சிறுகதை
அவரவர் மனசு.....! பிரசுரம்-குங்குமம் வார இதழ் - 17.02.2023
ஐயய்யோ...இங்கே உடைக்காதீங்க...-அம்புஜம் கத்தியது
ராமசாமியின் காதுகளில் விழவில்லை. கணத்தில் தேங்காய் சிதறி விட்டது அந்தக் கோயில் வாசலில்.
சிதறு
தேங்காய்ங்கிறதே குழந்தைகளுக்கானது. அதை வாசல்லதான் உடைக்கணும்...கோயிலுக்குள்ளயா உடைக்க
முடியும்? கோயில் வாசல்ல வந்து ஐயய்யோங்கிறியே? என்றார் அவளை நோக்கிக் கையை நீட்டிக்
கொண்டே...!
பதட்டத்துல
வாயில வந்துடுத்து....என்று உள்ளே பிராகாரத்தைப் பார்த்து, தப்பு...தப்பு....என்பதாய்க்
கன்னத்தில் போட்டுக் கொண்டாள் அம்புஜம்.
.உங்களுக்குத்
தெரியாதா? அதோ பாருங்க..உள்ளே....மூலைல...ஒரு தொட்டி...அதுலதான் சிதறடிக்கணும்.....நீங்கபாட்டுக்கு
கேட்காமக் கொள்ளாம இங்க உடைச்சீங்கன்னா எப்டி? எல்லாத்துக்கும் ஒரு அவசரம்...! - இவளே போய் புகார் கொடுத்து விடுவாள்
போலிருந்தது.
கொரோனா
பீரியட்ல கோயில் மூடியிருந்தது. அப்ப எல்லாரும் எங்க உடைச்சாங்களாம்...? இந்த வாசல்லதானே...?
அதனால பரவால்லே.....! - இவர் சொல்லிக் கொண்டிருக்கும்போதே
அந்தப் பகுதிச் சிறுவர்கள் நாலைந்து பேர் ஓடி வந்து சிதறிய தேங்காய்களைப் பொறுக்கினர்.
அடித்த வேகத்தில் அது சுக்குச் சுக்காய்!. சில சமயம் எவ்வளவு ஓங்கி வேகமாகத் தரையில்
அடித்தாலும் ரெண்டாகவோ மூன்றாகவோதான் பிரியும். ஆனால் இன்று நன்றாகச் சிதறியது திருப்தியாக
இருந்தது ராமசாமிக்கு. அதைவிடக் குழந்தைகள் வந்து எனக்கு உனக்கு என்று ஓடி ஓடி எடுத்துக் கொண்டது மிகவும் மகிழ்ச்சி தந்தது.
டேய்...போங்கடா...போங்க...போங்க...-
அம்புஜத்தின் விரட்டல் கோபத்தை உண்டாக்கியது.
எதுக்கு
அதுகளை விரட்டறே...? அவாளுக்கில்லாம வேறே யாருக்கு? குழந்தைகளுக்குச் சொந்தமானதுதான்
அது. வேண்டுதல் நிறைவேற்றியாச்சில்ல...அத்தோட விடு....வேண்டின காரியம் தாமதமில்லாம
நடந்திட்டமாதிரி, தேங்காயும் சில்லுச் சில்லா எப்டி சிதறித்து பார்த்தியா? சிதறு தேங்காய்
சிதறிப் போனாத்தான் வேண்டுதலுக்கான மகிமை. வெறுமே ரெண்டா உடைஞ்சா...மனசுக்கு சங்கடமாயிடும்....திருப்தி
வராது....புரிஞ்சிதா....?
அம்புஜம்
திருப்தியான மாதிரித் தெரியவில்லை. உள்ளே தொட்டியில் உடைக்காதது அவளுக்குக் குறைதான்
போலும்....அப்பொழுதுதான் கோயிலுக்கென்று, அந்த விநாயகருக்கு எதிரே உள்ள மூலைத் தொட்டியில்
நேர்ச்சை நிறைவேற்றி உடைத்ததாக ஆகும் என்று நினைக்கிறாளோ? நல்ல சென்டிமென்ட்...!
மூஞ்சியே
சரியில்லையே உனக்கு? இதுக்குப் போயி இப்டியா குறைப்பட்டுக்கிறது? கோயில் ஆபீஸ்காரங்க
எதாச்சும் சொல்லுவான்னு பயப்படுறியா? அதெல்லாம் ஒண்ணும் கண்டுக்க மாட்டாங்க....விடு....பெரியவரே
சொல்லியிருக்காரே...நீ படிச்சதில்லையா....? என்றார் அவளைப் பார்த்து....
புரியாமல்...என்ன?
என்பது போல் அவர் முகத்தைப் பார்த்தாள் அம்புஜம்.
தெய்வத்தின்
குரல் படிச்சிருக்கியோ நீ...? அதுலதான் சொல்றார்.....சாதுர்மாஸ்ய விரதம் அனுஷ்டிச்சிருக்கும்போது,
ஒரு கோயில்ல யாரோ சிதறு தேங்காய் அடிக்க...குழந்தைகள் கூட்டம் திபு திபுன்னு கூடிடுறது....பெரியவர்
மேலே விழுந்திடுங்களோன்னு பயந்து குழந்தைகளை விரட்டறாங்க.....அப்போ அந்தக் கூட்டத்துல
ஒரு சிறுவன் கேட்கிறான்.....சிதறு தேங்காய் போடறதே எங்களுக்காகத்தானே...எங்களுக்கு
இல்லாத உரிமை வேறே யாருக்கு? எதுக்காக எங்களை விரட்டறீங்க...ன்னு கேள்வி வீசறான்....அதைக்
கேட்ட மகா பெரியவர் நெகிழ்ந்து போறார். அந்தப் பையனோட பேச்சிலிருந்த உறுதியைப் பார்த்திட்டு...வாஸ்தவந்தான்....குழந்தை
ஸ்வாமியின் (விநாயகர்) பிரஸாதம் குழந்தைகளுக்குத்தான் சேரணும். முழுப் பாத்தியதையும்
அவாளுக்குத்தான்னு...சொல்றார்..... ஆகையினால நீ ஒண்ணும் குறையா நினைச்சுக்காதே....!
என்றார் உறுதி தொனிக்க...! கூடவே இன்னொன்றையும்
மறக்காமல் சொன்னார்.
இதையும்
தெரிஞ்சிக்கோ....இந்த சிதறு தேங்காய் அடிக்கிற வழக்கம் நம்ப தமிழ்நாட்டுல மட்டும்தான்....தெரியுமோ
உனக்கு? இதுவும் அதுலதான் சொல்லப்பட்டிருக்கு....!
காதில்
வாங்கினாளோ இல்லையோ...கோயிலுக்குள் நுழைந்து விட்டாள். சரி என்று இவரும் பின் தொடர்ந்தார்.
ஸ்வாமி சந்நிதியிலும், அம்பாள் சந்நிதியிலும் நின்று நிதானித்துக் கும்பிட்டு விட்டு,
தீபாராதனை முடித்து கண்ணில் ஒற்றிக் கொண்ட போது தட்டில் காசு போட்டார் இவர். அருகில்
நிற்கும் அம்புஜத்திடம் ஸ்வாமி பாதப் புஷ்பம் அளிக்க அர்ச்சகர் நீட்டியதைப் பக்தியோடு
ஏற்று கண்ணில் ஒற்றிக் கொண்டாள் அம்புஜம்.
ரொம்பவும் உணர்ச்சி வசப்பட்ட நிலை...!
சுற்றுப்
பிராகாரங்களை வணங்கக் கிளம்பியபோது கேட்டாள். உண்டியல்ல காசு போட்டீங்களா....?
போட்டேனே....நீ
பார்க்கலியா....?
நான்
கேட்கிறது....உண்டியல்ல போட்டீங்களான்னு...? - அழுத்தமாக வந்தது அவள் குரல்.
வழக்கமா
நீதானே உண்டியல்ல காசு போடுவே....நான் அர்ச்சகர் தட்டுலதான் போட்டேன்...அதானே என் பழக்கம்....ஏன்
நீ போடலியா? - என்றார் இவர் பதிலுக்கு.
என்னவோ
முனகியதைப் போலிருந்தது. சட்டென்று திரும்பியவள் விடுவிடுவென்று நடந்து கைப் பர்சைத்
திறந்து ரூபாயை எடுத்து உண்டியலில் போட்டு விட்டு வந்தாள். கையை எதற்கு இவ்வளவு உள்ளே
நுழைக்கிறாள்? மோதிரமும் சேர்ந்து விழுந்துடப் போகுது...!? ரெண்டு விரல்ல பிடிச்சி
துளைக்குள்ள நுனில போட்டாப் போதாதா?, இவருக்கு பயம்...!
எப்போ
கோயிலுக்கு வந்தாலும், மறக்காம உண்டியல்ல காசு போடுங்க...தெரிஞ்சிதா? ஸ்லோகம் சொல்லிண்டே
கும்பிடுற சாக்கில் நான் மறந்திடுவேன்...!
லேசாகப்
புன்னகைத்துக் கொண்டே...அது உன் வழக்கம்...நா சூடத் தட்டுலதான் போடுவேன்...அர்ச்சகருக்குச்
சேரும் அந்தக் காசு.... குறைஞ்ச வருவாய் உள்ளவா...நம்பள மாதிரி நாலு பேர் போடுற பைசாலதான்
தொட்டுக்கோ..துடைச்சுக்கோன்னு அவங்க ஜீவனம் கழியறது....பாவமில்லையா?
உண்டியல்லயும்
போட்டா...கோயில் காரியங்களுக்கு உதவுமில்லையா? அதுவும் புண்ணியம்தானே?
எது
அதிகப் புண்ணியம்னெல்லாம் தெரியாது. அந்தப் புண்ணியத்தை நீ எடுத்துக்கோ...இந்தப் புண்ணியத்தை
நான் எடுத்துக்கிறேன்....எனக்கு இதுலதான் திருப்தி, நிறைவு..... என்றார் ராமசாமி....!
என்னிக்கு
நான் சொல்லிக் கேட்டிருக்கீங்க...எல்லாம் உங்க இஷ்டம்தான்.... - என்றாள் சலிப்போடு.
இப்போ கோயிலுக்குக் கூட்டி வந்ததே அவள் இஷ்டம்தானே...?
சொல்ற
ஸ்லோகங்களுக்கு நடு நடுவே இது வேறேயா...? போ...போ...போய் நன்னா ஆசை தீரச் சுத்திட்டு
வா.....என்று கையைக் காண்பித்தார். கூட நடப்பவர்கள் இவர்களைப் பார்த்துக் கொண்டே நகர்ந்தார்கள்.
அமைதி காத்தாலே அதுவே பெரிய பக்தி என்றிருந்தது
இவருக்கு. ஆலயத்தில் அமைதி தவழ வேண்டும் என்பது இவர் எண்ணம்.
மனசு
போல் கும்பிட்டு விட்டு வரட்டும் என்று ஓரமாய் அமர்ந்தார் ராமசாமி. கோயிலுக்கு என்று
வந்தால் அங்குள்ள சிற்பங்களும், ஓவியங்களும், சாமி அலங்காரமும்தான் அவர் கண்களையும்
கருத்தையும் கவரும்..! டம்...டம் என்று ஓசையெழுப்பும் வாத்தியங்கள் சங்கடப்படுத்தும்.
ஓடியாடும் குழந்தைகளையும் மகிழ்ச்சியோடு வேடிக்கை
பார்ப்பார். அப்புறம்தான் பக்தி. எல்லோரும்
கண்களை மூடி சந்நிதியை நோக்குகையில் இவர் நன்றாய்த் திறந்து வைத்துக் கொண்டு சாமி கும்பிடுவார்.
அந்த அலங்காரம் இவரை ஈர்க்கும். அம்பாளின் மூக்குத்தி ஜொலிப்பதை உன்னிப்பாகக் கவனித்திருக்கிறார்.
ஆனாலும் தனி ஈர்ப்புதான் அந்தக் காட்சி...! அது வேண்டும், இது வேண்டும் என்று என்றுமே வேண்டியதில்லை.
அது அவர் வழக்கமுமில்லை. வெறுமே கும்பிடுவார்.
அத்தோடு சரி. நம்பினாற் கெடுவதில்லை...நான்கு மறைத் தீர்ப்பு...நல்லவர்க்கும் ஏழையர்க்கும்
ஆண்டவனே காப்பு....- சினிமாப் பாட்டானாலும் எத்தனை அர்த்தம் பொதிந்தது?
மூன்று
நான்கு என்று சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தாள் அம்புஜம். எப்போது முடியும் தெரியவில்லை.
சமயங்களில் அடிப் பிரதட்சிணம் வைக்க ஆரம்பித்து விடுவாள். போச்சுடா....! என்று பொறுமை
கழறுவார் இவர். என்றாவது யாராவது சுண்டல் தருவார்கள். அப்படி ஏதும் இன்று உண்டா என்று
கண்கள் தேடியது.. எதுவுமில்லை.
சாமிய
வேரோட பிடுங்காம விடமாட்ட போல்ருக்கே...என்றிருக்கிறார் அவளிடம்.
உங்களுக்கு
மனசில பக்தியில்லை. அதுக்கு நான் என்ன செய்றது? என்பாள் அவள். ஆனாலும் உன் பக்தி யாருக்கும்
வராதுதான்...! - நினைத்துக் கொள்வார்.
சோற்றுக்கே
இல்லாதவனிடம் அவன் பசியைப் போக்கும் உணவுதான் அவனுக்குக் கடவுள். பசியோடிருப்பவனிடம்
பக்தியைப்பற்றிப் பேசாதே...என்கிறார் ஸ்வாமி விவேகானந்தர். வாழ்க்கையில் இளம் பிராயத்தில்
மிகுந்த வறுமையைக் கண்டவர் ராமசாமி. அவருக்குத் தெரிந்ததெல்லாம் அவர் தாய் தந்தையரின்
உழைப்பும், தியாகமும்தான். காலமெல்லாம் உழைத்து உழைத்து உருக்குலைந்து ஆறு குழந்தைகளைப்
படிக்க வைத்து ஆளாக்கிய அந்தத் தியாகத்திற்கு விஞ்சியதாய் இன்றுவரை எதுவுமே அவருக்குத்
தோன்றியதில்லை. கண்களை மூடினால் பெற்றோரின் உருவம்தான் முன்னே...! எண்ணங்களில் அழியாது
இருந்துகொண்டேயிருக்கிறார்கள். மறந்தால்தானே நினைப்பதற்கு? பட்ட தரித்திரக் கஷ்டமும், பட்டினியும், துன்பமும் நினைவில் வந்து கண்ணீர் கசிய வைத்துக்
கொண்டேயிருக்கிறது.. அதற்கு மீறியா ஒரு கடவுள்? அன்னையும் பிதாவும் முன்னெறி தெய்வம்.
அவ்வளவுதான் அவரைப் பொறுத்தவரை. ஆலயம் தொழுவது சாலவும் நன்று...இது அடுத்துதான்...!
எங்களுக்கெல்லாம்
இல்லையாக்கும்? என்று கேலி நிரம்பக் கேட்பாள் அம்புஜம்.
உனக்கு
பின்னெறி தெய்வமால்ல இருக்கும் போல்ருக்கு...என்று பதில் கிண்டலடிப்பார் இவர்.
யப்பாடி...ஒரு
வழியா முடிஞ்சிதா ?.... - என்று சொல்லிக் கொண்டே
எழுந்தார். துவஜஸ்தம்பத்திற்குப் பிறகு விழுந்து வணங்கினாள் அம்புஜம். நீங்களும் ஒரு
நமஸ்காரம் பண்ணுங்க...என்றாள் இவரைப் பார்த்து.
ஏற்கனவே
பண்ணி விட்டேன் என்று சொன்னால் நம்ப மாட்டாள். அவளுக்காக இன்னொரு தடவை விழுந்து எழுந்தார்
இவர். ஜோடியாய்ப் பண்ணனுமாம்...!
அம்பாளோட
வலது கைப்பக்கமாப் பார்த்து, ஆசீர்வாதம் வாங்குற மாதிரி, இந்தக் கொடிக் கம்பத்துக்கு அப்புறம் இங்கே விழுந்து
வணங்கணுமாக்கும்...என்று அவளுக்குச் சொன்னவரே இவர்தான். பலரும் எதிர் வரிசையில் விழுந்து
வணங்குகிறார்கள். கொடிக் கம்பத்திற்கு முன் பகுதியிலும் நமஸ்கரிக்கிறார்கள். என்னத்தைச்
சொல்வது?. மனதில் பக்தி இருந்தால் சரி...என்று நினைத்துக் கொள்வார்.
அப்படிப்
பார்த்தால் கோயில் வாசலில் நூற்றுக் கணக்கான செருப்பு ஜோடிகள் கிடக்கின்றன. சந்நிதிக்கு
நேரே...அம்பாரமாய்.....ஒரு மறைவாய்க் கூட இல்லை. .அதுவே மனதை நெருடத்தான் செய்கிறது.
வந்த சமயங்களில் சில சமயம் மறைவாய்த் தள்ளி விட்டுப் பார்த்தார். ஏன் சார் ஒதுக்குறீங்க...?
என்று யாரோ ஒருவர் சத்தம் போட்டார். விட்டு விட்டார்.
இங்கே நேர் வாசலில் போடக்கூடாது...தள்ளி “மறைவாய்
எதிர் வரிசையில் காலணிகளைப் போடவும்“ என்று எழுதி வைக்கலாமே? உள்ளே வரும் எத்தனை பேர்
ஓரக் குழாயில் கை - கால் கழுவுகிறார்கள்? எல்லாம்
காலத்தின் பரபரப்பிற்கேற்றாற்போல் சரி...சரி...என்றாகி விட்டது. எதையும் துல்லியமாய்ச்
செய்ய எவருக்கும் போதில்லை..பொறுமையுமில்லை. அதுபற்றிய குற்றவுணர்வும் இல்லைதான். அவசர
பக்தி....!
வந்து
வெகு நேரம் ஆகிவிட்டது. பசி கிள்ளியது ராமசாமிக்கு. ஏதாச்சும் அர்ச்சனை பண்ணியிருந்தாலும்
ஒரு பழத்தை உரித்துப் போட்டுக் கொள்ளலாம். கொஞ்சம் தேங்காயைக் கொரிக்கலாம். ஒரு மூடி
கண்டிப்பா அர்ச்சகருக்கு...கொடுத்திடு...! இன்று அதற்கும் வழியில்லை. வரவர பசி தாள
முடிவதில்லை..! -
வாங்க
போகலாம்...நேரமாச்சு....விரைவு படுத்தினாள் அம்புஜம்.
நா
எப்பவோ ரெடி....நீதான் லேட்டு...சுற்றுப் பிராகாரம் எவ்வளவு பெரிசு? எத்தனை சுத்துதான் சுத்துவே...? .என்று சொல்லிக்
கொண்டே நடந்தார். பைக்குள் கையை விட்டு ஐந்து ரூபாய்ச் சில்லரைகளாக இருந்த நாணயங்களைக்
கையில் எடுத்துக் கொண்டார் ராமசாமி. கோயில் என்றாலே இந்த ஏற்பாட்டோடுதான் கிளம்புவார்.
அதற்காகவே நாணயங்களைச் சேகரித்து வைத்திருப்பது அவர் வழக்கம்..ஒரு சிறு மண் உண்டியல்
உடைபட்டது இன்று. உண்டியல் பழக்கம் இளம் பிராயத்திலிருந்து தொற்றிக் கொண்ட விஷயம்.
அதுபற்றி அவள் கேட்டதேயில்லை.
அம்புஜம்
கோபம் கொண்டதுபோல் முன்னால் வீச்சு வீச்சென்று நடக்க... புன்னகையோடு பார்த்தார் இவர்.
எண்ணங்களும், மனமும் நிதானம் கொள்வதும், பக்குவப்படுவதும் என்ன அவ்வளவு எளிதா? சாதாரண
மனுஷ ஜென்மம்தானே? எல்லாமும் கலந்துதான் இருக்கும்....! சகிப்புத்தன்மை மனித வாழ்க்கையின்
முக்கியமான அம்சம்...!
வாசலில்
வரிசையாக உட்கார்ந்திருந்த பிச்சைக்காரர்களுக்கு ஆளுக்கொன்றாய்ப் போட்டுக் கொண்டே வந்தார்.
கை நீட்டி வாங்கும்போது அந்த முகங்களின் மகிழ்ச்சி இவருக்கு முக்கியம். எல்லாருக்கும்
காசு போட்டாச்சா என்று ஒரு முறை நிமிர்ந்து சுற்று முற்றும் பார்த்தார். அந்தக் கோயிலில்
ஆள் அதிகம்தான். எங்கு கூட்டம் கூடுகிறதோ அங்கு பிச்சை எடுப்பவர்களும் நிறையக் கூடி
விடுகிறார்கள். உண்டியலைக் குலுக்கி எடுத்து வராமல், உடைத்து எடுத்து வந்தது எவ்வளவு சரி? எதிர்த் திசையில்
இருந்த தனிப் பிச்சைக்காரன் ஒருவன் விடுபட்டிருப்பது தெரிய அவனுக்கும் சென்று காசு
போட்ட போது.....டூ வீலருக்கு அருகே நின்று கொண்டிருந்த அம்புஜம் சத்தமாய்க் கத்தினாள்
-
நீங்க
இப்ப வரப் போறீங்களா இல்லையா....?- குரல் உரத்து ஒலிக்க இதோ...வந்தாச்சு... என்று ஓட்டமும்
நடையுமாய் நெருங்கினார் அவர்.
இந்தாங்க
பிரசாதம்...என்று தொன்னையோடு நீட்டிய அதை வாங்கிப் பிரித்தார் ராமசாமி. அட....சர்க்கரைப் பொங்கலா...? பார்றா...? ..என்று
மகிழ்ச்சியாய்ச் சொல்லியவாறே தாமதிக்க மனமின்றி வாயில் எடுத்துப் போட்டுக் கொண்டார்.
நெய் மணத்தோடு நல்ல சுவை. நாக்கிற்கு இதமாய்..முழுங்கவே மனசில்லை. முகம் பளீரென்று
மலர்ந்தது. சரியான பசி தெரியுமோ..நேக்கு..? என்று சொன்னபோது பார்க்கவே பாவமாய் இருந்தது
அம்புஜத்திற்கு.
உங்களுக்குப்
பசி பொறுக்காதுன்னு தெரியும் எனக்கு. அதான் பின் பக்கம் துர்க்கை அம்மன் சந்நிதில வரிசைல
நின்னு வாங்கிண்டு வந்தேன்...- என்றாள் அம்புஜம்.
----------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக