“தன்னை வென்றவன்“ -
அகிலாவிற்கு சட்டென்று விழிப்பு வந்ததும்தான், தான் வேறொரு வீட்டில் இருக்கிறோம் என்று புரிந்தது.
புதிய இடம் என்று எங்கு போனாலும் அவளுக்குத் தூக்கம் வராது. எல்லாரும் தூங்கிய பின்னும்
அவள் புரண்டுகொண்டேயிருப்பாள். ஆனால் இங்கு எப்போது தூங்கினோம் என்றே தெரியாமல் அசந்திருப்பதை
உணர்ந்தாள். புகுந்த வீடு, புதிய வீடு, புதிய மனிதர்கள்... இனி உறவுகள்...!
இதைப் புதிய இடம் என்று இனிக் கொள்ள முடியாது.
அவள் இடமும்தான். தன் உடலை, எண்ணங்களை, நடத்தையை, செய்கையை, பேச்சை, ஏன் மூச்சையே...
அந்த இடத்திற்கு, அந்த வீட்டிற்கு ஏற்றாற்போல் மாற்றிக் கொள்ள வேண்டும்.
அருகில் குமார் அயர்ந்த உறக்கத்தில் இருந்தான்.
உனக்கு டயர்டா இருந்திச்சின்னாத் தூங்கு ஒண்ணும் பிரச்னையில்ல....என்று நேற்றிரவு அவன்
சொல்லிவிட்டுத் திரும்பிப் படுத்துக் கொண்டதை நினைத்துக் கொண்டாள். அடுத்தவர் மனதையும்
எண்ணங்களையும் எடைபோடுபவனாய், அதனை மதிப்பவனாய்த் தோன்றியது.
“அது”தான் பிரதானம் என்று அவன் முனையவில்லை.
உறாலில் அப்பா, அம்மா, அண்ணா, மன்னி இவர்களுடன்
அவனும் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கையில் சட்டென்று ஒன்றை உணர்ந்தவனாய், நீ போய்ப்
படு....அவளுக்கு டயர்டா இருக்கு போல....என்று அண்ணா சைகை செய்ய.....இருக்கட்டும்...அதுக்குள்ளேயும்
என்ன தூக்கம்? என்று சொன்ன இவன்...அகிலாவைப் பார்த்து, உனக்குத் தூக்கம் வந்ததுன்னா...நீ
போய்ப் படுத்துக்கோ.... என்றான்.
எல்லோரும் குடும்பமாய் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கையில்
சட்டென்று எழுந்து அறைக்குள் புகுந்து கொண்டு பொண்டாட்டியுடன் கதவைச் சாத்திக் கொள்வது
என்பது ஏதோ வெட்கங்கெட்ட செயலாய்த் தோன்றியது இவனுக்கு. இரண்டு நாட்களாய் நடக்கும்
இந்த நாடகம் அவனுக்குப் பொருந்தவேயில்லை.
கல்யாண மண்டபங்களில் கூட சாந்தி மூகூர்த்த அறை
என்று பிரித்து, தனியே அமைத்திருப்பதையும், பிற அறைகள் சற்றுத் தள்ளியே கட்டப்பட்டிருப்பதையும்,
அப்படி இல்லையென்றால் அம்மாதிரித் தனியான அறை எது என்று தேடி அதனையே சாந்தி முகூர்த்த அறையாய்த் தேர்ந்தெடுப்பதும் வழக்கமாய் இருப்பதை
நினைத்துக் கொண்டான்.
சொல்லப் போனால் உறாலில் பலரும் படுத்திருக்கையில்
அறைக்குள் புதிய மனைவியைக் கொஞ்சுவதும், அவளோடு விளையாடுவதும் கூட ஒரு சிறிய வீட்டில்
அத்தனை பொருத்தமில்லாத செயல் என்றுதான் தோன்றியது இவனுக்கு. வெளியே லைட் எரிகையில்
உறங்குவதற்குப் போதிய நேரம் ஆகாத வேளையில், மனைவியோடு அறைக்குள் சென்று விளக்கை அணைப்பதும், கதவு இடுக்கு வழியாகத் தெரியும் வெளி வெளிச்சம் அவர்கள் விழித்துக் கொண்டிருக்கிறார்கள்
என்பதை உணர்த்தி அவனுக்குள் ஒரு கூச்சத்தை ஏற்படுத்தியது.
முப்பத்தைந்து வயதான இந்தத் தாமதமான பொழுதில்தான்
திருமணம் செய்திருக்கிறான் குமார். அலுவலகத்தில்
இப்போதும் கூட பெண் பணியாளர்களோடு நேருக்கு நேர் நின்று பேசியதில்லை. கோப்புகளை எடுத்துக்
கொண்டு வந்து தன் முன் நின்று சந்தேகங்களை அவர்கள் கேட்கும்போது கூட, நீங்க சீட்டுக்குப் போங்க...நான் பார்த்துச் சொல்றேன்...என்று
கூறி அனுப்பி விடுவான். திரும்பவும் அருகே
வந்து நின்று எதுவும் கேட்டு விடக் கூடாது என்பதற்காக, என்ன தீர்வோ அதைத் தன்
கைப்பட எழுதியே அனுப்பி விடுவான். அவர்களுக்கு வேலை மிச்சம். அதுபற்றி இவனுக்குக் கவலையில்லை.
இந்த வயதிலும் அவனுக்குள் அந்தக் கூச்சம் போகவில்லை. சில சமயம் எரிச்சலாகக் கூட இருந்தது
அவனுக்கு. பெண்களின் அருகாமை அவனை மிரள வைத்தது..அதைத் தவிர்க்க அவர்களை விரட்டினான்.
அது ஒழுக்கத்தின் அடையாளம் என்று கருதினான்.
அது தன்னோடு தொடர்வது நல்லதுதான் என்று நினைத்தான். படிக்கும் காலங்களில் கூட நாலு
வீடு தள்ளியிருந்த ஜெயா சந்தேகம் கேட்க வருவாள். இது...இதுக்கென்ன அர்த்தம் என்று அவள்
பாடப் புத்தகத்தில் சுட்டிக் காண்பிக்கையில் விரல்கள் மோதியிருக்கின்றன. ஸ்பரிசங்கள்
பகிரப்பட்டிருக்கின்றன. அதை அவன் அந்தக் கணமே
தவிர்க்க விரும்பினான். இனிமே என்கிட்ட வராதே என்று முகத்திலடித்தாற்போல் கூறிவிட்டான்
ஒருநாள். ஏன்? என்று கேட்ட அவளுக்கு அது அப்டித்தான் என்று மட்டும் சொன்னான். அழுது
கொண்டே போய் விட்டாள் அவள். ஊரில் பெண்களுக்கு
என்று தனி உயர்நிலைப் பள்ளி வந்தபோது அவனுக்கு ஏற்பட்ட சந்தோஷத்திற்கு அளவேயில்லை.
அப்பாடா...! தொல்லை விட்டது...!! அது நாள் வரை அந்தப் பள்ளியின் இடம் வெறும் கொட்டாரமாக
இருந்தது. பள்ளிக்கான பெரிய கட்டடம் வந்து, பள்ளியும் நடைபெற ஆரம்பித்ததும் அந்தப்
பகுதி வழியாக ஆற்றங்கரைக்குச் செல்வதை நிறுத்திக் கொண்டான். ஒதுங்கியே இருப்போமே...எதற்கு
வம்பு?
அலுவலகங்களில் சிற்சில
சீனியர்கள் கொஞ்சம் அப்படி இப்படி இருப்பதைப் பார்த்திருக்கிறான். பார்த்துக் கொண்டுமிருக்கிறான்.
ஏனிப்படி சபலம் பிடித்து அலைகிறார்கள் என்று தோன்றும். வாயில் எச்சில் வழிய அலையும்
நாயைப் போல நினைத்துக் கொள்வான். அவர்களின் சில்மிஷத்திற்கு அந்தப் பெண் ஊழியர்களும் சிலர் பணிகிறார்கள் என்பதுதான்
இவனுக்கு வியப்பாயிருந்தது. அனுமதிக்கிறார்களா அல்லது அவர்களே எதிர்பாராத கணத்தில்
அது நடந்து போகிறதா? அப்படியானால் அதைத் தடுக்க வேண்டாமா? இந்த மாதிரி விளையாட்டெல்லாம்
எங்கிட்ட வச்சிக்கிடாதீங்க சார்...என்று பட்டென்று முகத்திலடித்தாற்போல் சொல்ல வேண்டாமா?
அப்படிச் சொல்லி விட்டால் அடுத்தாற்போல் கை நீளுமா? அது இல்லையே? அப்படியாவது ஏதேனும் சலுகையைப் பெற்றாக
வேண்டுமா? எதிர்பார்ப்பு இல்லையென்றால் இப்படி நடக்குமா? போகட்டும்...சபலக் கேஸ்...என்று
தட்டிக் கழிக்கிறார்களோ?
ஒரே இடத்தில், ஒரே அலுவலகத்தில் மாற்றமில்லாமல்
பணியாற்ற வேண்டும் என்பது குடும்பத்தின் தேவையாயிருந்தது. அதற்கு அவர்களின் உதவி தேவைப்பட்டது.
உள்முக அரசியல் அங்கே ஆதிக்கம் செலுத்துகிறது. அதற்காக அப்படிச் சில சலுகைகளை அளிக்கிறார்களோ? சும்மா
தட்டத்தான செய்றான்...தடவத்தான செய்றான் என்று விட்டு விடுகிறார்களே? இதற்கெல்லாம்
சுணங்கினால் காரியம் ஆகாது....! கொஞ்சம் துணிச்சல் அதிகம்தான்...!
முருகேசன் என்ற அந்தக் கண்காணிப்பாளர் அந்தப்
பெண் எழுத்தரின் கன்னத்தைத் தட்டுவதை அடிக்கடி இவன் பார்த்திருக்கிறான். தற்செயலாய்ப்
பார்க்க நேரும் சந்தர்ப்பங்களில் அவர்கள் அதற்காக எந்த அதிர்வையும் வெளிப்படுத்தியதில்லை.
மறுப்பும் தெரிவித்ததில்லை. பதிலுக்கு நாணுகிறார்கள். இவனெல்லாம் ஒரு ஆளா? என்றுகூட
இருப்பார்களோ என்னவோ? அப்படியிருந்தால் அது சரியா? எப்படியோ இருந்து விட்டுப் போகட்டும்.
வேறு எதிர்பார்ப்பு இருப்பவனுக்கல்லவா அது ஏமாற்றம்...தனக்கென்ன வந்தது? இடத்தைக் கொடுத்தால்,
மடத்தைப் பிடிக்கும் எண்ணம்தானே வரும்? அவர்களின் கை மேலும் நீண்டது என்பதுதான் உண்மை.
சபல புத்தி உள்ளவர்கள் எங்கேனும் அடி வாங்கிக் கேவலப்படும்வரை ஓய மாட்டார்கள். ஒரு
இடத்தில் படியும். இன்னொரு இடத்தில் மீறும். அப்போது புத்தி வரும்....!
அண்ணே...எப்டீண்ணே பிடிக்கிறீங்க...? உங்களுக்கு
மட்டும் சுலபமா மடங்கிறுதேண்ணே...?-ஈஸியா மசியுறாங்களே? விளையாட்டுக்காகவோ அல்லது மனதுக்குள்
ஏங்கியோ இந்தக் கேள்வியை முருகேசனிடம் கேட்டார்கள் சிலர். அவரின் அந்தப் பதில் புன்னகை
ஒரு கதாநாயகனின் உச்சம். அந்த லீலைக்குத் தனிப் பயிற்சி வேண்டும் என்பது போன்றதான
பாவனை.
சின்ன வயசிலிருந்தே அந்த மாதிரிப் பழக்க வழக்கங்கள் உள்ளவர்கள்தான்
அந்த நடுத்தர வயதிலும் அப்படி இருக்க முடியும் என்றும், அப்படியாகப் பழகுபவர்களுக்குத்தான்
தொடர்ந்து அமைந்து கொண்டேயிருக்கும் என்றும் ஆராய்ச்சி செய்து சொன்னார் நண்பர் பாலுச்சாமி.
அவருக்கென்ன ஆதங்கமோ? அக்கௌன்டன்சி கணக்கு நன்றாப் போடுவார். பாலன்ஸ் ஷீட்டை எனக்கு
முன் டாலி செய்து வாத்தியாரிடம் நீட்டி விடுவார். கூடவே இந்தக் கணக்கும் அறிந்து வைத்திருக்கிறார்
போலிருக்கிறது.
உனக்கு வேணும்போல இருக்கா...சொல்லு...நான் கூட்டிட்டுப்
போறேன் என்றார். தன்னைப் பார்த்து இப்படியொரு கேள்வியைக் கேட்க ஏன் தோன்றியது அவருக்கு?
கூட நிற்பவனையும் கெடுக்க ஏன் இத்தனை முனைப்பாய்த் திரிகிறார்கள்? இம்மாதிரி ஆட்களோடெல்லாம் பழகினாலே தன்னைப் போலவே
மற்றவர்களையும் நினைத்து விடுவார்கள் போலிருக்கிறது
. மூன்று தங்கைகளோடு பிறந்தவன் அவன். ஓடிப்பிடித்து
விளையாடி, சண்டை போட்டு, அடித்துப் பிடித்து அழுது புலம்பி..அம்மாவிடம் புகாருக்கு
நின்று....இப்படித்தான் பழகியிருக்கிறான். இந்த மாதிரி வித்தியாசமாக அதுவும் வெளிப்
பெண்களிடம்...இவர்களுக்கும் சகோதரிகள் இருப்பார்கள்தானே? ஊரும் உலகமும் இருக்கும் நிலைமையைப்
பார்த்தால் நான்தான் அப்பாவியோ? என்று தோன்றி சிரித்துக் கொள்வான் குமார்.
அன்றொரு நாள் படம் பார்த்துவிட்டு, வெளியே வந்து
அல்வா சாப்பிட்டு, டீ குடித்து நகருகையில், பொழுது இருட்டும் அந்த வேளையில், கூடவே
பின்னால் துரத்திய அந்தப் பையன் கேட்ட கேள்வி இவன் மனதுக்குள் நெருடியது. ஒரு பொடிப்
பயல்...அவனிடம் இதை அவன் எதிர்பார்க்கவேயில்லை.
சார்...கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாடு....எது
வேணும் சார்.....? வாங்க சார்....கூட்டிட்டுப் போறேன்....கம்மியான ரேட்தான் சார்.....
எவ்வளவு தருவா....? என்றார் பாலு. அந்தப் பையன்
திகைத்து நிற்பதைப் பார்த்து, போடா...போடா...என்று சிரித்துக் கொண்டே விரட்டினார்.
ஏதோ லாட்டரிச் சீட்டு விற்பவன் போல் அந்தப் பையன்
கேட்டதும், இவர் பதில் சொன்னதும்....அதுநாள் வரை அவன் கேள்விப்படாத ஒன்று.
பொடியன் என்ன சொன்னான், புரிஞ்சிதா? என்றவர்....அந்தப்
பய கூப்டானே....அந்த லாட்ஜ் இதுதான்.... என்று காண்பித்துக் கொண்டே நடந்தார். பழைய
காலத்து வீடு போல் முற்றம் வைத்து சச்சதுரமாய் நான்கு புறமும் அறைகள்....வெளியிலிருந்து
பார்க்கையில் அவ்வளவுதான் தெரிந்தது. உள்ளே போவமா? என்ற பாலுச்சாமியைப் பார்த்துப்
புன்னகைத்தான் குமார்.
எத்தனை வருடமாய் அந்த ஊரில் இருக்கிறான் அவன்.
அப்படியெல்லாம் லாட்ஜ்கள் அதற்கென்றே இருக்கின்றன என்பது அவனுக்குத் தெரியவே தெரியாது.
அவர் குறிப்பிட்ட அந்த லாட்ஜை, குடும்பத்தோடு தங்குவதற்கு சிறந்த இடம் என்றுதான் அதன்
பழமையைக் கணக்கிட்டு நினைத்திருக்கிறான் இவன். இவர் வேறொரு இடமாய் அதனை அடையாளம் காட்டுகிறார்.
என்ன விபரீதம்? நான் எனது சொந்த ஊரிலேயே ஜாக்கிரதையாய் இருக்க வேண்டும் போலிருக்கிறதே?
இப்படி நகரின் நெருக்கமான பகுதிகளில் கலந்து கலந்து இவைகளும் இருந்தால், வெளியூரிலிருந்து
வருபவர்கள் எது நல்ல லாட்ஜ், எங்கு பிரச்னையின்றித் தங்கி, சாமி தரிசனம் செய்து ஊர் திரும்ப முடியும் என்பதை
எங்ஙனம் நிர்ணயிப்பார்கள்? யாரிடமும் விசாரித்தால் அவர்களும் குடும்பத்தினர் தங்குவதற்கென்று
நல்ல இடமாய்க் காண்பிப்பார்கள் என்பதற்கு என்னதான் உத்தரவாதம்? வேண்டுமென்றே எங்கேனும்
கோர்த்து விட்டு, பணம் பிடுங்கினால்? கமிஷனுக்கு அலையும் ஆட்கள் அவரவர் முதலாளிகளுக்கு
ஆதரவாய் இருப்பார்களா அல்லது வரும் சுற்றுலாவாசிகளுக்கு நம்பிக்கை தருவார்களா?
நமது மாநிலம், எதானாலும்
நம்ம ஊர், நம்ம மக்கள் என்று எப்படித்தான் நம்பிச் செயல்படுவது? ஏமாற்றி விட்டால்,
எதிலேனும் மாட்டிக் கொண்டால் கேவலமில்லையா? அப்படியானால் ஏதேனும் ஒரு ஊருக்குச் செல்வதென்பது
அன்றே சென்று அன்றே திரும்புவதுதான் உசிதமான செயலா? அதுதான் பாதுகாப்பா? தங்குவது, ஓய்வெடுப்பது, ஒவ்வொன்றாய்ப் பார்ப்பது
என்று முடிவெடுத்தால் இப்படியும் அமையலாம் அல்லது அப்படியும் ஆகலாம் என்பது போலல்லவா
இருக்கிறது? அறிந்தும் அறியாமலும் ஆபத்தோடு கண்ணாமூச்சி ஆடுவதா? எல்லாம் கிடக்கட்டும்.
முதலில் இதையெல்லாம் அனுமதிக்கலாமா? அடியோடு ஒழித்துக் கட்ட வேண்டாமா? ஊரும் நாடும்
சீர்கெட்டுக் கிடக்கிறதா? இவைகளோடுதான் கலந்து வாழ்ந்தாக வேண்டுமா? எல்லாம்தான் இருக்கும்.
நீ விலகிப் போகக் கத்துக்கோ...! இதுதான் நடைமுறை சித்தாந்தமா?
உலகம் ரகசியமாய் இயங்கிக் கொண்டிருப்பதாய்த்
தோன்றியது குமாருக்கு. பாம்பு, பழுது என்று பார்த்துத் தாண்டிப் போவது உன் பொறுப்பு
என்று சொல்லியது. மனிதர்கள் யாரையும் ஒரே பார்வையில்,
ஒரே பேச்சில் நம்பி விடுவதற்கில்லை. கவனமாய்த்தான் அடியெடுத்து வைத்தாக வேண்டும். கூடியானவரை
ஆசைகளைத் தவிர்த்தால் இவைகளெல்லாம் அண்டாது. ஆசைகள்தான் மனிதனை அலைக்கழிக்கின்றன. தவறுகள் செய்யத்
தூண்டுகின்றன. குதிரைக்கு சேணம் பூட்டியவனைப் போல் இந்த வாழ்க்கையைக் கவனமாய்க் கடந்து
செல்ல வேண்டும். இது அவனுக்கான முடிவு. வேலைக்கென்று வந்த பிறகே இம்மாதிரி வெவ்வேறு
விதமான அனுபவங்கள். உலகத்தின் விபரீதங்கள் ஒவ்வொன்றாய்ப் புரிய ஆரம்பித்தன. ஊரும் உலகமும்
நிறையக் கற்றுக் கொடுத்தன. களத்தில் இறங்கினால்தான் ககனம் புரிகிறது.
இதெல்லாம் குமார் தன் பணி அனுபவங்களில் நண்பர்களோடு
அலைந்து பயணித்துக் கற்றுக் கொண்டது. எந்த இடத்திலும், எவ்வளவு இக்கட்டுகளிலும், தன்
தனித்துவத்தை விட்டு விடக் கூடாது என்பதில் அவன் திடமாய் இருந்தான். பலரும் பலவிதமாய்
விட்டேற்றிகளாய் இருப்பதைப் பார்த்து அவன் ஜாக்கிரதையாகிக் கொண்டான். உலகின் பலரது
செயல்பாடுகள் அவனுக்கு வெறுப்பைத்தான் தந்தன. விலகிப் போகச் செய்தன. தனித்திருந்தாலும்
பரவாயில்லை என்ற எண்ணத்தை ஏற்படுத்தின. நமக்கு நாமே நன்றாய் சிந்தித்து செயல்பட்டால்தான்
பாதுகாப்பு.
சலனமில்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் ஆற்றில் மென்மையாய்த்
தங்களை முக்குளித்துக் கொண்டு குளித்து எழாமல்,
வீணாய் ஏன் கலக்கி, அழுக்காக்கி, கதி கலங்கிக் கொண்டிருக்கிறார்கள்? குமாரின்
அலுவலக வாழ்க்கையும் எச்சரிக்கையாய்த்தான் கடந்து கொண்டிருந்தது. அவனுக்கு எதிரிகள்
நிறைய இருந்தார்கள். வெளியே சொல்லாமல், காண்பித்துக் கொள்ளாமல் பதுங்கினார்கள். தங்களின்
செயல்பாடுகளுக்கு அவனால் பங்கம் வந்து விடக் கூடாது என்று ஒதுங்கினார்கள். இனிய நட்போடு
கடப்பதாய் வேஷம் காட்டினார்கள். தொட்டும் தொடாமலும், பட்டும் படாமலும் கடந்தான் குமார்.
மூன்று தங்கைகளுக்குக் கல்யாணம் ஆகி, பிறகு பண்ணிக்
கொள்கிறேன் என்று ஒரே பிடியாய் இருந்து விட்டான் குமார். இன்னும் கொஞ்ச காலம் கடந்திருந்தால் திருமணமும்
நான் உங்கிட்ட வரலை என்று தள்ளியே போயிருக்கும். போ...போ...போய்த் தொலை...என்று அவனும்
உதறியிருப்பான். அடக்கி வைத்ததோ, அல்லது அடங்கிக்
கிடந்ததோ தெரியவில்லை...எகிறிக் கொண்டு குதிக்க ஆரம்பித்தது. எது தன்னை ஆட்டுவிக்கிறது
என்று இனம் புரியாமல் தெறிக்க ஆரம்பித்தான் அவன். தான் ஏன் இவ்வாறு நடந்து கொள்கிறோம்
என்று அவனுக்கே புரிபடாத நிலை. எந்தப் பேய் பிடித்துக் கொண்டு தன்னை உலுக்குகிறது என்று
உணர்ந்து கொள்ள முடியவில்லை. ஒரு கட்டத்தில் தான் ஆளே மாறிப் போனதாய் உணர ஆரம்பித்தான்.
ஆனால் சரி செய்து கொள்ள முடியவில்லை. பிடி நழுவிப் போய்க் கொண்டேயிருந்தது. தீய பழக்கங்கள்
படியவில்லையாயினும், தீய குணங்கள் பற்றிக் கொண்டன
தேவையில்லாமல் அம்மாவிடம்
ஏன் கோபப்படுகிறோம், ஏன் தாயாரை அழ வைக்கிறோம்? ஒன்றுமில்லாத சின்னச் சின்ன விஷயங்களுக்கெல்லாமா
எரிந்து விழுவது? தான் எப்போதும் இப்படியெல்லாம் இருந்ததேயில்லையே? கோபப்படுவதற்கும்
ஒரு அர்த்தம் வேண்டாமா? குணக்கேடு அடைவதற்கும் சில சீரழிவுகள் என்கிற பின்புலம் வேண்டாமா?
கெட்டுச் சீரழிந்த அனுபவமும் இல்லாமல், வெறும் எண்ணங்கள் தரும் முறுக்கிலே சிக்கிக்
கொண்டு, எதற்காக, இப்படிக் கழிசடையாகிப் போனோம்? தாய் தந்தையரின் மனம் புண்படுத்துவது என்பது
ஒரு பொழுதுபோக்கா என்ன? வார்த்தைகளைக் கூர் அம்புகளாய்ப் பாய்ச்சுவது ஒரு திறமையா?
அதுவா புத்திசாலித்தனம்? ஒருவர் மனதைப் புண்படுத்துவதில் அத்தனை இன்பமா? கஷ்டப்பட்டு வளர்த்து ஆளாக்கிய தெய்வங்களை இப்படி
இகழலாமா? அவர்களை அலட்சியப்படுத்தலாமா? அவர்களோடு சண்டையிடலாமா? அவர்கள் என்ன பகைவர்களா?
எதற்காக எப்போதும் இந்தக் கோபம், அசூயை, ஆத்திரம்? ஆங்காரம்? என்ன தவறு செய்தார்கள்
அவர்கள். தன்னை வளர்த்து, ஆளாக்கி இந்த நிலைமைக்குக் கொண்டு வந்து விட்டதுதான் தவறா?
இனம் புரியாத பருவ நிலை
தன்னைப் படுத்துகிறதா? காமம் கழுத்தளவு உட்கார்ந்து கொண்டு மூளையைக் கலக்குகிறதா? சொல்லாமல்
சொல்லி நிறைவேற்றிக் கொள்ளத் துடிக்கிறதா? இந்தளவுக்கு வெறுப்பு மண்டுவானேன்? ஒன்றை
வெளிப்படுத்த முடியாமல் இன்னொன்றைச் சொல்லிப் புரிய வைக்க, சண்டை போட, வயதான பெற்றோர்கள்தான்
வாய்த்தார்களா? அவர்கள்தான் சோதனைக் களமாக அமைந்தார்களா? என் வன்மத்திற்கு அவர்கள்தான்
பலிகடாவா? பெற்றெடுத்த பாவத்திற்கான தண்டனையா? தொட்டதற்கெல்லாம் கோபமும், வெறுப்பும்,
சுடு சொற்களும்...ஒத்துழையாமையும்....ஓடி ஒளிதலும்....உறவுகளுக்குள்ளேயேவா இதைச் செயல்படுத்துவது?
தாய் தந்தையர் முன்னேயேவா தாண்டவம் ஆடுவது? இதற்குக் கல்யாணம் பண்ணி வைங்க என்று நேரடியாகவே
சொல்லித் தொலையலாமே? அதைச் சொல்லத் துணிவின்றி, குத்திக் குதறிக் கிழித்தால் பெற்றோரின்
சாபம் சும்மா விடுமா?
அம்மா இரவெல்லாம் தூக்கமின்றி
அழுகிறாள். இப்டியிருக்காதே...அது உனக்கு நல்லதில்லை...பின்னால் நீ அனுபவிப்பாய்...என்
மனசைப் புண்படுத்தினயானா நீ வௌங்க மாட்டாய்...எங்களை நோகப் பண்ணினயானா நல்லாயிருக்க
மாட்டாய்...! நானும் உங்கப்பாவும் வயசான காலத்துல உன்னண்ட மாட்டிண்டு தவிக்கிறோம்.
எங்களுக்கு விடுதலை இல்லை... உங்களப் படிக்க வைக்கிறதுக்கும், ஆளாக்கிறதுக்கும் அவ்வளவு
கஷ்டப் பட்டிருக்கோம்...எத்தனையோ நாள் பட்டினி கிடந்திருக்கோம்...ஊரம்புட்டும் கடன்
வாங்கி, திருப்பிக் கொடுக்க முடியாமே திட்டும், வசவும் வாங்கியிருக்கோம். கேவலப்பட்டிருக்கோம்.
ஓடி ஓடி உழைச்சிருக்கார்
உங்கப்பா...நெருப்புல கிடந்து வெந்திருக்கார்...நாலாணாவுக்கும் எட்டணாவுக்கும் நாயாப்
பேயா அலைஞ்சிருக்கார்....வட்டிக் கடைக்காரன்ட்டக் கடன் வாங்கி...திருப்பிக் கொடுக்க
ராப்பகலா தூக்கமில்லாம உழைச்சிருக்கார்...தன் உடம்பையே இந்தக் குடும்பத்துக்காக செருப்பாத் தெச்சுப் போட்டிருக்கார் தீயில உருகியிருக்கார்...அவரை
நிந்தனை பண்ணினயானா தெய்வத்தை நிந்திச்சதுக்கு சமானம்...அதை ஞாபகம் வச்சிக்கோ...பின்னாடி
நீயும் உன் குடும்பமும் நன்னாயிருக்கணும்...நோய் நொடி இல்லாம வாழணும்....அதுக்கு எங்க
ஆசீர்வாதம் வேணும்...மனுசாளோட ஒவ்வொரு செயலுக்கும் எதிர்வினை உண்டாக்கும்...நல்லது
செய்தா நல்லது கிடைக்கும்...கெட்டது செய்தியானா பதிலுக்கு நீ அனுபவிச்சித்தான் ஆகணும்...அது
நடவாமப் போகாது...ஞாபகமிருக்கட்டும்.....! உன்னோட ஒவ்வொரு வார்த்தைக்கும், செயலுக்கும்
நீ பதில் சொல்லியே ஆகணும்....வினை விதைச்சா வினையைத்தான் அறுக்கணும்...நீ அறுப்பே....நான்
பார்க்கிறேனோ இல்லையோ...நீ அனுபவிப்பே...! இது சத்தியம்....!!
அம்மாவின் வார்த்தைகள்
அனல் துண்டங்களாய் வந்து மோதிக்கொண்டேயிருக்கின்றன.
அவைகளுக்கான பிற்பகல் வினைகளையெல்லாம் அனுபவித்து விட்டேனா? இல்லை இனிமேல்தானா?
எங்களை மெட்ராசுக்குக் கூட்டிண்டு
போயிடு....நாங்க உன்னோட வந்து இருந்துக்கிறோம்...-சொல்லிக் கிளம்பி விட்டார்களே? மூத்தவனோட
இருக்கிறதுதான் நியாயம்...இத்தனை நாள் சின்னவனோட இருந்தது எங்களோட தப்பு....என்னானாலும்
அவன் சின்னவன்தான்ங்கிறதைக் காண்பிச்சிட்டான் பார்....- அப்பா வருந்திச் சொன்ன கடுமையான
வார்த்தைகள் இவைதான். அதற்கு மேல் அவருக்குத் திட்டத் தெரியாது. பழி சொல்லத் தெரியாது.
சாபமிடத் தெரியாது. ஆனால் அந்தத் தூய இதயம் சிதைக்கப்பட்டால், மனம் கசிந்து வருந்தினால்,
அழுதால் அது சும்மா விடுமா தன்னை? எனக்கு நிச்சயம் நரகம்தான். என் பாவத்திற்கு மன்னிப்பே
கிடையாது...!
தனித்து விடப்பட்ட பின்புதானே
புத்தி வந்தது? முடியைக் கோர்த்து ஆணியில் சுற்றி மரத்தில் அடித்து பிசாசை நிறுத்தியது
போல...! இது நாள் வரை நான் எங்கிருந்தேன்...எப்படியிருந்தேன். ஏன் அப்படியானேன்? எது
மாய்மாலம் செய்தது என்னை? எந்த வினை பேயாட்டம் போட வைத்தது? எப்படி மாறினேன் நான்?
வாலு போச்சு கத்தி வந்தது...டும்...டும்...டும்...! கத்தி போச்சு புத்தி வந்தது டும்...டும்...டும்...!
குமார் மாறி விட்டான். ஆளே மாறிவிட்டான். பேதலித்த புத்தி திருந்தி விட்டது. இவனை விட்டு
விலகி விட்டது அந்த மாயாவி. கனவிலிருந்து விழித்தவன் போல் ஆள் தலைகீழாக இப்போது....
அந்த நல்ல புத்திதான் மூன்று
தங்கைகளுக்கும் அவனிருக்கும் நகரிலேயே திருமணம் நடத்தி முடிக்க இறங்கி வேலை செய்ய யத்தனித்தது?
நான் இருக்கேன்...எதுக்கும் கவலைப்படாதே...எல்லாத்தையும் நானே பார்த்துக்கிறேன். நீ
அப்பப்போ என்ன செய்யணும்ங்கிறதை மட்டும் சொல்லு..அது போதும்....அத்தனை பணியையும் அவன்
ஒருவனே தன் தலையில் அள்ளிப் போட்டுக் கொண்டு, ஏதோ வெறி வந்தவனைப் போல ஓடி ஓடிச் செய்தான்? சென்னையிலிருந்து அடுத்து, அடுத்து
என்று ஒவ்வொரு வேலையாய் அண்ணா வரையறுத்துச் சொல்லச் சொல்ல, படிப்படியாய் இங்கு ஏற்பாடுகளைத்
தீவிரமாக்கினான்? எந்தப் பாவத்தைக் கரைத்துக் கொள்ள? எந்தத் தவறுதலுக்கு மன்னிப்புப்
பெற? எந்த கங்கையில் மூழ்கிப் புனிதம் பெற? அவன் புத்திக்கெட்டிய எல்லாத் தவறுகளும்
அவனிடம் மன்னிப்புக் கேட்டு மண்டியிட்டன. எங்களை மன்னித்து விடுங்கள். உங்கள் கிரஉற
நிலை மாறிவிட்டது. நாங்கள் விடை பெற்றுக் கொள்கிறோம்....
நான் அந்தக் குமார் இல்லையப்பா...!
மறந்து விடுங்கள் அந்தக் கொடுங்கோலனை...! ...அவன்
என்றோ செத்து விட்டான். மண்ணோடு மண்ணாகி விட்டான். அது எனக்கான கேடு காலம். ஏதோவோர்
தீய சக்தி என்னை ஆட்டுவித்து உங்களுக்கும் அம்மாவுக்கும், சகோதரிகளுக்குமே எனத் தீராத துன்பத்தைத் தந்து விட்டது. என்னையே அறியாமல் அந்தப் பாதகத்தைச்
செய்து விட்டேன். மன்னித்து விடுங்கள். அந்தப்
பாவத்தைக் கரைக்கத்தான் இப்போது என் கடமையில் அதி தீவிரமாய் இறங்கியிருக்கிறேன். முழுப்
பாவத்தையும் கரைத்து விட முடியுமா தெரியவில்லை. மீதியை மண்டியிட்டுக் கண்ணீரால் கரைக்க
முயல்கிறேன். நான் அந்தப் பழைய பாவி குமார் இல்லை...என்னை நம்புங்கள்....! இப்போது
நான் நல்லவன். உங்களுக்கு அடங்கிய அந்தப் பள்ளி செல்லும் காலத்து நல்ல பிள்ளை. சின்னஞ்
சிறுவன் குமார். இனி அவனை அந்த பிசாசு அண்டாது. அது அவனை விட்டு என்றோ விலகி விட்டது.
இப்போது அவன் புதியவன். முதியவன்...முதிர்ச்சியடைந்தவன்.
இதோ திருமணம் ஆகி வாழ்க்கையில்
அடியெடுத்து வைக்கப் புறப்பட்டிருக்கிறான் குமார். அவனை ஆசீர்வதியுங்கள். மனமார வாழ்த்துங்கள்.
அதே பழைய, புதிய, திருந்திய இளைஞன் குமார். உள்ளத்தில் அசூயையும்,
ஆங்காரமும் இல்லாத குமார். மூன்று தங்கைகளுக்கும் திருமணம் செய்து விட்டுத்தான் நான்
பண்ணிக் கொள்வேன் என்று திடமாய் நின்ற குமார். ஓடி ஓடி அவர்களுக்கான வரன்களைத் தேடிய
குமார். இருபத்தைந்து வயதில் கல்யாணம் செய்தால்
ஓரிரு ஆண்டுகளில் குழந்தை பிறந்து தனக்கு ஐம்பது தாண்டும்போதும், பணி ஓய்வு பெறுவதற்குள்ளும்
மகனுக்கு ஒரு திருமணம் செய்வித்து, கடமைகளை முடித்து விட்டு அமர்ந்து விடலாம் என்று
சுயநலமாய் மனக்கணக்குப் போடாத குமார். என் நலன் என்னை வளர்த்து ஆளாக்கியவர்கள் கையில்.
அவர்களுக்குத் தெரியாததா? என்று இருந்துவிட்ட குமார். குடும்பத்தின் சுபிட்ச நிலைக்காகத்
தன் சுகத்தைத் தள்ளிப் போட்டுக் கொண்டே வந்த குமார். உடன் பிறந்த தங்கைகளின் திருமணம்தான்
முக்கியம். அதை முடிப்பதுதான் முதல் வேலை. பெற்றோரின் மனபாரம் அப்போதுதான் தீரும் என்று
தன்னை மாற்றி நிறுவிக் கொண்ட குமார். வாழ்க்கையில்
திட்டமிடல் வேண்டும் என்று வீர வசனம் பேசாத குமார். எல்லாம் அவன் செயல். எது நம் கையில் இருக்கிறது? சூட்சுமக் கயிறு எல்லாம்
வல்ல இறைவனிடம். அவன் ஆட்டுவிக்கிறான். நாம் ஆடுகிறோம்.
நாம் ஒன்று நினைக்கிறோம்...இறைவன்
ஒன்று நினைக்கிறான். காலமும் நிகழ்வுகளும் நம் கையிலா இருக்கிறது? வாழ்க்கையும் வாரிசுகளும்
நம் திட்டத்திலா உருப்பெருகின்றன? எதுவும் நம் கையிலில்லை....எதுவோ ஒன்று நம்மை இயக்கிக்
கொண்டிருக்கிறது. நாம் இயங்கிக் கொண்டிருக்கிறோம்....இங்கே எதற்காக ஒவ்வொன்றுக்கும்
அவசரப்பட வேண்டும்? நான்தான் புத்திசாலி என்பதாய் இயங்குவதில் எல்லா மனிதனின் திட்டங்களும்
வெற்றி பெற்று விடுகின்றனவா? எல்லா மனிதர்களும் தங்கள் வாழ்க்கையில் வெற்றி அடைந்தவர்களாதானா?
முயலுதல்...முடிந்தவரை முயலுதல்...வெற்றி அவன் கையில்...!
கிணற்றுத் தண்ணீரை வெள்ளமா
கொண்டு போகப் போகிறது? ஒரு பழைய முதுமொழி. அவன் ஞாபகத்திற்கு வருகிறது. அருகிலே அகிலா
ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருக்கிறாள். அநாவசியத்திற்கு அவளை ஏன் தொந்தரவு செய்ய வேண்டும்?
இதோ ரெண்டு நாளில் ஊருக்கு சென்று விடப் போகிறோம். பணிபுரியும் இடத்தை நோக்கி. அதற்குள்ளும்
கருக்கழிந்து விடவா போகிறாள்? கிடைப்பது கிடைக்காமல் போகாது. கிடைக்காதது என்றுமே கிடைக்காது.
நம்பிக்கைதான் வாழ்க்கை.
அவரவர், அவரவர் இடத்தில்
இருந்தால்தான் என்றைக்கும் மதிப்பு. அதைத்தான் இந்தப் பெண்களும் விரும்புகிறார்கள்.
பெண்மையும் விரும்புகிறது. கட்டு மீறாதவனுக்கு காலம் அவன் காலடிக்குள்...! அவள் அவனையே
வைத்த கண் வாங்காமல் பார்த்தவாறிருந்தாள்.
கதவு இடுக்கு வழியே இருள்
கவிந்திருந்தது. விடியல் நெருங்கிக் கொண்டிருந்தது.
---------------------------------------
உஷாதீபன், (ushaadeepan@gmail.com) எஸ்.2–இரண்டாவது தளம்,
(ப்ளாட் எண்.171,172) மேத்தா’ஸ் அக்சயம் (மெஜஸ்டிக்
Nஉறாம்ஸ்), ராம் நகர்
(தெற்கு)12-வது பிரதான சாலை, மடிப்பாக்கம், சென்னை – 600 091. (செல்-94426 84188sள
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக