சமீபகாலமாய்த்தான் அந்த வழியைத் தவிர்த்திருந்தார் சுப்புரத்தினம். ஆனால் தற்பொழுது அவர் தேர்ந்தெடுத்திருக்கும் வழி இன்னும் பயமூட்டுவதாகத்தான் இருந்தது. கொஞ்ச நாளைக்குப் போய்த்தான் பார்க்கலாமே என்று நினைத்துக் கொண்டார். பழைய வழியிலாவது ஒரே ஒரு நீளத் தெருவோடு முடிந்து போகும். ஆனால் தற்போதைய வழியில் வளைந்து வளைந்து சின்னச் சின்னதாக நாலைந்து தெருக்களைக் கடக்க வேண்டியிருந்தது. அத்தனையையும் தாண்டி ஒரு பலசரக்குக் கடைக்கு முன்னேயுள்ள லைட் கம்ப வெளிச்சத்தை அடைய குறைந்தது ஐந்து நிமிடங்கள் ஆகிவிடும். பிறகு வழியெங்கும் அங்கங்கே விளக்குகள் உண்டு. ஜெயமுண்டு பயமில்லை மனமே!
அவனெல்லாம் நாலு நாலரைக்கே கடை திறந்து விடுவான் போலிருக்கிறது. அதிகாலையில் டீ பொட்டணம், காபிப் பொடி, பால்பாக்கெட், உப்பு, புளி, மிளகாய் என்று சில்லரைக்கு வருபவர்களின் வியாபாரத்தை நழுவ விட்டு விடக் கூடாது அவனுக்கு. குறைந்தது ஐநூறு ரூபாய் வியாபாரம் பார்த்து விடுவான் அந்தக் காலை நேரத்தில்.
அவருக்கு அவனை நன்றாகத் தெரியும். அவர் அந்த ஏரியாவுக்குக் குடி வந்த புதிதில் பஸ் ஸ்டான்ட்டில் கடை திறந்திருந்தான். பஸ் நிறுத்தத்தில் பலசரக்குக் கடை திறந்து அப்பொழுதுதான் முதன்முறையாக அவர் பார்த்தார். கேட்கக் கூடச் செய்தார்.
முதல்ல கிடைக்கிற எடத்தைப் பிடிச்சிக்கிறுவோம்னு வந்திட்டேன் சார்…என்றான்.
பெரிய திட்டத்தோடுதான் அந்தப் பகுதிக்குள் நுழைந்திருப்பான் போலும் என்று நினைத்துக் கொண்டார். பகுதி ஜனங்களும் ஒன்றிரண்டு அவனிடம் வாங்கித்தான் பார்த்தார்கள்.
அதென்னங்க அந்தாளு யானை விலை குதிரை விலை சொல்றாரு… என்றார்கள் பிற்பாடு.
அங்கிருந்து மூணு கிலோமீட்டர் போனால்தான் மொத்த விலைக் கடைகளெல்லாம் வரும். எப்பொழுது உள் தள்ளி இடம் கிடைத்தாலும் சரி, வீடு கட்டிக் குடி வந்தால் போதும் என்று முனைந்து விட்டார்களோ அப்பொழுதே தள்ளித் தள்ளிப் போய் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ளவும் ஜனங்களும் தயார் ஆகி விடுகிறார்கள்தானே! வண்டியை எடுத்துக்கொண்டு சிட்டாய்ப் பறக்கிறார்கள்.
அவசரத்துக்கு வேண்டுமானால் ஒன்றிரண்டு போனால் போகிறது என்று இங்கே வாங்குவார்கள். அதுவும் தூரத்திற்கேற்ற நியாயமான விலையேற்றலாக இருந்தால் தொலைகிறது என்று ஏற்றுக் கொள்வார்கள். அந்த ரீதியில்கூட ஏற்க முடியாததாய் இருந்தால்?
அவன் அப்படித்தான் விலை சொன்னான். வியாபாரம் பண்ணத் தெரியவில்லையோ என்று தோன்றியது இவருக்கு. அவர் நினைத்தது சரிதான். கொஞ்ச நாளில் இடத்தைக் காலிசெய்து விட்டானே! ஆனால் ஒன்று அந்தப் பகுதியிலேயே வெவ்வேறு இடமாகத்தான் மாற்றிக் கொண்டிருந்தான். அவர் பார்க்கும் இந்த இடம் நாலாவதோ ஐந்தாவதோ!
அவனைப் பார்த்துப் பரிதாபப் பட்டிருக்கிறார் இவர். இந்தக் குறிப்பிட்ட கால இடைவெளியில் அவன் முடிகளெல்லாம் நரைத்திருந்தன. மீசை அட்டர் வெளுப்பாய் பளீரென்றது. அவன் தலை சீவப்பட்டு என்றுமே இவர் பார்த்ததில்லை. இருந்தமேனிக்கே அதன் போக்கில் அது வெளுத்துப் பறந்து விட்டதோ என்று தோன்றும். உழைப்புக்கேற்ற பலனை அடைய முடியாமல் திண்டாடுகிறானே என்று தோன்றும்.
எத்தனை இளமையாய் இருந்தான் வந்த புதிதில். பஸ் ஸ்டான்டில் கடை வைத்தாலும், எவனும் அவனிடம் வாலாட்ட முடியாது என்பது போலிருக்கும் அவன் தோற்றம். வெறும் தோற்றம்தான் அது என்று ஒருநாள் தெரிந்தது. முறுக்கு மீசைக்குள் கனிந்த மனம்.
