வழங்குபவர் – திரு.கி.மீனாட்சி சுந்தரம், தொழிலாளர் துணை ஆய்வர் (ஓய்வு) நெல்லை.
ஒரு சிறுகதை என்பது சிறந்த படைப்பு என்பதை எப்படி மதிப்பிடுவது?
மனித மனத்தை செப்பனிடுவதற்காகவும் மனிதகுல மேம்பாட்டிற்காகவும் நல்ல விஷயங்களைச் சொல்ல முயன்று அதை உணர்த்துவதில் வெற்றி பெற்ற கதைகள் நல்ல கதைகள்.
அந்தவகையில் உஷாதீபனின் “நான் அதுவல்ல” சிறுகதைத் தொகுப்பிலுள்ள 19 கதைகளும் சிறந்த கதைகளே…!
கதையின் சாரத்தை அதில் சொல்லப்பட்டுள்ள சமூகச் செய்தியை, மனித விழுமியங்களை, எளிமையான, நேர்த்தியான நடையின் மூலம்வாசகர்களின் ஆன்மாவோடு பொருத்தி விடுகிறார்.
நாம் அன்றாட வாழ்க்கையில் சந்திக்கும் மனிதர்கள், குடும்பம், அலுவலகம், சமூகம், இவற்றில் நிகழும் நிகழ்வுகள் இவற்றை மையமாகக் கொண்டு வடிக்கப்பட்டுள்ள இக்கதைகள் வாழ்க்கையின் உன்னதத்தை உயர்த்திப் பிடிப்பவை.
வாழ்க்கை நெறியை மையமாக வைத்து எழுதப்பட்டுள்ள இக்கதைகள், இன்றைய பண முதன்மை சமூக அமைப்பில் விழுமியங்களை பாதுகாக்கும் பணியைச் செய்யும்.
நான் அதுவல்ல என்ற தலைப்பிலான கதை தவறான படைப்பைக் கொடுத்துவிட்டு அதற்கு சன்மானம் கிடைத்தவுடன் குற்ற உணர்விற்கு ஆட்பட்டு தன்னை சுயபரிசோதனை செய்து கொள்ளும் ஒரு எழுத்தாளனின் கதை. தவறான படைப்பு வேசியிடம் செல்வதற்கு ஒப்பானது என்ற உவமை படைப்பாளிக்கு ஏற்பட்ட குற்ற உணர்வின் கன பரிமாணத்தைக் காட்டுகிறது. சமூகத்தை நேசிக்கும் எழுத்தாளர்கள் நினைவில் பதிக்க வேண்டிய செய்தி.
தன்னில் கரைந்தவர் அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெறவுள்ள தொழிற்சங்கவாதியின் கதை. 2003-ம் ஆண்டின் அரசு ஊழியர் போராட்டத்தை இக்கதை ஞாபகப்படுத்துகிறது. ஒரு அரசு ஊழியர் என்பவர் பொது ஜன ஊழியர். அரசு ஊழியர் என்ற வார்த்தையே சரியானது அல்ல. பொது ஜன ஊழியர் என்பதே சரி. வேலை செய்தோம், சம்பளம் பெற்றோம், நமது ஊதிய உயர்விற்காகப் போராடினோம். இதில் சமூகத்திற்குச் செய்தது ஒன்றுமில்லை. ஓய்வுக்கான பிரிவு உபச்சாரம் இருக்குமா என்று வீட்டில் கேட்கும் கேள்வியும், தவிக்கும் மனமும், இக்கேள்வி எழுவதும், எதிர்பார்ப்பும் சரியா என்ற சுய கேள்வியும் அர்த்த புஷ்டியுடன் முன் வைக்கப்பட்டுள்ளது.
நுகர்வுக் கலாச்சாத்தில் மனமகிழ் மன்றம் போல் ஆகிவரும் சங்கங்களின் நிகழ்வுகளை வருத்தத்துடன் பதிவு செய்கிறார் ஆசிரியர். இக்கதையில் முக்கியமான இரு செய்திகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தச் சமூகத்திற்காகப் பணியாற்றிய அரசு ஊழியர், பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின் அவரது பொறுப்பை இந்தச் சமூகம் ஏற்றுக் கொள்கிறது. அதுவே ஓய்வூதியத்தின் தாத்பர்யம். எனவே ஓய்வூதியர் சமூகத்திற்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்ற செய்தியினையும், பெண்மைக்கு சமத்துவம் என்பது வீட்டு வேலையை பகிர்ந்து கொள்வதிலிருந்து துவங்க வேண்டும் என்பதையும் நுட்பமாகச் சொல்லியுள்ள கதை.
மேலிருந்து கீழ் வலமிருந்து இடம் – இக்கதையில் நிலவும் உலகமயச்சூழலில் பன்னாட்டு உள்நாட்டு நிறுவனங்களில் கடைப்பிடிக்கப்படும் “அமர்த்து துரத்து” (hire and fire) கொள்கையின் தாக்கம் அலவலகத்திற்குச் செல்லும் பணியாளரை செக்யூரிட்டி காரிடாரில் காத்திருக்கச் செய்யும் நிகழ்வு மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பணியிழந்த தொழிலாளர் வேணு கார்த்திக் காலம், நேரம், உடல் சோர்வு, மனச்சோர்வு, சொந்தச் சூழல் எதையும் பார்க்காமல் பணியாற்றுவதை எண்ணி சுய பச்சாதாபம் கொள்கிறார். பணம் முதன்மைப்படுத்தப்படும் பொழுது போற்றுதல்கள் மதிப்பிழக்கும் என்ற கருத்தைப் பதிவு செய்கிறார் ஆசிரியர். முதலாளித்துவம் லாபத்தை அடிப்படையாகக் கொண்டது. அங்கே மனிதன் இயந்திரமாகப் பார்க்கப்படுவான். அங்கே மனித மதிப்புகளுக்கு இடமில்லை. சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் கதையின் நாயகன் வேணு கார்த்திக் போன்று நித்தம், நித்தம் வேலையிழப்பவர்கள் உண்டு. உலகமயத்தில் இந்தியத் தொழிலாளர் நிலைமையையும், அமைப்பின் தேவையையும் இக்கதை வலியுறுத்துகிறது.
மனக்குப்பை – குப்பை அள்ளும் தொழிலாளி ஆண்டியை பக்கத்து வீட்டுக்காரர் சாதியைச் சொல்லித் திட்டி விடுகிறார். இந்தப் புள்ளியிலிருந்து கணவன் மனைவி உரையாடலாக பின்னப்பட்டுள்ளது இக்கதை. சாதிய அடுக்குகளால் ஆன இந்தியச் சமூகத்தையும், மனிதனின் மனதில் பதிந்துள்ள சாதி மத அழுக்குகளை மனக்குப்பை என்று சுட்டிக்காட்டியிருப்பது சாலப் பொருத்தம்.
குப்பை அள்ளும் தொழிலாளியாய் இருந்தால் என்ன? அவரும் மனிதன்தானே? அவரை மரியாதையாகத்தானே நடத்த வேண்டும் என்று மனைவி சாரதா சொல்வதாக அமைந்துள்ள உரையாடல் தனிச்சிறப்பு. தொழிலையும் தொழைிலாளியையும் (dignity of labour) மதிக்கும் சிறப்பு பளிச்சிடுகிறது.
உரையாடலின் ஊடே இன்றைக்கு நாமெல்லாம் எவ்வளவோ திருந்திட்டோம். இந்த மாதிரி நடவடிக்கைகள் இன்னைக்கு பரவலாக தீவிரமா மற்றவங்ககிட்டேதான் நிறைஞ்சிருக்கு, அதையும் புரிஞ்சிக்கணும் என்ற பதிவு இடைநிலை சாதியினரின் ஆதிக்கத்தை லேசாகச் சுட்டிக்காட்டிச் செல்கிறது. ஆதிக்க மனோநிலை எங்கிருந்தாலும் தவறு என்று சுட்டிக்காட்டியிருப்பது காலத்திற்குத் தேவையான நல்ல அம்சம்.
“கல்லை மட்டும் கண்டால்“ புத்தக வாசிப்பை, வாசிப்பு அனுபவமிக்க ஒரு முதியவர் மூலம் சொல்லும் கதை.
பழைய பேப்பர் கடைக்குப் போட்டுவிடக் கூடாது என்ற அச்சத்தில் புத்தக மூட்டையைச் சுமந்து நூலகத்தில் ஒப்படைக்கவரும் முதியவர் மூலம் புத்தகங்கள் சமுதாய முன்னேற்றத்தின் ஆவணங்கள், அவைகள் பாதுகாக்கப்பட வேண்டும், வாழ்க்கையைப் புரட்டிப் போடும் வல்லமை புத்தகங்களுக்கு உண்டு என்ற அருமையான கருத்து எளிமையான நடையில் முன் வைக்கப்பட்டுள்ளது.
இதை வீசைக்குப் போடுறதும், நான் தூங்குறபோது என் தலைல கல்லைத் தூக்கிப் போடுறதும் ஒண்ணுதான்னு தூக்கிட்டு வந்துட்டேன் என்று முதியவர் கூறுகிறார். கதையைப் படித்துக் கொண்டிருந்த கணத்தில் துணுக்குற்று நின்று விடுகிறோம். வாசிப்போடு இணைந்த பெரியவரின் வாழ்க்கை நெஞ்சை நிறைக்கிறது.
காவல் – பாலைத் திருடும் பூனையைச் சுற்றி இக்கதை புனையப்பட்டுள்ளது. பூனை சினை என்று பால்காரர் மூலம் தெரிந்ததும் கணவன் மனைவி இருவர் மனமும் பச்சாதாபம் கொள்கிறது. பூனையை விரட்டிய மனது வேதனை அடைகிறது. கண்கள் கலங்க பூனையைப் பார்த்துக் கொண்டிருந்த திவ்யாவைக் கண்டு ஒரு கணம் தடுமாறினேன் நான். அது ஏன் அப்படி என்று எனக்குத்தான் தெரியும் என்று கணவன் நினைத்துக் கொள்வதாகக் கதை முடிகிறது. குழந்தைப்பேற்றின் ஏக்கத்தை, அது தரும் இன்பத்தை இந்த ஒரு வரி மூலம் உணர்த்தியிருப்பது அற்புதம். காக்கை, குருவி, அணில், இவை கதையில் ஊடும் பாவுமாக வந்து செல்கின்றன. சகல உயிரினங்களையும் வாசிக்கக் கற்றுக் கொண்டவன்தான் மேலான வாசகன் என்று மறைந்த முதுபெரும் படைப்பாளி சுந்தர ராமசாமியின் கூற்று ஆசிரியரின் என்னுரையில் வருகிறது. இக்கருத்தையும் வாசக மனதில் பதியச் செய்கிறது இக்கதை.
பிரகிருதி – இக்கதைக்கான களம் நூலகம். அங்க வந்து செல்லும் வாசகர்கள். நூலகம் அமைதிக்கான இடம். படிப்புத்தவம் இயற்றுவதுடன் அங்கே மௌனத் தவமும் அரங்கேறுகிறது. கட்டுப்பாடின்றித் தன்னிச்சையாய்ச் சில புத்தகங்களை மடியில் எடுத்து வைத்துக் கொள்ளும் புத்தகக்காரர் என்ற பாத்திரம் மூலம் நூலக ஒழுங்கை வாசகர்கள் பின்பற்ற வேண்டிய அவசியத்தை நயம்படச் சொல்கிறது இக்கதை.
காப்புரிமை – மனிதன் ஒரு mixed bag. குற்றம் குறை கண்டால் மனித சமூகத்தில் உறவு, நட்பு மிஞ்சாது.இருவரும் பணி புரியும் மத்திய தர வர்க்கக் குடும்பங்களில் வேலைக்காரியும் நம்மில் ஒருவராகி விடுவது உண்டு. ஒரு சிறு தவறுக்காக வேலையை விட்டு நீக்கி விட்டுத் தவிக்கும் மனம், புலம்பல், வாஞ்சையான வார்த்தைகளால் மனித உறவுகளின் மேன்மையைச் சொல்கிறது இக்கதை.
“மீண்டும் பஞ்சமி“- - மனப்பிறழ்வுக்குள்ளானவர்களின் வாழ்க்கை அவலங்களைச் சொல்லும் கதை. காலித்துக் கைவிடப்பட்ட ஒரு குழந்தைக்கு் தாயான பஞ்சமி மனப்பிறழ்வுக்கு உள்ளாகித் தெருவில் அலைகிறாள். குடும்பம் சிதைந்து போகிறது. பெண்களை போகப் பொருளாகக் கருதும் ஆணாதிக்க சமூகத்தைச் சாடுகிறது இக்கதை. மனப்பிறழ்வுக்கு உள்ளாகும் ஒரு ஆண் அநாதையாய்த் தெருவில் இறந்து போகிறார்.. கதை சொல்லப்பட்டுள்ள விதம் நெஞ்சைப் பிழிகிறது.
வெள்ளாடு – அரசு அலுவலகங்களில் புறையோடிப் போயுள்ள லஞ்சம், ஒழுங்கற்ற தன்மை, பொறுப்பற்ற பேச்சு, நேர்மையானவர்களுக்கு இழைக்கப்படும் அநீதி, இவற்றிற்கிடையே மாசற்ற சேவை செய்யும் பணியாளர் ரமணன், பியூன் கௌஸ்பாய் இவர்களுக்கிடையே நடக்கும் உரையாடல், நேர்மைக்குப் பரிசாகக் கிடைக்கும் பிரிவு மாறுதல், இன்றைய அரசு அலுவலகங்களின் நிலையை இக்கதை படம் பிடித்துக் காட்டுகிறது.
இன்றைய சமூகத்தில் முதியவர்களின் நிலையைச் சொல்லும் “அசையாச் சொத்து” கணவன் மனைவி குழந்தைகள் உறவைச் சொல்லும் ஸ்ருதி லயம், அப்பா அம்மா நான், இம்மாதிரிஅனைத்துக் கதைகளும் உள்ளத்தைத் தொட்டு ஒவ்வொரு செய்தியைச் சொல்லிச் செல்கின்றன. நீங்களும் படியுங்கள். இயல்பாகச் சொல்லப்பட்டுள்ள இக்கதைகளிலிருந்து புதிய புதிய சமூகச் செய்திகள் கிடைக்கும்.
--------------------------------------------------------

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக