07 நவம்பர் 2022

'விலகல்” - சிறுகதை - - கல்கி 7.11.2022 இதழ்

 

சிறுகதை                            'விலகல்”  - சிறுகதை - - கல்கி 7.11.2022  இதழ் 
      னக்கு பயமாகயிருக்கிறது. என் மகனுக்கும் எனக்கும் சண்டை வந்துவிடுமோ என்று. அப்படி நேரிட்டால் அவள் அவன் பின்னால்தான் நிற்பாள். அதிலும் நம்பிக்கையில்லை எனக்கு. வேண்டாம்...விட்ரு....வேண்டாண்டா...என்று ஏதோ நான்தான் சண்டைக்கு இழுத்தது போலச் சொல்லி அவனை விலகச் சொல்லுவாள். அதனால்தான் இது நடக்கும் முன்பே இங்கிருந்து வெளியேறிவிட வேண்டுமென்று விரும்புகிறேன்.  கேவலப்பட்டு வெளியேற நேர்ந்தால் பிறகு தற்கொலைதான். என்னால் அவமானங்களைத் தாங்க இயலாது.  அதற்கு முன்பே நழுவிடணும். நழுவுவதென்ன நழுவுவது....? நானென்ன இவன் சோற்றிலா கையை நனைக்கிறேன்? ராஜா மாதிரி இருப்பேன்.  பென்ஷன் வாங்கும் ஆசாமி நான். என் காசுதான் நாளைக்கு இவனுக்கு வேண்டும். இவன் துட்டு எனக்கு வேண்டாம். அப்பாவின் சேமிப்பு என்னென்ன, எங்கெங்கே...என்று இவன்தான் தேட வேண்டும். எனக்கொன்றுமில்லை. ஆனாலும் மதிப்பில்லையே இன்று...ஆனாலும்

      ஆதரவற்ற நிலைக்கு ஆளாக்கி விடுவார்களோ என்று பயப்படுகிறேன். எனக்கு நானே தயாராக வேண்டாமா? என்னை நானே தேற்றிக் கொண்டு நிமிர்ந்து நிற்க வேண்டாமா? இது  என் டைம்... என்று அவள் தயாராகி நிற்கிறாளோ? அப்படித்தான் தெரிகிறது அவள் செய்கைகள். இதற்கு முன்பு நடந்த பல சண்டைகள் இந்த ரீதியில்தான் இருந்திருக்கின்றன. ஆனால் அப்போது வீடு என் கன்ட்ரோலில் இருந்தது. வரவு செலவு அனைத்தும் என் கட்டுப்பாட்டில். ஆனால் இப்போது?    அவன் சம்பாதிக்க ஆரம்பித்து, திருமணம் ஆகி நிற்கையில் அத்தனையும் அவன் கைக்குப் போய்விட்டது. இவள் அவனோடு ஒண்டிக் கொண்டு விட்டாள். அதிகாரம் கை மாறியதில் பெருமிதம் அவளுக்கு.    உடனே பொறுப்பு வந்தாச்சு அவனுக்கு....!  உறி...உறி...உறி...!!!                                                 

நான் எதையும் கண்டு கொள்வதில்லை இப்போது. பையனோடு வந்து இருக்க ஆரம்பித்த பின்னால் அவள் பேச்சும் நடவடிக்கையும் அடியோடு மாறி விட்டன. அந்தக் கணமே நான் தனித்து விடப்பட்டதாய் உணர்ந்து விட்டேன். என்னோடு இருந்தபோது என் எல்லா நடவடிக்கைகளுக்கும் கட்டுப்பட்டவள், இப்போது அவிழ்த்து விட்டதுபோல் நடந்து கொள்கிறாள். சம்பளப்பணத்தை அம்மாவிடம்தான் கொடுக்கிறான் அவன்.ஏ.டி.எம். கார்டே அவளிடம்தான் உள்ளது. அவன் மனைவி என்ன நினைப்பாளோ? என்று அதற்கொரு சண்டை இருக்கிறதோ?   

       பையனோட சம்பளக் காசானாலும் அதையும் பொறுப்பா, சிக்கனமா, கருத்தா  செலவழிக்க வேண்டியது நம்ம கடமை என்று நான் எத்தனையோ முறை சொல்லிப் பார்த்து விட்டேன். கேட்பதாயில்லை.    பொறுப்பா இல்லாம இப்ப இங்க என்ன பண்றாங்க? ஆடவா செய்றாங்க?  இத்தனை நாள் அவள் மனம் கொதித்துக் கொண்டிருந்ததற்கு ஆறுதலாய் அந்த பதில் வந்திருக்கிறது என்பது புரிந்தது எனக்கு. அவள் இப்படிப் பேசி நான் பார்த்ததேயில்லை.  அதற்காக ஒரு குடும்பப் பெண் இந்த மாதிரியா பதில் சொல்வாள்? இவளை நான் என்னென்று உணர்வது? மனிதர்கள் எல்லாருக்கும் ரெண்டு பக்கம் இருக்கும் என்று கேள்விப்பட்டிருக்கிறோமே? பையன் சப்போர்ட் என்றால் வார்த்தைகள் கூடவா தடிக்கும்? அல்லது வயதானால் எப்படி வேண்டுமானாலும் பேசிக் கொள்ளலாமா? கட்டுப்பாடு தேவையில்லையா? அதற்கான சலுகை கிடைக்கிறதா?

       பெண்கள் வயதான பின்னால் பல சமயங்களில் உட்காருவது, எழுவது,    படுப்பது, பேசுவது, சிரிப்பது, நடப்பது, வீட்டிற்குள் கொஞ்சம் வெட்ட வெளியாய்ப் புழங்குவது  என்று பல வகையிலும் ஆண்களைப் போல நடந்து கொள்கிறார்களே...இது அதன் அடையாளமோ? ச்சீ...இவளையா நான் ரசித்தேன்...! இவளையா கொஞ்சினேன்...!! பெண்மையின் மென்மை எங்கே போயிற்று? சமயம் பார்த்து என் மனதில் என்னெல்லாம் தோன்றுகிறது?

      மருமகப் பெண் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டு அமைதியாய் இருந்துகொண்டிருக்கிறது. என்று அது வெடிக்கப் போகிறதோ தெரியவில்லை. அப்படி வெடிக்கும்போது அந்தப் பேச்சாவது கொஞ்சமேனும், ஒரு சிறு சதவிகிதமேனும் எனக்கு சார்பாக இருக்குமா என்கிற நப்பாசை என்னிடம்  துளி இருக்கிறது. ஏனென்றால் பெண் பிள்ளைகள் எப்போதும் அப்பாவுக்கு சப்போர்ட். அதாவது அவர்கள் அப்பாவுக்கு. இந்த மாமனாருக்கு அந்த பாக்கியம் கிட்டுமா சொல்ல முடியாது. அதற்கும் என்னைப் பிடிக்காமல் போகலாமே...அவன் சொல்லிக் கொடுக்கலாமே...! அதுகிட்ட வாயக் கொடுத்து மாட்டிக்காத...! தேவாங்கு...!! நாங்களே பேசுறதக் குறைச்சிருக்கோம்...! என்ன வேணாலும் சொல்லலாமே...!    எதைக் கொண்டு வந்தோம், கொண்டு செல்ல? விஷயத்திற்கு வருகிறேன்.        

இதெல்லாம் எதற்கு? வெட்டிச் செலவு... என்று நான் சொன்ன பொருட்களையெல்லாம் அத்தியாவசியத் தேவை போல் வாங்கினாள். இவ்வளவு போதும்....என்று கட்டுப்படுத்திய  சாமான்களையெல்லாம் டபுள் பங்காக வாங்கி அடுக்கினாள். துணிமணிகள் நிறைய இருக்கும்பொழுதே, பலவும் இன்னும் உடுத்தப்படாமலேயே கிடக்கும்பொழுதே புதிது புதிதாக வாங்கிக் கொண்டிருந்தாள். அந்தப் பழையவை அணியப்படாமலேயே பழசாகி பாழாகிக் கொண்டிருந்தன. சர்வ சாதாரணமாய் அவைகளை நிறுவைக்குப் போட்டு இடத்தைக் காலி செய்தாள்.  என்னோடு குடித்தனம் நடத்தியபோது இருந்த கட்டுப்பாடுகள் அத்தனையையும் அறுத்துக் கொண்டு வெளியே வந்து விட்டதுபோல் இருந்தது அவளது நடவடிக்கைகள். அவ்வளவு கர்ண கடூரமாகவா இருந்தேன் என்று நானே இப்போது நினைக்க வேண்டியிருந்தது.       இப்போது அவள் இருக்கும் இருப்பைப் பார்த்தால் இவளா அப்போது என்னிடம் அப்படி இருந்தது? என்று யாராலும் நம்பவே முடியாதுதான்.                                     வாழ்க்கையில் இப்போதுதான் அடியெடுத்து வைத்திருக்கும் அவனை இப்படிப் பழக்கினால், பின்னால் சேமிப்பு, சொத்து என்று எதுவுமில்லாமல் போய் விடுவானே என்று எனக்கு வயிற்றெரிச்சலாயும் ஆதங்கமாயும் இருக்கிறது. ஆனால் நான் இப்போது எதுவும் சொல்ல முடியாது. எதைச் சொன்னாலும் அவள் கேட்கப் போவதில்லை. கேட்கக் கூடாது என்று பிரதிக்ஞை செய்து கொண்டது போலல்லவா செயல் படுகிறாள்.  போதாக் குறைக்கு அவன் வேறு வந்து முன்னே நிற்பான். ஏதேனும் சண்டை வருவதற்கு முன் அம்மாவுக்குப் பாதுகாப்பு அரணாய் நிற்பதுபோல் குறுக்கும் நெடுக்கும் போய்க் கொண்டிருப்பான். காவலுக்கு ஆள் இருக்கு...ஞாபகம் இருக்கட்டும்... கட்டு மீற முடியாது என்பதுபோல....!

      அம்மாவின் தேவை அவனுக்கு இருக்கிறது. அதை நன்கு உணர்ந்திருக்கிறான். நாளை குழந்தை பிறந்தால் பார்த்துக் கொள்ள, வளர்த்துக் கொடுக்க அம்மா வேண்டுமே...! அப்பாவை வைத்துத்தான் அம்மா என்ற நிலைமை இல்லையே...! வெளிநாட்டில் இருப்பவர்கள் வேறு வழியில்லாமல் அப்பனையும் அழைத்துச் செல்கிறார்கள். இங்கே தனியே கிடந்து செத்துத் தொலைஞ்சார்னா...பிறகு அதுக்குமில்ல ஓடி வரணும்...கூட்டிப் போய் அங்க போயிட்டாலும், ஆம்புலன்சுக்கு .போன் பண்ணினாப் போதும்...வந்து எடுத்திட்டுப் போயிடுவான். சிரமமில்லாம முடிஞ்சிடும்.இங்கன்னாஆயிரத்தெட்டு சம்பிரதாயங்கள்...செய்முறைகள்....செலவுகள்....அய்யய்யய்ய...எவன் ஃபாலோ பண்றது இந்தச் சடங்குகளையெல்லாம்....அதெல்லாம் அவுட் ஆஃப் டேட்....! அந்த நம்பிக்கையெல்லாம் பொய்த்துப் போய் ரொம்ப நாளாச்சு....இன்னும் அதப் பிடிச்சித் தொங்கிட்டு இருக்க முடியுமா? கன்ட்ரீ ப்ரூட்ஸ்....!!      ரொம்ப முடியாம இருந்தாலும் ஏதாச்சும் முதியோர் இல்லத்துல சேர்த்துட்டுப் போயிடலாம். நாளைக்கு மண்டையப் போட்டாலும், இ.மெயில் போட்டு, அக்கௌன்ட் நம்பர் வாங்கி பணத்தை அனுப்பிச்சிடலாம்...நீங்களே எல்லாத்தையும் செய்திடுங்கன்னு...அதுக்கும் வழியில்லையே...கெழம் இன்னும் குத்துக்கல்லாட்டம்ல இருக்கு....? ஓணான மடில கட்டின மாதிரி இத கூட்டிட்டுப் போயி இன்னும் அங்க என்ன பாடு படுத்தப் போகுதோ? அம்மாவின் தேவையை நினைக்கும்போது அப்பாவின் தேவை ஒன்றுமேயில்லை.

      நான் ஒரு எக்ஸ்ட்ராதானே?     அவுங்க ஏதோ பேசிக்கிறாங்க என்று என்றாவது  ஒதுங்கியிருக்கிறானா?  மாட்டான்.  சின்ன வயதுக்குக் கட்டுமஸ்தான உடம்போடு உள்ள அவனின் இருப்பு எனக்குள் பயத்தை ஏற்படுத்தத்தான் செய்கிறது. ஓங்கி ஒரு அறை விட்டான் என்றால் நான் அம்பேல். . நெஞ்சை நிமிர்த்தி நேரடியாக வந்து ஒரு இடி இடித்தானென்றால் நிலை குலைந்து போய்த் தடுமாறி விழுந்து  நினைவு தப்பி விடும் எனக்கு.       பின் தலையில் அடிபட்டு பட்டென்று செத்தாலும் போச்சு...!      

      அப்பா அம்மாவோடு பேசுகிறார் என்றால் அது நிச்சயம் சண்டைக்குத்தான் என்பது அவன் கணிப்பு. அல்லது அது சண்டையில்தான் முடியும் என்கிற நினைப்பு. அவள் அவனை அப்படித்தான் பழக்கியிருக்கிறாள். கணவன்-மனைவிக்குள் ஆயிரம் பேசிக் கொள்வோம்...அதையெல்லாமா அவனிடம் போய்ச் சொல்வது? கார சாரமாய்ப் பேசுவதெல்லாம் சண்டையாகுமா?  எது அவனுக்கும் தெரியணும். எது தெரிய வேண்டாம் என்கிற வித்தியாசமில்லையா...உனக்கொரு விவஸ்தையே கிடையாதா? என்று பலமுறை அவளை நான் சத்தமிட்டிருக்கிறேன். ஆனால் ஒருமுறை கூட என் பேச்சைக் கேட்டதில்லை. என்னோடு நடந்த விவாதத்தை, சர்ச்சையை, சண்டையை எல்லாவற்றையும் அவள் அவனிடம் கொட்டி விடுவாள். இதைச் சொல்லணும், இதைச் சொல்லக் கூடாது என்பதே கிடையாது. என்னதான் வாழ்க்கை அனுபவம் அவளுடையது என்று தோன்றும் எனக்கு. அவன் மனதில் பகைமை உருவாகாமல் வேறென்ன செய்யும்?

      அந்த எல்லாச் சண்டையிலும் நான்தான் வில்லன். எதுவொன்றிலும் என் பக்கம் நியாயம் இருந்ததில்லை. அவள் சொல்லி நான் கேட்காததாகவே அனைத்தும் முடிந்திருக்கும். நான் வெறும் அடாவடி.தடாலடி... அதனாலேயே சண்டை ஏற்பட்டதென்றும், அப்படியொரு சண்டையை உண்டாக்குவதற்காகவே வரிந்து கட்டிக் கொண்டு நான் அவளிடம் அனுதினமும் பேச்சைத் துவக்குவதாகவும், எப்பப் பார்த்தாலும் ஏதாச்சும் குத்தம், குறை சொல்லிட்டு சண்டைக்கு இழுக்கிறதே உங்கப்பாவுக்கு வேலையாப் போச்சு....யப்பாடா...போதும்டா சாமி....எனக்கு வெறுத்துப் போச்சு....எங்கயாவது போய் சிவனேன்னு இருக்க மாட்டமான்னு வருது....என்றே ஒவ்வொரு பேச்சையும் அவள் முடித்திருப்பாள். கண்கள் கலங்கினால்தானே காரியம் கூடும். அதுவும் நடக்கும்.  அதாவது நான் இல்லாமல் இருந்தால் எத்தனை நிம்மதி என்ற மறைபொருள் அதில் பொதிந்திருக்கும்.  

ஏம்மா...பேச ஆரம்பிக்கும்போதெல்லாம் அப்பாவக் குறை சொல்லிட்டே இருக்கியே...என்று ஒருநாள் கூட அவன் கேட்டதில்லை. அம்மா சொல்வதை அப்படியே நம்பி விடும் பிள்ளை அவன்.அது வேத  வாக்கு அவனுக்கு. கொடுமைக்கார அப்பா என்கிற பிம்பம். கல்வி கற்கும் காலத்தில் படிப்பில் மட்டும்தான் கவனம் செலுத்த வேண்டும் என்று நான் எவ்வளவோ சொல்லியும் அவன் கேட்கவே இல்லை. அவனுக்கு வேண்டாத அரசியலையெல்லாம் சொல்லிக் கொடுத்து, ஒரு சார்பு நிலையில் தொடர்ந்து அவனிடம் பேசி, ஜாதி, மதம், உயர் ஜாதி, கீழ் ஜாதி என்று அவன் மனத்தில் பேதங்களை ஏற்படுத்தி, எல்லோரையும் சந்தேகக் கண்களோடு பார்ப்பதற்கும், கீழ்த்தரமாக நினைப்பதற்கும்,  அன்பு செலுத்தாமல், நட்பு பாராட்டாமல் வெறுப்பை உமிழ்வதற்கும், எதிராளி்க்கு சார்பாக நியாயங்களைப் பேசுபவர்கள் அல்லது பொதுவாகக் கருத்தைச் சொல்பவர்களிடமெல்லாம் வெட்டிக்கு வாதம் பண்ண வைத்தும், அப்படிப் பேசுபவர்கள் வயதில் எத்தனை பெரியவர்களாயிருப்பினும், அது உறவினர்களாயினும் எடுத்தெறிந்து பேசுவது போலவும், அலட்சியப்படுத்துவது போலவும்  அவனைத் தயார் படுத்தியிருந்தாள் அவள். அல்லது அவனாகவே தயாராகியிருந்தான் என்றும் சொல்லலாம். அது சம்பந்தமான புத்தகங்களைக் கொடுத்தும் வாங்கியும் படிக்கச் செய்து, கல்லூரிப் பாடங்களில் கவனமில்லாமல் ஆக்கி, அவன் வாழ்க்கையையே பாழடித்தவள் அவள்தான். பலன்...வெற்றிகரமான தேர்ச்சி இன்றி, வெறும் பாஸ் கூட இல்லாமல்,  பத்துப்பேப்பருக்கும் மேல் அவன் அரியர்ஸ் வைத்ததுதான் கடைசி மிச்சமாயிருந்தது.

அவனோடு தங்கியிருந்தவர்கள் அடிக்கடி சினிமா போனார்கள். வெளியே சுற்றினார்கள். ஆனால் படிப்பில் கோட்டை விடவில்லை. அதில் கவனமாய் இருந்து வெற்றி கண்டிருக்கிறார்கள். இவனுக்கு அந்த சாமர்த்தியம், கவனம் இல்லாமல் போனதே?     

      கல்லூரி காலம் முடிந்தபின்னால்தான் அவன் விழித்துக் கொண்டான். அவனாக விழித்துக் கொண்டது அது. அப்பா அன்றே சொன்னாரே, கேட்காமல் போனோமே என்கிற புரிதல் அப்போதும் இல்லை. அதுவும் அவனோடு படித்தவர்கள், அறையில் இருந்தவர்கள் எல்லோரும் வரிசையாக வேலைக்குப் போனதைப் பார்த்து அவனுக்கே ஒரு உறுத்தல் ஏற்பட்டு, அல்லது  அவமானம் தோன்றி (இவனுகளுக்கெல்லாம் வேலை கொடுத்துட்டாங்க நாட்டுல....!)  ஆன் லைனில் ஒரு வேலை தேடி, குறைந்த சம்பளமானாலும் பரவாயில்லை என்று கிளம்பிப் போனான். உயர்ந்த ஜாதி உயர்ந்த ஜாதின்னு சொல்லிக்கிறது வெறும் வாய் வார்த்தைல இருந்தாப் பத்தாது, செய்கைல இருக்கணும், சாதனைல காமிக்கணும்  என்று அப்போதுதான் அவனுக்கே உறைத்தது.  பிறகுதான் அரியர் பேப்பர்களையெல்லாம் படிப்படியாக முடித்து பெரிய நிறுவனங்களுக்கு அப்ளை பண்ணி நுழைந்தது. இன்று ஒரு நல்ல நிறுவனத்தில் நல்ல சம்பளத்தில் அவன் வேலை பார்க்கிறான் என்பதில் எனக்கு திருப்திதான். எல்லாம் இறைவன் அருள். நான் அப்படித்தானே நினைக்க முடியும்.

முன்னோர்கள் ஆசீர்வாதம். என்னைப் பொருத்தவரை அப்படித்தான்.  நல்ல சம்பளம் என்று வந்தால்தானே பெண் கொடுக்கிறார்கள்? பையன் மாதம் ஒரு லட்சம் கண்டிப்பாக வாங்க வேண்டும். பெண் இருபத்தைந்தாயிரம் வாங்கினால் போதும். இதுவே  பெண் வீட்டாரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது இப்போது. எல்லாம் தலைகீழாக மாறி ரொம்ப நாளாச்சு.  வெறும் அறுபதும், எழுபதும் எல்லாம் இப்பொழுது சம்பளமேயில்லை. அதுவும் வெறும் இருபத்தைந்தாயிரம் வாங்கும் பெண் வீட்டாரின் எதிர்பார்ப்பு இது. அது வேலை பார்ப்பது கைச் செலவுக்கு...!  அது மட்டும் கால் துட்டு வாங்கலாம்....ஆனால் பையன் முழுத் துட்டு வாங்கியாகணும். கார் இருந்தால் தேவலை. இல்லாட்டா லோன் போட்டு வாங்கிக்கலாம். பையன் பெயரில் வீடு இருந்தால் அதை அடகு வச்சுக் கூட வாங்கலாம்...தப்பில்லை.                                                                    முடியாவிட்டால் நாளை அது வேலையையும் விடும். அதற்கும் சம்மதித்தால்தான் பெண் கொடுக்கிறார்கள் இப்போது.  காலம் எப்படி மாறிவிட்டது பாருங்கள்? பையன் வீட்டார் பெண்ணுக்குக் கண்டிஷன் போடுவதை விடுத்து, இப்போது எல்லாம் தலைகீழ். அத்தனைக்கும் ஓ.கே. என்றாலும் டைவர்ஸ் இல்லாமல் வாழ்வார்களா என்பதற்கு கியாரண்டி இல்லை. அது அவர்களின் உரிமை. அதில் நாம் தலையிட முடியாது. திருமணம் முடித்து வைப்பது மட்டும்தான் நம்  வேலை.  அந்தளவுக்கு விரிவாக  கோணலாக, சிந்திக்கிறார்கள். வானத்தில் வட்டமிடும் சுதந்திரப் பறவைகள்.   விட்டுக் கொடுத்து வாழ்தல் என்பதெல்லாம் பழங்கதை. வெட்டு ஒன்று துண்டு ரெண்டு என்பது புதுக்கதை.ஒரே மாதம், மூன்றே மாதம் என்று பிரிந்த கதையெல்லாம் இருக்கிறது. கோர்ட் வாசலுக்குப் போய்ப் பாருங்கள்....கல்யாணம் கந்தலாகி நிற்பதை...! இந்திய கலாச்சாரம்...குடும்ப அமைப்பு...அடேங்கப்பா....!  

       பெரியவர்கள் பார்த்து வைக்கும் கல்யாணங்கள்தான் இந்த லட்சணத்தில் இருக்கிறது. பலவும் தப்பாய்ப் போகிறது.  எனக்குத் தெரிய ஜாதி விட்டுக் கல்யாணம், காதலித்துக் கல்யாணம், ஓடிப் போய்க் கல்யாணம் இம்மாதிரிக் கேஸ்களெல்லாம்தான் பொறுப்போடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

      இவ்வளவு ஏன்...எங்கள் வீட்டுக்கு எதிர்த்தாற்போலேயே ஒரு காதல் ஜோடி உண்டு. வேற்று ஜாதிக் கல்யாணம்தான். அந்தப் பெண் மட்டும் அதன் வீட்டுக்குப் போய் விட்டு வரும். இந்தப் பையன் போய்ப் பார்த்ததேயில்லை. வீட்டு வாசப்படி மிதிக்கக் கூடாது என்று சொல்லிவிட்டார்களோ என்னவோ! அவன்பாட்டுக்குத் தனியாகத்தான் இருந்து கொள்கிறான். அதுபோல் அவன் பெற்றோர் வீட்டுக்கு அதுவும் போவதில்லை. அதை இவனே சொல்லிவிட்டானோ என்னவோ?  கதை எப்படியிருக்கிறது பாருங்கள். இந்த அளவுக்காவது எப்படி விட்டார்கள் என்றே நினைக்க வேண்டியிருக்கிறது. உற்றார், உறவினர் என்று யாரும் இவர்கள் வீட்டுக்கு வந்து பார்த்ததேயில்லை. இப்படி எல்லாரையும் முறித்துக் கொண்டு ஒரு வாழ்க்கை தேவைதானா என்று தோன்றும். உறவும், நட்பும், சுற்றமும்  சூழ என்று சும்மாவா சொல்லி வைத்திருக்கிறார்கள்? எந்தச் சுற்றமும் எங்கும் கிடையாது. ஒரு நாய் வளர்ப்பாங்க அதுதான் துணை...ஆபீஸ் முடிஞ்சு வந்தவுடனே கழுத்தைக் கட்டிண்டு அதக் கொஞ்சிண்டு இருக்க வேண்டிதான்.....! ரொம்ப சமத்துப் பிள்ளைங்க....நெற்றி முறிச்சு, திருஷ்டி கழிக்கணும் போல்ருக்கு...!      

நம்ம பையன் விஷயத்தில் அந்தச் சங்கடமெல்லாம் இல்லை. அந்தமட்டும் சேமம். பிரச்னை இதுதான்...பையன் அம்மா கோண்டு. ஏன் அப்பா கோண்டுவாய் நீ ஆக்கிக் கொள்ள வேண்டியதுதானே...என்று நீங்கள் கேட்கலாம். ரெண்டுமே தப்பு என்கிறேன் நான். எது நியாயமோ, எது சரியோ...அதன் பக்கம் அவன் நிற்க வேண்டும். அதைப் பகுத்துணரும் அறிவும், நிதானமும் அவனுக்கு வேண்டும். அது அவன் கட்டின பெண்டாட்டியானாலும் சரிதான். அப்போதுதான் எது அட்ஜஸ்ட்மென்ட் என்பதே ஒருவனுக்குப் புரியும். அதன்படி இருக்கவும் தெரியும். இப்போது இவன் இருக்கும் லட்சணத்தைப் பார்த்தால் அப்படித் தெரியவில்லையே...!                                                 தொட்டதற்கெல்லாம் அவன் என் மேல் கோபப்பட ஆரம்பித்திருக்கிறானே...! அல்லது முறைத்துக் கொண்டு மூஞ்சியைத் தூக்கி வைத்துக் கொண்டிருக்கிறானே...! இது வெடிக்க எவ்வளவு நேரம் ஆகும்? அந்தக் கணம் சட்டென்று நிகழ்ந்து போகும் வாய்ப்பு அதிகம்தானே...! அப்படித்தானே அன்றொரு நாள் ஏதோ பேசிக்கொண்டிருந்தபோது, அவன் கருத்துக்கு மாறுபாடாய் ஏதோ சொன்னேன் என்று சற்றும் எதிர்பாராத தருணத்தில் என் முகத்துக்கு முன்னால்  நெருங்கி வந்து, கையை உயர்த்தி, கண்ணை முழித்து,  பல்லைக் கடித்து, நாலு வீட்டுக்குக் கேட்பதுபோல் குரலெடுத்துக் கத்தினானே...! (அடிக்கவில்லை, தப்பித்தேன்...எவ்வளவு நேரம் ஆகும்...?)  அன்று ஒரு கணம் நடுங்கியது பாருங்கள் என் உடம்பு! அதுபோல் வாழ்க்கையில் இதுநாள் வரை ஒரு உதறலை நான் கண்டதேயில்லை. பெத்த பிள்ளையே ஆனாலும்..... ஆகிருதி?

அப்படியே கப்சிப் ஆகிப்போனேன். ஏதோ வெறியோடு என்னையே வீரியமாய் நோக்கிக் கொண்டிருந்த அவன், அப்பா முன்னால் இப்படிச் செய்து விட்டோமே என்று தவறை உணர்ந்த மாதிரித் தெரியவில்லையே...! கண் காண்பித்து விட்டதே...! இது எதைக் காட்டுகிறது...சற்றே நினைத்துப் பாருங்கள்....அவனுக்கு என் மேல் கொஞ்சமும் மரியாதை இல்லை என்பதைத்தானே...! அந்த எண்ணத்தை, அந்தத் தீர்மானத்தை அவன் மனதில் தோற்றுவித்தது யார்? என் மனைவிதானே...! பையன் முன்னால், அவனது இளம் பிராயம் முதற்கொண்டு  என்னை எதிர்த்து எதிர்த்துப் பேசுவதைப் பலமுறை நேரில் கண்ட அவனிடம், நான் சொல்வதையெல்லாம் மறுத்து மறுத்துப் பேசும் தன்மையை உணர்ந்த அவனிடம்,  அந்த மாற்று பிம்பம்தானே படிந்து போய்க் கிடக்கும்? அந்த எண்ணங்கள்தானே வேரோடிப் போய்க் கிடக்கும்? பிறகு அவனுக்கு எங்கிருந்து வரும் மரியாதை என்னிடம்?                  

என்று என்ன நடக்கும் என்பது தெரியாமல் பீதியில் உறைந்து கிடக்கிறேன் நான். ஒரு அரசாங்க அதிகாரியாய் இருந்து, ஓய்வு பெற்று இன்று கைநிறைய ஓய்வூதியம் பெறும் எனக்கே இந்த நிலைமை என்றால், ஒன்றும் கையாலாகாத அப்பன்கள் கதி?                                                      என் மனம் முழுவதும் நிறைந்து கிடக்கும் ஒரே விஷயம் எப்படி இங்கிருந்து கிளம்பிச் செல்வது என்பதுதான். எனக்கு முழுமையாக நம்பிக்கை அற்றுப் போன இந்த வேளையில்தான் நான் இப்படிச் சிந்திக்கிறேன். அம்மா முன்னால் நெஞ்சை நிமிர்த்துக் கொண்டு என்னிடம் வீராவேசமாய் வந்து நின்ற  அவன், அவன் பெண்டாட்டி முன்னால் இப்படிச் செய்ய எவ்வளவு நேரம் ஆகும்? இன்னும் அந்தக் கேவலம் வேறு வேண்டுமா எனக்கு?                                                            அதற்கு முன்னால் கழன்று கொள்வதுதானே கௌரவம்? கொஞ்சம் உங்களை என்னிடத்தில் நிறுத்தி வைத்து சிந்தித்துப் பாருங்கள். என் பக்கத்து நியாயம் புரியும். மரியாதையாவது, மதிப்பாவது.. எல்லாம்...கிலோ என்ன விலை? கேட்கும் காலமய்யா...கேட்கும் காலம்...! ... காலமிது காலம்...கலிகாலமிது காலம்....!                                                                                                      --------------------------------------------

                                     

 

                                        உஷாதீபன்,                                                                               எஸ்-2 இரண்டாவது தளம், ப்ளாட் எண். 171,172,                                               மேத்தாஸ் அக்சயம், மெஜஸ்டிக் Nஉறாம்ஸ்,                                                 ராம் நகர் (தெற்கு) 12வது பிரதான சாலை, சென்னை-91.                                       (செல்-94426 84188) (ushaadeepan@gmail.com)

 

06 நவம்பர் 2022

 

அது அந்தக் காலம் - அனுபவக் கட்டுரை (பேசும் புதிய சக்தி-நவம்பர்-2022)

எஸ்.எஸ்.எல்.சி., ஆண்டுத் தேர்வு முடிந்த மறுநாளே வேலைக்குப் போய்விட்டேன் நான். எங்களூரிலிருந்து ஐந்து கி.மீ. தொலைவில் இருந்த ஒரு சிற்றூரின் ரைஸ் மில்லில்  பில் போடும் வேலை. நாற்பது ரூபாய் சம்பளம். அப்போது அது எங்கள் குடும்பத்திற்கு அத்தியாவசியத் தேவையாய் இருந்தது. நடந்து போய்விட்டு நடந்தே திரும்பி விடுவேன்.

என்னோடு படித்தவர்கள் எல்லோரும் கல்லூரிக்குப் போய்விட்டார்கள். எனக்கு அந்த வசதி இல்லை. நான் மட்டும் எங்கள் தெருவில் தனித்து விடப்பட்டேன். தன்னுடைய வருமானத்திற்கு அப்பா ஆறு குழந்தைகளைப் அதுவரை படிக்க வைத்ததே பிரம்மப் பிரயத்தனம். அது ஒரு தனிக் கதை.

ஒழுங்காகப் படித்தேனா என்பது வேறு. படித்தேன். மண்டையில் எவ்வளவு நின்றதோ அந்த அளவுக்கு. அதுதான் இந்தச் சினிமாப் பைத்தியம் போட்டு ஆட்டி வைக்கிறதே…! முழுப் பரீட்சைக்கு முதல் நாள் இரவு சினிமாப் பார்த்தவன் நான்.  விளங்குமா? பாஸ் பண்ணினேன். பாதிக்குப் பாதி மார்க். அம்புட்டுத்தான்.

எனக்கு காசு வாங்கிக் கொள்ளாமல் கணக்கு சொல்லிக் கொடுத்தார் கிருஷ்ணசாமி வாத்தியார். அது என் அப்பாவின் உழைப்பை நினைத்து, எங்கள் குடும்பத்தை எண்ணி…..அவரது மட்டற்ற கருணை என்னைக் காப்பாற்றியது.

“கஷ்டப்பட்டுப் படிக்கணும்டா….நல்ல  வேலக்குப் போயி,சம்பாதிச்சு,  அப்பா…அம்மாவ உட்கார்த்தி வச்சுக் காப்பாத்தணும்….” –அன்றைய தாரக மந்திரம் இதுதான்.

பாஸ் பண்ணிட்டியா….போடா…போ…போய் எனக்கு ஒரு இங்க் பாட்டில் வாங்கிண்டு வா…. – இதுதான் அவர் என் மொத்த டியூஷனுக்கும் வாங்கிக் கொண்ட ஃபீஸ்…..அம்மாதிரி ஆசான்களை இன்று எங்கும் காண முடியாது. தெய்வமாய் வணங்க வேண்டியவர்கள்.

ரொம்ப நேரமா யோசிச்சு, கஷ்டப்பட்டுத் தப்பா போடுறீயேடா….என்று சொல்லிக் கொண்டே  காதைப் பிடித்துத் திருகுவார்…இப்போது நினைத்தாலும் வலிக்கிறது. அந்த உறுத்தலில்தான் பரீட்சை முடிந்த மறுநாள் வேலைக்குப் போனேன் நான்.

நாற்பது ரூபாய் சம்பளத்தில் பத்து ரூபாய் டைப்ரைட்டிங் பள்ளிக்குக் கட்டணமாய்க் கொடுப்பேன். ஐந்து ரூபாய் என் கைச் செலவுக்கு. மீதி இருபது ரூபாயை அப்படியே அம்மாவிடம் கொடுத்து விடுவேன். எண்ணிச் சுட்டு விண்ணப்பம் என்று ஒரு சொலவடை உண்டு. அம்மா அந்த வருமானத்தை  வீட்டின் தேவைக்கு அத்தனை அழகாய்ப் பயன்படுத்துவாள். அதெல்லாம் இன்றிருப்பவர்களுக்கு தலை கீழாக நின்றாலும் படியாது. வாழ்க்கையின் செம்மையை, அதன் நுணுக்கத்தை அப்படி உணர்த்தினார்கள் நம் முன்னோர்கள்.

தட்டச்சுப் பள்ளியின் பிரின்சிபால் “செல்வம்” . அவரின் அன்பு அளப்பரியது. தினம் ஒரு மணி நேரத்திற்குத்தான் ஃபீஸ் கட்டியிருப்பது. ஆனால் அங்கேயே கிடப்பதுதான் என் வேலை. வரும் ஜாப் டைப் அத்தனையையும் அடித்துக் கொடுத்துக் கொண்டே இருப்பேன். அது அவருக்குப் பெரும் உதவியாயிருந்தது. எனக்கும்தான். சமயங்களில் சினிமாவுக்கு அவரிடமே காசு வாங்கிக் கொண்டு  போய் விடுவேன். சொந்த அண்ணன் மாதிரி அவர். பள்ளியே கதியாய்க் கிடந்ததும், தொடர்ந்து தட்டச்சுப் பணியையே செய்து கொண்டிருப்பதும், வரும் மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுப்பதான பழக்கத்தை ஏற்படுத்தியது. இன்ஸ்ட்ரக்டர் ஆனேன். சம்பளமில்லாத வேலைக்காரனாய் இருந்தேன். மனமொன்றிக் கிடந்த காலம். வீடு…வீடு விட்டால் இன்ஸ்டிட்யூட். இவ்விரண்டு இடங்களில்தான் என்னைப் பார்க்கலாம்.அந்த நடைமுறை தட்டச்சு  ஆங்கிலம், தமிழ்த் தேர்வுகளைச் சுலபமாய்த் தேர்ச்சி பெறுவதற்கு எனக்கு வழி வகுத்தது.

அப்போதே எங்களூர் குட்டி நூலகத்தில் சென்று படிப்பது என்பது எனது மற்றும் நண்பர்களின் வழக்கமாயிருந்தது. நாங்கள் முதலில் தேடிப் படிப்பது தினத்தந்தி “சிந்துபாத்” சித்திரக் கதைதான். இது இளம் பிராயத்திலிருந்தே ஆரம்பித்த வியாதி. ஆண்டிப் பண்டாரம் பாடுகிறார்.  பிறகு அங்கு புத்தகங்களை எடுத்துப் படிக்க ஆரம்பித்தோம்.

அக்ரஉறாரத்தின் பல வீடுகளின் லைப்ரரி டோக்கன்கள் எங்களிடம்தான் இருக்கும். அப்போதிருந்த நூலகர்களுக்கெல்லாம் தான் பணியாற்றும் நூலகத்தில் எந்தெந்த எழுத்தாளர்களின் நூல்கள் என்னென்ன இருக்கின்றன என்பதெல்லாம் மனப்பாடமாய்த் தெரியும். ரேக்கில் அடுக்கியிருப்பவைகளில் எந்த வரிசையில், எத்தனாவது புத்தகமாய், என்ன எண்ணோடு அவை வீற்றிருக்கும் என்பதைத் துல்லியமாய்ச்  சொல்லும் சாதுர்யம் அவர்களிடம் இருந்தது. அத்தனை அர்ப்பணிப்பு.  கேட்லாக்கில் தேடி, வரிசையாய், ஒவ்வொரு எழுத்தாளராய் எடுத்துப் படித்திருக்கிறோம்.

அந்த நாட்களிலேயே அதாவது அறுபத்தியேழுக்குப் பிறகான காலங்களில் என் அண்ணா மூலமாய் எனக்கு  அறிமுகமானது  நா.பா. அவர்களின் “தீபம்” இலக்கிய இதழ். நான் ஐந்து இதழ்கள் வாங்குவேன். அந்த இதழ்களுக்கான தபாலோடு போஸ்டரும் வரும். எப்படியோ ஒரு தட்டி ஏற்பாடு செய்து, அதில் அந்தச் சின்னப் போஸ்டரை ஒட்டி மாடியில் எல்லோர் பார்வையிலும் படும்படி தொங்க விட்டேன் நான். தீபத்தின் வாசகன் நான். எங்களூர் ஏஜென்ட். அவ்வளவு பெருமை.    ஒன்றை மட்டும் எனக்கு வைத்துக் கொண்டு மீதி நான்கை. நண்பர்களுக்குக் கொடுத்து விடுவேன். அது நான் படித்த தட்டச்சுப் பள்ளியில் நிகழ்ந்தது. அங்கு படிக்க வந்த மாணவர்கள் சிலர் அந்தப் பழக்கம் உடையவர்களாய் இருந்தார்கள். தீபம் இதழில் பின்னாளில் என்னுடைய ஓரிரு கவிதைகளும் பெரிய அளவிலான துணுக்குகளும்  வந்திருக்கின்றன. அதில் வல்லிக்கண்ணன் எழுதிய “சரஸ்வதி காலம்“ என்ற தொடரை எடுத்து பைன்ட் செய்து வைத்திருக்கிறேன் நான்.

நா.பா.வை நினைக்கும்போது சி.சு.செ.யை நினைக்காமல் முடியாது. அதைத் தனிப் பத்தியாகத்தான் எழுத வேண்டும். இங்கே சொல்ல வந்தது எப்படி சுதாரித்து மேலே வந்தேன்  என்ற கதையை. காசு…துட்டு…மணி…மணி……

உங்கள் கதை என்ன அவ்வளவு முக்கியமானதா என்று யாரும் நினைத்து விட வேண்டாம். நிச்சயம் முக்கியமானதுதான். ஒரு கட்டத்தில் வாழ்க்கையில் காலூன்றுவதற்கு எல்லோருமே இளம் வயதில் சுதாரித்தாக வேண்டும் என்பதுதான் உண்மை. அது என் தந்தையிடமிருந்து, தாயாரிடமிருந்து எனக்குப் படிந்தது.

சுருக்கெழுத்து படித்தேன். பெரியகுளம் சென்டரில் தேர்வு எழுதப் போன போது அங்கிருக்கும் சினிமாத் தியேட்டரே மனதில் நின்றது். ரிசல்ட்? அதைச் சொல்ல வேறு வேண்டுமா?

ஒரு கட்டத்தில் மதுரைக்குக் குடி பெயர்ந்தோம் நாங்கள். என் அண்ணா மூலம் அங்கு ஒரு மிகப்பெரிய தட்டச்சுப் பள்ளியில் எனக்கு வேலை கிடைத்தது. நான் முதன் முதல் பேன்ட் அணிந்து போனது அங்கேதான். அதுவும் சொந்தமாய் எனக்கே எனக்கு என்று தைத்த பேன்ட் அல்ல. அண்ணாவின் பேன்ட் எனக்குப் பொருத்தமாய் இருந்ததால் அதை அணிந்து கொண்டு போனேன். புதிதாய் பேன்ட் போட்டுக் கொண்டவன் என்று யாருக்கும் தெரிந்து விடக் கூடாது என்பதில் கவனமாய் இருந்தேன். அது நாற்பது மிஷின்கள் இருக்கும் பெரிய தட்டச்சுப் பள்ளி. அதுக்கு நான் இன்ஸ்ட்ரக்டர். நான் அங்கே பயிற்றுவிப்பாளனாக சேர்ந்த பிறகு ரிசல்ட் சதவிகிதம் கூடியது. அது பிரின்ஸிபாலுக்கு. மகிழ்ச்சியைத் தந்தது.   மதுரைக்கு சுற்று வட்டாரத்திலுள்ள கிராமங்களில் இருந்து வரும் மாணவர்களுக்கு பாதிக் கட்டணம் அறிவிக்கலாம் என்று ஒரு யோசனையை அமுல்படுத்தினோம். கூட்டம் எகிற ஆரம்பித்துவிட்டது. எக்கச் சக்கமான மாணவர்கள் சேரப் போக, ஷிப்ட் முறையில் பணியாற்ற இன்னொருவரை வேலைக்கு நியமிக்க வேண்டியிருந்தது. அப்படி என்னோடு வந்து சேர்ந்தவர்தான் நண்பர் ராஜகோபால்.அவர் இப்போது இல்லை. எனக்கும் அவருக்கும் ரொம்பவும் ஒத்துப் போனது. நாங்கள் இருவரும் சேர்ந்து அந்தப் பள்ளியை உச்சிக்குக் கொண்டு போனோம். எங்களிடம் முழுப் பொறுப்பையும் விட்டு விட்டார் முதல்வர். அர்ப்பணிப்போடு வேலை செய்தோம்.

காலம் இப்படியே போய்விடுமா? இது போதுமா என்கிற கேள்வி விழுந்தது. சட்டென்று சுதாரித்து சுருக்கெழுத்தை மீண்டும் கையிலெடுத்தேன். தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் அசுரத் தனமாய் உழைத்து, மேல்நிலை (Higher Grade) வெற்றி பெற்றேன். பிறகு அதே பள்ளியில் சுருக்கெழுத்திலும் பாடம் எடுக்க ஆரம்பித்தேன்.

வெறும் எஸ்.எஸ்.எல்.சி.யை வைத்துக் கொண்டு குப்பை கொட்ட முடியாது என்ற உறுத்தலில் நான்கு Higher Grade களை (தட்டச்சு மற்றும் ஆங்கிலம்) கல்வித் தகுதியாகச் சேர்த்துக் கொண்டு சர்வீஸ் கமிஷன் எழுதினேன். அப்போது சுருக்கெழுத்துக் கல்வி மதிக்கப்பட்ட காலம்.

இந்தத் தட்டச்சுப் பள்ளியில் பணியாற்றி வந்த காலத்தில் இடையிடையில் எம்ப்ளாய்மென்ட் எக்ஸ்சேஞ்ச் நியமனத்தில் இன்டர்வியூ சென்று வந்த நான் சுமார் ஐந்தாண்டு காலம் அரசு அலுவலகங்களில் சுருக்கெழுத்தாளராகப் பணியாற்றி அனுபவம் பெற்றேன். கடைசியாக நான் வேலை பார்த்தது தமிழ்நாடு பூமிதான வாரியம். பின்னர் அது R.D.L.A. டிபார்ட்மென்டோடு மெர்ஜ் செய்யப்பட்டது. அங்குதான் என் அனுபவம் என்னை மிகுந்த தகுதியுள்ளவனாக ஆக்கியது.

வெள்ளைக்காரக் கலெக்டரிடம் பி.ஏ.வாக இருந்து அனுபவம் பெற்ற தமிழ்நாடு பூமிதான வாரியத்தின் சேர்மனான திரு பூபதி அவர்களிடம் சுருக்கெழுத்தாளனாகப் பணியாற்றிய அனுபவம் என்னைப் புடம் போட்டிருந்தது. சர்வீஸ் கமிஷன் வேலை கிடைத்ததும், என்னை விடமாட்டேன் என்று சொல்லி பயமுறுத்தினார் அவர். என் மீது அளவற்ற அன்பு கொண்டவர். அவரோடு தமிழ்நாடு முழுவதும் விடாமல் முகாம் சென்ற அனுபவம் எனக்கு. கையில் ஒரு போர்ட்டபிள் டைப்ரைட்டரோடு பின்னாலேயே அலைந்து கொண்டிருப்பேன். இரவு பகல் பாராமல் வேலை பார்ப்பேன். அந்த அளவுக்கான கடுமையான உழைப்பு இன்று எங்கே போனது என்று எனக்கே ஆச்சரியமாய் இருக்கிறது.

ஒரு முறை மதுரை  காந்தி மியூசியத்தில் நடந்த கவர்னரின் ஆலோசகர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் நோட்ஸ் எடுக்கும் பணி எனக்கு ஒதுக்கப்பட்டது. சேர்மனோடு சென்று திறம்பட கவனமாய் அந்தப் பணியை முடித்துக் கொடுத்தேன். எல்லாம் இறைவன் சித்தம்.

அது கவர்னர் ஆட்சிக் காலம். தமிழ்நாட்டில் திரு பி.டி.தவே, திரு எஸ்.ஆர்.சுப்ரமண்யம் ஆகிய இருவர் கவர்னரின் ஆலோசகர்களாக இருந்தார்கள் அந்நேரம். அப்பொழுதுதான் டி.என்.பி.எஸ்.ஸி. ரிசல்ட் வந்தது. 1976. முதன் முறையாக நாளிதழில் க்ரூப் 4-ன் ரிசல்ட்களை வெளியிட்டது அரசு. நம்பிக்கையோடு என் எண்ணைத் தேடினேன். கிடைத்தது. அது என் வாழ்க்கையில் மறக்க முடியாத நாள். என் விடா முயற்சிக்குக் கிடைத்த வெற்றி அது. ஸ்டெனோகிராபர் அப்பாய்ன்ட்மென்ட் கைக்கு வந்தது.

சாதாரண அறிவுள்ளவன்தான் நான். சராசரிக்கும் கீழானவன். ஆனால் என்னை உயர்த்தியது எனது உழைப்புதான். நம்பிக்கையோடு முடியும் என்று எண்ணி இறங்கி அதற்காகக் கடுமையாக உழைப்பது என்பது என் பழக்கமாய் இருந்தது. அது என் குணாதிசயங்களில் ஒன்றாகப் படிந்திருந்தது.  

கால் காசானாலும் கவர்ன்மென்ட் காசு. அரைக் காசானாலும் அரசாங்கக் காசு….

அது கைக்கு எட்டாமல் போய்விடுமோ என்று நான் பயந்ததுதான் எனக்கு ஏற்பட்ட வெறி.  எனது உழைப்புக்கும் வெற்றிக்கும் காரணம் அந்த பயம் தந்த வெறிதான்.  வெறும் எஸ்.எஸ்.எல்.சிக்கு இதுபோதாதா? போதும்தான். அது எப்படி வெறும் எஸ்.எஸ்.எல்.சி ஆகும். அப்பா அதற்காக எவ்வளவு உழைத்து தன் வியர்வையைச் சிந்தியிருக்கிறார். அது இமாலய சாதனையல்லவா? அதை அத்தனை சுலபமாய்ச் சொல்லி விட முடியுமா? அவர் உழைப்பை மதிக்காமலா?

சம்பாத்தியத்திற்கு ஒரு நிரந்தர வேலையைத் தேடி, வீட்டிற்கு உதவுபவனாய் வாழ வேண்டும் என்கிற வெறியே என்னை அங்கு கொண்டு நிறுத்தியது.

வாங்கும் சம்பளத்தில் மிகச் சிறு தொகையை என் செலவுக்கு வாங்கிக் கொண்டு மீதியை அப்படியே அம்மாவிடம் கொடுத்து விடுவேன். எனக்கு அது போதும் என்று நினைத்தேன். அதிக பட்சம் என் செலவு ஒரு சினிமா. சில பத்திரிகைகள். வேறு மாதிரிக் கன்னா பின்னாவென்றெல்லாம் செலவு செய்யத் தெரியாதவன். அதிகமாய்க் காசு கையிலிருப்பதை இடைஞ்சலாய் உணர்பவன். பொறுப்பு விட்டது என்று அம்மாவிடம் கொடுத்து விடுவதே என் வழக்கமாய் இருந்தது.

திருமணம் ஆன பின்னால் என் மனைவி கேட்டாள். ஏதாவது சேமிப்பு வச்சிருக்கீங்களா?   உதட்டைப் பிதுக்கினேன் அவளிடம்…..!!!!

                    ------------------------------------------------

 

 

06 அக்டோபர் 2022

தூண் (சிறுகதை) தினமணிகதிர் பிரசுரம்

 

                     தூண்  (சிறுகதை)         தினமணிகதிர் பிரசுரம்                  பிரகதீஸ்வரன் இறந்து விட்டதாக  அவர் பையன் சொல்லிப் போனான்.       எப்போ? என்று கேட்கும் முன் நகர்ந்து விட்டான். எப்பொழுதுமே ஓரிரு வார்த்தைகள் பேசக் கூடியவன்தான். அதையும் தலையைக் குனிந்து கொண்டு மெல்லிய குரலில்தான் வெளிப்படுத்துவான். என்ன? என்று நாம் திரும்பக் கேட்க வேண்டி வரும். அது போலேவேதான் இப்போதும். தோன்றுவதும் மறைவதும்...!

       நேற்றுக் கூட இந்த வாசல் வழியாகப் போனார் அவர். யாரிடமேனும் காசு கேட்கப் போய்க் கொண்டிருப்பார். அவரின செயல் அதுவாகத்தான் இருக்கும் என்று என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்.சில்லரை சில்லரையாக நானும் அவருக்கு எவ்வளவோ கொடுத்திருக்கிறேன். கணக்கு வைத்துக் கொண்டதில்லை. காரணம் திரும்பி வராது என்பதல்ல. தர வேண்டாம் என்பதே.  நீதித் துறையில் கணக்காளராக வேலை பார்த்து ஓய்வு பெற்றிருந்தார். வரும் பென்ஷன் போதுமானதாக இல்லை. மூன்று பெண்கள். இரண்டு பையன்கள். எதுவும் உருப்படியில்லை. எல்லாம் வீட்டில் ஒவ்வொரு தூணாக நின்று கொண்டிருந்தன. அதனால் பணத்தின் தேவை அவருக்கு இருந்துகொண்டேயிருந்தது. எப்பொழுது அதுகளுக்குக் கல்யாணம் பண்ணி, பேரன் பேத்தி எடுத்து. கண்ணால் பார்த்து, .பசங்கள் தேறி, வேலைக்குப் போயி...அவர்களுக்குக் கல்யாணம் பண்ணி....? நாமே உதட்டைப் பிதுக்குவோம். முழி பிதுங்கிக் கொண்டிருந்தது அவருக்கு. கணக்காளராய் வேலை பார்த்தவர் வாழ்க்கையைக் கணக்குப் பண்ணவில்லை .

       நான்கு மாடுகள் வேறு. அது பரம்பரைப் பழக்கமாம். விட முடியாது என்றார். அவைதான் எனக்குத் துணை என்று சொன்னதுதான் மிகுதியாக யோசிக்க வைத்தது.  எங்கிருந்து தீனி போட்டுப் பராமரிக்கிறார் என்பது கேள்விக்குறியாகவே இருக்கும். பல சமயங்களில் என் வீட்டு வாசலில் இருக்கும் முருங்கைக் கீரையைப் பறித்துக் கொண்டிருப்பார். என் வீடு,எதிர் வீடு என்று கொல்லைப்புறம் சென்று புற்களைப் பிடுங்கி சேகரித்துக் கொண்டு செல்வார். காய்கறித் துகள்கள் எதையும் குப்பைக்குப் போட்டு விட வேண்டாம் என்றும் ஒரு பையில் போட்டு வையுங்கள், வந்து வாங்கிக் கொள்கிறேன் என்றும் சொல்வார். பழகிய சில வீடுகளில் இப்படிச் சொல்லி வைத்து ரெகுலராக வாங்கிக் கொண்டுமிருந்தார். ஒவ்வொரு முறையும் கேட்டுக் கொண்டு வாசலில் நிற்க வேண்டாம் என்று அவர்களாகவே பையில் போட்டதைக் கட்டி எடுத்து வாசலில் வைத்து விடுகிறார்கள். அமைதியாய் வந்து எடுத்துக் கொண்டு போவது அவர் வேலையாயிருந்தது. வாடகை வீடுதான். சர்வீசில் இருந்த காலங்களில் ஒரு சொந்த வீடு கூடக் கட்டிக் கொள்ளவில்லை. ஐந்து பேரையும் கொஞ்சமாவது படிக்க வைக்க வேண்டுமே என்ற எண்ணம் இருந்திருக்கலாம். அதற்கே சரியாய்ப் போயிருக்கும் இவர் ஒருவரின் வருமானம். மூச்சு விடுவதே குடும்பத்திற்காகத்தான்.

       பக்கத்துக் காலி மனையில்தான் கொட்டகை போட்டிருப்பார். யார் ஓனர் என்று தெரியாது. கேள்வியுமில்லை.   அங்கே மாடுகள் கட்டப்பட்டிருக்கும். எப்பொழுது அந்தப் பக்கம் போனாலும் கொட்டடியைச் சுத்தம் செய்வதோ, சாணி அள்ளுவதோ, மாடுகளைக் குளிப்பாட்டுவதோ என்று ஏதேனும் செய்து கொண்டேயிருப்பார். வீட்டுக்குள் இருப்பதற்கு இதுவே மேல் என்பதுபோல் அந்த மாடுகளோடுதான் பொழுதைக் கழித்தார். அங்கேதான் குடியிருக்கிறார் என்றே சொல்லலாம். சில சமயங்களில் அங்கே ஒரு கயிற்றுக் கட்டிலைப் போட்டு பட்டப் பகலில் வாயைத் திறந்து கொண்டு ஆவென்று தூங்குவதைக் கண்டிருக்கிறேன். அது உடல் மீறிய அசதி. அந்தக் காட்சி மனதை மிகவும் சங்கடப்படுத்தும். மாடுகளைக் குளிப்பாட்டுகையில், ஒரு முறை ஒரு நீண்ட நாகம் வந்து சாணிக் கூடைக்குள் சுருண்டு கிடந்தது. பதற்றமே இல்லை. தெருக்காரர்கள் அடிக்கக் கிளம்பிய போது, எதுக்கு...அதுவே போயிடும் என்று சொல்லித் தடுத்து விட்டார். நான் அடிக்க மாட்டேன் என்று மறுத்துவிட்டார். அது இடத்துல நாம வந்து குடியிருக்கோம். அது வராம என்ன செய்யும்? என்று கேட்டார். நாம தொந்தரவு செய்யாதவரைக்கும் அதுவும் நம்மை ஏதும் செய்யாது என்றார்.

       இத்தனைக்கும் பக்கத்தில் ஒரு கண்மாய் இருக்கிறதுதான். அருகிலுள்ள ஒட்டுக் கிராமத்தில்  இருந்து மாடு வைத்திருப்பவர்கள் குளிப்பாட்ட தினமும் எங்கள் தெரு வழியாகத்தான் ஓட்டிக் கொண்டு போவார்கள். ஒன்று ரெண்டு என்று கிடையாது. நாலு அஞ்சு என்று படையாய்ப் போய்க் கொண்டிருக்கும். அந்தக் கண்மாயில் தண்ணீர் தேங்கி நிற்கும்வரையில்தான் எங்களுக்கு ஆழ்துளைக் கிணற்றில் தண்ணீர். அங்கு வற்றினால் இங்கும் கீழே போய்விடும்.

என்றுமே சாணிக்குப் பஞ்சம் வந்ததில்லை. அது என்ன கணக்கோ...கண்மாய்க்குச் செல்லும் மாடுகள் சரியாக எங்கள் வீட்டு வாசல் வரும்போதுதான் பொத்தென்று சாணி போடும். சாணி கலக்கி யார் இன்று வாசல் தெளிக்கிறார்கள்? என்று கேட்காதீர்கள். என்ன அப்படிச் சொல்லி விட்டீர்கள் என்று ஒரு கேள்வி வந்து விழும். மைதிலி இருக்கிறாளே? வீதியில் கேட்பாரின்றிக் கிடக்கும் அதை வீணாக்க அவளுக்கு மனசே வராது. ஆனால் அதை அள்ள வேண்டியவன் நானாயிற்றே? அதுபற்றி அவளுக்கு என்ன கவலை? எல்லாம் Do what I say...தான். அந்தத் தெரு முழுவதும் சாணி அள்ளியிருக்கிறேன் நான். என்ன சார்...எதுக்கு சார்...? என்று கேட்டவர்கள் இருக்கிறார்கள். சாணியின் உபயோகமே அறியாத தலைமுறை கடந்த சமூகம்.  சப்புச் சப்பென்று வட்டமாய்த் தட்டிக் கையில் லாவகமாய் எடுத்து சுவற்றை நோக்கி எறிந்தால், வரிசை மாறாமல் போய் பச்சென்று ஒட்டிக் கொள்ளுமே...அந்த எருவாட்டியை அறிவார்களா இவர்கள்?

சாணியை மாட்டின் கழிவு என்று நினைத்து அருவறுக்கும் தலைமுறை. அதை மருந்தாய் நாம் பார்த்தோம். இறைவனுக்கான ஓமகுண்டப் பூஜா வஸ்து. கடைசிக் காரியங்களுக்கு கண்யமாய்ப் பயன்படும் அதி முக்கியப் பொருள். அதை வைத்துத்தான் ஒரு முறை முகத்தைப் பார்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்லி கடைசி எருவை முகத்தின் மேல் வைப்பார்கள்.  எதைச் சொன்னாலும் பெரிதாய் எடுத்துக் கொள்ளாத இளைய தலைமுறை. காசு கொடுத்தாக் கிடைக்கப் போவுது அதானே...என்ன பெரிய்ய்ய.....? முடிஞ்சு போச்சு...!! காசால் உலகத்தையே வாங்க முடியும் அவர்களால்...!.

இதைச் சொல்லும்போது கிராமத்தில் தினசரி அக்ரஉறாரத்தையும், பிற தெருக்களையும் தவறாது சுற்றி வந்து கூடையில் சாணி பொறுக்கிப் போகும் செவ்வந்தி ஞாபகம் வருகிறது எனக்கு. அவள் மாட்டுக் கொட்டகையில் கிடைக்காத சாணியா, எருவா? அதுதான் அவள் பிழைப்பே எனும்போது அந்த மூலப் பொருள் எங்கு கிடைத்தாலும், வீணாகாமல் காப்பதுதானே முறை. அது அவளுக்கு வயிற்றுப் பாடு சம்பந்தப்பட்டது.

 பத்துப் பன்னெண்டு மாடுகளை வைத்து மேய்த்துக் கொண்டிருந்தாள் செவ்வந்தி. எந்நேரமும் மாட்டோடுதான் அவள் வாசம். அந்தப் பக்கம் போனாலே அந்த மாட்டுக் கொட்டகை வாடை நம் மூக்கைத் துளைக்கும். உள்ளே தலையைக் காட்டினால் ஏதேனும் மாடு சாணி போட்டுக் கொண்டிருக்கும்...ஏதேனும் ரெண்டு சொட சொடவென்று மூத்திரம் பெய்து கொண்டிருக்கும். கன்றுக் குட்டிகள் துள்ளித் துள்ளி உள்ளுக்குள்ளேயே அதகளம் பண்ணிக் கொண்டிருக்கும். ம்மா...ஆஆஆ.....ம்மா...ஆஆஆ என்று சத்தம் கேட்டுக் கொண்டேயிருக்கும். எல்லாவற்றையும் ஏய்...ஏய்...என்று சும்மா அதட்டிக் கொண்டே ஒரே ஒரு அறையும், திண்ணையும் அமைந்த ரொம்ப சுமாரான இடத்தில் நேர்த்தியாய் ஒரு பழைய பாயை விரித்து அமர்ந்து, சுவாரஸ்யமாய் வெற்றிலை போட்டுக் கொண்டிருப்பாள் செவ்வந்தி. அல்லது படுத்து உறங்கிக் கொண்டிருப்பாள். அவளுக்கு மாடுகள் காவலா அல்லது மாடுகளுக்கு அவள் காவலா? கொட்டகை வாசல் கதவு எந்நேரமும் திறந்துதானே கிடக்கிறது! என்ன பயம்...? நம்ம ஊரு...! எல்லாம் நம் சனம்...!

ரெண்டே ரெண்டு வெற்றிலை, பாக்கு, ரெண்டு பழம்...அத்தோடு ரெண்டு ரூபாய்...இதுதான் அவள் பிரசவக் கூலி. எல்லாம் ரெண்டு ரெண்டுதான் கணக்கு. எங்கள் வீட்டில் நாங்கள் அறுவரும் அவள் பிரசவம் பார்த்துத்தான் பிறந்தோம். சொல்லிவிட்டவுடன் ஓடோடி வந்து விடுவாள் செவ்வந்தி. தான் பெற்றெடுத்த பெண்ணுக்குப் பிரசவம் பார்ப்பதுபோல் கண்ணும் கருத்துமாய்ப் பார்ப்பாள். நாங்கள் அவள் கைகளில்தான் முதலில் தவழ்ந்தோம். குழந்தையைக் குளிப்பாட்டி தாயின் கையில் ஒப்புவித்து விட்டுக் கிளம்புவாள். அப்போது கண் மூடி தன் குலதெய்வத்தை வேண்டிக் கொள்வாள். அந்த மனமுவந்த வேண்டுதலுக்கு உலகத்தில் வேறு ஈடு இணையே இல்லை. எங்கள் பெரியம்மா செவ்வந்திதான். என் ராசா....இங்க வாடே...என்று அவள் தன் கைகளை விரித்து எங்களை வாரி அணைத்துக் கொஞ்சிய நாட்கள் எங்கள் நெஞ்சில் பதிந்த சுவடுகள். மனித்தப் பிறவிகள் தெய்வமாய் வலம் வந்த நாட்கள் அவை.

தினமும் காலையில் நடைப் பயிற்சிக்குக் கிளம்பி விடுவார் பிரகதீஸ்வரன். என் வீட்டு வழியாகத்தான் போவார். போகும்போது விட்டு விடுவேன். திரும்புகையில் கண்டிப்பாகக் கண்ணில் பட்டுவிடுவார். அந்த நேரம் தற்செயலாய் நான் அறையிலிருந்து வெளியே வருவதும், அவர் திரும்பிப் பார்ப்பதும் நிகழ்ந்து விடும். வாய்  திறந்து எதுவும் கேட்டதில்லை. ஆனால் பார்வை கேட்கும். அந்தப் புன்னகை அர்த்தப்படுத்தும். அதற்கு மேலும் கண்டு கொள்ளாமல் இருந்தால் அது தன்மை ஆகாது என்று தலையை ஆட்டி வாங்க...என்று சொல்லி விடுவேன். அந்த வார்த்தையை அவர் மனம் எதிர்பார்க்கும்.

ரொம்பவும் உரிமை எடுத்துக் கொண்டு அவராகவே உள்ளே நுழைந்து விடுபவர் அல்ல. அதுதானே கௌரவமும் கூட. ஆனாலும் என்னைப் பொறுத்தவரை அவர் தயங்க வேண்டியதில்லை என்பது என் எண்ணம். மைதிலிக்காக ஏதேனும் ஒரு தயக்கம் அவர் மனதில் இருக்குமோ என்னவோ?. எனக்குமே அந்தத் தயக்கம் உண்டுதான்.

பல சமயங்களில் பேசத் தெரியாமல் பேசி விடுவாள். ஒன்றைச் சொல்வதற்கு முன் ஒரு நிமிஷம் சொல்லப்போறதை நினைச்சுப் பாரு...சொல்லலாமா வேண்டாமான்னு அப்பத் தோணும்...அப்டி கட் ஷார்ட் பண்ணினா நிறைய மனத் தாங்கல்களைத் தவிர்க்கலாம் என்று எத்தனையோ முறை அவளிடம்  சொல்லியிருக்கிறேன். காதில் வாங்கினால்தானே?

ஆமாம்...ரொம்ப அனுபவப்பட்ட மாதிரிதான்...என்று மோவாயில் இடித்துக் கொள்வாள். நீயும் சராசரிதான் என்று சொல்லிவிட்டால் கோபம் பொத்துக் கொண்டு வந்து விடும். பேப்பரை தினசரி வரி விடாமப் படிச்சிட்டா எல்லாம் தெரிஞ்சவன்னு அர்த்தமாயிடுமா? உலக அனுபவம்ங்கிறது வேறே...மனிதர்களைப் படிக்கிறதுங்கிறது ஒரு தனி பயிற்சியாக்கும் என்பேன். நீங்க படிச்சிருக்கேளோல்லியோ...அது போறும்...என்று அப்போதும் கிண்டலடிப்பாள்.

சிலரை சிலவற்றில், சிலவற்றால் எப்போதும்  எக்காலத்தும் மாற்றவே முடியாது. சாகும்வரை அப்படியேதான் இருப்பார்கள். அதைத்தான் காரெக்டர் என்கிறார்கள்..

மிஞ்சிப் போனால் ஒரு வாய் காப்பி சாப்பிடுவார். உங்காத்துக் காப்பி ரொம்ப நன்னாயிருக்கும்...என்று தன்னை மறந்து சொல்லியிருக்கிறார். வீட்டுக்குள் வந்து விட்டால் அந்த எண்ணம் முட்டத்தானே செய்யும்? அன்று மைதிலிக்காக எனது செகன்ட் காஃபியைக் கட் பண்ணிக் கொள்வேன்.

இப்டி ஆளாளுக்கு போட்டு நீட்டிண்டிருந்தா உறை குத்தறதுக்குப் பால் வேண்டாமா? என்று ஒரு முறை சொல்லியிருக்கிறாள். அவ ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி...!

நீங்க...! என்று கேட்டுக் கொண்டே காப்பியை ருசிப்பார். எனக்கு வராது என்று அவருக்குத் தெரியும். கண்டு கொள்ள மாட்டார். அது அவா பிரச்னை....!

மனுஷன் சாகும்வரை இந்த நாக்கு ருசி போகாது. உப்பு, புளிப்பு, இனிப்பு, காரம்- கூடுதல் குறைச்சல் இவைகளைத் துல்லியமாய்க் கண்டு பிடித்து விடும். தின்னு தின்னு தீர்க்கிறார்கள் மனிதர்கள். வாழ்நாள் பூராவும் ஒரு மனிதன் சாப்பிட்டது மொத்தம் எவ்வளவு இருக்கும்? என்று அகலக் கையை விரித்து  மலைபோல் காண்பிப்பேன். எழுபது எண்பது வயதுவரை தின்ன வேண்டுமே...! உலகமே ஒரு உணவுக் கூடம். எங்கு பார்த்தாலும் உணவு தயாராகிக் கொண்டேயிருக்கிறது. இராப் பகலாய். வித விதமான உணவுகள். மனிதர்கள் அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமாய் நிறைந்து ஆளாளுக்கு, மாறி மாறி  வேண்டும் அளவுக்குச் சாப்பிட்டுக் கொண்டேயிருக்கிறார்கள். அப்போதைக்கு திருப்தி கொள்கிறார்கள்.  அவ்வளவே...! போதும் என்று சொல்லக் கூடிய ஒன்று உணவு மட்டும்தான். வேறு எதையும் இந்த உலகில் மனிதர்கள் போதும் என்றே சொல்வதில்லை.

ஒரு அக்கௌன்டண்ட் போன்றே இருக்க மாட்டார். ரிடையர்ட் ஆயாச்சு...அப்புறம் என்ன வேண்டிக்கிடக்கு? என்பதே அவர் சித்தாந்தம். சர்வீஸ்ல இருந்த காலத்துலயே அதுக்குப் பொருந்தாமத்தான் நான் உட்கார்ந்திருந்தேன்...வயித்துப் பாட்டுக்காக..! இப்பயும் அப்டியே விறைப்பா இருன்னா எவனால முடியும்...என்பார். பென்ஷனர்னா ரிடையர்ட் ஆன ஆபீசரும், பியூனும், ஏன் வாட்ச்மேனுமே ஒண்ணுதான்...இதிலே மேலென்ன கீழென்ன....? அம்புட்டுப் பேரும் ஓய்வூதியதாரர்தானே? பியூனுக்கும் பென்ஷன் எனக்கும் பென்ஷனா? ன்னு எவனாச்சும் கௌரவமா முறுக்கிக்க முடியுமா? எனக்குக் கொடுக்கிற பென்ஷனுக்கு வேறே பெயர் வையுங்க என்று கேட்க முடியுமா?  எங்க வேண்டாம்னு சொல்லச் சொல்லு பார்ப்போம் யாரையாச்சும்...!..சர்வீஸ்ல இருக்கிற போது என்னா ஆட்டம் ஆடுறாங்க...? இப்பச் சொல்லட்டுமே...? என்று தன் எளிமைக்கு விரிவான விளக்கம் கொடுப்பார்.

.பஸ்-ஸ்டான்டில் உள்ள டீக்கடையில் அவரைப் பார்க்கலாம். ஓரமாய் இருக்கும் குத்துக்கல்லில் அமர்ந்திருப்பார். அது அவருக்கென்றே அமைந்த கல். அதில் வேறு யாரும் உட்கார்ந்து நான் பார்த்ததில்லை. யாராச்சும் டீ வாங்கித் தர மாட்டார்களா? என்பது போன்று இருக்கும் அவர் பார்வை.  காலையும் மாலையும் பேப்பர் படித்தாக வேண்டுமே...! ஓசில பேப்பர் மட்டும் படிக்க வந்திடுறாரு அய்யரு....ஒரு நாளைக்காச்சும் துட்டு கொடுத்து டீ வாங்கி சாப்டிருக்காரா...? சிலர் சொல்வதுண்டுதான். அதெல்லாம் அவர் காதில் விழுந்திருக்கலாம். விழாமலும் போயிருக்கலாம். ஆனால் யாரேனும் அவருக்கு டீ வாங்கிக் கொடுத்து விடுவார்கள். அது அவர் அதிர்ஷ்டம். அவ்வளவு நேரம் அவர் படிக்கும் படிப்பைப் பார்த்தால் கடைக்காரனுக்கே இரக்கம் மேலிட்டு, இந்தாங்க...எம்புட்டு நேரம் வறட்டு வறட்டுன்னு இந்தப் பாழாப்போன பேப்பரப் படிப்பீங்க. நீங்க படிச்சு முடிக்கிறதுக்குள்ள ஆயிரம் விஷயம் மாறிப் போயிடும்...பிடிங்க...தொண்டையை நனைச்சிக்கிங்க....என்று ஒரு கிளாஸ் தேநீரை நீட்டி அவரை ஆற்றி விட்டாலும் போச்சு...! அதெல்லாம் மனுசனோட ராசி....! பிரகதீஸ்வரனைத் தெரியாத ஆள் கிடையாது அந்த வட்டாரத்தில். சாமீ...! என்று குரல் கொடுத்துக்கொண்டே ஆட்கள் நகர்ந்து கொண்டேயிருக்கும். இன்னும் அந்தப் பழமை மாறாத தன்மைதான் அந்த மக்களின் பெருமை...!

வீட்டில் இருந்தால் தாங்க முடியாத பிக்கல் பிடுங்கல்...அதற்கு வெளியே மேல்..(நானும் மேல்...நீயும் மேல்...!) ..நாலு மனுஷாளைப் பார்த்த திருப்தியாவது மிஞ்சும்....என்றுதான் மனுஷன் டேக்கா கொடுத்து விடுகிறாரோ என்று தோன்றும்.மாடுகளுக்கு வேண்டியவைகளை எல்லாம் செய்து விட்டுத்தான் புறப்படுவார். அவைபாட்டுக்கு அசைபோட்டுக் கொண்டு படுத்திருக்கும். வீட்டுக்குள் இருந்து எட்டிக்கூடப் பார்க்க மாட்டார்கள். அவர் பசங்கள் ஒரு நாளும் அந்த மாடுகளுக்குப் பக்கத்தில் நின்று நான் பார்த்ததில்லை. அந்த மாமி சாணி எடுக்க மட்டும் தலையைக் காட்டுவார்கள். மாடுகள் இருக்கும் வீட்டில் வீட்டுப் பெண்மணிகள் தங்கள் பசுக்களை அக்கறையாய்ப் பராமரிப்பதையும், தெய்வமாய் வணங்குவதையும், தீனி வைப்பதையும், மாட்டுக் கொட்டகையைச் சுத்தம் செய்ய வைத்து கார்வார் பண்ணுவதையும் பார்த்திருக்கலாம். அப்படியான எந்த அடையாளமும் பிரகதீஸ்வரனின் மனைவியிடம் பார்த்ததில்லை.

உடம்பு முடியாதவராகவே அவர் மனைவியை நினைக்கத் தோன்றும். அதுபோல் முகமலர்ந்து பேசியும் காண முடியாது. என்றாவது வீட்டுக்குள் தலை நுழைக்கும் சமயம் வாய்த்தால், உறாலின் இருட்டான பகுதியில் உட்கார்ந்திருப்பது தெரியும். நிழலாய்த்தான் தோன்றுவார்கள். அந்தப் பெண்களும் ஆளுக்கொரு மூலையில் தென்படுவார்கள். ஏனிப்படி வீடு சூமடைந்து கிடக்கிறது என்ற எண்ணம் வரும். ஒரு சுமுக நிலையிருந்து என்றும் அவர் வீட்டைக் காண முடிந்ததில்லை. இயல்பான இருப்பே அப்படித்தானோ என்று நினைக்க வேண்டி வரும். ஒருவருக்கொருவர் பேசப் பிடிக்காமல் உம்மணாம்மூஞ்சியாய் இருந்து கழிக்கிறார்களோ?

எங்கள் பகுதி குட்டி பஸ்-ஸ்டான்டில்  புதிதாகத் தனியார் பால் டெப்போ ஒன்று வந்திருந்தது. அதில் எப்படி இடம் பிடித்தாரோ தெரியாது. அங்கு உட்கார்ந்து பால் விற்க ஆரம்பித்திருந்தார் பிரகதீஸ்வரன். அந்தக் கடைப் பையன் அவரை வைத்து விட்டு அங்கே இங்கே என்று வெளியே பால் போடப் போய் விடுவான். ஏஜென்ஸி எடுத்திருந்தவனுக்கு இப்படி ஒருத்தர் உபகாரமாய் அமைவார் என்று எதிர்பார்த்திருக்கவே மாட்டான். அவனுக்குப் பல ஜோலி. இவரை உபயோகப்படுத்தி, தன் வியாபாரத்தின் கிளைகளை விரித்துக் கொண்டிருந்தான் அவன். ஒரு வேளை அதிலேயே அவர் திருப்தியடைந்தாரோ என்னவோ...! தன் பசங்களின் உபயோகமின்மை குறித்த தாக்கம் இருக்கலாம். பொறுப்பாய் செயல்படுபவனைக் கண்ட திருப்தி.

மூணு பாக்கெட்டுக்கு மேலதான் பை கொடுக்க முடியும். ஒரு பாக்கெட்டுக்கெல்லாம் கிடையாது...என்று யாரிடமோ சொல்லிக் கொண்டிருந்தார். அப்படிச் சொல்லி சொல்லி நிறையப் பைகளை மிச்சம் பண்ணிக் கொடுத்திருந்தார் கடைக்கு. அதுபோல் கரெக்டாகச் சில்லரை கொண்டு வரணும்...என்றும் கண்டிஷன் போட்டிருந்தார். கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் அவருக்கு ஒத்துழைத்தார்கள் என்றே சொல்ல வேண்டும். எந்த அளவுடைய பால் பாக்கெட் அதிகமாகப் போகிறது என்று கணித்து அதை எண்ணிக்கையைக் கூட்டி இறக்குமதி செய்ய வைத்தார். மற்றதை அதனதன் அளவுப்படி குறைத்தார். பையனும் அவரிஷ்டப்படி விட்டு விட்டதாகத்தான் தோன்றியது. மதிய இடைவேளை உண்டு...அதைக் கூட அந்தப் பையனின் முன்னேற்றத்திற்காகத் தத்தம் செய்திருந்தார் பிரகதீஸ்வரன். உழைப்பே உயர்வு என்று போட்டு,  பக்கத்தில் கடன் இல்லை என்றும் சுவற்றில் எழுதி வைத்தார்.

டிபன் பாக்ஸில் கொண்டு வந்து அங்கேயே சாப்பிட்டுக் கொண்டார். அந்த நேரம் ஷட்டரைப் பாதி இறக்கி விட்டிருப்பார்.  உட்காருவதும் தெரியாது....கை கழுவுவதும் தெரியாது.....அப்டிங்கிறதுக்குள் அள்ளிப் போட்டுக் கொண்டு எழுந்து விடுவார். வெறும் தயிர் சாதம்தான். ஒரு பச்ச மிளகாய். மதியத்திற்கு மேல் மறுநாளுக்கான தேதி போட்டு பால் டப்புகள் வந்து இறங்க ஆரம்பிக்கும். அத்தனையையும் பொறுமையாய் வாங்கி  எண்ணி, ஒழுகும் பாக்கெட்டுகளைத் திருப்பி, பதிலுக்கு வேறு வாங்கி கணக்கைத் துல்லியமாய் வைத்து விடுவார். அந்தப் பையன் வந்ததும் இந்தா பிடி என ஒப்புவித்துவிட்டு வீடு திரும்புவார். போகும்போது ஒரு பால் பாக்கெட் எப்போதும் அவர் கையில் இருக்கும். அது ஓசியோ பாஸியோ தெரியாது. அது விலையில்லா பால்...!

சும்மாத் தருவானா..நல்லாத் தந்தானே....! .துட்டு சார்...துட்டு....-என்று  யாரிடமோ வீச்சும் விறைப்புமாய்ச் சொல்லிக் கொண்டிருந்தார். எதுவானால் நமக்கென்ன? என்று நினைப்பதற்குள் பிரகதீஸ்வரனின் பிழைப்பு மாறிப் போயிருந்தது.

இந்த மனுஷன் எதுக்கு இப்டி நாயா பேயா அலையறார்? ஒரு எடத்துல அமுந்து இருக்க மாட்டார் போல்ருக்கே? என்று நினைத்தேன் நான். மாடுகளைக் கவனிப்பது குறைஞ்சு போச்சா? என்றும் தோன்றியது. வீட்டு வரி கட்டுவதற்கு பஞ்சாயத்து ஆபீஸ் போயிருந்தபோது அங்கே இவரைக் கண்டேன். கையில் ஏதோ பில்டிங் வரைபடத்தை வைத்துக் கொண்டு அலைந்து கொண்டிருந்தார். கூடவே ஒருவர் இருந்தார். தவறு தவறு...அவர் கூடத்தான் இவர் இருந்தார். அதுதான் சரி. என்னென்ன நடைமுறைகள் என்பதைத் துல்லியமாய்த் தெரிந்து கொண்டு விட வேணும் என்கிற துடிப்பில் இருந்தது போலிருந்தது அவரது சுறுசுறுப்பு. கேட்பவர்களுக்கு விளக்கிச் சொன்னவர் இவர்தான். அதற்காகத்தான் அவர் இவரை வைத்துக் கொண்டிருக்கிறார் என்பது தெரிந்தது.

ஆர்வ மிகுதியில், என்ன சார் இந்தப் பக்கம்? என்றபோது....சொல்றேன்...சொல்றேன்...என்று கையமர்த்தினார். சாருக்கு ப்ளாட் எதுவும் வேணுமான்னு கேளுங்க சாமி....ஆளுகளப் பிடிங்க...என்றார் அந்த இன்னொருவர்.

அவரு சொந்த வீடு கட்டில்ல நம்ம ஏரியாவுல குடியிருக்காரு....அவருக்கு எதுக்கு...? என்றார் இவர்.

அவருக்கில்லாட்டி என்ன...அண்ணன் தங்கச்சி யாருக்காச்சும் வாங்கிக் கொடுப்பாருல்ல....கேட்டாத்தான தெரியும்...விடப்படாது....யார்ட்ட என்ன யோசனை இருக்கும்னு நமக்குத் தெரியாதுல்ல....கேன்வாஸ்ங்கிறது பிறகு எப்டி? என்று அவர் சொல்லவும்....சாயங்காலமா வீட்டுக்கு வர்றேன். என்றார் பிரகதீஸ்வரன். அது அவரின் வாயை அடைப்பதற்காக என்று புரிந்தது எனக்கு.

சொல்லப்போனால் ஏதேனும் இடம் வாங்கும் யோசனையில்தான் நானும் இருந்தேன். தங்கச்சி மாப்பிள்ளை வேறு எனக்கும் வேணும் என்று சொல்லியிருந்தார். நான் குடியிருக்கும் பகுதியில் இப்போதெல்லாம் வாங்க முடியாது. விலை தாறுமாறாய் ஏறியாகி விட்டது. பக்கத்தில் கலை நகர் என்று ஒரு பகுதி உருவாகிக் கொண்டிருந்தது. விறு விறு என்று அங்கு ப்ளாட்டுகள் விற்றுத் தீர்ந்து கொண்டிருந்தன. அந்தப் பகுதியில்தான் இவர்களும் ப்ளாட்டுகளை விற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்றும் அதற்குத்தான் பிளானை வைத்துக் கொண்டு அலைகிறார்கள் என்றும் பிறகுதான் தெரிய வந்தது.

நானாய்ப் போய்ப் பார்த்தபோது  சீட்டுக் கட்டுபோல் வெறும் மூணு மூணு சென்ட்களாகத்தான் இருந்தன. வெறுமே வாங்கிப்போட்டு நாளை விலை ஏறிய பின்னால் விற்கத்தான் உதவும் அது. வீடு கட்டுவதென்றால் சுற்றிலும் செடி கொடி மரங்களுக்கு இடம் விட்டு, முன் பக்கம் கார் பார்க்கிங் இடம் செய்து, கொஞ்சம் பார்வையாய்க் கட்ட வேண்டும் என்கிற எண்ணமிருந்தது என்னிடம். இந்த வீட்டில் செய்யாது விட்டவற்றை, நிறைவேறாத கனவுகளை, புதிய வீட்டில் பூர்த்தி செய்து கொள்ள வேண்டும் என்ற ஆசையிருந்தது. யாருமே தான் நினைத்தபடிக்கு, தன் ஆசைக்கு  வீடு கட்டியிருக்க முடியாதுதான். எப்படியும் கட்ட ஆரம்பித்த பின்பு சில மாற்றங்கள் வந்து போகும். பில்டரோடு சண்டை போட முடியாது. வேலை நின்று போகும். மனத் தாங்கல் வந்து விடும். அது என் கனவு வீட்டில் நிகழக் கூடாது என்பதில் தீர்மானமாய் இருந்தேன்.

நாம் ஒன்று நினைக்கிறோம். தெய்வம் ஒன்று நினைக்கிறது. எடம் கிடைக்காது உங்களுக்கு. முதல்ல இடத்தைக் கேட்ச் பண்ணப் பாருங்க...அப்புறம் இந்தச் சுற்று வட்டாரத்துல எங்கயுமே இன்னை தேதிக்கு ப்ளாட் கிடையாதாக்கும் என்று நெருக்கினார் பிரகதீஸ்வரன். அந்த முயற்சியின்போதுதான் மைதிலி அவரோடு கொஞ்சம் பேச ஆரம்பித்தாள்.

மும்மூணு சென்ட் டோக் டோக்கா இருக்கு...நமக்கு ஏத்தாப்ல....அஞ்சரை சென்டா தேடினா பைசாவுக்கு எங்க போறது? என்னாலெல்லாம் லோன் போட முடியாது....இருக்கிற சேவிங்ஸ்ல வாங்கப் பாருங்கோ...பாங்க்ல டெபாசிட்டுக்கு வட்டி கம்மியாப் போச்சு. அதுக்கு இடத்தையாச்சும் வாங்கிப் போடலாம். இன்னும் எத்தனை வீடு கட்டியாகணும்? இந்த ஒண்ணு போறாதா? நம்மகிட்டே இருக்கிற சேமிப்புக்கு மூணு சென்ட்தான் சரி வரும். அகலக்கால் வச்சு எதிலயாச்சும் மாட்டிக்காதீங்கோ... உங்க தங்கை மாப்பிள்ளையும் அப்டித்தான் விரும்புவார். வேணும்னா பாருங்கோ...சரின்னு சொல்றாரா இல்லையான்னு.....! என்று பொழிந்து தள்ளினாள். என் வார்த்தையை மீறினா அப்புறம் நான் நானில்லை....அதுதான்...!

அதற்கு மேல் அப்பீல் ஏது? பிரகதீஸ்வரனும், அவரது ஏஜென்டும் வந்து நிற்க ஆரம்பித்து விட்டார்கள். சத்தமில்லாமல் செய்ய வேண்டும் என்று நினைத்திருந்த காரியத்தை ஊரைக் கூட்டித் தேர் இழுத்தாற்போல் ஆக்கியாச்சு. என்ன விஷயம் சார்...? என்று எதிர்வீட்டு சாம்பசிவம் வேறு முகத்தை நீட்டினார். விஷயம் அவருக்கும் தெரியவர, உடனே கிளம்பிப் போனவர் அவர்தான். போய்விட்டு வந்து, அதென்ன சார்...ரோட்டுலேர்ந்து உள்ளே போய்க்கிட்டேயிருக்கு...!  ரெண்டு மூணு பர்லாங் போகுது சார்..டூ வீலர் இல்லாமப் போறது வர்றது ஆகாது....எனக்குத்தான் வண்டியே ஓட்டத் தெரியாதே...! பஸ்லேர்ந்து இறங்கி எம்புட்டுத் தூரம் நடக்குறது? நமக்காகாது......ஆனா ஒண்ணு பின் பக்கமா மெயின்ரோடு  வந்தீங்கன்னா அப்டியே நம்ம வீட்டுக்கு வந்திடலாம். அது ஒண்ணுதான் இன்னைக்குத் தேதிக்கு வசதி என்றார்.

தங்கை மாப்பிள்ளை வந்தார்...போய்ப்  பார்த்தார்...சரி என்று ஒப்புக் கொடுத்து விட்டார். எதிரெதிர் ப்ளாட்டுகள் மூன்று சென்டுகளாக அமைந்தன. வாங்கிப் பணம் கொடுத்து பத்திரம் பதிந்து எல்லாம் ஆயிற்று. அதை மைதிலி பேருக்குத்தான் நான் பதிந்தேன். அதில் அவளுக்கு ரொம்ப மகிழ்ச்சி. ஒரு இடத்தின் அதிபதி அவள்.

மனிதனுக்குத் தேவை ஆறடி. இந்த மண்ணிலிருந்து எடுத்ததெல்லாம் இந்த மண்ணுக்கே...இன்று உனது நாளை வேறொருவருடையது. நாளை மறுநாள் இன்னொருவருடையது.....மனதுக்குள்  இந்த நினைப்பு வந்தவனுக்கு எதுவுமே பெரிசில்லை..

தோ பிரகதீஸ்வரன் போய் விட்டார். நாளை என்பது நமக்கு ஏது? இன்றிருப்பார் நாளையில்லை. நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும் பெருமையுடைத்து இவ்வுலகு....! தலைமாட்டில் தீபம் எரிந்து கொண்டிருந்தது. நிச்சலனமாய் இருந்தது அவர் முகம். தப்பித்து விட்டேன் பார்த்தீர்களா? என்று கண்களை மூடிக் கொண்டிருக்கிறாரோ? சுற்றிலும் மூன்று பெண்கள் மூலைக்கு ஒருவராய்.   அருகிலே சோகமே உருவாய் அவரின் இரண்டு மகன்கள். இனி அந்தக் குடும்பம் எப்படி நிமிரப் போகிறது? –

மூத்த பையனை வெளியே அழைத்து வந்து அவன் கையில் அந்தப் பணத்தை திணித்தேன். இது உங்க அப்பாவுக்கு நான் கொடுக்க வேண்டிய கமிஷன் தொகை. ரெண்டு ப்ளாட் வாங்கினதுக்கு.தெரிஞ்சிதா?  அதோட ஒரு மூவாயிரம் சேர்த்து வச்சிருக்கேன்....கடைசிக் காரியங்களைச் சுருக்கமா முடிக்கப் பார்...பெரிய எடுப்பு வேண்டாம்...தெரிஞ்சிதா?  நான் ஒருத்தரைச் சொல்லி வரச் சொல்றேன்...அவர் கொஞ்சமாத்தான் கேட்பார். குறைச்சு முடிச்சுக் கொடுப்பார்....சரியா?

சரி என்று தலையாட்டியது போல்தான் இருந்தது. அதுநாள் வரை நான் அவர்களோடு  அதிகம் பேசியதில்லை. ஆதலால் அவர்களின் போக்கு எப்படி என்பதையும் அறிவதற்கில்லை. ஆனாலும் கடைசிக் காரியங்களுக்கு காசு பஞ்சாய்ப் பறக்கும். அதனால்தான் எச்சரித்தேன்.

வெளியே வந்தேன். துக்க வீட்டில் சொல்லிக் கொள்ளக் கூடாது. செருப்பை மாட்டிக் கொண்டு சாலையில் இறங்கியபோது, மாட்டுக் கொட்டகையில் இருந்த பசுக்கள் மிகுந்த சோர்வாய்த் தென்பட்டன என் கண்களுக்கு. அடங்கிப் படுத்திருந்தன. மனிதர்களை விட அவை மிகுந்த வாஞ்சை மிக்கவை என்று தோன்றியது..

வீட்டுக்கு வந்தபோது மைதிலி கேட்டாள்......எப்போ எடுக்கப் போறாளாம்....?

அவரோட ப்ரதர்ஸ் ரெண்டு பேர் பெங்களூர்ல....அவா வந்தாகணுமே...! மத்தியானம் ரெண்டுக்கு மேலே ஆயிடும்....

பாவந்தான் ஆனாலும்...திடீர்னு இப்டிப் போயிட்டாரே...! அந்தக் குடும்பம் என்ன செய்யும் இனிமே? கலங்கித்தான் நின்றாள் மைதிலி. அவளைப் பார்த்து எனக்கும் மனசு ஆடிப் போனது.

 அந்தக் கமிஷன் தொகையைக் குடுத்தாச்சுதானே?  அவங்க துட்டு நமக்கெதுக்கு? கேட்காட்டாலும் கொடுத்துடுறதுதானே நியாயம்...!  என்றவள்...சற்று நிறுத்தி என்னைத் தீர்க்கமாய்ப் பார்த்துக் கேட்டாள்.

கொஞ்சம் சேர்த்தே கொடுக்கலாம் .இந்த நேரத்துலே..என்னண்ணா...நான் சொல்றது...? என்றாள். கல்மிஷமில்லாத அவள் மனசை அந்தக் கணம் துல்லியமாய் உணர்ந்தேன்.

கொடுத்தாச்சு....! என்றேன் நிதானமாக...!

                                        ---------------------------------