எதிரே ஒரு சுடுகாடு. அடிக்கடி அங்கே பிணங்கள் வந்து விடும். ஆட்டமும் பாட்டமும் அமர்க்களப்படும். சாராய சாம்ராஜ்யம்தான். சலம்பல் அதிகமாக இருக்கும். மடேர் மடேரென்று கடைகளின் ஷட்டர்கள் இறங்கும். களேபரம் ஓயட்டும் பிறகு வியாபாரம் பார்த்தால் போதும் என்பதாக. இவன் கடை மட்டும் திறந்திருக்கும். அவன்பாட்டுக்குத் தன் வேலைகளில் ஈடுபட்டிருப்பான். ஒரு முறை கல் வந்து விழுந்தது.
அண்ணே…! கொஞ்ச நேரத்துக்கு அடச்சிருங்கண்ணே…நாங்க முடிச்சிட்டுப் போயிக்கிறோம்….இதைக் கல்லெறிந்து சொன்னார்கள்.
சாவுக்குத் துக்கம் கொண்டாடுவதுபோல் சுற்றுப் பகுதி கடைகளையெல்லாம் அடைக்கச் சொன்னார்கள் அவர்கள். மரியாதை பண்ண வேண்டுமாம். சொல்லாமலே அடைத்தவர்கள் பலர். எதற்கு வம்பு என்று. சொல்லி அடைத்தவர் சிலர். பிடிக்காமல் அடைக்காதவன் இவன் ஒருவனே…!
என்னை எதுக்கண்ணே அடைக்கச் சொல்றீங்க…நீங்கபாட்டுக்கு ஒங்க வேலயப் பார்த்திட்டுப் போங்க…நா என் வியாபாரத்தப் பார்க்கிறேன்…..அத விட்டிட்டு…? என்னமோ கடைய அடைக்கணுமாமுல்ல…? – முனகியது கேட்டுவிட்டது அவர்களுக்கு.
அவன் சொன்னது சரிதான். ஆனால் அவர்கள் கேட்க வேண்டுமே…?
அடுத்த நிமிஷம் அரிசி மூட்டை ரோட்டில் பறந்தது. உப்பு மூடை சாக்கடையில் விழுந்தது. செய்த தப்பிலும் ஏதோ கரிசனம் இருப்பதுபோல் தோன்றியது.
டே…டேய்…விடுறா…விடுறா…போதுண்டா….
இது சாம்பிள் போலிருக்கிறது. ரௌடித் தனத்தை முதலில் அப்படித்தானே காட்ட வேண்டும்.
காலையில் நடைப் பயிற்சி முடித்து வந்திருந்த இவர் ஓரமாய் ஒதுங்கி நின்று இவற்றையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தார்.
அந்த நகரின் குடியிருப்போர் சங்கத்திற்கு இவர் செயலராய் இருந்தார். முதலில் வந்தவரே அவர்தானே….வயல்காடுகளில் நடந்துதான் அவர் வீட்டைப் பல நாட்களுக்கு அடைந்து கொண்டிருந்தார்.
கிரஉறப் பிரவேசத்திற்கு அழைப்பிதழில் மேப் வரைந்து காண்பித்து ஆட்களை வருவித்தார். அப்படியும் திண்டாடியவர்கள் பலர். சகதியிலும் வரப்பிலும், தண்ணிரிலும் விழுந்து எழுந்து பல வேஷங்களில் வந்தார்கள் நண்பர்கள்.
நல்லாக் கட்டினீங்க சார் வீடு….! இந்த வார்த்தையிலேயே செத்துப் போனார் அன்று.
எவன் சார் தர்றான் சென்டு ஐயாயிரத்துக்கு…? என்றார் இவர். இன்றோ பதினைந்து வருடங்கள் ஓடி விட்டன. மூணு சென்டு, மூணு சென்டு என்று ப்ளாட் போட்டுப் போட்டு எல்லாம் நிறைந்து வழிந்து இன்று நிலத்தடி நீர் நானூறுக்குப் போயாயிற்று. ஆனாலும் சென்ட் மூணு லட்சம் சொல்கிறார்களே! அதெப்படி? அதுதான் ஆச்சர்யம்.!
சங்கம் ஆரம்பித்து ரோடு போட்டு, லைட் போட்டு, பஸ் கொண்டு வந்து, தண்ணி லாரிக்கு ஏற்பாடு செய்து (போர் தண்ணிதான் குடிக்க முடியாமல் ஆகிவிட்டதே!) நிறைய வீடுகள் நெருக்க நெருக்கமாயும், அளவிலடங்கா கடை கண்ணிகளும் எல்லாமும் வந்தாயிற்று. கசகசவென்று. இன்றுவரை அவனும் இருந்துகொண்டுதான் இருக்கிறான். அதுக்காக விரட்ட முடியுமா என்ன? சரியான உழைப்பாளியாயிற்றே! என்றாவது முன்னேறித் தலை நிமிர்ந்து நிற்க வேண்டாமா?
எப்படியாவது முன்னேறி விடுவது என்று தன் முனைப்பைக் கைவிடாது அவன் உழைப்பது போலிருந்தது. எந்தச் சூழ்நிலையிலும் அவன் சிறிதும் அசந்த மாதிரி இவர் கண்டதில்லை. இவர் வண்டியில் சென்று கொண்டிருக்கும்காலையில் பலமுறை அவனை எதிர்கொண்டிருக்கிறார். ஒரு சதவிகிதம் கூட அவனது வேகம் குறைந்து இவர் பார்த்ததில்லை. அவனது உழைப்பு வீண் போகக் கூடாது என்று இவர் மனம் அவாவியது. தனது வியாபார அனுபவத்தில் அவன் எல்லாவற்றையும் புரிந்து தன்னை மாற்றிக் கொள்ளக் கூடும். அப்பொழுது தான்யலட்சுமி அவனுக்கு அள்ளிக் கொட்டுவாள். வாழ்க அவன் உழைப்பு. வளர்க அவன் செல்வம் என்று எல்லாம் வல்ல சக்தியை வேண்டிக் கொள்வார்.
ரொம்பவும் ஆக்ஸிலேட்டர் கொடுத்து விரட்ட முடியாது. சத்தமும் வேகமும் அதிகமாகும். இரு பக்க வீடுகளில் நன்றாக உறங்கிக் கொண்டிருப்பவர்களின் தூக்கம் பாழாகும். வண்டியை விரட்டினால் அவை துரத்த ஆரம்பித்து விடும். எவை?
அதுதானய்யா…அதுதான். எதற்காக இந்த வயதுவரை அவர் பயந்து சாகிறாரோ அந்த நாய்ச்சனியன்தான். ரூட்டை மாற்றியதே அதற்காகத்தானே!
அதென்னவோ தெரியவில்லை நாய்களுக்கு அவரைக் கண்டால் மட்டும் ஒரு தனிப் பிரியம். நன்றாகச் சத்தமெடுத்துக் குலைக்கின்றன.வள் வள்ளென்று விழுகின்றன. கூர்மையாகப் பார்த்து வாயை அகலமாகத் திறந்து பற்களைக் கோரமாகக் காட்டுகின்றன. முன்னால் வளைந்திருக்கும் இருபக்க நீளப் பற்களை அப்படியே பதித்தால் குறைந்தது அரைக் கிலோ கறி நிச்சயம். காட்டிலுள்ள புலிகளுக்குத்தான் அப்படிச் சொல்வார்கள். இந்த நாட்டிலுள்ள தெரு நாய்களுமா அந்த வீரியத்தில் இருக்கும்.
எப்படி இத்தனை நாய்கள் சேர்ந்தன. பல தெரு நாய்களும் ஒன்றுகூடி விட்டனவோ…ஏழெட்டுப் பத்து ஓடுகின்றனவே! பலரும் ஓடி ஒளிகின்றனர். பெண்கள் பயந்து சாகிறார்கள். குழந்தைகள் குரலெடுத்து அழுகின்றன. யாருக்காவது அக்கறையிருக்கிறதா? இவருக்கும் பயம்தான். எல்லாவற்றையும் தானே கவனித்துச் செய்ய வேண்டியிருக்கிறது! செயலர் என்றால் எல்லாமுமா இப்படித் தலையில் விடியும்? சங்கக்காரர்கள் பத்துப்பேர் சேர்ந்துகொண்டு கையில் ஆளுக்கொரு கல்லுடன் கோஷ்டியாக விரட்டினால் என்ன? நினைக்கும்போதே கூடவே சிரிப்பும் கிளர்ந்தது. நமக்கென்ன வந்தது? பேசாமல் அடுத்த மீட்டிங்கில் ராஜினாமாவை நீட்ட வேண்டியதுதான். நாயடிப்பானே, பீயச் சுமப்பானே…!!
இருந்த பன்னியைப் பூராவும் விரட்டியாச்சு…தெருவுக்கு வந்த.பாம்புகளை நிறைய அடிச்சிப் போட்டாச்சு….இப்போ நாய் கிளம்பிருக்கு போலிருக்கு…?
பன்னி என்றதும், அந்தக் குட்டிகள் வாலை வளைத்து வளைத்து ஆட்டிக் கொண்டு ஒன்றை ஒன்று தொடர்ந்து தாயைப் பின்னோக்கி ஓடும் அழகு அவர் கண்ணுக்குள் வந்தது. ஆனாலும் இம்புட்டு எப்படிச் சேர்ந்தது. பன்னிப் பண்ணை ஏதாச்சும் இங்கிருக்கிறதா? இன்னும் கொஞ்சம் முன்னாடி இடத்தில் ப்ளாட்டை வாங்கிக் கட்டியிருக்கலாமோ? இங்கேயே மாடியில் நின்றால் பிணப்புகை மூக்கை வந்து அடைக்கிறது. சராசரியாக வாரத்திற்கு ரெண்டாவது வந்து விடுகிறது. நாகரீகம் மிஞ்சிய இந்தக் காலத்தில் இந்த இடத்தில் சுடுகாடா? கலெக்டரிடம் மனுக் கொடுத்து முயன்றபோது…
அந்த எடத்திலேர்ந்து எடுத்திருவியோ…அது எங்க பாட்டன் முப்பாட்டன் வந்து படுத்த எடமாக்கும்…எடுத்துப்பாரு பார்ப்போம்….கொல விழும் ரோட்டுல….ஏதோ போனாப் போவுதுன்னு பஸ்சு நிக்க எடம் விட்டா, அடி மடில கை வைக்கிறீகளோ…?
வேண்டாம் விட்ருங்க…பிறகு பார்த்துக்கலாம்…கலவரமான சூழ்நிலை இருக்கு….மேட்டர் ட்ராப்புடு….
கலெக்டரின் பதில் இப்படி வந்தது.
முன்னாடி என்றால் சுடுகாடே கண்ணுக்குப் பட்டுக் கொண்டேயிருக்கும் என்றுதான் சற்று உள்ளே தள்ளி வாங்கியது. ஆனாலும் என்றைக்கானாலும் அதுதான் கடைசிப் புகலிடம் என்பதுபோல் தினமும் புகை தழுவி ஞாபகப் படுத்திக் கொண்டேயிருக்கிறது.
கொல்லைப் புறத்தில் கதவைத் திறக்கும் முன் எப்போதும் காதில் விழும் அந்தச் சத்தம்.
சளப்….சளப்….என்று சாக்கடையில் மேயும் பன்றிக் கூட்டம். விரட்டி விரட்டி என்ன பாடு தினமும்…
அப்பப்பா…ஒரே களேபரம்தான்…கையில் கம்பிச் சுருக்கை வைத்துக் கொண்டு தெருக் கோடியில் ஒருவன். நுனியில் ஒருவன் என்று நின்று கொண்டு அந்தப் பெரிசை விரட்ட, அது தலைதெறிக்க அலறி ஓட, சற்றும் எதிர்பாராது தெரு நடுவில் மறைவிலிருந்து வெளிப்பட்ட ஆள் வதக் கென்று தடித்த கம்பால் ஓங்கி ஒரு அடி போட்டு அடுத்த கணமே கச்சிதமாய் கழுத்தில் கம்பிச் சுருக்கைப் விட்டு ஒரு இழு இழுக்க, அதற்குள் ஓடி வந்த ஆள் அதன் கால்களை அழுத்தி மிதித்துக் கட்ட, அப்பாடீ….என்ன ஓலம்…மரண ஓலமய்யா அது….காதில் அந்த அலறலை எவனாலும் கேட்கவே முடியாது. அன்று பூராவும் நினைவிலிருந்து அகலவே அகலாது அந்தச் சத்தம்! ஆனாலும் அந்தப் பன்றியை என்னமாய் அடக்கிப் பிடிக்கிறார்கள்? ஏதேனும் பயிற்சி கொடுத்திருப்பார்களோ! முரட்டுப் பசங்களய்யா….!!
ஒரு வழியாய் பன்றி புராணம் ஓய்ந்தது என்றால் இந்தப் பாம்புச் சனியன் எங்கிருந்து கிளம்பியது? அய்யோடா…! குலை நடுங்கி விட்டது இவருக்கு. அதுவும் கக்கூசில் மலஜலம் கழித்துக் கொண்டிருக்கும்போதா இப்படி எட்டிப் பார்க்கும்? தண்ணீர் இறங்கும் பேசினின் அந்தச் சிறு வட்டக் குழிக்குள் தேங்கி நிற்கும் தண்ணீரைச் சிலிர்த்துக் கொண்டு எங்கிருந்து வந்தது? ஆஉறா…! இப்படியுமா நடக்கும்? நடந்திருக்கிறதே!!
எக்ஸெஸ் வாட்டர் இறங்குறதுக்கு லூசுக்குழி போட்டு வெளில கனெக்க்ஷன் கொடுத்திருக்கீங்கல்ல சார்….அது வழியா வந்திருக்கும்…..
என்னெல்லாம் கஷ்டம் மனுசனுக்கு? அட, ராமச்சந்திரா…. வீட்டைப் பூட்டிவிட்டு தங்கையின் வீட்டுக்கு ஓடினார்கள் இருவரும். எதற்கு? அட, இதை வேறு சொல்லணுமா? காலைக்கடனுக்காகத்தானய்யா…
அன்று ஆபீசுக்கு லீவு போட்டார் இவர். பின்னே? அங்கே வேலை ஓட வேண்டாமா? ஃபைலுக்கு முன்னால் இதுவே ஞாபகம் வராதா? கூடவே கக்கூசும் அல்லவா ஞாபகத்துக்கு வரும்?
வீரன்….அதெல்லாம் எனக்குத் தெரியாது…இப்ப உடனே நீ இங்க வந்தாகணும்….என்றார் ஆபீஸ் வாட்ச்மேனுக்கு. செல்லக் கோபம். காரியம் ஆக வேண்டுமே?
ஒம்பது மணிக்கு ஷிப்ட் மாறுது சார்….லட்சுமணன வச்சிட்டு வந்திடறேன்…..
அப்பாடீ….எத்தந்தண்டீஈஈஈஈஈ…..? அவனே அதிர்ந்து போனான். முதல் பார்வையில் அவனுக்கே உடம்பு நடுங்கியது. செப்டிக் டாங்க்கின் ஒரு ஸ்லாப்பைப் பெயர்த்து ஜாக்கிரதையாய் விலக்கியபோது உள்ளே சுருண்டு படுத்துக் கிடந்தது மஞ்சச்சாரை. திறந்த சப்த அதிர்வில் உடம்பை நீட்டி அங்கும் இங்குமாய் அல்லாடியது. மூக்கைப் பொத்திக் கொண்டு வேடிக்கை பார்க்க எப்படி இத்தனை ஜனம் கூடியது கணத்தில்? செய்தி எப்படி அதற்குள் பரவியது? எதெதற்கு வேடிக்கை என்கிற விவஸ்தையே கிடையாதா? குறைந்தது ஏழடி எட்டடி இருக்கும். தடித்து உருண்ட செழிப்பான உடம்பு. வெளியேற வழி தெரியாமல் உள்ளுக்கும் குழாய் வழிக்குமாய் அல்லாடியிருக்கிறது. கக்கூசிலிருந்து செப்டிக் டாங்க் வரையிலுமான நீண்ட பைப் லைனில் இந்த நுனிக்கும் அந்த நுனிக்குமாய் எத்தனை நாள் வாசமோ? ஏற்கனவே கக்கூஸில் அமர்ந்திருந்த வேளைகளில் எட்டி எட்டிப் பார்த்திருக்குமோ? அடப் பாவமே! ராஜமும்தானே போய்ப் போய் வந்தாள்? ஈஸ்வரா! என்ன போறாத வேளை இது? அவள் பார்த்ததாகச் சொல்லவே இல்லையே? கவனித்திருக்க மாட்டாளோ? அப்படியா இருப்பது?
கவட்டை போலிருந்த தடித்த கம்பின் நுனியைக் கொண்டு தலையைப் பார்த்துக் குறி வைத்து ஒர்ர்ரே அமுக்கு. அப்படியே வாயைப் பிளந்து விட்டது பாம்பு. என்ன ஒரு அனுபவம்? பின்னே, அதை மேலே வரவிட்டா அடிக்க முடியும்? பாதி மலைப் பாம்பாய் நிற்கும் அதை மனிதன் நேருக்கு நேர் எதிர்கொள்ள முடியுமா?
வாலை மட்டும் தரைல வச்சிட்டு அப்டியே உடம்பத் தூக்கிப் பாய்ஞ்சிரும்யா…….ஒத்தாளால முடியவே முடியாது…இப்டித்தான் போடணும்…நல்லவேளை டாங்கில தண்ணி அதிகமில்லே…இருந்திச்சின்னா சிக்கல்…அடி விழாதுல்ல…இப்ப எப்டீ? ஒட்ரே அடில சாய்ஞ்சிருச்சில்ல…? – பெருமை பிடிபடவில்லை அவனுக்கு. உண்மைதான். அதற்கும் ஒரு சாதுர்யம் வேண்டும்தான். உடம்பு வியர்த்துவிட்டது இவருக்கு. காய்ச்சல் இறங்கினாற்போல….
கோடிக் கும்பிடு என்றார் வீரனுக்கு.
பொண்ணுக்கு சடங்கு வச்சிருக்கேன்யா…பணமிருந்தாக் கொடுங்க…என்றான் சமயம் பார்த்து. எத்தனை உரிமை?
அந்த நேரத்தில் பணமா பெரிசு? கேட்டதைக் கொடுத்தனுப்பினார்..
எல்லாக் களேபரமும் முடிந்து இப்போது நாயில் வந்து நிற்கிறது. பாடு, பாடு, ஒரே பாடுதான்.
வழக்கமான பாதையை இவர் தற்போது மாற்றியதே அதற்காகத்தான். நடைப் பயிற்சி போதாதென்று விடிகாலையில் உடற்பயிற்சி வகுப்பிற்குப் போகிறார். அதாவது யோகாசனம். வயதானவர்களும் செய்யலாமே! பணியிலிருந்து ஓய்வு பெற்று விட்டாலும், இவர் தன்னை வயதானவனாக எப்போதும் நினைத்துக் கொள்வதில்லை. இயற்கையாகவே அப்படி ஆகி விடக் கூடாது என்றுதான் இந்தப் பயிற்சிக்குச் செல்லலானார். டிராக் சூட் போட்டுக் கொண்டு, ஒரு டீ சர்ட்டையும் அணிந்து கொள்வார். தன்னைத்தானே கண்ணாடியில் பார்த்துக் கொள்ளும்போது சற்றுப் பெருமையாய்த்தான் இருக்கிறது. இன்னும் அத்தனை கிழடு தட்டவில்லை. ஓய்வு பெற்று விட்டால் அடுத்து சாகக் கிடப்பவன் என்றல்லவா நினைக்கிறார்கள்?
ஓய்வு பெற்ற மறுமாதமே ங்ஙேஏஏஏ…என்று ஆன பலரையும் இவர் பார்த்திருக்கிறார். அவரவருக்கு அவரவர் வாழ்க்கைப் பிரச்னைகள். பொருளாதாரப் பிரச்னைகள், பொறுப்புக்கள் என்று எத்தனையோ இருக்கும். அதைக் குறை சொல்லக் கூடாது. ஆனாலும் சர்வீசில் இருக்கும் கடைசி மாசம் வரை வீரியமாய்ப் பேசியவர்கள் எல்லாம் அதற்குநேர் மாறாய் மறுமாதமே இப்படி ஆக வேண்டாமே! என்று தோன்றும்.
இந்த யோகாசனப் பயிற்சிக்கு இவர் செல்வது சமீபமாய்த்தான். அதற்கு முன் மனைவியோடு நடைப்பயிற்சிதான் போய்க்கொண்டிருந்தார். ஒரு அமைதியான சாலையில் போய்க் கொண்டிருக்கும்போது சும்மாப் போன நாய் ஒன்றை விரட்டும் அடையாளமாய் இவர் ச்ச்சூ….என்க அது தானாகவே பயந்து ராஜத்தின் மேல் பாய்ந்து கையைப் பிறாண்டி விட்டது. நல்லவேளை ரவிக்கை கிழிந்ததோடு சரி. ஆனாலும் லேசான பிறாண்டல் ரெண்டு மூணு கோடாய் ரத்தச் சிவப்பாய்த் தெரியத்தான் செய்தது.
வாய வச்சிருச்சி….டாக்டர்ட்டப் போயி ஊசியப் போட்ருங்க….யாரோ ஒரு பெண்மணி அந்த அரையிருட்டில் சொல்லிக் கொண்டு போக பயந்து போனாள் ராஜம். அப்பொழுதே அழ ஆரம்பித்தாயிற்று. சில ஆண்டுகளில் வெறி நாய் போல மாறி வாயில் எச்சில் ஒழுக குலைக்க ஆரம்பித்து விடுவோமோ என்கிற அளவுக்கான கற்பனை கிளர்ந்திருக்கும் போலிருக்கிறது. இவரும் அரண்டுதான் போனார். சும்மாக் கிடந்தவளை வலிய இழுத்துக் கொண்டுவர அது இப்படியாகிப் போனதே! அன்றோடு சரி…இவர் மட்டும்தான் தனியாய் நடக்க ஆரம்பித்தார் பிறகு. ஆயிரத்து இருநூறோ, நானூறோ, அந்த ரேட்டு அந்த இஞ்ச்செக்க்ஷனுக்கு. அப்படியாக நாலு போட வேண்டியதாகி விட்டது.
பல்லு படலேன்னாலும் போட்ருவோம்…. – இவர்களை விட டாக்டர்தான் ரொம்பப் பயந்தது போலிருந்தது.
மனுஷனுக்குச் செலவு எப்படியெல்லாம் வருகிறது பாருங்கள்! பெரிய வயிற்றெரிச்சல். அன்றிலிருந்து அந்த ரோட்டிற்கு அவர் போவதில்லை. ஆனால் பலரும் போய்க் கொண்டுதான் இருந்தார்கள்.
நடந்து செல்கையில் ஓரத்துக் குடிசைகளில் ஆடு, கோழி என்று எது எது தென்பட்டாலும், அந்த அரையிருட்டில் எல்லாமும் நாயாகவே தெரிந்தது இவர் கண்ணுக்கு. அப்பொழுதிருந்துதான் நாய்கள் மீது ஒரு வெறுப்பு விழுந்தது. எங்கு நாய்களைக் கண்டாலும், வயதைப் பார்க்காமல் அதைக் கல்லெடுத்து அடிக்க வேண்டும் என்று தோன்றியது. ராஜத்தைக் கடித்த நாய்தானோ இது என்று சந்தேகத்தோடு பார்க்க நேரிட்டது. ஆங்காரம் பற்றிக் கொண்டு வந்தது.
வெறி நாய்னா அது சாகாம இருக்குதான்னு பார்க்கணும்… யாரோ சொல்லியிருந்தது தேவையில்லாமல் இப்போது ஞாபகம் வந்தது. அதுதான் அடுத்த ஒரு மணி நேரத்திற்குள் ஊசி இறக்கியாயிற்றே! பிறகென்ன பயம்…
இத்தனைக்கும் சில வருடங்களுக்கு முன் ஒரு நாய் வளர்த்தவர்தான் இவர். அப்படிப்பட்ட தானா இப்படியிருக்கிறோம் என்றும் தோன்றியதுதான். அது பெரிய கதை.
எந்தக் குட்டிக்காவது கரெக்டா இருபது நகம் இருக்குதா பாருங்க சார்…அப்டின்னா அதை என்கிட்டே கொடுத்திருங்க…
இப்படிக் கூறித்தான் அதை வீட்டுக்குத் தூக்கி வந்தார். பணிமனையின் ஒரு மூலையில் நான்கைந்து குட்டிகள் தென்பட்டன ஒரு நாள். தாயைக் காணவில்லை. சங்கடம் கொண்டோ அல்லது அருவருப்படைந்தோ அதை அங்கிருந்து அகற்ற முயன்றனர். அப்போதுதான் இவர் தன் நாயை அடையாளம் காண்பித்தார்.
இருபது நகம் இருந்திச்சின்னா நாய் சாத்வீகமா இருக்கும்…அனாவசியமா கடிக்காது…குலைக்காது…விரட்டாது…முரட்டுத்தனமும் இருக்காது…என்று தான் கேள்விப்பட்டிருந்த விஷயத்தை எல்லோருக்கும் எடுத்துச் சொன்னார். ஆங்கிலப் படம் பார்த்து வந்த ஒரு நாள் அதற்கு டோரி என்று பெயர் வைத்தார். அந்தப் பெயருக்கு ஏற்றாற்போல் என்ன ஒரு கம்பீரம் அதனிடத்தில். நிறம், உயரம், பருமன் என்ற சகல அம்சங்களும் கூடியிருந்தன அதற்கு. அது ஒரு நாள் காணாமல் போயிற்று. அப்பொழுது இவரிடம் சைக்கிள்தான் இருந்தது. இங்கு வீடு கட்டிக் குடி வராத நேரம் அது. சைக்கிளில் ஊர் பூராவும் அலசி விட்டார்…ஊறீம்…தட்டுப்படவேயில்லை.
நீங்க வருத்தப்படாமப் போங்க சார்…நாலஞ்சு நாள் கழிச்சு தானே வந்திரும்…ஐப்பசியிலேயிருந்து தை வரைக்கும் அப்டித்தான் இருக்கும்… அந்தக் கறிக்கடைக்காரர்தான்சொன்னார்.
இவருக்குப் புரியவில்லை. நாய் வளர்ப்பவர் எல்லாமும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பது அப்போதுதான் புரிந்தது இவருக்கு.
ஏதாச்சும் பொட்டையப் பார்த்திருக்கும் சார்…விரட்டிக்கிட்டுத் திரியும்…மசியறவரைக்கும்விடாது…அதுனால வரும்…பேசாமப் போங்க…..
என் நாய் கூடவா அப்படி? என்று தோன்றியது இவருக்கு. குடியிருக்கும் சந்தைவிட்டு என்றுமே அது தாண்டியதில்லையே! அந்த மாதிரிக் கெட்ட எண்ணங்கள் அதற்கு வர வாய்ப்பேயில்லையே! இல்லையென்றால் அன்று அப்படிச் செய்யுமா?
என்ன ராஜம், இப்டிக் கத்துது? என்றார் மனைவியிடம். வெளிக்கிருக்கணுமோ என்னவோ? என்றவாறே தூக்கக் கலக்கத்தோடு எழுந்து வந்து சங்கிலியை அவிழ்த்து விட்டார். அவ்வளவுதான். ஓரே பாய்ச்சலில் வெளியில் ஓடி விரட்டியது அவர்களை. தப்புச் செய்ய வந்தவர்கள் என்று எப்படித்தான் புரிந்து கொண்டதோ? அத்தனை நேரம் ஏன் அந்தக் கத்துக் கத்தியது என்று அப்பொழுதுதான் தெரிந்தது. விரட்டிய விரட்டலில் கூட வந்தவளையும் இழுத்துக் கொண்டு வேட்டி அவிழ அந்த ஆள் ஓடிய ஓட்டம் இன்றைக்கும் மறக்க முடியாது. சந்து காலியாக, அமைதியாய் வந்து தன்னிடத்தில் படுத்துக் கொண்டது.
கறிக்கடைக்காரரிடம் கேட்டே இருக்கக் கூடாது என்று நினைத்தார். தன் நாய்க்கு இவர் கறி போடுவதில்லை. சுத்த சைவம்தான். டோரியின் மிதமான குணமே அதற்கு சாட்சி. மட்டன் வாசனை காட்டினால் முரட்டுத்தனம் அதிகமாகும் என்று கேள்விப்பட்டிருந்தார். ஒரே ஒரு முறை ரெண்டு எலும்புகள் வாங்கிப் போட அன்று டோரி குதித்த குதியும், குலைத்த குலைப்பும் சொல்லி மாளாது. ஒரு வேளை புதிய ருசிக்கு அந்தக் குதியோ என்னவோ? நாம் நாக்கு ருசிக்கு அலைவதில்லையா? அன்றோடு நிறுத்தி விட்டார். .
அங்கே இங்கே பார்த்ததாகப் பலரும் சொன்னார்கள். ஆனால் இவர் கண்ணுக்கு மட்டும் தட்டுப்படவேயில்லை. என்ன ஆச்சரியம்!
அதான் சார் நாய்கிட்டே ஒரு குணம்…போயிருவோம்னு நினைச்சிருச்சி, வளர்த்தவங்க கண்ணுல மட்டும் படவே படாது.
எம்பிள்ளை மாதிரி வளர்த்தேன் நாயுடு…ரொம்பவும் வருத்தப்பட்டுச் சொன்னார்.
ஒண்ணு சொல்றேன் தெரிஞ்சிக்குங்க…நாய்க்கு மொத்தமே பதினாறு பதினேழு வருஷந்தான் கணக்கு…பதினஞ்சு கழிஞ்சாலே அந்திம காலம்னு அர்த்தம். வெறி பிடிக்கிறதுங்கிறதும் அப்பத்தான்…எப்டியாவது வளர்த்தவங்ககிட்டேயிருந்து பிரிஞ்சிடும்…அதுக்குத் தெரியும்…தன்னை ஆளாக்கினவங்களுக்குத் தொந்தரவு கொடுக்கக் கூடாதுன்னு…கண்ணுலயே படாம, கால் போன போக்குல போய்க்கிட்டே இருக்கும்….
நாயுடு சொன்ன இந்தச் சேதியே இவர் எண்ண ஓட்டங்களில் சுற்றிச் சுற்றி வந்தது. சந்து சந்தாகப் புகுந்து முகத்தை யாருக்கும் காட்டாமல் அடையாளம் மறைத்துக் கொண்டு டோரி போய்க் கொண்டிருப்பதுபோல் தோன்றியது. கைவிடப்பட்ட முதியோர்களின் நிலைக்கு அது தள்ளப்பட்டுவிட்டது போல பிறருக்கு பாரமாக இருக்க விரும்பாமல் கால்போன போக்கில் போய்க் கொண்டிருக்கும் அநாதை ஜீவன்களைப் போல, டோரியைப் பற்றிய நினைவுகளே இவரைப் பெருமூச்சடையச் செய்தன.
இன்றும் கூட வாட்டத்தான் செய்கின்றன அந்த நீங்காத நினைவுகள். என்றாவது கண்ணில் பட்டுவிடாதா என்று அவ்வப்போது அந்த எண்ணம் எழுந்து இவர் கண்கள் பரபரக்கும். அலுவலகப் பணியாக பக்கத்து பக்கத்து ஊர்களுக்குச் செல்லும்போதெல்லாம் மானசீகமாக, யாரிடமும் சொல்லாமல் எவ்வளவு தேடியிருக்கிறார்? நாய்களைப் பற்றி நாயுடு சொன்னவை பொய்யாகிவிடாதா என்று அவர் மனம் எவ்வளவு ஏங்கியிருக்கிறது? எங்கே சோறு தண்ணியில்லாமல் சுருண்டு கிடக்கிறதோ என்று எண்ணி மனதுக்குள் எவ்வளவு அழுதிருக்கிறார். கழுத்தில் கம்பிச் சுருக்குப் போட்டு வண்டியில் தூக்கி எறிவது போலவும், தலையில் கட்டையால் அடித்துக் கொன்று ஊருக்கு வெளியே உள்ள குப்பை மேட்டில் கொண்டு வீசுவதுபோலவும் கனவு கண்டு அலறியிருக்கிறாரே! அவர் டேபிளில் அதோடு நிற்கும் போட்டோ கண்ணில் தினமும் பட்டுக் கொண்டேதான் இருக்கிறது. அந்த ஒரு நாய்தான் அவர் தன் வாழ்க்கையில் நேசித்த நாய். மற்றதெல்லாம் அவருக்கு எமனாய்த்தான் தெரிகின்றன இன்றுவரை. அன்று ஏற்பட்ட மனக்கஷ்டம் வெகு நாளைக்கு விலகாமல் இருந்து, நிரந்தரமாகி, நாளடைவில் அது பிறவற்றிடம் வெறுப்பாக மாறிவிட்டது.
இதோ இப்போது புதிய பாதையில் அவர் போய்க் கொண்டிருக்கிறார். இது அவரே விரும்பித் தேர்ந்தெடுத்த பாதை. இதுநாள்வரை சென்று கொண்டிருந்த வழியில் கூட்டமாய் நின்று குலைத்துத் தள்ளிய அவைகளிடமிருந்து தன்னை நீக்கிக் கொள்ள இப்பொழுது இந்தப் பாதையில் போய்க் கொண்டிக்கிறார். இனிமேலாவது இந்தத் தொல்லை இருக்கக் கூடாது என்றுதான் இப்பொழுது இந்த வழியை அவர் தேர்ந்தெடுத்திருக்கிறார். ஆனாலும் என்ன அது? என்னவோ உறுமல் மாதிரிக் கேட்கிறதே! கொஞ்ச நாள் கழித்தாவது இந்தச் சங்கடம் தொடரக் கூடாதா? அதற்குள்ளேயுமா? இன்னும் தனக்கே சரியாகப் பிடிபடாத வழியில் அதற்குள்ளேயும் இப்படியா? பின்னால் அந்தக் காருக்கு அடியில் இருந்துதான் அந்தச் சத்தம் வருகிறது.கரெக்ட்…அங்கிருந்துதான். இதென்னடா புதுத் தொல்லை…?
இவர் அந்த இடத்தை நெருங்க நெருங்க சத்தம் அதிகரிக்கிறது. அப்பாடீ…என்ன கடூரமான உறுமல் இது…புலி கணக்காய்….விக்கித்துப் போனவராய் வண்டியின் ஆக்ஸிலேட்டரைத் தன்னையறியாமல் அதிகப்படுத்துகிறார்.
ஸ்ஸ்ஸ்சனியன்…..பல்லைக் கடித்துக் கொண்டு அவர் வாய் அழுத்தி உச்சரிக்கிறது. உடம்பில் எப்பொழுதுமில்லாத ஒரு நடுக்கம். திரும்பவும் பயம்.
எங்கிருந்தோ பறந்து வந்த ஒரு கல், கணக்காய் அடியில் இருட்டுக்குள் படுத்திருந்த அதன் மேல் சென்று விழ…வள்ள்ள்ளென்று சத்தமெடுத்துக் குலைக்கிறது அது….வெளிப்போந்ததா இல்லையா? சத்தம் மட்டும்தான் கேட்கிறது?
.ஏய்…மணீ…. சும்மா இருக்க மாட்டே…..அட்டீ…கேக்குதா…..? ஏ…ஏ…ஏ….ச்சீ…!
இரண்டாவது கல்லை எடுத்து ஓங்கியவாறே…
நீங்கபாட்டுக்குப் போங்க சார்…அது ஒண்ணும் செய்யாது…நம்ம நாய்தான்…..
கடைக்குப் பக்கத்தில் மின் கம்ப விளக்கு எரியாத கும்மிருட்டுக்குள் நின்று சொல்லிய அந்த முறுக்கு மீசைப் பலசரக்குக் கடைக்காரனை நன்றியோடு கூர்ந்து பார்த்தவாறே வண்டியை வேகமெடுத்தார் சுப்புரத்தினம். என்ன கிரகம் இது?
ச்சே…! அநியாயமா என் டோரி காணாமப் போயிடுச்சே…!! அது மட்டும் இப்போது இருந்தால்?
ஏனோ அந்த நேரத்தில் அப்படித் தோன்றி அவர் மனசைச் சங்கடப்படுத்த ஆரம்பித்தது. தான் இப்போது குடியிருக்கும் அப்பகுதிக்குக் கட்டாயம் டோரிபோல் ஒன்று தேவையோ என்பதாய்த் தோன்றி, அந்தச் சங்கடம் திடீரென அவரிடம் விஸ்வரூபமெடுத்த போது, தன் டோரியைப்போல் ஒன்றை மீண்டும் தேடிப் பிடித்து வளர்த்தால் என்ன? என்ற புதிய யோசனை விரைவாய் அவர் மனதை ஆக்ரமித்துக் கொண்டது.
கிடைக்குமா? என் அன்பு டோரி…நீ எங்கடா இருக்கே…? நீண்ட யோசனையோடு பெருமூச்சும், ஏக்கமும் கூடவே வந்து ஒட்டிக் கொண்டது அவரிடம்.
----------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக