30 ஜூன் 2014

“நித்யகன்னி”-எம்.வி.வெங்கட்ராம் நாவல்பற்றி.

 

 

download (1) download

 

இன்று (30.06.2014) படித்து முடித்த நாவல் ”எம்.வி.வெங்கட்ராம்” அவர்கள் எழுதிய “நித்ய கன்னி”. சரித்திரம் தொடங்கும்முன் என்று சொல்கிறார்களே அந்தப் பழைய காலத்தைப் பற்றியது இந்த நாவல். நம்முடைய இதிஉறாசத்தில் காணும் ஒரு குறிப்பை, ஒரு பொறியை ஊதி ஊதி தம் கற்பனையால், புதுமைகளும், அதிர்ச்சிகளும் கலந்து ஒரு நீண்ட சிறு காவியமாக நமக்கு அளித்திருக்கிறார் எம்.வி.வி.

விஸ்வாமித்ரரின் சீடன் காலவன். நல்ல அழகன். குருகுல வாழ்க்கை முடிந்ததும், குருதட்சிணை கொடுத்தே தீருவேன் என்று பிடிவாதம் செய்கிறான். பொறுமையிழந்த விஸ்வாமித்திரர் உடல் வெள்ளையாகவும், காதுமட்டும் கறுப்பாகவும் உள்ள எண்ணூறு புரவிகளைக் கொண்டு தருமாறு பணிக்கிறார். காலவன் யயாதி மன்னனிட் செல்கிறான். அவனிடம் அத்தகைய பரிகள் இல்லை. பதிலாக புதல்வி மாதவியைத் தானம் செய்கிறான். அவள் நித்ய கன்னி. ஒர குழந்தை பெற்றவுடன் முன்போலவே கன்னி ஆகிவிடும் அதிசய வரம் கொண்டவள். அவளை அடுத்தடுத்து மூன்ற அரசர்களுக்கு திருமணம் செய்வித்து அறுநூறு பரிகளைப் பெறுகிறான் காவலன். மீதிக் குதிரைகளுக்குப் பதிலாக விஸ்வாமித்திரரே அவளைக் கல்யாணம் செய்து கொண்டு ஒரு மகவு பிறந்ததும் விடுவிக்கிறார். இந்த அ வலங்களுக்கிடையே உயிரைப் போல ஒருவரையொருவர் நேசிக்கும் காலவனும் மாதவியும் எப்படி உணர்ச்சி வதைக்குள்ளாகிறார்கள் என்று இந்த நாவல் கூறுகிறது. அத்தோடு அந்தவிதமான தத்தளிப்பின் காரணங்களையும் ஆராய முயலுகிறது.

நாவலில் புதிய புதிய கேள்விப்படாத வார்த்தைகள் பல நமக்கு நிறையக் கிடைக்கின்றன. என்னதான் ஆகிறது பார்ப்போம் என்று கூடவே நாமும் நகர்ந்து விடுகிறோம். எப்படி எப்படியெல்லாம் விவாதித்தால் நாவலின் அந்தந்தக் கதாபாத்திரங்களின் மன நியாயங்களை, செயல்களை, நிலை நிறுத்த முடியும் என்று ரொம்பவும் அதீதமாகச் சிந்தித்து, சிந்தித்து அத்தியாயம் அத்தியாயமாக வடித்திருக்கிறார். 180 பக்கங்களே கொண்ட இந்த நாவலை ஒரு முறை படித்தால் போதாது. நன்றாக மனதில் நிறுத்த வேண்டுமானால் மீண்டும் ஓரிருமுறை படிப்பது என்பதுதான் சரி. காலச் சுவடு வெளியீடாக வந்துள்ள இந்த க்ளாசிக் வரிசை நாவல் இலக்கிய நண்பர்கள் அனைவரும் படித்து ருசிக்க வேண்டிய மிக முக்கியமான நாவல்.

14 ஜூன் 2014

எனது “நான் அதுவல்ல” சிறுகதைத் தொகுதிக்கு ஜூன் 2014 “உங்கள் நூலகம்” மாத இதழில் வெளிவந்த விமர்சனம்.

வழங்குபவர் – திரு.கி.மீனாட்சி சுந்தரம், தொழிலாளர் துணை ஆய்வர் (ஓய்வு) நெல்லை.





2014-06-14 15.57.08 2014-06-14 15.58.56


2014-06-14 15.58.32







ரு சிறுகதை என்பது சிறந்த படைப்பு என்பதை எப்படி மதிப்பிடுவது?
மனித மனத்தை செப்பனிடுவதற்காகவும் மனிதகுல மேம்பாட்டிற்காகவும் நல்ல விஷயங்களைச் சொல்ல முயன்று அதை உணர்த்துவதில் வெற்றி பெற்ற கதைகள் நல்ல கதைகள்.
அந்தவகையில் உஷாதீபனின் “நான் அதுவல்ல” சிறுகதைத் தொகுப்பிலுள்ள 19 கதைகளும் சிறந்த கதைகளே…!
கதையின் சாரத்தை அதில் சொல்லப்பட்டுள்ள சமூகச் செய்தியை, மனித விழுமியங்களை, எளிமையான, நேர்த்தியான நடையின் மூலம்வாசகர்களின் ஆன்மாவோடு பொருத்தி விடுகிறார்.
நாம் அன்றாட வாழ்க்கையில் சந்திக்கும் மனிதர்கள், குடும்பம், அலுவலகம், சமூகம், இவற்றில் நிகழும் நிகழ்வுகள் இவற்றை மையமாகக் கொண்டு வடிக்கப்பட்டுள்ள இக்கதைகள் வாழ்க்கையின் உன்னதத்தை உயர்த்திப் பிடிப்பவை.
வாழ்க்கை நெறியை மையமாக வைத்து எழுதப்பட்டுள்ள இக்கதைகள், இன்றைய பண முதன்மை சமூக அமைப்பில் விழுமியங்களை பாதுகாக்கும் பணியைச் செய்யும்.
நான் அதுவல்ல என்ற தலைப்பிலான கதை தவறான படைப்பைக் கொடுத்துவிட்டு அதற்கு சன்மானம் கிடைத்தவுடன் குற்ற உணர்விற்கு ஆட்பட்டு தன்னை சுயபரிசோதனை செய்து கொள்ளும் ஒரு எழுத்தாளனின் கதை. தவறான படைப்பு வேசியிடம் செல்வதற்கு ஒப்பானது என்ற உவமை படைப்பாளிக்கு ஏற்பட்ட குற்ற உணர்வின் கன பரிமாணத்தைக் காட்டுகிறது. சமூகத்தை நேசிக்கும் எழுத்தாளர்கள் நினைவில் பதிக்க வேண்டிய செய்தி.
தன்னில் கரைந்தவர் அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெறவுள்ள தொழிற்சங்கவாதியின் கதை. 2003-ம் ஆண்டின் அரசு ஊழியர் போராட்டத்தை இக்கதை ஞாபகப்படுத்துகிறது. ஒரு அரசு ஊழியர் என்பவர் பொது ஜன ஊழியர். அரசு ஊழியர் என்ற வார்த்தையே சரியானது அல்ல. பொது ஜன ஊழியர் என்பதே சரி. வேலை செய்தோம், சம்பளம் பெற்றோம், நமது ஊதிய உயர்விற்காகப் போராடினோம். இதில் சமூகத்திற்குச் செய்தது ஒன்றுமில்லை. ஓய்வுக்கான பிரிவு உபச்சாரம் இருக்குமா என்று வீட்டில் கேட்கும் கேள்வியும், தவிக்கும் மனமும், இக்கேள்வி எழுவதும், எதிர்பார்ப்பும் சரியா என்ற சுய கேள்வியும் அர்த்த புஷ்டியுடன் முன் வைக்கப்பட்டுள்ளது.
நுகர்வுக் கலாச்சாத்தில் மனமகிழ் மன்றம் போல் ஆகிவரும் சங்கங்களின் நிகழ்வுகளை வருத்தத்துடன் பதிவு செய்கிறார் ஆசிரியர். இக்கதையில் முக்கியமான இரு செய்திகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தச் சமூகத்திற்காகப் பணியாற்றிய அரசு ஊழியர், பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின் அவரது பொறுப்பை இந்தச் சமூகம் ஏற்றுக் கொள்கிறது. அதுவே ஓய்வூதியத்தின் தாத்பர்யம். எனவே ஓய்வூதியர் சமூகத்திற்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்ற செய்தியினையும், பெண்மைக்கு சமத்துவம் என்பது வீட்டு வேலையை பகிர்ந்து கொள்வதிலிருந்து துவங்க வேண்டும் என்பதையும் நுட்பமாகச் சொல்லியுள்ள கதை.
மேலிருந்து கீழ் வலமிருந்து இடம் – இக்கதையில் நிலவும் உலகமயச்சூழலில் பன்னாட்டு உள்நாட்டு நிறுவனங்களில் கடைப்பிடிக்கப்படும் “அமர்த்து துரத்து” (hire and fire) கொள்கையின் தாக்கம் அலவலகத்திற்குச் செல்லும் பணியாளரை செக்யூரிட்டி காரிடாரில் காத்திருக்கச் செய்யும் நிகழ்வு மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பணியிழந்த தொழிலாளர் வேணு கார்த்திக் காலம், நேரம், உடல் சோர்வு, மனச்சோர்வு, சொந்தச் சூழல் எதையும் பார்க்காமல் பணியாற்றுவதை எண்ணி சுய பச்சாதாபம் கொள்கிறார். பணம் முதன்மைப்படுத்தப்படும் பொழுது போற்றுதல்கள் மதிப்பிழக்கும் என்ற கருத்தைப் பதிவு செய்கிறார் ஆசிரியர். முதலாளித்துவம் லாபத்தை அடிப்படையாகக் கொண்டது. அங்கே மனிதன் இயந்திரமாகப் பார்க்கப்படுவான். அங்கே மனித மதிப்புகளுக்கு இடமில்லை. சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் கதையின் நாயகன் வேணு கார்த்திக் போன்று நித்தம், நித்தம் வேலையிழப்பவர்கள் உண்டு. உலகமயத்தில் இந்தியத் தொழிலாளர் நிலைமையையும், அமைப்பின் தேவையையும் இக்கதை வலியுறுத்துகிறது.
மனக்குப்பை – குப்பை அள்ளும் தொழிலாளி ஆண்டியை பக்கத்து வீட்டுக்காரர் சாதியைச் சொல்லித் திட்டி விடுகிறார். இந்தப் புள்ளியிலிருந்து கணவன் மனைவி உரையாடலாக பின்னப்பட்டுள்ளது இக்கதை. சாதிய அடுக்குகளால் ஆன இந்தியச் சமூகத்தையும், மனிதனின் மனதில் பதிந்துள்ள சாதி மத அழுக்குகளை மனக்குப்பை என்று சுட்டிக்காட்டியிருப்பது சாலப் பொருத்தம்.
குப்பை அள்ளும் தொழிலாளியாய் இருந்தால் என்ன? அவரும் மனிதன்தானே? அவரை மரியாதையாகத்தானே நடத்த வேண்டும் என்று மனைவி சாரதா சொல்வதாக அமைந்துள்ள உரையாடல் தனிச்சிறப்பு. தொழிலையும் தொழைிலாளியையும் (dignity of labour) மதிக்கும் சிறப்பு பளிச்சிடுகிறது.
உரையாடலின் ஊடே இன்றைக்கு நாமெல்லாம் எவ்வளவோ திருந்திட்டோம். இந்த மாதிரி நடவடிக்கைகள் இன்னைக்கு பரவலாக தீவிரமா மற்றவங்ககிட்டேதான் நிறைஞ்சிருக்கு, அதையும் புரிஞ்சிக்கணும் என்ற பதிவு இடைநிலை சாதியினரின் ஆதிக்கத்தை லேசாகச் சுட்டிக்காட்டிச் செல்கிறது. ஆதிக்க மனோநிலை எங்கிருந்தாலும் தவறு என்று சுட்டிக்காட்டியிருப்பது காலத்திற்குத் தேவையான நல்ல அம்சம்.
“கல்லை மட்டும் கண்டால்“ புத்தக வாசிப்பை, வாசிப்பு அனுபவமிக்க ஒரு முதியவர் மூலம் சொல்லும் கதை.
பழைய பேப்பர் கடைக்குப் போட்டுவிடக் கூடாது என்ற அச்சத்தில் புத்தக மூட்டையைச் சுமந்து நூலகத்தில் ஒப்படைக்கவரும் முதியவர் மூலம் புத்தகங்கள் சமுதாய முன்னேற்றத்தின் ஆவணங்கள், அவைகள் பாதுகாக்கப்பட வேண்டும், வாழ்க்கையைப் புரட்டிப் போடும் வல்லமை புத்தகங்களுக்கு உண்டு என்ற அருமையான கருத்து எளிமையான நடையில் முன் வைக்கப்பட்டுள்ளது.
இதை வீசைக்குப் போடுறதும், நான் தூங்குறபோது என் தலைல கல்லைத் தூக்கிப் போடுறதும் ஒண்ணுதான்னு தூக்கிட்டு வந்துட்டேன் என்று முதியவர் கூறுகிறார். கதையைப் படித்துக் கொண்டிருந்த கணத்தில் துணுக்குற்று நின்று விடுகிறோம். வாசிப்போடு இணைந்த பெரியவரின் வாழ்க்கை நெஞ்சை நிறைக்கிறது.
காவல் – பாலைத் திருடும் பூனையைச் சுற்றி இக்கதை புனையப்பட்டுள்ளது. பூனை சினை என்று பால்காரர் மூலம் தெரிந்ததும் கணவன் மனைவி இருவர் மனமும் பச்சாதாபம் கொள்கிறது. பூனையை விரட்டிய மனது வேதனை அடைகிறது. கண்கள் கலங்க பூனையைப் பார்த்துக் கொண்டிருந்த திவ்யாவைக் கண்டு ஒரு கணம் தடுமாறினேன் நான். அது ஏன் அப்படி என்று எனக்குத்தான் தெரியும் என்று கணவன் நினைத்துக் கொள்வதாகக் கதை முடிகிறது. குழந்தைப்பேற்றின் ஏக்கத்தை, அது தரும் இன்பத்தை இந்த ஒரு வரி மூலம் உணர்த்தியிருப்பது அற்புதம். காக்கை, குருவி, அணில், இவை கதையில் ஊடும் பாவுமாக வந்து செல்கின்றன. சகல உயிரினங்களையும் வாசிக்கக் கற்றுக் கொண்டவன்தான் மேலான வாசகன் என்று மறைந்த முதுபெரும் படைப்பாளி சுந்தர ராமசாமியின் கூற்று ஆசிரியரின் என்னுரையில் வருகிறது. இக்கருத்தையும் வாசக மனதில் பதியச் செய்கிறது இக்கதை.
பிரகிருதி – இக்கதைக்கான களம் நூலகம். அங்க வந்து செல்லும் வாசகர்கள். நூலகம் அமைதிக்கான இடம். படிப்புத்தவம் இயற்றுவதுடன் அங்கே மௌனத் தவமும் அரங்கேறுகிறது. கட்டுப்பாடின்றித் தன்னிச்சையாய்ச் சில புத்தகங்களை மடியில் எடுத்து வைத்துக் கொள்ளும் புத்தகக்காரர் என்ற பாத்திரம் மூலம் நூலக ஒழுங்கை வாசகர்கள் பின்பற்ற வேண்டிய அவசியத்தை நயம்படச் சொல்கிறது இக்கதை.
காப்புரிமை – மனிதன் ஒரு mixed bag. குற்றம் குறை கண்டால் மனித சமூகத்தில் உறவு, நட்பு மிஞ்சாது.இருவரும் பணி புரியும் மத்திய தர வர்க்கக் குடும்பங்களில் வேலைக்காரியும் நம்மில் ஒருவராகி விடுவது உண்டு. ஒரு சிறு தவறுக்காக வேலையை விட்டு நீக்கி விட்டுத் தவிக்கும் மனம், புலம்பல், வாஞ்சையான வார்த்தைகளால் மனித உறவுகளின் மேன்மையைச் சொல்கிறது இக்கதை.
“மீண்டும் பஞ்சமி“- - மனப்பிறழ்வுக்குள்ளானவர்களின் வாழ்க்கை அவலங்களைச் சொல்லும் கதை. காலித்துக் கைவிடப்பட்ட ஒரு குழந்தைக்கு் தாயான பஞ்சமி மனப்பிறழ்வுக்கு உள்ளாகித் தெருவில் அலைகிறாள். குடும்பம் சிதைந்து போகிறது. பெண்களை போகப் பொருளாகக் கருதும் ஆணாதிக்க சமூகத்தைச் சாடுகிறது இக்கதை. மனப்பிறழ்வுக்கு உள்ளாகும் ஒரு ஆண் அநாதையாய்த் தெருவில் இறந்து போகிறார்.. கதை சொல்லப்பட்டுள்ள விதம் நெஞ்சைப் பிழிகிறது.
வெள்ளாடு – அரசு அலுவலகங்களில் புறையோடிப் போயுள்ள லஞ்சம், ஒழுங்கற்ற தன்மை, பொறுப்பற்ற பேச்சு, நேர்மையானவர்களுக்கு இழைக்கப்படும் அநீதி, இவற்றிற்கிடையே மாசற்ற சேவை செய்யும் பணியாளர் ரமணன், பியூன் கௌஸ்பாய் இவர்களுக்கிடையே நடக்கும் உரையாடல், நேர்மைக்குப் பரிசாகக் கிடைக்கும் பிரிவு மாறுதல், இன்றைய அரசு அலுவலகங்களின் நிலையை இக்கதை படம் பிடித்துக் காட்டுகிறது.
இன்றைய சமூகத்தில் முதியவர்களின் நிலையைச் சொல்லும் “அசையாச் சொத்து” கணவன் மனைவி குழந்தைகள் உறவைச் சொல்லும் ஸ்ருதி லயம், அப்பா அம்மா நான், இம்மாதிரிஅனைத்துக் கதைகளும் உள்ளத்தைத் தொட்டு ஒவ்வொரு செய்தியைச் சொல்லிச் செல்கின்றன. நீங்களும் படியுங்கள். இயல்பாகச் சொல்லப்பட்டுள்ள இக்கதைகளிலிருந்து புதிய புதிய சமூகச் செய்திகள் கிடைக்கும்.
--------------------------------------------------------

10 ஜூன் 2014

ஏப்ரல் – ஜூன் 2014 “தளம்” காலாண்டிதழில் வெளிவந்துள்ள எனது “நிலைத்தல்” சிறுகதை


“மௌனம் சம்மதத்திற்கு அறிகுறிங்கிற பழமொழி. எல்லாருக்கும் பொருந்துமாங்கிறதை யோசிக்க வேண்டிர்க்கு… - இப்படிச் சொல்லிவிட்டு சந்திரன் அவளையே உற்றுப் பார்த்தான். அதைச் சொல்லி நீ தப்பிக்க முடியாது என்பதை அவள் உணர வேண்டும். அதுதான் அவனின் இப்போதைய தேவை.
மாதுரி தலை குனிந்திருந்தாள். அவனை நிமிர்ந்து நோக்குவதா வேண்டாமா என்றிருந்தது. தான் மௌனமாய் இருந்தது உண்மைதான். அந்த மௌனத்தை இப்படி அர்த்தப்படுத்துவான் என்று அவள் எதிர்பார்க்கவேயில்லை.
மௌனம்ங்கிறது இரட்டை மன நிலையோட சாட்சி. மனசு ஒரு விஷயத்தை விரும்பலை. ஆனாலும் அதை வெளிப்படையா சொல்ல விருப்பமில்லை. அதே சமயம் குறிப்பிட்ட விஷயத்தோட நியாயம் அதை எதிர்க்க முடியாத நிலையை ஏற்படுத்துது. அங்கே மௌனம் உதவுது. அப்படி இருக்கிறது மூலமா எதிராளியைக் குழப்பத்தில் ஆழ்த்தலாம். தன் முடிவைத் தெரிவிக்காததன் மூலமா ஒத்துப் போகாத நிலையை ஏற்படுத்தலாம். பின்னால் விஷயம் பெரிசானா, நான்தான் ஒன்றும் சொல்லவில்லையே என்று கூறி எதிர்க்கவில்லை என்பதான தோற்றத்தை ஏற்படுத்தித் தப்பிக்கலாம்.
வாழ்க்கையில் பல சமயங்களில் மௌனம் தப்பிப்பதற்கு ஏதுவான ஒரு சாதனமாய், சாதகமாய் அமைகிறது. மௌனம் சண்டைகளைத் தவிர்க்கிறது. பரஸ்பரக் கோபங்களை ஆற்றுகிறது. பிரச்னையை ஆறப்போடுவதற்கு உதவுகிறது. ஒத்திப்போட்டு ஒன்றுமில்லாமல் செய்வதற்கு வழி வகுக்கிறது. மறதிக்கு ஏதுவாக்குகிறது. யார் ஜெயித்தது என்ற தேடுதலில் நீ தோற்றாய் என்று மனதுக்குள் நினைத்து ஆறுதல்பட்டுக்கொள்ள உதவுகிறது. இந்த முறையும் என்னை நீ வெல்லவில்லை என்று சொல்லாமல் சொல்லத் தோதளிக்கிறது. இதெல்லாவற்றையும் யார் பக்கம் நியாயம் என்பதைத் தீர்க்கவொண்ணாமல் அந்தரத்தில் தொங்கப் போடுவது அதீத வசதியாய் இருக்கிறது.
இம்மாதிரி ஒரு வழிமுறை மூலம் அவனை அடிக்கடி பழி வாங்கியிருக்கிறாள் அவள். இந்தக் குறிப்பிட்ட விஷயத்தில் இத்தனை காலம் ஓடிப்போனதே அவளின் இந்த சாமர்த்தியத்தினால்தான். அதுவே அவளின் வெற்றி. முக்கியமான பிரச்னைகளைப் பேசும்போதெல்லாம், அவன் தன்னுடன் விவாதிக்க விஷயத்தை முன் வைக்கும் போதெல்லாம் அவனின் அபிப்பிராயங்களுக்கு பதில் சொல்லாமல், அல்லது மறுத்துப் பேசாமல், தன் கருத்து எதுவாயினும் எல்லாவற்றிற்கும் மிஞ்சியவளாய் “சரி, வேண்டாம்“ என்ற ஒற்றைச் சொற்களிலோ, “வேறே பேசலாமே“ என்று சொல்லியோ அவள் தப்பித்திருக்கிறாள். அதன் மூலம் அவன் சொல்லிய விஷயம் அல்லது சொல்ல வந்த விஷயம் தன்னால் கணத்தில் புரிந்து கொள்ளப்பட்டு அது தனக்குப் பிடிக்காதது என்பதாகவோ, இந்த மாதிரிப் பேச்சுக்களைப் பேசிக்கொண்டு என்னிடம் வராதீர்கள் என்கிற ரீதியிலேயோ அந்தக் கணத்திலேயே அவள் ஸ்தாபித்ததன் மூலம் அவனை வெற்றி கொண்டதாகவும், தன் கண்ணெதிரிலேயே அவனை உடனுக்குடன் அவமானப்படுத்தியதாகவும், எண்ணி இறுமாந்திருக்கிறாள்.
இதையெல்லாம் மாரடிப்பதற்கா நான் உனக்கு வாழ்க்கைப் பட்டேன் என்பதாகவும், இந்தச் அல்பங்களையெல்லாம் கேட்டுக் கொண்டிருக்க எனக்கு நேரமில்லை என்ற பொருளிலும் அவனை, அவன் பேச்சை உடனடியாகப் புறக்கணிப்பது என்பது அவளுக்குப் பெருத்த ஆறுதல் அளிக்கும் விஷயமாக இருந்தது. இருந்து கொண்டுமிருக்கிறது.
ஆனால் ஒன்று. எத்தனை முறை இப்படி நடந்தாலும் அவன் அயரவில்லை என்பதுதான் இங்கே கவனிக்கப்படவேண்டிய ஒன்றாக இருக்கிறது. அதுதான் அவளை இன்றுவரை அவன் சார்பில் யோசிக்க வைக்கும் விஷயமாக முடிவுறாமல் இருந்து கொண்டிருக்கிறது.
இத்தனைக்கும் அவன் தன் மேல் தீர்க்க முடியாத மையல் கொண்ட ஆடவனாகவும் தெரியவில்லை. வயதுக்கேற்ற வேகமும், சில்மிஷங்களும், நேரம் காலமறியாத தொந்தரவுகளும், சீண்டல்களும், அவனிடம் என்றுமே இருந்ததில்லை.
அவனைப் பொறுத்தவரை குறிப்பிட்ட விஷயங்களில் காண்பிக்கும் நிதானமும், பொறுமையும், ஆணித்தரமான அடியெடுப்பும், அவளை பிரமிக்கத்தான் வைக்கிறது. இதில் நீ மறுப்புச் சொல்லியும் பயனில்லை, நடக்க வேண்டியது நடந்தே தீரும் என்கிற அவனது தீர்மானம் அதுநாள் வரையிலான மௌனங்களின் மூலமான தப்பித்தல்களை சுக்கு நூறாக உடைத்துச் சிதறடித்திருக்கிறது.
எந்த மௌனத்தின் மூலமாக அவனிடமிருந்து தன்னை உயர்த்திக் கொண்டாளோ அல்லது அப்படி நினைத்துக் கொண்டாளோ அந்த மௌனங்களின் ஒட்டு மொத்தமான யதார்த்தத்தையே தன்னின் முழுப் பலமாகக் கொண்டு அவன் இப்போது உயர்ந்து நிற்பதை அவள் உணர்ந்தாள்.
அதுநாள் வரையிலான அவனின் கருத்தான சேமிப்பாகத் தோன்றியது அது. இன்னும் எத்தனை காலங்களானாலும், இந்த மதிப்பான ஒன்றை மட்டும் நீ உடைத்தெறியவே முடியாது, அது நீ விரும்பினாலும், விரும்பாவிட்டாலும், நடந்தே தீரும் என்பதாக அவன் தீர்மானமாய் இருப்பது அவளுக்குள் மெல்லிய நடுக்கத்தைப் பரவவிட்டு, இந்த விஷயத்தில் தான் தோற்றுத்தான் போய்விட்டோமோ என்பதாக அவளின் எண்ணங்களை மெல்ல மெல்லச் சிதறடித்துக் கொண்டிருந்ததை அந்தக் கணத்தில் அவள் உணரத் தலைப்பட்டாள்.
மௌனம்ங்கிறது பல சமயங்கள்ல ஒத்திப் போடலுக்கு வேணும்னா வழி வகுக்கலாம். ஆனா அதுவே தீர்வா என்றுமே இருந்ததில்லை. அதை பலவீனம்னு புரிஞ்சிக்கிறதுக்கும் வாய்ப்பிருக்கு. …
நான் பேசினா அனாவசியமா சண்டைதான் வரும்…? உங்க இஷ்டப்படி செய்யுங்கோ…
இப்படிச் சொல்வதன் மூலம் தான் சதா சண்டை போடுபவன் என்பதை அவள் நிர்மாணிக்க முயல்கிறாளா? அப்படிச் சொல்லி தன்னை இதிலிருந்து விடுவித்துக் கொள்ள வழி வகுக்கிறாளா? அல்லது தானே நிதானமாக விஷயத்தை நோக்குபவள் என்று சொல்லாமல் சொல்லி தன் இடத்தைத் தக்க வைத்துக் கொள்கிறாளா?
என் இஷ்டப்படி செய்றதுங்கிறது அடாவடியில்லை. அதிலிருக்கிற நியாயம். அதுக்கு மறுப்பு வரும்னா அதை அடாவடியாத்தான் செய்தாகணும்…
நியாயம்ங்கிறது ஒரு சார்பானதில்லையே…ஒருத்தருக்கு நியாயமா இருக்கிறது இன்னொருத்தருக்குத் தப்பா தோணலாம். வேறொரு பார்வை இருக்கலாம். அதை நீங்க ஒத்துக்கப் போறீங்களா? நிச்சயமா இல்லை. எதுக்கு வீண் பேச்சு?
ஒவ்வொரு முறையும் இப்படிச் சொல்லித்தான் தன்னிடமிருந்து விலகியிருக்கிறாள். ஒன்று மட்டும் நன்றாகத் தெரிகிறது. எப்படிப் போராடியேனும் தன் கருத்தை நிலை நிறுத்தியே ஆக வேண்டும் என்கிற பிடிவாதம் இல்லை. ஆனால் அதே சமயத்தில் நீ சொல்லும் எல்லாவற்றிற்கும் தலையாட்ட நான் தயாரில்லை என்ற கருத்து மட்டும் ஆணித்தரமாக இருக்கிறது.
அவளைப் பொறுத்தவரை தனது கருத்துக்கள் எல்லாவற்றிற்குமே ஏறக்குறைய மறுப்பு இருந்துதான் வந்திருக்கிறது. எதில் ஒத்துக் போகிறாள் என்பதாக நினைத்து நினைத்துப் பல சமயங்களில் இவன் குழம்பிப் போயிருக்கிறான். தன்னை அவ்வாறு குழப்பத்தில் ஆழ்த்திவிட்டுத் தள்ளியிருந்து அதை ரசிப்பதே அவள் வேலையாய்ப் போய்விட்டது.
தலை குனிந்து தன் வேலையில் கண்ணும் கருத்துமாய் இருப்பது போலவும், அதன் மூலமே தன்னை முன்னகர்த்தி மேலே சென்று விட்டது போலவும் கருதிக் கொள்கிறாளோ?. இடையிடையில் தன்னை நோக்குகிறாளோ என்றும் நினைத்திருக்கிறான். ஒரு பார்வை தற்செயலாய் இவன் அவளை நோக்கிய அதே கணத்தில் அவளிடமிருந்தும் வந்தது. லேசாய்ச் சிரித்துக் கொண்டதுபோலவும் இருந்தது. அது என்ன அலட்சியச் சிரிப்பா? கேலிச் சிரிப்பா? அல்லது நீ இப்படி அலைவாய் என்பது எனக்குத் தெரியும் என்பதான கெக்கலியா?
இப்போதும் அவளின் மௌனம் அவனுக்கு இப்படியான அர்த்தங்களைக் கற்பிக்கத்தான் செய்தது. ஒன்று மட்டும் உண்மை. தன்னை மீறி எதுவும் நடந்து விடுவதற்கில்லை. அதுதான் தன்னின் ஒழுக்கமும், நேர்மையும்பாற்பட்ட விஷயம்.
நீ சொல்வது நியாயமாய் இருந்தால் தண்டனிட்டுக் கேட்பேன். அல்லாமல் வெறுமே கண்ணை மூடிக் கொண்டு எதையும் ஏற்க முடியாது. என் செயலில் அப்படியான முரண்களை நீ கண்டறிந்தாலும் அதை நீ தாராளமாக வெளிப்படுத்தலாம். தவறிருந்தால் களையப்படும்.
எல்லா விஷயங்களுக்கும் அடிப்படையான நியாயம் என்று ஒன்று உண்டு. அது என்றைக்குமே மாறாத ஒன்று. மனிதனுக்கு மனிதன் நியாயங்கள் மாறி விடுவதில்லை. சிலசூழல்களால் அது தடுமாறுவது உண்டு. அங்கேயும் இறுதியாக நிலைப்பது ஒரு செயலின் நேர்மையே. ஒரு விஷயத்தின் நியாயமே. நீ என் மனைவி என்பதற்காக உன் குணக்கேடு சார்ந்து கெடுக்க முடியாது. அதை நீ உணர்ந்துதான் ஆக வேண்டும். உன்னை மாற்றிக் கொண்டுதான் ஆக வேண்டும். பதிலாக உன் மன வக்கிரங்களை இதில் பாய்ச்ச முடியாது. கண்களை மூடிக் கொண்டு நானும் அதற்கு உடன்பட முடியாது. எந்த அம்பினையும் பயன்படுத்தி நீ என்னை வீழ்த்தி விட முடியாது. அது நாகாஸ்திரமாக இருந்தாலும் சரி.
சூழலைப் புரிந்து கொள். தேவையை உணர்ந்து கொள். காலத்தின் கட்டாயத்தை அறி. உன்னை மாற்றிக் கொள்ள முயல். இல்லையேல் நஷ்டம் உனக்குத்தான். நான் உன்னை வீழ்த்த வேண்டியதில்லை. காலம் அந்தப் பணியைச் செய்யும். வீழ்ந்துபட்ட வேதனையை நீயே அனுபவித்து முடிப்பதுதான் உன் மனசாட்சிக்கான தண்டனை.
காலம் எல்லா மனிதர்களையும் நோக்கிக் கேள்விகளை வீசும். எவனும் அவனவன் செயல்களுக்கு, தவறுகளுக்கு, பதில் அளிக்காமல் விடை பெற முடியாது. குறைந்தபட்சம் அதற்கான தண்டனையையாவது அனுபவித்துத்தான் அவன் மரித்தாக வேண்டும். பாபங்களைச் சேர்க்காதே. பண்புகளைச் சேர்….. அதனால் கிடைக்கும் நற்செயல்களை நிறைவேற்று. குறைந்தபட்சம் அதற்கு முயலவாவது செய். முரணாக நிற்காதே.….
கையில் பிடித்திருந்த அந்தக் காகிதம் மெலிதாக நடுங்குவதைக் கண்ட அவள் தன் கைதான் அப்படி நடுங்குகிறது என்பதை உணர்ந்து அடக்கிக் கொள்ள முயன்றாள்.
மனதில் தோன்றுவதையெல்லாம் எழுதி வைத்து விடுபவன் அவன். வாய் விட்டுப் படபடத்துத்தான் மன வேகத்தைத் தணித்துக் கொள்ள வேண்டும் என்கிற அவசியமில்லை. எழுத்து அவனுக்கு ஒரு வடிகால். அவனிடமிருந்து தப்பிக்க முடியாது. இரும்பு மனிதன் அவன். நினைத்ததை நிறைவேற்றியே தீருவான். அது உலக நியாயம் என்று கருதுபவன். கடவுளே முன்னால் உதித்து கொஞ்ச காலம் தள்ளிப்போடு என்றாலும் அவனிடம் ஆகாது.
அன்பினாலும், தியாகத்தாலும்தான் வசப்படுத்த முடியும். வெறும் உடம்பைக் காட்டியோ, சரிநிகர் சமானத்தைக் காட்டியோ அடி பணிய வைக்க முடியாது. சரி என்றால்தான் சிரமேற்கொண்டு ஏற்றுப் பாதுகாப்பான். முரண்டினால் முறுக்கிப் பிழிந்து விடுவான்.
உலகம் அன்பு வலையினால் பின்னப்பட்டிருக்கிறது என்று அடிக்கடி சொல்பவன். அதற்குக் கட்டுப்படாத ஜீவராசிகளே கிடையாது என்பான். அது ஒன்றினால்தான் இவனை அசைக்க முடியும். மற்றவை இவனிடம் செல்லாது. உணர்ந்தாள் மாதுரி.
சரி, உங்க இஷ்டப்படி செய்ங்கோ…என்றாள்.
இது என் ஒருவனோட இஷ்டம் மட்டும் இல்லை….உலக இஷ்டம்….காலகாலமான கலாச்சார இஷ்டம்….குடும்பங்கிற கட்டமைப்புக்கான இஷ்டம்….காலச் சக்கரம் சுழலும்ங்கிற வாழ்க்கை நியாயத்துக்கான இஷ்டம்…எல்லாருக்கும் பொதுவான இஷ்டம். வாழ்க்கைத் தத்துவத்தை வரையறுத்த இஷ்டம்…இன்று எனக்கு நாளை உனக்கு என்று சக்கரம் சுற்றும்.இன்று போய் நாளை வரும். கண்டிப்பாய் வரும். யாரும் தப்பிக்க முடியாது. எழுதித்தான் வைத்திருந்தான் இதையும்.
இதுதான் முடிவு என்று அவன் வரையறுத்து எழுதியது பிரம்மனின் எழுத்து. அதை மாற்ற இயலாது.
அவன் கிளம்பினான். எதற்காக? எந்த நல்லது நடந்தாக வேண்டுமோ அதற்காக. எந்தக் கடமையை நிறைவேற்றியாக வேண்டுமோ அந்த நற்செயலுக்காக. அவரவர் மனதில் எது தோன்றுகிறதோ அந்த நல்லவைகளுக்காக.
சம்மதித்துத்தானே ஆக வேண்டும். வேறு வழியில்லையே. இது அவனுக்கு முன்பே தெரியும். இருந்தாலும் அதை அவள் உணர வேண்டும் என்பதிலும் அவனுக்கு ஒரு நியாயம் இருந்தது.
அவள் என்னவள். அதனால் விட்டுவிட முடியாது. அம்மாவும் அதைத்தானே சொன்னாள் இது நாள்வரை.
அவளுக்கு எல்லாமே நீதானே…உன்னை விட்டு அவ எங்க போவா…அன்பா, அனுசரணையா வச்சிக்கோ….
அன்பின் திருவுருவம். அறநெறியின் இருப்பிடம். மாசற்ற மாணிக்கம். கண்களில் நீர் பனிக்கிறது இவனுக்கு.
இந்த உலகம் அன்பு வலையினால் பின்னப்பட்டிருக்கிறது. அம்மாவின் வார்த்தைகள் மீண்டும் இவன் மனதில்.
--------------------------------------------

09 ஜூன் 2014

“தண்ணீரும் கண்ணீரும் ”– 02.06.2014 தினமணி நாளிதழ் சென்னைப் பதிப்பில் வெளியான எனது கட்டுரை

கோயிலில்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பது பழையமொழி. தண்ணீரில்லா ஊரில் தங்கியிருக்க வேண்டாம் என்பது இப்போது உருவாகிப்போன புது மொழி. எங்கள் மதுரை மாநகரம் அப்படித்தான் இப்போது ஆகிவிட்டிருக்கிறது. நிறையப்பேர் அங்கங்கே வீடுகளைப் பூட்டிப் போட்டுவிட்டு இடம் பெயர்கிறார்கள். இருபதாண்டு. முப்பதாண்டு என்று வாழ்ந்து கழித்த வீட்டை விற்று விட்டுக் கிளம்புகிறார்கள். இடம் பெயறும் இடத்தில் இன்னும் கொஞ்ச காலத்திற்கு சமாளிக்கலாம் என்ற நம்பிக்கையில் நகர்கிறார்கள்.
சாதாரண ஜனம் தண்ணீருக்கு லோ லோவென்று அலைகிறது. பாடாய்ப் படுகிறது. உனக்கு எனக்கு என்று அடிபிடியில் இருக்கிறது. ஒரு குறிப்பிட்ட இடத்தில் பதினைந்து நாளுக்கு ஒரு முறையேனும் தண்ணீர் லாரி வருகிறதென்றால் அங்கே கூடும் கூட்டமும் வரிசைப்படுத்தும் காலிப் பிளாஸ்டிக் குடங்களும் கண்கொள்ளாக் காட்சி. ரசிக்கவா முடியும் அந்த வண்ணக் கோலத்தை? ரத்தம் வடிகிறதய்யா ரத்தம் வடிகிறது. எம் மக்கள் படும்பாடு சொல்லி மாளாது…!
நான் குடியிருக்கும் பகுதி ஒரு காலத்தில் அத்தனை செழிப்பு. கிணற்றில் குனிந்து கையால் தண்ணீரை அள்ளலாம். கற்கண்டாய் இனித்தது. இன்று எண்ணெயும் நுரையுமாய், என்ன இது? தண்ணீரா அல்லது பூமியின் கண்ணீரா? பத்து நிமிடம் ஓடிய மோட்டார் இன்று ஒரு மணி நேரத்திற்கும் மேலாய் ஓடினாலும் வெறும் காற்றுத்தான் குழாய்களின் வழியே பயணிக்கிறது.
எங்கள் பகுதியில் தண்ணீரைக் காசு கொடுத்து வாங்க, மக்கள் எப்போதோ பழகியாயிற்று. நான் சொல்வது பாட்டில் தண்ணீரை அல்ல. கேன் தண்ணீரை. அது எந்த அளவுக்கு சுத்தம்? என்ற கேள்வி இருந்துகொண்டேயிருக்கிறது. சுடவச்சுக் குடிக்க வேண்டிதான்….என்று சொல்லிக் கொள்கிறார்கள்.
மினி லாரிகளில் தண்ணீர் அடிக்க எப்போதோ ஆரம்பித்தாயிற்று. எப்போதும் லாரிச் சப்தம்தான். இரவு பகல் என்ற கணக்கே இல்லை. மக்களிடம் காசு இருக்கிறதையா? காசு இருக்கிறது. அப்டித்தானே சொல்றாங்க…? கொடுக்கிறாங்க, வாங்கிக்கிறாங்க….இதிலென்ன அதிசயம்…? அப்படித்தானே விலைவாசிகளும் ஏறுகின்றன? அப்படித்தானே பஸ் கட்டணங்களும், மின் கட்டணங்களும் ஏறின?
அது கிடக்கட்டும். இத்தனை தண்ணீர் லாரிகள் எங்கேயிருந்து முளைத்தன? பார்த்தால் எல்லாம் பழைய லாரிகள் போல் இருக்கின்றனவே? வெகு நாளாய் இந்தத் தொழிலில் இருக்கிறார்களோ? இந்த லாரியைக் கழுவுவார்களா? அல்லது அப்படி அப்படியே தண்ணீரை நிரப்பி எடுத்து வருவார்களா? உள்ளே தேங்கிக் கிடக்கும் கசடுகளை நீக்குகிறார்களா இல்லையா? ப்ளீச்சிங் பவுடர் போட்டுக் கழுவுவார்களா? தண்ணீரின் மூலமாய்த்தானே எல்லா வியாதிகளும் பரவுகின்றன? அடக் கடவுளே…! இந்த மக்களுக்கு ஏதும் செய்யாமல் இருக்க வேண்டுமே…!
அதெல்லாம் க்ளீனா இருக்கும் சார்….அப்படியெல்லாம் நீங்க நினைக்கவே வேணாம்…. – பதில் அழகாய்த்தான் வருகிறது. பேசக் கற்றவர்கள். பேசுகிறார்கள்.
நுரையே வரல்லே கவனிச்சீங்களா…? அழுக்குப் போகமாட்டேங்குது…வழவழன்னு இருக்கு சார்…. – எதிர் வீட்டுக்காரரின் புலம்பல்.
போகும், வரும் லாரிகளில் செல் ஃபோன் எண் எழுதப்பட்டிருக்கிறது. கண்ணிலிருந்து அது மறையும் முன் பரபரப்போடு குறித்து வைத்துக் கொள்கிறார்கள். எங்கே அதுவும் கிடைக்காமல் போகுமோ என்று? போகும், இதுவும் கடந்து போகும்…இலக்கிய வசனமெல்லாம் சொல்றதுக்கு நல்லாத்தான் இருக்கு. யதார்த்தம்?
இன்று கொஞ்சம் சமாளிக்கிறோம், நாளை? என்று மிகச் சிலர். என்னத்தச் சமாளிக்கிறது? அதான் பொட்டுத் தண்ணியில்லையே? லாரிலதான் அடிச்சிட்டிருக்கேன்….என்று மேல் தொட்டியின் அளவிற்கேற்றாற்போல் கேட்ட காசைக் கொடுத்தனுப்பும் அப்பாவிகள். வேறு வழி? நம் வயிற்றுக்குச் செலவழிப்பதை விட, இன்று தண்ணீர், மின்சாரம் என்று கொடுப்பதுதான் அள்ளிக் கொண்டு போகிறது…!
வயிற்றுக்குச் சோறிட வேண்டும்…இங்கு வாழும் மனிதருக்கெல்லாம் பயிற்றுப் பல கல்வி தந்து…….
அதெல்லாம் பழைய பாட்டுங்க…..யாருக்கு வேணும்…? யதார்த்தத்தைப் பாருங்க சார்…..
தொட்டிக்கு எவ்வளவுங்க…?
2000 லிட்டர்…..350 லேர்ந்து 400 சார்….
என்னப்பா, ரொம்ப அநியாயமா இருக்கு…? பார்த்துச் சொல்லுய்யா….சின்னத் தொட்டிதான…?
இங்கேயிருந்து Nஉறாஸ் இழுத்து மேலே மாடில தொட்டில இறக்கணும்ல சார்….எழுநூற்றம்பது ஆகும் சார்……உங்க வீட்டுத் தொட்டி பெரிசு சார்….! – ரெடிமேடான பதில்.
அது என்ன கணக்கோ…? என்ன நார்ம்ஸோ….மனதில் தோன்றியதுதான் ரேட்…..
அது சரி, எங்கேயிருந்து கொண்டாறீங்க…..?
அது முப்பது நாப்பது கி.மீ. போகணும் சார்…..போகிறார்கள். வருகிறார்கள். அங்கே என்று இல்லாமல் போகுமோ? உனக்கு எனக்கு என்று அடிதடி எப்போது கிளம்புமோ? குடுமிப்பிடிச் சண்டை வெகு விரைவில்.
எங்கள் பகுதியில் ஒரு பெரிய கண்மாய் இருந்தது. கரையில் ஒரு அய்யனால் கோயில். ஆண்களும், பெண்களும் அள்ளிக் குளித்த காலம். கரையேறி அய்யனாரை வணங்கி பயபக்தியோடு கடந்த நாட்கள் அவை. ஒரு ஓரத்தில் கம்பீரமான மாடுகள் குளிரக் குளிர தங்கள் எசமானரின் குளிப்பாட்டலுக்குத் தலையசைத்து மனம் குளிர்ந்த காலம்.
யார் கொடுத்த ஐடியா இது? என்ன என்று கேட்கிறீர்களா?
பக்கத்தில் ஒரு மேல் நிலைத் தொட்டி வந்தது. மிகப் பெரிய, பிரம்மாண்டமான, ராட்சசத்தனமான தொட்டி. மேலே சிறுவர்கள் பயமின்றி கிரிக்கெட் விளையாடலாம். அவ்வளவு பெரிய க்ரவுன்ட். தண்ணீரை ஏற்றினார்கள் கண்மாயிலிருந்து.
ஏன் சார் இப்படி? க்ரவுன்ட் வாட்டர் குறைஞ்சிடுமில்ல? போச்சு….!
இந்தத் தண்ணிய நாங்களா வச்சிக்கப் போறோம்? உங்களுக்குத்தான் சார்…வீடு வீடா சப்ளை பண்ணப் போறோம்…. ஐயாயிரம் வீடுகளில் ஐநூறு வீடுகள் பலனடைந்திருக்குமா? அப்போதே மற்றவர்கள் ரோட்டில் அலைந்தார்களே? அது? அதுவும் ஆறாயிரம், ஏழாயிரம் கட்டி குழாய் இணைப்புக் கொடுத்தவர்களுக்கு மட்டும்…அது சரி…இன்று அவர்களுக்கும் தண்ணீர் இல்லை, எவருக்கும் தண்ணீர் இல்லை. எல்லாமும் காய்ந்து கருகிப் போனதே? அந்தக் கண்மாய் வெடிப்புக் கண்டு, பாளம் பாளமாய்ப் பிளந்து, மக்கள் தங்கள் காலைக் கடன்களை மறைவாய்ப் பள்ளத்தில் கழித்துவிட்டுப் போகிறார்கள். அய்யனார் என்ன செய்வார், பாவம்…!
இது எல்லாவற்றினூடே இன்னொன்று…அதுதான் முக்கியமானது. கூட்டுக் குடிநீர் திட்டம்…..
அப்டியா…வரப்போகுதா? அப்பாடி….எந்த வழியிலயாவது தண்ணி வந்தாச் சரி….. ஓடி ஓடிப் போய்ப் பஞ்சாயத்தில் பணத்தைக் கட்டினார்கள் பலர். அது ஆயிற்று வருடக் கணக்கில்…..இன்று போய்க் கேட்டால்…….?
அந்தத் திட்டம் ஃபெய்ல்யூர் சார்……பாதாளச் சாக்கடை போடும் போது, அல்லது தண்ணிக் குழாய் போடும் போது, இந்தக் காசக் கழிச்சிக்கிடுவாங்க….அடிஷனலா எவ்வளவுண்டோ அதைக் கட்ட வேண்டிர்க்கும்…..பணத்தைத் திருப்பித் தர மாட்டாங்க……!!!
அடிச்சிச் சொல்கிறார் அந்தப் பஞ்சாயத்தில் பணிபுரிபவர்.
அது சரி, கட்டின ஆறாயிரத்தத் திருப்பிக் கொடுன்னு நாங்கென்ன கேஸா போடப் போறோம்….? நீ நிமிர்ந்து பேசுய்யா…… யானை வாய்க் கரும்பு !!!- வேதனையில் முனகிக் கொண்டே நகர்கிறார்கள் மக்கள்.
காலம்தான் தீர்ப்பு சொல்ல வேண்டும். அந்தோ…! எம் மக்கள் தண்ணீருக்குக் கண்ணீர் விட்டுக் கொண்டிருக்கிறார்கள். வானகமே…! வையகமே…! வளர்ந்து வரும் தாயகமே…! போதும்யா வசனம்…. நடப்பப் பாருய்யா…!!!
-----------------------------------------

  சிறுகதை                 “பாதிப்பு” - ”சிற்றுளி” கலை இலக்கிய இதழ், அக்டோபர் 2024 முதல் டிசம்பர் 2024 வரை             வி த்யாபதி அந்தத் தெ...