09 ஜூன் 2014

“தண்ணீரும் கண்ணீரும் ”– 02.06.2014 தினமணி நாளிதழ் சென்னைப் பதிப்பில் வெளியான எனது கட்டுரை

கோயிலில்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பது பழையமொழி. தண்ணீரில்லா ஊரில் தங்கியிருக்க வேண்டாம் என்பது இப்போது உருவாகிப்போன புது மொழி. எங்கள் மதுரை மாநகரம் அப்படித்தான் இப்போது ஆகிவிட்டிருக்கிறது. நிறையப்பேர் அங்கங்கே வீடுகளைப் பூட்டிப் போட்டுவிட்டு இடம் பெயர்கிறார்கள். இருபதாண்டு. முப்பதாண்டு என்று வாழ்ந்து கழித்த வீட்டை விற்று விட்டுக் கிளம்புகிறார்கள். இடம் பெயறும் இடத்தில் இன்னும் கொஞ்ச காலத்திற்கு சமாளிக்கலாம் என்ற நம்பிக்கையில் நகர்கிறார்கள்.
சாதாரண ஜனம் தண்ணீருக்கு லோ லோவென்று அலைகிறது. பாடாய்ப் படுகிறது. உனக்கு எனக்கு என்று அடிபிடியில் இருக்கிறது. ஒரு குறிப்பிட்ட இடத்தில் பதினைந்து நாளுக்கு ஒரு முறையேனும் தண்ணீர் லாரி வருகிறதென்றால் அங்கே கூடும் கூட்டமும் வரிசைப்படுத்தும் காலிப் பிளாஸ்டிக் குடங்களும் கண்கொள்ளாக் காட்சி. ரசிக்கவா முடியும் அந்த வண்ணக் கோலத்தை? ரத்தம் வடிகிறதய்யா ரத்தம் வடிகிறது. எம் மக்கள் படும்பாடு சொல்லி மாளாது…!
நான் குடியிருக்கும் பகுதி ஒரு காலத்தில் அத்தனை செழிப்பு. கிணற்றில் குனிந்து கையால் தண்ணீரை அள்ளலாம். கற்கண்டாய் இனித்தது. இன்று எண்ணெயும் நுரையுமாய், என்ன இது? தண்ணீரா அல்லது பூமியின் கண்ணீரா? பத்து நிமிடம் ஓடிய மோட்டார் இன்று ஒரு மணி நேரத்திற்கும் மேலாய் ஓடினாலும் வெறும் காற்றுத்தான் குழாய்களின் வழியே பயணிக்கிறது.
எங்கள் பகுதியில் தண்ணீரைக் காசு கொடுத்து வாங்க, மக்கள் எப்போதோ பழகியாயிற்று. நான் சொல்வது பாட்டில் தண்ணீரை அல்ல. கேன் தண்ணீரை. அது எந்த அளவுக்கு சுத்தம்? என்ற கேள்வி இருந்துகொண்டேயிருக்கிறது. சுடவச்சுக் குடிக்க வேண்டிதான்….என்று சொல்லிக் கொள்கிறார்கள்.
மினி லாரிகளில் தண்ணீர் அடிக்க எப்போதோ ஆரம்பித்தாயிற்று. எப்போதும் லாரிச் சப்தம்தான். இரவு பகல் என்ற கணக்கே இல்லை. மக்களிடம் காசு இருக்கிறதையா? காசு இருக்கிறது. அப்டித்தானே சொல்றாங்க…? கொடுக்கிறாங்க, வாங்கிக்கிறாங்க….இதிலென்ன அதிசயம்…? அப்படித்தானே விலைவாசிகளும் ஏறுகின்றன? அப்படித்தானே பஸ் கட்டணங்களும், மின் கட்டணங்களும் ஏறின?
அது கிடக்கட்டும். இத்தனை தண்ணீர் லாரிகள் எங்கேயிருந்து முளைத்தன? பார்த்தால் எல்லாம் பழைய லாரிகள் போல் இருக்கின்றனவே? வெகு நாளாய் இந்தத் தொழிலில் இருக்கிறார்களோ? இந்த லாரியைக் கழுவுவார்களா? அல்லது அப்படி அப்படியே தண்ணீரை நிரப்பி எடுத்து வருவார்களா? உள்ளே தேங்கிக் கிடக்கும் கசடுகளை நீக்குகிறார்களா இல்லையா? ப்ளீச்சிங் பவுடர் போட்டுக் கழுவுவார்களா? தண்ணீரின் மூலமாய்த்தானே எல்லா வியாதிகளும் பரவுகின்றன? அடக் கடவுளே…! இந்த மக்களுக்கு ஏதும் செய்யாமல் இருக்க வேண்டுமே…!
அதெல்லாம் க்ளீனா இருக்கும் சார்….அப்படியெல்லாம் நீங்க நினைக்கவே வேணாம்…. – பதில் அழகாய்த்தான் வருகிறது. பேசக் கற்றவர்கள். பேசுகிறார்கள்.
நுரையே வரல்லே கவனிச்சீங்களா…? அழுக்குப் போகமாட்டேங்குது…வழவழன்னு இருக்கு சார்…. – எதிர் வீட்டுக்காரரின் புலம்பல்.
போகும், வரும் லாரிகளில் செல் ஃபோன் எண் எழுதப்பட்டிருக்கிறது. கண்ணிலிருந்து அது மறையும் முன் பரபரப்போடு குறித்து வைத்துக் கொள்கிறார்கள். எங்கே அதுவும் கிடைக்காமல் போகுமோ என்று? போகும், இதுவும் கடந்து போகும்…இலக்கிய வசனமெல்லாம் சொல்றதுக்கு நல்லாத்தான் இருக்கு. யதார்த்தம்?
இன்று கொஞ்சம் சமாளிக்கிறோம், நாளை? என்று மிகச் சிலர். என்னத்தச் சமாளிக்கிறது? அதான் பொட்டுத் தண்ணியில்லையே? லாரிலதான் அடிச்சிட்டிருக்கேன்….என்று மேல் தொட்டியின் அளவிற்கேற்றாற்போல் கேட்ட காசைக் கொடுத்தனுப்பும் அப்பாவிகள். வேறு வழி? நம் வயிற்றுக்குச் செலவழிப்பதை விட, இன்று தண்ணீர், மின்சாரம் என்று கொடுப்பதுதான் அள்ளிக் கொண்டு போகிறது…!
வயிற்றுக்குச் சோறிட வேண்டும்…இங்கு வாழும் மனிதருக்கெல்லாம் பயிற்றுப் பல கல்வி தந்து…….
அதெல்லாம் பழைய பாட்டுங்க…..யாருக்கு வேணும்…? யதார்த்தத்தைப் பாருங்க சார்…..
தொட்டிக்கு எவ்வளவுங்க…?
2000 லிட்டர்…..350 லேர்ந்து 400 சார்….
என்னப்பா, ரொம்ப அநியாயமா இருக்கு…? பார்த்துச் சொல்லுய்யா….சின்னத் தொட்டிதான…?
இங்கேயிருந்து Nஉறாஸ் இழுத்து மேலே மாடில தொட்டில இறக்கணும்ல சார்….எழுநூற்றம்பது ஆகும் சார்……உங்க வீட்டுத் தொட்டி பெரிசு சார்….! – ரெடிமேடான பதில்.
அது என்ன கணக்கோ…? என்ன நார்ம்ஸோ….மனதில் தோன்றியதுதான் ரேட்…..
அது சரி, எங்கேயிருந்து கொண்டாறீங்க…..?
அது முப்பது நாப்பது கி.மீ. போகணும் சார்…..போகிறார்கள். வருகிறார்கள். அங்கே என்று இல்லாமல் போகுமோ? உனக்கு எனக்கு என்று அடிதடி எப்போது கிளம்புமோ? குடுமிப்பிடிச் சண்டை வெகு விரைவில்.
