10 நவம்பர் 2021

 

கல்குருத்து –ஜெயமோகன் சிறுகதை   உஷாதீபன் வாசிப்பனுபவம்


 https://www.jeyamohan.in/153505/ 16.11.2021 ஜெயமோகன் தளத்தில்.....


தேடிப் படிப்பவையெல்லாம் ஏற்கனவே படித்த மாதிரியும், ஒரே மாதிரியும், அலுத்துப் போன எழுத்தாகவும் இருப்பதாகத் தோன்ற, “வண்டியக் கட்டிக்கிட்டு மைலாடி போனா அம்மியும் குழவியுமா வாங்கிப் போட்டு அந்தாலே கொண்டு வரலாம்...”  என்று அழகம்மை சொல்வதைக் கேட்டு கூடவே கிளம்பி விடலாம் என்று சட்டென்று மனது தயாராகிவிட்டது.

வரிசையான பற்களோடு அழகாகச் சிரிக்கும் காளியம்மையைக் கண்டு மனசு சந்தோஷம் கொண்டது. அது எப்படித்தான் அந்த சனங்களுக்கு அமையுமோ....? ஒரு இண்டு இடுக்கு இல்லாமல் பளீரென்று கொள்ளை போகும் அந்தப் பல் வரிசை அந்த முகத்திற்குத்தான் எத்தனை சோபையைக் கொடுக்கிறது? பெரும் பணக்காரனுக்கும், தீராத சொத்து பத்து உள்ள கோமகன், கோமகளுக்கும் அமையாத பாக்கியம் அது.

அந்த மக்களின் பேச்சு மொழி ஆரம்பத்திலேயே உள்ளுக்குள் இழுத்துக் கொள்கிறதே...!

”அம்மிணியே ...அது சந்தைக்குப் போயி பசுவையும் குட்டியையும் வாங்கிட்டு வாறது மாதிரியாக்கும். இது நம்ம வீட்டிலே பிறந்த கன்னுக்குட்டி  கொம்பும் குலையுமா  பசுவா மாறி வயறு தெறண்டு ஈனுகது மாதிரியல்லா...?

அம்மிணி...என்ற அந்த வார்த்தை எத்தனை சிலிர்ப்பை ஏற்படுத்துகிறது நமக்குள். பெண்களைத் தாயாக, தெய்வமாக மதிக்கும் சமூகம் அவர்கள் சார்ந்து இப்படி எத்தனை எத்தனை துதிகளை உள்ளடக்கியிருக்கிறது?

அதுவாக உருக்கொண்டிருக்கும் ஒரு அமைப்பை, இயற்கையை அப்படியே படிமமாக விவரிப்பதற்கும் பொருத்தமான வார்த்தைகள் வேணும்தானே?

“அவர்களின் தோட்டமே சரிந்து எங்கோ செல்வது போலிருந்தது. அங்கே எல்லாத் தோட்டங்களும் ஆற்றை நோக்கிச் சரிவன... – கண் முன்னால் அந்தக் காட்சியை நாம் கற்பனை செய்து கொள்கையில் அந்த இடத்தைக் காண வேண்டும்...தரிசிக்க வேண்டும் என்கிற ஆவல் உந்துகிறது.

இயற்கையை வணங்கும் மனிதர்கள். அவற்றைத் தெய்வமாகப் பார்க்கும் மக்கள். அகன்ற வானத்தை நோக்கிக் கும்பிடும் கைகள். ஐந்தாறு பறவைகள் கூடிப் பறந்து செல்கையில் கடவுளை அங்கே கண்டேன் என்று கையெடுத்துக் கும்பிட்டாரே பரமஉறம்சர்...! விடிகாலையில் மண்ணிலிருந்து வெளிப்பட்டு இந்த உலகைப் பார்க்கும் ஆவலில் துளிர்த்துப் பளபளக்கும் தளிரில் ஆண்டவனைக் காண முடியுமே...!

“தலையிலே மொட்டைப்பாறையை சுமந்துட்டு பச்சைச் சேலை கெட்டி தலையிலே தயிருபானை வைச்ச இடைச்சியம்மையாக்கும் மலை...“

அவள் அந்தக்கல்லை அம்மியாகப் பார்க்க முயன்றாள். கொஞ்சம் கண்ணு நிறுத்திப் பார்த்தாத் தெரியும்...! கல்லாசாரி தாணுலிங்கத்திற்குத் தெரிகிறது.    கலைஞனுக்கு அந்தக் கல்லில் என்னவெல்லாம் இருக்கிறது என்று உடனே தெரிந்து விடுமே...! கல்லிலே கலை வண்ணம் காணுவதும் கடவுளைக் காணுவதும் கலைஞனின், காண்பவனின் மனம் சார்ந்த விஷயம். அது அவன் ரசனை! உயிர்ப்பு...! உண்டென்றால் அது உண்டு...இல்லையென்றால் அது இல்லை...!

வயிற்றுக்குள் இருக்கும் குழவி, பூமிக்கு வர இருப்பதைச் சுட்டி, எல்லாக் கலைக்கும் உண்டு அதுக்கான சோசியம்....எங்க சோசியம் கல்லுலே....- இயற்கையோடு இயைந்த வாழ்வு. அந்த மக்கள் அறிந்து வைத்திருக்கும் விஷய ஞானம், உலகத்தைப் படித்த விழுமியங்களை உள்ளடக்கியது.

செய்யும் தொழிலே தெய்வம்தான். ஆனாலும் அந்தத் தொழில் விளங்க அடியெடுத்துக் கொடுப்பவன் இறைவன். “அம்மிணி...ஒரு மூணு வெத்திலை, ஒரு பாக்கு, ஒரணா துட்டு, ஒரு துண்டு கருப்பட்டி கொண்டு வாங்க...“ – இருக்கும் அவரவர் வசதி வாய்ப்பிற்கேற்ப எங்கும் எதிலும் எந்த அளவிலேனும் கருத்தில் அறியும் அந்தச் சக்தியை வணங்க முடியும்...! நம்பினாற் கெடுவதில்லை...! அதுதானே நான்கு மறைத் தீர்ப்பு...!!

அழகம்மை ஏன் அப்படிச் சிலிர்க்கிறாள்? தாணுலிங்கத்தின் கண்ணும் மனசும் அந்தக் கல்லை வெறும் மலையாகவா பார்க்கிறது? தெய்வம் உள்ளடங்கிய தோற்றம். காலமறியாது அதனுள் பொதிந்திருக்கும் இறைச் சக்தி. பக்தியோடு நோக்குபவனுக்குப் பார்க்கும் இடமெல்லாம் அந்தப் பரம்பொருள் கண்ணுக்குத் தெரியும்தானே? இயற்கை நம்மின் தெய்வ சக்தி...கல்லுக்குள் தெய்வம்...அதை ரூபங்களாக மாற்ற யத்தனிக்கையில்...அதை மண்டியிட்டு வணங்குதல் முறைதானே...!

வயசான சீவனுக்கு ஒரு சுக்கு வெள்ளம் கொடுக்க ஆளில்லையா? –கோபத்தில் அவன் கையை ஓங்கி விட்டான். ஆனால் அந்தக் கண்களைச் சந்திக்க முடியாமல்  ஏன் மனசும் உடம்பும் தணிந்து போனது. பெண்கள் தெய்வம். பெண்மை தெய்வம். சுற்றியுள்ளவற்றைக் காக்கும் காவல் தெய்வம். வளம் சேர்க்கும் இறைத்தன்மை.

அரைத்து அரைத்துத் தேய்ந்து படகு போல வடிவம் கொண்டுவிட்ட அம்மியில் சுக்கை வைத்து அடித்து உடைத்து அம்மிப் பரப்பில் வழுக்கி வழுக்கி அரைத்துப் பார்த்தால்தானே தெரியும்...? பொறுமை காக்கும் வீட்டுத் தெய்வங்களுக்கு சலித்துக் கொள்ளக் கூட உரிமையில்லையா என்ன? வேளா வேளைக்கு செய்து போடும் கைகளை எடுத்துக் கும்பிடாவிடினும் ஏசாமல் இருக்கலாமே...! அப்படியென்ன கோபம்?

வயசாச்சுல்லா...வயித்திலே அக்கினியில்லே...சுக்கு அக்கினியாச்சே...! – ஏசுவடியாளின் பாந்தமான வார்த்தை....அழகம்மையைத் தணிக்கிறதா? சுக்க கரைச்சு தலையிலே ஊத்தணும்....எரியட்டும்....

பாட்டா சுக்கு வெந்நி... – பாட்டாவுக்கும் பாட்டம்மைக்கும் காதில் விழுந்ததா என்ன? அது ஏதோ ஒரு திசையைப் பார்த்துக் கொண்டு காலத்தின் கோலத்தைத் தன் வாயில் விழும் வார்த்தைகளில் அர்சித்துக் கிடக்கிறது.

அழகம்மை தன் திருமணத்தின் போதுதான் பாட்டா பாட்டியைப் பார்த்தாள். ஆசீர்வாதம் வாங்கப் பணிந்தாள். கையை எடுத்து தலைல வையுங்க...அது போதும்....அங்கே நின்ற கால்களிலிருந்து வேறுபட்ட கிழவர் கிழவியின் பாதங்கள். பழைய மரத்தின் வேர்கள் போல...! ஆஉறா என்ன ஒரு ரசனை...!

கண்ணப்பனுக்க அம்மைக்க தாத்தாவும், பாட்டியுமாக்கும்...ரெண்டு பேரும் நல்ல தீர்க்காயுசு சோடி...அவுக ஆசீர்வாதம் தெய்வ அருளில்லா.... – முப்பிடாதி சித்தியின் முது மொழிகள். இல்லையா பின்னே...வாழ்வு சிறக்க வேண்டாமா? கண்கண்ட தெய்வங்களாயிற்றே...!

ரெண்டு கெழடுகளப் பார்த்துக்கத்தான் உன்னக் கட்டினேன்...தெரிஞ்சிக்க...- கண்ணப்பனின் உரப்பான வார்த்தைகள். முடியாதா? நீ கொண்டு வந்த அஞ்சு பவுனோட கௌம்பிடு.... – தீர்க்கமாகச் சொல்கிறானே...உண்மையில் அந்தப் பெரிசுகள் மீது அழகம்மைக்கு வெறுப்பா என்ன?

ரெண்டு பேரும் மலை மாடனும் மாடத்தியும் போல.....- இதற்கு மேல் என்ன ஒரு மதிப்பு வைக்கணும் மனதில்? அழகம்மை பாவம்தான்....-ஆனாலும் கண்ணப்பன் இந்த விரட்டு விரட்டலாமா? மனசு தவித்துப் போகிறது நமக்கு.

கல்லுக்கு ஒரு அடுக்கு  உண்டு. அதப்பார்த்துத் தட்டினா கண்ணாடிபோலப் பிளந்து வரும்.

இரண்டாய்ப் பிளந்த கல்லின் ஒன்றில் அம்மி கண்ணுக்குத் தெரிகிறது தாணுலிங்கத்திற்கு. இன்னும் நிறைய வேலை இருக்கு வடிவு பண்ண...

பழைய நினைவுகளில் மிதக்கும் கிழவனும் கிழவியும். கிழவி பாறைக்காவு பகவதியைப்பற்றி. கிழவர் பாம்பாடிக்கு வேட்டைக்குப் போனது. அவரவர் நினைவுகள் இப்போது கனவுகளாய் மகிழ்ந்து சிரிக்கும் தருணம்.

கவுச்சி இல்லாமல் கண்ணப்பனுக்கு சோறு இறங்காது. கடைக்குக் கொடுத்து அனுப்புகிறாள். அவர்களைக் கேட்கிறாள்.

இல்ல அம்மணி...கையிலே கலையுள்ள கூட்டமாக்கும். உசிருகொன்னு புசிக்கிறதில்லை...-தொழில் பக்தி. அதில் பொதிந்திருக்கும் கடவுள் நம்பிக்கைகள். அடிப்படை ஒழுக்கம் சார்ந்த விழுமியம். வாழைப்பூவை உரித்து உரித்துப் பிரித்து கடைசியில் கிடைப்பது குருத்து. அதன் ருசியே தனி.   கல்லைச் செதுக்கிச் செதுக்கி உருவகப்படுத்தி கடைசியில் கிடைக்கும் குருத்து அம்மி....!

கொத்திக் கொத்தி...அம்மிக்கு ரூபம் வந்து விடுகிறது. இனி பரப்பு நேரா ஆகணும்....உருளைத் தடியில்துணியைச் சுற்றி அதன்மேல் நீலநிற மையை  ஊற்றி,  உருட்டு நிரப்பு பார்க்கும் பணி. கொத்திய அம்மியின் மேடான பகுதிகளை நீலமை காண்பிக்கும். மேடுகளைக் கொத்தி எடுத்து சமன் படுத்துதல். நாலைந்து முறை மேடுகளைச் செதுக்கி...நீலத்துணி உருட்டு மொத்தமும் பரவியிருந்தாலே அம்மி ரெடி என்று பொருள். உடனே அரைத்தால் கல் கடிக்கும். ஒரு வாரம் உமி போட்டு உருட்டி பிறகுதான் பயன்பாட்டுக்கு வரும். தொழில் நயமும் நுணுக்கமும் நம் முன்னோர்கள் சொல்லாததா...? குழவிக்கும் இந்த மாதிரி செதுக்கியாகணும்....இது அனுபவம் சார்ந்த தொழில் கை வண்ணம்.

கைத் தொழில் ஒன்றைக் கற்றுக் கொள். கவலை உனக்கிலை ஒத்துக்கொள்...என்று நம்பிக்கை அளித்த பொற்காலம். உருப்பெற்றிருந்த அம்மியையே பார்த்துக் கொண்டிருந்த அழகம்மைக்கு அப்படி ஏன் கண்கள் கலங்குகின்றன?

இது நம்ம வீட்டிலே பிறந்த கன்னுக்குட்டி  கொம்பும் குலையுமா  பசுவா மாறி வயறு தெறண்டு ஈனுகது மாதியில்லா.... – தாணுலிங்கத்தின் ஆத்ம ஒளி பொருந்திய வார்த்தைகள். அழகம்மையின் தாய்மையின் உருவகம். 

கருப்பட்டி...கருப்பட்டி என்று புலம்பிக்கொண்டிருந்த கிழவியின் ஆசையை அறிந்த கிழவர். நான் கேட்கலை...அவளுக்குக் கொடு...என்கிறார். மனமொத்த ஒன்றிய வாழ்க்கையின் அர்த்தம் அங்கே புலப்படுகிறது.

கல் குருத்து தந்த கனிவில் நெஞ்சம் கழன்று நிற்கிறதே...! அழகம்மையோடு சேர்ந்து நாமும் மகிழ்ந்து போகிறோம்.

                                                                     ------------------------

 

 

 

 

 

 

 

 

      

       

 

      

 

 

கருத்துகள் இல்லை:

  'குற்றம் புரிந்தவன்'  - சிறுகதைத் தொகுப்பு - புஸ்தகா.கோ.இன்  - ல் வெளியிடப்பட்டுள்ளது.    (www.pustaka.co.in) --------------------...