(உயிரோசை இணைய இதழ் – 23.07.2012 வெளியீடு)
"துணி வாங்கிட்டீங்களா…?" - சைக்கிளில் போகும் அவரை, வண்டியில் கடந்த இவன் கேட்டான்.
பின்னால் அடுக்கியிருக்கும் துணி மூட்டைகள் சாய்ந்து விடக் கூடாது.அதுதான் முக்கியம். விழுந்தால் எல்லாம் மண்ணாகிப் போகும். வாஷ் பண்ணிய துணிகள். பிறகு வாங்கி வந்த இடத்திற்குப் பதில் சொல்ல முடியாது. பொல்லாப்பு வந்து விடும். ஒரு கையால் அதை ஜாக்கிரதையாய்ப் பிடித்துக் கொண்டே உழட்டிக்கொண்டே ஓட்டிப் போன அவர் "வாங்கிட்டேன் சாரே…" என்று பதில் சத்தம் கொடுத்தார்.
ஐந்தாறு ஆண்டுகளுக்குப் பின்னும் அவரின் இந்த ‘சாரே’ மாறாமல் அப்படியே இருந்தது. ஸார் என்பதைத்தான் அப்படி நீட்டுகிறார். இது எந்த ஊர்ப் பழக்கம்? தெரியவில்லை.
ஆனால் ஒன்று. வாங்கிட்டேன் என்ற அந்தப் பதிலில்தான் எத்தனை உற்சாகம். எவ்வளவு சந்தோஷம்.
‘துணி வாங்கிட்டீங்களா?’ என்று கேட்டதன் மூலமாக, தான் சொல்லித்தான் இது நடந்திருக்கிறது என்பதாக அவன் புரிந்து கொண்டிருக்கக் கூடும்.ஆனால் உண்மையில் அது அப்படியல்லவே? தேவகி சொல்லியல்லவா அது நடந்திருக்கிறது! அவள் விருப்பத்தை மீறி என்ன நடக்கக்கூடும்?
"நாளைக்குக் காலைல வந்து துணி வாங்கிக்குங்க…அயர்ன் பண்ணிக் கொடுங்க…"
அலுவலகம் விட்டு வருகையில் அவள்தான் சொல்லியிருக்கிறாள்.எத்தனை நாள்தான் அவளும் பொறுப்பாள்?
"கஞ்சி போட்டு வைக்கிறேன்…வாங்கன்னு சொன்னேன்…இன்னும் வந்திட்டிருக்காங்க…ஒரு மாசமாச்சு…இன்னைவரைக்கும் ஆளைக் காணலை…என்ன நினைச்சிட்டிருக்கு அந்தம்மா? கல்யாணத்துக்குப் போறேன்…காட்சிக்குப் போறேன்னா சொல்லிட்டுப் போயிடலாமுல்ல? நாம வேறே ஏதாச்சும் அரேஞ்ஜ் பண்ணிப்போமில்ல? வரேன், வரேன்னுட்டு,ஒரேயடியா வராமயிருந்தா? எனக்கானா உடம்பெல்லாம் எரியுது இந்த வெயிலுக்கு…தாங்க முடியலை…அதான் காட்டன் சேலையைக் கட்டிண்டு போவோம்னு ஒண்ணு ரெண்டுன்னு கஞ்சி போட்டு ஏழெட்டு சேர்த்து வச்சிருக்கேன்…அந்தம்மா என்னைக்கு வர்றது? என்னைக்கு நான் அதைத் தேய்ச்சுக் கட்டுறது? அதுக்குள்ளேயும் சம்மரே கழிஞ்சிடும் போலிருக்கு…இவுங்க வசதிக்கு இஷ்டம் போல வருவாங்க…வச்சிருந்து வர்றபோது தூக்கிக் கொடுக்கணுமோ? அடிக்கிற வெயிலுக்கு பாலியஸ்டா;,ஷிஃபான்னு போடவா முடியுது? வியர்வையானா ஊத்துது! உடம்போட ஒட்டிக்கிது…பிச்சுத்தான் எடுக்கணும் போலிருக்கு…"
அவளின் ஆதங்கம் நியாயமானதாய்த்தான் தோன்றியது. ஆனாலும் இன்று ஞாயிற்றுக்கிழமை மட்டும் பொறுக்கலாமே?
"சும்மாருங்க…என் கஷ்டம் எனக்குத்தான் தெரியும்…நாளைக்கு நா எதைக் கட்டிட்டுப் போறதாம்?"
"வர்றேங்கம்மா…எதிர்த்த வீட்டுக்கு வருவேன். அப்போ உங்க வீட்டுலயும் வந்து துணி வாங்கிக்கிடுறேன்…"
"மறந்துடாதீங்க…"
"அதெல்லாம் மறக்க மாட்டம்மா…நீங்கதான் என்னை மறந்துட்டீங்க…துணி குடுத்துக்கிட்டே இருந்தீங்க…திடீர்னு நிறுத்திப்புட்டீங்க…என்னன்னு தெரியல…வருஷம் ஓடிப்போச்சு…"
"அதெல்லாம் ஒண்ணுமில்ல…வாங்க…வந்து வாங்கிக்குங்க…"
இத்தனை நாள் என்னைப் போட்டு என்ன பாடு படுத்தினாள்? அப்பாடா!பிரச்சினை தீர்ந்தது.
எனக்கு அந்தப் பழைய சம்பவம் ஞாபகத்திற்கு வந்தது.
"என்னடா, சேர்வா வர்ற?"
"ஒண்ணுமில்லப்பா…"
"ஒண்ணுமில்லன்னா? என்னத்துக்கு மூஞ்சிய உம்முன்னு வச்சிட்டிருக்கே?"
"அதெல்லாமில்லே…"
"என்ன நடந்தது சொல்லு…யூனிபார்மை எங்கயாச்சும் மண்ணுல போட்டுட்டியா?"
"இல்லப்பா…நீ என்னைத்தான் குத்தம் சொல்லுவே…வேறென்ன தெரியும் உனக்கு?"
"பின்னே என்ன பண்ணினே சொல்லு…துணியைத் தேய்க்கக் கொடுத்தியா,இல்லியா?"
"கொடுத்தாச்சு…கொடுத்தாச்சு…"
"எதுக்குடா இம்புட்டு அலுப்பு? வாங்கிக்கிட்டான்ல…?"
"வாங்கிட்டான்…வாங்கிட்டான்…"
"அப்புறமென்ன?"
"அந்த ஆளு ரொம்ப அல்ட்ராம்ப்பா…"
"என்னது அல்ட்ரானா? இதென்ன பாஷைடா? அப்டீன்னா?"
"அப்டீன்னா…கிராக்கி பண்ணிக்கிறான்னு அர்த்தம்…இல்லடா கண்ணு…" -தேவகி.
"என்ன கிராக்கி பண்றான்? தேய்க்க முடியாதுங்கிறானா? வாங்கிட்டான்ல…"
"இதுக்குத்தான் சொல்றது…வீட்லயே அயர்ன் பண்ணிக்கலாம்னு…யாருக்கும் முதுகு வளைய மாட்டேங்குது…" - தேவகி.
"எனக்குத்தான் வளைய மாட்டேங்குது…நீ கொஞ்சம் வளைச்சுப் பார்க்க வேண்டியதுதானே…"
"நாந்தான் தெனமும் சமையக்கட்டுல வளைச்சிட்டிருக்கேன்ல…இதுக்கு நீங்கதா வளைக்கணும்…"
"உங்க சண்டைய விடுங்கப்பா…இந்த ரெண்டு துணியத் தூக்கிட்டு மாங்கு மாங்குன்னு அங்கேயிருந்து வந்திட்டியாக்கும்ங்கிறாம்ப்பா அவன்…"
தேவகி அவனை இழுத்து அணைத்துக் கொண்டாள். தலையை வருடிக் கொடுத்தாள்.
"அப்டியா சொன்னான்? என்ன திமிர் அவனுக்கு…?" - தேவகியின் ஓங்கிய குரல்.
படபடத்த அவளை அமைதியாக நோக்கினேன் நான். ‘சரி…சரி…விடு…’
"என்ன நீங்க..விடுங்கிறீங்க…? துணி தேய்க்கக் கொடுத்தா பேசாம வாங்கிக்கிட வேண்டியதுதானே அவன் வேலை…அத விட்டுட்டு இதென்ன பேச்சு…"
"ஏய்…நீ என்ன? இதுக்குப் போயி இவ்வளவு டென்ஷனாறே? ஒவ்வொரு சமயம் அப்டித்தான்…அவன் என்ன டென்ஷன்ல இருந்தானோ…அன்றாடங்காய்ச்சி அவன்…ஏதோ சின்னப்பயதானேன்னு சொல்லியிருப்பான்…இதெல்லாம் ஒரு குத்தமா?"
"அதெப்படிங்க…அவசரத்துக்குத்தானே இந்த ரெண்டு துணி? யாராச்சும் பத்திருபதுன்னு தூக்கிக் கொடுத்தனுப்புவாங்களா? வீடு வீடா அவன் வந்துதானே வாங்கிக்கிறான்? தூக்கிட்டுப் போய்க் கொடுக்கிறோம்னா அதை அவசரம்னு புரிஞ்சிக்க வேண்டாமா? இப்டியா பேசுறது? ஒரு நாளைக்கு ரெண்டு துணி கொடுத்தா அதென்ன இளப்பமா? கேவலமா? எல்லா நாளுமா பத்திருபதுன்னு கொடுக்க முடியும்? ரெண்டே ரெண்டு. அதுவும் யூனிபார்ம்னுதானே கொடுத்தனுப்பினது? வாடிக்கையான அவன் இதைச் சொல்லக் கூடாதுல்ல…? ரெண்டு துணிக்கான காசு அஞ்சு ரூபான்னா அது பணமில்லியா? அதுக்கு மதிப்பில்லியா? எந்த வீட்லயும் இந்த மாதிரிஎன்னிக்காச்சும் ரெண்டு துணி கொடுத்தே இருக்க மாட்டாங்களா? எல்லாரும் எப்பவும் இருபது, முப்பதுன்னுதான் துணி கொடுப்பாங்களாக்கும்?அப்பத்தான் இவுரும் வாங்குவாராக்கும் அய்யா? இதெல்லாம் வேண்டாத பேச்சில்ல?"
அசந்து போனேன் நான். இதற்கு இவ்வளவு அர்த்தங்களா? வாயடைத்துப் போனேன்.
"எப்பவுமே ஒருத்தரையே சார்ந்து இருந்தா இப்படித்தாங்க…இதெல்லாம் வரத்தான் செய்யும்…இதுக்கு ஒரு வழி பண்ணினாத்தான் ஆகும்…"
சொன்னாள். சொன்னதுபோல் செய்தும் விட்டாள்.
எங்கு போய் ஆளைக் கூட்டி வந்தாளோ? எப்படித் தேடிக் கண்டுபிடித்தாளோ?யாரிடம் சொன்னாளோ? தெருக்கோடியில் பரந்த மரத்தடியில் ஒரு அயர்ன் வண்டி. ஆளா இல்ல…? அவளே சொல்லிக் கொண்டாள்.
ஏம்மா துணி கொடுக்கலை…? அவனும் கேட்கவில்லை.
எத்தனை வருடங்கள் ஓடிப் போயின? வாசலில் வண்டியை ஸ்டாண்ட் போட்டுப் பூட்டிவிட்டு அறைக்குள் நுழைந்தவன்தான்…அதற்குள் அந்தச் சத்தம்.
"யம்மா…"
"யாரு…?"
"அயர்னுங்க ஸார்…"
"அயர்னா? வாசலுக்கு வந்து எட்டிப் பார்த்தேன்.
"அடடே…! நீங்களா? வாங்கம்மா…"
"ஆமாங்கய்யா…துணி தர்றீங்களா…?"
"துணியா…ஓ..தர்லாமே…தேவகீ…ஏய் தேவகி….! அந்தம்மா வந்திருக்காங்க…" -பதட்டத்தில் என்னவோ சொன்னேன். இதென்ன கஷ்டம், ஆக்கப் பொறுத்து ஆறப் பொறுக்காத கதையாய்…
"துணி இல்லன்னு சொல்லுங்க…" உள்ளேயிருந்து சைகை மூலம் தெரிவித்தாள் தேவகி.
"துணி இல்லியாமேம்மா…"
"இல்லீங்களா…? சரிங்கய்யா…எங்கண்ணாச்சி பொண்ணுக்கு கலியாணம்…அதுக்குப் போயிட்டேன்…அதான் வரமுடிலீங்கய்யா…"
"அப்டியா? ஒரு மாசம் போல ஆச்சு போலிருக்கு?"
"ஆமாங்கய்யா…எங்க அத்தைட்ட கூடச் சொல்லி விட்டிருந்தேன்…வெவரம் சொல்லிப்புடுன்னு…அது வீடு தெரிலன்னு திரும்பி வந்திடுச்சி….சரிங்கய்யா…அடுத்த வாரம் வாரேன்…எடுத்து வச்சிருங்க…தேய்ச்சுத் தாரேன்…" - சொல்லி விட்டு நகர்ந்தது அது.
உள்ளே வந்தேன்.
"துணிகளை அந்தாள்ட்ட கொடுத்தாச்சுன்னு சொல்ல வேண்டியதுதானே?ஏன் இப்படிப் பயப்படுறீங்க…?"
"எனக்குப் பயமான்னு கேட்குறியே? நீ வந்து சொல்ல வேண்டியதுதானே?உள்ளேயிருந்து சைகை காண்பிக்கிறே?"
"எனக்குப் பயமா? எதுக்கு? பயமா அல்லது தயக்கமா?"
மீண்டும் வாசலில் சத்தம்.
"அய்யா…அம்மா கஞ்சி போட்டு எடுத்து வைக்கிறேன்னு சொல்லியிருந்தாங்கய்யா பாவம்…சேலைக இருக்குதான்னு கொஞ்சம் கேட்டுச் சொல்லுங்கய்யா…"
"சொல்லுங்க…சொல்லுங்க…சொல்லிடுங்க…" உள்ளேயிருந்து விரட்டினாள் தேவகி.
"நீங்க வரலேன்னுட்டு அடுத்த தெருவுல ஒருத்தர் இருக்காருல்ல…அவர்ட்ட கொடுத்து வாங்கியாச்சு…"
"அப்டீங்களா? ஆகட்டுங்கய்யா…இருக்கட்டும்…அடுத்த வாரம் வாரேன்…எடுத்து வச்சிருங்க…தேய்ச்சுக் கொடுக்கிறேன்…என்னங்கய்யா…கண்டிப்பா வந்திடுறேன்…இனி எந்த வேலையுமில்ல…மறக்காம எடுத்து வச்சிருங்க…அம்மாட்ட சொல்லிடுங்க…உள்ளாற வேலையா இருக்காக போலிருக்கு…அவுக என்னைத் தவிர வேறே யார்;ட்டயும் கொடுக்க மாட்டாக…நாந்தேன் வந்து வாங்கிட்டுப் போவேன்…அவுக சொல்ற பிரகாரம் செய்து கொடுப்பேன்…அதுனால எங்கிட்டத்தான் கொடுப்பாக…அம்மாட்ட மறக்காம சொல்லி வையுங்க சாமி….அடுத்த ஞாயித்துக்கெழம வந்திடுறேன்…"
எத்தனை நம்பிக்கை? அந்தம்மா போய்க் கொண்டிருந்தது.
அது சரி! கடைசியில் பழி எனக்குத்தானா?
அடுத்த வாரம் யாரிடம் கொடுப்பது?
"யம்மா…அயர்ன் துணி கொண்டு வந்திருக்கேன் தாயீ…"
வாசலில் அவன் குரல்!!
------------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக