15 ஏப்ரல் 2022

 

டேபிள் டென்னிஸ்” - கோபி கிருஷ்ணன் நேர்காணல்-யூமாவாசுகி-வாசிப்பனுபவம்-உஷாதீபன்      நான் சொன்னதெல்லாம் மிகவும் அசிங்கமாக இருக்கிறதா? என்று கேட்டிருக்கிறார் கோபிகிருஷ்ணன். அசிங்கம், அபத்தம் என்று ஒரு சாரார் அல்லது சிலர் நினைக்கக் கூடும் என்பதான உணர்வு இருந்திருக்கிறது. ஆனால் அதைத் தவிர்க்க முடியாமல் தவித்திருக்கிறார். என்ன மனோ வியாதியோ? நினைக்கவே பரிதாபமாகத்தான் இருக்கிறது.

      கோபியை மதுரை ஞாயிற்றுக்கிழமை சந்தை திலகர் திடலுக்கருகிலான (தேவி தியேட்டரின் எதிர்புறம்-மணி நகரம் ஒட்டிய பகுதி) வீட்டில் ஒரே ஒரு முறை சந்தித்ததாக நினைவு. அப்பொழுதெல்லாம் அவரது கதைகள் ஒன்றிரண்டைத்தான் படித்திருந்தேன். பிறகுதான் முழுத் தொகுப்பு வாங்கியதும், படித்ததும்.

      கேள்வி மேல் கேள்வி கேட்டு கோபி பதில் சொன்னதாக  இந்நூலில் இல்லை. அவரே தன் கதையை, அனுபவத்தை, எழுத்துப் பணியைப் பற்றிச் சொல்லியிருக்கிறார். என்னைப்பற்றி நானே சொல்லிவிடுகிறேன். கேள்விகள் பிறகு...என்று சொல்லி அவரே ஆரம்பித்து விடுகிறார்.

      சாதாரணக் குடும்பத்தைச் சேர்ந்தவராகத்தான் அறியப்படுகிறார். சைக்காலஜியில் அதிக ஆர்வமுடையவராகவும், இயல்பிலேயே அதிக கூச்ச சுபாவமுடையவராகவும் இருந்திருக்கிறார். மாநிலக் கல்லூரியில் உளவியலைத் தேர்வு செய்து படிக்கும்போதுதான் ஒரு பெண்ணோடு மானசீகக் காதல் ஏற்படுகிறது. எட்டாம் வகுப்புப் படிக்கும் அந்தப் பெண்ணோடு ஏற்பட்ட காதல்  அறியாப் பருவத்தில் வரும் ஈடுபாடு... உணர்ச்சி வேகம் சார்ந்தது, calf love  என்று அதைச் சொல்வார்கள். என்றும் விளக்கமளிக்கிறார்.

      மனிதன் தன் செயல்களுக்கான காரணங்களை உணர்ந்திருத்தலும், அதைத் தவிர்க்க முடியாமல் தவித்தலும், அது தவறாயினும் அந்தப் படுகுழியில் விழுதலுமான நிகழ்வுகள் இவர் வாழ்க்கையில் நிரம்ப நடந்தேறியிருக்கிறது. படிக்கும் நமக்கு அவர் மேல் இரக்கமே ஏற்படுகிறது. ஐயோ...நாம் அருகில் இல்லாமல் போனோமே...ஏதேனும் செய்து மாற்றப் பார்த்திருக்கலாமே என்றெல்லாம் தோன்றுகிறது.

      ஓரியண்டல் ஃபயர் இன்ஷ்யூரன்ஸ் கம்பெனியில் சில மாதங்கள் வேலை ஆல் இன்டியா  உறான்டிகிராப்ட் போர்டில் குமாஸ்தாவாகப் பணிபுரிந்திருக்கிறார்.அரசு பொது மருத்துவ மனையில் சில காலம் என்று பல வேலைகள். எங்கும் நிலைக்காத மன நிலை. கிடைத்த அரசுப் பணியை ரிஸைன் செய்யும் அளவுக்கான முடிவுகள். மருத்துவ மனையில் ஏற்கனவே காதல் தோல்வியிலிருந்த ஒரு பெண்ணிடம் ஏற்பட்ட ஈடுபாடு...பிறகு அவள்பால் ஏற்பட்ட உணர்வு பாலுணர்ச்சியின் அடிப்படையில் உண்டான அருவருப்பு என்று உணர்ந்து குற்ற உணர்வில் விலகியது...என்று இவரது கதை வெவ்வேறு தளங்களில் ஒரு குழப்பமான மனிதனின் பயணமாக நீண்டு கொண்டேயிருக்கிறது. நான்ஸி என்ற பெண்ணைக் காதலித்தது...கிறிஸ்தவப் பாதிரியாரிடம் ஞானஸ்நானம் பெற்றுக் கொண்டது....பிறகு வீட்டுக்குத் தெரியாமல் திருமணம் செய்து கொண்டது...ஏற்கனவே காதலித்த பெண்ணுடனான நினைப்பில் மாத்திரைகள் சாப்பிட ஆரம்பித்தது,  அது தெரிந்து நான்ஸி, என்ன இது என்று கேட்டது, பிறகு இருவருக்கும் பிடிக்காமல் போனது, நான்சிக்கு அவள் வேலை பார்த்த இடத்தில் ஒரு டாக்டரோடு தொடர்பு இருந்தது தெரிய வந்தது...என்று இவரது வாழ்க்கை அடுத்தடுத்த அபாயங்களாகப் பயணித்துக் கொண்டேயிருக்கிறது. படிக்கும் நமக்கும் ஏன் இதைப் படிக்க ஆரம்பித்தோம் என்றும், இப்படி ஒரு மனிதன் இருப்பானா? என்று கோபமும், இஷ்டம்போல் சிந்தனைகளை ஓடவிடுதலும், செயல்படுதலும் ஒரு வாழ்க்கையா? என்கிற கேள்வியும் எழுந்து கொண்டேதான் இருக்கிறது. இவருக்கு அருகிலிருந்து இவரைப் பாதுகாக்க ஒரு நல்ல மனிதர் இல்லாமல் போனதே என்கிற பரிதாபமும் எழத்தான் செய்கிறது.

      இவரது எழுத்துப் பணி எப்படி ஆரம்பித்தது, எப்படித் தொடர்ந்தது என்று தேட ஆரம்பித்த நமக்கு, இவரின் சோகக் கதை மிகுந்த சங்கடத்தைத் தர, இவ்வளவு பெரிய சிறுகதைத் தொகுப்பை எப்படி இவரால் கொடுக்க முடிந்தது     என்று ஆச்சரியமெழுகிறது. எத்தனையோ முறை தற்கொலைக்கு முயல்தலும், தொடர்ந்து மனநல சிகிச்சைக்கு ஆட்படுதலும், பிறகு அதில் பாதியில் கழன்று கொண்டு வருதலும், தூக்கத்திற்கும், துக்கத்திற்கும் மாத்திரைகளாய்ச் சாப்பிட்டுத் தள்ளுதலும்...கோபிகிருஷ்ணனின் வாழ்க்கைப் பயணத்தை நினைக்கையில் நமக்கு  மிகுந்த வேதனைதான் மிஞ்சுகிறது.

      தனக்குத்தானே பேசிக் கொள்ளும் பழக்கம், இரவுகளில் தூக்கமில்லாதது, ஓயாத மன உளைச்சல், எதையெதையோ நினைத்து அழுதல் இப்படி எல்லாமும் இருந்திருக்கிறது இவருக்கு. இதையெல்லாம் விலாவாரியாகச் சொல்லத் தெரிந்தவர் அவற்றிலிருந்து விடுபட முடியாமல் தவித்திருக்கிறார் என்பதுதான் பரிதாபம். க்ரியா ராமகிருஷ்ணன் அவர்கள் நிறைய உதவியிருக்கிறார். வேலை வாங்கிக் கொடுத்திருக்கிறார். பிறகு அவரது பதிப்பகத்திலேயே கொஞ்ச நாட்கள் வேலையில் இருந்திருக்கிறார்.

      இவை எல்லாவற்றிற்கும் நடுவேதான் இவரது எழுத்துப் பணியும் தொடர்ந்திருக்கிறது. என் கதைகளில் ஒரே ஆள் எல்லாக் கதைகளிலும் வருவதாகவே இருப்பது விமர்சனத்துக்குள்ளாகியிருக்கிறது . எனக்கு வாழ்க்கையே பிரச்னையாக இருக்கும்பொழுது  படிக்கும் உந்துதல் குறைவாகவே உள்ளது.  என்று கூறும் இவர் சாமர்செட் மாமின் 35 புத்தகங்கள் படித்திருக்கிறேன் என்று கூறுகிறார். பிரசுரிக்கத் தகுந்தவை என்ற அளவில் கணையாழியில் குறுநாவல்கள் பிரசுரமாயின. இலக்கியவாதியாக இருப்பதற்காக இதுவரை மூன்றே மூன்று தடவைதான் கௌரவிக்கப்பட்டிருக்கிறேன் சுதந்திரக் கலாச்சாரம்தான் தேவை. அவரவர் உணர்வுகளுக்கு அவரவர் நேர்மையாக இருக்க வேண்டும். எனக்குத் திருமணத்தில் நம்பிக்கையில்லை என்பதை திருமணத்திற்குப் பிறகுதான் உணர்ந்தேன் என்று கூறுகிறார். ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழலாம். மனம் ஒத்துப் போனால் சரி...என்று கூறும் இவர், ஒரு மனிதன் தனது 60 வயது வரை நான்கு பெண்களுடனாவது சேர்ந்து வாழ வாய்ப்புண்டு  இதைத்தான் சுதந்திரக் கலாச்சாரம் என்கிறேன் நான் என்று முடிக்கிறார். பெண் தான் விரும்பியபடி உறவு வைத்துக் கொள்ளக்கூடிய பாலியல் சுதந்திரம் வேண்டும் பள்ளியில் 9-ம் வகுப்பிலிருந்தே பாலியல் கல்வியைப் புகுத்த வேண்டும், இந்த வாழ்க்கை ஒரே விதமாக உள்ளது. அதை மாற்றியமைக்க வேண்டும். அது எப்படி என்று எனக்குப் புலப்படவில்லை. என்று கூறும் கோபிகிருஷ்ணன் சில மொழி பெயர்ப்புப் பணிகளையும் செய்துள்ளார் என்று அறியப்படுகிறது.

                              ------------------------------------

     

கருத்துகள் இல்லை: