24 ஏப்ரல் 2021

சிறுகதை “வனம் புகுதல்” - தினமணி கதிர் - 25.4.2021

 

சிறுகதை                          “வனம் புகுதல்”  


  

      ருவர் படுப்பதுபோலான அந்த அகலக் கட்டில் உறாலில் நடுநாயகமாய்க் கிடந்தது. அதை அந்த இடத்தில் கொண்டு வந்து போட்டது நான்தான். அதற்கு முன் எதிரேயுள்ள அறையில்தான் அது கிடந்தது. அங்கே குளிர் சாதனம் உண்டு. ஆனால் இரவில் அங்கே கதவை அடைத்துக் கொண்டு படுக்க எனக்கு பயம். யாரேனும் திருடன் நுழைந்து அறைக்கதவை வெளியே சாத்தி என்னை அடைத்து விட்டு, இருப்பதையெல்லாம் திருடிக் கொண்டு போய் விடலாம் என்று தோன்றியதால் அந்த இரும்புக் கட்டிலை உறாலுக்கு நகர்த்தினேன்.                               

சென்ற முறை ஊருக்கு வந்தபோதே இதைச் செய்து விட்டேன். எனக்கு எப்போதும் உறாலில் படுப்பதுதான் பிடிக்கும். தலைக்கு மேலே சுற்றும் ஃபேன் அப்படியே மாடி உஷ்ணத்தைக் கீழே இறக்கும். அது தாங்காமல் புரண்டு கொண்டேயிருந்து எப்போது கண்ணயர்ந்தேன் என்றே தெரியாமல் உறங்கி விடுவேன். அந்த இடத்தில் படுப்பதை ஏதோ பாதுகாப்பாக உணர்ந்தேன் நான்.                                                                                  எப்போதுமே டபுள் காட் உபயோகிப்பதுதான் எனக்குப் பிடிக்கும். வெளியூர்  சென்றாலும், உறவினர்கள் வீட்டில் பெரிய கட்டில் இருக்கிறதா என்று தேடுவேன். உறக்கத்தில் உருண்டு கீழே விழுந்து விடும் பழக்கம் சின்ன வயதிலிருந்தே எனக்கு உண்டு. ஒரு முறை அண்ணாவுடன் கன்னியாகுமரிக்குச் சென்றிருந்தபோது, நாகர்கோயிலில் அறை எடுத்திருந்த லாட்ஜில் உறக்கத்தில் அப்படித்தான் கீழே விழுந்து விட்டேன். தரையில் படுத்திருந்த  அண்ணா...டே...டே...டேய்....என்று தடுப்பதற்குள் டொப்பென்று பூமிக்கு இறங்கி விட்டேன். தலையில் பலமான  அடி. காலையில்  அந்தப் புது ஊரில் டாக்டரைத் தேடி ஓட வேண்டி வந்துவிட்டது. அதுவாவது ஊர் சுற்றின அசதியில் உருண்டேன் எனலாம். ஆனால் அந்தப் பழக்கம் இன்றுவரை என்னிடம் தொடர்கிறதே,  அது ஏன்? நல்ல ஓய்வில் இருக்கும் இப்பொழுதுகளிலும் ஒராள் படுக்கும் கட்டிலில் படுத்தால் அது நிகழ்ந்து விடும்...! எனவேதான் டபுள் காட். எப்படிக் காலைக் கையை மாற்றி விரித்துப் போட்டாலும்...பப்பரப்பே....என்று படுத்தாலும் கீழே விழ வாய்ப்பில்லை. தரைலயே விரிப்பு விரிச்சுப்  படுத்துக்கோ...சரியா...? எங்கு கிளம்பினாலும் அம்மாவின் மறக்காத அறிவுரை இது. இந்த வயதிலும் நினைவு வருகிறதே...!                                                                   உறாலில் நான் கட்டில் போட்டிருக்கும் இடம்...வாசலில் இருந்து பார்ப்பவருக்குத் தெரியாது. நானாக எட்டிப் பார்த்தால்தான் போச்சு...அப்படியும் தெரிவதற்கு வாய்ப்பில்லைதான். எழுந்து போனால்தான் யாரென்று தெரியும். மற்றப்படி குரல் கேட்டே மறைவிலிருந்து பதில்  சொல்லி விடுவதுதான்.

      என்ன முகம் பார்க்க வேண்டிக் கிடக்கிறது? எனக்கொன்றும் பிடிக்கவில்லை. உலகம் எப்போதும்  போல்தான் இயங்கிக் கொண்டிருக்கிறது. அதே ஏழு மணிக்கு கீரைக்காரி வருகிறாள். ஏழரைக்கு தேங்காய்க்காரர் சைக்கிளில் பறக்கிறார். எட்டு மணி வாக்கில் மாயக்காள் மாடு குளிப்பாட்ட கண்மாயை நோக்கிப் போகிறாள். ஸ்கூல் பஸ்...ஆட்டோ...எல்லாமும் கீ கொடுத்ததுபோல் இயங்கிக் கொண்டிருக்கின்றன. எதுவுமே மாறவில்லைதான். அமைதியான ஒரே மாதிரியான இயக்கம். ஒரு வகையில் சொல்லப்போனால் இந்த அமைதியை எதிர்நோக்கித்தான் நானே என்னைத் தனிமைப் படுத்திக் கொண்டேன். அது என் அதிர்ஷ்டம்...ஆம்...அதிர்ஷ்டம் என்றுதான் சொல்ல வேண்டும்.       இதெல்லாம் போன வார நிகழ்வுகள்.                                  நான் ஊருக்கு வந்து சேர அடுத்த வாரம் கொரோனா ஊரடங்கு அறிவிக்க சரியாக இருந்தது. வசமான வாய்ப்பாக அமைந்து விட்டது. அப்படியே தங்கி விட்டேன். யாரும் என்னைக் குறை சொல்ல முடியாது பாருங்கள். வேண்டுமென்றே வீட்டை விட்டுவிட்டு இருக்கிறேன் என்று சொல்ல முடியாது. தனிமையில் இருக்க வேண்டும் என்ற என் தீராத ஆசையைக் கடவுளாய்ப் பார்த்துத் தீர்த்து வைத்தது போல்.. அந்த என் வீட்டில் தனிமையில் இருந்து கழிக்க வேண்டும் என்று எனக்கு வெகுநாளாய் ஆசை உண்டு. அதற்கு வாய்ப்பில்லாமலேயே போய்க் கொண்டிருந்தது. எதைச் சாக்கு வைத்து வண்டியைக் கிளப்புவது என்று காத்துக் கொண்டேயிருந்தேன்.                                 என் கடமையையெல்லாம்தான் நான் முடித்தாயிற்றே... எனக்காக, என் விருப்பத்துக்காகக் கொஞ்ச நாள் வாழ வேண்டாமா? எனக்கு அமைதி பிடிக்கும். தனிமை பிடிக்கும். யாருடனும் பேசாமல், யாரையும் பார்க்காமல் இருப்பது பிடிக்கும். கையில் விரும்பும் ஒரு புத்தகம் எனக்கிருந்தால் போதும். எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் தனியாய் இருந்து விடும் மனத் திண்மை உண்டு எனக்கு. இரவு நேரத்தில் ஏதோவோர் தொந்தரவு இருக்கிறதே என்பதைச் சிந்தித்துத்தான் உறாலுக்குக் கட்டிலை மாற்றினேன். இரவு அங்கு படுத்திருக்கையில் பாதுகாப்பாய் உணர்கிறேன். ஒரு சின்னச் சத்தம் கேட்டால் கூட சட்டென்று விழிப்பு வந்து விடும் எனக்கு.           அப்படித்தானே வந்தான் அந்த தேங்காய் பறிப்பவன். வாசலில் சிவனே என்று செல்லும் அவனை அழைத்தது நான்தான். கையில் அறிவாளோடு போகிறானே...! தென்னை மரம் சுத்தம் பண்ணனுங்களா...? என்று கூட ஒரு முறை கேட்டதாக நினைவு. இத்தனைக்கும் மூன்று, நான்கு முறை அவன் வந்திருக்கிறான். ஒரேயொரு மரமானாலும் வசமான, தோட்டக்கலைத்துறையிலிருந்து ஸ்பெஷலாகக் கேட்டுவாங்கிய கன்றை நட்டிருந்தேன் நான். அதுவோ விடுவிடுவென்று வளர்ந்து காய்த்துக் குலுங்கியது. நிறைமாத கர்ப்பிணி போல் நின்றது பொழுதுக்கும்.                                                                        வீட்டின் பக்கவாட்டு வழியாகக் கொல்லைப்புறம் வருவான் அவன். அசாதாரணமாய் மரம் ஏறுவான். இப்படித் திரும்பி நோக்குவதற்குள் உச்சியில் இருப்பான். பாளைகளையும், மட்டைகளையும் அநாயாசமாய்ச் சீவி, காய்களை வெட்டிக் கொப்போடு கயிற்றைக் கட்டி அவன் இறக்கும் அழகு....அதுவும் ஒரு தனிக்கலைதான். நல்ல உடல் திறன் உள்ளவனுக்குத்தான் அது சாத்தியம். அவன் உடம்பு கருகும்மென்று இரும்பாய் ஜொலிக்கும். முறுக்கிய மீசை. கூர் மூக்கு. பாடம் கட்டிய உடம்பு.   ஒரு முறை கூட கன்னா பின்னாவென்று காய்களைத் தனித் தனியாய்ச் சீவி தொப்பு தொப்பென்று தரையில் போட்டதில்லை. தென்னை சுத்தம் செய்யும் சத்தமே தெரியாது. அவன் வந்ததும் தெரியாது...போவதும் தெரியாது. அத்தனை  தொழில் சுத்தம்.

      இதை ஏன் சொல்கிறேன் என்றால் ஒரு முறை வேறொரு ஆளை அழைத்து இந்த வேலையை ஒப்படைத்தபோது, அவன் பண்ணிய களேபரம் சொல்லி மாளாது. தடால் புடால் என்று வெட்டி வீழ்த்த ஆரம்பித்து விட்டான். பக்கத்து வீட்டு ஆஸ்பெஸ்டாசில் போய் காய்கள் விழ, அவை விரிசல் விட, மரத்த வெட்டுறீங்களா இல்லையா...அடுத்தாப்ல உங்ககிட்ட கேட்டுக்கிட்டிருக்க மாட்டேன்...நானே செய்திடுவேன்....என்று அந்த அம்மாள் கத்திக் குடியைக் கெடுத்தது இன்னும் எனக்கு மறக்கவில்லைதான். சமாதானத்திற்கு நாலஞ்சு காய்களை ஓசியாகக் கொடுத்தபோது கூட வாங்கிக் கொள்ளவில்லை. அத்தனை கறார். ஆனால் அதற்கப்புறம்தான் இவன் கிடைத்துவிட்டானே...!                                                                    இப்போது அந்த மரமும் இல்லைதான். அந்தக் கொல்லைப் புறத்தையும் வளைத்து, குளிக்கும்  அறை, கழிவறை என்று கட்டியாயிற்று. ஆனால் ஒன்று அந்த மரமேறி அந்த இரவு ஏன் அப்படி வந்தான்? என்ன  நோக்கத்தில் வந்தான்? கொல்லைப் புறம் நின்று பறித்த காய்களை உறிக்கும் பொழுது அவன் பார்வை அடிக்கடி வீட்டுக்குள்ளேயே பாய்ந்து கொண்டிருந்ததே...! அதன் அர்த்தம் இதுதானா? நோட்டம் பார்த்திருக்கிறானா? அவன் எதிர்பார்த்ததுபோல் இரவில் உள்ளே நுழைய முடியவில்லையா? ஒரு வேளை ஆளில்லா வீடுதானே என்று நினைத்துவிட்டானோ? சுற்றிலும் இத்தனை குடியிருப்புகள் இருக்கையில் என்ன ஒரு தைரியம் அவனுக்கு. பளீரென்று தெரு விளக்குகள் எரிந்து கொண்டிருக்கையில் எப்படி இப்படித் துணிகிறான்? திருடுவதற்கும்தான் எத்தனை தைரியம்  வேண்டும்? சும்மா நடக்குமா அந்தக் காரியம்?

      டொக்.....! - யாருப்பா அது...? ஏய்...யாரது...? பதற்றத்தில் என் இயல்பு மீறிக் கத்திக் கொண்டு அந்த அர்த்த ராத்திரியில் துள்ளி எழுந்து உள்ளிருந்தமேனிக்கே வாசல் லைட்டைப் போட்ட போது ஒரு கையை ஊன்றி அப்படி ஒரு துள்ளுத் துள்ளி காம்பவுன்ட் சுவரைக் கண்ணிமைக்கும் நேரத்தில் கடந்தானே...! அது அவன்தானோ..! அவனேதான்...அவனேதான் சந்தேகமில்லை...! ஏன் அப்படி வந்தான். திருட வந்தானா? ஜன்னலோரம் உலர்த்தியிருக்கும் துணிமணிகளை உருவிக்கொண்டு போக வந்தானா? ஆள் தனியாய் இருப்பதை உணர்ந்து வந்தானா? ஒருவேளை காய் திருட வந்திருப்பானோ? வேணுமளவுக்கு எடுத்துக் கொண்டு, எனக்கும் வைத்துவிட்டுப் போ என்றுதானே அவனிடம் சொன்னேன். நான்கைந்து இளநீர் கூட சகஜமாய் வெட்டித் தந்தானே? அவனுக்கா இப்படி எண்ணம்?                                                             எழுத்துச் சித்தர் ஜெயகாந்தன் அவர்களுக்கு இப்படியொரு அனுபவம் உண்டு என்று படித்திருக்கிறேன்...! “எனக்கு மரமேறத் தெரியாது.“...என்று!! இதை இங்கே சொல்லும்போதே அவர் சொல்லிச் சென்றதைத்தான் காப்பியடித்துச் சொல்கிறேன் என்று நினைத்து விடுவார்களோ? ஏன்...அதே மாதிரி ஒரு அனுபவம் மற்றவர்களுக்கு ஏற்பட்டிருக்கக் கூடாதா?...ஏதாவது வேண்டுமென்றால் என்னிடம் அவன் கேட்டிருக்கலாமே...! அவனிடம் நான் என்னை எளிமையாய்க் காண்பித்துக் கொண்டுதானே  பேசினேன். அவனை ஒரு கூலி ஆளாய்க் கூட நினைத்துப் பேசவில்லையே...! ஒரு நண்பனைப் போலத்தானே  அந்தப் பணிக்கு அழைத்தேன். பிறகும் ஏன் அவனுக்கு அப்படித்  தோன்றியது? காம்பவுன்ட் தாண்டி ஓடாமல் நின்றிருந்தாலும் நான் அவனை ஒன்றும் செய்திருக்கப் போவதில்லையே? அந்த நம்பிக்கை அவனுக்கு ஏன் என்னிடம் ஏற்படவில்லை? முகத்தைக் காண்பிக்க வேண்டாம் என்பதுபோல் திரும்பாமல் இருட்டில் மறைந்து விட்டானே?  முகத்தைக் காண்பிப்பதில் அல்லது என்னை நேருக்கு நேர்  பார்ப்பதில் அவனுக்கு லஜ்ஜையோ? நான் எழுந்து இப்படிக் கத்துவேன் என்று எதிர்பார்க்கவில்லையோ?                        அவன் எதிர்பார்த்ததற்கு மேல்தானே அன்று கூலியும் கொடுத்தேன். எதுக்கு சார் இவ்வளவு? என்ற அவனிடம் இல்ல இருக்கட்டும்...வச்சிக்குங்க...உங்க தொழில் சுத்தம் எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு...தடாலடியா இல்லாமச் செய்தீகளே? அதுதான் பெரிசு...! சந்தோஷமாத் தர்றேன்...கொண்டு போங்க....என் கண்களில் நீர் திரண்டதுதான் மிச்சம். அதற்குப் பின் அவனை அந்தத் தெருப்பகுதியிலேயே காணவில்லை. ஏன் வராமலேயே போனான்? முதன் முறையாய்த் திருட வந்திருப்பானோ? அடையாளம் தெரிந்திருக்குமோ என்ற அவமான உணர்ச்சியோ?              எங்கயாவது திருடிட்டு மாட்டிண்டிருப்பான்...ஜெயில்ல கிடக்கானோ என்னவோ...? என் மனையாள் இப்படிச் சொல்ல...அவனோடு மேலும் கொஞ்சம் பேசாமல் விட்டதுவும், அவன் நிலையை  அறிந்து கொள்ளாமல் போனதுவும் மனதுக்குள் குற்றவுணர்ச்சியை ஏற்படுத்தியது. ஏதேனும் பண உதவி கேட்டிருந்தால் கூடச் செய்திருக்கலாமோ?       தயங்கித் தயங்கி மரியாதையாய்ப் பேசினானே...? அவன் போய் திருடுவானா?                               அப்போதாவது அறைக்குள் படுத்திருந்தேன். இப்போதுதான் உறாலுக்கு வந்தாயிற்றே...! கடந்த மூன்றாண்டுகளாகவே அங்கு வரும்போதெல்லாம் உறாலில்தான் படுக்கிறேன். ஏதோவோர் பாதுகாப்பு உணர்ச்சி இருக்கிறது அவ்விடத்தில். அந்த வீடு எனக்குக் கோயில் போல. அந்த வீட்டோடு நான் தினமும் பேசிக் கொண்டிருக்கிறேன். அது என் தாய் தந்தையர் காலடி பட்ட இடம். என் சார்பான ரகசியங்களை அது உள்ளடக்கியிருக்கிறது. ஒரு தவறு செய்த போது அது என்னைப் பாதுகாத்தது. யாருக்கும் காட்டிக் கொடுக்காமல் காப்பாற்றியது. இன்று அந்தத் தவறை உணர்ந்து நான் தனிமையில் அழுகிறபோது அது என்னை ஆறுதல்படுத்துகிறது. மனிதர்கள் தவறுவது இயற்கை. வருந்தாதே...!  மனிதன் தன் தவறை உணர்ந்து திருந்தி விட்டானானால் அவனுக்கு மன்னிப்பு உண்டுதான். ஆனால் எனது அந்தத் தவறுக்கு மன்னிப்பு உண்டா? இன்னமும் எனக்குச் சந்தேகம் இருந்து கொண்டுதான் இருக்கிறது. தவறு என்று உணர்ந்தபின்னும் அதை வெளியே சொல்ல முடிகிறதா? வெளியே சொல்ல முடியாத தவறு. தவறுகளுக்கெல்லாம் தவறு.  உரிய தண்டனையை நீ அனுபவித்துத்தான் ஆக  வேண்டும். அதுவும் அந்த வீட்டிலேயே நிகழட்டும் என்றுதான் நான் காத்திருக்கிறேன். கிடைக்கும் தண்டனையைக் கண்களை மூடி ஏற்றுக் கொள்வேன். அது திண்ணம். அந்தக் கோயில் அப்போதுதான் புனிதம் பெறும். என் பெற்றோர் மகி்ழ்வர். அவர்கள் ஆன்மா சாந்தியடையும். அது என்னால்தான், எனக்குக் கிடைக்கப்போகும் தண்டனையால்தான் சாத்தியம். இறைவா...திருந்தும் வாய்ப்பளித்த நீ, தண்டனையையும் பெற்றுக் கொடுத்து விடு....என் மனசாட்சிக்கு நான் உண்மையாய் இருந்தாக வேண்டும். அதுவே நான் பிறவியெடுத்ததன் பலன்.

      இம்முறைதான் நீண்ட நாள் வாசம். எப்போது கொரோனா முடியும்...எப்போது ஊருக்குச் செல்வேன் என்பதே எனக்குத் தெரியாது. ஏன், யாருக்குமே தெரியாதுதானே...! அப்படியே தெரிந்தாலும், நிலைமை சரியாகி விட்டாலும் நான் ஊர் கிளம்புவதாயில்லை. இதைச் சாக்கு வைத்து என் தனிமையை நீட்டித்துக் கொள்ளவே விரும்புகிறேன். ஏன்...இப்படியே கடைசிவரை இருந்து விடலாம் என்றும்தான் நினைத்திருக்கிறேன். ரொம்பவும் என்னைப் பிரஷர் பண்ணினால் சொல்லாமல் கொள்ளாமல் எங்கேயாவது போய்விடுவேன் என்று என் பையனையும், மனையாளையும் பயமுறுத்தியிருக்கிறேன்...! கண்காணாமல் போவதற்கு, ஊரிலுள்ள வீட்டிலாவது தனிமையில் கிடக்கட்டும்...எது சொல்லியும் கேட்காததுகள என்னதான் செய்றது? ஆள் இருக்கிறதுக்கு அடையாளமா, ஏதாச்சும் அப்பப்போ பேசவாவது செய்துக்கலாமே...!                    கட்டிலில் அந்த உறாலில் முதுகுக்கு வைத்திருக்கும் தலையணையில் ஆயாசமாய்ச் சாய்ந்து கொண்டு விடாமல் படித்துக் கொண்டிருப்பதும், எதையாவது பார்த்துக் கொண்டிருப்பதும்தான் எனக்கு மிகவும் பிடித்தமான விஷயம். எதிரே ஜன்னல்...வலது புறம் ஒரு ஜன்னல்....எதிர் அறையில் ஒரு ஜன்னல்....இடது பக்கவாட்டு அறையினுள் ஒரு ஜன்னல். இவை எல்லாவற்றிலிருந்தும் காட்சிகள் எனக்குத் தெரிந்து கொண்டேயிருக்கும். படிக்கும் நேரம் தவிர மற்ற நேரம் பூராவும். அதன் வழி தெரியும் காட்சிகளை ரசித்துக் கொண்டிருப்பதே என் வேலை. ரசனைக்கு வயசு உண்டா என்ன?

      வலதுபுறம் அருகிலிருக்கும் இன்னொரு வீட்டு மாடியும் இங்கிருந்து நன்றாகத் தெரிகிறது. அந்த வீட்டுக்காரர் எனக்குத் தெரிய, சும்மா இருந்து நான் பார்த்ததேயில்லை. ஏதாவது செய்து கொண்டேயிருப்பார். குறிப்பாக கொல்லைப்புறம் வைத்திருக்கும் சட்டியில் மறவாமல் நீர் நிரப்பி அன்றாடம் வந்து செல்லும் சின்னஞ்சிறு பறவைகளுக்கு தாக சாந்தி செய்ய உதவுவார். மறக்காமல் கொல்லைப்புற மரம் செடி  கொடிகளுக்கு மண் அணைத்துக் கொடுப்பார். தண்ணீர் ஊற்றுவார். அவர் வீட்டு சாத்துக்குடி அத்தனை ருசி. ஒரு முறை ஊரிலிருந்து வந்திருந்த என்னிடம் ஏழெட்டுப் பழங்களைக் கொண்டு வந்து கொடுத்து ஊருக்குக் கொண்டு போங்கள் என்றார். வீட்டைச் சுத்தம் பண்ணுவது, மாடியைப் பெருக்குவது, கிரில் கம்பிகளைத் துடைப்பது, வாசலில் அவர் வீட்டிலும் இருக்கும் வானுயர் மரங்களை மின்சார வொயர் குறுக்கிடாத அளவுக்கு  கவனமாய் வெட்டி விடுவது...என்று மனம் சோரா வேலைக்காரர் அவர். எது செய்தாலும் அத்தனை ஈடுபாடு. மனிதனை அதுதானே வாழ வைக்கிறது?                                                    நம்ம நட்டு வளர்த்த மரத்த, இ.பி.க்காரன் வந்து எதுக்கு சார் சொல்லாமக் கொள்ளாம வெட்டி வீழ்த்திட்டுப் போகணும்...நாமளே அளவாச் செய்திடுவோம்....சுத்திலும் மரம் இருக்கிறதையே தொல்லையா நினைக்கிறாங்க சார்...அடியோட வெட்டிட்டுப் போயிடறாங்க...யாரையும் கேட்கணும்ங்கிற அவசியமில்லையாம் அவுங்களுக்கு....வேப்ப மரக் காத்தோட மகிமை தெரியுமா அந்த ஆளுங்களுக்கு?      வச்சு வளர்க்க எத்தன வருஷமாச்சு? புரியுமா எவனுக்காச்சும்? வேப்ப மரத்துல எத்தன வகையிருக்குன்னு கேளுங்க...யாராச்சும் சொல்றாங்களா பார்ப்பம்? இதுக்குப் பேரு கருவேம்பு சார்....எத்தனை மருந்து வகைக்குப் பயன்படுது தெரியுமா? நிமிஷமா வெட்டிச் சாய்ச்சிடலாம்...வளர்ந்து வானளாவி நிக்கிறதுக்கு? வெட்டிப் பசங்க.....! - அவர் பேச்சே அலாதிதான். கொல்லைப்புறத்தில் நிலவேம்பு என்று ஒரு மரம் உள்ளதாக வேறு சொன்னார். விட்டால் சந்தன மரத்தைக் கூட நட்டு வளர்த்து விடுவார். அத்தனை இயற்கை ஆர்வலர் அவர்.                                                                                 இந்த என் வீடு கட்டி முப்பதாண்டுகளுக்கு மேல் ஆகி விட்டது. கட்டின பிறகு குடி வந்து அவ்வப்போது சின்னச் சின்ன மாற்றங்கள் செய்து, கிரகப்பிரவேசத்தின்போது இருந்த உருவத்தையே இழந்து விட்டது இந்த வீடு. யாரும் முழு ஐடியாவோடு வீடு கட்டி, நூறு சதவிகித திருப்தியாய் உள்ளே நுழைந்திருப்பார்கள் என்று எனக்குத் தோன்றவில்லை. அந்தத் தெருவில் இருக்கும் அநேக வீடுகள் தங்களை மாற்றிக்கொண்டேயிருந்திருக்கின்றன. என் வீடும் இப்போது பழையதாகிவிட்டதுதான். அங்கங்கே காரை உதிர்ந்து தென்படுகிறது. மாடியில் இருக்கும் தண்ணீர்த் தொட்டிக்கு நேர் கீழே உள்ள சுவரின் உத்திரப் பகுதியில் ஈரத்தின் அடையாளமாய் மேப் வரைந்தது போல் அழுக்கழுக்காய் வட்டங்கள் கோணலும் மாணலுமாய்ப் படிந்திருக்கின்றன. அங்கங்கே பல்லி புள்ளி புள்ளியாய் அசிங்கம் செய்து வைத்திருக்கிறது. ஒட்டடை  செதில்  செதிலாய்ப் படிந்து கொசுக்கள் ஒட்டிக் கொண்டிருக்கின்றன. என்னால் முடிந்த அளவு சுத்தம் செய்யத்தான் செய்கிறேன். அதையும் மீறி, என் பார்வைக்குப் படாமல் போனவற்றைக் காண நேரும்போது, என் சோர்வு எனக்கு நினைவு வந்துவிடுகிறது. மாடியில் கூட ஓடுகள் பெயர்ந்துதான் கிடக்கின்றன. இது சமயம் எல்லாவற்றையும் மராமத்து பார்த்தால் என்ன? எப்படிப்பட்ட சந்தர்ப்பம். வேலைக்கு ஆள் கிடைக்குமா? சோர்வடையும் சிந்தனைகள்.  தனிமையை நாடி வந்த இடத்தில் என்ன இப்படி?          வயதானால் ஏன் மனம் தனிமையை நாடுகிறது? ப்ரம்மச்சரியம், கிரஉறஸ்தாஸ்ரமம், வானப்ரஸ்தம், சந்யாசம்.... - அப்படியானால் இப்போது நான் வானப்ரஸ்தம் என்று கொள்ளலாமா? அதற்கு வனத்தில் சென்றுதான் இருக்க வேண்டுமா என்ன? வானப்ரஸ்தம் என்பது ஒரு வகைத் துறவு. உலகியல் சார்ந்த எல்லா விஷயங்களிலுமிருந்து விடுபட்டு, அவனவனுடைய மன நிறைவுக்குரிய செயல்களை மட்டுமே செய்தபடி வாழ்வதுதான். பிள்ளைகள் வளர்ந்து குடும்ப வாழ்க்கைக்கு  வந்தபின் அதற்கு மேலும் ஒருவன் இந்த வாழ்க்கையில் ஒட்டிக் கொண்டிருக்கக் கூடாது. அது அவனுக்கும் கஷ்டம். அதைவிட அவன் பெற்ற பிள்ளைகளுக்கும் அதைவிடக் கஷ்டம். விரும்பினால் மனைவியையும் உடனழைத்துக் கொண்டு செல்லலாம். வானப்ரஸ்தம் என்றால் வனம் புகுதல்.   வனம் புகுதல் என்றால் காட்டிற்கே சென்று வாழ்தல் என்று பொருளல்ல. காட்டில் இருந்தால் எப்படியிருப்போமோ அப்படியான வாழ்க்கையை தனியே வீட்டின் தனிமையில் அரங்கேற்றுதல்.                                                                      எனது இந்த வானப்ரஸ்தத்திற்கு என் மனைவி என்னுடன் வந்து இருக்கப் போகிறாளா என்ன? அவள் அவன் பையனுடன் இருப்பதில்தான் திருப்தி கொள்கிறாள். சாகும்வரை அவனுக்குச் சமைத்துப் போட வேண்டும். அம்மா கையால் அவனும் சாப்பிட்டுக் கொண்டிருக்க வேண்டும். அவன் மனைவிக்கு இது வசதியாயும் போயிற்று. சமையல் வேலை மிச்சமே...! இல்லாவிட்டாலும் யார் இந்தக் காலத்தில் வீட்டில் சமைக்கிறார்கள். ஃபோனில் ஆர்டர் செய்து விட்டுக் காத்திருக்கிறார்கள். அந்த சுதந்திரம் இப்போது அவர்களுக்குக் கிடைக்காதே...! விருப்பம் நிறைவேறாதே! ஓடுற மட்டும் ஓடட்டும் என்று இருக்கலாம். நாளைக்குக் குழந்தை பிறந்தால் ஒராள் பார்க்க வேண்டாமா? அதற்காகவேனும் வாயைக் கட்டி, வயிற்றைக் கட்டி...வாழ்ந்தாக வேண்டுமே...!                                                                                  எப்படியோ இருந்து விட்டுப் போகட்டும்...எனக்கெதற்கு இந்தச் சிந்தனை? என்னை விட்டால் சரி....அப்படி விட்டுத்தான் விட்டார்கள். போனால் போகட்டுமென்று. வேலை செய்யத்தான் அம்மா இருக்கிறாளே...!                                                                                     பாவி...! வயதான காலத்தில் என்னோடு இருக்க வேண்டுமென்று அவளுக்குத் தோன்றவில்லையே! அவர்களுக்குத்தான் அப்படியென்றால் உனக்குமா? அவர் இருக்குமிடம்தான் எனக்கும்...என்னையும் அவரோட அனுப்பிச்சிடு...! சொன்னாளா...,சொல்வாளா?                             இப்போதுதான் அந்தப் பிரச்னையே எழவில்லையே...! கொஞ்சநாளில் நான் திரும்பி விடுவேன் என்றல்லவா நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்? நானாவது திரும்புவதாவது? தற்செயலாய் நிகழ்ந்த நிகழ்வு இது என்றல்லவா நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்? இது ஊரடங்கை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது என்பதைத் துல்லியமாய்க் கணித்து கன கச்சிதமாய்ப் புறப்பட்டு வந்த எனக்கல்லவா தெரியும் அந்த ரகசியம்? என் அதிர்ஷ்டம் அது மாதக் கணக்கில் நீட்டித்துக் கொண்டிருக்கிறது.                                                        அதற்காக கொரோனாவே...நீ வாழ்க...! என்றா சொல்ல முடியும்? எவ்வளவு வேக வேகமாய்ப் பரவுகிறது? தினம் தினம் சிலராவது செத்துக் கொண்டுதானே இருக்கிறார்கள்? வந்த இடத்தில் அடைபட்டுப் போனேன். என் மனதிற்கு அது இசைவாகவும் போயிற்று. நான் இப்போது கிளம்பிப் போவது நடவாது. எங்கே நான் திரும்ப வந்து விடுவேனோ என்றும் அவர்கள் நினைக்கலாமல்லவா? கொரோனாவைக் கையோடு கூட்டி வராமல் இருந்தால் சரி என்றும் நினைக்கலாமே...!                                                               கொரோனாவே நீ வாழ்க...!அருமையான ஒரு சந்தர்ப்பத்தை நீ எனக்கு ஏற்படுத்திக் கொடுத்தாய். இனி நீ இருந்தாலும், சென்றாலும் நான் இங்குதான். முடிந்த முடிபு இது.             இதுவே எனக்குப் பிடிச்சிருக்குப்பா....நான் இப்டியே, இங்கியே இருந்திக்கிறேன். உங்க அம்மாவ நீ வச்சிக்கோ....எனக்கு இதுதான் வசதியாயிருக்கு....என்னை விட்ரு.....                          கேட்டால் சொல்வதாய்த்தான் இருக்கிறேன். இது ஒன்றே வலுவான சந்தர்ப்பம். இந்தச் சந்தர்ப்பத்தை விட்டால் பிறகு எப்போதும் கிளம்பி வர முடியாது. கிளம்பி வந்ததும், தற்செயலாய் கொரோனா தலை காட்டியதும், வளர்ந்ததும், ஊரடங்கு நீடித்ததும், இன்னும் நீட்டித்துக் கொண்டிருப்பதும். எங்கும் நகர முடியாததும், இதைவிடத் தனிமையில் இருக்க ஒரு வலுவான சந்தர்ப்பம் எவருக்கேனும் அமையுமா?                                                                   ரமணா...நீ...ஜெயிச்சுட்டடா....!!!                                                                   அமைதியாய் பத்மாசனத்தில் கையில் சின் முத்திரையோடு கண்களை மூடி தியானத்தில் அந்த உயர்ந்த படிக்கற்களில் அமர்ந்திருக்கிறேன். பரந்து ஓடும் கங்கையும், இடது புறம் சற்றுத் தள்ளி ஓய்வு ஒழிச்சலின்றி இரவு பகல் பாராமல், விடாமல் எரிந்து கொண்டிருக்கும் சிதையும், என்றோ வாரணாசி தந்த அந்த மெய் சிலிர்க்கும் அனுபவம் என் மனக் கண்ணில் ஓடிக்கொண்டேயிருக்கின்றன!.

                              ------------------------------------------------

 

கருத்துகள் இல்லை:

  சிறுகதை                 தினமணி கதிர் 29.12.2024  பிரசுரம் “நெத்தியடி”             எ தையாவது சொல்லிட்டே இருப்பியாப்பா? – எதிர்பாராத இந்...