07 மார்ச் 2021

நகைச்சுவை நடிகை டி.பி.முத்துலட்சுமி பேசும் புதிய சக்தி - மார்ச் 2021 கட்டுரை

நகைச்சுவை நடிகை டி.பி.முத்துலட்சுமி     கட்டுரை -    உஷாதீபன், 





  சினிமாவில் நடிக்க வேண்டும் என்கின்ற அதீத ஆசை ஆண்களுக்கு மட்டும்தான் சொந்தமானதா? அது பெண்களுக்கும் உண்டு. அதிலும் கிராமத்தில் இருந்து கிளம்பி வந்த ஆசைகள்தான் அதிகம். சின்னச் சின்ன ஊர்களில் கோயில் திருவிழாக்களில், வெவ்வேறு நிகழ்ச்சிகளில் என்று நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்த பலருக்கு எப்படியாவது சினிமாவுக்குள் நுழைந்து விட வேண்டும் என்கிற வெறியே இருந்தது அந்தக் காலத்தில். இந்த ஆசையில் அதிகமாக வீட்டை விட்டு ஓடி வந்தவர்கள் ஆண்கள்தான் என்று சொல்லலாம். பெண்கள் அப்படி ஓடி வந்ததாகக் கேள்விப்பட்டதில்லை. செய்தியாகவும் வந்ததில்லை.  எப்படியாவது பிழைத்துக் கொள்வோம். சின்ன வேலைகளில் இருந்து கொண்டு, அரைப் பட்டினி, கால் பட்டினி என்று கழித்துக் கொண்டாவது முயற்சி செய்வோம் என்று இல்லாமையின் கோரப் பிடியில் சிக்கி, தளர்ந்து விடாமல்  முனைந்த பலர் நட்சத்திரமாகி இருக்கிறார்கள். இந்தக் காலத்திலும் அந்த ஆசை  இல்லாமலா இருக்கிறது? ஐம்பதுகள், அறுபதுகளிலேயே சினிமாவில் நடிப்பதற்கென்று வீட்டை விட்டு ஓடி வந்து பைத்தியமாய் அலைந்தவர்களைப் பற்றிய கதைகள் அப்பொழுதே எழுதப்பட்டிருக்கிறது. எங்கேனும் ஒரிரு யதார்த்தம் இல்லாமல் அம்மாதிரி எழுதப்படுவது சாத்தியமா? என்பதை எண்ணிப் பார்க்க வேண்டியிருக்கிறது.                                      ஆனால் சென்னையில்தான் உறவினர் இருக்கிறாரே அங்கு சென்று, பிறகு சினிமாவுக்காக முயற்சி செய்து எப்படியும் அதில் நுழைந்து விடலாம் என்கிற ஆசையோடு, நம்பிக்கையோடு, உறுதியோடு வீட்டில் சொல்லிக் கொள்ளாமல் கிளம்பி வந்தவர் இவர். தன்னால் நன்றாக நடிக்க முடியும், தன் நடிப்பின் மூலம் மக்களைத் திருப்திப்படுத்த முடியும், தொடர்ந்து வாய்ப்புக்களைப் பெற முடியும் என்கிற அசாத்தியமான தன்னம்பிக்கையோடு வந்து வெற்றி கண்டவர்.                      வெடுக்...வெடுக்....என்ற வசன உச்சரிப்பு...அதற்கேற்ற கச்சிதமான கண்ணசைவு, சிரிப்பு, தலையாட்டல், உடலசைவு இவையெல்லாவற்றோடு ஒத்துழைக்கும் நடிப்பு என்று தன்னோடு நடிப்பவர்களிலிருந்து  தன்னை வேறுபடுத்தி, நினைத்துப் பார்த்து ரசிப்பதுபோல் பண்ணியவர். இவரது  நடிப்பாகத் தெரியவில்லையே இவர் இயல்பே இதுதானோ என்று நினைக்கும் வண்ணம் இயற்கையாக அமைந்திருந்தது முத்துலட்சுமியின் நடிப்புத் திறமை.                                    நடிப்பவர்களுக்கு குரல் வளம் என்பது முக்கியமாகக் கைகொடுக்க வேண்டும். ஆண்கள் என்றால் கணீரென்ற அந்த கனத்த குரலும், பெண்கள் என்றால் துல்லியமாய் வெண்கலத்தில் அடித்ததுபோல் பளீரென்று இருப்பதான சிலீர் குரலும், வசன உச்சரிப்பில் “ளகர“ “ழகர“ “லகர“ ங்கள் பிறழாது சரளமாய் ஏற்ற இறக்கங்களோடு பேசும் திறமையும் ஒரு நடிகைக்கு மிகவும் முக்கியமான லட்சணங்களாய், அது இவருக்குப் பெரிய ப்ளஸ்ஸாகி, யாரும் குறை சொல்ல முடியாத அளவில் தொடர் வாய்ப்புக்களைக் கொண்டு வந்து சேர்த்தது.  பெண் நடிகைகளின் குரல்களில் குறிப்பாகக் கவனித்துக் கண்டுபிடிக்க வேண்டும் என்பது போலல்லாமல், கேட்ட மாத்திரத்தில் சட்டென்று புரிந்து கொள்ளும் வண்ணம்,  இவர்தானே என்று பெயர் சொல்லும் வகையில் அமைந்த அடையாளமான குரல் டி.பி.முத்துலட்சுமியினுடையது.                          டி.பி. முத்துலட்சுமி.  பெயரே மனதுக்கு மிகவும் நெருக்கத்தை உண்டுபண்ணுகிறதுதானே? ஏதோ பக்கத்து வீட்டுப் பெண் போல.... நடிப்பும் அப்படித்தான்.  அந்தப் படத்தின் கதைக்கென்று  தனி காரெக்டர் செய்வதுபோலவே தோன்றாது. ..சாதாரணமாய்ப் பேசி விட்டுப் போவதாய்த்தான் தோன்றும்...அப்படி அவர் பேசுவதும், உருண்டு குண்டான உடம்பை வைத்துக் கொண்டு டுடுக் டுடுக் கென்று வெட்டி வெட்டி நடிப்பதும் நமக்கு அவர் மேல் இயல்பாய் ஒரு பிரியத்தை ஏற்படுத்தும். சொல்லும் வசனங்களை அவரது நடிப்பு அப்படி அர்த்தப்படுத்தும்.  நகைச்சுவை நடிகைகள் படத்துக்குப் படம் வருவார்கள். எல்லா கதாநாயக, நாயகி நடிகர், நடிகைகளோடும் நடித்திருப்பார்கள். நகைச்சுவை நடிகருக்கு ஜோடியாகவும் வந்து களை கட்டுவார்கள். ஆனால் அந்தப் படத்தில் அவர் இருக்கிறார் என்பதோடு மட்டுமல்லாமல் அவரைத் தனித்து ஞாபகப்படுத்திக் கொள்வதுபோல் காட்சிகளுக்கான அவசியம் இல்லாமல் போயிருக்கும். ஆனால் இவரை ஞாபகப்படுத்துவதுபோல்  நகைச்சுவைக் காட்சிகள் அமைந்தது இவருக்குத்தான் என்றே சொல்லலாம். நான் சொல்வது ஐம்பது, அறுபதுகளிலான கருப்பு வெள்ளைப் படங்களில். ராஜாராணிக் கதைப் படங்களிலும், சமூகப் படங்களிலும் இவருக்கென்று என்றும், இன்றும் கேட்பது போல், பார்ப்பதுபோல் பிரத்தியேகமாகப் படங்கள் அமைந்து விட்டன என்பதையே...!         அம்மா...வெள்ளையம்மா....வந்திருச்சுடியம்மா உன் காளைக்கு ஆபத்து.....என்று மைதானத்தில் சீறிப்பாயும் அந்த முரட்டுக் காளையை அடக்க வெள்ளையத்தேவன் (ஜெமினிகணேசன்)  களம் இறங்கியதும், முத்துலட்சுமி பேசும் அந்த வசனம் பார்ப்போரைப் பளிச்சென்று  சிரிக்க வைக்கும்.   அதற்குள் அவசரப்படாதே...! என்று பத்மினி (வெள்ளையம்மாள்) அலட்சியமாக அதை மறுக்க, பிறகு காளையை அடக்கிய பின் வெள்ளையத்தேவனின் வீரத்தில் மயக்கம் கொண்டு காலரியை விட்டு பள்ளம் இருப்பதை அறியாமல் தன்னை மறந்து நகர்ந்து கீழே இறங்க யத்தனிக்கும் நேரம்,  ம்...ம்...ம்....பார்த்து...பார்த்து....அது சரி....என்று கீழே விழுந்து விடாமல் வெள்ளையம்மாளைத் தடுக்கும் அந்தக்      காட்சி மிகவும் ஸ்வாரஸ்யம். உண்மையிலேயே அவர் பெரிய வீரர்தானடி....என்று பத்மினி சொல்ல.அவரா...எவரு? .. என்று கேட்க, ...இனிமே பேரச் சொல்ல முடியுமா...அவுரு...இவரு...அத்தான்... அப்டித்தான் அந்தம்மா வாயிலிருந்து வரும் என்று கேலி செய்ய....பத்மினி அந்த இடத்தில் இருக்கையில் அந்தக் காட்சிதான் எப்படி அழகுபட்டுப் போகிறது?   வீரபாண்டியக் கட்டபொம்மன் படத்தில் வைத்தியர் வேஷம் போட்டுக் கொண்டு பத்மினி, ஜெமினிக்கு சிகிச்சை செய்ய ஓடி வர, அழைத்துக் கொண்டு வரும் முத்துலெட்சுமியை தனக்கான ஜோடியாக நினைத்து ஆசைப்பட்டு,  அவரை மடக்கப் பார்க்கும் ஏ.கருணாநிதியும்,இங்க கும்பிட்டாத்தான் உள்ளே அனுமதி என்று  அவர் பண்ணும் கிராக்கியும் கூடிய  நகைச்சுவை காட்சிகள் என்றும் ரசிக்கத் தக்கவை. அந்தப் பொல்லாத காளை அவரை ரொம்பவும் காயப்படுத்திவிட்டதடி...என்று வெள்ளையம்மாள் வருந்த...அப்டியா...உனக்கு வேண்டியவருன்னு அதுகிட்டச் சொல்லி வச்சிருந்தீன்னா...சும்மா இருந்திருக்கும்...என்று முத்துலட்சுமி கிண்டலடிக்கும்  அந்தக் காட்சியும்...இது சொல்றத நம்பிட்டு இப்படி வருத்தப்படுறியே...என்று கருணாநிதியை இடிக்கும் காட்சியும் படத்தில் எந்த இடத்திலும் தொய்வு விழக் கூடாது என்று கவனமாய் எடுக்கப்பட்ட  ரசனை மிகுந்த காட்சிகளாகும்.                நடிப்பு என்பது யாரிடம்தான் இல்லை. ஒருவருக்குள் இருக்கும் திறமையை வெளிக் கொண்டுவருவதுதான் முக்கியம். ஒருவர், தன் திறமையைத் தானே உணர்ந்து முனைவதுதான் சிறப்பு. டி.பி.முத்துலட்சுமிக்கு அந்த ஆர்வம் இருந்தது. ஆசையும் இருந்தது. முயற்சியும் கை கொடுத்தது.  படங்களும் கை கொடுத்தது.            

1931 ல் தூத்துக்குடியில் பிறந்த இவர் அதன் பின்பு ஏறக்குறைய பத்தொன்பது ஆண்டுகள் கழித்துத்தான் திரையுலகத்திற்குள் நுழைகிறார். நகைச்சுவை நடிகையான குமாரி சச்சுவுக்கு குழந்தை நட்சத்திரமாகவே திரையுலக வாய்ப்புக்கள் தேடி வந்து நடிப்புலகமே நிலைத்து விட்டதுபோல், எல்லோருக்கும் அமைவதில்லையே...!    முத்துலட்சுமியின் நடிப்புலகப் பிரவேசம் அவரது மாமா மூலம் நிகழ்கிறது. இயக்குநர் திரு.கே.சுப்ரமணியத்திடம் இருந்த திரு.எம். பெருமாள் என்பவர்தான் முத்துலட்சுமியின் மாமா.  அவரிடம் சென்று நிற்க...அவர் இவருக்கு நடனமும், பாட்டும் கற்றுக் கொடுக்கிறார். எஸ்.எஸ்.வாசனின் சந்திரலேகாவில் குழுவோடு சேர்ந்து நடனமாடும் வாய்ப்பு வந்து சேருகிறது.  அதன் பிறகுதான் மாடர்ன் தியேட்டர்ஸின் பொன்முடி பட வாய்ப்பு கைக்கு வந்து சேருகிறது. 1950 களில் திரையுலகில் காலடி எடுத்துக் வைக்கும் இவர், பொன் முடி படத்தில் நடித்து பிறகு படிப்படியாக முன்னேறி 2008 வரை தனது திரையுலகப் பயணத்தைத் தொடர்கிறார். சுமார் 350 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து தன்னை நிலைநிறுத்திக் கொண்ட புகழ் பெற்ற நடிகையாக டி.பி.முத்துலட்சுமி பவனி வந்தார். 1951ல் அறிஞர் அண்ணாவின் ஓர் இரவு படத்தில் கதாநாயகன் டி.கே.சண்முகம் அவர்களுக்கு மனைவியாக  பவானி என்ற கதாபாத்திரத்தில் நடித்தார்.                                     திரும்பிப்பார் படத்தில் தங்கவேலுவுக்கு மனைவியாக வந்து ஊமையாக நடித்த இவர், அவரோடு சேர்ந்து அறிவாளி படத்தில் போட்ட போடு, அடித்த கொட்டம் யாரால்தான் மறக்க முடியும். அந்தப் படத்தில் வாய் பேசாத ஊமை என்றால், அறிவாளி படத்தில் கல்வியறிவில்லாத,  ஒன்றுமறியாத வெள்ளந்தியான சேரிப் பெண்ணாக  வந்து தங்கவேலு இவர் மேல் பிரியம் கொண்டு மணந்து, பிறகு அவர் சொல்வதையெல்லாம் தப்புத் தப்பாகப் புரிந்து கொண்டு தப்பாகவே  செய்து, அதையெல்லாம் சரி சரியென்று தங்கவேலு  தலையிலடித்துக் கொண்டு அட்ஜஸ்ட் செய்து சகித்துக் கொண்டு  நகரும் காட்சிகள் விழுந்து விழுந்து சிரித்து வயிறு புண்ணாக வைக்கும். அந்த வெகுளித் தனம், ஒன்றுமறியாத பாவம் தத்ரூபமாய் இருக்கக் கண்டதும்தான் படம் முழுவதுமான நகைச்சுவைக் காட்சிகளின் வெற்றிக்கு ஆதாரம். ஏன், அறிவாளி படத்திற்கே ஆதாரத் தூண் அதுதான் என்றே சொல்லலாம்.                                                     ஒரு படத்தில் நகைச்சுவைக் காட்சிகள் மட்டும் அதுவரை எந்தப் படத்திலும் இல்லாத வகையில் சிறப்பாக அமைந்து விட்டால் அது படத்தின் வெற்றிக்கே மிகவும் பக்க பலமாய் அமைந்து விடும் என்கிற உண்மை அறிவாளி போன்ற திரைப்படங்களுக்கு பக்காவாகப் பொருந்தும்.   இந்தப் படத்தில் முத்துலட்சுமியின் பெயர் தங்கலட்சுமி...தங்கவேலுவின் பெயர் முத்துவேலு....பெயர் வைத்திருப்பதைப் பார்த்தீர்களா? ஏன்...இப்டி வச்சிக்கலாமே...என்று சுலபமாய்த் தேர்வு செய்தது போலிருக்கும்.  அது ஒரு பிரச்னையே இல்லை...கதையும் காட்சிகளும்தான் முக்கியம் என்று கருத்தாய் திரைப்படங்களை  உருவாக்கிய காலம் அது.                          முத்துலட்சுமியைத் திருமணம் செய்து கொண்டு கொடைக்கானல் உறனிமூன் சென்றிருப்பார் தங்கவேலு. அங்கு இவர்களைப் போன்றே புது மணத் தம்பதியர் அவரைப் பார்க்க வருவார்கள். அவர்கள் முன் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று தங்கலட்சுமிக்கு சொல்லிக் கொடுப்பார் முத்துவேல்.   இதென்ன கண்ணுக்கு கீழே?...மையா...நீ எழுதிக்கிட்டியா...இல்லீங்களே...நீங்கதான எழுதினீங்க......ஓகோ...கொஞ்சம் அதிகமாப் போச்சு போலிருக்குது..பரவால்ல...இருந்தாலும் அழகாத்தான் இருக்குது....அது கெடக்கட்டும்....நீ முகத்துலல்லாம் மாவு பூசிக்கிட்டு இங்கயேயிரு... நான் அங்க போய்   இருந்துக்கிட்டு...ஒரு பெல் அடிப்பேன்....இதோ வந்துட்டேங்க....அப்டீங்கணும்...ம்...ம்...ரெண்டு பெல் அடிப்பேன்...இங்கருந்து கடகடகடன்னு வந்து அங்க நின்னுடணும்....சரி.....மூணு பெல் அடிப்பேன்....உட்கார்ந்துடணும்....ம்...நாலாவது மணி அடிச்சா? ன்னு கேட்க....ஒரு முறை முறைத்து...சோத்துக்குஓடணும்...நாலாவதுமணியா...?பெல்லு...பெல்லு.....ம்...பல்லு....ம்ம்....உடைச்சுகோ.........கல்லு கொண்டாந்து தாரேன் உடைச்சுக்கோ.....பல்லு இல்ல...பெல்லு...பெல்லு........ம்...! வல்ல....சரி...அப்புறம் சொல்லிக்கோ....தயாராயிருக்கியா....என்று விட்டு உறாலுக்குள் அவர்களை வரவேற்கச் சென்று அமர்வார்...வந்தவர்கள் புது மணத் தம்பதிகளான உங்களைப் பார்த்தி்ட்டுப் போகலாம்னு வந்தோம் உங்க மனைவியை வரச் சொல்லுங்களேன்...என்க...அதுக்கென்ன கூப்பிட்டாப் போச்சு....என்று ஒரு பெல் அடிப்பார்...திடு திடுவென்று தங்கலட்சுமி ஓடி வந்து டபால் என்று நிற்க....முகத்தில் பூசப்பட்ட பௌடர் அழிக்காமல் அப்பியபடி இருப்பதைப் பார்த்து, சார்...அம்மா என்ன உள்ளே சுண்ணாம்பு அடிச்சிட்டிருந்தாங்களோ? என்று வேலைக்காரப் பையன் கேட்க.. டேய்...போடா...என்று இவர் விரட்ட...வந்தவர்கள் சிரித்து விடுவார்கள். .கிணி...கிணி...கிணி....என்று தொடர்ந்து பெல்லை அடிக்க....பயந்து போய் முத்துலட்சுமி உள்ளுக்குள் ஓடி விடுவார். ...                                                                          சிரிக்காத தம்பி......என்று சொல்லி வள்ளுவர் அழைத்தவுடன் கிணற்றில் நீர் இறைத்துக் கொண்டிருந்த வாசுகி...தண்ணீர் வாளியை அப்படியே பாதியில் விட்டு விட்டு ஓடி வந்து நின்ற அந்தக் கதையைச் சொல்லி சமாளிக்க...பார்த்தியா....எப்டி உடனே வந்து நிற்கிறாங்கன்னு...நான் உன்னை ஆயிரம் தடவை கூப்பிட்டு ஆயிரத்தி ஒண்ணாவதா நான் எழுந்து வந்து உன்னைப் பார்க்க வேண்டிர்க்கு...என்று வந்தவர் தன் புது மனைவியிடம் சலித்துக் கொள்வார். அவர்களும் இனிமே சரியா நடந்துக்கிறேங்க...என்று பவ்யமாய் சொல்ல....இப்படி ஒவ்வொரு காட்சியும் அறிவாளி படத்தில் தங்கவேலுவின் சமாளிப்பாகவே தொடரும். படத்தின் பெயரும் அறிவாளி. கதாநாயகனின் சார்பான கதையும், நகைச்சுவைப் பாத்திரத்தின் சார்பான காட்சிகளும் ஆக இரண்டுமே அறிவுபூர்வமானவைகளாக அமைக்கப்பட்டிருக்கும். அறியா மனைவியின் அத்தனை தவறுகளுக்கிடையிலும் அவள் மீது அவர் வைத்திருக்கும் அன்பு மாறவே மாறாது. விரும்பிக் கல்யாணம் பண்ணியவளை...எவ்வளவு குறை இருந்தாலும் சமரசம் செய்து கொண்டுதான் போயாக வேண்டும் என்கிற பாடத்தை  அழுத்தமாய் உணர்த்தும் காட்சிகள் இவை.                     அறிவாளி படத்தின் நகைச்சுவைக் காட்சிகளுக்கென்றே தனியே ஒரு கட்டுரை எழுதலாம். சேரிப் பெண்ணின் மீது மனதைப் பறிகொடுத்து மணந்து கொண்டுவிட்டு, அவரை வைத்துக் கொண்டு ஒவ்வொன்றுக்கும் தங்கவேலு என்ன பாடுபடுகிறார் என்பதற்குப் பொருத்தமான நச்சென்ற காட்சிகள் அவை. ஆனால் ஒன்று. எதிலும் அவர் தன்னைத்தான் சலித்துக் கொள்வாரேயொழிய மனைவியைத் திட்டவே மாட்டார். அவளின் அறியாத்தன்மையை அப்படியே உணர்ந்தவராய் எதிர்நோக்குவார்.                                                   வீட்டினுள், இருட்டாருக்குதே...என்று புரியாமல்  தவித்து நின்று கொண்டு  கொட்டுக் கொட்டென்று நிற்கும் மனைவியைப் பார்த்து. நுழையும் முத்துவேல்...தங்கலட்சுமி...எங்கயிருக்கிற? என்று கத்த, என்னாங்க...நீங்க எங்க இருக்குறீங்க...? என்று இவர் கேட்க.....ஏன் விளக்கேத்தல...? அதையேன் கேட்குறீங்க...அந்தப் பையன் எங்கயோ போயிட்டான்... இந்த சீமெண்ணைப்  புட்டிய எங்க வச்சேன்னு தெரில..விளக்கேத்த முடில...வீடெல்லாம் ஒரே இருட்டா இருக்குது....அதான் தவிச்சிட்டிருக்கேன்....என்று தங்கலட்சுமி சொல்ல..சீமெண்ணப் புட்டியா...? உறய்யோ..? என்று சுவிட்சைப் போட லைட் எரியும்..  அட....பரவால்லியே....? என்று இவர் வியந்தவாறே...நா இதத்தான் தேடிட்டிருந்தேன்...என்றவாறே வெத்தலை பாக்குத் தட்டை எடுப்பார்...நாந்தான் ஏற்கனவே உங்கிட்ட சொல்லியிருக்கனே...கதவுக்குப் பின்னால சுவிட்சு போர்டு இருக்குது.ன்னு.....?  ஏன் சீமெண்ணப் புட்டி கேட்குறே...?  அய்யய்யோ...நா மாட்டேன்...அதத் தொட்டாப் புடிச்சிக்குமாம்ல...? என்க...ம்...ஒம்மேல ஆச...அது புடிச்சிக்குது...கரன்ட் வர்ற கம்பி இருக்கே...அதத் தொட்டாத்தான் புடிச்சிக்கும்....இது சுவிட்ச்சு...இதத் தொட்டா புடிச்சிக்காது...அப்டின்னா ஆனு...இப்டின்னா ஆஃப்பு....என்று விரலை மேலும் கீழுமாக ஆட்டிச் செய்து காண்பிப்பார். என்னது? ஆனா.....என்றுபுரியாமல்தங்கலட்சுமிகேட்க...ம்...ஆணு..பொண்ணு...ஓர்ப்படியா...கொழுந்தியா...எல்லாம் ஒரு குடும்பமே அங்க இருக்குது...என்று சலித்துக் கொள்வார். ம்ம்...நா...என்னத்தப் பண்ண...அதாவது...அதுக்குப் பேரு என்ன தெரியுமா...என்ன? சுவிட்ச்....என்னது சொச்சியா? ம்...சொச்சி...இடியாப்பம்...ஊத்தப்பம்...முறுக்கு மசால்வடை....என்னா பலகாரம் பேரக் கொண்டு அதுக்கு வைக்கிற...? நீ வா....விவரமா சொல்றேன்....அதுக்குப் பேரு...சுவிட்ச்ச்சு....என்று அழுத்திச் சொல்லிக் கொடுக்க...சூழ்ச்சியா...? என்று இவர் வாயில் நுழையாமல் கேட்க...ம்....சூழ்ச்சி...வஞ்சனை, பொறாமை....இப்டி எல்லாம் இருக்கு இந்தத் தட்டுல...வையி...என்றவாறே வைத்தல பாக்குத் தட்டை வாங்குவார்...                         இப்படி இப்படத்தில் இன்னும் அநேகக் காட்சிகள் உள்ளன. இன்றைய ஸ்பெஷல் என்று மனைவியை பூரி செய்யச் சொல்லிக் கேட்டு...தெரியாது என்று சொல்ல...தெரியாதா...வா...நா சொல்லித் தர்றேன்...என்று இவர் உட்கார்ந்து...ஒரு பெரிய்ய்ய அண்டாவ எடுத்துக்கணும்...என்று ஆரம்பிக்க...அதான் எனக்குத் தெரியுமே...அதான் எனக்குத் தெரியுமே...என்று மாவு எடுக்க...பிசைய என ஒவ்வொன்றுக்கும் முன்னமே தெரியுமே என்று பாட்டுப் பாட...எரிச்சல் அடைந்து...எல்லாத்தையும் ஒண்ணாச் சேர்த்து நல்ல்ல்லாக் கலக்கி எடுத்து வை...நா வந்து அதுல குதிக்கிறேன்....என்று கோபப்படுவார். பிறகு அடக்க ஒடுக்கமாக் கேளு...எதச் சொன்னாலும்...அதேன் எனக்குத் தெரியுமே...அதேன் எனக்குத் தெரியுமே..அதென்ன...என்னெத்தத் தெரியும்...?பெரிய்ய்ய...இவ மாதிரி... என்று கடிந்து விட்டு சொல்லிக் கொடுப்பார். இந்த நகைச்சுவைக் காட்சிகள் டணால் தங்கவேலுவுக்கு மட்டும் அமைந்த சிறப்புக் காட்சிகள் அல்ல. டி.பி.முத்துலட்சுமியையும் அகலாது நினைவில்   வைத்திருக்கும் காட்சிகள். அந்த வெகுளித்தனமும், வெள்ளந்தியான பேச்சும், படிப்பறிவில்லா பாமரத்தனமும் அதற்கேற்ப அமைந்த அவரது இயல்பான நடிப்பும்...நம்மால் மறக்க முடியாதவை.                                          இம்மாதிரி காரெக்டர்கள் இருந்தால் இவரைத் தவிர வேறு யாரையும் போடக் கூடாது என்று நிர்ணயித்ததுபோல் இருவர் உள்ளம் படத்தில் இவருக்கு ஒரு வேஷம் அமைந்திருக்கும். நிறையப் பிள்ளைகளைப் பெற்ற தாயாக, காது கேட்காதவராக, வீட்டின் பெரியண்ணன் எம்.ஆர்.ராதாவின் மனைவியாக இப்படத்தில் திறம்பட நடித்திருப்பார்.  கீழே அம்மா, தம்பியுடன் ராதா பேசிக் கொண்டிருக்கையில் குழந்தைகள் குதூகலித்து அம்மாம்மா...அப்பா வந்தாச்சி....என்று ஓடி வந்து முத்துலட்சுமியிடம் சொல்ல...காது கேளாத அவர்....பப்பர்மிட்டா...இல்லடா...ஆயிப் போச்சி...என்று சொல்வார்....பப்பர்மிட் இல்லம்மா...அப்பா வந்தாச்சின்னு சொன்னேன்....அப்பளமா...? சாப்பிடுறப்ப போடுறன்டா அப்பளம்....ஓயாம அப்பளம் சாப்பிடக் கூடாது.....ஐயோ...அப்பளம் இல்லம்மா...அப்பா வந்தாச்சின்னு சொன்னேன்...என்று குழந்தை திருத்துவான்....                 எம்.ஆர்.ராதா அவருக்கு ஒரு உறியரிங் எய்டு வாங்கி வந்திருப்பார். இந்தத் தொல்லை இனிமே உனக்கு இருக்கக் கூடாதுன்னுதான் இத வாங்கியாந்திருக்கேன்...என்று ஆசை மனைவியிடம் சொல்ல....செவிட்டு மிஷினா....என்று காதில் மாட்டிக் கொண்டு, பேசுவதெல்லாம்...அடெ...அடெ...நல்லாக் கேட்குதே....என்று அவர் குதூகலிப்பது இன்றைக்கும் பார்த்துக் கொண்டிருக்கலாம் போலிருக்கும்.                                                குழந்தைகளுக்கு அவர் வாங்கி வந்திருக்கும் விளையாட்டு சாமான்களை ஆளுக்கொன்றாகக் கொடுத்து விரட்டும்போது ஆசையாய் கணவனைப் பார்த்து முத்துலட்சுமி நின்றுகொண்டிருக்கும் காட்சி அவ்வளவு அழகாய் இருக்கும்.   தனக்கு என்ன வாங்கி வந்திருப்பான் என்ற எதிர்பார்ப்பு  தொனிக்கும். குழந்தைகளை விரட்டிவிட்டு...அவரைப் பார்த்து...கண்ணம்மா...என்று ஆசையோடு ராதா நெருங்க...வெடுக்கென்று சொடுக்கிக்கொண்டு உள்ளே செல்வார் முத்துலட்சுமி. அஸ்வதி, பரணி....ன்னு எல்லாத்தியும் பார்த்தேன் கார்த்திக் எங்க...தூங்குதா?  என்று அவரைப் பார்த்துக் கேட்க....இவர்...பின்னே கவலையிருக்காதா...? இத்தனை வருஷமா எங்கயிருந்தீங்கன்னே தெரில...? என்று கோபப்பட...ஐயோ...நா ஒண்ணு கேட்குறேன்...நீ ஒண்ணுசொல்றியே...என்று அலுத்துக் கொள்ள...குழந்தைகள்லாம் இன்னும் சாப்பிடல...என்று மேலும்  சொல்வார்.   ராமச்சந்திரா...ராமச்சந்திரா...என்றவாறே அந்த  செவிட்டு மிஷினை எடுப்பார் எம்.ஆர்..ராதா.                                                                  புத்தி சிகாமணி பெத்த பிள்ளை...என்று ஆறாவதாய் வந்த செல்லப்பிள்ளையை முத்துலட்சுமி தாலாட்டும் காட்சியில் ராதாவும் கூடச் சேர்ந்து பாடும் அந்தப் பாட்டு இன்றும் மூத்த தலைமுறை தமிழ் ரசிகர்கள் மறந்திருக்க மாட்டார்கள். நடிகன் என்பவன் எந்தப் பாத்திரத்தையும் திறம்படச் செய்யும் திறன் படைத்தவனாய் இருத்தல் வேண்டும் என்பதற்கு இப்படத்தில் எம்.ஆர்.ராதா ஏற்றிருக்கும் வேஷம் ஒரு முக்கிய உதாரணம். கொடுமையான வில்லனாகவே பார்த்த நமக்கு, கதாநாயகிக்கு அப்பாவாக வந்தாலும் வில்லன்தான் என்று நடித்தவருக்கு, காமெடி கலந்த, குடும்பஸ்தனான வழக்கறிஞருமான வேடம் புதுமையாகவும்,  ரொம்பவும் ரசிக்கும்படியும் அமைந்திருக்கும். இவருக்கு அவர் பொருந்தினாரா அல்லது அவருக்கு இவர் பொருந்தினாரா என்று வியக்கும் வண்ணம் நட்சத்திரத் தேர்வு படத்தின் இயக்குநரை நினைத்துப் பெரிதும் பாராட்ட வைக்கும்.                                                            இலக்கியத்தில் அதிகமாக எழுதிக் குவித்தவர்கள் இருப்பார்கள். ஆனால் எதுவும் பேசப்படாது. ஒன்றிரண்டு அல்லது சில என்று மட்டும் எழுதியிருப்பவர்கள் காலத்துக்கும் நினைவு கூறும் படைப்புக்களாகத் தந்திருப்பார்கள். நிறைய எழுதிக் குவித்தவர்களிடத்திலும் சிலவை மட்டும் திரும்பத் திரும்பப் பேசப்பட்டுக் கொண்டேயிருக்கும். முத்துலட்சுமி முன்னூறு படங்களுக்கு மேல் நடித்திருந்தாலும், எல்லாவற்றிலும் அவர் தன் நடிப்பை இயல்போடு வழங்கியிருந்தாலும், அவரது சில குறிப்பிட்ட படங்கள் மட்டும் திரும்பத் திரும்ப நினைவு கூறத் தக்கவை காலத்துக்கும் மறக்க முடியாதவை. அவையே அவரது கிளாஸிக்ஸ்.                         அன்னையின் ஆணை, தங்கப்பதுமை, கொஞ்சும் சலங்கை, அடுத்த வீட்டுப் பெண், டவுன் பஸ், படிக்காத மேதை, திருவருட்செல்வர், போர்ட்டர் கந்தன், வாழ வைத்த தெய்வம் என்று வெற்றி பெற்ற படங்களிலெல்லாம் இவர் கண்டிப்பாக இருப்பார். எம்.ஆர்.ராதா, தங்கவேலு, சந்திரபாபு, ஏ.கருணாநிதி, டி.எஸ்.பாலையா ஜோடியாய் நடித்தவர்.                                   பழகுவதற்கு இனிமையானவர் என்றும் என்னுடன் சில படங்களில் நடித்தவர் என்றும் ஜெயலலிதாவால் நினைவு கூறப்படுகிறார். 1957 ல் ஆரவல்லி திரைப்படத்தில் சிங்காரவல்லி என்ற பாத்திரமேற்று திறம்பட தன் நடிப்பை வெளிப்படுத்தியவர். 1958 ல் எம்.ஜி.ஆரின் நாடோடி மன்னனில் நடித்தார். விரைவில் கல்யாணம் நடக்கணும் என்று புருஷன்....புருஷன்...புருஷன்...என்று சதா பூஜை செய்து கொண்டேயிருப்பார். அப்படி ஒரு காரெக்டர் அவருக்கு. உன் பூஜைப்படி, வேண்டுதல்படி உனக்கு சீக்கிரத்திலேயே ஒரு நல்ல புருஷன் கிடைப்பான் என்று எம்.ஜி.ஆர். சொல்லப்போக, அது அப்படியே நடந்தது என்று பெருமிதம் கொள்கிறார். படம் முடியுமுன்பே இந்த நல்ல காரியம் அவர் வாக்குப்படியே நடந்து விட, தம்பதியரை அழைத்து விருந்து கொடுத்தார் எம்.ஜி.ஆர். என்கிறது செய்தி. அன்பே வா படத்தில் டி.ஆர்.ராமச்சந்திரனுடன் கலர்ஃபுல்லாக பணக்கார தம்பதியராய் உலா வருவார்.                        எத்தனையோ நடிகர்களுடன் நடித்திருந்தாலும், தங்கவேலு அண்ணனுடன் நடித்ததில்தான் தனக்கு திருப்தி என்று கூறும் இவர், தங்கவேலு பந்தா இல்லாதவர் என்றும், கலைவாணருக்குப் பிறகு தனக்கான நகைச்சுவைக் காட்சிகளைத் தானே அமைத்துக் கொண்டவர் என்றும், மொத்தத் திரைப்பட வாழ்க்கையில் அபசகுனமாய் எங்கும் எப்போதும் யார் பற்றியும், எதுபற்றியும் ஒரு வார்த்தை தப்பாய்ப் பேசாதவர் என்றும் அவர்பற்றிச் சொல்லி கண்கலங்குகிறார். டி.ஆர்.ராஜகுமாரிக்காக சில படங்களில் நடனமும் ஆடியிருக்கிறார் என்றால் இவரது தேவை எவ்வளவு முக்கியப்பட்டிருக்கிறது என்பதும், எல்லோரின் பிரியத்துக்கு உரியவராக விளங்கியிருக்கிறார் என்பதும் புலப்படும். எல்.வி.பிரசாத் டைரக் ஷனில், கலைஞர் கருணாநிதி வசனத்தில், கண்ணதாசன் பாடல்களோடு வெளிவந்த பிராம்மண சமுதாயக் குடும்பக் கதையான தாயில்லாப்பிள்ளை என்கிற  படத்தில் டி.எஸ்.பாலையாவுக்குத் தங்கையாக பிராம்மண மாமியாக வந்து கெடுதல் செய்பவராக இவர் நடித்த நடிப்பு அப்படத்தை இப்பொழுதும் பார்ப்பவருக்கு இவர் மீது மிகுந்த வெறுப்பை ஏற்படுத்தும். இவரது கணவராக அய்யா தெரியாதைய்யா ராமாராவ் நடிப்பார். இருவரும் அந்தக் கதையின் முக்கியத் தூண்களாக இருந்து படத்தை நகர்த்துவதில் தங்கள் நடிப்பை வெற்றிகரமாக வெளிப்படுத்தியிருப்பார்கள்.                                       1931ல் தூத்துக்குடியில் தந்தை பொன்னையா பாண்டியனுக்கும் தாயார் சண்முகத்தம்மாளுக்கும்  மகளாய்ப் பிறந்து தமிழ்த் திரையுலகில் வெற்றிக் கொடி நாட்டிய நகைச்சுவை, குணச்சித்திர நடிகை  டி.பி.முத்துலட்சுமி. அவர்கள் கலைமாமணி விருது பெற்றவர். கணவர் பி.கே.முத்துராமலிங்கம்.  இவரது வளர்ப்பு மகன்தான் தற்போது இயக்குநராக இருக்கும் டி.பி.கஜேந்திரன் அவர்கள் என்று அறியப்படுகிறார். விசுவின் உதவியாளராக இருந்து சில வெற்றிப் படங்களைத் தந்தவர் அவர் என்பதை நாம் அறிவோம். கலைவாணர் விருதும் பெற்றவர் என்கிற பெருமைக்குரிய நடிகை  டி.பி.முத்துலெட்சுமி அவர்கள் 29.05.2008 ல் சென்னையில் தனது 77-வது வயதில் காலமானார் என்பதும், கடைசிக் காலத்தில் நடக்க முடியாமல் சக்கர நாற்காலியில்தான் இருந்து கழித்தார் என்பதுமே இம்மாதிரி சிறந்த கலைஞர்களைப் பற்றி நாம் அறியும் அபூர்வச் செய்திகளில் சோகத்தை கொண்டு வந்து சேர்க்கிறது.

                          ------------------------------------------------

 

 

கருத்துகள் இல்லை:

  'குற்றம் புரிந்தவன்'  - சிறுகதைத் தொகுப்பு - புஸ்தகா.கோ.இன்  - ல் வெளியிடப்பட்டுள்ளது.    (www.pustaka.co.in) --------------------...