சிறுகதை
“நீள நாக்கு…!”
---------- -----------------------------------
ஆனாலும் ஒரு ஐம்பது ரூபாயை நான் அவன் கையில் வலியத் திணித்து விட்டுத்தான் வந்தேன். அப்பொழுதுதானே என் மனதுக்கு சமாதானம் ஆகும். அந்தக் கண்ணுக்குத் தெரியாத சாட்சிக்கு யார் பதில் சொல்வது? நான்தானே சொல்லியாக வேண்டும். இல்லையென்றால் பொழுது பொழுதாய் அறுத்துக் கொண்டிருக்குமே? ஏற்கனவே என்னைப் பாடாய்ப் படுத்தியது போதாதா?
அதற்காக இப்படியா வருவார்கள் என்று கேட்குமே?
காசு மிச்சம்னுட்டு வந்திட்ட! அதானே? சரியான ஆள்டா நீ? அன்னைக்கு உங்கப்பா நாள் பூராவும் நெருப்புல கிடந்து, அடுப்பு முன்னால நின்னு, வெந்து, உழைச்சு உழைச்சு ஓடாப் போயி அத்தக் கூலி மாதிரி என்னத்தையோ கொடுத்ததை வருஷக்கணக்கா கம்முன்னு வாங்கிட்டு வந்திட்டிருந்தாரே, ஞாபகமிருக்கா? ஞாபகமிருக்காங்கிறேன்? இல்ல, மறந்திட்டியா? அதுலயும் படு மோசமால்லடா இருக்கு இப்ப நீ செய்திட்டு வந்திருக்கிறது?
ஒரு தொழிலாளியைப் போய் ஏமாத்தலாமா? மனசறிஞ்சு ஏமாத்திட்டு வந்து நிக்கிறியே! இது நியாயமா? அவன் வயிறெறிஞ்சான்னா?
இல்ல அவன்தான் வேணாம்னான்…
அவன் சொல்வாண்டா எதையாச்சும்...மனசாரச் சொன்னான்னு நீ கண்டியா? …உனக்கெங்கடா புத்தி போச்சு…எங்கயானும் அடகு வச்சிட்டயா…
இல்ல…அப்டியெல்லாம் இல்ல…
என்ன நொள்ள…? அப்புறம் எதுக்கு இப்டி வந்து நிக்கிறே…மனசு அரிக்குதுல்ல இப்ப…அத முதல்லயே செய்திருக்க வேண்டிதான…இனி அந்தப் பக்கம் போறபோதெல்லாம் அவன் மூஞ்சியை எப்படிப் பார்ப்பே….அப்படியே பார்த்தாலும் உன்னால சிநேக பாவமா சிரிக்க முடியுமா?பழைய பழக்கம் போல தொடர முடியுமா? நல்லாயிருக்கீங்களான்னு கேட்க முடியுமா? உனக்கு மனுஷங்க வேணாமா? காசுதான் பிரதானமா? நீ நலம் விசாரிச்சாலும் அவனால முழு மனசோட நல்லாயிருக்கேன் சார்னு சொல்ல முடியுமா? காசு தராமப் போனவன்ங்கிற எண்ணம்தானே அவனுக்கும் இருக்கும்…ஏமாத்தினவன்ங்கிற எண்ணம்தானே உனக்கும் இருக்கும்…இதுக்குத்தான் சொல்றது…நாம நம்மள முதல்ல புரிஞ்சிக்கணும்னு….புரிஞ்சிக்கிட்டிருக்கமா? இல்ல…ஆனா வயசாயிடுச்சி…வயசு மட்டும் ஆயிடுச்சி…அவ்வளவுதான்…
நீ என்ன சொல்ற…புரியல… …
…வயசான அளவுக்கு உனக்கு அனுபவம் பத்தல…அவ்வளவுதான்..
என்ன அனுபவம்?
வாழ்க்கை அனுபவம்டா…மனுசங்களைப் புரிஞ்சிக்கிற அனுபவம்…புரிஞ்சி நடந்துக்கிற அனுபவம்…அதவிட…
அதவிட?
நம்ம இயல்பு என்னென்னு புரிஞ்சி நமக்கு எது பொருந்துமோ அப்டி நடந்துக்கணும்… அதத்தான் செய்யணும்…ஒரிஜினாலிட்டின்னு கேள்விப்பட்டிருக்கியா?
இல்ல…
அதுதான் அது…இப்ப நா சொன்னது...அதாவது அசலா இருக்கிறது...
சரி நா வர்றேன்…
எங்க கிளம்பிட்டே…?
இந்தா வந்திடறேன்…..சட்டையை எடுத்து மாட்டிக்கொண்டு பட்டன்களைப் போட்டு இதயத்தை மூடினான்.
சார், வேணாம் …வைங்க சார்….இருக்கட்டும்….
இல்லப்பா… ….முதல்ல உன் காசப் பிடி…பிறகு பேசுவோம்….
ஊகும்….வேண்டாம் சார்…எனக்கு மனசே சரியில்ல சார்…இப்டி ஆயிப்போச்சேன்னு அரிக்குது…..காசு வாங்க மாட்டேன் சார்…
அதென்னவோ உண்மைதான்…கிளம்புற போதே என் பொண்டாட்டி வாய வச்சா…இன்னும் இதுக்கு வேறே அம்பது நூறு செலவான்னு….முதல் கோணல் முற்றும் கோணல்னு ஆயிப்போச்சு…அபசகுனமாப் பேசினா…? அத மாதிரியே ஆயிப் போச்சு…”
இல்ல சார்…இதுவரைக்கும் இப்படி ஆனதில்ல…இது நா பண்ணின தப்பு…இந்த வேலய நா செய்திருக்கணும்…என் தம்பிட்ட கொடுத்தது தப்பாப் போச்சு…
என்னங்க நீங்க? …நீங்க கடைல உட்கார்ந்திருக்கிறதப் பார்த்துட்டுத்தான நா கொடுத்திட்டுப் போனேன்…உங்க தம்பிட்டயா கொடுத்தேன்…நீங்க இப்டிச் சொல்றதுனால சரி பரவால்லன்னு வாங்கிக்கிடச் சொல்றீங்களா…உங்க தம்பிய இங்க கடை விளம்பரத்துக்காக வச்சிருக்கிற படங்களை லேமினேட் பண்ணச் சொல்லுங்க…தொழில் பழகிக்கட்டும்…வர்ற ஆர்டரை ஏன் அவன்ட்டக் கொடுக்கிறீங்க…? பலி கடாவா என் படம்தான் கிடைச்சிதா…
சே…சே…! அப்டியெல்லாம் இல்ல சார்..அதான் சொல்லிட்டேன்ல சார்…இது நா பண்ணின தப்புன்னு…
சரி, அதுக்காக…பேசாம வாங்கிட்டுப் போன்னு சொல்றீங்களா…?
சே…சே…அப்டி சொல்வனா சார்…இதமாதிரி இன்னொன்னு இருந்தாக் கொண்டுவாங்க…பைசா வாங்காம என் செலவுல ஃப்ரேம் போட்டுக் கொடுத்திடுறேன்னு சொன்னேன்..
இன்னொரு படத்துக்கு நா எங்கய்யா போவேன்…இல்ல இதமாதிரி போஸ் கொடுக்கத்தான் முடியுமா? நா என்ன சினிமா நடிகனா? அதென்னமோ அந்த விழாவுல எடுத்தாங்க…அது தற்செயலா அம்சமா அமைஞ்சிருச்சு…ஏதோ புண்ணியத்துக்கு அவுங்க அனுப்பி வச்சிருக்காங்க…சரி, ஞாபகார்த்தமா இருக்கட்டுமேன்னு லேமினேட் பண்ணி வீட்டுல தொங்க விடலாம்னு பார்த்தா…இதெல்லாம் வேறே ஒண்ணுமில்ல…என் நேரம்யா…எந் நேரம்….தூக்கிட்டுக் கிளம்பேலயே அவ அழுதா…எதுக்கு வெட்டிச் செலவுன்னு வாய வச்சா…அது வௌங்காமப் போச்சு…வேறென்னத்தச் சொல்ல…
அப்டியெல்லாம் இல்ல சார்..நீங்களா எதையாச்சும் சொல்லிக்கிற வாணாம்...நா செய்து தர்றேன்கிறன்ல...
அப்டியில்லாமப் பின்ன எப்டி? இங்க தொங்குற படங்களயெல்லாம் பார்த்திட்டுத்தானய்யா லேமினேஷன் நல்லாயிருக்குன்னு நம்பிக் கொடுத்தேன்…கொடுக்கைலயே படம் கசங்கியிருந்திச்சா…நல்லா, நீட்டாத்தான இருந்திச்சு…நீ சொன்ன காசை ஏதாச்சும் குறைச்சனா? இல்லேல்ல...அப்புறம் இப்டி பண்ணினா? ஏகப்பட்ட சுருக்கத்தோட பார்க்கவே நல்லால்லாம லேமினேட் பண்ணியிருக்கீங்களே? புத்தகங்களுக்குத்தான்யா லேமினேஷன் சுருக்கம் சுருக்கமா இருக்கிறதை ஒரு ஃபாஷன் மாதிரி செய்யுறாங்க…படங்களுக்கில்ல…அதுவும் போட்டோ கொடுக்கிறவங்களுக்கு தப்பித் தவறிக் கூட அப்டிச் செய்திறக் கூடாது...என்னவோ 3டி படம்மாதிரி ஆக்கி வச்சிருக்கீங்க…?ஒவ்வொரு சைடுலேயும் ஒவ்வொரு மாதிரித் தெரியுது... லேமினேஷன் ஒர்க் பழகியிருக்கீங்களா, இல்லையா? அதுவே எனக்கு சந்தேகமாயிருக்கு...
அவன் தலை குனிந்து நின்றான். இப்பொழுது அவனிடம் பேச்சு முற்றிலுமாக நின்றிருந்தது. இனி எதுவும் பேசிப் பயனில்லை என்று நினைத்து விட்டானோ என்னவோ? என்ன சொன்னாலும் கேட்டுக் கொள்ள வேண்டியதுதான் என்று முடிவுக்கு வந்திருக்கலாம்.
என் மனது இன்னும் ஆறவில்லை. படத்தைப் பார்க்கப் பார்க்க வயிற்றெரிச்சலாய் இருந்தது. ஏதோ முக்கியமான விழாவாயிற்றே என்று தலைக்கு டையெல்லாம் அடித்து, சற்று சிறப்பு கவனத்தோடு இளமையாய்ச் சென்றிருந்தேன். என் தலையைப் பற்றி எனக்கே ஒரு பெருமை. டை அடிச்சாலும், நேச்சராத் தெரியுதே...எவனும் கண்டுபிடிக்க முடியாது.
இன்னும் முடியெல்லாம் நரைக்கவே இல்லையே சார்...எங்களப் பாருங்க...இப்பவே இப்டிக் கிழண்டு போயிட்டோம்...ஒங்களுக்கு முடி அடர்த்தி வேறே...ம்ம்...கூந்தலுள்ள சீமாட்டி...அள்ளி முடியிறீங்க...
அவர்கள் புகழ்ந்த பெருமை முகத்தில் தவழ்ந்ததோ என்னவோ...படமும் அழகாய் விழுந்து விட்டது. எனக்கே என்னை நம்ப முடியவில்லைதான்...அதைப்போய் இந்தப் படுபாவி இப்படி அசிங்கப்படுத்தி விட்டானே..லேமினேஷனுக்குப் பதிலாகக் கண்ணாடி போடக் கொடுத்திருக்கணுமோ? இப்டிக் கெடுத்து வச்சிருக்கானே? .இவனை இன்னும் நாலு வாங்கினால்தான் என்ன?
இந்த வீதில போற வர்றவங்களெல்லாம் உங்களப் பார்த்திட்டுக் கொடுக்கிறாங்களா? இல்ல எப்பயாச்சும் கண்ணுல பட்டு மறையுற உங்க தம்பிட்டக் கொடுக்கிறாங்களா?
இல்ல சார்…மத்தியானம் சாப்பிட வீட்டுக்குப் போவேன்…அந்நேரம் அவன் இருப்பான்….நல்லாத்தான் செய்வான்…இந்தா பாருங்க…அம்பது லேமினேஷன்…மொத்த ஆர்டர்…பூரா சாமி படம்….அவன்தான் செய்தான்…எந்தப் படமாவது கசங்கியிருக்குதா பாருங்க? ஒண்ணு சொத்தையா இருந்தாலும் எனக்குக் காசு வேணாம்…நா தொழில அப்டிச் சுத்தமா செய்றவன் சார்…
அப்போ சாமி படமாக் கொடுத்தாத்தான் நல்லா செய்வீங்களா…மனுஷங்க படம்னா இப்டித்தான் இருக்குமா…உங்களுக்கு மனுஷங்க வேணுமா…இல்ல சாமி வேணுமா…?
என்ன சார் இப்டிக் கேட்குறீங்க…மனுஷங்கதான் சார் வேணும்…அவுங்கள வச்சிதான தொழில்….
அப்போ மூஞ்சில இப்டிக் கரியைப் பூசினமாதிரி ஃப்ரேம் பண்ணினீங்கன்னா? ஒரு வேளை ஒங்க தம்பிக்கு என் முகத்தைப் பார்த்ததும் பிடிக்கலையோ? அவனக் கடுப்படிச்ச வேறே யார் மாதிரியேனும் நான் இருந்திருப்பனோ…
பார்ட்டி பெரிய வில்லங்கம் என்று நினைத்திருப்பானோ என்னவோ அமுங்கியே போனான். மூஞ்சி இறுகி, செத்துப் போனது.
நானே இருந்திருந்தும் ஆசப்பட்டு ஒண்ணைக் கொண்டாந்தேன். அதையும் நீங்க இப்டிச் செய்திட்டீங்க….என்னங்க தொழில் பண்றீங்க…தொழில்னா அர்ப்பணிப்பு உணர்வு வேணுங்க……கொடுக்கிறவங்க கிட்ட மரியாதை வேணும்...இல்லன்னா இப்டியெல்லாம்தான் ஆகும்...உங்களுக்கென்ன, நம்மள விட்டா இந்த ஏரியாவுக்கு வேறே யார் இருக்கான்னு நினைச்சிருப்பீங்க...எவன் இங்கேயிருந்து டவுனுக்குள்ள எடுத்துப் பிடிச்சிப் போகப்போறான்னு மெத்தனம்...அதான்...
அப்டியெல்லாம் இல்ல சார்...சொன்னா நம்புங்க...இந்த ஏரியாவுல நா ஒருத்தனா இத்தன வருஷம் தாக்குப் பிடிச்சி நிக்கிறேன்னா என் தொழில் சுத்தம்தான் சார் காரணம். எத்தனை பேர் படக்கடை வச்சிட்டு மூடிட்டுப் போயிட்டாங்க தெரியுமா…? இந்தப் படங்களயெல்லாம் எப்டி லேமினேட் பண்ணியிருக்கான் பாருங்க…எங்கயாச்சும் பசை தெரியுதா…எங்கயாச்சும் ஒட்டாம தூக்கிக்கிட்டு நிக்குதா? எந்த எடத்துலயாவது தீற்றியிருக்கானா…கறைபட்டமாதிரி…இருக்காது சார்...இருக்கவே இருக்காது...என்னவோ இதுல அப்டி ஆயிப்போச்சி…என் கெட்ட நேரம்….திட்டுத் திட்டா வேறே நிறையப் படிஞ்சி போச்சி…தாய்ளி…என் பொழப்பக் கெடுத்திட்டான் இன்னைக்கு…இத்தனை பேச்சு கேட்க வச்சிட்டானே....வரட்டும்…அவனச் சவட்டிடுறேன்…
வருத்தத்தோடு முகத்தில் எரிச்சல் தெரிந்தது இப்போது. இவ்வளவு சொல்லியும் இந்த மனுஷன் கேட்கமாட்டேங்குறானே என்ற கடுப்பும் ஏறியிருக்கலாம்.
அந்த சார் வந்தா கொடுத்திடுறான்னு சொல்லி பேசாம வீட்டுலயே நான் ரெஸ்ட் எடுத்திருக்கலாம்…அவன்னா சாமர்த்தியமாப் பேசி கொடுத்தனுப்பிச்சிருப்பான்…அஞ்சு பத்தைக் குறைய வாங்கிக் கூட பேரத்தை முடிச்சிருப்பான்…மொத்தமா காசே வேணாங்கிறேன்…கேட்கமாட்டேங்கிறானே ராட்சசன்… நல்லதுக்குக் காலமில்ல…வேறேன்ன சொல்றது? இவனுக்கெல்லாம் இவ்வளவு தாழ்ந்து போறதே தப்புதான் போலிருக்கு...
சார்…அந்தப் படத்தைக் இப்டிக் கொடுங்க…எங்கிட்ட இருக்கட்டும்…இந்த லேமினேஷனப் பிரிச்சிட்டு, வேறே ஒண்ணு ஸ்கேன் பண்ணிப் போட்டுத் தரேன்…என் செலவுலயே செய்றேன் சார்…நீங்க ஒண்ணும் பைசா தர வேணாம்…நானே நீட்டா செய்து தரேன்…
அதெப்படிய்யா…ஒரிஜினல் போட்டோ மாதிரி வருமா ஸ்கேன்ங்கிறது? ஃபிலிமிலேர்ந்து எடுக்கிறதுக்கும் எடுத்த போட்டோவ காப்பி பண்றதுக்கும் வித்தியாசமில்லியா…போனது போனதுதான்….பாரு கரெக்டா மூஞ்சி மேல பசை….கரியப் பூசின மாதிரி….
போ…உனக்கு இந்தக் காசு வௌங்காது…அவ்வளவுதான்…..
அய்யய்யோ…எனக்கு துட்டே வாணாம் சார்…நீங்க படத்தக் கொண்டு போங்க… - கையெடுத்துக் கும்பிட்டான் அவன். வாழ்வில் இப்படி ஒரு நபரை இதற்கு முன் பார்த்திருக்க மாட்டான் போலும். கும்பிடுதலின் கோணம் அதை எனக்கு உணர்த்தியது.
சொன்னது நூறு…கொடுத்ததும் நூறு. அவன் செய்த தப்புக்கு நான் பேசியதே போதும்…
மாலை அலுவலகம் விட்டு வந்த என் மனைவியிடம் கூறினேன்.
நல்லாக் குடுத்தனே காசு…நானா ஏமாறுவேன்…அவன் பண்ணின வேலைக்கு…முடியாதுய்யா…உன்னால ஆனதப் பார்த்துக்கன்னு வந்துட்டேன்…
போறுமே…இந்தப் படத்துக்கென்ன குறைச்சல்…கொஞ்சூண்டு பசை உங்க மூஞ்சில ஒட்டியிருக்கு…அவ்வளவுதானே… …இருந்திட்டுப் போகட்டும்…மூஞ்சியே அவ்வளவுதானே….காசு மிச்சம்…
என் மூஞ்சியை விட காசு எவ்வளவு பிரதானமாகிவிட்டது அவளுக்கு.
வீட்டில் யார் கண்ணிலும் சட்டென்று படாத ஒரு இடமாகத் தேடிக் கொண்டிருக்கிறேன் அந்தப் படத்தை மாட்ட…!!!.மாட்டத்தான் வேண்டுமா என்று ஒரு யோசனையும் உள்ளது.
ஆனாலும் மனசாட்சி இன்னொன்றை இப்பொழுது அழுத்தி உறுத்திக் கொண்டிருக்கிறது.
கொடுத்ததுதான் கொடுத்தே…அது ஏன் வௌங்காதுன்னு அழுகுணித்தனமா சபிச்சிட்டே கொடுத்தே…கிளம்பும்போது உன் மனசுல இருந்த நேர்மை கொடுக்கும்போது இல்லையே? இதுக்கு உன்னோட இத்தனை பேச்சையும் அமைதியாக் கேட்டுக்கிட்டு, துளிக் கூட டென்ஷனாகாம, காசே வாணாம்னு சொன்ன அவன் எவ்வளவோ பரவாயில்லையே… உண்மையைச் சொல்லி எவ்வளவு மன்றாடியிருக்கான் உன்கிட்டே...அதுவே அவன் தொழில் நேர்மைக்கு அப்பட்டமான சாட்சி...! சரியாச் சொல்லப் போனா உன்னை விட அவன் ஒரு படி மேல்தான்...
“டங் ஸ்லிப் “என்கிறார்களே, அந்தக் கண்றாவி இதுதானோ? இது “டங் ரன்னிங் ஸ்லிப்..” என் மனதுக்குள் ஒரு ரம்பம் இன்னமும் அறுத்துக் கொண்டுதான் இருக்கிறது.
இனிமேல் வெளியில் கணிசமாப் பேச்சைக் குறைக்கணும்…இல்லன்னா எங்கயேனும் நிச்சயம் மாட்டுவோம்… - நினைத்துக் கொண்டு உஷாரானேன்.
----------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக