22 ஜூலை 2022

படத்திற்கு ஒரு கதை காவலன் காவான் எனின்.....

 

படத்திற்கு ஒரு கதை      காவலன் காவான் எனின்.....

                              -----------------------------------------------------



     ரசர் அப்படித் தன்னைக் காவலுக்கு அனுப்புவார் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை சம்புகன். மனம் குதூகலமடைந்தது.. அரச கட்டளையின் அடையாளமாய் அசுர பலம் கூடிவிட்டதாய் உணர்ந்தான்.

     என்னடாது...! தரையில் உட்கார்ந்தாலே ஐந்தடி உயரம் இருக்கிறோமே...! பாதம் முதல் கழுத்து வரை இந்தப் புஜ பல பராக்கிரமம் வியப்பாயிருக்கிறதே? ஒரு போர் வீரனுக்கான அடையாளங்கள்? ஊர்க்காவல் உத்தரவு... எப்படி சாத்தியமானது? எந்த சக்தி எனை ஆட்கொண்டது?

     கட்டுக் குடுமியை சிலிர்ப்பி அவிழ்த்து விட்டு எழுந்து நின்றான். வானம் தொட்டது போலிருந்தது. இந்த தேஜஸை வழங்கிய மாய சக்திக்கு என் பாதம் பணிந்த நமஸ்காரங்கள். குடுமியை முடிந்து தலைப்பாகையை இறுக்கினான். ஈஸ்வரோ ரக்க்ஷது....

     திப்பு மிகு பைரவரே...நீ்ர் எமக்குத் துணையா அல்லது நான் உமக்கா?

     அரசர் ஆணை.. அதனால் வந்திருக்கிறேன். உங்கள் ஆணைப்படியே என் இயக்கம்.

     நல்லது. நாம் இப்போது எதன் பொருட்டு இரவு நேரத்தில் இந்த நகர்வலத்தை மேற்கொண்டிருக்கிறோம்...அறிவீர்களா?

     அறிவேன் ஐயா....எளிய மக்கள் மிகுந்த உடல் போதைக்கு ஆட்பட்டிருக்கிறார்கள். அதனால் குடும்பங்கள் சீரழிகின்றன. உழைக்கும் வர்க்கத்தினரின் ஊதியம் ஒழுங்காக வீடு போய்ச் சேருவதில்லை. மந்திரிப் பிரதானிகளின் ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு  எடுத்த முடிவாக ஒழுக்கக் கேடுகளை அழித்து ஒழிப்பதற்காக நாம் புறப்பட்டிருக்கிறோம்.

     ஆம்...மிகச் சரி. பகலில் உழைக்கச் செல்பவர்கள் இரவானதும் அவரவர் வீடு திரும்பி உறங்கி ஓய்வெடுக்காமல், பல இடங்களில் மயங்கி மண்ணடித்துப் போகிறார்கள். கேளிக்கை விடுதிகள் அதிகமாகி விட்டன. குதூகலமும், கும்மாளமும் கொக்கரிக்கின்றன. இன்று இந்த வேதபுரி நகரின் பகுதிக்கு மட்டுமே நாம் காவலை மேற்கொள்ள வேண்டும். குற்றவாளிகளைப் பிடித்து ஒப்படைக்க வேண்டும். வேதபுரி சேதபுரியாகிவிடாமல் காப்பாற்ற வேண்டியது நம் கடமை.

     நமக்கு அரசர் தந்த தலையாய  பணி. செவ்வனே நிறைவேற்றுவது கடமை. முக்கியமான ஒன்றைச் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன். சொல்லலாமா?

     தாராளமாக....நிறைவேற்றுவது என் சித்தம்.

     இந்தக் காவல் கண்காணிப்பை அமைதியாக, தடமின்றிப் பயன்படுத்த வேண்டும்.

     சற்று விளக்கமாகச் சொன்னால் புரிந்து கொள்ள ஏதுவாகும்...!

     அதாவது எந்தவொரு தடயமும் நம்மிடமிருந்து வெளிப்படக் கூடாது. குறிப்பாக நடக்கும் தவறுகளைக் காணும்போது சட்டென்று நீர் குரல் கொடுத்து விடக் கூடாது. என்னைப் பார்த்து, சைகை செய்து,  என் கைகளைப் பற்றி இழுத்துப் பதுங்கி, குறிப்பிட்ட இலக்கினைச் சுட்ட வேண்டும்.....உமது இயல்பான குணம் வெளிப்படாமல் நீர் உம்மை அடக்கி இருத்திக் கொள்தல் அவசியம். கருமமே கண்ணாக கடமையை ஆற்ற ஆயத்தமாக வேண்டும்.

     ஆகட்டும் ஐயா.....தங்கள் சித்தம் என் பாக்கியம்...! கை கோர்த்து தீமையை ஒழிக்க முன்னிற்பதே கருத்தான பணி.

     நல்லது.... பிரிந்து செல்லுங்கள். முதலில் நாம் அரண்மனைக்கு விலகிய தூரத்திலான   இந்த  வேதபுரிப் பகுதியில் நமது சோதனையைத் துவக்குவோம். இரகசியங்கள் அடங்கிய பகுதி. எங்கு சென்றாலும் நீர் எம் பார்வையிலிருந்து விலகி விடக் கூடாது. மனதில் கொள்ளுங்கள்....

                                ( 2 )

     ம்புகன் தன் காதுகளைக் கூர்மையாக்கிக் கொண்டு, பாதங்களைப் பதவாகமாக வைத்து சத்தமின்றி முன்னேறினான். ஓரிடத்தில் சற்றுத் துல்லியமான ஒலியில் நிலை பெற்றான்.

     அந்தப் பேச்சுச் சத்தம் நிதானிக்க வைத்தது. அதிகாரிகள் அதிகமாகக் குடியிருக்கும் பகுதி. திட்டங்களை எவ்வாறு நிறைவேற்றுவது, அதன் முன்னேற்றங்களை எவ்வாறு மேலிடத்திற்குத் தெரிவிப்பது, பணியாளர்களை எவ்வாறு சாமர்த்தியமாய் வேலை வாங்குவது, சுணக்கமின்றி எப்படிப் பயன்படுத்திக் காரியத்தை சாதித்துக் கொள்வது என்பதான பேச்சின் போக்கு காதில் விழுந்த அளவு சம்புகனுக்குப் புரிய ஆரம்பித்தது.

     கேட்கக் கேட்க ஒன்று புரிகிறது. முழுப் பேச்சையும் கேட்டால்தான் துல்லியமாய் உணர முடியும். போதையில் விழுந்து கிடக்கும் மக்களைத் தேடி வந்தால், இங்கு வேறு ஒரு வகையான போதை பரவிக்கிடக்கிறதே! அதிகார போதை....!

     அதிகாரம் எளிய மக்களை நசுக்குகிறது. ஏமாற்றுகிறது. அறிந்தும் அறியாமலும் அவர்களை அடிமையாக்குகிறது. வார்த்தை மயக்கங்களுக்குப் படிகிறது.. மேலிடத்தோடு நெருக்கத்தை போலி என்றறியாமல் உணர்ந்து எதிர்பார்ப்புக்கும் மேலாகக் கடுமையாக உழைத்து தங்களை நசித்துக் கொள்கிறது உழைக்கும் வர்க்கம்.

     “இங்க பாருங்க பி.ஏ., நமக்கு யாரு வந்திருக்கா, வரலைங்கிறது முக்கியமில்லை...காரியம் ஆகுதா, இல்லையாங்கிறதைத்தான் கவனிக்கணும். செக்ரட்டரி மீட்டிங்குக்காக அன்யூவல் ஸ்டேட்மென்டை ஊர் போனதும் அனுப்பி வெச்சுடறேன்னு டைரக்டர் கிட்டச் சொல்லிவிட்டு வந்தேன். நேத்து சிகாமணிகிட்டச் சொல்லிப் போடச் சொன்னேன். அவரே தயார் பண்ணி, கம்ப்யூட்டர்ல டைப் பண்ணி, பிரின்ட் அவுட் எடுத்து எங்கிட்ட ஒப்புதல் வாங்கி இ..மெயில்ல அனுப்பியும் வச்சிட்டாரு....யாருகிட்டே சொன்னா வேலை ஆகும்ங்கிறதைக் கவனிக்கணும். இத்தனைக்கும் நேத்து மாநில பந்த். ஊரே மூடிக் கிடக்கு. அங்கங்க கூட்டம் கூட்டமா போலீஸ்...பல இடங்கள்ல கலகம், கலாட்டா...கல்லெறி...அத்தனையையும் மீறி எப்படித்தான் ஆபீஸ் வந்தாரோ....கடமையுணர்ச்ச்சி அதீதமா உள்ளவன், புறச் சங்கடங்களையெல்லாம் பொருட்படுத்துறதில்லை. கொக்குக்கு ஒண்ணே மதி, வேலைகள் பென்டிங் இருக்கக் கூடாதுன்னு மைன்ட்ல வச்சிட்டு, வந்து உட்கார்ந்திருக்கான் பாருங்க அந்த ஆளு...சிகாமணி நிச்சயம் வந்திருப்பாருங்கிற எண்ணத்துல ஃபோன் போட்டேன். அந்தாளே எடுக்கிறான்னா பார்த்துக்குங்களேன். நினைச்ச மாதிரி வலைய வீசினேன். அவனுக்கு எதிர்த்துப் பேசத் தெரியாது....சரி...சரின்னு மட்டும்தான் கேட்கத் தெரியும். பாஸ் சொல்லிட்டாரு செய்துடணும்ங்கிற முனைப்புதான் அந்தாளுக்கு மூக்குக்கு முன்னால நிக்கும்...ரொம்ப தெய்வ பக்தி உள்ள ஆளு...ஆட்டத் தூக்கி மாட்டுல போட்டு, மாட்டத் தூக்கி ஆட்டுல போட்டு எவ்வளவு தகிடு தத்தம் பண்றோம் நாம....இது எதுலயும் தலையைக் கொடுக்காத, தூக்கத்துல கூடக் கை நீட்டாத சுத்தபந்தன் அவன்.

     யாருகிட்டே சொன்னா வேலை ஆகும்னு கவனிக்கணும். வராதவங்களைப் பத்திக் கேட்டு, பேசி நேரத்தை வீணாக்கிறதை விட இது பெட்டர் இல்லையா? இதைத்தான் சுருக்கமாச் சொல்லியிருக்காங்க...வேலை செய்றவனுக்கு வேலையைக் கொடு...அல்லாதவனுக்கு சம்பளத்தைக் கொடுன்னு....என்ன நான் சொல்றது புரியுதா? இப்டித்தான் நீங்க நம்ம ஆபீஸ் ஸ்டாஃப்கிட்ட வேலை வாங்கக் கத்துக்கணும்....அஞ்சு விரலும் ஒண்ணாவா இருக்கு...எம்.பி.ஏ.வுல என்ன சொல்லித் தர்றாங்க...? இதைத்தானே? நிர்வாகம்ங்கிறது இந்த மாதிரிப் பல்வேறு கூறுகளைக் கொண்டது. அதை கரெக்டாக் கடைப்பிடிக்கிறவன்தான் சிறந்த நிர்வாகியாக் கணிக்கப்படுறான்.....

     சம்புகனுக்கு மனசே நடுங்கிப் போனது. அப்போ வேலை செய்றவங்க, செய்யாதவங்க, டபாய்க்கிறவங்க, டிராமாப் போடுறவங்க...இப்படி எல்லாரும் கலந்து பயணம் பண்றதுக்குப் பேருதான் நிர்வாகமா? கஷ்டப்படுறவன், உண்மையா இருக்கிறவன், உழைப்பையே தெய்வமா நினைக்கிறவன் என்னைக்கும் உழைச்சிக்கிட்டே இருக்க வேண்டிதானா? ஏமாத்தித் திரியறவன் அதையே தன்னோட ஆயுதமா வச்சிக்கிட்டு தப்பிச்சிக்கிட்டே இருப்பானா? இதென்ன அநியாயமா இருக்கு?

     சம்புகன் மனம் மிகுந்த வேதனைக் குள்ளாகியது. எல்லோருமே ஒரு பொறுப்பற்ற , விட்டேற்றியான மன நிலைக்குப் போய் விட்டார்கள். இன்னமும் கடமையுணர்ச்சியோடும், கஷ்டப்பட்டும் செயலாற்றுபவர்களை இது பாதிக்கக் கூடும். நம்ம கடமையை நாம செய்தோம்...அதுக்கு மேலே இதுல ஒண்ணும் இல்லை என்ற முதிர்ந்த நிலை எத்தனை பேருக்கு வாய்க்கும்?

     உடல் ரீதியான ஒழுக்கக் கேடுகளை ஆய்வு செய்வதற்குப் புறப்பட்டு வந்தால் இங்கு மன ரீதியான ஒழுக்கக் கேடுகள் பரவலாக விரிந்து கிடக்கிறது.  அதிகார போதை சீரான நிர்வாகத்திற்கு வழி வகுக்காது சீர்கேட்டை ஏற்படுத்துவதும், நல்லவர்களை அடிமைப்படுத்துவதும் கூட தேசத்தின் நலனுக்கு உகந்ததாகாதே....! தர்மத்தை ஒடுக்குதல் தகுமா?

     என்னுடைய கடமையுணர்வும் இந்தப் பாதையில்தானே இத்தனை ஆண்டுகளாகப் பயணித்துக் கொண்டிருக்கிறது? அன்னைக்கு  பந்த்தின் போது சிகாமணி மட்டும் ஆபீஸ் வரலேன்னா என் பில்லைக் கேஷ் பண்ணியிருக்க முடியாதே...! என் பெண்டாட்டி ஆபரேஷனுக்குப் பணம் கட்டியிருக்க முடியாதே...! என் வேலைதான் முதல்லன்னு எடுத்து செய்தாரே....அவரையா நம்ப அதிகாரி இப்படி ஏமாத்துறாரு...? இது அடுக்குமா? அதிகாரத்தைக் கைல வச்சிருக்கிறவங்க இப்படிச் செய்யலாமா? எல்லாப் பணியாளர்களையும் ஒரே மாதிரித்தானே ட்ரீட் பண்ணனும்? காலம் பூராவும் டபாய்க்கிறவனை கண்டுக்காம விடுறதா நிர்வாகம்? அவங்களுக்கு உரிய தண்டனையைக் கொடுத்து விலக்கிட்டு நல்ல நிர்வாகத்தை நிர்மாணிக்கிறதுதானே ராசாவா இருக்கிறவருக்கு அழகு...!

                           ( 3 )

     திரே பைரவன் சத்தமின்றிப் பாய்ந்து வருவது தெரிந்தது. சம்புகனின் கையைப் பிடித்து இழுத்து அது இருந்த பகுதிக்கு அழைத்துச் சென்றது. மறைந்து நின்று காட்டிய திசையில் பார்வையை ஓட விட்ட போது அந்த அதிசயம்...தன் கண்களையே தன்னால் நம்ப முடியாத பேரதிசயம் ...சம்புகனை நிலை குலைய வைத்தது.

     அரசர் பிரதானமாய் மெத்தையில் வீற்றிருக்க.... சுற்றியிருந்த அதிகாரிகள் தாங்கள் கொண்டு வந்திருந்த சூட்கேஸ்களைத் திறந்து கட்டுக் கட்டுகளாக அவர் முன்னே பரப்பிக் கொண்டிருந்தனர். இவ்வளவுதானா...மதிப்பீட்டிற்கு- அளவீடு குறைகிறதே? பங்கீடு பாதிக்குமே?  அரசர் கொதித்தார்.

     பைரவரே...வாருங்கள் போவோம்...நாம் வந்த சுவடு கூட இங்கே தெரியக் கூடாது...ஆபத்து..... மிகுந்த வேதனை....புறப்படுவோம்...காவலன் காவான் எனின்...

     அறம் குன்றும்...நாட்டிலுள்ள பசுக்களின் மடியில் பால் குன்றும்...வானம் பெயல் ஒல்லாது....வேதம் ஓதப்படுதல் நின்று போகும்.....இப்படி இன்னும்...இன்னும்.....!!!

     ய்...சோமாறிப் பியூனு.......என்னா இன்னைக்கு இவ்வளவு தூக்கம்....ஆபீஸ்  லீவு விட்டுட்டாகளா...? - சத்தமாகக் கேட்டவாறே அருகே வந்து அவன் முகத்தில் சல்லென்று தண்ணீரை அடித்தாள் அஞ்சலை....அலறிப் புடைத்து எழுந்த சம்புகன்....ஒன்றும் புரியாமல் பே...பே...என்று விழித்தவாறு மிரண்டு குன்றிப்போன தன் மெலிந்த திரேகத்தையே அதிசயமாய்ப் பார்க்கலானான்.

                     ---------------------------------------------------.

    

கருத்துகள் இல்லை:

  நெஞ்சறுப்பு - நாவல் - இமையம் - எழுத்தாளர் சுகுமாரன் விமர்சனம் - மற்றும் கருத்து. இதில் ஏற்க முடியாதது...சுகுமாரன் சொல்லிய கருத்தில்...எந்த...