07 நவம்பர் 2022

'விலகல்” - சிறுகதை - - கல்கி 7.11.2022 இதழ்

 

சிறுகதை                            'விலகல்”  - சிறுகதை - - கல்கி 7.11.2022  இதழ் 




      னக்கு பயமாகயிருக்கிறது. என் மகனுக்கும் எனக்கும் சண்டை வந்துவிடுமோ என்று. அப்படி நேரிட்டால் அவள் அவன் பின்னால்தான் நிற்பாள். அதிலும் நம்பிக்கையில்லை எனக்கு. வேண்டாம்...விட்ரு....வேண்டாண்டா...என்று ஏதோ நான்தான் சண்டைக்கு இழுத்தது போலச் சொல்லி அவனை விலகச் சொல்லுவாள். அதனால்தான் இது நடக்கும் முன்பே இங்கிருந்து வெளியேறிவிட வேண்டுமென்று விரும்புகிறேன்.  கேவலப்பட்டு வெளியேற நேர்ந்தால் பிறகு தற்கொலைதான். என்னால் அவமானங்களைத் தாங்க இயலாது.  அதற்கு முன்பே நழுவிடணும். நழுவுவதென்ன நழுவுவது....? நானென்ன இவன் சோற்றிலா கையை நனைக்கிறேன்? ராஜா மாதிரி இருப்பேன்.  பென்ஷன் வாங்கும் ஆசாமி நான். என் காசுதான் நாளைக்கு இவனுக்கு வேண்டும். இவன் துட்டு எனக்கு வேண்டாம். அப்பாவின் சேமிப்பு என்னென்ன, எங்கெங்கே...என்று இவன்தான் தேட வேண்டும். எனக்கொன்றுமில்லை. ஆனாலும் மதிப்பில்லையே இன்று...ஆனாலும்

      ஆதரவற்ற நிலைக்கு ஆளாக்கி விடுவார்களோ என்று பயப்படுகிறேன். எனக்கு நானே தயாராக வேண்டாமா? என்னை நானே தேற்றிக் கொண்டு நிமிர்ந்து நிற்க வேண்டாமா? இது  என் டைம்... என்று அவள் தயாராகி நிற்கிறாளோ? அப்படித்தான் தெரிகிறது அவள் செய்கைகள். இதற்கு முன்பு நடந்த பல சண்டைகள் இந்த ரீதியில்தான் இருந்திருக்கின்றன. ஆனால் அப்போது வீடு என் கன்ட்ரோலில் இருந்தது. வரவு செலவு அனைத்தும் என் கட்டுப்பாட்டில். ஆனால் இப்போது?    அவன் சம்பாதிக்க ஆரம்பித்து, திருமணம் ஆகி நிற்கையில் அத்தனையும் அவன் கைக்குப் போய்விட்டது. இவள் அவனோடு ஒண்டிக் கொண்டு விட்டாள். அதிகாரம் கை மாறியதில் பெருமிதம் அவளுக்கு.    உடனே பொறுப்பு வந்தாச்சு அவனுக்கு....!  உறி...உறி...உறி...!!!                                                 

நான் எதையும் கண்டு கொள்வதில்லை இப்போது. பையனோடு வந்து இருக்க ஆரம்பித்த பின்னால் அவள் பேச்சும் நடவடிக்கையும் அடியோடு மாறி விட்டன. அந்தக் கணமே நான் தனித்து விடப்பட்டதாய் உணர்ந்து விட்டேன். என்னோடு இருந்தபோது என் எல்லா நடவடிக்கைகளுக்கும் கட்டுப்பட்டவள், இப்போது அவிழ்த்து விட்டதுபோல் நடந்து கொள்கிறாள். சம்பளப்பணத்தை அம்மாவிடம்தான் கொடுக்கிறான் அவன்.ஏ.டி.எம். கார்டே அவளிடம்தான் உள்ளது. அவன் மனைவி என்ன நினைப்பாளோ? என்று அதற்கொரு சண்டை இருக்கிறதோ?   

       பையனோட சம்பளக் காசானாலும் அதையும் பொறுப்பா, சிக்கனமா, கருத்தா  செலவழிக்க வேண்டியது நம்ம கடமை என்று நான் எத்தனையோ முறை சொல்லிப் பார்த்து விட்டேன். கேட்பதாயில்லை.    பொறுப்பா இல்லாம இப்ப இங்க என்ன பண்றாங்க? ஆடவா செய்றாங்க?  இத்தனை நாள் அவள் மனம் கொதித்துக் கொண்டிருந்ததற்கு ஆறுதலாய் அந்த பதில் வந்திருக்கிறது என்பது புரிந்தது எனக்கு. அவள் இப்படிப் பேசி நான் பார்த்ததேயில்லை.  அதற்காக ஒரு குடும்பப் பெண் இந்த மாதிரியா பதில் சொல்வாள்? இவளை நான் என்னென்று உணர்வது? மனிதர்கள் எல்லாருக்கும் ரெண்டு பக்கம் இருக்கும் என்று கேள்விப்பட்டிருக்கிறோமே? பையன் சப்போர்ட் என்றால் வார்த்தைகள் கூடவா தடிக்கும்? அல்லது வயதானால் எப்படி வேண்டுமானாலும் பேசிக் கொள்ளலாமா? கட்டுப்பாடு தேவையில்லையா? அதற்கான சலுகை கிடைக்கிறதா?

       பெண்கள் வயதான பின்னால் பல சமயங்களில் உட்காருவது, எழுவது,    படுப்பது, பேசுவது, சிரிப்பது, நடப்பது, வீட்டிற்குள் கொஞ்சம் வெட்ட வெளியாய்ப் புழங்குவது  என்று பல வகையிலும் ஆண்களைப் போல நடந்து கொள்கிறார்களே...இது அதன் அடையாளமோ? ச்சீ...இவளையா நான் ரசித்தேன்...! இவளையா கொஞ்சினேன்...!! பெண்மையின் மென்மை எங்கே போயிற்று? சமயம் பார்த்து என் மனதில் என்னெல்லாம் தோன்றுகிறது?

      மருமகப் பெண் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டு அமைதியாய் இருந்துகொண்டிருக்கிறது. என்று அது வெடிக்கப் போகிறதோ தெரியவில்லை. அப்படி வெடிக்கும்போது அந்தப் பேச்சாவது கொஞ்சமேனும், ஒரு சிறு சதவிகிதமேனும் எனக்கு சார்பாக இருக்குமா என்கிற நப்பாசை என்னிடம்  துளி இருக்கிறது. ஏனென்றால் பெண் பிள்ளைகள் எப்போதும் அப்பாவுக்கு சப்போர்ட். அதாவது அவர்கள் அப்பாவுக்கு. இந்த மாமனாருக்கு அந்த பாக்கியம் கிட்டுமா சொல்ல முடியாது. அதற்கும் என்னைப் பிடிக்காமல் போகலாமே...அவன் சொல்லிக் கொடுக்கலாமே...! அதுகிட்ட வாயக் கொடுத்து மாட்டிக்காத...! தேவாங்கு...!! நாங்களே பேசுறதக் குறைச்சிருக்கோம்...! என்ன வேணாலும் சொல்லலாமே...!    எதைக் கொண்டு வந்தோம், கொண்டு செல்ல? விஷயத்திற்கு வருகிறேன்.        

இதெல்லாம் எதற்கு? வெட்டிச் செலவு... என்று நான் சொன்ன பொருட்களையெல்லாம் அத்தியாவசியத் தேவை போல் வாங்கினாள். இவ்வளவு போதும்....என்று கட்டுப்படுத்திய  சாமான்களையெல்லாம் டபுள் பங்காக வாங்கி அடுக்கினாள். துணிமணிகள் நிறைய இருக்கும்பொழுதே, பலவும் இன்னும் உடுத்தப்படாமலேயே கிடக்கும்பொழுதே புதிது புதிதாக வாங்கிக் கொண்டிருந்தாள். அந்தப் பழையவை அணியப்படாமலேயே பழசாகி பாழாகிக் கொண்டிருந்தன. சர்வ சாதாரணமாய் அவைகளை நிறுவைக்குப் போட்டு இடத்தைக் காலி செய்தாள்.  என்னோடு குடித்தனம் நடத்தியபோது இருந்த கட்டுப்பாடுகள் அத்தனையையும் அறுத்துக் கொண்டு வெளியே வந்து விட்டதுபோல் இருந்தது அவளது நடவடிக்கைகள். அவ்வளவு கர்ண கடூரமாகவா இருந்தேன் என்று நானே இப்போது நினைக்க வேண்டியிருந்தது.       இப்போது அவள் இருக்கும் இருப்பைப் பார்த்தால் இவளா அப்போது என்னிடம் அப்படி இருந்தது? என்று யாராலும் நம்பவே முடியாதுதான்.                                     வாழ்க்கையில் இப்போதுதான் அடியெடுத்து வைத்திருக்கும் அவனை இப்படிப் பழக்கினால், பின்னால் சேமிப்பு, சொத்து என்று எதுவுமில்லாமல் போய் விடுவானே என்று எனக்கு வயிற்றெரிச்சலாயும் ஆதங்கமாயும் இருக்கிறது. ஆனால் நான் இப்போது எதுவும் சொல்ல முடியாது. எதைச் சொன்னாலும் அவள் கேட்கப் போவதில்லை. கேட்கக் கூடாது என்று பிரதிக்ஞை செய்து கொண்டது போலல்லவா செயல் படுகிறாள்.  போதாக் குறைக்கு அவன் வேறு வந்து முன்னே நிற்பான். ஏதேனும் சண்டை வருவதற்கு முன் அம்மாவுக்குப் பாதுகாப்பு அரணாய் நிற்பதுபோல் குறுக்கும் நெடுக்கும் போய்க் கொண்டிருப்பான். காவலுக்கு ஆள் இருக்கு...ஞாபகம் இருக்கட்டும்... கட்டு மீற முடியாது என்பதுபோல....!

      அம்மாவின் தேவை அவனுக்கு இருக்கிறது. அதை நன்கு உணர்ந்திருக்கிறான். நாளை குழந்தை பிறந்தால் பார்த்துக் கொள்ள, வளர்த்துக் கொடுக்க அம்மா வேண்டுமே...! அப்பாவை வைத்துத்தான் அம்மா என்ற நிலைமை இல்லையே...! வெளிநாட்டில் இருப்பவர்கள் வேறு வழியில்லாமல் அப்பனையும் அழைத்துச் செல்கிறார்கள். இங்கே தனியே கிடந்து செத்துத் தொலைஞ்சார்னா...பிறகு அதுக்குமில்ல ஓடி வரணும்...கூட்டிப் போய் அங்க போயிட்டாலும், ஆம்புலன்சுக்கு .போன் பண்ணினாப் போதும்...வந்து எடுத்திட்டுப் போயிடுவான். சிரமமில்லாம முடிஞ்சிடும்.இங்கன்னாஆயிரத்தெட்டு சம்பிரதாயங்கள்...செய்முறைகள்....செலவுகள்....அய்யய்யய்ய...எவன் ஃபாலோ பண்றது இந்தச் சடங்குகளையெல்லாம்....அதெல்லாம் அவுட் ஆஃப் டேட்....! அந்த நம்பிக்கையெல்லாம் பொய்த்துப் போய் ரொம்ப நாளாச்சு....இன்னும் அதப் பிடிச்சித் தொங்கிட்டு இருக்க முடியுமா? கன்ட்ரீ ப்ரூட்ஸ்....!!      ரொம்ப முடியாம இருந்தாலும் ஏதாச்சும் முதியோர் இல்லத்துல சேர்த்துட்டுப் போயிடலாம். நாளைக்கு மண்டையப் போட்டாலும், இ.மெயில் போட்டு, அக்கௌன்ட் நம்பர் வாங்கி பணத்தை அனுப்பிச்சிடலாம்...நீங்களே எல்லாத்தையும் செய்திடுங்கன்னு...அதுக்கும் வழியில்லையே...கெழம் இன்னும் குத்துக்கல்லாட்டம்ல இருக்கு....? ஓணான மடில கட்டின மாதிரி இத கூட்டிட்டுப் போயி இன்னும் அங்க என்ன பாடு படுத்தப் போகுதோ? அம்மாவின் தேவையை நினைக்கும்போது அப்பாவின் தேவை ஒன்றுமேயில்லை.

      நான் ஒரு எக்ஸ்ட்ராதானே?     அவுங்க ஏதோ பேசிக்கிறாங்க என்று என்றாவது  ஒதுங்கியிருக்கிறானா?  மாட்டான்.  சின்ன வயதுக்குக் கட்டுமஸ்தான உடம்போடு உள்ள அவனின் இருப்பு எனக்குள் பயத்தை ஏற்படுத்தத்தான் செய்கிறது. ஓங்கி ஒரு அறை விட்டான் என்றால் நான் அம்பேல். . நெஞ்சை நிமிர்த்தி நேரடியாக வந்து ஒரு இடி இடித்தானென்றால் நிலை குலைந்து போய்த் தடுமாறி விழுந்து  நினைவு தப்பி விடும் எனக்கு.       பின் தலையில் அடிபட்டு பட்டென்று செத்தாலும் போச்சு...!      

      அப்பா அம்மாவோடு பேசுகிறார் என்றால் அது நிச்சயம் சண்டைக்குத்தான் என்பது அவன் கணிப்பு. அல்லது அது சண்டையில்தான் முடியும் என்கிற நினைப்பு. அவள் அவனை அப்படித்தான் பழக்கியிருக்கிறாள். கணவன்-மனைவிக்குள் ஆயிரம் பேசிக் கொள்வோம்...அதையெல்லாமா அவனிடம் போய்ச் சொல்வது? கார சாரமாய்ப் பேசுவதெல்லாம் சண்டையாகுமா?  எது அவனுக்கும் தெரியணும். எது தெரிய வேண்டாம் என்கிற வித்தியாசமில்லையா...உனக்கொரு விவஸ்தையே கிடையாதா? என்று பலமுறை அவளை நான் சத்தமிட்டிருக்கிறேன். ஆனால் ஒருமுறை கூட என் பேச்சைக் கேட்டதில்லை. என்னோடு நடந்த விவாதத்தை, சர்ச்சையை, சண்டையை எல்லாவற்றையும் அவள் அவனிடம் கொட்டி விடுவாள். இதைச் சொல்லணும், இதைச் சொல்லக் கூடாது என்பதே கிடையாது. என்னதான் வாழ்க்கை அனுபவம் அவளுடையது என்று தோன்றும் எனக்கு. அவன் மனதில் பகைமை உருவாகாமல் வேறென்ன செய்யும்?

      அந்த எல்லாச் சண்டையிலும் நான்தான் வில்லன். எதுவொன்றிலும் என் பக்கம் நியாயம் இருந்ததில்லை. அவள் சொல்லி நான் கேட்காததாகவே அனைத்தும் முடிந்திருக்கும். நான் வெறும் அடாவடி.தடாலடி... அதனாலேயே சண்டை ஏற்பட்டதென்றும், அப்படியொரு சண்டையை உண்டாக்குவதற்காகவே வரிந்து கட்டிக் கொண்டு நான் அவளிடம் அனுதினமும் பேச்சைத் துவக்குவதாகவும், எப்பப் பார்த்தாலும் ஏதாச்சும் குத்தம், குறை சொல்லிட்டு சண்டைக்கு இழுக்கிறதே உங்கப்பாவுக்கு வேலையாப் போச்சு....யப்பாடா...போதும்டா சாமி....எனக்கு வெறுத்துப் போச்சு....எங்கயாவது போய் சிவனேன்னு இருக்க மாட்டமான்னு வருது....என்றே ஒவ்வொரு பேச்சையும் அவள் முடித்திருப்பாள். கண்கள் கலங்கினால்தானே காரியம் கூடும். அதுவும் நடக்கும்.  அதாவது நான் இல்லாமல் இருந்தால் எத்தனை நிம்மதி என்ற மறைபொருள் அதில் பொதிந்திருக்கும்.  

ஏம்மா...பேச ஆரம்பிக்கும்போதெல்லாம் அப்பாவக் குறை சொல்லிட்டே இருக்கியே...என்று ஒருநாள் கூட அவன் கேட்டதில்லை. அம்மா சொல்வதை அப்படியே நம்பி விடும் பிள்ளை அவன்.அது வேத  வாக்கு அவனுக்கு. கொடுமைக்கார அப்பா என்கிற பிம்பம். கல்வி கற்கும் காலத்தில் படிப்பில் மட்டும்தான் கவனம் செலுத்த வேண்டும் என்று நான் எவ்வளவோ சொல்லியும் அவன் கேட்கவே இல்லை. அவனுக்கு வேண்டாத அரசியலையெல்லாம் சொல்லிக் கொடுத்து, ஒரு சார்பு நிலையில் தொடர்ந்து அவனிடம் பேசி, ஜாதி, மதம், உயர் ஜாதி, கீழ் ஜாதி என்று அவன் மனத்தில் பேதங்களை ஏற்படுத்தி, எல்லோரையும் சந்தேகக் கண்களோடு பார்ப்பதற்கும், கீழ்த்தரமாக நினைப்பதற்கும்,  அன்பு செலுத்தாமல், நட்பு பாராட்டாமல் வெறுப்பை உமிழ்வதற்கும், எதிராளி்க்கு சார்பாக நியாயங்களைப் பேசுபவர்கள் அல்லது பொதுவாகக் கருத்தைச் சொல்பவர்களிடமெல்லாம் வெட்டிக்கு வாதம் பண்ண வைத்தும், அப்படிப் பேசுபவர்கள் வயதில் எத்தனை பெரியவர்களாயிருப்பினும், அது உறவினர்களாயினும் எடுத்தெறிந்து பேசுவது போலவும், அலட்சியப்படுத்துவது போலவும்  அவனைத் தயார் படுத்தியிருந்தாள் அவள். அல்லது அவனாகவே தயாராகியிருந்தான் என்றும் சொல்லலாம். அது சம்பந்தமான புத்தகங்களைக் கொடுத்தும் வாங்கியும் படிக்கச் செய்து, கல்லூரிப் பாடங்களில் கவனமில்லாமல் ஆக்கி, அவன் வாழ்க்கையையே பாழடித்தவள் அவள்தான். பலன்...வெற்றிகரமான தேர்ச்சி இன்றி, வெறும் பாஸ் கூட இல்லாமல்,  பத்துப்பேப்பருக்கும் மேல் அவன் அரியர்ஸ் வைத்ததுதான் கடைசி மிச்சமாயிருந்தது.

அவனோடு தங்கியிருந்தவர்கள் அடிக்கடி சினிமா போனார்கள். வெளியே சுற்றினார்கள். ஆனால் படிப்பில் கோட்டை விடவில்லை. அதில் கவனமாய் இருந்து வெற்றி கண்டிருக்கிறார்கள். இவனுக்கு அந்த சாமர்த்தியம், கவனம் இல்லாமல் போனதே?     

      கல்லூரி காலம் முடிந்தபின்னால்தான் அவன் விழித்துக் கொண்டான். அவனாக விழித்துக் கொண்டது அது. அப்பா அன்றே சொன்னாரே, கேட்காமல் போனோமே என்கிற புரிதல் அப்போதும் இல்லை. அதுவும் அவனோடு படித்தவர்கள், அறையில் இருந்தவர்கள் எல்லோரும் வரிசையாக வேலைக்குப் போனதைப் பார்த்து அவனுக்கே ஒரு உறுத்தல் ஏற்பட்டு, அல்லது  அவமானம் தோன்றி (இவனுகளுக்கெல்லாம் வேலை கொடுத்துட்டாங்க நாட்டுல....!)  ஆன் லைனில் ஒரு வேலை தேடி, குறைந்த சம்பளமானாலும் பரவாயில்லை என்று கிளம்பிப் போனான். உயர்ந்த ஜாதி உயர்ந்த ஜாதின்னு சொல்லிக்கிறது வெறும் வாய் வார்த்தைல இருந்தாப் பத்தாது, செய்கைல இருக்கணும், சாதனைல காமிக்கணும்  என்று அப்போதுதான் அவனுக்கே உறைத்தது.  பிறகுதான் அரியர் பேப்பர்களையெல்லாம் படிப்படியாக முடித்து பெரிய நிறுவனங்களுக்கு அப்ளை பண்ணி நுழைந்தது. இன்று ஒரு நல்ல நிறுவனத்தில் நல்ல சம்பளத்தில் அவன் வேலை பார்க்கிறான் என்பதில் எனக்கு திருப்திதான். எல்லாம் இறைவன் அருள். நான் அப்படித்தானே நினைக்க முடியும்.

முன்னோர்கள் ஆசீர்வாதம். என்னைப் பொருத்தவரை அப்படித்தான்.  நல்ல சம்பளம் என்று வந்தால்தானே பெண் கொடுக்கிறார்கள்? பையன் மாதம் ஒரு லட்சம் கண்டிப்பாக வாங்க வேண்டும். பெண் இருபத்தைந்தாயிரம் வாங்கினால் போதும். இதுவே  பெண் வீட்டாரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது இப்போது. எல்லாம் தலைகீழாக மாறி ரொம்ப நாளாச்சு.  வெறும் அறுபதும், எழுபதும் எல்லாம் இப்பொழுது சம்பளமேயில்லை. அதுவும் வெறும் இருபத்தைந்தாயிரம் வாங்கும் பெண் வீட்டாரின் எதிர்பார்ப்பு இது. அது வேலை பார்ப்பது கைச் செலவுக்கு...!  அது மட்டும் கால் துட்டு வாங்கலாம்....ஆனால் பையன் முழுத் துட்டு வாங்கியாகணும். கார் இருந்தால் தேவலை. இல்லாட்டா லோன் போட்டு வாங்கிக்கலாம். பையன் பெயரில் வீடு இருந்தால் அதை அடகு வச்சுக் கூட வாங்கலாம்...தப்பில்லை.                                                                    முடியாவிட்டால் நாளை அது வேலையையும் விடும். அதற்கும் சம்மதித்தால்தான் பெண் கொடுக்கிறார்கள் இப்போது.  காலம் எப்படி மாறிவிட்டது பாருங்கள்? பையன் வீட்டார் பெண்ணுக்குக் கண்டிஷன் போடுவதை விடுத்து, இப்போது எல்லாம் தலைகீழ். அத்தனைக்கும் ஓ.கே. என்றாலும் டைவர்ஸ் இல்லாமல் வாழ்வார்களா என்பதற்கு கியாரண்டி இல்லை. அது அவர்களின் உரிமை. அதில் நாம் தலையிட முடியாது. திருமணம் முடித்து வைப்பது மட்டும்தான் நம்  வேலை.  அந்தளவுக்கு விரிவாக  கோணலாக, சிந்திக்கிறார்கள். வானத்தில் வட்டமிடும் சுதந்திரப் பறவைகள்.   விட்டுக் கொடுத்து வாழ்தல் என்பதெல்லாம் பழங்கதை. வெட்டு ஒன்று துண்டு ரெண்டு என்பது புதுக்கதை.ஒரே மாதம், மூன்றே மாதம் என்று பிரிந்த கதையெல்லாம் இருக்கிறது. கோர்ட் வாசலுக்குப் போய்ப் பாருங்கள்....கல்யாணம் கந்தலாகி நிற்பதை...! இந்திய கலாச்சாரம்...குடும்ப அமைப்பு...அடேங்கப்பா....!  

       பெரியவர்கள் பார்த்து வைக்கும் கல்யாணங்கள்தான் இந்த லட்சணத்தில் இருக்கிறது. பலவும் தப்பாய்ப் போகிறது.  எனக்குத் தெரிய ஜாதி விட்டுக் கல்யாணம், காதலித்துக் கல்யாணம், ஓடிப் போய்க் கல்யாணம் இம்மாதிரிக் கேஸ்களெல்லாம்தான் பொறுப்போடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

      இவ்வளவு ஏன்...எங்கள் வீட்டுக்கு எதிர்த்தாற்போலேயே ஒரு காதல் ஜோடி உண்டு. வேற்று ஜாதிக் கல்யாணம்தான். அந்தப் பெண் மட்டும் அதன் வீட்டுக்குப் போய் விட்டு வரும். இந்தப் பையன் போய்ப் பார்த்ததேயில்லை. வீட்டு வாசப்படி மிதிக்கக் கூடாது என்று சொல்லிவிட்டார்களோ என்னவோ! அவன்பாட்டுக்குத் தனியாகத்தான் இருந்து கொள்கிறான். அதுபோல் அவன் பெற்றோர் வீட்டுக்கு அதுவும் போவதில்லை. அதை இவனே சொல்லிவிட்டானோ என்னவோ?  கதை எப்படியிருக்கிறது பாருங்கள். இந்த அளவுக்காவது எப்படி விட்டார்கள் என்றே நினைக்க வேண்டியிருக்கிறது. உற்றார், உறவினர் என்று யாரும் இவர்கள் வீட்டுக்கு வந்து பார்த்ததேயில்லை. இப்படி எல்லாரையும் முறித்துக் கொண்டு ஒரு வாழ்க்கை தேவைதானா என்று தோன்றும். உறவும், நட்பும், சுற்றமும்  சூழ என்று சும்மாவா சொல்லி வைத்திருக்கிறார்கள்? எந்தச் சுற்றமும் எங்கும் கிடையாது. ஒரு நாய் வளர்ப்பாங்க அதுதான் துணை...ஆபீஸ் முடிஞ்சு வந்தவுடனே கழுத்தைக் கட்டிண்டு அதக் கொஞ்சிண்டு இருக்க வேண்டிதான்.....! ரொம்ப சமத்துப் பிள்ளைங்க....நெற்றி முறிச்சு, திருஷ்டி கழிக்கணும் போல்ருக்கு...!      

நம்ம பையன் விஷயத்தில் அந்தச் சங்கடமெல்லாம் இல்லை. அந்தமட்டும் சேமம். பிரச்னை இதுதான்...பையன் அம்மா கோண்டு. ஏன் அப்பா கோண்டுவாய் நீ ஆக்கிக் கொள்ள வேண்டியதுதானே...என்று நீங்கள் கேட்கலாம். ரெண்டுமே தப்பு என்கிறேன் நான். எது நியாயமோ, எது சரியோ...அதன் பக்கம் அவன் நிற்க வேண்டும். அதைப் பகுத்துணரும் அறிவும், நிதானமும் அவனுக்கு வேண்டும். அது அவன் கட்டின பெண்டாட்டியானாலும் சரிதான். அப்போதுதான் எது அட்ஜஸ்ட்மென்ட் என்பதே ஒருவனுக்குப் புரியும். அதன்படி இருக்கவும் தெரியும். இப்போது இவன் இருக்கும் லட்சணத்தைப் பார்த்தால் அப்படித் தெரியவில்லையே...!                                                 தொட்டதற்கெல்லாம் அவன் என் மேல் கோபப்பட ஆரம்பித்திருக்கிறானே...! அல்லது முறைத்துக் கொண்டு மூஞ்சியைத் தூக்கி வைத்துக் கொண்டிருக்கிறானே...! இது வெடிக்க எவ்வளவு நேரம் ஆகும்? அந்தக் கணம் சட்டென்று நிகழ்ந்து போகும் வாய்ப்பு அதிகம்தானே...! அப்படித்தானே அன்றொரு நாள் ஏதோ பேசிக்கொண்டிருந்தபோது, அவன் கருத்துக்கு மாறுபாடாய் ஏதோ சொன்னேன் என்று சற்றும் எதிர்பாராத தருணத்தில் என் முகத்துக்கு முன்னால்  நெருங்கி வந்து, கையை உயர்த்தி, கண்ணை முழித்து,  பல்லைக் கடித்து, நாலு வீட்டுக்குக் கேட்பதுபோல் குரலெடுத்துக் கத்தினானே...! (அடிக்கவில்லை, தப்பித்தேன்...எவ்வளவு நேரம் ஆகும்...?)  அன்று ஒரு கணம் நடுங்கியது பாருங்கள் என் உடம்பு! அதுபோல் வாழ்க்கையில் இதுநாள் வரை ஒரு உதறலை நான் கண்டதேயில்லை. பெத்த பிள்ளையே ஆனாலும்..... ஆகிருதி?

அப்படியே கப்சிப் ஆகிப்போனேன். ஏதோ வெறியோடு என்னையே வீரியமாய் நோக்கிக் கொண்டிருந்த அவன், அப்பா முன்னால் இப்படிச் செய்து விட்டோமே என்று தவறை உணர்ந்த மாதிரித் தெரியவில்லையே...! கண் காண்பித்து விட்டதே...! இது எதைக் காட்டுகிறது...சற்றே நினைத்துப் பாருங்கள்....அவனுக்கு என் மேல் கொஞ்சமும் மரியாதை இல்லை என்பதைத்தானே...! அந்த எண்ணத்தை, அந்தத் தீர்மானத்தை அவன் மனதில் தோற்றுவித்தது யார்? என் மனைவிதானே...! பையன் முன்னால், அவனது இளம் பிராயம் முதற்கொண்டு  என்னை எதிர்த்து எதிர்த்துப் பேசுவதைப் பலமுறை நேரில் கண்ட அவனிடம், நான் சொல்வதையெல்லாம் மறுத்து மறுத்துப் பேசும் தன்மையை உணர்ந்த அவனிடம்,  அந்த மாற்று பிம்பம்தானே படிந்து போய்க் கிடக்கும்? அந்த எண்ணங்கள்தானே வேரோடிப் போய்க் கிடக்கும்? பிறகு அவனுக்கு எங்கிருந்து வரும் மரியாதை என்னிடம்?                  

என்று என்ன நடக்கும் என்பது தெரியாமல் பீதியில் உறைந்து கிடக்கிறேன் நான். ஒரு அரசாங்க அதிகாரியாய் இருந்து, ஓய்வு பெற்று இன்று கைநிறைய ஓய்வூதியம் பெறும் எனக்கே இந்த நிலைமை என்றால், ஒன்றும் கையாலாகாத அப்பன்கள் கதி?                                                      என் மனம் முழுவதும் நிறைந்து கிடக்கும் ஒரே விஷயம் எப்படி இங்கிருந்து கிளம்பிச் செல்வது என்பதுதான். எனக்கு முழுமையாக நம்பிக்கை அற்றுப் போன இந்த வேளையில்தான் நான் இப்படிச் சிந்திக்கிறேன். அம்மா முன்னால் நெஞ்சை நிமிர்த்துக் கொண்டு என்னிடம் வீராவேசமாய் வந்து நின்ற  அவன், அவன் பெண்டாட்டி முன்னால் இப்படிச் செய்ய எவ்வளவு நேரம் ஆகும்? இன்னும் அந்தக் கேவலம் வேறு வேண்டுமா எனக்கு?                                                            அதற்கு முன்னால் கழன்று கொள்வதுதானே கௌரவம்? கொஞ்சம் உங்களை என்னிடத்தில் நிறுத்தி வைத்து சிந்தித்துப் பாருங்கள். என் பக்கத்து நியாயம் புரியும். மரியாதையாவது, மதிப்பாவது.. எல்லாம்...கிலோ என்ன விலை? கேட்கும் காலமய்யா...கேட்கும் காலம்...! ... காலமிது காலம்...கலிகாலமிது காலம்....!                                                                                                      --------------------------------------------

                                     

 

                                        உஷாதீபன்,                                                                               எஸ்-2 இரண்டாவது தளம், ப்ளாட் எண். 171,172,                                               மேத்தாஸ் அக்சயம், மெஜஸ்டிக் Nஉறாம்ஸ்,                                                 ராம் நகர் (தெற்கு) 12வது பிரதான சாலை, சென்னை-91.                                       (செல்-94426 84188) (ushaadeepan@gmail.com)

 

கருத்துகள் இல்லை:

  'குற்றம் புரிந்தவன்'  - சிறுகதைத் தொகுப்பு - புஸ்தகா.கோ.இன்  - ல் வெளியிடப்பட்டுள்ளது.    (www.pustaka.co.in) --------------------...