எங்கள் பகுதியில் ஒரு பெரிய கண்மாய் இருந்தது. கரையில் ஒரு அய்யனால் கோயில். ஆண்களும், பெண்களும் அள்ளிக் குளித்த காலம். கரையேறி அய்யனாரை வணங்கி பயபக்தியோடு கடந்த நாட்கள் அவை. ஒரு ஓரத்தில் கம்பீரமான மாடுகள் குளிரக் குளிர தங்கள் எசமானரின் குளிப்பாட்டலுக்குத் தலையசைத்து மனம் குளிர்ந்த காலம்.
யார் கொடுத்த ஐடியா இது? என்ன என்று கேட்கிறீர்களா?
பக்கத்தில் ஒரு மேல் நிலைத் தொட்டி வந்தது. மிகப் பெரிய, பிரம்மாண்டமான, ராட்சசத்தனமான தொட்டி. மேலே சிறுவர்கள் பயமின்றி கிரிக்கெட் விளையாடலாம். அவ்வளவு பெரிய க்ரவுன்ட். தண்ணீரை ஏற்றினார்கள் கண்மாயிலிருந்து.
ஏன் சார் இப்படி? க்ரவுன்ட் வாட்டர் குறைஞ்சிடுமில்ல? போச்சு….!
இந்தத் தண்ணிய நாங்களா வச்சிக்கப் போறோம்? உங்களுக்குத்தான் சார்…வீடு வீடா சப்ளை பண்ணப் போறோம்…. ஐயாயிரம் வீடுகளில் ஐநூறு வீடுகள் பலனடைந்திருக்குமா? அப்போதே மற்றவர்கள் ரோட்டில் அலைந்தார்களே? அது? அதுவும் ஆறாயிரம், ஏழாயிரம் கட்டி குழாய் இணைப்புக் கொடுத்தவர்களுக்கு மட்டும்…அது சரி…இன்று அவர்களுக்கும் தண்ணீர் இல்லை, எவருக்கும் தண்ணீர் இல்லை. எல்லாமும் காய்ந்து கருகிப் போனதே? அந்தக் கண்மாய் வெடிப்புக் கண்டு, பாளம் பாளமாய்ப் பிளந்து, மக்கள் தங்கள் காலைக் கடன்களை மறைவாய்ப் பள்ளத்தில் கழித்துவிட்டுப் போகிறார்கள். அய்யனார் என்ன செய்வார், பாவம்…!
இது எல்லாவற்றினூடே இன்னொன்று…அதுதான் முக்கியமானது. கூட்டுக் குடிநீர் திட்டம்…..
அப்டியா…வரப்போகுதா? அப்பாடி….எந்த வழியிலயாவது தண்ணி வந்தாச் சரி….. ஓடி ஓடிப் போய்ப் பஞ்சாயத்தில் பணத்தைக் கட்டினார்கள் பலர். அது ஆயிற்று வருடக் கணக்கில்…..இன்று போய்க் கேட்டால்…….?
அந்தத் திட்டம் ஃபெய்ல்யூர் சார்……பாதாளச் சாக்கடை போடும் போது, அல்லது தண்ணிக் குழாய் போடும் போது, இந்தக் காசக் கழிச்சிக்கிடுவாங்க….அடிஷனலா எவ்வளவுண்டோ அதைக் கட்ட வேண்டிர்க்கும்…..பணத்தைத் திருப்பித் தர மாட்டாங்க……!!!
அடிச்சிச் சொல்கிறார் அந்தப் பஞ்சாயத்தில் பணிபுரிபவர்.
அது சரி, கட்டின ஆறாயிரத்தத் திருப்பிக் கொடுன்னு நாங்கென்ன கேஸா போடப் போறோம்….? நீ நிமிர்ந்து பேசுய்யா…… யானை வாய்க் கரும்பு !!!- வேதனையில் முனகிக் கொண்டே நகர்கிறார்கள் மக்கள்.
காலம்தான் தீர்ப்பு சொல்ல வேண்டும். அந்தோ…! எம் மக்கள் தண்ணீருக்குக் கண்ணீர் விட்டுக் கொண்டிருக்கிறார்கள். வானகமே…! வையகமே…! வளர்ந்து வரும் தாயகமே…! போதும்யா வசனம்…. நடப்பப் பாருய்யா…!!!
-----------------------------------------

கருத்துகள் இல்லை: