15 அக்டோபர் 2021

"அவலம்" சிறுகதை

 


"
அவலம்"  சிறுகதை       

 ----------------------------------------------                                                                                                                                                                               ----------------------                                                                                                                                    கிறுக்கு ராஜத்தை ரெண்டு நாளாய்க் காணவில்லை. அக்ரஉறாரமே அல்லோலப்பட்டது. ஆளாளுக்குப் பேசிக் கொண்டார்கள். யாராவது இழுத்திட்டுப் போயிட்டாங்களோ? யாராவது கெடுத்து கொலை செய்திட்டுப் போயிருப்பாங்களோ? அப்படீன்னா பாடி கிடைக்கணுமே? சில சமயம் நல்லா இருப்பாளே? நல்லாப் பேசுவாளே? அப்போ அவளா எங்கேனும் ஓடிப் போயிருப்பாளோ? சதா இங்கதானே தெருத் தெருவாத் திருஞ்சிண்டிருப்பா? காணவேயில்லையே? -என்னென்னவோ பேசிக் கொண்டார்கள். விஷயம் கிடைத்தால் போதாதா? அவரவர்கள் கற்பனைக்கு எப்படி எப்படியோ நீண்டது விஷயம்.                                                                                                                                                                                                                நாணம்மா பாட்டிதான் தவியாய்த் தவித்தாள். வீடு வீடாய் ஏறி இறங்கினாள். தன் பெண்ணை யாரேனும் பார்த்தீர்களா என்று ஒருவர் விடாது விசாரித்தாள். அழுது புலம்பினாள். தள்ளாத வயதில் என்னவெல்லாம் கஷ்டம் இந்தக் கிழவிக்கு? ஆதங்கப் படாதவர்கள் பாக்கியில்லை. முடிந்தவரை எல்லோரும் உதவி செய்ய முனைந்தார்கள். தங்கள் வீட்டுப் பிள்ளைகளை நாலா பக்கமும் அனுப்பித் தேடச் சொன்னார்கள்.                                                                                                                                                                                                                                                                                                             திருவிழா நடக்கும் பக்கத்துக் கிராமத்திற்குப் போயிருக்கலாம் என்றார்கள். வண்டி கட்டிக் கொண்டு போனவர்களிடம் விசாரித்தார்கள். குறுக்கு வழியாக வயல் வரப்பில் சென்று திருவிழா நடக்கும் கிராமத்திற்குச் செல்லும் ஜனங்களிடம் வழியில் உள்ள வயக்காட்டுக் கிணற்றில் எங்கேனும் கிடைப்பாளோ என்று பயந்து பயந்து பார்க்கச் சொன்னார்கள். ஓரிடம் இல்லாமல் அலசியெடுத்தார்கள். எங்கும் அவள் கிடைக்கவில்லை. தேடிக் களைத்து ஓய்ந்துபோனதுதான் மிச்சம்.                                                                                                                                                                                                                                                                                                                                    யாராவது வந்து சொல்வார்கள் என்று வாசலிலேயே காத்துக் கிடந்து வீதியையே பார்த்துக் கொண்டிருந்த பாட்டி கூட வீட்டினுள் சென்று தன் வேலைகளைக் கவனிக்க ஆரம்பித்திருந்தாள். பாட்டியின் இந்த மாற்றம் பலருக்கும் ஆறுதலாகத்தான் இருந்தது என்றுதான் சொல்ல வேண்டும். ராஜத்துடன் ஆன கஷ்டம் ஒரு வழியாகப் பாட்டிக்கு நீங்கியது  என்று எண்ணிக் கொண்டார்கள்.                                                                                                                                                                                           இப்பொழுதுதான் வேளை பிறந்திருக்கிறது  என்பதுபோல்  தெப்பக்குளமாய் நீண்டு கிடக்கும் வீட்டைப் பெருக்கி மெழுகிச் சுத்தம் செய்ய ஆரம்பித்தாள். பின் புறப் பட்டாசாலை, அடுப்படி, நடு அறை, நடை வராந்தா, திண்ணை என்று தண்ணீரை அடித்து ஊற்றிக் கழுவிவிடும் போது வாசலில் தொப தொபவெனத் திறந்த வெளிச் சாக்கடையில் அழுக்கு இறங்குகையில் நாற்றம் குடலைப் பிடுங்கியது. எல்லோரும் பாட்டிக்காகப் பொறுத்துக் கொண்டார்கள். பக்கத்து வீட்டு அகோபிலத் தாத்தாதான்  காட்டு மாட்டுக்குக் கத்தினார். மனுஷா பக்கத்துல குடியிருக்கிறதா ஓடறதா என்று புலம்பிக் கொண்டிருந்தார். சதா வெளி வராண்டா பெஞ்சிலேயே பழியாய்க் கிடக்கும் அவருக்குப் பொழுது போவதற்கு ஒரு விஷயம் கிடைத்திருப்பதாகவே பலரும் நினைத்தார்கள்.                                                                                                                                                                                                                                                                                                அந்த வீட்டின் எல்லா அறைகளையும் பாட்டி ஒருத்தியால் எப்படிக் கழுவ முடிந்தது என்று ஆச்சாரியமாய் இருந்தது. தினசரி இத்தனை நாற்றங்களோடா பாட்டி வாழ்ந்திருக்கிறாள்? என்று பரிதாபம் ஏற்பட்டது. காரணம் புரிந்தவர்கள் அப்படித்தானே நினைக்க முடியும்! பாட்டி வாழும் வாழ்க்கை என்ன ஒரு வாழ்க்கையா? இன்னொருவர் என்றால் என்றோ வாயைப் பிளந்திருப்பார்கள். ஆனால் பாட்டிக்கு இருக்கும் மனத் திண்மையும், உடல் திராணியும் வியந்து நோக்கத் தக்கதுதான்.                                                                                                                                                                                                                                                                                                                                                                                        அந்த வீடே 'கிறுக்கு வீடு' 'கிறுக்கு வீடு' என்றுதான் எல்லோராலும் அழைக்கப்பட்டது. அங்கே புத்தி ஸ்வாதீனத்தோடு இயங்கிக் கொண்டிருந்தவள் நாணம்மா பாட்டி மட்டும்தான்.     வரிசையாக ஏழெட்டு ரூம்கள் உண்டு அங்கே. ஒரு ரூம் விட்டு இன்னொன்று என்கிற கணக்கில் வரிசையாகத் தன் பெண் ,  பையன்       என்று பைத்தியங்களாய் அடைத்து வைத்திருந்தாள் பாட்டி. என்ன காரணத்திற்காக வீட்டில் இத்தனை அறைகள் பிரிக்கப்பட்டிருக்கின்றன, இப்படி அடைத்துப் போடுவதற்கென்று கட்டப்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணங்களுக்காகக் கட்டப்பட்டு அது இவ்வாறு பயன்பட்டுக்கொண்டிருக்கிறதா?  பெரிய வீடானாலும் இத்தனை அறைகள் எதற்கு? இன்றுவரை யாருக்கும் அந்தக் காரணங்களெல்லாம் தெரிந்ததில்லை. வெளி ஆட்கள் அதிகமாகப் போக்குவரத்து என்று இருந்தால்தானே? பாட்டியின் வீட்டுக்கு என்று யாரும் போவதோ வருவதோ கிடையாது. என்றோ பார்த்த வீட்டை மனதில் கொண்டிருப்பவர்கள்தான் எல்லோரும்.                                                                                                                                                                                                                                                                                                                                              வராண்டாவை அடுத்த உள் உறாலில் ஏழெட்டுக் கண்ணாடி பீரோக்கள். அத்தனையிலும் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் புத்தகங்கள். பாட்டியின் பிள்ளை சங்கரராமன் படித்தது என்றார்கள். தடி தடியாய் தலையணையாய் இருக்கும் அந்தப் புத்தகங்களைப் பார்த்தாலே இவ்வளவுமா ஒருத்தன் மண்டைக்குள் ஏறிற்று என்று பாமரத்தனமாய்த்தான் நினைக்கத் தோன்றும். ரொம்பவும் படித்துப் படித்துப் பேதலித்துப் போனதாய்ச் சொல்வார்கள்.                                                                                                        யார் அது ? என்று கேட்டபோது வெளியே தெருக்கோடியில் ஆற்றங்கரையை ஒட்டி 'ரேரேரே....ரே...ரே...ரே...' என்று எதையோ உருவம் தெரியாமல் பாடிக் கொண்டு கட்டிய கோவணம் அவிழ்ந்தது கூடத் தெரியாமல் அம்மணமாய் அலையும் ஒருத்தரைக் காண்பித்தார்கள். இடுப்பில் ஒரு ஒட்டுத் துணிகூட இல்லாமல் ஏன் இப்படி? எல்லோரும் கேட்டுக் கேட்டு ஓய்ந்துதான் விட்டார்கள். எது நின்றது அவனிடம்? எல்லாமும் கழன்றுதானே இந்த நிலை? என்று பரிதாபப்பட்டவர்கள்தான் அநேகம். குப்பைகளையும், அசிங்கங்களையும் கால்களால் தள்ளிக் கொண்டே எதையோ பாடிக் கொண்டும், பேசிக்கொண்டும், முனகிக் கொண்டும், சிரித்துக் கொண்டும்...பார்க்கவே கோரமாய் ஒரு மனிதன்.                                                                                                                                                                                                                                            "அப்படீன்னா கிறுக்கு ராஜம்?" என்றபோது அது அக்காள் என்றார்கள். வீட்டுக்குள்ளே அடைபட்டுக் கிடப்பது பற்றிக் கேட்டபோது அதுவும் அக்காள்தான் என்று தெரியவந்தது. ராஜத்துக்கும் சங்கர்ராமனுக்கும் மூத்த அக்காள் என்பது புரிந்தது.                                                                                                                                                                                                        பசங்களோடு மொட்டை மாடியில் விளையாடிக் கொண்டிருந்தபோது ஒரு நாள் பார்க்க நேர்ந்தது. ஓங்கி அடிக்கப்பட்ட பந்தை எடுக்க ஒவ்வொரு வீட்டு மாடியாய்த் தாவித் தாவி பறந்தபோது, நாணம்மாப் பாட்டியின் வீட்டு முற்றத்தில் போய் எகிறி விழுந்தது பந்து.                                                                                                                                                     "டேய் வந்துர்றா...அங்க போகாதடா..." - நண்பர்களின் எச்சரிக்கையை அலட்சியம் செய்து மேலிருந்தவாறே நான் எட்டிப் பார்த்தேன். தலைவிரிக் கோலமாய் பளீரென்ற பேய்ச் சிரிப்போடு, பார்க்க நேர்ந்தது அந்தக் கோர உருவத்தை. அப்படியே ஆழமாய்ப் பதிந்து போனது அந்தக் காட்சி.                                                                                                                                                                                                                                                                                 "என் சங்கிலியைத் தாடீ...என் வளையலைத் தாடீ...என் ஜிமிக்கியைத் தாடீ..." என்ற அந்தப் புலம்பலும் அழுகையும் மாறாமல் நிலைத்துப் போனது மனதில். அந்தப் பாட்டிக்கு மொத்தம் நாலு பெண்கள் ஒரு பையன். அஞ்சாவதாய்த் தவமிருந்து பெற்றதுதான் இந்தச் சங்கர்ராமன். யாரோ சுவாமிகள் வந்து மடத்துக்கு அனுப்பிடச் சொல்லி அவனைக் கேட்டதாகவும், பாட்டி மறுத்துவிட்டதாகவும் அந்த தோஷம்தான் அவனுக்கு அப்படி ஆகிவிட்டதென்றும் அம்மா வழி சொல்லக் கேட்டபோது அதிர்ச்சியில் உறைந்தேன் நான்.                                                        "சரிம்மா...அது உண்மைன்னா மத்தவங்களுக்கும் ஏன் பைத்தியம் பிடிக்கணும்?"                                                                                                                                                                                            "அது அந்தக் குடும்பச் சாபம்டா...நம்ப வீட்டுக்குக் கூட அப்படி ஒரு சாபம் உண்டு தெரியுமோல்லியோ உனக்கு...?"அம்மா அதிர வைத்தாள் என்னை.                                           "..எல்லாம் அந்த பகவானுக்குத்தான் வெளிச்சம்...            பாட்டியோட நாலு பெண்கள்ல ரெண்டு இப்டி...மூணாவதும் இப்படியாகி ஆரம்பத்துலேயே செத்துப் போயிடுத்து. சங்கர் ராமனுக்கு முதலாப் பிறந்த அந்த நாலாவது ஒண்ணுதான் தப்பிச்சது. அதுக்குக் கல்யாணமாகி எங்கேயோ இருக்கு. இந்தப் பக்கமே தலை காட்டறதில்லை. அந்தப் பொண்ணை ஒரு தரம் நானும் பார்த்திருக்கேன். சிண்டு போல குங்குமச் சொப்பா இருக்குமாக்கும். அத்தனை லட்சணம். அவ்வளவு ஏண்டா? நம்ப ராஜத்தை எடுத்துக்கோ...எத்தனை குடும்பப் பாங்கா இருப்பா தெரியுமா? அவ நன்னாயிருக்கிறபோதிருந்து பழக்கம் எனக்கு. கல்யாணம் ஆன பின்னாடியிருந்துதானே அவளுக்கு இப்டி ஆயிடுத்து..."                                                                                                                                                                                                                                                                                         "என்னம்மா சொல்றே? "அதிசயித்தவனாய்க் கேட்டேன் நான்.                                                                 "ஆமாம், ராஜத்துக்கு கல்யாணமாகி கொஞ்ச நாளைக்கு நல்லாத்தான் இருந்தா. முதல் பிரசவத்தின்போதுதான் இப்படியாச்சு. அவளுக்குப் பிறந்த குழந்தையும் செத்துப்போச்சு. இவளும் இப்படியாயிட்டா. யார் யாரோ மலையாள மாந்திரிகரெல்லாம் வந்து பார்த்தா...ஒண்ணும் நடக்கலை...சதா பூஜையும் மந்திரமுமாத்தான் அந்தாத்துல...ஒண்ணும் பலனளிக்கலையே...பாட்டி அழுகைச் சத்தம்தான் எப்போதும் கேட்டுண்டிருக்கும்...இந்தக் தெருவுல எல்லாருக்கும் பழகிப் போன ஒண்ணு அது. ரெண்டு மூணு தரம் வந்து பார்த்திட்டு பிற்பாடு அவ புருஷணும் வர்றதையே நிறுத்திட்டான். கோர்ட்டு மூலமா விவாகரத்து வாங்கிண்டுட்டான்னு கேள்வி.                இப்போ அவன் வேறே கல்யாணமும் பண்ணின்டுட்டானாம். ராஜம் கல்யாணம் பண்ணின புதுசுல எப்டியிருப்பா தெரியுமோ? "                                                                                                                                                                                             அதைச் சொல்லும்போதுதான் அம்மாவின் முகத்தில் எத்தனை ஒளி. எப்டியிருப்பா? ஆர்வமாய்க் கேட்டேன் நான்.                                                                                                                                                                                                                                                                                                                      "அந்தச் சின்ன வயசுலயே மடிசார்தான் உடுத்திப்பா அவ. பாட்டி அத்தனை ஆச்சாரம். இடது பக்கத் தலைப்பை இழுத்துப் போர்த்திண்டு கையில் எண்ணெய்க் கிண்ணத்தோட அவ கோயிலுக்குப் போற அழகே தனி. அவ்வளவு லட்சணமாயிருக்கும். எல்லார் கூடவும் சகஜமாப் பேசுவா...நம்பாத்துக்கெல்லாம் வந்திருக்கா...ஒரு விரதம் நோன்பு விடாம அனுசரிப்பா...இப்போக்கூடப் பாரு...தெருத் தெருவா சுத்தியடிச்சிண்டிருப்பாளே...அப்போ வழில என்னைப் பார்த்தான்னா நின்னு பேசறா பார்த்தியா? அது பழைய பழக்கமாக்கும்...ருக்கு...நன்னாயிருக்கியான்னு கேட்குறா பார்த்தியா? அத்தனை ஸ்வாதீனமில்லாத நிலையிலும் இது மட்டும் தெரியறது பார்த்தியா? அந்த பகவான்தான் கண் தெறக்கணும்..."இதைச் சொல்லும்போது அம்மாவின் கண்கள் கலங்கி நெஞ்சு அடைத்தது அவளுக்கு. கொஞ்ச நேரம் அந்த சோகத்தில் மூழ்கிப் பேச்சற்றுப் போனாள் அம்மா.                                                                                                                                                           அம்மா சொன்னதுபோல் ராஜத்திற்கு அவள் மேல் ஒரு தனிப் பிரியம் இருந்ததை என்னாலும் உணர முடிந்தது. புத்தி சரியில்லாத நிலையிலும் அவள் வேறு எங்கும் அடியெடுத்து வைத்து நான் பார்த்ததில்லை. நேரே விடுவிடுவென்று எங்கள் வீட்டுக்குள் நுழைந்து விடுவாள். சமயங்களில் ! ராஜம் ...இப்படி வருவாளா? குழந்தேள்லாம் பயந்துக்கிறது..." என்றவாறே அம்மா அவளின் கைளைப் பிடித்துச் சென்று வெளியே விடுவாள். பிறகு திண்ணையில் வைத்துச் சாதம் போட்டு அனுப்பி வைப்பாள். பாயசம் இருக்கா...இன்னிக்கு வைக்கலியா? நாளைக்கு வச்சு எனக்குத் தரணும்...மறந்துடாதே...என்பாள் உரிமையோடு. ஒற்றைத் தெரு, கோயில் தெரு, நடுத்தெரு என்று மூன்று தெருக்களைக் கொண்ட அந்த அக்ரஉறாரத்தைச் சுற்றி சுற்றி வருவாள் ராஜம். ராவெல்லாம் சுற்றிக் கொண்டிருப்பாள். கால்கள் இவளுக்கு ஓயவே ஓயாதா ? என்று தோன்றும் நமக்கு. பாட்டியால் என்ன செய்ய முடியும்? விட்டு விட்டாள் அவள். ஒரு முறை சாமக் கோடாங்சி ஒருத்தன் வர, அவனோடு இவள் பேச, இவளைக் கண்டு அவன் அலறி ஓட...சொல்லிச் சிரிப்பார்கள் தெருவில் உள்ளோர்.                                                                                                                                                                                                                                              யாரையும் எதுவும் செய்ய மாட்டாள். அவள் பாட்டுக்குப் பாடிக் கொண்டு, பேசிக் கொண்டு, கும்மியடித்துக் கொண்டு போய்க் கொண்டிருப்பாள். ஒவ்வொரு தெரு முக்கிலும் நின்று, நீண்டு கிடக்கும் தெருவைப் பார்த்து தன்னைத்தானே மூன்று சுற்று சுற்றிக்கொண்டு விழுந்து கும்பிடுவாள். கோயில் தெருவில் நின்று கோயில் வாசலில் விழுந்து நமஸ்கரிப்பாள். அந்த அம்பாள் அவளுக்கு நல்ல புத்தி கொடுக்க வேண்டும் என்று வேண்டாதவர்கள் பாக்கியில்லை. விழுந்து விழுந்து உக்கி போட்டுக் கொண்டிருப்பாள். திடீரென்று யார் வீட்டுத் திண்ணையிலிருந்தாவது கோலப் பொடியைக் கொண்டுவந்து பெரியதாகக் கோலம் போட ஆரம்பித்து விடுவாள். அந்தப் புத்தி பிசகின நிலையிலும் எத்தனை கன கச்சிதமாக அந்தப் புள்ளிகளும், வளையங்களும்  வந்து விழுகின்றன அவளுக்கு என்று அதிசயிப்பர் எல்லோரும்.                                                                                                                                                                                                                                                                                                                             இரக்கப்பட்டு அர்ச்சகர் கொடுக்கும் பிரசாத உருண்டையைத் தின்று கொண்டே அவரையும் ஒரு கும்பிடு போட்டுவிட்டு நகருவாள். பெரும்பாலும்  இவையே அவளது தினசரி நியமங்களாய் இருக்கும். கையில் எண்ணெய்க் கிண்ணத்தோடு ஒரு முறை கோயிலுக்குள் நுழைய யத்தனித்தபோது சிலர் அவளைத் தடுக்க, "நான் பார்த்துக்கறேன்...யாரையும் ஒண்ணும் பண்ணமாட்டா..." என்று சொல்லி அம்மாதான் ராஜத்தைக் கையைப் பிடித்துக் கோயிலுக்குள் அழைத்துப் போனாள். "தினசரி அம்பாளுக்கு எண்ணெய் திரி போடு, அப்பவாவது உன் தோஷம் கழியறதா பார்ப்போம்..." என்று அம்மா ஆதரவாக அவளை அழைத்துப் போனாள். அந்த அக்ரஉறாரத்தில் வேறு யாருக்கும் இல்லாத இரக்கமும் நேயமும் அம்மாவுக்கு இருப்பதாக எனக்குத் தோன்றியது.                                                                                                                                                                                                                                                            அமாவாசை நேரங்களில்தான் ராஜத்தின் நிலை வெகுவாக மாறிப் போகும். அவள் அசிங்கமாய்த் திரிவதும் அப்போதுதான். சாதாரண நாட்களிலேயே அவளை அடக்க முடியாமல் தவிப்பாள் பாட்டி. இம்மாதிரி நாட்களில் கேட்கவா வேண்டும். பாட்டிக்கு பயம். ஏதேனும் கம்பு கிம்பை எடுத்து மண்டையில் போட்டு விடுவாளோ என்று.                                                                                                                                                                  அப்படியான ஒரு பொழுதில்தான் ராஜம் காணாமல் போயிருந்தாள். எங்கேனும் விழுந்து தற்கொலை செய்து கொண்டிருப்பாளோ? அதற்கும் புத்தி ஸ்வாதீனம் இருந்தால்தானே முடியும்? யாரேனும் தவறான எண்ணத்தில் கடத்திக்கொண்டு போயிருக்கலாமோ?" இப்படியெல்லாம் நினைக்க ஆரம்பித்தார்கள் எல்லாரும்.                                                                                                                                                             ஒரு நாள் கிறுக்கு ராஜத்தின் மூத்த அக்காள்(உள்ளே அடை பட்டிருந்தவள்) இறந்து போனாள். ஆர்ப்பாட்டம் பண்ணியபோது நிலை தடுமாறி விழுந்து பின்  மண்டையில் அடிபட்டு உயிர் போனது என்றார்கள். எப்படிப் போனால் என்ன? பாட்டிக்கு ஒரு சிரமம் குறைந்தது. பெருத்த பாரம் விட்டது.                பாட்டி வீட்டில் அதுவரை காணாத சிலர் தென்பட்டார்கள். காரியங்கள் எல்லாமும் நடந்து முடிந்தன. ஒரு பொழுது விடியாத வேளையில் சத்தமின்றி அவர்கள் கிளம்பிப் போனார்கள். பாட்டியும் அவர்களோடு கிளம்பியதுதான் புதிய செய்தி. அப்படியானால் அந்தக் கிறுக்கு சங்கர்ராமன்? பாட்டியா அப்படி விட்டுப் போகிறாள்? எங்களால் நம்பவே முடியவி¢ல்லை.               ரோட்டில் எங்கோ அசிங்கமாய்க் கிடக்கும் இடம் சென்று சாதம் ஊட்டி வரும் பாட்டியா விட்டுப் போனாள்? கையைப் பிடித்துத் தரதர வென்று இழுத்து வரும்போது கம்மென்று வருவானே சங்கர்ராமன்! யாருக்கும் அடங்காதவன் பாட்டிக்கு அடங்குவானே? அவனையா விட்டுப் போனாள் பாட்டி. விடை தெரியத்தான் இல்லை. பின்னொரு நாள் பாட்டி வருவாள் என்று மட்டும் பேசிக் கொண்டார்கள். அதன் பின் சங்கர்ராமனை அக்ரஉறாரம் காத்தது. கொஞ்ச நாளில் பராபரியாய் அந்தச் செய்தி காதுகளுக்கு எட்டியது. அந்த நாலாவது பெண்ணுக்கு தற்போது மனநிலை சரியில்லை என்று! அவளது சம்ரட்சணைக்காகத்தான் பாட்டி போயிருக்கிறாள் என்று!                                                                                                                                                                                                            "என்னம்மா இது கொடுமை! பாட்டிக்கு என்ன தலைவிதி இது?" என்றேன் நான். மனம் ரொம்பவும் கனத்துப் போனது எனக்கு. அம்மா அதிர்ச்சி எதுவுமின்றி அமைதியாய் என்னிடம் சொன்னாள்.                                                                                                                                                                                                                                                                                                                                              "நம்ப தாத்தாவுக்குத் தாத்தா, அதாண்டா உங்க கொள்ளுத் தாத்தா...ரொம்ப முன் கோபக்காரராம்...ஒரு முறை தென்னந்தோப்புல காய் வெட்டு நடந்தபோது, மரமேறிண்டிருந்த கூலியாள் ஏதோ பதில் பேசினான்னு, சட்ன்னு வந்த கோபத்துல அரிவாளை எடுத்து அவன் காலை வெட்டிட்டாராம் அவர். அந்த மரமேறி வயிரெறிஞ்சி சாபமிட்டானாம். அவன் பெண்டாட்டி அகத்து வாசல்ல வந்து மண்ணை வாறித் தூத்தினாளாம்...அன்னைலெர்ந்து இன்னைக்கு வரைக்கும் இந்தச் சாபம் இந்தக் குடும்பத்துல இருந்துண்டுதானேயிருக்கு? அழிஞ்சா போச்சு? உங்க பாட்டி வாய் ஓயாமச் சொல்லுவா...கதறிப் புலம்புவா...சாண் ஏறினா முழம் சறுக்கிறதோல்லியோ...அது அந்தச் சாபக் கேடுதான்...பார்க்கத்தானே செய்றோம் கண்கூடா? உங்கப்பா தொழில் பண்றேன் தொழில் பண்றேன்னு எத்தனை எடத்துல ஓட்டல் வச்சிருப்பார்...ஒண்ணாவது நிலைச்சதா? ஒண்ணாவது லாபம் தந்துதா? இழுத்து மூடறதுதானே வழக்கமாப் போயிடுத்து...?தமிழ்நாட்டுல கடை போடாத எடம் உண்டா? எது கை தூக்கி விட்டுது? எது தலை நிமிர்த்தினது? எல்லாமும் தலை குனியத்தான் வச்சிது இன்னிவரைக்கும்...அது போலத்தான் இதுவும்...இது பரம்பரைச் சாபம்...அவா அவா கட்டையோடதான் கழியும்...                                                                                                                                                                                                                                                                                                                                                    அம்மாவின் விளக்கங்கள் அவளது வாழ்வியல் அனுபவங்களின் நிதர்சனங்களாய்த் தோன்றினவே அன்றி மனதைச் சமாதானப் படுத்தவில்லை. மாறாக  வாழ்க்கை இன்னும் என்னென்னவெல்லாம் குரூரங்கள் கொண்டதாய் இருக்கும் என்று எண்ணியெண்ணி பயம் கொள்ளவே வைத்தது.                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                     -----------------------                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                         

 

கருத்துகள் இல்லை:

  சிறுகதை          தினமணிகதிர்    10.11.2024 ல் வெளி வந்த சிறுகதை  குவிகம்-சிவசங்கரி இலக்கியச் சிந்தனைக் குழுமத்தின் நவம்பர் 2024 மாத சிறந்த...