18 ஜனவரி 2024

 

சிறுகதை          வாடிக்கை மறந்ததும் ஏனோ...?   பிரசுரம் ராணி வார இதழ்  (21.01.2024) சிறுகதைப் போட்டி ஆறுதல் பரிசுக் கதை     




                                                 

      ட்டுச் சட்டென்று மின்னலாய்த் திரும்பி மறைந்து விடுகிறான் அவன். என்னவொரு சுறுசுறுப்பு. அவன் சைக்கிள் போகும் வேகத்திற்கு, பின்னால் பிளாஸ்டிக் டப்பாவில் அடுக்கியிருக்கும் பால் பாக்கெட்டுகள் துள்ளிக் கீழே விழுந்து விடக் கூடாதே என்றிருந்தது இவனுக்கு. அத்தனை குதியாட்டம் டப்பாவுக்குள். அவன் பரபரக்கும் அந்தப் பகுதித் தெருக்கள் அனைத்தும் மேடும் பள்ளங்களுமாகத்தான் இருக்கின்றன. அது ஒரு தனிக் காலனி. அதிலேயே இஷ்டத்திற்கு விட்டு அடித்துக்கொண்டு போகிறான் அவன். குறிப்பிட்ட நேரத்திற்குள் அந்த வேலையை முடிக்க வேண்டும் என்கிற கட்டாயமோ என்னவோ?

ஒரு நாள் கூட முகத்தைச் சரியாய்ப் பார்த்ததில்லை நான். அவன்தான் மின்னலாய்த் தோன்றி  மறைகிறானே…? ரொம்பப் பெரிய ஆளும் இல்லை, சின்னப் பையனும் இல்லை. அதற்காக இளைஞனும் இல்லை என்றுதான் தோன்றியது. வயது கடந்து கொண்டிருக்கும் அவனிடம் எதையோ விரட்டிக் கொண்டிருக்கும் துடிப்பு. அதனால் உண்டான பரபரப்பு. காலில் வெந்நீர் கொட்டிக் கொண்ட கதைதான்.

இவன்தான் அவனைப் பார்க்கத் துடிக்கிறானே தவிர, அவன் இம்மியும் திரும்பிப் பார்த்ததில்லை. அடுத்த வீடு, எதிர்த்த வீடு, அதற்கடுத்த வீடு என்று ஒரே குறியாய்ப் பறந்து கொண்டிருக்கிறான், காரியார்த்தமாய். கருமமே கண்ணுக்குக் கண்ணாய்…!

இன்னும் இந்த உலகத்தில் உழைப்பின் மீது தீராத, சலியாத நம்பிக்கை கொண்டு, அதன் மூலம் கிடைக்கும் வருமானம் போதும் என்கிற திடமான மனதோடு, அதில் கட்டு செட்டாகக் குடும்பம் நடத்தி, சேமித்து, உடல் நலம் பேணி, சந்தோஷித்து….இப்படி எத்தனை பேர்களுக்கு இந்த உலகம் தீர்மானமாக இயங்கிக் கொண்டிருக்கிறது.  கேள்விப்படும் எத்தனையோ ஊழல் அராஜகங்களுக்கு மத்தியிலும் எப்படி இவர்களால் இத்தனை திடமாக இயங்க முடிகிறது? சேர்க்கை சரியில்லேன்னா எல்லாந்தான் கெட்டுப் போகும் என்பார்களே, அதுபோல் கேள்விப்படும் எல்லாமும் சாதாரண மனிதனைச் சலனப்படுத்தி முடக்கத்தானே செய்யும்….நாம மட்டும் எதுக்கு இத்தனை கஷ்டப்படணும்? ஒரு கணம் அவனவன் நினைத்தால் போதாதா? …. ரணகளம் ஆக எத்தனை நேரம் ஆகும்? …..ஒட்டு மொத்த மனிதச் சமுதாயத்தின் பெரும்பகுதி இன்று அந்த திசையில்தானே படிப் படியாய்ப் போய்க் கொண்டிருக்கிறது? சாதாரணர்கள் எவ்வளவு காலந்தான் பொறுத்திருப்பார்கள்? அடங்கிக் கிடப்பார்கள்?

பொழுது விடிந்தால் ஒரு பக்கம் குடத்தைக் கட்டிக் கொண்டு தண்ணீருக்கு அலையும் மக்கள், தலையில் கூடையைச் சுமந்து கொண்டு காய்கறி விற்கும் பெண்கள், ஒரு கூடைப் பூவைச் சுமந்து, தெருத் தெருவாய்க் கூவி, முழம் முழமாய் விற்று, காசு பார்த்து பிறகு உலை வைக்க வீடு நோக்கி விரையும் பெண்,

ஒரு மூடை உப்பை ஈரம் தோயத் தோய சைக்கிளில் கட்டி, பாலன்ஸ் இல்லாமல் ஆட்டு ஆட்டு என்று ஆட்டிக்கொண்டே ஓட்டிச் சென்று அங்கங்கே திங்கு திங்கென்று குதித்து, தாங்கிப் பிடித்து நின்று,  படி படியாய் விற்று  உழைப்பின் மகிமையில் தன்னம்பிக்கையோடு அயராமல் காசு பார்க்கும் தொழிலாளி, வீடு வீடாய்ப் பேப்பர் போடும் பையன், இன்னும் பழக்கம் விடாமல், உயரமான கேனில் பாலைச் சுமந்து கொண்டு, கிணி கிணியென்று மணியடித்து சலிக்காமல் வீடு வீடாய் இறங்கிப்  பால் ஊற்றிச் செல்லும் வியாபாரி, அங்கங்கே ஓரமாய், தானே அமைந்த இடத்தில் மாட்டைக் கட்டி, காலப்போக்கில் அதை ஒரு கொட்டகையாக்கி, சொந்த இடமாய் வரித்து, விடிகாலை நாலு நாலரைக்கெல்லாம், சிலையாய்க் குத்திட்டு அமர்ந்து, சர்ர்ர்ர்க்……சர்ர்ர்ர்க்…….கென்று பால் கறக்கும் கறவையாளா், கறந்த பால் கறந்தபடி என்று காத்திருக்கும் வீட்டுப் பெண்மணிகள்….அடேயப்பா…இந்த உலகம் இவர்களுக்காகவல்லவா இன்னும் முறையே விடிந்து இயங்கிக் கொண்டிருக்கிறது…! இவர்கள்தானே இன்னும் நியாயங்களையும், தர்மங்களையும் மதிப்புமிக்க விஷயங்களையும் தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள்…!  அவ்வப்போது எங்கேனும் இடிஇடித்து இன்னும் மழை பொழிந்து விடுகிறதென்றால் அது இந்த தர்மாத்மாக்கள் இன்றும் விடாமல் பிடித்துக் கொண்டிருக்கும் காலம் காலமான அடிப்படை ஒழுக்க விழுமியங்களால்தானே…!

சார், நின்னு போங்க….அங்க பள்ளமிருக்கு பாருங்க…? – சத்தம் கேட்டபின்னால்தான் இவனுக்கு உணர்வே வந்தது.

தினமும் வந்து போகும் இடம்தான் என்றாலும் அந்தக் குறிப்பிட்ட இடத்தில் நெருங்கும்போது சற்றுத் தடுமாறித்தான் விடுகிறது. ஒருநாள் அந்தப் பள்ளத்தில் கழுதை ஒன்று விழுந்து விட்டதும், கால்களை மேலே எடுத்து வைத்து, எடுத்து வைத்து விடாமல் அது சறுக்கிக் கொண்டிருந்ததும், அடடா, யாரு இதை மேலே கொண்டுவரப் போறாங்க என்று நினைத்துக் கொண்டே தான் போனதும், வீட்டில் அந்தக் கழுதை நினைவாகவே இருந்ததும்,

உங்களுக்கு வேறே பொழப்பே இல்லை….சதா இப்டி ஏதாச்சும் வேண்டாததை நினைச்சிட்டேயிருக்க வேண்டியது….மனசைத் தேவையில்லாமச் சங்கடப்படுத்திக்க வேண்டியது….எங்கிட்டப் புலம்ப வேண்டியது….வேறென்ன தெரியும் உங்களுக்கு…..?

இனிமே அழுக்குச் சுமக்க உதவாதுன்னு ஆகிப் போன கழுதைங்கன்னு சிலது இருக்குமாம்…அதுகளை வித்துடுவாங்களாம்….அந்தக் கதை தெரியுமா உனக்கு?

மூட்டையைத் தூக்கி முதுகுல வச்சா அதுபாட்டுக்கு நடக்கப் போறது…இதுல உதவாதுன்னு என்ன வந்தது? அதிசயமா இருக்கு நீங்க சொல்றது?

அப்டியில்லடீ….அதுக்கும் உதவாம ஆகிப் போகுமாம் சிலது….முதுகுல சுமையை ஏத்தினா, படக்குன்னு கால் மடிஞ்சு போயிடுமாம்….உட்கார்ந்துக்கிடுமாம்….பிறகு எழுப்பவே முடியாதாம்….சண்டிக் குதிரைன்னுதானே கேள்விப்பட்டிருக்கோம்….சண்டிக் கழுதையும் உண்டு…ஆனா அப்புறம் அது தண்டக் கழுதைதானாம்….அந்த ஸ்டேஜ்லதான் வித்துப்புடுவாங்களாம்….

அதுக்குன்னு இருக்கிற ஒரு வேலையே பொதி சுமக்குறதுதான்…அதுக்கும் அது லாயக்கில்லேன்னு ஆனப்புறம், அதை விக்கிறதுன்னா எவன் வாங்குவான்? என்னத்துக்குன்னு வாங்குவான்….அதையென்ன அடிச்சா திங்க முடியும்? தென்னந்தோப்புல உரமாப் புதைப்பாங்கன்னு கேள்விப்பட்டிருக்கேன்….நாயைக் கூட அப்டிச் செய்வாங்களாமே…..போதும் உங்க கழுதைப் புராணம்…..….காலங் கார்த்தால எதாச்சும் சாமி ஸ்லோகம் சொன்னாலும் புண்ணியமுண்டு….- சலித்துக் கொண்டாள் அவள்.

இதுக்கெல்லாம் மனசு இறக்கப்படலேன்னா அதுல என்னடீ புண்ணியமிருக்கு? எங்கயோ முகம் தெரியாத பலபேர் விபத்துக்கள்ல இறந்து போகும் போது மனசு பரிதாபப்படுதில்லையா….அவங்க நலத்துக்காகக் கடவுள வேண்டுறதில்லையா….அது மாதிரி ஒரு ஜீவன் கஷ்டப்படும்போதும் மனசு இரங்கத்தானே செய்யணும்….

உங்களுக்கு இரங்கிறதோல்லியோ, அது போதும்….வாழ்க்கைல நேரா, கோணிக்காம இருக்கிறவா எல்லாருக்கும் மனசுல அந்த இரக்கம் இருக்கும்…இப்டி உங்களை மாதிரிச் சொல்லிக்கிறவாளுக்கு மட்டும் அது மொத்தக் குத்தகை இல்லே….

அது சரீடீ…நானென்ன இப்ப உனக்கு இரக்கமில்லேன்னா சொன்னேன்…கதையைக் கேளு….அந்த மாதிரி உதவாக்கரைக் கழுதையை பேய் வீடுகள் இருக்கில்லே….அங்கே ராத்திரிக் கட்டிப் போட்டுட்டு வந்துடுவாங்களாம்….தனியாக் கிடந்து அலறி, குடியைக் கெடுத்து, கத்தித் தீர்க்குமாம் அது பயத்துல…..காலைல போனா அந்தக் கழுதை செத்துக் கிடக்குமாம்…..அந்த வீட்டை விட்டுப் பேயும்  விலகிடுமாம்….இந்தக் கதையை எங்கேயாச்சும் கேள்விப்பட்டிருக்கியா நீ…?

கழுதைய விடுங்க…… - சொல்லிவிட்டுச் சிரித்தாள் என் தர்மபத்தினி. எனக்கா மனசைப் போட்டு அரித்தது இந்த நினைப்பு. காலம் காலமாய் ஒருவனுக்கு உழைத்த ஒரு ஜீவன், கடைசியாய் இதற்கா பயன்பட வேண்டும்? இந்தக் காரியத்திற்காக நல்ல விலைக்குப் போகும் என்று கேள்விப் பட்டிருக்கிறேன் நான். அப்படியும் மனசாகுமா ஒருவனுக்கு? வறுமையிற் செம்மையாயிருப்பவராயிற்றே? எப்படி இதற்கு மனமுவந்து ஒப்புகிறார்கள்? மனமுவந்தா, மனசு வெறுத்தா?

கழுதைப் புராணம் அத்தோடு முடிந்தது. அந்தக் கழுதைப் பள்ளத்தில் அந்த மின்னல் இறங்கிவிடாமல் இருக்க வேண்டுமே  என்று என் மனது அரிக்க ஆரம்பித்திருந்தது இப்போது. காரணம் அவன் வேகம் அப்படி…! மனசு எது எதற்கெல்லாமோ ஏன் இப்படிப் பயப்படுகிறது? நினைத்து மறுகுகிறது?

சார்…சார்….!!! – யார் அது இப்படிக் கத்துவது? வண்டியை வேகம் குறைத்துத் திரும்பினேன்.

அந்தக் கடை வாசலில் நின்ற பெண்தான் கத்தியது.

என்னங்க…?

பால் வாங்கிறதில்லியே சார் இப்பல்லாம்….ஏன் சார் நிறுத்திப்புட்டீங்க…? பையன் கரெக்டாத்தான சார் கொண்டாந்து போட்டுக்கிட்டிருந்தான்…

அதுவா…? காலைல வாக்கிங் போறேன்லம்மா…..திரும்பி வர்ற வழிக்கு அப்டியே காசு கொடுத்து வாங்கிட்டுப் போயிடுறது….-தயங்கியவாறே என்னைப் பார்த்தது அது. பிறகு சொன்னது.

அதை எங்ககிட்ட வாங்கலாம்ல சார்….ரெகுலரா மூணு மூணு பாக்கெட் போட்டுக்கிட்டிருந்தான் பையன்….காலைல நேரத்துக்கு உங்க வீட்டுல போட்ருவான்…..சுத்தமா நிப்பாட்டிட்டீங்களே சார்….

எனக்கா படு சங்கடமாய்ப் போனது. இப்படி அந்தப் பெண் வாய்விட்டுக் கேட்கும் என்று நான் எதிர்பார்க்கவேயில்லை. முகத்தில் அசாத்திய வருத்தம்

. நீங்கள்லாம் நிப்பாட்டுவீங்கன்னு எதிர்பார்க்கவேயில்ல சார்…உங்கள மாதிரி நினைக்காதவங்கல்லாம் நாலு பேர் நிப்பாட்டிட்டா பிறகு என்னதான் செய்றது?பொழப்பு என்னதான் சார் ஆறது?  – அடடா, அந்தக் குரலில்தான் என்னவொரு துக்கம்?

சின்னப் பெண்…அல்ல..குட்டிப் பெண். இந்த வார்த்தைதான் படு பொருத்தம்.  இப்பொழுதுதான் கல்யாணம் ஆயிற்று. அதற்குள் ரெண்டு குழந்தைகளைப் பெற்றாயிற்று. மரப்பாச்சி போல் இருக்கும். சுங்குடிப் புடவை உடுத்தி பொம்மையாய், மாமியாய் நிறுத்தினால் அப்படியொரு அழகு சொட்டும். அது தன் அழகைத் தானே  உணரும் முன்னேயே அதற்கொரு திருமணத்தைச் செய்வித்து, அதைப் பிள்ளைத்தாய்ச்சியாய் நிறுத்தி, இன்று ரெண்டு பிள்ளை பெற்ற அம்மாவாகவும் ஆக்கிவிட்டார்கள். தன் இளமைப் பருவத்தை உணர்ந்து, அந்தப் பருவத்துக்கே உண்டான கனவுகளைத் துரத்தியிருக்குமா என்று கூடத் தெரியவில்லை.  என்னவோ தெரியாது அது முகத்தைப் பார்க்க எனக்கு மிகவும் பிடிக்கும். பிடித்துப் பிடித்து வைத்தாற்போல மூக்கும் முழியுமாய்….கடவுள் இருக்கும் இடம், இல்லாத இடம் என்று பார்த்தா அழகைக் கொண்டு வைக்கிறான்?

சில ஆண்டுகளாக அவர்களிடம்தான் பால் வாங்கும் பழக்கம் இருந்தது. திடீரென்று என்னவோ அதிகம் கொடுப்பதாய்த் தோன்ற நிறுத்த வேண்டியதாகிவிட்டது. சுசீலாவின் வலுவான வாதம் என்னைத் தோற்கடித்தது.

பாக்கெட்டுக்கு ஒரு ரூபா கூட வைப்பாங்களாம். அது போக கொண்டு வந்து போட சர்வீஸ் சார்ஜாம்…..அவங்ககிட்டப் பால் வாங்கிறதுதானே அவங்களுக்குப் ப்ளஸ்…..வாடிக்கையாளரைச் சேர்க்கிறதுதானே முக்கியம்…அப்புறம் என்ன சர்வீஸ் சார்ஜ் வேறே…? – சுசீலா கணக்குப் பண்ணிக் கேட்டது புரிந்தது.

அடிக்கடி அவள் இதைச் சொல்லப் போக பிறகு எனக்கும் உரைக்க ஆரம்பித்தது. நிறையத் தண்டம் கொடுக்கிறோமோ? மத்தியதர வர்க்கப் புத்தி. தப்பில்லையே…?

மாதாந்திரக் கார்டு வாங்கினா அதுக்கு ஆபீஸ்ல  ஒரு ரேட்டு….கையில காசு கொடுத்து டெப்போல வாங்கினா அதுக்கு இன்னொரு ரேட்டு….இவங்களைக் கொண்டு வந்து போடச் சொன்னா அதுக்கு வேறொரு ரேட்டா? கொண்டுவந்து போடுறதை ஃப்ரீ சர்வீசாத்தானே செய்யணும்?பால் ரேட்டை வேறே உயர்த்திட்டு,  சர்வீஸ் சார்ஜ் பண்ணினா எப்படி? ஏதோ உங்களுக்காக நாங்க சிரமப்பட்டுச் செய்யறோம்ங்கிற மாதிரி?

மக்கள் வரிப்பணத்துல திட்டங்கள் கொண்டுவர்ற போது நாட்டுக்கு “அர்ப்பணிக்கிறார்” ன்னு ஏதோ இவுங்க பாக்கெட்டுலேர்ந்து பணம் போட்டு மக்களுக்கு நல்லது செய்றமாதிரிப் போட்டுக்கிறாங்களே அது மாதிரில்ல இருக்கு இது…..ஐம்பது வருஷமாப் பொதுச் சேவைல இருக்கேன்ங்கிறானே அரசியல்வாதி….அவன நாமளா கூப்பிட்டோம்…? அவனுக்கு வேண்டியிருந்தது, வந்தான்….அவன் சொந்தப் பொழப்பை நடத்துறதுக்காக மெனக்கெட்டுண்டு இருக்கான்….சர்வீஸ்ங்கிறது வாய்விட்டுச் சொல்லிக்கிறதா என்ன? சேவைன்னா என்ன அர்த்தம்?  அது உணரப்பட வேண்டியதில்லையா? சுயநலமில்லாததில்லையா? அப்டியா இருக்காங்க இன்னைக்கு? முதுகுவலியோட வந்து பேசறேன்…கழுத்து வலியோட வந்திருக்கேன்னு சொன்னா, உன்னை நாங்களா கூப்பிட்டோம்…உன் சுயநலம் வர்றே…மக்களை ஏமாத்தறே… அது மாதிரில்ல இது இருக்கு…..ஒரு பொருள் உற்பத்தி ஸ்தானத்துலேர்ந்து மக்களோடு கைக்கு வந்து சேர்றவரைக்கும் என்னென்ன செலவுகளெல்லாம் சேருமோ அது போல இந்த மாதிரிச் சின்னச் சின்ன விஷயங்களையெல்லாம் காஸ்ட்லி ஆக்கிப்புட்டாங்களே? இது சரியா? அவங்க வியாபாரம் கொழிக்கணும்னா, நிலைக்கணும்னா சில சேவைகளை விட்டுத்தான் கொடுக்கணும்ங்கிற நியாயமான புரிதல் கூடக் கிடையாதா?

அடேயப்பா…! என்னவொரு புரிதல் இவளுக்குத்தான்….? எனக்குத் துல்லியமாய்ப் புரிந்து போனது. இப்படியெல்லாம் நான் யோசித்ததேயில்லை. பெரும் சொத்தை இழந்து போனதைப் போல் படக்கென்று நிறுத்திவிட்டேன் பால் போடுவதை. சுற்றிவிட்ட பம்பரம்போல் ஆடுவதுதானே நமக்கு வேலை…!

மொத்தப் பணம் கட்டாமலேயே ரெண்டு நாளைக்கு அவனாகவே வலியப் பால் போட்டுப் பார்த்தான். காசு வந்து சேரும் வழியைக் காணோம் என்று நிறுத்திக் கொண்டான். பிறகு ஒரு நாள் வந்து ரெண்டு நாள் பாலுக்கு மட்டும் வாயை மூடிக் கொண்டு காசை வாங்கிக் கொண்டு போனான். இப்படித்தான் நின்று போனது பால் வாடிக்கை.

இப்போது கேட்கிறது அந்தப் பெண். என்ன சொல்லட்டும்? அது முகத்தைப் பார்க்கவே எனக்குத் தெம்பில்லை. எனக்கொரு பெண் இருந்தால் எப்படி அதைப் பார்த்துச் சொல்வேன். அதே கதிதான். அன்றைய பொழுது இந்தச் சிந்தனையிலேயே கழிந்து போனது.

இதோ வழக்கம்போல் இன்றும் போய்க் கொண்டுதான் இருக்கிறேன். எந்தப் பகுதியில் போய் எங்கு தண்ணீர் பிடிக்கப் போகிறேன் என்று எனக்கே தெரியவில்லைதான். சைடு கொக்கியில் கேன் தொங்கிக் கொண்டிருந்தது. அதை சோப்புத்தூள் போட்டுக் கழுவக் கூடப் பொறுமையில்லை. அந்தச் சிறிது நேரத்தில் தண்ணீர் வரும் இடத்தில் கூட்டம் குவிந்து விடுமோ என்ற டென்ஷன். வெயில் ஏறும்முன் காலாகாலத்தில் போய் நின்றோமானால், எப்படியும் ஒரு கேன் கிடைத்து விடும் நிச்சயமாய். அது என்னவோ தெரியாது…அந்த வீட்டுக்காரர்….எந்த வீட்டுக்காரரும்தான்….என்னைப் பார்த்தால் சற்று நேரத்தில்…..

இந்தாம்மா….சாருக்கு ஒரு கேனை விட்ருங்க….பிடிச்சிட்டுப் போகட்டும்….என்று சொல்லி விடுவார்கள். சொல்லப்படுபவர்களும் மறுப்பதில்லைதான். இன்றுவரை கதை இப்படித்தான் ஓடிக்கொண்டிருக்கிறது.

நம்ம முகத்துல என்னவோ ஒரு களை இருக்கு….அதான்…..என்பேன் நான்.

ரிடையர்ட் ஆபீசரில்லையா…அதுவா இருக்கும்….என்பாள் சுசீலா. கிண்டல் செய்கிறாளோ என்கிற சந்தேகம் உண்டு எனக்கு….

நான் ஆபீசரா….கிளார்க்கா…..படிச்சவனா, படிக்காதவனா, கூமுட்டையா…யாருக்கு என்னடீ தெரியும்? அந்த மக்களுக்கு இரக்கம்….மணிக்கணக்காத் தண்ணிக்கு நிக்கிறபோதும், கூட இருக்கிறவங்களை விட்டுக்கொடுக்காத தன்மை….பாவம் அவரெதுக்கு நிக்கணும்…நமக்குத்தான் பாடுங்கிற கருணை….அப்டிப்பார்த்தா அந்தப் பாடு நமக்கில்லையா….அவுங்க காத்துக் கிடக்கிறபோது, நாமளும் நிக்கப்படாதா? குறைஞ்சா போயிடுவோம்….அது பாமர மக்கள்ட்ட அடியொட்டிப் போய்க் கிடக்கிற பண்பாடுடீ….மனுஷங்க அடிப்படைல ரொம்ப நல்லவங்கங்கிறதை இந்த மாதிரிச் சில வேளைகள்லதான் தெரிஞ்சிக்க முடியும்….இந்த மாதிரி சாதாரண மனுஷங்ககிட்டத்தான் புரிஞ்சிக்க முடியும்…..

அதே நம்பிக்கையோடுதான் இப்பொழுதும் போய்க் கொண்டிருக்கிறேன்.

அட…! மின்னல்….!!! – என்னவோவொரு படத்தின் நகைச்சுவை வசனம்தான் எனக்கு படக்கென்று ஞாபகத்திற்கு வந்தது.

அது அவன்தானே….இப்போது தெரிந்து மறைந்தானே…..அது அந்த அவன்தானா? கண் முன் தோன்றி கணத்தில் மறைந்து….? பின்னால் பால் டப்பா கட்டியிருந்ததே…!!! யப்ப்ப்பா….என்னா வேகம்?…..சந்து, பொந்து, இண்டு, இடுக்கு…..காற்றாய்ப் பறக்கிறானே…..? விட்டலாச்சார்யா பேய்ப் படம் தோற்றது போங்கள்….! குறித்த நேரத்தில் நிமிடம் கூட விஞ்சக் கூடாது…அவனுக்கு…அதுதானோ? அதற்காக இப்படியா?

சார்…..என்ன சார் தண்ணி பிடிக்கவா…?

திரும்பினேன்….அவன்தான்…அவனேதான்……என் முன்னால். என் கண் முன்னால்….!!

அட….நீங்கதானா?- அந்தக் குட்டிப் பெண்ணின் அண்ணனாயிற்றே இவன்…! எனக்கா ஒரே ஆச்சர்யம். திறந்த வாய் மூடவில்லை.

ஆமா சார்….நான்தான்…..ஏன் கேட்குறீங்க….? – முகத்தில் மெல்லிய சிரிப்போடு நின்றான் அவன். வேலைப் பரபரப்பு உடம்பு முழுவதும்….

இல்லீங்க…..சர்ர்ரூ…..சர்ர்ர்ரூன்னு பறந்திட்டிருப்பீங்களா……யாருன்னு குறிப்பா இன்னைவரைக்கும் நான் கவனிச்சதேயில்லை….போற போக்குல பார்க்குறதுதான்…அதான் கேட்டேன்…..

என்ன சார்..இப்டிச் சொல்றீங்க….நாந்தான் தெனமும் இந்த ஏரியால  போட்டுக்கிட்டிருக்கேன்….நான் உங்களப் பார்க்கிறேனே…..?

உண்மைலயேதாங்க சொல்றேன்….நான் நீங்கதான்னு இன்னைவரைக்கும் குறிப்பாக் கவனிச்சதேயில்லை…!!! எப்டிப் பார்த்தீங்களா?

வேறே என்ன சார் பண்றது…? பறந்து பறந்துதான் செய்ய வேண்டிர்க்கு…பையனை வேலைக்குப் போட்டா, சரியா வர மாட்டேங்கிறாங்க…..திடீர் திடீர்னு காணாமப் போயிடுறாங்க….சொல்லாமக் கொள்ளாம நின்னுடறாங்க…சம்பளம் வேறே கொடுத்துக் கட்டுபடியாகல்லே…..

அவ்வளவு கஷ்டமா? – மனசில் என்னவோ உறுத்த, அவன் முகத்தின் சுருக்கங்கள் அறிந்து கேட்டேன். காலை லேசான குளிர்ச்சியிலும் வியர்த்துக் கொட்டியது அவனுக்கு. கழுத்தில் ஒரு குற்றாலம் துண்டு. கசங்கிய பேன்ட், சட்டை….அதெல்லாம் பார்த்தா வேலை நடக்குமா?

ஆம்மா சார்….ஏரியா கூடிப் போச்சு…வீடுகள் அதிகமாயிடுச்சி….எல்லாரும் டயத்துக்குப் பால் வேணும்ப்பாங்க…டிலே ஆனா புகார் சொல்வாங்க…காலைல நாலு நாலரைக்குள்ள ஆரம்பிச்சாத்தான் ஏழுக்குள்ள முடிக்க முடியும்…. ….பசங்க நம்ம விருப்பப்படி இருக்க மாட்டாங்க சார்…எத்தனையோ பார்த்தாச்சு….வீடுகள் அதிகமாயிட்டதால, சம்பளமும் அவுங்களுக்கும் கட்டுபடியாகல்லே…நமக்கும் கொடுத்து முடியல்ல….என்ன பண்றது நாமதான் செய்தாக வேண்டிர்க்கு…..

கஷ்டந்தாங்க….. – உணர்ந்து சொன்னேன் நான்.

தங்கச்சி கல்யாணத்துக்கு வாங்கின கடனை அடைக்கணும்….அதுக்கு அடுத்தடுத்து பிரசவச் செலவு வேறே….இந்த வேலய முடிச்சிட்டு .நான் வேறே காலேஜூக்குக் கிளம்பியாகணும்…..அதுக்கும் அடிக்கடி பணம் தேவைப்படுது..பலவகைல நெருக்குவட்டுதான் சார்..முழி பிதுங்குது…எங்க போறதுங்கிறீங்க…திருடவா முடியும்? ரொம்பக் கவனமாயிருந்தாக வேண்டிர்க்கு..சார்….இந்த பால் பிஸ்னஸ் ஒண்ணுதான் வேறே தெரியாது….கடை வியாபாரம் சொல்றாப்ல இல்ல….என்ன பண்றது சொல்லுங்க…

 – பேச்சோடு பேச்சாய் என்ன சொல்கிறான் இவன்?

என்னது….என்ன சொன்னீங்க…? காலேஜா…? நீங்க…காலேஜ் படிக்கிறீங்களா? தெரியவே தெரியாதேங்க….இத்தனை ஓட்டத்துக்கும் நடுவுல படிப்பு வேறேயா? – அவனின் கடின உழைப்பு என்னை அசத்தியது.

ஆமா சார்….உங்களுக்குத் தெரியாதா….பி.இ., செகன்ட் இயர் சார்….ஈவ்னிங் காலேஜ்ல படிச்சிட்டிருக்கேன் ….சமயங்கள்ல காலைலயும் ஸ்பெஷல் க்ளாஸ் இருக்கும்….பகல்லயும் போக வேண்டிர்க்கும்….இப்டித்தான் சார் கால்ல சக்கரத்தக் கட்டிட்டு ஓடிட்டிருக்கேன்…வீட்டுல எல்லாத்தையும் நான் ஒருத்தன்தான் சார் பார்த்தாகணும்…..கல்யாணத்துக்கு முன்னாடி தங்கச்சி உதவி பண்ணிச்சு….இப்போ அது பிள்ளையப் பார்த்துக்கவே சரியாயிருக்கு….அடுத்தடுத்த வீடுங்கிறதால,அப்பப்போ கடைல உட்கார்ந்து ஏதோ கொஞ்சம் வியாபாரத்தப் பார்த்துக்குது….அதும் மாமியாரும் ஒதவி பண்ணும்னு வச்சிக்குங்க.….வயசானவங்க…அவுங்கள எவ்வளவு சொல்ல முடியும்…மாப்ளை வெளியூர்ல இருக்காரு…நல்லவரு…அவ்வளவுதான்…ஏதும் எதிர்பார்க்க முடியாது….என்ன பண்றது? ஏதோ ஓடிட்டிருக்கு சார்….வரவுக்கும் செலவுக்கும் முட்டி மோதி….ஆபரேஷன் ப்ளூ ஸ்டார்தான் சார்….

சொல்லிவிட்டுச் சிரித்தான் அவன்….வேதனை கலந்த அந்தச் சிரிப்பை அப்படியே உள்வாங்கினேன் நான். துன்பத்திலும் எழும் நகைச்சுவை உணர்வு.  அதன் உள்ளார்ந்த சோகங்களும், வேதனைகளும் எனக்குத் துல்லியமாய்ப் புரிந்தன. நானும் இப்படிப் போராடி வந்தவன்தானே….! ஆஉறா, நம்மள மாதிரி ஒரு ஆள்…!

றுநாள்…..

என்னங்க இங்க வாங்க…….!!! – வாசலிலிருந்து கத்தினாள் சுசீலா.

என்னா, என்ன விஷயம்…? – உள்ளிருந்தமேனிக்கே கேட்டேன்.

அட, வாங்கன்னா….இங்க பாருங்க…காம்பவுன்ட் சுவத்துல பால் பாக்கெட் வச்சிருக்கு…… யாராவது மறந்து வச்சிட்டுப் போயிருப்பாங்களோ? – சுற்று முற்றும் பார்த்து பரபரத்தாள்.  

யாரும் மறந்தெல்லாம்  வைக்கல்லே….நான்தான் போடச் சொன்னேன்……எடுத்துக்கோ……

என்னாச்சு…? .ஆரம்பிச்சிட்டீங்களா பழையபடியும்…..? – கேட்டுக் கொண்டே உள்ளே வந்தாள்.

பழசுதாண்டீ என்னைக்குமே உசத்தி…!  அதுனாலதான்….

இங்கேயிருந்து டெப்போ நடக்கிறதுக்கு அலுப்பு வந்திடுச்சாக்கும் ஐயாவுக்கு……சரியான சோம்பேஏஏஏஏஏஏறி……..!!! அப்போ தினசரி வாக்கிங்கும் அவ்வளவுதானா? கழுதை தேய்ஞ்சு கட்டெறும்பு ஆன கதைதான்….நீங்களும் உங்க நடைப்பயிற்சியும்….!

சொன்னால் சொல்லிக் கொள்ளட்டும்….அவள் கேலியும் ஒரு சுகம்தான். …அந்த மின்னலுக்கு ஏதோ என்னாலான சிறு உபகாரம்….அப்படிக் கூடச் சொல்ல முடியாது. ஏதோவொரு வகையிலான ஆதரவு. கொஞ்சம் காசு கூடப் போனாப் போயிட்டுப் போகுது….! .இதுதான் எனக்கான மன  நிம்மதி…மன சாந்தி…! இம்மாதிரிச் சின்ன விஷயங்களில் கூட, இணக்கமான சந்தோஷத்தை இழந்தால் எப்படி? இந்த விருப்பம்,  இந்த என் நிறைவு, எனக்கு நானே வரவழைத்துக் கொண்டது. தவற விட்டால் மனம் வேதனை கொள்ளும்.  நல்லது தோன்றினால் உடனே செய்துவிட வேண்டும். மனசு ஒரு குரங்கு.

இந்த உலகத்தில் கடுமையான, உண்மையான உழைப்பின் மீது தளராத நம்பிக்கை வைத்து இந்த வாழ்க்கையின் மீதான அதீதப் பிடிப்போடு  எத்தனை பேர் இன்னும் இப்படி இயங்குகிறார்கள்?  நினைக்க வேண்டாமா? நம்மை மாதிரிச் சாமான்யர்கள் கூட அவர்களை அடையாளம் காணவில்லையென்றால், ஆதரிக்கவில்லையென்றால் எப்படி?  அவன் ஒரு நாள் நிச்சயம் நல்ல நிலைக்கு வருவான்….அதை நான் கண்ணாரக் காணுவேன்….அது காலத்தின் கட்டாயம்…..இந்தச் சமூகத்தின் சத்திய தர்மம் அது…!

எனக்குள் உறுதியாய்ச் சொல்லிக் கொண்டேன் நான்.

                        -------------------------------------------------

 

 

 

 

கருத்துகள் இல்லை:

  சிறுகதை                 “பாதிப்பு” - ”சிற்றுளி” கலை இலக்கிய இதழ், அக்டோபர் 2024 முதல் டிசம்பர் 2024 வரை             வி த்யாபதி அந்தத் தெ...