல வச்ச நேத்திக்கு சாம்பாரை நாம சுட வச்சு விட்டுக்கிறதில்லையா? தூரவா கொட்டறோம்…? பருப்பு சாம்பாராக்கும்….கிலோ தொண்ணூத்தெட்டு ரூபா…..ஞாபகமிருக்கட்டும்……

புரிந்தது, புரியாதது, தெரிந்தது, தெரியாதது, அறிந்தது, அறியாதது அனைத்துமறிவோம் என்பதுபோல் கேட்டது, கேட்காதது எல்லாவற்றுக்கும் சேர்த்து பதில் சொல்லி விடுவாள். சுருக்கமாய்ச் சொன்னால் சற்று வாய் ஜாஸ்தி.

சரி, அதை நாம விட்டுக்கலாமே…..ஒரு வயசான பாட்டி….வீடு தேடி வந்திருக்கா….இருக்கிற இருப்புக்கு ஆச்சார அனுஷ்டானமெல்லாம் கிடையாதுன்னாலும், வயசை மதிச்சாவது புதுசா வச்சதை விடலாம்தானே…பழசைக் கொட்டணுமா? புண்ணியமுண்டு….. –

சீதா என்று பெயர் கொண்டவர்களெல்லாம் கருணைக் கடலாய் இருக்க வேண்டுமென்று கட்டாயமா என்ன…? என்னவள் நல்லவள்தான்…ஆனால் மனக் கோணல். காலத்தின் கோலம் இது…!

புதுசுதான்….இப்பத்தானே உங்க முன்னாடி தோசை வார்த்தேன். ….நீங்க பார்க்கலியா? மத்தியானம் நீங்க சாப்பிடுற போது அந்தப் பழைய குழம்பை சுட வச்சு விட்டுக்கத்தானே செய்வேள்…. அதை விட்டதுல என்ன தப்பு? என்னமோ கேட்டுண்டு வறேளே…..

நாம, ஆறின கஞ்சி, பழங்கஞ்சி…நம்மள விடு…நமக்குள்ளே எப்டியோ செய்துக்கலாம், அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம்…!.வந்தவாளுக்கு……? - சொல்லிக் கொண்டே இழுத்தேன்….

வந்தவாளுக்கென்ன, நொந்தவாளுக்கு? பாட்டி என்ன விருந்தாளியா? இப்டீ போறவா வர்றவாளெல்லாம் நீங்க இழுத்துண்டு வந்து நில்லுங்கோ….நான் வடிச்சுக் கொட்டிண்டிருக்கேன்…..ச்சே….என்ன வீடுறா இது….? – கையிலிருந்த பாத்திரத்தை ணங்கென்று கீழே வைத்து விட்டு வாசலை நோக்கி நகர்ந்து விட்டாள். என் தலையிலேயே நறுக்கியதுபோலிருந்தது எனக்கு.

அவள் சொன்னதற்கும் அர்த்தம் உண்டு என்று வையுங்கள். போன வாரம் என் கூடப் படித்தவன் என்று சொல்லிக் கொண்டு ஒருவன் திடீரென்று வந்துவிட்டான். எனக்கா ஞாபகமே வரவில்லை என்ன சொல்லியும். ஆனால் அவன் அப்பா, அம்மாவைத் தெரிந்திருந்தது. அவன் இருந்து பேசிய குறிப்பிட்ட நேரத்தில் சகஜ நிலை என்பது எழவேயில்லை. கூடப் படித்தேன் என்பது பொய்யென்றே தோன்றியது. ஊரும் பேரும் ஒத்திருந்தால் போதுமா? சோத்தைப் போட்டு ஆளைக் கிளப்பப் பெரும்பாடாகி விட்டது. அந்த பாதிப்பு இன்னும் நீங்கவில்லை. எனக்கென்று எப்படித்தான் ஆட்கள் அமையுமோ? ஆனால் பாட்டியை அப்படி நினைக்க முடியவில்லை. மனதுக்குள் அவ்வளவு இரக்கம் சுரந்தது. ஒரே ஒரு முறை பார்த்ததுதான். இப்படித் தேடி வந்து விட்டாளே? படு பாவமாயிருந்தது.

முதலில் அந்த இடத்தில் உட்கார்த்தி வைத்துப் போட்டதிலேயே எனக்கு உடன்பாடில்லை. கொல்லைப் புறம் துணி துவைக்கும் சிமின்ட் தளம் அது. நிழலான இடம்தான்…ஆனாலும்…? .வீட்டு வேலை செய்பவர்களுக்குக் கூட இன்று இப்படியெல்லாம் செய்துவிட முடியாது. கவனமாய் இருந்தாக வேண்டும். இவ்வளவு ஏன்? வேலைக்காரி என்று சொல்லிப் பாருங்கள் தெரியும் சேதி…!

அதுக்காக நடுவூட்டுக்குள்ள கொண்டு அமர்த்த முடியுமா? உங்களுக்குத்தான் எதுக்கும் விவஸ்தையே இல்லைன்னா, எனக்குமா? – நிச்சயம் கேட்பாள். கேட்காமலேயே செவியில் அறைவது போலிருந்தது. பல சமயங்களில் அவள் பேச்சுக்குக் காது செவிடானாலும் பரவாயில்லை.. அத்தனை நாராசம்.

சதா சர்வகாலமும் மனதில் என்னவோ ஒரு எரிச்சல் அவளுக்கு. எதைப் பார்த்தாலும், எதைக் கண்டாலும் தீராத அலுப்பு, கோபம்….. எந்தவகையிலும் அவளை சமாதானம் பண்ண முடியவில்லைதான். எனக்குச் சொல்லத் தெரியவில்லையா, அல்லது அவளுக்குக் கேட்கப் பிடிக்கவில்லையா? என்னவோ ஓடிக் கொண்டிருக்கிறது வாழ்க்கை. இதெல்லாம் முன் ஜென்ம வினை….இப்படித்தான் நினைக்கத் தோன்றுகிறது. வேறென்ன சொல்வது? தெளிந்த நீரோடையாய் இருக்க வேண்டிய வாழ்க்கையை நாமே கலக்கிக் கசடாக்கினால் எப்படி?

வருஷங்கள் பத்து தாண்டியாயிற்று. எங்களுக்குக் குழந்தை பாக்கியம் இல்லை. பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை மலரும் குறிஞ்சி மலர் இல்லையா? அதுபோல் ஒரு குழந்தை வந்துவிட வாய்ப்பில்லாமலா போகும்? எத்தனையோ பேருக்கு தாமத ஜனனம் இருந்திருக்கிறதே? ஏன் நம்பிக்கையை இழக்க வேண்டும்? இன்றும் அவளிடம் நான் இதைச் சொல்லிக் கொண்டுதான் இருக்கிறேன். எதையும் நேர் கோணத்தில் பார்த்தே பழக்கப்பட்டவன் நான். அது என் சுபாவமா என்ன என்பதெல்லாம் தெரியாது. யாரிடமிருந்து அது எனக்குப் படிந்தது என்பதும் தெரியாதுதான். வலிய நினைப்பதுதான் என்றாலும் கோணித் திரிவதற்கு இது பரவாயில்லையல்லவா?

ஓட்டை ரெக்கார்டு மாதிரி இதை இன்னும் எத்தனை வருஷத்துக்குத்தான் சொல்வீங்க…..கேட்கவே எரிச்சலா இருக்கு…என் கூட நீங்க பேச வேண்டாம்… உங்க மூஞ்சியைப் பார்க்கவே எனக்குப் பிடிக்கலே- எதிர்பாராத பலதையும் சொல்லி, முறித்துக் கொண்டு போய் தலைகுப்புறப் படுத்துக் கொள்வாள். அவ்வளவுதான். அத்தோடு கதை முடிந்தது அன்று.

பிறகு சமையல், பெருக்கல், கூட்டல் கழித்தல் எல்லாமும் அன்று நான்தான் பார்த்தாக வேண்டும். நானேதான் சாப்பிட்டுக் கொள்ள வேண்டும். நானேதான் எடுத்துக் கழுவி வைத்தாக வேண்டும். அதே போல் அவளும்…சேர்ந்து உட்கார்ந்து சாப்பிட்டதாய் சரித்திரமில்லை. எல்லாமும் தனியாகவே. அவளாகவே…தனித் தனியாகவே. நெருங்க விட மாட்டாள். என்னே விநோதம் என்கிறீர்கள்? இந்த மாதிரிக் கொடுமையெல்லாம் யாரும் அனுபவிக்கவே கூடாது. நம் எதிரிக்குக் கூட இதுபோல் வந்துவிடக் கூடாது என்பேன் நான்.

தனிமை அவளுக்கு ரொம்பவும் பிடித்துத்தான் இருக்கிறது. மொத்தமே நாங்கள் ரெண்டு பேர்தான் வீட்டில். அதிலும் அவள் தன்னைத் தனிமைப் படுத்திக் கொள்கிறாள். எங்கள் வீட்டில் உள்ள அறைகளெல்லாம் தனிமையில்தான் இருக்கின்றன. அவை எல்லாமும் தங்களைத் தனிமையாய்த்தான் உணர்கின்றன. ஒவ்வொரு அறையிலும் ஓடியாடிப் போய் இருந்து, பேசிக் கழித்தால்தானே அவை தங்களையும் மகிழ்ச்சியாய் உணரும்? நமக்கும் ஆள் இருக்கிறது என்று நினைக்கும்?

தனிமையில் இருக்கத் தெரியாதவன், தனிமையை விரும்பாதவன் ஒரு எழுத்தாளனாக முடியாது என்று நகுலன் என்ற திருவனந்தபுரம் பெரியவர் சொல்லப் படித்திருக்கிறேன் நான். அப்படிப்பட்டவர்கள் இவளிடம் வந்துதான் அல்லது இவளைப் பார்த்துத்தான் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.

அத்தனை தனிமை விரும்பி இவள். அனுதினமும் எப்பொழுதடா நான் அலுவலகம் கிளம்புவேன் என்று காத்துக் கொண்டிருப்பாள். வண்டியோடு அப்படி நகர்ந்திருக்க மாட்டேன். பட்டாரென்று கதவைச் சாத்துவாள். ரோஷமுள்ள ஆம்பிளை மறுபடி வீடு திரும்ப மாட்டான். நான் ஒரு மழுமட்டை. என்னைக் கணக்கிலெடுக்காதீர்கள். என்னை மாதிரிச் சிலபேர் அபூர்வமாய்த்தான் இருப்பார்கள்.

. தன்னந் தனிமையில் என்னதான் செய்வாளோ? டி.வி. சீரியலாய்ப் பார்த்துத் தள்ளுவாளோ? சினிமாப் பார்ப்பாளோ? வாய்விட்டுப் பாடிக் கொண்டிருப்பாளோ? புத்தகமாய்ப் படித்துத் தள்ளுவாளோ? வீடு துடைப்பாளோ? ஒட்டடை, தூசி, தும்பு அகற்றுவாளோ? அல்லது ஒன்றும் வேண்டாம் என்று அக்கடா எனச் சாய்ந்து கிடப்பாளோ?

நான் போன பிறகு என்னதான் செய்வே…? சகஜமாய்க் கேட்கவா முடிகிறது அவளிடம்? எதைக் கேட்டாலும் சண்டைதான். எகனைக்கு முகனை…குண்டக்க மண்டக்க இதெல்லாம் அவள் பதிலுக்குக் கச்சிதமாய்ப் பொருந்தும். ….எதற்கு எப்படி பதில் வரும் என்று எவனாலும் சொல்ல முடியாது. ஏண்டா கேட்டோம் என்று ஆகிப் போகும்…. பேசாமல் இருப்பதே மேல்…! அவரவர் அமைதி அவரவருக்கு…அத்தோடு போனது பொழுது. எதாச்சும் மனோ வியாதியிருக்குமோ? தைரியமாய் அதையும் ஒரு நாள் கேட்டுப் பார்த்து விட்டேன். தலைவிரி கோலம்….

என்னை என்ன கிறுக்குன்னு நினைச்சீங்களா? என்றாள். இப்படிச் சொல்லி எங்காச்சும் தள்ளிவிடப் பார்க்கிறீங்களா? பைத்தியம்னு நினைச்சீங்களா? என்னை நீங்க எப்டி நினைக்கிறீங்களோ அப்டித்தான் உங்களைப் பார்த்தா எனக்கு இருக்கு…போதுமா? நீங்கதான் பைத்தியம்….உங்க அம்மா பைத்தியம்…அப்பா பைத்தியம்…அண்ணன், தம்பி, அக்கா, தங்கை எல்லாரும் பைத்தியம். உங்க குடும்பமே பைத்தியம்….போங்க அந்தப்பக்கம்…. – என்னைக் கை நீட்டி அடிக்காத குறைதான். அவ்வளவு பேசி விட்டாள். என்ன கேரக்டர் இவள்? இன்றுவரை புரியாத புதிர்தான். தனிமை, தனிமை என்கிறாளே பாவி, ஏதாச்சும் தனிமையில் செய்து கொண்டு விடுவாளோ என்றெல்லாம் பயந்து செத்திருக்கிறேன் நான். ஆபீசில் வேலையே ஓடாமல் குழம்பித் தவித்திருக்கிறேன். திடீர் திடீரென்று ஓடி வந்திருக்கிறேன். நல்ல காலம் இன்றுவரை அப்படி எதுவுமில்லை.

மாலை அலுவலகம் முடிந்து வீடு திரும்புகையில் வீடே வெறிச்சோடிக் கிடக்கும் பல சமயங்களில். நடு உறாலில் ஒரு விளக்குக் கூட எரியாது. நமக்கே நம் வீட்டின் இடங்கள் தெரியாது.எங்கே அவள் என்று கொல்லைப்புறம் வரை தேடிப் போனால் யாரும் எதிர்பாராத ஒரு ஈசான மூலையில் முடங்கி, எங்கோ வெறித்துப் பார்த்துக் கொண்டிருப்பாள். அல்லது பிழியப் பிழிய அழுது கொண்டிருப்பாள்.

என்ன சீதா….என்னாச்சு? ஏன் இப்படி? என்று அவள் அருகில் போய் அமர்ந்து சமாதானப்படுத்துவோம் என்றால் கேட்டால்தானே? ஆரம்பத்தில் எனது இந்த நடவடிக்கைகளுக்கெல்லாம் குழந்தையாய் மடிந்தவள், போகப் போக வெறுக்க ஆரம்பித்து விட்டாள். நெருங்கவே விடுவதில்லை.

“பக்கத்துல வராதீங்க…உங்ககிட்டே என்னவோ ஸ்மெல் அடிக்குது…அது எனக்குப் பிடிக்கலே…போய்க் குளிங்க..நீங்க தொட்டாலே பிடிக்கலை எனக்கு…என்ன சொல்கிறாள் இவள்? -

நீங்க ஒண்ணும் என்னைச் சமாதானப் படுத்த வேண்டாம்…போங்க உங்க ஜோலியப் பார்த்துட்டு…உங்களைக் கண்டாலே எனக்குப் பிடிக்கல்லே… எங்கயாவது கண்காணாமப் போங்க….உங்களை யாரு அதுக்குள்ளேயும் வீட்டுக்கு வரச்சொன்னா? – நெஞ்சில் ஆணியை நேரடியாய் வைத்து இறக்குவது போலிருக்கும் எனக்கு.

தேடி எடுத்தேனே திருவாழி மோதிரத்தை….பாடி எடுத்தேனே……. – என்னவோ வரும் வரிகள்….அம்மா பாடக் கேட்டது சிறுவயதில். அது இன்று எனக்கு வந்து வாய்த்திருக்கிறது.

எதுக்காக இப்டி உன்னையே நீ வருத்திக்கிறே…? நமக்குக் குழந்தையில்லேன்னு நான் இப்போ ஏதாச்சும் சொன்னேனா? என்னைக்காவது உன்னைக் கோபமாப் பேசியிருக்கேனா? அப்புறம் ஏன்? இந்த பார் சீதா, நம்ம வாழ்க்கை நம்மளோட கையில்தான்…எனக்கு நீ குழந்தை…உனக்கு நான் குழந்தை….காசு பணம் இருக்கு…வா கோயிலுக்குப் போவோம்…வெளியே சுற்றுலா போவோம்….ஜாலியா இருப்போம்…சந்தோஷமாச் சுத்துவோம்…எத்தனை நாள் லீவு போடணும் சொல்லு…உனக்காகப் போட்டுட்டு வரத் தயாராயிருக்கேன்…இந்த ஊரை விட்டு மாத்தினாலும் பரவாயில்லை…போடுற ஊருக்குப் போயிட்டுப் போறோம்…நமக்கென்ன வீடா, சொத்தா? ஒரு புண்ணாக்கும் கிடையாது….கடவுளாப் பார்த்துக் குழந்தையைக் என்னைக்குக் கொடுக்கிறானோ கொடுக்கட்டும். கிடைக்கிற அன்னைக்கு ஏத்துப்போம்…இல்லையா இப்டியே இருந்திட்டுப் போவோம்..என்ன குறைஞ்சு போச்சு? எல்லாம் மனசுதான். நாம சந்தோஷமாயிருக்கோம்னா சந்தோஷம்தான். .எதுக்கு அநாவசியமா நம்ம பொழுதை நாமளே கெடுத்துக்கணும்….? நான் சொல்றதைத் தயவுசெய்து யோசி….நீ படிச்ச பொண்ணு….., எனக்கு ஒரு மாற்றம் வேணும் அப்டீன்னு நினைச்சீன்னா எங்கயாவது வேலைக்குப் போறியா சொல்லு…முயற்சி பண்ணுவோம்…பொழுது போறதுக்காகவாவது ஒரு சேஞ்சா இருக்கட்டும்….எத்தனையோ மெட்ரிகுலேஷன் ஸ்கூல் இருக்கு….கிடைக்காமயா போயிடும்…சம்பளத்த விடு…உன் வயதொத்த டீச்சர்களோட இருக்கைல, அந்தக் குழந்தைகளோடப் பொழுதைக் கழிக்கைல எவ்வளவு மாறுதலா இருக்கும்…சந்தோஷமாயிருக்கும்…நான் சொல்றதை யோசியேன்…..

ஆம்மா…என்னத்தை யோசிக்கிறது….? அவுங்க எல்லாருக்கும் குழந்தை குட்டிங்க இருக்கும்….நம்மளை அனுதாபத்தோட விசாரிப்பாங்க… நாலு பேருக்கு பதிலா, இன்னும் நாப்பது பேருக்குத் தெரிஞ்சா மாதிரி ஆகும்..தேவையா இது? எனக்கு யாரையும் பார்க்கப் பிடிக்கலே….நான் இப்டியே இருக்கேன்……ஒத்தக் கல்லு மோதிரம் மாதிரி….

என்ன உதாரணமோ? சொன்னாள். அதனாலென்ன…ஒற்றைக்கல் மோதிரம் விரலுக்கு அழகாத்தானே இருக்கு…! எந்த விரல்ல அது இருக்குங்கிறதைப் பொறுத்து அந்தக் கைக்கே ஒரு அழகு வருது… உன் விரலுக்கு வந்த பின்னாடிதான் இந்த மோதிரத்துக்கே பெருமை….! – சற்று அதிகம்தான். ஆனாலும் சொன்னேன். படக்கென்று விரல்களை மடித்து ஒரு குத்து விட்டுவிடுவாளோ என்று பயமும் இருந்தது. என் சுபாவம் அப்படி….! சொல்லிச் சொல்லிப் பாருங்கள்…பிறகு பாசிட்டிவ்வாகவே பேச ஆரம்பித்து விடுவீர்கள். இந்த வாய் நாலு நல்ல வார்த்தைகளைப் பேசுவதற்காகத்தானே இருக்கிறது? நாற வார்த்தைகளை ஏன் உதிர்க்க வேண்டும்? நம்மையும் கெடுத்துக் கொண்டு, எதிராளியையும் சங்கடப்படுத்தி……

இருந்து கொண்டிருக்கிறாள் சீதா. சதா சர்வ காலமும் என்னிடம் எரிந்து எரிந்து விழுந்து கொண்டு. அவளுக்கும் குறையில்லை. எனக்கும் எந்தக் குறையுமில்லை. பிறகு ஏன் குழந்தை வரவில்லை? ஏன் அந்த ஜனன பாக்யம் இல்லை. அது அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம். எங்களைப் போல் நிறைய தம்பதிகள் இருக்கிறார்கள் இந்த உலகத்தில். காரணம் தெரியவில்லைதான். ஆனால் அவர்களெல்லாம் எங்களைமாதிரி இப்படிப் பொழுதை நரகமாக்கிக் கொண்டா திரிகிறார்கள்? ஏன் இது தெரியமாட்டேன் என்கிறது சீதாவுக்கு?

பாட்டி சாப்பிட்டு முடித்துவிட்டாள். தட்டைக் கழுவி ஓரமாய் வைத்தாள். அதிலேயே அவள் வேலை சுத்தம் தெரிந்தது. ஒரு நல்ல இடத்தில் வாழ்ந்தவள் என்பதை உணர முடிந்தது. தண்ணீர் குடித்தாள். முகத்தில் தெளிர்ச்சி வந்திருந்தது. ஆசுவாசமாய் அமர்ந்து எதிரே இருக்கும் மரங்களை நோட்டமிட்டாள் பாட்டி. காப்பி சாப்பிடச் சொன்னேன். நானே போட்டுக் கொண்டு வைத்தேன். ஆற்றிக்கொண்டே, கள்ளிச் சொட்டா இருக்கே…! என்று சொல்லிக் கொண்டாள். பழைய வார்த்தை. ஆனாலும் கச்சிதமான சொல்.

எனக்கு என் பாட்டி ஞாபகம் பிடுங்கித் தின்றது. எத்தனை நாட்கள் பாட்டியின் மடியிலேயே படுத்துத் தூங்கியிருக்கிறேன்? நான் தூங்குவதற்காகவே தன்னை அமர்ந்தமேனிக்கு சுவற்றில் சாய்த்துக் கொண்டிருக்கிறாள் பாட்டி. தலையை மெல்ல வருடிக் கொடுப்பாளே…அந்த ஆசுவாசத்தில் எப்படியொரு தூக்கம் கண்ணைச் சுழற்றும்? அந்த மென்மையான அவள் மடியின் வெதுவெதுப்பு எழுந்திரிக்கவே விடாதே…! விரல் தலையில் அலையும். நிமிண்டி, நிமிண்டி பொடுகு, பேனைத் தேடும் சுகமே தனி.

மொட்ட…ஏ மொட்ட…என்ன பண்ணி விட்டிருக்கே எம் பேரனுக்கு? நன்னா முடிய ஒட்ட வெட்டி விடுன்னுதானே சொன்னேன் …துளிக் கூட குறைக்காம அப்டியே அனுப்பிச்சிருக்கியே….?

பாட்டீ…போதும் பாட்டி…நிறைய வெட்டியாச்சு…வா போலாம்…

சும்மா இரு…உனக்குத் தெரியாது…நாலணா சுளையா கொடுக்கறோம் அவனுக்கு…என்ன வேல பண்ணியிருக்கான் …..போ…போய் அவன்ட்ட உட்காரு….ஒட்ட வெட்டி கிராப்பு வையி… புரிஞ்சிதா…? அப்பத்தான் காசு தருவேன்….

நீங்க கவலப்படாமப் போங்க பாட்டி…நா அனுப்பிச்சு வைக்கிறேன்…

ஐயோ பாட்டீ…உன்னோட பெரிய தொல்லை….இன்னமே எனக்கு மொட்டைதான் அடிக்கணும்….

அடிச்சிக்கோ…பரவாயில்ல…பொடுகு வராது…

அந்தக் கல் பாவிய இடத்தில் மொட்டை என்று பெயர் கொண்ட நாவிதர் (அப்போதைய பெயர்) முன்னே சம்மணமிட்டு நான். எதிரே சலசலத்து ஓடும் ஆறு. காலைக் கதிரவனின் ஒளி வீச்சு அரச மர இலைகளுக்கு நடுவே பளபளக்கிறது. கதிரவனின் ஒளிக்கதிர்களால் புத்துணர்ச்சியடைந்து குளிருக்கு விதிர்ப்பு அடைந்ததுபோல் தன்னைச் சிலிர்த்துக் கொள்கின்றன.

அந்தக் கண்ணாடியத் தாங்களேன்…. பெட்டியில் இருக்கும் முகம் பார்க்கும் கையகலக் கண்ணாடியே என் கவனமாய் இருக்கிறது. முடி வெட்டும்போது அது வழியாப் பார்க்கணும்னு ஆசை.

அதெல்லாம் பெரியவங்களுக்குத்தான்….சொல்லியவாறே தலையைப் பிடித்து அவன் பக்கமாக வெடுக்கென்று சாய்த்துக் கொள்கிறான்.

நாலணாவுக்கு இம்புட்டு வேல வாங்குறாகளே…என்ற ஆதங்கமோ என்னவோ. அன்று என் கதை அவ்வளவுதான்.

என்னடா இப்டி வெட்டியிருக்கே….? படு அசிங்கமா இருக்கு…

பையன்களோடு விளையாடுவதற்குக் கூச்சப்பட்டுக் கொண்டு நான்கைந்து நாட்களுக்கு வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கிறேன்.

வட்ருபி அடிச்சு விட்டிட்டாங்கடா இவனுக்கு….சிரிக்கிறார்கள் பசங்கள்.

பாட்டியின் மடியில் படுத்துக்கொண்டு சொல்லவொண்ணாத் துயரத்துடன். அவளின் கைகள் என் தலையை அளைகின்றன. இவ்வளவு குறைத்தும், பாட்டிக்கு திருப்தியில்லைதான்.

அவா சொன்னா சொல்லிட்டுப் போறா…இதுதான் கோந்தே ஆரோக்யம்…

குழந்தைகளுக்குக் காய்ச்சல் என்றால் விபூதி எடுத்து, கண்களை மூடி, என்னவோ ஒரு மந்திரத்தை முனகி நெற்றியில் இட்டு, உச்சந்தலை முதல் உள்ளங்கால்வரை நீளக்க அந்த விபூதியைத் தேய்த்துத் தரையில் அந்த வியாதியை இறக்கும் பாட்டி.மூன்று தட்டுத் தட்டுவாள். அவளின் கை வைத்தியத்திற்கு எந்த டாக்டரை ஈடு சொல்ல முடியும்? என்னவொரு நம்பிக்கை அந்த மனிதர்களுக்குத்தான்?

பாட்டி, கொழந்தை ரெண்டு நாளா கண்ணே முழிக்கலை…என்னாச்சோ ஏதாச்சோ தெரிலயே… - அழுது அரற்றிக்கொண்டு வந்து நிற்போருக்கு ஆறுதல் சொல்லியனுப்பும் பாட்டி.

ஒண்ணும் கவலைப்படாதே…நா இருக்கேன்…நாளைக்குக் காலைல உன் பிள்ளை எழுந்திருச்சி ஓடறானா இல்லையா பார்…போ…பின்னாடியே வர்றேன்….

என்னவொரு தன்னம்பிக்கை? எந்த நோயையும் கண்டு பயப்படாத பாட்டி அப்படி என்ன கை வைத்தியம் வைத்திருந்தாள்? எனக்குத் தெரிய எல்லா வியாதிக்கும் ஒரே மந்திரம்தான். ஆனால் அந்த உச்சாடனத்திற்கு சக்தி அதிகம்.

பாட்டி…பாட்டி…உங்கிட்ட ஒண்ணு கேட்கணும்…காய்ச்சல்னு வந்தா அதுக்கும், காமாலைன்னு வந்தா அதுக்கும்னு எல்லாத்துக்கும் ஒரே மந்திரத்தைத்தான் சொல்றே…அப்டித்தானே? விபூதியத் தேய்ச்சு விடறே? இல்லன்னா வேப்பெண்ணையைக் பாதத்துல தேய்க்கிற…நெத்திக்குப் பத்துப் போடறே…இல்லன்னா தொப்புள்ள வௌக்கெண்ணையைத் தடவுறே…வேறென்ன செய்திருக்கே…நீ…? எல்லா வியாதியும் எப்டி பாட்டீ பறந்தோடிப் போறது? உன்னக் கண்டா ஏம்பாட்டீ இந்த வியாதிக்கெல்லாம் இம்புட்டு பயம்?

போடா கோட்டிப் பயலே…நீ கண்டியா? நா என்ன பண்றேன்னு? அப்டியெல்லாம் பேசப்படாது..போ…போ…

அதெல்லாம் கேட்கப்படாது…பாட்டி ஊருக்கெல்லாம் வைத்தியம் பார்க்கிறால்ல…அப்புறம் சாமி கோவிச்சுக்கும்…ஏற்கனவே பாட்டிக்கு உடம்பை எவ்வளவு படுத்தறது பார்த்தியோ? காமாலைக்கு மந்திரிச்சு, மந்திரிச்சு, அம்புட்டும் அவா உடம்புல இறங்கியிருக்காக்கும்….அது யாருக்காச்சும் தெரியுமா…? பேசாமப் போ…போய் விளையாடு….- அம்மா சொல்வது எதுவுமே புரியாது. தன் வைத்தியம் மூலம் பாட்டி ஏதோவோர் உபாதையைத் தனக்குள் வாங்கிக் கொள்கிறாள் என்று அம்மா சொல்கிறாளா?

இதுதான் அமானுஷ்ய விஞ்ஞானமோ? ஏதோ ஒரு கோயிலின் புற்று மண் வியாதியைப் போக்குமாமே! …அதுபோல்தானோ இது?

பாட்டீ…பாட்டீ…ஊருக்கெல்லாம் வியாதியைப் போக்கி அத்தனையையும் உன் உடம்பில் வாங்கிக் கொண்டாயே நீ…! உன்னைப் போல் இனி யார் கிடைப்பார்?

அந்த நன்றி அந்த மக்களிடம் பரிணமித்ததே…

ஆம்பூர் பாட்டி பேரன்தானடா நீ….உங்கப்பாம்மால்லாம் எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கா தெரியுமோ? உங்களுக்காக உசிரயே பணயம் வச்சு உழைச்சா…..அவாளை சந்தோஷமா வச்சிக்குங்கோடா……அதுதான் புண்ணியம்….

மூன்று மாதம் ஒருமுறை பேதிக்கு விளக்கெண்ணெய் கொடுக்கும்போது என்ன பாடு…என்ன ஆர்ப்பாட்டம்.

அயர்ந்து தூங்கிக் கொண்டிருக்கும் அந்த ராத்திரி ரெண்டு மணிக்கு அடித்து எழுப்பி….மடியில் கிடத்திக் கொண்டு ஒருவர் காலை அழுத்திப் பிடித்துக் கொள்ள கோவர்ணத்தில் இருக்கும் சுட்ட விளக்கெண்ணெயை மூக்கை அழுத்தி இடக் கையால் பிடித்துக் கொண்டு, வாயை கோவர்ணத்தின் நுனியால் அழுத்தித் திறக்க வைத்து உள்ளே விளுக்கென்று விடும் பாட்டி. ஒரே குமட்டலாகக் குமட்டி அப்படியே வெளியே பீச்சியடித்த நாட்கள் எத்தனை?

சனியன்…சனியன்…வானரம்…வானரம்….என்ன பாடு படுத்தறதுகள்….கொஞ்சம் சக்கரையைக் கொண்டா…வாயில திணிப்போம்….

மேற்கொண்டு குமட்டாமல் இருக்க நாட்டுச் சர்க்கரை கொஞ்சம் வாயில் போடப்படும் அந்தக் கணம் அப்பாடா….!

முடிஞ்சிதுடி…இனிமே உன் பிள்ளேள் பாடு…உன் பாடு…பாட்டி எழுந்து போய்விடுவாள். மறுநாள்….

கேட்க வேண்டுமா? கக்கூஸே கதிதான். அன்று பூராவும் சுட்ட அப்பளமும், நார்த்தங்காயும், ரசமும்தான் சாப்பாடு. அடித்துக் கலக்கி அந்த வயிறுதான் என்னமாய் சுத்தமாகிப் போகும்? அதற்கு ஈடு உண்டா இன்று? வயிற்றுக் கோளாறுகளினால் எத்தனை வியாதிகளைச் சந்திக்கிறோம்?

பிரதி வாரமும் சனிக்கிழமை எண்ணெய் தேய்த்துக் குளிக்காமல் விட்டாளா பாட்டி? உருவி உருவி அந்த உடம்பைத் தேய்த்த விதமும், வெந்நீரில் குளித்த சுகமும் இன்று எங்கே போயிற்று?

இன்று யார் வாரம்தோறும் எண்ணெய்க்குளி குளிக்கிறார்கள்? அத்தனை பேரும் மறந்தாயிற்றே? அனைத்தையும் மறந்தோம். அத்தனை கேடுகளையும் வரித்துக்கொண்டோம். அதுதானே உண்மை?

பாட்டீ…பாட்டீ….நீ ஏன் தலையை மொட்டை போட்டுக்கிறே? – ரொம்ப நாளாய் மனதில் வைத்து, புரியாமல் கேட்ட கேள்விக்கு அப்பாதான் தடுத்தார் ஒரு நாள்.

அது, தாத்தா உங்க பாட்டிக்குத் தந்த பரிசு…..

குழந்தே….நீ சும்மாயிருக்க மாட்டியா? அதுகள்ட்டப் போய் இதெல்லாம் சொல்லிண்டு…?

நான் ஒண்ணும் சொல்லிடலியே….. பரிசுன்னுதானே சொன்னேன்…..நாங்கள்லாம் வேண்டாம்னோம்….அப்பா கேட்கலியே…? சத்தியம் வாங்கின்னா வச்சார்….நீ எங்க பேச்சைக் கேட்காமே சரின்னுதானே போய் மழிச்சிக்க உட்கார்ந்தே….?

….ஊர்ல இருந்தவாளோட ஒத்துத்தானே போக முடியும்? விட்டுத்தள்ளு, அதுனால இப்ப என்ன குறைஞ்சு போச்சு?

உனக்கு ஒண்ணுமில்லைன்னே வச்சுப்போம் …லட்சுமிகடாட்சமான எங்கம்மா முகத்தை நாங்க நாலு பிள்ளேள் இப்டிப் பார்க்கணும்னு என்ன தலையெழுத்து? அதான் இருக்கிறபோதே அந்த மனுஷனைப் பக்கவாதம் பிடுங்கித் தின்னுது…அதுக்கும் நீதான் பீ மூத்திரம் அள்ளினே…..?

அத்தனை சோகங்களும் அச்சடித்த புத்தகமாய் நினைவுகளில்… ஐந்தில் பதிந்தது, ஐம்பதில் மறையுமா?

பாட்டி போய்விட்டாள். இந்தாம்மா…மீனாட்சி புஷ்பம்…காலம்பற பூஜை….தலைல வச்சிக்கோ….சீக்கிரம் நல்லது நடக்கும்….. – என்ன ஆச்சரியம்….நமஸ்கரித்து வாங்கிக் கொண்டாளே சீதா…..இந்த நிமிடம்வரை என்னால் நம்ப முடியவில்லை. சீதாவா செய்தாள் அப்படி?

அலுவலக வேலைக்கிடையில் திடீரென்று ஒன்று ஞாபகம் வந்தது எனக்கு.

உறலோ…கேட்டரிங் ஸ்ரீதர் இருக்காரா?

ஆம்மா…நாந்தான் பேசறேன்….

சார், நான் காந்தி நகர், சுந்தர் பேசறேன்…ஒரு சமையல் மாமி வேணும்னு சொல்லியிருந்தீங்களே…. கிடைச்சுட்டாங்களா…?

இல்ல சார்….அது கிடைக்காமத்தான் அவஸ்தைப் பட்டுண்டிருக்கேன்….என்னால சமாளிக்க முடியலை…..

நான் ஒரு பாட்டியைக் கூட்டிண்டு வர்றேன்….பாட்டின்னு சொல்றேனேன்னு நினைச்சுக்காதீங்கோ….பேருதான் பாட்டி…..மாமி மாதிரிதான். நன்னா வேலை செய்வா…..ஆதரவில்லாம இருக்கா…..உங்களுக்கு ரொம்ப உதவியா இருக்கும்…வச்சுக்குங்கோ…..சரியா…?

சார், நீங்க சொன்னா அதுக்கு ஆட்சேபணை உண்டா? எனக்கு உடனடியா ஒருத்தர் கண்டிப்பா வேணும்….இன்னைக்கே அழைச்சிண்டு வாங்கோ…..எனக்குப் பூரண சம்மதம்…..வர்ற ஆஃபர் என்னால மீட் அவுட் பண்ண முடிலை….திணறின்டிருக்கேன்…

நீங்க கவலையே படாதீங்கோ….பம்பரமா சுழலுவா….. – மதியம் லீவு போட்டுவிட்டு பிரதோஷத்திற்குக் காத்திருக்கும் பாட்டியைக் குறி வைத்துச் சந்தித்து, கேட்டரிங் ஸ்ரீதரிடம் கொண்டு நிறுத்தி விட்டேன்.

ன்று ஞாயிற்றுக் கிழமை. நான் இப்போது எங்கே போகிறேன் என்று நினைக்கிறீர்கள்? கிருஷ்ணா கேட்டரிங்கிற்குத்தான்.

ரொம்ப நன்னாயிருக்கு சாப்பாடு. பேசாம அங்கயே சொல்லிடுங்கோ….என்னால முடிஞ்ச அன்னைக்குத்தான் சமைப்பேன்….தெரிஞ்சிதா…என்னைப் போட்டுப் பிராணனை வாங்கப்பிடாது…பாட்டி சமையல் படு ஜோர்….!

ஃபோனிலேயே சொல்லிவிடலாம்தான். இருந்தாலும் ஒரு நடை அப்படிப் போய் வருவதில் ஒரு திருப்தி. பாட்டியைப் பார்க்கலாம்…நலம் விசாரிக்கலாம்….ஏதானும் செலவுக்குக் கொடுத்து வரலாம்…..

இனிமே பாட்டி என் பொறுப்பு….நீங்க கவலையை விடுங்கோ…. ஸ்ரீதர் சொல்லத்தான் செய்கிறார். ஆனாலும் எனக்கு ஒரு ஆத்ம திருப்தி.

சீத்தா குளிக்கிறாளா? சீக்கிரமே நல்ல சேதி வரும்பார்…..என் சாப்பாட்டைச் சாப்பிடுறாளோல்லியோ? கிடைக்கும்….கிடைக்கும்……முழுகாம இருக்காளோன்னோ…?ன்னு கேட்கத்தான் போறேன்….ஆமாம்ன்னு நீயும் சொல்லத்தான் போறே…..! பாரேன்….!!!– எழுபது தாண்டியவளின் எவ்வளவு அழுத்தமான வார்த்தைகள்? வாழ்க்கையை பிறர்பால் எத்தனை ஆழப்படுத்துகிறார்கள் இவர்கள்?

மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம்…!

கண்களில் நீர் பனிக்க நம்பிக்கையோடு திரும்பிக் கொண்டிருக்கிறேன் நான்.

--------------------------------------------------

உஷாதீபன், 8-10-6 ஸ்ருதி இல்லம், சிந்து நதித் தெரு, மகாத்மாகாந்தி நகர், மதுரை – 625 014. செல் – 94426 84188 (ushaadeepan@gmail.com)

------------------------------------------------------------------------

யோகப் பயிற்சியில் சூரிய நமஸ்காரம்

 

------------------

சூரிய நமஸ்காரம் மொத்தம் 12 ஆணைகளை, அதாவது command களைக் கொண்ட பயிற்சி. அவை வருமாறு : நமஸ்கார் ஆசனா, அர்த்த சந்த்ராசனா, பாதஉறஸ்தாசனா, அஷ்டசஞ்சாயனா (Left Leg forward) மேரு ஆசனா, அஷ்டாங்க நமஸ்காரம், புஜங்காசனா, திரும்பவும் மேரு ஆசனா (இது நேரு ஆசனா என்றும் சொல்லப்படுவதுண்டு) அஷ்டசஞ்சாயனா (Right leg forward) பாதஉறஸ்தாசனா, அர்த்த சந்த்ராசனா, கடைசியாகத் திரும்பவும் நமஸ்காராசனா.

இந்தப் பன்னிரெண்டு ஆணைகளிலும் உடம்பிலுள்ள எல்லா பாகங்களும், இணைப்புகளும் இழுத்து விடப்பட்டு, எலும்புகள், நரம்புகள், ரத்த நாளங்கள், முதுகெலும்புகள், மூச்சுக் குழாய்கள் என்று புத்துணர்ச்சி பெறுகின்றன. எந்த யோகப் பயிற்சிக்கான வகுப்புகளிலும் எடுத்த எடுப்பில் சூர்ய நமஸ்காரம் இடம் பெற்றுவிடுவதில்லை. முதலில் சிறிது நேரம் கண்கள் மூடி அமர்ந்த தியானப் பயிற்சியில் ஆரம்பித்து, பிறகு ”பிரம்மரி” செய்து (நாக்கை உள்புறமாக மடித்து “ம்” சவுன்ட் மூன்று முறை) பிறகு Dog Briething செய்து சுவாசக் குழாய்கள், தொண்டை வழிகளைச் சரி செய்து கொண்டு, பிறகு எழுந்து நின்று கைகளை முன்னே நீட்டி சிலவிதமான மூச்சுப் பயிற்சிகளைச் செய்து முடித்த பிறகுதான் சூர்ய நமஸ்காரத்திற்கு வருகிறோம். இந்த ஆரம்பப் பயிற்சிகள் அங்கங்கே சற்று மாறுபடுவதும் உண்டு. ஆனால் இந்தப் பயிற்சிகளை முடித்த பிறகுதான் சூர்ய நமஸ்காரத்திற்குச் செல்வோம் என்பதே முறைமை. எந்த யோகா வகுப்புகளிலும் இதுவே நடைமுறையாக இருக்க முடியும்.

அன்றியும் சூர்ய நமஸ்காரம் மட்டுமே என்பதாகவோ, அத்தோடு முடிந்தது என்று எந்த யோகா வகுப்புகளும் பூர்த்தியடைவதில்லை. அதற்குப் பின் ஒவ்வொரு கிழமைக்கும் என்று வெவ்வேறு விதமான யோகப் பயிற்சிகளை அந்தந்த வகுப்புகள் வரையறுத்துக் கொள்வதுண்டு. கடைசியாகப் பிராணாயாமத்தோடு நிறைவுபெறும். எந்த வகுப்பிலும், ஆரம்ப நிலைப் பயிற்சிகளுக்கு அடுத்துதான் சூர்ய நமஸ்காரம் இடம் பெறும்.

மொத்தம் பத்து அல்லது பன்னிரெண்டு முறை (ஒவ்வொரு முறைக்கும் மேற்கண்ட 12 ஆணைகளும் உண்டு) செய்வதோடு முடிந்து பிறகு சாந்தி ஆசனத்தில் படுத்திருக்கும் நிலைக்குச் செல்லும். இந்த சூர்ய நமஸ்காரத்தின் முழுப் பலனை சாந்தி ஆசனத்தில் நிமிர்ந்து படுத்திருக்கையில் வயிறு நன்றாக மேலெழும்பிக் கீழே இறங்கும் நீண்ட, அகலமான, ஆழமான மூச்சுப் பயிற்சியின் மூலமாய் நாம் அடைய முடியும்.

இந்த சூர்ய நமஸ்காரப் பயிற்சி அடுத்தடுத்த நாட்களில் எண்ணிக்கை கூடுவதுமுண்டு. அம்மாதிரி நேரங்களில் மற்ற பயிற்சிகள் குறையும். காரணம் சூர்ய நமஸ்காரத்தின் மூலம் மட்டுமே மற்ற பயிற்சிகளைச் செய்ததற்குச் சமமான பலனை நாம் பெறுகிறோம் என்பதுதான். உடம்பிலுள்ள எல்லா பாகங்களும் அப்படிப் புத்துணர்ச்சி பெறுகின்றன. அயராமல் நூறு முறை செய்யும் பயிற்சி நாட்களும் உண்டு.

புதியவர்களாலேயே குறைந்த பட்சம் பத்து முறையாவது இந்த சூர்ய நமஸ்காரப் பயிற்சியைச் செய்துவிட முடியும் என்பதுதான் இங்கே வலியுறுத்திச் சொல்ல வந்த தாத்பர்யம்.

அதாவது முதல் மூன்று முறை மெதுவாகச் செய்தல் பிறகு இரண்டு நிமிடங்கள் ஓய்வாக நின்றிருத்தல், அதாவது கண்களை மூடி மூச்சினை இழுத்து உள்வாங்கி வெளிவிடுதல், பிறகு அடுத்து மூன்று முறை ஒவ்வொரு கட்டளைக்கும் சற்று நேரம் எடுத்துக் கொண்டு அதனை இயன்றளவு நூறு சதவிகிதம் சரியாகச் செய்து முடித்தல், பிறகு மூன்று நிமிடங்கள் நின்ற நிலையில் மூச்சுப் பயிற்சி மேற்கொண்டு விட்டு, மூன்றாவது முறையாக சற்றே வேகமாக சூர்ய நமஸ்காரத்தை நான்கு முறையாகச் செய்து முடித்தல். ஆக மொத்தம் பத்து எண்ணிக்கை வருவதன் மூலம் சூர்ய நமஸ்காரம் நிறைவு பெறுகிறது. நமக்கும் அன்றைய நாளின் சுறுசுறுப்பான காரியமாற்றும் பலன் வந்து சேருகிறது.

மற்ற யோகப் பயிற்சிகளோடு சூர்ய நமஸ்காரமும் ஒரு அங்கமே. அதிகபட்சமாக மேற்சொன்ன பத்துத் தடவைப் பயிற்சிக்கு பதினைந்து அல்லது இருபது நிமிடங்கள்தான் ஆகும்.

ஆனால் யோகா பயிற்சி வகுப்புகளில் சூர்ய நமஸ்காரம் என்பது அதி முக்கியமானது என்பதை எல்லோரும் அறிவார்கள். எந்தப் பயிற்சி செய்தாலும் செய்யாவிட்டாலும், சூர்ய நமஸ்காரம் செய்யவில்லையென்றால் அன்றைய யோகா வகுப்புகள் திருப்தியடையாது என்பது திண்ணம். சூர்ய நமஸ்காரம் இல்லாத யோகா வகுப்புகளே இல்லை என்றே சொல்லலாம். புதியவர்களுக்கும், ஆரம்ப நிலையில் உள்ளவர்களுக்குமே மிகக் குறைவான எண்ணிக்கையில் ஆரம்பித்துத்தான் (அதாவது பத்துத் தடவை மட்டும்) இந்தப் பயிற்சி அளிக்கப்படுகிறது.

பத்தே பத்து முறை செய்வதன் மூலம் மொத்த 45 நிமிடங்களில் குறைந்த பட்சம் 20 நிமிடங்களே இந்த சூர்ய நமஸ்காரப் பயிற்சிக்காகச் செலவாகும். புதியவர்களுக்கு இதைச் செய்வதும் கண்டிப்பாகக் கஷ்டமாக இருக்காது என்பதை அறுதியிட்டுச் சொல்லலாம். ------------------------------------------------

உஷாதீபன், எஸ்.2 – இரண்டாவது தளம், மேத்தாஸ் அக்சயம் (மெஜஸ்டிக் Nஉறாம்ஸ்) ப்ளாட் எண்.171, 172 ராம் நகர் (தெற்கு) 12 வது பிரதான சாலை, ஸ்ருஷ்டி ப்ளே ஸ்கூல் அருகில், மடிப்பாக்கம், சென்னை – 600 091 (செல் – 94426 84188) -----------------------------------------------------------------------------------------

06 நவம்பர் 2016

விகடன் தடம்–நவம்பர் 2016 இதழின் எஸ்.ராமகிருஷ்ணன் பேட்டி

 

thadam_logo

6p1 - Copy

 

பழகுவதற்கு இனிமையான, கர்வமில்லாத, மனசுக்கு நெருக்கமான மதிப்பிற்குரிய படைப்பாளி திரு எஸ்.ராமகிருஷ்ணன். அவரின் நீண்ட பேட்டி இம்மாத (நவம்பர் 2016) தடம் இதழில் வந்துள்ளது.

......அந்தப் பழி என்னால் தீர்ந்தது என்று ஜெயகாந்தன் சொன்னதுபோல்,

இந்த ஒரு பேட்டியினால் இந்த இதழ் தடம் நிமிர்ந்து நிற்கிறது.

அவரின் பதில்கள் பல இடங்களில் மனதைத் தொட்டது. சிந்தையில் ஓடிக் கொண்டிருப்பவைகளைப் பிரதிபலித்ததாய் உணர முடிந்தது. அதை இத்தனை அழகாய்ச் சொல்ல ஒருவர் வேண்டுமே...!

-------------------------------------------------------------------------------

“இந்தியாவின் எந்தப் பகுதிக்கும் ஒரு குடிமகன் செல்ல, எந்தத் தடையும் இல்லை என்பதுதான் ஒரு பயணியாக நான் சந்தோஷப்படும் முக்கியமான விஷயம். ஆனால் கடந்த 15 ஆண்டுகளாக இந்த சுதந்திரம் சுருங்கிக் கொண்டிருக்கிறது. பாதுகாப்பான பொது இடம் என ஒன்று இப்போது இல்லை. இரவு வாழ்க்கை குறைந்து கொண்டே வருகிறது. குறிப்பிட்ட நேரத்துக்குப் பிறகு ஓர் இடத்துக்குச் செல்ல முடிவத இல்லை. சந்தேகத்துக்கு உள்ளாக வேண்டியிருக்கிறது”

“நான் மக்களை அவர்களின் மகிழ்ச்சியான வாழிடத்தில் சந்திக்க விரும்புகிறேன். பத்து முறைக்கும் மேலாக இலங்கையிலிருந்து எனக்கு அழைப்பு வந்திருக்கிறது. ஒவ்வொரு முறையும் நான் ஏதோ ஒரு காரணம் சொல்லி மறுத்திருக்கிறேன். மகிழ்ச்சியாகப் போய் வருவதற்கு இலங்கை இப்போது ஒரு சுற்றுலாத் தலம் இல்லை.“

”ஒரு படைப்பில் எது எழுத்தாளனின் நினைவு, எது கற்பனை எனப் பிரித்தறிய முடியாமல் இருப்பதுதான் ஒரு நல்ல படைப்புக்கான அடையாளம்”

“இன்றையவர்கள் இலக்கியத்தைப் பார்க்கும் பார்வை பார்வை மாறியிருக்கிறது. முந்தையவர்கள் தங்களைத் தனக்கு முன் எழுதியவர்களின் தொடர்ச்சி என்று நம்பினார்கள். ஆனால் இன்றையவர்களின் மனநிலை - எனக்கு முன்பும் யாரும் இல்லை, பின்பும் யாரும் இல்லை - நான்தான் ரைட்டர் - என்பதாக இருக்கிறது. இன்றையவர்கள் எந்த விமர்சனத்தையும் ஏற்றுக் கொள்ளத் தயாராய் இல்லை. சமகாலத்தையும் படிப்பது இல்லை. கடந்த காலத்தையும் படிப்பது இல்லை. கான்ஷியசாக எழுதுகிறார்கள். பகுத்து ஆராய்பவர்களாக இருக்கிறார்கள். இவ்வளவு தெரிகிற இவர்களுக்கு தாங்கள் ஒரு தொடர்ச்சி என்பதோ, ஒரு பொறுப்பு தங்களுக்கு இருக்கிறது என்பதோ புரிவது இல்லை. எழுத்து என்பது ஒரு ரெஸ்பான்ஸிபிலிட்டி.”

“ரெஸ்பானிஸிபிலிட்டி என்பது சமூகம் சார்ந்ததாக இருக்கலாம். பண்பாடு சார்ந்ததாக இருக்கலாம். மனித அகத்தை ஆராய்வதுதான் முக்கியம் என்று சொல்லலாம்.எதுவாகவோ, எழுத்தாளனுக்கு ஒரு பொறுப்புணர்வு இருக்க வேண்டும். பொறுப்பு உணர்வு அற்ற கலை என்று எதுவுமில்லை.“

------------------------------------------------------------------------------------

banner_1

30 அக்டோபர் 2016

திருவானைக்கா தாணுமாலயன் ஆலயம்–கீழே–இணுவில் குமரன் ஆலயம்-இலங்கை

14732401_1597531590272773_6258795268216061087_n

14907645_1150677475021425_179312848350376375_n

கடந்து செல்லும் எண்ண அலைகள்....

 

------------------------------------------------------

மனசுல ஆயிரம் தோணும்…அதையெல்லாம் கன்ட்ரோல் பண்ணிட்டு, நல்லதை மட்டும் சலிச்சு எடுக்கிறான்பாரு…அவன்தான் மனுஷன்…அவனோட உண்மைத்தன்மையைப் பாராட்டத் தெரிஞ்சிக்கணும்….ஒரு இளைஞன் பேச்சிலரா இருந்தப்போ இருந்த நடைமுறை வேறே…திருமணமான பின்னாடி இருக்கிற நடைமுறை வேறே…அப்போ அவனோட இருப்பு எப்டியிருக்குங்கிறதை மட்டும்தான் கவனிக்கணும்…அநாவசியமாத் தோண்டக் கூடாது…அப்டித் தோண்ட ஆரம்பிச்சா பெரும்பாலானோர் வாழ்க்கைல சங்கடம்தான் மிஞ்சும்…அதைத்தான் நான் சமரசம்னு சொன்னேன். அன்றாடச் செயல்பாடுகள்ல அட்ஜஸ்ட் ஆறது மட்டுமில்லே அதுக்கு அர்த்தம்….பரஸ்பரம் ரெண்டுபோரோட உள்மன வியாபகங்களையும் புரிஞ்சு சமன் பண்ணிக்கிறதுதான் அதோட புத்திசாலித்தனம்…

எழுத்த ஆள்றவன்..அவன்….அந்த ஆளுமை சாதாரண சராசரி மனுஷன, அவனோட மனசைத் தூக்கி நிறுத்தணும்…அவனோட வாழ்க்கை நிலையை ஒரு படி மேலே உயர்த்தணும்…அவன் சிந்தனைகளை மேம்படுத்தணும்…ஏற்கனவே அன்றாட வாழ்க்கைச் சிக்கல்கள்ல சிக்கிச் சீரழிஞ்சி கிடக்குற ஒருத்தனை மேலும் படுகுழில தள்றதாவா இருக்கிறது ஒரு எழுத்து?
சியாமளாவை அங்கு சந்திக்கும் முன்பு எதிர்ப்பட்ட நண்பரின் கருத்தாக இருந்தது இது. சொல்லப் போனால் இவனது கருத்தும் அதுதான் என்று நினைத்துக் கொண்டான் சந்திரன். முப்பதுகளிலிருந்து அறுபதுகள் வரையிலான படைப்பாளிகளின் புத்தகங்களை மட்டுமே வாங்குவது என்பதே இவனின் பழக்கமாக இருந்தது. ஏறக்குறைய அவர்களின் படைப்புக்கள் எல்லாவற்றையும் படித்திருக்கிறான். அவ்வப்போது அவர்களின் வெவ்வேறு பெயர்கள் தாங்கிய புத்தகங்கள் வெளியிடப்படுவதைக் கண்ணுற்று வாங்க முற்பட்ட போது அவை ஏற்கனவே வெளிவந்த வேறு தலைப்புகளிலான புத்தகங்கள்தான் என்பது தெரிந்தது. முதல் பதிப்பாக வெளி வந்தவை அப்புத்தகத்தினுள் அடங்கிய வெவ்வேறு தலைப்புகளிலான படைப்புக்களை இப்போது புதிய தலைப்பாக ஏந்திக் கொண்டு புதிய புத்தகங்ளாக வலம் வருவதைப் புரிந்து கொண்டான். முதல் பதிப்பாக வெளிவந்தவை அதே தலைப்பில் அடுத்தடுத்த பதிப்பாக வருவதுதானே சரியானது என்று தோன்றியது. இது வேறு புத்தகமோ என்று சாதாரண வாசகன் ஏமாறும் வாய்ப்பு உண்டு இதில். ஆழமான வாசகன் ஒரு படைப்பாளியின் முக்கியமான படைப்புக்களை நினைவினில் வைத்திருப்பான். என்னென்ன தலைப்பிலெல்லாம் அந்தக் குறிப்பிட்ட எழுத்தாளர் எழுதியிருக்கிறார் என்பதையும் அவன் தன் நினைவில் கொள்ளும் சாத்தியமுண்டுதான். அவனை ஏமாற்ற முடியாது. ஆனால் புதிதாய் உள்ளே நுழையும் வாஞ்சையுடனான வாசகனுக்கு இது தெரிய வாய்ப்பில்லை. அம்மாதிரி வாசகனைக் குறி வைத்தே இந்தப் பயணம் நடைபெறுகிறதோ என்று நினைத்தான். இம்மாதிரியான மாற்றங்களை சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் என்று மேற்கொள்ளலாம். வெவ்வேறு தலைப்புகளாய் மாற்றி, புதிய புத்தகங்களாய்ப் போடும் வாய்ப்பு உண்டு. நல்லவேளை நாவல்களின் தலைப்பையே மாற்றி வெளியிடாமல் இருக்கிறார்களே என்று நினைத்துக் கொண்டான். உண்மையிலேயே அந்த மூத்த தலைமுறைப் படைப்பாளி உயிரோடிருந்தால் இம்மாதிரிச் செய்வதை ஏற்றுக் கொள்வாரா என்ற கேள்வி பிறந்தது இவனுக்குள். அவர்கள் தங்களை மதிப்பான இடத்தில் நிறுத்திக் கொண்டவர்கள். அதுபோல் தங்கள் எழுத்தையும் மதிக்கும் இடத்தில் நிறுத்தியிருந்தவர்கள். இன்று அவர்கள் இருந்தார்கள் வேண்டாம் என்றுதான் சொல்வார்கள். அல்லது வேறு வழியில்லாமல் அமைதி காப்பார்கள். ......

Ushadeepan Sruthi Ramani's photo.

Ushadeepan Sruthi Ramani's photo.

எழுதிக் கொண்டிருக்கும் நாவலின் தடங்கள்….

1437030133-1415698885-dakshin21

-------------------------------------------------------------------

தான் அவளைச் சகித்துக் கொண்டிருப்பதாய் தனக்குத் தோன்றுகிறது. அவள் என்னைச் சகித்துக் கொண்டிருப்பதாய் அவளுக்குத் தோன்றுகிறது. இரண்டுக்கும் இடையில் விட்டு விட முடியாத பந்தம் ஒன்று ஒட்டிக் கொண்டிருக்கிறது. கலாச்சார ரீதியிலான பந்தம். சமுதாயம் அளித்த கொடை. விட்டு அறுத்துச் செல்ல முடியாத இக்கட்டு.
குடும்பம் என்கின்ற அமைப்பின் கட்டுப்பாடுகள் மனிதனைக் கட்டிப் போடுகின்றன. ஒரு கால் கட்டுப் போடுங்க…எல்லாம் சரியாயிடும்…என்று எத்தனை சுருக்கமாய்ச் சொல்லி வைத்திருக்கிறார்கள். எல்லாம் சரியாகித்தான் எல்லோரும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்களா? அல்லது இனி வேறு வழியில்லை என்று சகித்துச் சென்று கொண்டிருக்கிறார்களா?
சகித்துச் செல்வதிலும்தான் இந்த மனிதன் தனக்குத்தானே எத்தனை நாடகமாடுகிறான். வீட்டில் ஒரு மனிதனாய், வெளியில் ஒருவனாய்… இரட்டை மனநிலையில், தன்னைத்தானே ஏமாற்றிக் கொண்டு, காலமும் நேரமும் கழிந்தால் சரி என்று ஒரு வட்டத்திற்குள் எப்படி அகப்பட்டுச் சீரழிகிறான்?
நமக்கு நாமே நம்மளை, நம்ம மனசை எப்டி வச்சிக்கிறோம்ங்கிறதைப் பொறுத்தது அது. ஒண்ணுமில்லாத விஷயங்களையெல்லாம் தூக்கி மனசுல போட்டுக்கிட்டோம்னா அதப் பத்தியே சிந்திச்சு சிந்திச்சு சீரழிய வேண்டிதான்….நாம நினைக்கிற மாதிரியே எதிராளியும் பேசணும், செயல்படணும்ங்கிற எதிர்பார்ப்புதான் இதுக்கெல்லாம் காரணம்…ஒவ்வொருத்தருக்கும் ஒரு எண்ணம் உண்டு, தனிப்பட்ட சிந்தனை உண்டு, செயல்படுற முறை உண்டுங்கிற தெளிவு இருந்தா இதெல்லாம் பெரிசாத் தெரியாது. வீட்டுலயும் சரி, வெளிலயும் சரி…இதுதான் நிலைமை…. –


தொடர்கிறது வரிகள்……

28 அக்டோபர் 2016

அவ்வப்போது கவிதைகளும்…..

  Ushadeepan Sruthi Ramani

  “அறி…!”
  *******************************************
  பார்ப்பதும் பார்க்காததும்
  உன் விருப்பம்
  பார்த்தும் பார்க்காதது
  என் விருப்பம்
  கேட்பதும் கேட்காததும்
  உன் விருப்பம்
  கேட்டும் கேட்காதது
  என் விருப்பம்
  பேசுவதும் பேசாததும்
  உன் விருப்பம்
  பேசியதும், பேசாததும்
  என் விருப்பம்
  உன்னோடு அது என்றால்
  என்னோடு இது…!
  உனக்கு மட்டும் அது என்றோ
  எனக்கு மட்டும் இது என்றோ
  எதுவுமில்லை!
  உன்னோடு உள்ளது உன்னுடையது
  என்னோடு கிடப்பது என்னுடையது
  அவரவர்க்கு அவரவருடையதுதான்
  யாரும் எதுவும் பறிப்பதற்கில்லை
  யாரும் யாரையும் முடக்குவதற்குமில்லை
  உனக்கும் எனக்கும்
  உலகம் ஒன்றுதான்….!
  பயணம்தான் வேறு…!

  -----------------

  Image may contain: one or more people


தீர்வு…! ஸ்ருதி ரமணி,
--------------------,
எனக்கும் அவனுக்குமான உறவை
எது சேர்த்து வைத்தது?
எனக்கும் அவனுக்குமான கேள்விகளை
எது துவக்கி வைத்தது?
எனக்கும் அவனுக்குமான புரிதலை
எது முன்னின்று தடுக்கிறது?
எனக்கும் அவனுக்குமான வித்தியாசங்களை
எது காட்டிக் கொடுக்கிறது?
எனக்கும் அவனுக்குமான இணக்கங்களை
எது மறைக்கப் பார்க்கிறது?
எனக்கும் அவனுக்குமான குரோதங்களை
எது தடுத்தாட்கொள்கிறது?
எனக்கும் அவனுக்குமான வருத்தங்களை
எது அமைதிப் படுத்துகிறது?
எனக்கும் அவனுக்குமான விலகல்களை
எது வேடிக்கை பார்த்துச் சிரிக்கிறது?
எனக்கும் அவனுக்குமான ஒற்றுமையை
எது பிரித்து வைக்கிறது?
எனக்கும் அவனுக்குமான நெருக்கத்தை
எந்த மனம் ஏற்க மறுக்கிறது?
என்னில் “நானை” உதறியெறிந்து – அவன்
தன்னில் ”தன்னைப்” புதைத்து விட்டால்
எங்கும் எதுவும் சாத்தியமோ…!
-------------------------------------------------------------------------

No automatic alt text available.

கேள்வி ...!
***********************************************
ஏன் பொறுக்க மறுக்கிறது மனம்
நானொன்று சொல்ல
அவர்கள் ஒன்று நினைக்க
எந்த இடத்தில் விழுந்தது
இந்தப் புள்ளி?
வெள்ளைத்தாளில் விழுவதெல்லாம்
வெறும் புள்ளியா? கரும்புள்ளியா?
வெறும் புள்ளியாயினும்
கண்ணுக்குத் தெரிவது
அது மட்டும்தானே…!
அப்படியானால் கரும்புள்ளி?
வன்மம் வளர்க்குமோ…?
வார்த்தை தெறிக்குமோ?
எதிர்வினையில் எகிறி விழுமோ?
பொது வெளியின்
பொத்தாம் பொதுவினை
தனக்கானதாய்
இனம் பிரிக்கும் மனம்
எந்த வகை முதிர்ச்சி?
----------------------------

No automatic alt text available.

ஒரு கவிதை...
--------------------------
கேள்வி…!
--------------------
கூடவே
வேண்டும் ஒருவர்
பின்பாட்டுப் பாட
அல்லது
தலையசைக்க
அல்லது
அவ்வப்போது பெயர் சொல்ல
எதிர்வினை அம்புகளை
எட்டிப் பிடித்து எறிய
அல்லது
எரித்துச் சாம்பலாக்க
எப்படிச் சொல்லப் போச்சு
என்று
எதிர்க் கேள்வி கேட்க
அல்லது
எதிரே நின்று குரைக்க
எங்கிருந்து முளைக்கிறது
இந்த அகங்காரம்?
எதிலிருந்து கிளைக்கிறது?
எதற்காக இந்தத்
தன் முனைப்பு?
எண்ணுவதோ
எழுதுவதோ என்ன
காப்பியமா?
-----------------------------------------

Image may contain: flower, plant and nature

26 அக்டோபர் 2016

“பரணி”(காலாண்டிதழ்) (3-வது) ஜூலை முதல் செப்டம்பர் 2016வரை) இதழில் எனது “கால் விலங்கு” நெடுங்கதையின் இரண்டாம் நிறைவுப் பகுதி

20161026_20554520161026_205607

சத்யஜித்ரேயின் சிறுகதைகள்-பாவண்ணன்

clip_image005

Ushadeepan Sruthi Ramani

 

clip_image007clip_image009

 

 

clip_image010

 

 

 

 

 

 

 

 

அவசியம் படிக்க வேண்டிய புத்தகமாகத் தெரிகிறது பாவண்ணனின் இந்த விமர்சனத்தைப் படித்த பிறகு....

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை
23 அக்டோபர் 2016

சத்யஜித்ரேயின் சிறுகதைகள்
பாவண்ணன்

சத்யஜித்ரேயின் தாத்தா உபேந்திர கிஷோர் ரே என்பவர் 1913 ஆம் ஆண்டில் குழந்தைகளுக்காக வங்கமொழியில் சந்தேஷ் என்னும் பெயரில் ஓர் இதழைத் தொடங்கி நடத்தினார். அவரைத் தொடர்ந்து சத்யஜித் ரேயின் தந்தையான சுகுமார் ரே அந்த இதழுக்குப் பொறுப்பாசிரியராக இருந்தார். அவருடைய காலத்துக்குப் பிறகு சந்தேஷ் நின்றுவிட்டது. சாந்தி நிகேதனில் படித்துமுடித்த பிறகு நாற்பதுகளில் ஒரு விளம்பர நிறுவனத்தில் ஓவியராக வேலைக்குச் சேர்ந்த சத்யஜித் ரே அதைத் தொடர்ந்து திரைத்துறையில் ஈடுபாடு கொண்டவராக மாறினார். 1961ஆம் ஆண்டில் ஏதோ ஓர் ஆர்வம் உந்த தன் நாற்பதாவது வயதில் சத்யஜித்ரே தன் நண்பரொருவருடன் சேர்ந்து நின்றுபோயிருந்த சந்தேஷ் இதழுக்குப் புத்துயிரூட்டத் தொடங்கினார். இதழில் தன் பங்களிப்பாக சில படைப்புகள் இருக்கவேண்டும் என்ற எண்ணத்தில் சிறுவர்களுக்காக ஏராளமான சிறுகதைகளை தொடர்ந்து எழுதினார். சிறுவர்களுக்கானவை என்பதால், சுவாரசியத்தை முக்கிய நோக்கமாகக் கொண்டு புதிய புதிய பின்னணியில் கற்பனை வளத்தோடு எழுதினார் ரே. தன் திரைப்படங்களின் வழியாக அவர் ஒரு தவிர்க்கப்பட முடியாத இந்திய ஆளுமையாக வளர்ந்த பிறகு எழுபதுகளிலும் எண்பதுகளிலும் அவருடைய சந்தேஷ் சிறுகதைகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு இதழ்களில் வெளிவரத்தொடங்கின. பிறகு புத்தகமாகவும் தொகுக்கப்பட்டு வெளிவந்தது.

சத்யஜித் ரே எழுதிய சிறுகதைகள் என்னும் காரணத்தைவிட, இவற்றை மொழிபெயர்த்ததன் பின்னணியை மொழிபெயர்ப்பாளர் அற்புதராஜ் எழுதியிருக்கும் காரணமே என்னை இப்புத்தகத்தை உடனே படிக்கத் தூண்டியது. ஆங்கில இதழ்களில் இக்கதைகள் வெளிவந்த எண்பதுகளில் அற்புதராஜ் ஓர் ஆசிரியராக பணியாற்றியவர். அக்கதைகளை ஆங்கிலத்தில் படித்ததுமே, அவற்றின் புதுமை காரணமாக தொடர்ச்சியாக விரும்பிப் படித்துவந்தார். தம் மாணவர்களுக்கும் தம் பிள்ளைகளுக்கும் சொல்லும் பொருட்டு அக்கதைகளை தமிழில் மொழிபெயர்த்து வைத்துக்கொண்டார். ஓய்வு நேரங்களில் அவர்களுக்குப் படித்துக் காட்டி உற்சாகமூட்டும் வேலையையும் செய்தார். குழந்தைகளுடன் புதுமையைப் பகிர்ந்துகொள்ளவேண்டும் என அவருக்குத் தோன்றிய அந்த எண்ணம் எனக்கு மிகவும் முக்கியமாகத் தோன்றியது. ஓர் ஆதர்ச ஆசிரியருக்கு அல்லது ஆதர்ச அப்பாவுக்கு மட்டுமே இருக்கக்கூடிய குணங்கள் அவை. இளம்பருவத்தில் அவர் மொழிபெயர்த்த சிறுகதைகள் பணியிலிருந்து ஓய்வுபெற்றிருக்கும் இப்போதுதான் நூல்வடிவம் பெற்றிருக்கின்றன.
குழந்தைகளுக்கான சிறுகதைகள் என இன்று தமிழில் எழுதப்படும் எந்தக் கதையையும் இக்கதைகளுடன் ஒப்பிடவே முடியாது. தமிழில் குழந்தைகளுக்கான கதைகள் எவ்வளவு பின்தங்கியிருக்கின்றன என்பதை ஒரே வாசிப்பில் நம்மால் உணர்ந்துகொள்ள முடிகிறது. இத்தொகுப்பின் பதினோரு கதைகள் உள்ளன. படோல் பாபு ஒரு சினிமா நட்சத்திரம் என்னும் சிறுகதையை மட்டும் இலக்கியவகையிலான சிறுகதை என வரையறுக்கலாம். மற்ற பத்து சிறுகதைகளும் சிறுவர்களின் வாசிப்புகுரியவை. புதுப்புதுக் களங்களுடன் உள்ள அக்கதைகள் அடுத்து என்ன, அடுத்து என்ன என ஆவலைத் தூண்டும் விதமாக எழுதப்பட்டுள்ளன. கதை எழுதும் கலையின் பல சாத்தியப்பாடுகளை ரே முயற்சி செய்து பார்க்கிறார் என்பது முக்கியமானதொரு அம்சம்.
கதைகளைக் கட்டமைக்க ரே மேற்கொள்ளும் தொழில்நுட்பம் மிகமுக்கியமானது. அவர் கையாளும் உத்திகளை உத்தேசமாக இப்படி வரையறுத்துக்கொள்ளலாம்.
1. ஒரு கதையைப்போல இன்னொரு கதையை வடிவமைப்பதில்லை. ஒவ்வொரு கதைக்கும் ஒரு புதிய வடிவத்தைக் கற்பனையால் அடைதல்.
2. புதிய புதிய களங்களை மிகவும் நம்பகத்தன்மையோடு அறிமுகப்படுத்துதல்.
3. அபூர்வமானதொரு வரலாற்றுத் தகவல், விசித்திரமானதொரு அறிவியல் உண்மை, புராண நம்பிக்கை என ஏதேனும் ஒரு சின்ன அம்சத்தை கதையின் மையமாக தேர்ந்தெடுத்தல்.
4. கட்டற்ற கற்பனையாற்றலோடு கதைநிகழ்ச்சிகளை இணைத்துக்கொண்டே போதல்
’அண்டல்காலோர்னிஸ் என்பது மூன்று மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பறவை. அது மனிதனைப்போலவே உயரமானது’ என்பது ஒரு சின்ன தகவல். இதை மையமாகக் கொண்டு ரே எழுதியிருக்கும் ‘பெரும்பறவை’ என்னும் சிறுகதை ரேயின் கற்பனையாற்றலுக்கு மிகச்சிறந்ததொரு எடுத்துக்காட்டு. அடுத்தடுத்து அவர் காட்சிகளை நகர்த்திக்கொண்டு செல்லும் விதம் பாராட்டும் விதத்தில் உள்ளது.
துளசிபாபுவும் ஜகன்மாய் தத்தும் நெருங்கிய நண்பர்கள். அவ்விருவருக்கிடையே நிகழும் உரையாடலோடு கதையைத் தொடங்குகிறார் ரே. ஜகன்மாய் தத் தன்னைச்சுற்றி நிகழும் ஒவ்வொரு நிகழ்ச்சியையும் பார்த்து ஆச்சரியத்தில் மூழ்கிப்போகும் குணமுள்ளவர். துளசிபாபு இந்த உலகில் எதுவுமே ஆச்சரியமானதல்ல என்பதுபோல நடந்துகொள்பவர். அவருக்கு ஆச்சரியம் அளிக்கும் ஒரே அம்சம் ஒரு குறிப்பிட்ட உணவு விடுதியில் கிடைக்கும் மட்டன் கபாப். துளசிபாபுவுக்கு மூலிகை மருத்துவத்தில் ஈடுபாடு உண்டு. ஒருவகையில் பரம்பரை மருத்துவர். உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் ஆற்றலுள்ள சக்ராபரணி என்னும் பெயருடைய முக்கியமான மூலிகை பக்கத்தில் மலைக்குகையில் இருப்பதாகவும் அந்த மூலிகை பற்றி அங்கு வாழும் ஒரு முனிவருக்குமட்டுமே தெரியும் என்பதாகவும் ஒரு தகவல் அவருக்குக் கிடைக்கிறது. உடனே தன் நண்பரை அழைத்துக்கொண்டு அக்குகைக்குச் செல்கிறார். முனிவரைச் சந்தித்து, மூலிகையின் இருப்பிடத்தைப்பற்றியும் பயன்பாடு பற்றியும் தெரிந்துகொள்கிறார். அவர் குறிப்பிட்டுச் சொன்ன இடத்தைத் தேடிக் கண்டுபிடித்து அந்த மூலிகைகளைப் பறித்துச் சேகரித்துக்கொள்கிறார். திரும்பும் சமயத்தில் ஒரு செடியின் வேரடியில் கிடந்த முட்டையொன்று உடைந்து ஒரு குஞ்சு வெளிவருகிறது. கோழிக்குஞ்சு போல காணப்படும் அக்குஞ்சு அவர்களைத் தொடர்ந்து நடந்துவருகிறது. மூலிகைப்பையில் அந்தக் குஞ்சையும் எடுத்துப் போட்டுக்கொள்கிறார் துளசி பாபு. தன் வீட்டில் வைத்து வளர்க்கிறார். அதற்கு பில் என்று பெயரிட்டு செல்லமாக அழைத்துக் கொஞ்சுகிறார். அதற்காகவே ஒரு கூண்டு செய்யப்படுகிறது. அதன் வளர்ச்சி வேகம் ஆச்சரியமளிக்கிறது. இரு வாரங்களுக்கு ஒருமுறை கூண்டின் அளவைப் பெரிதாக மாற்றவேண்டியிருக்கிறது. மெல்ல மெல்ல அது தாவர பட்சினி அல்ல, மாமிச பட்சினி என்னும் உண்மையும் புரிகிறது. அப்பறவைக்காகவே தனிபட்ட விதத்தில் மாமிசம் வரவழைக்கப்பட்டு அதற்கு அளிக்கப்படுகிறது. கிட்டத்தட்ட ஒரு மனிதனுடைய உயரத்துக்கு அது வளர்ந்து நிற்கிறது. அலகுகள் அச்சமூட்டும் வகையில் கூர்மையாகவும் பருத்தும் உள்ளன. ஒருநாள் இரவில் பறவை கூண்டுக் கம்பியை வளைத்து தப்பித்துவந்து எதிர்வீட்டுப் பூனையைக் கொன்று சாப்பிட்டுவிடுகிறது. அது ஓர் ஆபத்தான பறவை என்பதை முதன்முதலாக உணர்கிறார்.
அடுத்த நாளே வாடகைக்கு ஒரு வண்டியை அமர்த்திக்கொண்டு கூண்டோடு அந்தப் பறவையை அதில் ஏற்றுக்கொண்டு, முட்டையாக அதைக் கண்டெடுத்த இடத்துக்கே செல்கிறார். அங்கே அதை இறக்கிவிட்ட பிறகு திரும்பிவிடுகிறார். பறவையைப்பற்றி விசாரிக்கும் ஜகன்மாய் தத்திடம் பறவை தப்பியோடிவிட்டது என்று சொல்கிறார். கபாப் கடைக்கு போவதை நிறுத்திவிடுகிறார்.
சில வாரங்களுக்குப் பிறகு, காட்டுக்குள் உலவும் அதிசய விலங்கு என்னும் தலைப்பில் செய்தித்தாளில் பரபரப்பான ஒரு செய்தி வெளியாகிறது. காட்டுப்பகுதியை ஒட்டிய கிராமங்களுக்குள் யாருமற்ற தருணங்களில் நுழையும் விலங்கு கோழிகளையும் ஆடுகளையும் தூக்கிச் சென்று உண்டு வீசிவிடுகின என்னும் செய்தி எல்லா இடங்களிலும் பரபரப்பாக வாசிக்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து சில நாட்களிலேயே அந்த விலங்கைப் பிடிக்கச் சென்ற வனத்துறை ஊழியர்களில் ஒருவர் அந்த விலங்கின் தாக்குதலால் மரணமடைந்துவிட்டதாகச் செய்தி வருகிறது.
செய்திகளைத் தொடர்ந்து படித்துவரும் துளசிபாபு மீண்டும் காட்டுக்குள் செல்கிறார். இம்முறை ஜகன்மாய் தத்தையும் அழைத்துச் செல்கிறார். ஒரு முட்டையாக அந்த விலங்கு கண்டெடுக்கப்பட்ட மூலிகைச்செடிப் புதருக்கு அருகில் நின்று பில் என்று பெயர்சொல்லி அழைக்கிறார். அவர் குரல் காடேங்கும் பட்டு எதிரொலிக்கிறது. சில நிமிடங்களுக்குப் பிறகு, மனித உயரத்துக்கு வளர்ந்து நிற்கும் பெரும்பறவை வந்து நிற்கிறது. ’நான் வெட்கப்படுவதற்கு நீ காரணமாக இருந்துவிட்டாய். இனிமேலாவது ஒழுங்காக இரு’ என்றபடி தன்னோடு வாளியில் கொண்டு வந்திருந்த இறைச்சித்துண்டுகளை பறவையின் முன்னால் வைக்கிறார். ஆவலுடன் அப்பெரும்பறவை அந்த இறைச்சித்துண்டுகளை எடுத்துச் சாப்பிடுகிறது. இரு நண்பர்களும் நகரத்துக்குத் திரும்பிவிடுகிறார்கள்.
அதற்குப் பிறகு பறவையைப்பற்றி எவ்விதமான பரபரப்பான செய்தியும் இல்லை. ஜகன்மாய் தத்தின் மனத்தில் ஒரு சந்தேகம் தோன்றுகிறது. துளசிபாபு வைத்த உணவில் நஞ்சு கலந்திருக்குமோ என்று அவர் நினைக்கிறார். ஆனால் நேருக்கு நேர் கேட்க தயக்கம் கொள்கிறார். அவர்களுடைய அடுத்து சந்திப்பில் அந்தப் பறவையைப்பற்றிய பேச்சு தானாகவே வந்துவிடுகிறது. பறவைக்குக் கொடுத்த உணவில் சக்ராபரணி மூலிகைச் சாற்றை கலந்து கொடுத்ததாகச் சொல்கிறார் துளசிபாபு. புரியாமல் குழம்பி நிற்கும் ஜகன்மாய் தத்துக்குப் புரியும் வகையில் ‘மாமிசம் உண்ணும் நாட்டத்தை விலக்கி தாவரவகை உணவுகள்மீது நாட்டத்தைத் திருப்பிவிடும் ஆற்றல் சக்தி சக்ராபரணி மூலிகையில் இருக்கிறது. அதை அனுபவத்தின் அடிப்படையிலேயே உணர்ந்துகொண்டேன். அதனால் அச்சாற்றையே பில்லுக்கும் கொடுத்தேன்’ என்று சொல்கிறார் துளசிபாபு.
ஒரு சின்ன தகவலை மையப்பொருளாக்கி, சுவாரசியம் குன்றாத வகையில் கதையைப் பின்னும் கலைக்கு இது ஓர் எடுத்துக்காட்டு. பத்து கதைகளிலும் இப்படி புதுமை நிறைந்த தகவல்களே கருவாக உள்ளன. அவற்றைக் கதைகளாக நிகழ்த்துவதற்கு ஏற்ற களங்களை மாறிமாறி உருவாக்குகிறார் ரே.
ஒரு நாய் சிரிக்கிறது என்பதுதான் அசமஞ்ச பாபுவின் நாய் என்னும் கதையில் பயன்படுத்தப்படும் மையத்தகவல். தனக்கே உரிய கற்பனையாற்றலுடன் அதைக் கதையாக மாற்றுகிறார் ரே. நாய் வளர்க்கும் பல குடும்பங்களைப் பார்த்து அசமஞ்ச பாபுவுக்கும் நாய் வளர்க்கும் ஆசை உருவாகிறது. ஆனால் அதற்காக கொடுக்கவேண்டிய விலையை நினைத்து அந்த ஆசையை ஒத்திப் போடுகிறார். ஒருநாள் கடைத்தெருவிலிருந்து திரும்பி வரும் வழியில் ஒரு சிறுவன் ஓர் அட்டைப்பெட்டிக்குள் வைத்து ஒரு நாய்க்குட்டியை வைத்து விற்பதைப் பார்க்கிறார். ஏழரை ரூபாய்க்குப் பேரம் பேசி அந்த நாயை வாங்கிக்கொள்கிறார் அவர். அது பழுப்பு நிறத்தில் இருந்ததால் அதற்கு பிரெளனி என்று பெயர் வைக்கிறார். சின்னச்சின்ன கட்டளைகளுக்குக் கீழ்ப்படியும் விதத்தில் அதற்குப் பயிற்சியளிக்கிறார்.
இப்படியே நாட்கள் கழிகின்றன. ஒரு நாள் அவர் கால் முரிந்த நாற்காலியிலிருந்து வேகமாக எழுந்திருக்கும் தருணத்தில் கீழே விழுந்து காயமடைந்துவிடுகிறார். அதைப் பார்த்து நாய் சிரிக்கிறது. அவர் ஆச்சரியத்தில் உறைந்துபோகிறார். ஆனாலும் அது நாயின் சிரிப்புத்தானா என்று சின்னதொரு சந்தேகம் எழுகிறது. அடுத்த முறை விழும்போது நாய் சிரிப்பதை நேருக்கு நேராகவே பார்த்துவிடுகிறார். நாய்க்கு இப்படி ஒரு குணம் இருப்பது பற்றி மேலதிகமான உண்மைகளைத் தெரிந்துகொள்வதற்காக பல புத்தகங்களைத் தேடிப் படிக்கிறார். பல மருத்துவர்களிடம் கலந்தாலோசிக்கிறார். யாருக்குமே அக்குணத்தைப்பற்றி உறுதியாகச் சொல்லத் தெரியவில்லை.
ஒருநாள் மாலைநடைக்கு பாபு தன்னுடன் நாயை அழைத்துச் செல்கிறார். திடுமென வழியில் மழை பிடித்துக்கொள்கிறது. இருவரும் ஒதுங்கி நிற்கிறார்கள். அப்போது சாலையில் நடந்துகொண்டிருந்த ஒருவர் தன்னிடமிருந்த குடையைப் பிரிக்கிறார். காற்றின் வேகத்தில் அக்குடையின் மேல்விரிப்பு மேற்புறமாக விரிந்து மடிகிறது. அதைப் பார்த்ததும் நாய் சிரிக்கிறது. எல்லோரும் பார்க்கும் விதத்தில் இருக்கிறது அச்சிரிப்பு. குடையைப் பிடித்துக்கொண்டிருப்பவரும் நாயின் சிரிப்பைப் பார்த்துவிடுகிறார். அதை நம்பமுடியாமல் பாபுவை நெருங்கி வந்து விசாரித்துத் தெரிந்துகொள்கிறார். அவர் ஒரு பத்திரிகையாளர். ஒருநாள் பத்திரிகையாளர் கிளபில் நடைபெற்ற கூட்டத்தில் அந்த அனுபவத்தைச் சொல்லிப் பகிரிந்துகொள்கிறார். அதைக் கேட்ட ஆங்கிலப்பத்திரிகையின் ஆசிரியர் அதை ஒரு பெரிய செய்தியாக வெளியிடுவதற்காக, தன் நிரூபரை பாபுவின் முகவரிக்கு அனுப்பிவைக்கிறது. அவர் பாபுவிடம் நீண்டதொரு நேர்காணல் எடுக்கிறார். பாபுவையும் நாயையும் பல கோணங்களில் படமெடுக்கிறார். சில நாட்கள் கழித்து அச்செய்தி பத்திரிகையில் வெளிவந்து அவரைப் பார்ப்பவர்கள் எல்லோரும் விசாரிக்கத் தொடங்கிவிட்டார்கள். எல்லோரும் வீட்டுக்கு வந்து நாயின் சிரிப்பைப் பார்க்க ஆசைப்படுவதாகச் சொல்கிறார்கள். கூட்டத்தைத் தவிர்ப்பதற்காக பாபு நாயை அழைத்துக்கொண்டு ஏதோ ஒரு வெளியூருக்குப் பிரயாணம் புறப்படுகிறார். எங்கெங்கோ அலைந்துவிட்டு இரவு நேரத்தில் வீடு திரும்புகிறார். ஆனால் அந்த நேரத்திலும் அவரைச் சந்திக்க விரும்பிய வெளிநாட்டுக்காரர் ஒருவருடன் ஒரு வங்காளி இளைஞன் வந்து நிற்கிறான். தவிர்க்கவியலாமல் அவர்களை உள்ளே அழைத்துப் பேசுகிறார் பாபு. அந்த வெளிநாட்டுக்காரர் அந்த நாயை விலைக்குக் கேட்கிறார். இருபதாயிரம் டாலர் கொடுக்கத் தயாராக இருப்பதாக காசோலைப்புத்தகத்தை பையிலிருந்து வெளியே எடுக்கிறார். அப்போது நாய் சிரிப்பதை எல்லோரும் பார்க்கிறார். எல்லாவற்றையும் பணத்தால் வாங்கிவிட முடியும் என எண்ணும் அவருடைய பேதைமையைப் பார்த்துத்தான் தன் நாய் சிரித்ததாகச் சொல்கிறார் பாபு. நாயை விற்க தனக்கு விருப்பமில்லை என்று அவர்களைத் திருப்பி அனுப்பிவிடுகிறார். ’பைத்தியக்காரன்’ என்று மனசுக்குள் திட்டியபடி அவர்கள் வெளியே சென்றுவிடுகிறார்கள். ‘உன்னைப்பற்றி நான் சொன்னது சரிதானே?’ என்று நாயிடம் கேட்கிறார் பாபு. சரியென்று சொல்வதுபோல நாய் மீண்டும் பாபுவைப் பார்த்துச் சிரிக்கிறது.
கருத்து வேற்றுமையை சண்டையிட்டுத் தீர்த்துக்கொள்ள விரும்பும் இருவர் ஒருவரையொருவர் குறிபார்த்துச் சுட்டு தாக்கிக்கொள்ளும் சண்டைமுறையைப்பற்றிய தகவலை முன்வைத்து அவர் வளர்த்தெடுக்கும் கதை கிட்டத்தட்ட ஒரு துப்பறியும் கதையைப்போல உள்ளது. இண்டிகோ செடித் தோட்டங்களை உருவாக்கிய ஆங்கிலேயர்களைப்பற்றிய தகவல், எண்களையும் எழுத்துகளையும் எழுதிக் காட்டும் அதிசய காகம், தொழில்நுட்பத்தின் துணையோடு ஆயிரக்கணக்கானோரின் மூளைத்திறன்களுக்கு இணையான திறமையை உடைய ஒரு கோளத்தை உருவாக்கி நிர்வகிக்கும் தகவல், நாடோடிக்கிழவி ஒருத்தி சொல்லிவிட்டுச் செல்கிற விசித்திரமான தகவல் என விதம்விதமான தகவல்களை மையப்படுத்தும் ரே தன் திறமையால் சுவாரசியமான கதைகளாக மாற்றிவிடுகிறார்.
படோல் பாபு ஒரு சினிமா நட்சத்திரம் என்னும் சிறுகதை மட்டுமே இலக்கியப்பரப்பில் முன்வைத்துப் பேசத்தக்க கதை. நடிப்பில் ஆழ்ந்த ஆர்வமுள்ளவர் பாபு. வாய்ப்புக்காக அலைந்து பல ஆண்டு கால வாழ்க்கையைத் தொலைத்தவர் அவர். பிறகு அதிலிருந்து விலகி வாழ்க்கையை நடத்துவதற்காக கடை நடத்திப் பார்க்கிறார். பிறகு ஒரு நிறுவனத்தில் பணிபுரிகிறார். அதைத் தொடர்ந்து இன்ஷூரன்ஸ் நிறுவனத்தில் முகவராக வேலை செய்கிறார். எப்படியோ காலம் நகர்ந்து முதுமை வந்து சேர்ந்துவிடுகிறது. அத்தருணத்தில் ஒரு நண்பரின் மகன் வழியாக திரைப்படத்தில் தலைகாட்டும் ஒரு சிறிய வாய்ப்பு அவருக்குக் கிடைக்கிறது. அதில் நடிப்பதற்காக அதிகாலையிலேயே எழுந்து அவர்கள் குறிப்பிட்ட இடத்துக்குச் சென்று காத்திருக்கிறார். இயக்குநர் அவருக்குரிய காட்சியை விவரிக்கிறார். ஒரே ஒரு நொடிக்காட்சி அது. ஒரு வங்கிக்குச் செல்கிற நாயகன் ஏதோ யோசனையில் மூழ்கியிருந்த வேகத்தில் எதிரில் வந்த கிழவரின் மீது எதிர்பாராமல் மோதிவிடுகிறார். அதிர்ச்சியடைந்த கிழவர் ஆ என்றபடி கீழே விழுந்துவிடுகிறார். அவர் பேச வேண்டிய ஒரே ஒரு சொல் ஆ மட்டுமே. முதலில் அதை அவமானமாக உணர்கிறார். பிறகு அந்த ஒரு சொல் வழியாகவே தன் திறமையை வெளிக்காட்ட வேண்டும் என்னும் வேகத்தில் அச்சொல்லைச் சொன்னபடி எப்படியெல்லாம் விழலாம் என்று பலவிதமான கற்பனைக்காட்சிகளை தனக்குள் நிகழ்த்திப் பார்த்துக்கொள்கிறார். நடிகர் வருகிறார். காட்சி படமாகிறது. உடனே அடுத்த காட்சிக்கு எல்லோரும் தயாராகிறார்கள். தன்னுடைய வேலையை நன்றாகச் செய்த திருப்தியை மனத்தளவில் உணர்கிறார் அவர். இத்தனை ஆண்டு காலப் போராட்டம் தன் உணர்வுகளை மழுங்கடித்துவிடவில்லை என்பதில் அவருக்கு மனநிறைவாக இருக்கிறது. ஆனால் இந்த உழைப்பையும் கற்பனையையும் மக்கள் புரிந்து ரசித்து பாராட்டக்கூடியவர்கள் அரிதினும் அரிது என்று அவருக்குத் தோன்றுகிறது. மெல்ல எழுந்து அந்தக் கூட்டத்தைவிட்டு வெளியேறிவிடுகிறார். அவருக்கு ஊதியம் வழங்க பணத்தோடு வருபவர் அவரைக் காணாமல் ஆச்சரியத்தோடு சலித்துக்கொள்கிறார்.
ஒரு நடிகனாக ஒருவர் எதிர்பார்ப்பது தன் உழைப்புக்கான பாராட்டையும் அங்கீகாரத்தையும் மட்டுமே. காலம் முழுதும் அவர் காத்திருப்பது அவற்றுக்காகவே. ஆனால் பணம் மட்டுமே கிட்டும், அவர் விரும்பியவை கிட்டாது எனத் தோன்றும் கணத்தில் கைவிட்ட இந்த உலகத்தின் முன் மனம்குன்றி நிற்கிறான் ஒரு மானிடன். அத்தகு கையறு நிலை கணத்தையே ரே இக்கதையில் சித்தரித்துக் காட்டியிருக்கிறார்.
அற்புதராஜின் மொழிபெயர்ப்புக்கதைகள் காலந்தாழ்ந்து நூலாக்கம் பெற்றிருந்தாலும், இப்போதாவது வந்தனவே என ஆறுதலாக இருக்கிறது. சத்யஜித்ரேயின் கதைகளைப்போல தன் பிள்ளைகளிடமும் மாணவர்களிடமும் நண்பர்களிடமும் பகிர்ந்துகொள்ள மேலும் சில படைப்புகளை அற்புதராஜ் மொழிபெயர்த்து வைத்திருக்கக்கூடும் என்று தோன்றுகிறது.. அவற்றை வெளியிட இதுவே நல்ல தருணம்.

(சத்யஜித்ரே கதைகள். மொழிபெயர்ப்பு. எஸ்.அற்புதராஜ், மலைகள் பதிப்பகம், 119, முதல் மாடி, கடலூர் மெயின் ரோடு, கடலூர் மெயின் ரோடு, அம்மாபேட்டை, சேலம்-3. விலை.ரூ.300)

 

 

 

Top of Form

Bottom of Form

13 அக்டோபர் 2016

வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது-2016

shadeepan Sruthi Ramani and 3 others shared a link.

வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது

  2016 ஆம் வருடத்திற்கான விஷ்ணுபுரம் விருது வண்ணதாசனுக்கு வழங்கப்படவுள்ளது. வரும் டிசம்பர் இறுதிவாரம் விருதுவிழா நிகழும்.

Share

JEYAMOHAN.IN·

 • வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது (2016)
  -----------------------------------------------------------------

  அவருக்கும் பெருமை, விருதுக்கும் பெருமை
  -------------------------------------------------------------------

  எனக்கு மிகவும் பிடித்த மன நெகிழ்ச்சியான படைப்பாளி. இவரின் கிருஷ்ணன் வைத்த வீடு மறக்க முடியாத சிறுகதை. அழிந்து போன ஒரு வீட்டின் பிம்பத்தை. அதன் வரலாற்றை அப்படியே மனதில் பாரமாக நிறுத்தி வைக்கும் கதை. என் சொந்த ஊருக்குப் போகும்போதெல்லாம் அப்படி ஒரு வீடு அங்கும் இருக்கக் கூடுமே என்று மனசு தேடும்...அந்த வீட்டின் அழிந்துபட்டவர்களின் கதை காட்சி ரூபமாய் விரியும். ஆனந்த விகடனில் அவ்வப்போது அப்படி வண்ணதாசன் எழுதிய கதைகள் அத்தனையும் உயர் தரம். பல்லாண்டு காலமாகக் கிளை விரித்துப் படர்ந்து முதிர்ந்து நிற்கும் ஒரு மாமரத்தை விலை பேசி வெட்ட வரும் நபர்கள், அந்த மரமும், அதை வளர்த்தெடுத்த பாட்டியின் நேசமும்.... செல்லுமிடமெல்லாம் அந்த மரத்தைத் தேட வைத்து விடுவார். சருகுகளின் ஒரு சிறு சலசலப்புக் கூட அந்தப் பாட்டியை உஷாராக்கி விடும்...அதை அவர் சொல்லியிருக்கும்அழகிருக்கிறதே...அப்படியொரு கதையை வேறு எவரிடத்திலும் நான் படித்ததில்லை...அவர் எழுதியுள்ள வரிகளை நினைத்து நினைத்து மனதில் ஏற்றி வியப்புக் கொள்ள வைக்கும் மிக உயர்ந்த தரத்திலான பல படைப்புக்களை வண்ணதாசன் தொடர்ந்து தந்துகொண்டேயிருந்திருக்கிறார். அவருக்கு ஜெயமோகனின் விஷ்ணுபுரம் விருது மிகத் தகுதியான ஒன்று...!
  ஒரு உண்மையான படைப்பாளிக்கு தான் வாங்கும் விருது அவனது மனசாட்சிக்கு உகந்ததாக இருக்க வேண்டும். அதற்கான தகுதிதான் என்கிற மன நிறைவு தனக்குத்தானே ஏற்பட வேண்டும்.
  எத்தனையோ விருதுகள் அறிவிக்கப்படுகின்றன. எல்லோரும்தான் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். எனக்கு ஒண்ணு, உனக்கு ஒண்ணு என்று. அதில் என்ன பெருமை...! ஒரு குறிப்பிட்ட தொகுதியை முன் வைத்து பரிசளிக்கப்படுகிறதென்றால் அந்தத் தொகுதியில் பத்துக்கு ஏழு அல்லது எட்டுச் சிறுகதைகளாவது மிகத் தரமானதாக உயர்ந்து நிற்க வேண்டும். சும்மா மூணு, நாலு என்பதில் அர்த்தமேயில்லை. அப்படியான ஒரு புத்தகம் தேர்ந்தெடுக்கப்பவதுதான் பரிசுக்குப் பெருமையாக அமையும். நாவல்களுமே அப்படித்தான். ஒரு காலகட்டத்தின் கதையை, ஒரு சமூக மாற்றத்தை, பெருமளவு உள்ளடக்கிய படைப்புக்களே சிறந்த நாவலாக அமையும். வெறும் சம்பவங்களாய், ஸ்வாரஸ்யமாய் இருந்தால் சரி என்று கோர்த்துக்கொண்டே போவதில் என்ன அர்த்தமிருக்கிறது. இன்றைய நாவல்கள் அப்படித்தான் வருகின்றன. பாதி படிக்கையிலேயே நேரம் வீண் என்கிற மன வருத்தம் வந்து விடுகிறது. அடுத்த புத்தகத்திற்குத் தாவ விழைகிறது. பெரும்பாலும் இப்படித்தான் விரவிக் கிடக்கிறது.
  ஆனால் இப்படித் தகுதியாய்ப் பெறுபவர்களைப் பார்த்து மனம் பூரிக்கிறது. தலைவணங்குகிறது...விருதினால் அவருக்கும் பெருமை...விருதுக்கும் பெருமை...!!!

  Ushadeepan Sruthi Ramani

  Ushadeepan Sruthi Ramani ஒரு உண்மையான படைப்பாளிக்கு தான் வாங்கும் விருது அவனது மனசாட்சிக்கு உகந்ததாக இருக்க வேண்டும். அதற்கான தகுதிதான் என்கிற மன நிறைவு தனக்குத்தானே ஏற்பட வேண்டும்.
  எத்தனையோ விருதுகள் அறிவிக்கப்படுகின்றன. எல்லோரும்தான் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். எனக்கு ஒண்ணு, உனக்கு ஒண்ணு என்று. அதில் என்ன பெருமை...! வெறும் பீத்தல்...!
  ஆனால் இப்படித் தகுதியாய்ப் பெறுபவர்களைப் பார்த்து மனம் பூரிக்கிறது. தலைவணங்குகிறது...விருதினால் அவருக்கும் பெருமை...விருதுக்கும் பெருமை...!!!

  Like · Reply · 8 mins · Edited

  Ushadeepan Sruthi Ramani

10 அக்டோபர் 2016

ஜெயந்தி சங்கரின் “மிதந்திடும் சுய பிரதிமைகள்” (சீன இலக்கியம்)

 

 

20161010_06402720161010_064044

எழுத்தாளர் திருமதி ஜெயந்தி சங்கர் அவர்களை 2014 ல் நாமக்கல் கு.சின்னப்பபாரதி அறக்கட்டளை விருது நிகழ்ச்சியில் முதன்முதலில் சந்தித்தேன். அவரோடு சேர்ந்து என்னுடைய சிறுகதைத் தொகுப்பும் பரிசு பெற்றிருந்தது எனக்குப் பெருமை. சிங்கப்பூரிலிருந்து பறந்து வந்திருந்தார் அந்த விழாவுக்கு. என்ன ஒரு உற்சாகமும், ஊக்கமும்...அந்த ஊக்கமும், உற்சாகமும் இம்மியும் குறையாமல் தொடர்ந்து எழுதிக் கொண்டேயிருக்கிறார். தலையணை தலையணையாகப் புத்தகங்கள்.எப்படித்தான் சாத்தியமாகிறதோ? எல்லாமும் ஆயிரம் பக்கங்களுக்கு மேல். நானும் படிக்கக் கூடியவன்தான் என்கிற நம்பிக்கையில் எனக்கும் ஒன்று விடாமல் வந்து கொண்டேயிருக்கிறது. அவர் என் மீது வைத்துள்ள நம்பிக்கை எனக்குக் கூச்சத்தை விளைவிக்கிறது. இயன்றவரை முயல்பவன் நான். அவருக்கு என் நன்றி. அவரது முயற்சி வாழ்க...!
இப்போது கைக்குக் கிடைத்திருக்கும் நூல் “மிதந்திடும் சுய பிரதிமைகள்” (சீன இலக்கியம்) தமிழில் வடித்துத் தந்துள்ளார். இப்புத்தகத்தில் சீனத்துச் சிறுகதைகள்,சிங்கப்பூர் சீனச் சிறுகதைகள், என்று கண்டது எடுத்த எடுப்பில் என்னுள் உற்சாகத்தை வரவழைத்துவிட்டது. நிச்சயம் படித்து முடித்து விடுவேன் என்கிற நம்பிக்கையை ஏற்படுத்தியது. சீனக் கவிதைகள், சிங்கப்பூர் நவீன சீனக் கவிதைகள் என்று ஏராளமாய்க் கொட்டிக் கிடக்கின்றன இந்நூலில். ஆழ்ந்து ரசிக்கத் தக்க புத்தகம்தான் கைக்குக் கிடைத்திருக்கிறது என்கிற மகிழ்ச்சி.
சங்கக் கவிதைகளுடனான ஒப்பியல் ஆய்வுக்குப் பொருத்தமானதாக அமைந்துள்ள ஆதிகால சீனக் கவிதைகளி்ல் தொடங்கி தற்காலக் கவிதைகள் வரை அறிமுகமாகி, காலத்தைக் கடந்து நிற்கக் கூடிய அரிய தொகுப்பு இது என்கிற அறிமுகம் இப்புத்தகத்திற்குப் பெருமை சேர்க்கிறது.
கம்யூனிச யுகத்திலும், அதற்குப் பின்னரும் சீனத்தில் நேர்ந்திருக்கும் மாற்றங்கள், அவை சமூகத்தில் கொணரும் கோட்பாட்டு ரீதியிலான குழப்பங்கள் , கோட்பாடுகள் நடைமுறையில் எதிர்கொள்ளும் அபத்தங்கள் போன்றவற்றை அடையாளும் காட்டும் சிறுகதைகளையும் உள்ளடக்கிய முக்கியமான மொழிபெயர்ப்பு நூல் இது என்கிற தகவல் அவர்களின் இடைவிடாத முயற்சியை நினைத்து பிரமிக்க வைக்கிறது. சென்னை காவ்யா பதிப்பகம் வெளியிட்டுள்ளது இப்புத்தகத்தை. அவர்கள் இம்மாதிரித் தேடித் தேடித்தான் நல்லவைகளை,தரமானவைகளைச் சேர்க்கிறார்கள்.


09 அக்டோபர் 2016

2.10.2016 காந்தி ஜெயந்தி, மதுரை.

 

20161004_075439 - Copy20161004_075416 - Copy

 

20161004_07542420161009_12510820161009_12494920161004_07543920161009_12494920161004_07543920161009_125108 - Copy20161003_082102

20161004_075424 - Copy

 

 

 

 

மதுரை காந்தி மியூசியம் எதிரேயுள்ள ராஜாஜி பூங்காவில் நடக்கும் தினசரி யோகா வகுப்புகளில் கலந்து கொள்வது என்பது மனதிற்கும், உடலுக்கும் உகந்த ஒன்று.
புலன்களுக்கு வசப்படுதல் என்பது அக வலிமையை இழத்தல். இந்த மனம் மற்றும் உடல் மீதான கட்டுப்பாடுகளும், பயிற்சிகளும் நம்மை வலிமைமிக்கவனாக மாற்றுகின்றன. இது அண்ணல் காந்திஜி தன் வாழ்க்கை முழுவதும் தொடர்ந்து கண்டுகொண்டே இருந்த உண்மை.
உண்மையும் அஉறிம்சையும் புராதனமான மலைகளைப் போன்றது. முடிந்தவரை நான் அவற்றைக் கடைப்பிடிக்க முயல்கிறேன். அதன் மூலம் நான் வலிமை அடைந்து கொண்டேயிருக்கிறேன் என்றார் காந்திஜி.
நாங்கள் அந்தப் பூங்காவில் யோகப் பயிற்சிகளை மேற்கொள்ளும்போது காந்தி மியூசியத்திலிருந்து அண்ணல் எங்களை நோக்கி நடந்து வருவதுபோல் எனக்குத் தோன்றும்.
திங்கள் - படுத்த நிலை ஆசனம்.
செவ்வாய் - அமர்ந்த நிலை ஆசனம்
புதன் - நின்ற நிலை ஆசனம்
வியாழன் - த்ராட்டகான் - அதாவது கண் பயிற்சி
வெள்ளி - கலவையான பயிற்சிகள்
சனி - சூரிய நமஸ்காரத்தை அதிக எண்ணிக்கை செய்தல் மற்றும் வேகமெடுத்து ஆசனங்களை மேற்கொளல்.
ஞாயிறு - விடுமுறை

காலை நாலரை மணி முதல் ஐந்து நாற்பது வரை தமுக்கம் சாலையில் நடைப் பயிற்சி...நான்கு ரவுன்டுகள். பிறகு பூங்காவிற்கு வந்து படுத்த நிலையில் சற்று ஓய்வு. ஆறுமணிக்கு யோகப் பயிற்சிகள் ஆரம்பம்...ஏழுக்கு முடியும். ஏழு முதல் ஒரு பதினைந்து நிமிடங்கள் பிராணாயாமப் பயிற்சி
ஒவ்வொரு வகையில்.

வந்து சேருங்கள்...செய்து பாருங்கள். பிறகு அங்கேயே ஒன்றி விடுவீர்கள். இது சத்தியம்.


  சிறுகதை     -கணையாழி-பிரசுரம் பிப்ரவரி 2024                                    “சாமி என்கிற பரசுராமன்“             சா மியண்ணாவைக் கடற்...