18 பிப்ரவரி 2013

சுஜாதாவின் கலைந்த பொய்கள் - குறுநாவல்

2013-02-18 14.58.19

எழுதுவதைவிட வாசிப்பதிலே சுகம் அதிகம். அதிலும் பல்வேறு எழுத்தாளர்களின் வித்தியாசமான எழுத்துக்களை அடையாளம் கண்டு ரசிப்பது அதனிலும் படுசுகம். சுஜாதாவை ஊர் அறியும். உலகறியும். அவரின் கலைந்த பொய்கள் குறுநாவல் நான் இப்பொழுது படித்த குறுநாவல் வரிசை-9. உயிர்மை பதிப்பகம் இதை வெளியிட்டுள்ளது. கையடக்கமான பிரதி. மாத நாவல் சைஸில். ஆனால் மாத நாவல்போல் வலியப் பின்னியது இல்லை. சரளமாக, சர்வ சகஜமாக, அதுவே விரிந்து பரந்த வெள்ளம். ஒரு முடிச்சை ஆரம்பத்திலேயே போட்டுவிட்டு, வாசகனைக் கடைசி வரை விடாமல் இழுத்துச் செல்லும் பாங்கு. அங்கங்கே அவருக்கே உரிய கேலி, கிண்டல், நையாண்டி, நகைச்சுவை. படித்தவன் தப்பு செய்ய மாட்டானா? பாமரன் மட்டும்தான் பாவமாய்ச் செய்வானா? தவறுகள் மெத்தப் படித்தவர்களிடமும் உண்டு. எல்லோருக்கும் அடிப்படை ஆசை. நியாயமற்ற ஆசைகள். அதனால் செய்யத்தூண்டும் தவறுகள். எப்படியும் அடைந்து விட வேண்டும் என்கின்ற வெறியில் ஒரு தவறுக்கு மாற்றாகப் படிப்படியாகச் செய்துகொண்டே செல்லல். இது படு அநாயாசமாய் விரிந்து செல்லும் காட்சி. கடைசியில் அந்த முடிச்சை எப்படி அவிழ்க்கிறார்? நீயோ நானோ கற்பனையே பண்ண முடியாது. அப்படி ஒரு சாமர்த்தியம். படித்தவனும், மேல் தட்டு வர்க்கத்தினனும், எத்தனை மட்டமாக நடந்து கொள்கிறார்கள்? வாசகன் கொஞ்சங்கூடக் கற்பனை செய்ய முடியாத ஒரு நிகழ்வின் மூலம் முடிச்சு தானே அவிழ்ந்து போகிறது. சே...!இவ்வளவு மட்டமாவா? கதாபாத்திரம் அப்படி...உலகத்தில் எல்லாவிதமான மனிதர்களும் இருந்துகொண்டுதானே இருக்கிறார்கள்? படித்துப் பார்த்துத்தான் சுவைக்க வேண்டும். அவரின் எழுத்தே எழுத்து.

கருத்துகள் இல்லை: