09 பிப்ரவரி 2021

செய்யும் தொழிலே தெய்வம்-திறமைதான் நமது செல்வம்-நடிகர் கள்ளபார்ட் நடராஜன் -பேசும் புதிய சக்தி-பிப்.2021

செய்யும் தொழிலே தெய்வம்-திறமைதான் நமது செல்வம்-நடிகர் கள்ளபார்ட் நடராஜன்                                






                                                          திரும்பத் திரும்ப இதையேதான் சொல்லியாக வேண்டியிருக்கிறது. திறமைசாலிகளை, அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்றியவர்களை, செய்யும் தொழிலை தெய்வமாய் மதித்தவர்களை, என்னுடைய திறமைதான் எனக்கு சொத்து என்று தான் நடிக்கும் படங்களில் தன் முத்திரையை அழுத்தமாய்ப் பதித்தவர்களை, பயபக்தியோடு ஒழுக்கமும், மரியாதையுமாய் தொழில் செய்தவர்களை போதிய அளவு பயன்படுத்திக் கொள்ளாது தமிழ்த் திரையுலகம் விலக்கித்தான் வைத்திருந்திருக்கிறது. வேண்டுமென்றேவா அப்படி நடந்தது? நமக்குத் தெரியாது. ஆனால் நடந்தது பலருக்கும்.                                                             படமெடுத்த படாதிபதிகளின் விருப்பமோ அல்லது இயக்குநர்களின் விருப்பமோ அல்லது கதைக்கேற்ற பாத்திரங்களில் இவர் பொருந்த மாட்டார் என்கிற முரணான எண்ணமோ அல்லது கதாநாயகர்களின் சிபாரிசு இல்லாமல் போனதோ இவற்றில் எதுவோ ஒன்று அவர்களிடையே தோன்றி முக்கியமான நடிகர்களை கால நிர்ணயம் கருதாது ஒதுக்கியே வைத்திருக்கிறது தமிழ்த் திரையுலகம். கௌரவம் கருதி அவர்களும் வாய்ப்பு வரும்போது வரட்டும் என்று காத்திருந்திருக்கிறார்கள். தன் திறமை மீது கௌரவம் கொண்டவர்கள் வலியச் சென்று வாய்ப்புக்கு நிற்பதில்லை என்பதை வழக்கமாய்க் கொண்டிருக்கிறார்கள். ஆனால் தேடி வரும் வேஷம் எத்தனை முக்கியமானதாய் இருந்தாலும் சரி அல்லது எத்தனை சாதாரணமாய் இருந்தாலும் சரி, மிகுந்த மரியாதையோடும், பொறுப்புணர்ச்சியோடும் ஏற்றுக் கொண்டு கடமையுணர்வோடு, விரும்பிச் செய்து நிறைவு கண்டிருக்கிறார்கள்.                                        இதனை அந்தத் தொழிலில் இருந்தவர்கள் உணர்ந்ததைவிட, தமிழ்நாட்டின் சினிமா ரசிகர்கள், அதுவும் அந்தக்கால மூத்த தலைமுறைப் பெரியவர்கள் மிகுதியாக உணர்ந்திருந்தார்கள் என்பதுதான் உண்மை. சினிமாவைப் பற்றிக் கூட்டம் கூட்டமாய் நின்று, வீட்டுத் திண்ணைகளிலும், குழாயடிகளிலும், ஆற்றுப் படுகைகளிலும், தெரு முக்குகளிலும், பொதுக்கூட்டங்கள் நடக்கும் மைதானப் பெருவழிகளிலும்  பேசிப் பேசிப் பொழுது கழித்த காலங்களில் அம்மாதிரி நடிகர்களை விடாது நினைவு கூர்ந்து அவர்களைத் தொடர்ந்து தமிழ்ப் படங்களில் காணமுடியவில்லையே என்று வேதனைப்பட்டவர்கள், ஆதங்கப்பட்டவர்கள்  அவர்கள்.                               அன்று அவர்களுக்கு சந்தோஷமான பொழுது போக்கு என்று இருந்தது சினிமா, நாடகம் போன்றவைதான். நாடகங்கள் எல்லா ஊர்களிலும் நடைபெற்றதில்லை. தொலை தூரத்தில் நடக்கும் நாடகங்களுக்குச் சென்று பார்க்கும் பழக்கம் மக்களிடத்தில் இல்லை. ஏன், உள்ளூரிலேயே என்றேனும் அபூர்வமாய் நடந்துவிடும் நாடகங்களுக்குக் கூட காசு கொடுத்துப் போய்ப் பார்க்கும் வழக்கம் நம் மக்களிடம் அதீதமாய் என்றுமே இருந்ததில்லை. அவர்களை ஈர்த்தது சினிமாதான். அதுவும் குறைந்த செலவில் நிறைந்த திருப்தியாய். வெறும் நாலணாக் காசு அவர்களுக்கு ஏக சந்தோஷத்தைக் கொடுக்கக் கூடிய மதிப்பு மிகுந்த துட்டு.. அதனால் திரைப்படங்களைத் தொடர்ந்து விடாது பார்க்கும் பழக்கம் நம் மக்களிடையே இருந்து வந்தது என்பதுதான் உண்மை.                                                                   வீட்டில் ஒரு விசேடம் என்றால் அந்த விசேடத்தைச் சிறப்புச் செய்யும் நிகழ்வாக எல்லோரும் சேர்ந்து ஒரு சினிமாவுக்குச் செல்வது என்பதுவே மிகுந்த சந்தோஷத்தையும், உறவு ஒற்றுமையையும் ஒங்கச் செய்யும் முக்கிய நிகழ்வாய்  இருந்தது. அதனால் திரையுலகில் இருந்தவர்களுக்குக் தெரிந்திருந்ததைவிட, ரசிகர்களாய் இருந்த தமிழ் நாட்டு மக்களுக்கு தமிழ்த் திரை நடிகர்களைப் பற்றிய அபிப்பிராயங்கள் அத்துபடி. மதிப்போடும், மரியாதையோடும், ஆசையோடும் அவர்களை நினைவு கூர்வதில் அந்த ரசிகர்களின் அன்பும், பாசமும், அரவணைப்பும் துல்லியமாய் வெளிப்படும்.                                                                                  இந்தப் படத்தில் இவருக்கு பதிலாக இவரைப் போட்டிருக்கலாமே, இன்னும் சிறப்பாகச் செய்திருப்பாரே, இந்த இடத்தில் ஒரு நடனக் காட்சி அமைத்திருக்கலாமே, இந்த நடனத்திற்கு அவரை  ஆட விட்டிருக்கலாமே, பிரமாதப்படுத்தியிருப்பாரே என்று பொருத்தமான நடிகர்களை மனதில் வைத்து அவரின் தொடர்ந்த வரவிற்காக, அவரின் படங்களுக்காக ஆசை ஆசையாய்க் காத்திருந்து தங்கள் ஆதரவினைத் தெரிவித்தவர்கள் தமிழ் சினிமா மூத்த தலைமுறை ரசிகர்கள்.          அவர்களின் தவிர்க்க முடியாத பார்வையில் பட்டு, கவனத்தில் நின்று போன பல முக்கிய நடிகர்கள் பட்டியலில் கள்ளபார்ட் நடராஜனுக்குக் கட்டாயம் இடம் உண்டு. கிடைக்கும் பாத்திரத்தை உற்சாகமாய்ச் செய்கிறார், ஊக்கமுடன் நடிக்கிறார், தன்னை ஞாபகப்படுத்துவது போல் நிலை நிறுத்திக் கொள்கிறார் என்றால் அந்தப் பாராட்டுக் குரியவராய் என்றும் விளங்கியவர் இவர். முதல் காட்சியில் தோன்றும்போதே அவரை நினைவு வைத்துக் கொள்வதுபோல் உற்சாகமாய்த் தன்னை வெளிப்படுத்தி, ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர். குறிப்பாக இன்றைய மூத்த தலைமுறை சினிமா ரசிகர்கள் அவரை நன்கு அறிவார்கள்.                                     கதாநாயகக் கனவுகளோடுதான் திரையுலகில் பலரும் நுழைகிறார்கள். கிடைத்த பாத்திரத்தை ஏற்று நம் திறமையை நிரூபிப்போம், என்றேனும் ஒரு நாள் அது நம் கைக்கு வந்தே சேரும் என்கிற நம்பிக்கையோடு முன்னேறுகிறார்கள். காலத்தின்  கோலம் அவர்களை அவர்கள் ஏற்றுக் கொண்ட சின்னச் சின்னப் பாத்திரங்களிலேயே நிலை நிறுத்தி விடுகிறது. அடுத்தடுத்து அந்த மாதிரி வேஷங்களே கிடைக்கும் போது எப்படியாவது நடிப்புலகில் இருந்து கொண்டிருந்தால் சரி, மக்களின் மனங்களில் பவனி வந்து கொண்டிருந்தால் சரி என்று சமாதானப்படுத்திக் கொண்டு தொடர வேண்டிய நிலைக்கு ஆளாகி விடுகிறார்கள். போலீஸ் வேஷம் தரித்தால் பிறகு அடுத்தடுத்த படங்களில் போலீஸ்தான். இன்ஸ்பெக்டர் ஆவதற்கே வருடங்கள் பிடிக்கும். ப்ரமோஷனில்தானே அந்தப் பதவியும் வந்து சேரும். அதுபோலத்தான்.                     அபாரமான திறமையிருந்தும், எந்தப் பாத்திரத்திற்கும் பொருந்தும் முகவெட்டும், களையும், நடிப்புத் திறனும் இருந்தும் அந்தத் திறமைக்குத் தீனி போடுகிறார்போல வேஷங்கள் கிடைக்காமல், வரும் வேஷங்களைச் சலிக்காது திருப்தியோடு  செய்து செய்து நடிப்புலகில் விடாது தன்னை நிலை நிறுத்திக் கொண்ட அற்புதமான நடிகர் திரு.  கள்ளபார்ட் நடராஜன்.                                                                                       இவரை நினைக்கும்போது முதலில் நமக்கு ஞாபகம் வருவது இவரது நடனம்தான். டப்பாங்குத்து நடனம் என்பது கோஷ்டி டான்சாக இருக்கையில் அதில் கவனிக்கத்தக்க பங்காக இவரது நடனம் அமைந்திருக்கும். டப்பாங்குத்து என்பதை கேலிப்பேச்சாகப் பயன்படுத்துவது உண்டு. ஆனாலும் அப்படி ஒரு பாடல் போட, துள்ளலோடு இசையமைக்க, அந்தந்தப் படங்களின் இசையமைபபாளர்கள் நிறைய மெனக்கெட்டார்கள். கதையின் சோகத்தைக் கலைக்கவும், இறுக்கத்தைத் தளர்த்தவும் என்று பொருத்தமான இடத்தில் பார்வையாளர்கள், ரசிகர்கள் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகிக் கொள்ளட்டும் என்று சேர்த்தார்கள்.                                                      ஆனால் சில முக்கியமான இயக்குநர்கள் அந்தப் பாடல் காட்சியையும் கதைக்கு, அதன் நீட்சிக்கு உதவட்டும் என்று கதையின் முக்கியத் திருப்பமாய் ஏதோவொன்றை அதில் இடைச் செருகல் செய்து சுவை கூட்டினார்கள். டப்பாங்குத்துப் பாடல்முடிந்ததும் அடுத்து வரும் காட்சிக்கு அந்தப் பாடல் காட்சியின் நாயகன்-நாயகி வருகை, இருப்பு, காதல் அல்லது வில்லனின் சதிச் செயல் ஆகிய சின்னச் சின்னச் சேர்க்கை ரொம்பவும் பொருந்திப் போனதும், படம் பார்ப்பவர்களுக்கு அதுமேலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் விதமாயும் அமைந்து போனது இயக்குநர்களின் திறமையைப் பறைசாற்றுவதாய் இருந்தது.                   உதாரணமாய் பாவ மன்னிப்புப் படத்தின் ஒரு கோஷ்டி டான்ஸ் பாடல் காட்சியை இங்கே எடுத்துரைப்பது பொருத்தமாய் இருக்கும். குப்பத்தில் நடக்கும் முதியோர் கல்வி மூன்றாவது ஆண்டு விழா. அங்கு ஆடலும் பாடலும். சாயவேட்டி தலையில கட்டி..என்ற பாடலுடன் கோஷ்டி டான்ஸ். அந்தக் காட்சியை ரசிப்பது போல் வந்து நிற்கும் ரஉறீம் (நடிகர்திலகம்) அப்போது அதைப் பார்க்க வரும் மேரி (தேவிகா) இஷ்டமாய் ரஉறீம் அருகில் வந்து நெருங்கி நின்று மெல்லக் கைத்தாளம் போட்டு பாடலையும், நடனத்தையும் ரசிக்கும் காட்சி. இதுதான் இடைச் செருகல் என்பது. அடுத்து மலரும் அவர்களின் காதலுக்கான உணர்வுபூர்வமான அந்தக் காட்சிக்கான ஜனரஞ்சகமான அடித்தளம் இது. இப்படியான காட்சியமைப்பதிலும், கதை நகர்த்தலையும் பொருத்தமாய் செய்வதில் வல்லவர் டைரக்டர் ஏ.பீம்சிங். அப்படித்தான் பழைய கறுப்பு வெள்ளைத் திரைப்படங்களில் கோஷ்டி நடனக் காட்சிகள் அமைந்தன. அந்த மூன்று நிமிடப் பாடலிலும் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து அமைத்திருப்பார்கள். கள்ளபார்ட் நடராஜனின் கோஷ்டி நடன டப்பாங்குத்துக் காட்சிகள் அப்படித்தான் அமைந்திருந்தன.                                              வண்ணக்கிளி படத்தில் “சித்தாடை கட்டிக்கிட்டு” என்ற நையாண்டி மேளம்-நாதஸ்வரத்தோடு கூடிய பாட்டிற்கு இவரது டான்சை ரசிக்காதவர்கள் கிடையாது. அந்தப் படத்திலேயே எந்தக் காட்சியையும் தவற விட்டாலும் விடுவார்கள், இந்தப் பாடலை யாரும் தவற விடமாட்டார்கள். அந்த அளவுக்கு துள்ளலும், துடிப்புமான பாடல் படத்தின் வெற்றிக்கு ஒரு காரணமாய் அமைந்தது என்பதுதான் உண்மை.                                                                  அதுபோல் குமுதம்  படத்தில் மாமா...மாமா...மாமா......ஏம்மா...ஏம்மா...ஏம்மா....என்ற பாடலும் மிகவும் பிரபலம். இந்தப் பாடலில் எம்.ஆர்.ராதாவும் ஆடுவார். இந்த இரண்டு பாடல்களுமே இம்மாதிரி ஆட்டத்துக்கு கள்ளபார்ட் நடராஜன்தான் என்று அவரை நிலை நிறுத்தியிருந்தது.       தெய்வப்பிறவி படத்தில் லட்சுமி ராஜம் என்ற நடிகையோடு சேர்ந்து “இவர் கானா...அவர் பானா...இவர் எல்லாந்தெரிஞ்ச சோனா....என்ற பாடலுக்கு ஸ்டெப் போட்டு  அழகாக ஆடியிருப்பார். பரத நாட்டியம் ஆடி நடன முத்திரை பதிப்பது ஒரு வகை. இவர் தனது டப்பாங்குத்து ஆட்டத்தினால் தனது முத்திரையை ரசிகர்கள் மனதில் பதித்தவர்.          தஞ்சாவூரைச் சொந்த ஊராகக் கொண்ட குடும்பம். இவரது தந்தை ராமலிங்கம்பிள்ளை நாடகங்களில்தான் நடித்து வந்தார். அதில் கள்ளபார்ட் வேஷத்தை அவர் தொடர்ந்து நடித்து வந்ததால், கள்ளபார்ட் ராமலிங்கம் என்ற பெயர் அவருக்கு வந்தது. அத்தோடு மட்டுமல்லாது சதாரம் படத்தில் திருடனாக வேறு நடித்து விட்டதால் அந்தப் பெயர் நிலைத்து விட்டது. கள்ளபார்ட் ராமலிங்கத்தின் பையன் திரையுலகில் தனது சிறந்த நடிப்பாலும், நடனத் திறமையாலும், குரல் வளத்தாலும் பெயர் பெற்றதால் டி.ஆர்.நடராஜன் அப்படியே கள்ளபார்ட் நடராஜன் ஆனார். புகழ்பெற்ற வெற்றித் திரைப்படமான வண்ணக்கிளியில் இவரது பெயர் “கழுகு”. இவரது தாயார் செங்கமலத்தம்மாளும் நடிகைதான்.                                                     கள்ளபார்ட் நடராஜனின் முக அழகிற்கு, ஒப்பனை செய்தால் கச்சிதமாய் கதாநாயக அந்தஸ்துப் பெறும் அவரின் பொருத்தமான நடிப்புத் திறமைக்கு ஏற்ற வேடங்கள் கிடைக்கவில்லை என்றுதான் சொல்லியாக வேண்டும். பெரிய கோயில் என்கிற படத்தில் கதாநாயகனாய் நின்றார். அத்தோடு மட்டுமல்லாமல் நாகமலை அழகியில்  இரட்டை வேடங்களையும் செய்தார். இவரது திறமை மீது நம்பிக்கை வைத்ததன் அடையாளம்தானே அது? அப்படத்தில் இவருக்கு வில்லனாய் நடித்தவர் நடிகவேள் எம்.ஆர்.ராதா என்ற சீனியர் நடிகர்.     திறமையிருந்தால் ஊக்குவிப்பவர் நடிகவேள்.              இங்கே நாம் கவனிக்க வேண்டியது ஒன்றுதான். திரைப்படங்களில் தொடர்ந்து வலம் வருவதற்குத் திறமை மட்டும் இருந்தால் போதாது...அதிர்ஷ்டமும் கூடவே ஒத்துழைத்து கைகோர்த்து  வந்தால்தான் அழகாக இந்தக் கனவு உலகில் பவனி வர முடியும் என்பதற்கு இவரைப் போல் எத்தனையோ நடிகர்கள் முன்னுதாரணமாய் இருந்திருக்கிறார்கள். ஆனாலும் கள்ளபார்ட் நடராஜன் நடித்த திரைப்படங்கள் அத்தனை பாத்திரங்களுக்கு மத்தியிலும் அவரை ஞாபகப்படுத்துவதுபோல்தான் இருந்தன என்பதைச் சொல்லித்தான் ஆக வேண்டும்.                                                             தெய்வப்பிறவியில் நடிகர்திலகத்திற்குத் தம்பியாய் வருவார். கெட்ட பழக்கங்கள் கொண்ட பையனாய் பெரியவனான பின்பும் அந்த வீம்பும், வீராப்பும், தெறித்துப் பேசுதலும், தறுதலையாய்த் திரிதலும்-கோபம் கொள்ளுதலும் அசாத்தியமாய் மிளிரும் அவரது நடிப்பில். எஸ்.எஸ்.ஆர் இவரது அண்ணியின் (பத்மினி)  தம்பி., எம்.என்.ராஜத்தைக் காதலிக்க, அவள் தனக்கே உரியவள், அவளிடம் பேசுவதற்கு உனக்கு என்ன உரிமை என்று கேட்டு பட்டென்று அவரைக் கன்னத்தில் அறைந்து விடும் அந்தக் காட்சி மிகவும் உணர்ச்சிகரமான ஒரு கட்டம். இந்த சம்பவத்தை இத்தோடு விட்டு விட வேண்டியதுதான், அத்தானுக்கும், அக்காவுக்கும் தெரிந்தால் எங்கள் குடும்பமே பிரிந்து விடும் அபாயம் உண்டு என்று கூறி எம்.என்.ராஜத்திடம் யாருக்கும் தெரிய வேண்டாம் என்கிற உறுதிமொழியைப் பெற்றுக் கொண்டு கிளம்புவார் எஸ்.எஸ்.ஆர்.         ஆனால் அந்தப் படத்தின் கிளைமேக்ஸ்  காட்சியில் கள்ளபார்ட்டுக்குத்தான் முக்கியத்துவம். இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்தி, மனைவி மேல் சந்தேகம் கொள்ள வைத்து, தண்டச் சோறாய் இருந்து, நன்றி கெட்டவர்களாய் வஞ்சித்து,  சொத்துக்களையும் கொஞ்சம் கொஞ்சமாய் அபேஸ் செய்யத் திட்டமிட்டு செயல்பட்ட, அநாதையாய் அந்தக் குடும்பத்தில்  நுழைந்த சுந்தரிபாய் மற்றும் தாம்பரம் லலிதாவை அடித்து விரட்டி, தற்கொலை செய்து கொள்ளப்போன பத்மினியையும், எஸ்.எஸ்.ஆரையும் காப்பாற்றி மீண்டும் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவச் செய்வார்.                                                     கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின் முத்து முத்தான வசனத்தில் அமைந்த அந்தப் படத்தின் மலையுச்சியில் அமைந்த இந்தக் காட்சியில் அண்ணி...அண்ணி..என்னை மன்னிச்சிடுங்க அண்ணி, தற்கொலை  வேண்டாம் அண்ணி....என்று அவர் பத்மினியை நோக்கிக் கத்திக் கொண்டே பாசத்தோடு அணுகுகையில், அது நேரம்வரை தன் கணவனின் தவறுகளை உணர்ந்து உளமார்ந்த மன்னிப்புக்குக் கூட இரங்காத பத்மினி,    கள்ளபார்ட் நடராஜன் மீது (மனோகர்)  தன் தம்பியை விட அதிக அன்பு வைத்திருந்த பத்மினி, அந்தக் குரலுக்குக் கட்டுப்பட்டு, தற்கொலை எண்ணத்தைத் தவிர்த்து, அவரை நோக்கிக் கையை நீட்டிக் கொண்டு ஓடி வரும் காட்சி காண்போர் உள்ளங்களையெல்லாம் நெகிழ்த்தி விடும்.                                  தெளிவான வசன உச்சரிப்பும், அதற்கேற்ற உணர்ச்சி பாவ வெளிப்பாடும் அந்தக் கால நடிகர்களுக்குப் பெரும் சொத்தாக இருந்தது என்பது மிக மிக உண்மை. கள்ளபார்ட்டுக்கு அதுதான் அவரை ஞாபகப்படுத்தும் அடையாளமாக இருந்தது. கர்ணன் திரைப்படத்தில் என்.டி.ஆருக்குக் கணீரென்று குரல் கொடுத்தவர் திரு ஸ்ரீநிவாசன் என்ற பழம்பெரும் நடிகர். இவரின் தமிழ் உச்சரிப்பும், குரல் வளமும் யாராலும் மறக்க முடியாதது. நடிகர்திலகத்தின் அன்னையின்  ஆணை திரைப்படத்தில் சாம்ராட் அசோகன் நாடகக் காட்சியில் புத்த பிட்சுவாக வந்து அன்பும், கனிவும் பொங்கும் அருமையான வசனங்களைப் பேசி நம் மனதில் அதை ஒரு மந்திர உச்சாடனமாகப் பதிக்கச் செய்தவர் இவர்.                                                                      அன்புதான் இன்ப ஊற்று, அன்புதான் உலக ஜோதி, அன்புதான் உலக மகா சக்தி.... புத்தம்...சரணம்...கச்சாமி...சங்கம்...சரணம்...கச்சாமி...தர்மம்...சரணம் கச்சாமி....என்று சொல்லிக் கொண்டு இவர் போர் நடந்து முடிந்த அந்தப் போர்க் களக் காட்சியில் சாம்ராட் அசோகனை நெருங்கும் கட்டம். இன்றும் யாராலும் மறக்க முடியாதது.            பூஜ்யரே...போதும் நிறுத்தும், தெளிந்த நீர்போல் இருந்த என் உள்ளத்தில்  அறிவுக் கல்லெறிந்து குழப்பி விட்டீர்...என்று அசோகர் கர்ஜிப்பார்.                                                                     இதை ஏன் இந்த இடத்தில் சொல்ல வேண்டியிருக்கிறது என்றால் கர்ணன் படத்தில் அத்தனை கச்சிதமாய் என்.டி.ராமாராவுக்கு அமைந்த அந்தக் குரல் தவிர்த்து, என்.டி.ஆரின் ஆரம்ப காலப் படங்களிலும், தெலுங்கு டப்பிங் படங்களிலும் அவருக்குக் குரல் கொடுத்தவர் நமது கள்ளபார்ட் நடராஜன்தான் என்பதை அறியவேண்டும் என்பதற்காகவே. குரல் வளம் ஒரு நடிகரைத் தக்க இடத்தில் தக்க வைக்கும். பேசும் போது தெளிவாக இருக்கும் குரல், ஒலிபெருக்கியில், மைக்கில் வசன உச்சரிப்பின்போது கனத்து, கணீரென்று இருக்கிறதா என்பதைச் சோதனை செய்துதான் ஏற்பார்கள். அந்த வலிமை கள்ளபார்ட்டின் குரலுக்கு இருந்தது அவருக்கான சிறப்புப் பெருமை.                                                                            நாடகங்களில் சிறப்பாக வெளிப்படுத்தும் கூத்துக் காட்சிகளை சிறந்த நளின அசைவுகளோடு,குதூகலிக்கும் டப்பாங்குத்துக் கேளிக்கை நடனத்தோடு செய்யும் திறமை பெற்றவர் என்பதால்தான் நடிகர்திலகம் ஒன்பது வேடம் ஏற்ற நவராத்திரி படத்தின் தெருக்கூத்துக் காட்சியை முழுக்க அமைக்க கள்ளபார்ட்டைத் தேடினார்கள். ராஜ...ராஜமஉற...ராஜ வீரப் ப்ரதாபன்...என்று தொடங்கும் அந்தக் கூத்துக் காட்சியை இன்றும் நம்மால் மறக்க முடியாது என்பது உண்மைதானே? அந்தக் காட்சிக்கான பெருமை நடிகையர் திலகம் மற்றும் நடிகர்திலகத்தின் நடிப்போடு மட்டுமின்றி, அந்தக் கூத்திற்கான முழு வசனமும் சார்ந்ததுதானே...! அதைப் பேசிய முறைதானே?                                                           எம்.எஸ்.விஸ்வநாதன், எம்.எஸ்.சுப்புலட்சுமி, எம்.எஸ்.சுவாமிநாதன் என்பதுபோல், எஸ்.வி.சுப்பையா, எஸ்.வி.ரங்காராவ், எஸ்.வி.சகஸ்ரநாமம் என்பதுபோல் இவர்களெல்லாம் ஒரே குடும்பமா, உறவினர்களா என்று எப்படிக் கேட்கக் கூடாதோ...அதே போல் திரையுலகில் அவர்தானா இவர், இந்த நடிகர்தானா அதில் வந்தது, அவரா இதில் இப்படி நடிக்கிறார், இதில் எந்த நடராஜன்?  என்றெல்லாம் சந்தேகக் கேள்விகளையும் கேட்கக் கூடாதுதான் ஆனால் அப்படி வலிமையான சந்தேகக் கேள்விகளை வீசுகிறாற்போல் நம் தமிழ்த் திரையுலகில் மூன்று நடராஜன்கள் அந்தக் காலத்தில் ஒரே சமயத்தில்  இருந்திருக்கிறார்கள்.                                     மந்திரிகுமாரி படத்தில் “வாராய்...நீ வாராய்“““என்று பாடி நடித்த எஸ்.ஏ.நடராஜன் பிரபலமான அந்தக் கால வில்லன். மனோகராவில் இவரது நடிப்பு பார்க்க ரொம்பவும் கொடுமையாக இருக்கும். வில்லனாய் நடித்துப் புகழ்பெற்று, நம்பியாருக்குச் சரியான போட்டியாய், ஏன் நம்பியாரையே மிஞ்சியவராய்ப் பேசப் பட்டவர். எமக்குத் தொழில் “கற்பனை உலகில் நாட்டுக்கு உழைத்தல்” என்கிற அடையாளத்தோடு சொந்தப் படம் தயாரித்தவர் இவர்.                                                 அதுபோல் டி.எஸ்.நடராஜன் என்றொரு நடிகரும் இருந்தார். நடிகர், வசனகர்த்தா, பாடலாசிரியர் என்று பல திறமை படைத்தவர் இவர். எம்.ஜி.ஆர் நடித்த என் தங்கை படத்திற்கான மூலக் கதை இவர்தான். அது முதல் “என் தங்கை நடராஜன்” என்றே இவர் அழைக்கப்பட்டார். மேலும் புரட்சி நடிகரின் விக்ரமாதித்தன் படத்தின் வசனங்களை எழுதியவர் இவர்தான். அத்தோடு சுமங்கலி என்ற படத்தின் பாடல்கள் முழுவதையும் எழுதிய பெருமை இந்த டி.எஸ்.நடராஜனுக்கு உண்டு.                                                                                           இந்த மூன்று நடராஜன்களிலும் அதிகப்படங்களில் நடித்தவர் கள்ளபார்ட் நடராஜன்தான். தில்லானா மோகனாம்பாள் படத்தில் கோயில் பேஷ்காராக அவர் வரும் ஒரே ஒரு காட்சி ரொம்பவும் ரசிக்கத்தக்கது. கோயிலில் வைத்து போட்டி நடத்துவது கூடாது அதற்கு இது இடமில்லை என்று நாகேஷ் போங்காணும்....சொல்லுங்காணும்....என்று இவரைத் தூண்டிவிட்டு, இழுத்து வந்து நிறுத்தி சொல்ல வைக்கும்போது இவர் பேசும் அழுத்தமான வசனம் நம்மால் மறக்க முடியாதது. ஆனால் அந்தக் காட்சியில் இவர்தான் கள்ளபார்ட் நடராஜன் என்பதை எத்தனைபேர் உணர்ந்தார்கள் என்கிற சந்தேகம் இன்றும் நமக்கு இருந்து கொண்டுதான் இருக்கிறது. பழைய கருப்பு வெள்ளைப் படங்களிலிருந்து அவரை அறிந்தவர்களால் மட்டுமே சட்டென அவர்தான் என்பதை உணர்ந்து கொள்ள முடியும். மற்றவர்களுக்கு சொன்னால்தான் புரியும்.                                          ரேவதியின் அப்பாவாக கமலின் தேவர் மகன் படத்தில் இவர் நடித்ததை யாராலும் மறக்க முடியாதுதான். ஒரு பாடல் காட்சியிலும் முழுக்க வருவார். அங்கங்கே சின்னச் சின்ன வேடங்களாய்த்தான் இவருக்குத் தொடர்ந்து கிடைத்தது என்பதுதான் வருத்தத்திற்குரிய விஷயம். ரசிகர்களின் விருப்பத்திற்குரிய நடிகராக இருக்கும் ஒருவர் அம்மாதிரி சிறிய வேடங்களில் வருவதை அந்தக் கால சினிமா ரசிகர்கள் மன வருத்தத்தோடேயே எதிர்கொண்டார்கள் என்பதுதான் உண்மை. அது அந்த நடிகர்கள் மேல் அவர்கள் வைத்திருந்த மதிப்பின், அன்பின் அடையாளம்.                                     மதுரை வீரன், சபாஷ் மீனா, ஒளி விளக்கு, குலதெய்வம், அஜித் நடித்த அமராவதி, விஜயகாந்தின் பெரிய மருது, தமிழச்சி, கைதி கண்ணாயிரம், குமுதம், வண்ணக்கிளி என்று வெற்றிப் படங்களிலெல்லாம் இருந்திருக்கிறார் கள்ளபார்ட் நடராஜன். தொடர்ந்து நடித்துத்தான் வந்திருக்கிறார் என்றாலும் ஒரு கட்டத்தில் நின்று போனதுதான் துயரம். 1990 ல் கலைமாமணி பட்டம் தமிழக அரசால் வழங்கப்பட்டிருக்கிறது. பிறகு 1991 ல் தென்னிந்திய நடிகர் சங்கத்தால் கலைச்செல்வம் என்ற பட்டம் வழங்கிக் கௌரவப்படுத்தப்பட்டிருக்கிறார்.                             செங்கமலத் தீவு என்ற படத்தில் நாயகனாய் நடித்த இவருக்கு இன்றும் காதில் தேனாய் ஒலிக்கும் ஒரு பாடல் உண்டு. மலரைப் பறித்தாய்...தலையில் வைத்தாய்...மனதைப் பறித்தாய் எங்கே வைத்தாய்....என்ற வரிகளை நினைத்துப் பாருங்கள்...உடனேயே ப்பி.பி.ஸ்ரீநிவாஸின் குரல் நம் ஞாபகத்திற்கு வந்து விடும். வில்லனாகவும் சிற்சில படங்களில் வலம் வந்தார் இவர் அது மதராஸ் டூ பாண்டிச்சேரி மற்றும் ஏ.பி.நாகராஜனின் கண்காட்சி....ஒளிவிளக்கு படத்தில் சௌகாரை கற்பழிக்கும் காட்சி கூட உண்டு இவருக்கு. நடிப்பு என்று வந்து விட்டால் எல்லாம் செய்துதானே ஆக வேண்டும்? அதுவும் நடிப்புத்தானே!  உயிர்மூச்சு இருக்கும்வரை நடித்துக் கொண்டேயிருக்க வேண்டும் என்கிற வேட்கை இல்லாத நடிகர் என்று ஒருவரையேனும் சொல்ல முடியுமா? வலியச் சென்று வாய்ப்புக் கேட்கும் பழக்கமில்லாதவராக வேண்டுமானால் இருக்கலாம். நடிப்பு என்கிற திறமையைத் தன்னம்பிக்கையோடு தன்னகத்தே கொண்டிருக்கும் எந்த நடிகரும், வாய்ப்புக்காகத் தேடி அலைந்ததாகச் சரித்திரமில்லை. அதுதான் அவர்களின் கௌரவம். அதே சமயம் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளிக்குப் பிறகு வரும் வாய்ப்புக்களையும் அவர்கள் கௌரவம் பார்த்துத் தவிர்த்ததில்லை. காரணம் நடிப்பு என்கிற அவர்களின் தொழில் வெறும் பணத்துக்காகச் செய்யும் தொழிலாக இருந்ததில்லை என்பதுதான் சத்தியமான உண்மை. அதை ஆத்மார்த்தமான ஒன்றாக அவர்கள் மதித்தார்கள். உடல், பொருள், ஆவி என்று  தங்கள் உயிர் மூச்சோடு கலந்து வைத்துக் கொண்டு வாழ்ந்தார்கள்.                                                                  அப்படியில்லையென்றால் திரு.கள்ளபார்ட் நடராஜன் அவர்களுக்கு அம்மாதிரியான ஒரு தருணத்தில் சாவு வருமா? நீங்கள் அவர் நடித்த படங்களின் எந்த ஸ்டில்களை வேண்டுமானாலும் எடுத்துப் பார்த்துக் கொள்ளுங்கள்...அவருக்கு நடிப்பின் மீது இருந்த ஆசையையும், துடிப்பையும், அக்கறையையும், அர்ப்பணிப்பையும் அது உணர்த்திக் கொண்டேயிருக்கும். செய்த தொழிலே தெய்வம், அதில் திறமைதான் அவரின் செல்வம்..!                                                                                               அப்படித்தான் 1996 மே 27 ல் ஒரு தொலைக்காட்சிப் பேட்டியின்போது, தனது திரையுலக அனுபவங்களை அவர் விளக்கிக்கொண்டிருந்தபோது அவருக்கு மரணம் சம்பவித்தது. அப்போது அவருக்கு வயது 70. அவர் ஆத்மார்த்தமாக, உயிர் மூச்சாக நடிப்பை நேசித்து கடைசி வரை அப்படியே  வாழ்ந்து வந்தார் என்பதற்கு அதைவிட வேறு என்ன சாட்சி வேண்டும்? எல்லோருக்குமா அந்த பாக்கியம் கிடைக்கிறது?                                                                              -------------------------------------------

                                                 

                                                                               

                                     

                                                                                                 

கருத்துகள் இல்லை:

  சிறுகதை                 “பாதிப்பு” - ”சிற்றுளி” கலை இலக்கிய இதழ், அக்டோபர் 2024 முதல் டிசம்பர் 2024 வரை             வி த்யாபதி அந்தத் தெ...