சிறுகதை “இ்டைவெளி”
பில் எங்கப்பா....? - குறிப்பாய்க் கேட்டான் மோகன். பையனின் கேள்வியில் கொஞ்சம் ஆடித்தான் போய்விட்டார் ரங்கநாதம்.
எதுக்குக் கேட்கிறே...? - என்றார் பதிலுக்கு.
இல்லப்பா...ரெண்டு லுங்கி வாங்கியிருக்கே...பில் கொடுத்திருப்பான்ல....அதெங்கேன்னு கேட்டேன்.
பில்லெல்லாம் வாங்கலப்பா... வரி போடுவான்...காசு அதிகமாகும்னு கேட்கலை...சொன்ன விலைல பேரம் பேசிக் கொஞ்சம் குறைச்சு வாங்கிட்டு வந்திட்டேன். கைலி நல்லாயிருக்கா பாரு....அதானே முக்கியம்....
அது சரிப்பா...நீ எங்க வாங்கினேன்னு தெரிஞ்சிக்கிறதுக்குத்தான் கேட்டேன்...-கேள்வியில்தான் என்ன அழுத்தம்?
ஏண்டா இப்டி சந்தேகப்படுறே...மெயின்ரோட்டுல இருக்கே...ராஜேந்திரா ஸ்டோர்ஸ்...அங்கதான் வாங்கினேன். அதானே உனக்குப் பிடிக்கும்?
பிடிக்கிறதில்லப்பா....ஸ்டான்டர்டான கடைல வாங்கினயா...அல்லது ஏதாச்சும் சிறு வியாபாரிட்டப்போய் வாங்கிட்டு வந்திட்டியான்னு தெரிஞ்சிக்கிறதுக்குத்தான் கேட்டேன்...
ஏண்டா...இருநூற்றம்பது, முன்னூறு கொடுத்து வாங்கைல யாராச்சும் சின்னக் கடைல போய் வாங்குவாங்களா...? எனக்கென்ன தெரியாதா?
தெரியும்ப்பா....நீ இவ்வளவு தூரம் போய், இத்தனை அவசரமா, இதை இப்போ வாங்கிட்டு வந்திருக்க வேண்டாமேன்னுதான்...நாளைக்கோ, அதுக்கு மறுநாளோ நான் போயிருப்பனே?..
உனக்கு வேலை டைட்டா இருக்கு....ஆபீஸ் போனப்போ கூடப் பரவாயில்லை...இப்போ ஒர்க் ஃப்ரம் Nஉறாம்லதான் அதிகமான வேலையாத் தெரியுது...அதனால உன்னைச் சிரமப்படுத்த வேண்டாமேன்னுதான் போயிட்டு வந்தேன்...
மாஸ்க் போட்டுட்டுத்தானே போன...?
பின்னே...? வாயையும் மூக்கையும் திறந்துக்கிட்டா போவேன். நீதான் முன்னூத்தம்பது போட்டுத் தரமானதா வாங்கிக் கொடுத்திருக்கியே...அதை யூஸ் பண்ணாம இருக்கலாமா? பேசாமப் போட்டு வைக்கிறதுக்கா..இருக்கு.? பாதுகாப்புக்குத்தானே...? பத்துக்கும் இருபதுக்கும் மாஸ்க் கிடைக்குது...எவனாவது முன்னூறு போட்டு வாங்குவானா? காசைக் கரியாக்குறதா?
அத விடு....திரும்ப எதுக்கு அந்தப் பேச்சு?- சொல்லிவிட்டு மோகன் லுங்கியை விரித்து, திருப்பித் திருப்பிப் பார்க்க ஆரம்பித்தான். ஒட்டியிருக்கும் லேபிளை உற்றுப் படித்தான்.
என்ன அப்படிப் பார்க்கிறே...? இன்னும் உனக்கு சந்தேகம் தீர்ந்தபாடில்ல போலிருக்கே...?-சிரித்துக் கொண்டே கேட்டார் ரங்கநாதம். மனதுக்குள் திக்...திக்....
லேசாகக் கோபம் எழத்தான் செய்தது. வாங்கிட்டு வந்தத, திருப்தியா வச்சிக்க மாட்டான் போல்ருக்கு....பெரிய பணக்காரன் வீட்டுப் பிள்ளை....பிறக்குறபோதே வாயில சில்வர் ஸ்பூனோட பிறந்தான் பாரு...? - மனதுக்குள் திட்டிக் கொண்டார்.
சந்தேகமெல்லாம் இல்ல....லுங்கி நல்ல அகலமா, இறக்கமா, என் உயரத்துக்கு ஏத்தபடி இருக்குதான்னு பார்த்தேன். அஞ்சரை மீட்டர்னு போட்டிருப்பான்....தண்ணில நனைச்சவுடனே சுருங்கிப் போயிடும்...தழையத் தழையக் கட்ட முடியாது....அதான்....
உன் ஃபேவரிட் கடைதானப்பா....அப்புறம் என்ன சந்தேகம்? போனவாட்டி அங்கதானே வாங்கினே? கைலிகள் எல்லாமே பெரும்பாலும் ஈரோட்டுலேர்ந்துதான் வரும்...அங்கதான் கனமான, தரமான லுங்கிகளை நெய்து வெளில அனுப்புவாங்க...ஈரோட்டுச் சந்தைலயே நான் வாங்கியிருக்கேன்...ராத்திரி விரிச்சிக்கிறமே ஜமுக்காளம்...அதெல்லாமுமே அங்க வாங்கினதுதான். நான் சர்வீஸ்ல இருக்கிறபோது ஆபீஸ் இன்ஸ்பெக் ஷன்னு போனப்போ வாங்கி, சுமக்கமாட்டாம சுமந்து வந்தேன்...ஈரோட்டுத் தொழிலாளர் சரக்கு வீண் போகாதாக்கும்...மலிவான விலைல கிடைக்கும்...
பில்லு வாங்கியிருந்தேன்னா இந்த சந்தேகமெல்லாம் வராதுல்ல....? எதாச்சும் டேமேஜ் இருந்தாலும் கொண்டு காட்டி, மாத்திக்கிலாமே...அத வேறே வாங்காமே வந்திருக்கே...! .
இப்ப வேணும்னா திரும்பப் போய் வாங்கிட்டு வந்திரட்டுமா? ரெண்டு மணி நேரம்தானே ஆகுது...தரமாட்டானா என்ன...?
நான் டேமேஜூக்காகத்தான் சொன்னேன்...அதான் கைலியை ரௌன்ட் அடிச்சிட்டியே...? இனிமே எங்கேயிருந்து மாத்துறது...? அதுக்கு எவ்வளவு கொடுத்தே....?
நம்ப வழக்கமான தையல் கடைதான். வேறெங்கையும்தான் கொடுக்கப்படாதே...உங்களுக்குத்தான் பிடிக்காதே...கைலிக்கு நாப்பது வாங்கிட்டான்....அநியாயம்....
ஊர்ல நீ இருபது ரூபாய்க்கு ரௌன்ட் அடிச்சிருப்பே...அதையே இப்பயும் மனசுல நினைச்சிட்டிருப்பியா? காலம் பூராவும் அந்த இருபதையே எல்லா ஊர்லயும் வாங்கிட்டிருப்பானா?
ஆனாலும் நாற்பது ஜாஸ்திதானேப்பா...ஒரு முப்பது கூடப் பரவால்லே...அதுவே அதிகம்தான்...இருபதுதான் இன்னிக்குத் தேதிக்கும் நியாயமான கூலி....டபுளா வாங்கினா கொள்ளையில்லையா?
இப்டியே ஒவ்வொண்ணையும் கணக்குப் பண்ணிட்டிருந்தேன்னா...எதையுமே வாங்க முடியாது இந்தக் காலத்துல....இப்போ காசுக்கெல்லாம் அவ்வளவுதான் மதிப்பு, மரியாதை...அவன்ட்டப் போய் இதுக்கெல்லாம் பேரம் பேசறது கேவலம். சொன்னதைக் கொடுத்திட்டு வர்றதுதான் கௌரவம்.....
அப்டிச் செய்து செய்துதானே எல்லாத்தையும் ஏத்தி விட்டுட்டீங்க...? இன்னைத் தேதிக்கு எதுலதான் பேரம் பேச முடியுது...குறைக்க முடியுது? அவன் சொன்னதுதான் விலை...கொடுத்ததுதான் சரக்கு...இருந்தா இருந்தது...போனாப் போனது....அப்டித்தானே ஆயிப்போச்சு.....யூஸ் அன்ட் த்ரோ கலாச்சாரம்னு பெருமை வேறே...!
சரி...சரி...இந்தக் கைலி எனக்குப் பிடிச்சிருக்கு...இதை நான் எடுத்துக்கிறேன்....இன்னொண்ணை நீ வச்சிக்கோ......சரியா...?
அது வேண்டாம்டா....இதை வச்சிக்கோ...இதான் நல்லாயிருக்கும்....அதைவிடக் கனமாயிருக்கு பாரு....நல்லா உழைக்கும்....!
கைலியை சாக்கு மாதிரியா சுத்த முடியும்...லேசா இருக்கணும்ப்பா...காத்து பூராத அளவுக்கு கனமாவா இருக்கிறது...? வெயிட் ஜாஸ்திப்பா அது... எனக்கு வேண்டாம்...இது போதும்.... - சொல்லிவிட்டு எடுத்துக் கொண்டு அவன் அறைக்குள் புகுந்து கொண்டான். அடப்பாவி...இதான் விலை ஜாஸ்தின்னு சொல்றேன்...நம்ப மாட்டேங்கிறானே...! - மனக்குறையோடு அந்த மற்றொரு லுங்கியை கையிலெடுத்துக் கொண்டார் ரங்கநாதம்.
வாங்க சார்.....நம்பகிட்டே சரக்கெல்லாம் படு சுத்தம்....டிசைனுக்கு அஞ்சு அஞ்சுதான் வாங்குவேன். க்வாலிட்டியா இருக்கும்....பாருங்க....இது ஒண்ணு....இது ஒண்ணு....கொஞ்சம் அதிக அகலமா வேணுமா...இத எடுங்க...இது ஆறு மீட்டர்....இது அஞ்சரை....அஞ்சரையே போதும் உங்க உயரத்துக்கு.....உங்களுக்கா...பையனுக்கா...? கேட்டுக்கொண்டே தரவாரியாய் நாலைந்தை எடுத்துப் போட்டார் அவர்.
அந்த பெட்ரோல் பங்கின் ஓரமாய், சற்று ஒதுங்கிய, அதே சமயம் பார்வையான இடத்தில் அவரது சைக்கிள் நின்றது. அருகிலே ஒரு மரப்பெட்டி. அதிலும் சைக்கிள் உறான்ட் பாரிலும் அடுக்கி, தொங்கவிடப்பட்ட வெவ்வேறு நிறத்திலான, கட்டம்போட்ட மற்றும் வரி வடிவிலான லுங்கிகள். அந்த இடத்தில் சில மாதங்களாய்த்தான் அவரைப் பார்க்கிறார் ரங்கநாதம். தினமும் மாலைப்பொழுதில் காலார நடந்து வரும்பொழுது கொஞ்சம் தூரம் அதிகமான அந்தப் பகுதிவரை வந்து திரும்புவது அவர் வழக்கம். தனக்காகவே கடை திறந்திருப்பதாக நினைத்துக் கொண்டார்.
சிறு வியாபாரி. அந்தப் பகுதியில் இருக்கும் போக்குவரத்திற்கேற்ப கொஞ்சமாவது விற்கும் என்கிற நம்பிக்கையில் அங்கே கடை போட்டிருக்கிறார். சாயங்காலம் ஆறுலேர்ந்து ராத்திரி பத்து பத்தரை வரை நம்ப கடை இருக்கும் சார்...லீவு நாளெல்லாம் கிடையாது. எல்லா நாளும் கடை உண்டு. சரக்கு பூராவும் ஈரோட்டுலேர்ந்து நேரடிக் கொள்முதல். இது பூராவும் வித்த பெறவு நானே புறப்பட்டுப்போய் வாங்கிட்டு வர்றது. வாங்குற பொருள் தரமில்லேன்னா காசு வேணாம்.... திருப்பித் தந்துர்றேன்...அதுக்கு நான் கியாரன்டி....விலை சல்லிசாவும், அதே சமயம் சரக்கு சுத்தமாவும் இருக்கும் நம்பகிட்ட....ஒரு வாட்டி வாங்கிப் பாருங்க...நீங்களே திரும்ப வருவீங்க...
கைலிகளை ஒவ்வொன்றாய் எடுத்துப் பார்க்க ஆரம்பித்தார் ரங்கநாதம். பெரிய கடை என்றால் இப்படிப் புரட்ட விடுவானா? அவன் எடுத்துப் போடுவதையே அதிகம் பிரிக்க விட மாட்டானே?
இதே கைலிகளத்தான் ஷோ ரூம்ல வச்சு அடுக்கி, பளபளன்னு லைட்டுப் போட்டு, அவங்க லேபிள ஒட்டி முன்னூறு நானூறுன்னு விக்கிறாங்க...நம்ப சனமும் நம்பி வாங்கிட்டுப் போவுது...நான் இப்டி ரோட்டோரமா நின்னு கூவிக்கிட்டிருக்கேன்...ஒண்ணு ரெண்டுதான் விக்குது....என்னா செய்யுறது? மக்கள் எப்பவுமே பளபளப்புக்குத்தான் மயங்குறாங்க.. நியாயமாச் சொன்னா நம்ப மாட்டாங்க.......நீங்க வாங்கிட்டுப் போங்க..உண்மையாச் சொல்லுறேன்...திரும்பத் தேடி வருவீங்க...
வாங்கத்தானே வந்திருக்கேன்...-பெருமையாய்ச் சொல்லிக் கொண்டார் ரங்கநாதம்.
இங்கதான் நான் கடை போட்டிருப்பேன்...வேறே எங்கயும் போக மாட்டேன்....பாருங்க....நல்லா விரிச்சுப் பாருங்க....சந்தேகமில்லாமப் பாருங்க....நெசவு எங்கியாச்சும் விட்டிருந்திச்சின்னா கொடுத்திடுங்க..எதுவும் அப்டியெல்லாம் இருக்காது....படு சுத்தமான சரக்கு...நமக்கு அமைஞ்ச கொள்முதல் பார்ட்டி அப்படி....
அவருக்கு அவர் ஊரின் தீபாவளி முதல் நாள் இரவு ஞாபகம் வந்தது. ராத்திரி மணி ரெண்டு மூன்று என்று போனஸ் பேச்சு வார்த்தை நீடித்து, கடைசியில் ஒரு செட்டில்மென்ட்டுக்கு வந்து, மில் தொழிலாளிகள் கிடைத்த போனஸை வாங்கிக் கொண்டு வெளியேறி, பொழுது விடியும் முன்பாக கடைசி ரெண்டு மணி நேரப் பொழுதில் அடிச்சேன் பிடிச்சேன் என்று பெண்டாட்டிக்கும், பிள்ளை குட்டிகளுக்கும் துணிமணி வாங்கிக் கொண்டு ஆவலாய்ப் பறந்து ஓடும் அந்தப் பரபரப்பான காட்சி கண்ணில் படமாய் ஓடியது.
அதற்காகவே, அவர்களுக்காகவே ரோட்டோரமாய், பிளாட்பாரத்தில் உதித்திருக்கும் திடீர் துணிமணிக் கடைகளும், விடிய விடிய நிற்கும் வாழைப்பழ வண்டிகளும், சூப் கடைகளும்..டீக்கடைகளும்,.அந்தத் தொழிலாளிகளின் அந்தக் குறிப்பிட்ட இரவு நேர டென்ஷனும், பிறகு உண்டாகும் பரபரப்பும், பதட்டமும் எல்லாமும் அந்தச் சில மணி நேர தீபாவளிக் கொண்டாட்டத்திற்காகத்தான் என்பதை நினைத்தபோது, அவர்களின் அந்த நாளைய மகிழ்ச்சிக்கு வேறு ஈடே சொல்ல முடியாது என்று நினைத்துக் கொண்டார்....துயரம் மறைத்த கண் கொள்ளாக் காட்சி....
என்னைப் பொறுத்தவரைக்கும் ஒண்ணுமில்லீங்க...நான் உங்ககிட்டத்தான் வாங்கறதை விரும்புவேன்...பையனை நினைச்சாத்தான்.....
தம்பிக்கு இதை வாங்கிக் கொடுங்க...ஆறு மீட்டர் சார்....வெறும் நூற்றி ஐம்பதுதான். நீங்க நூத்தி நாப்பது கொடுங்க...எடுத்திட்டுப் போங்க.....
அப்போ இது....? கையில் வைத்திருந்ததை அவர் முன் நீட்ட...இது நூத்திப் பத்துதான் சார்...நூறு ரூபா கொடுங்க....கொடுக்கிற காசுக்கு சரக்கு கேரன்டி...வேறே எங்கேயும் இந்த விலைக்கு நீங்க வாங்க முடியாது...தைரியமா எடுத்திட்டுப் போங்க...ஆறு மாசம் அலுங்காமக் கட்டலாம். நான் ஜவாப்தாரி....
அவர் பேச்சு வெறும் பிரச்சாரமல்ல என்றுதான் தோன்றியது. ஆறு மாசம் என்று பொய்யில்லாமல் சொல்கிறாரே...! தினமும் அவரைப் பார்க்கிறாரே!...மோசமான சரக்கைக் கொடுத்திருந்தால்...அங்கே சைக்கிளில் வைத்து அந்த வியாபாரத்தை அங்கே நீடித்துச் செய்து கொண்டிருக்க முடியுமா? இவருக்கு நம்பிக்கைதான். ஆனாலும் பையன் நம்ப வேண்டுமே? நம்பச் செய்ய வேண்டுமே...! சாத்தியப்படுமா?
ரோட்டுக் கடையா? அங்கெல்லாம் ஏம்ப்பா வாங்குறே...? ஒரு சுத்தம் வேணாமா முதல்ல? அதுவும் அந்த எடத்துல? தெருப்புழுதி பறந்திட்டே இருக்கும் அங்கே...பக்கத்துல வண்டில பலகாரம் வெந்துக்கிட்டிருக்கும்..நாத்தமா நாறும்.....அவனே சோத்துக்கு வக்கில்லாமே அந்த வியாபாரத்தை செய்றான். அதுக்கேத்த ஆட்கள் அவனுக்குன்னு இருக்காங்கப்பா....நாம ஏன் அங்க போகணும்...?
என்ன பேச்சுப் பேசறான்? ரோட்டில் தொழில் செய்பவர்களெல்லாம் அத்தனை கேவலப்பட்டவர்களா? பேசுற வாயில ஓங்கி அடிச்சா என்ன?
பக்கத்துல டாஸ்மாக் வேறே இருக்கு...குடிச்சிப்புட்டு ஆடிக்கிட்டுக் கிடப்பாங்க அங்கே....முதல்ல அங்கெல்லாம் போய் ஏம்பா நிக்கிறே? உன்னை யாரு அந்த இடத்துக்குப் போகச் சொன்னது? போதாதுன்னு எவன்ட்டயோ ஏமாந்து இதை வேறே வாங்கிட்டு வந்துருக்கே? யோசிக்கவே மாட்டியா? மொத வேலையா கொண்டு போய்க் கொடுத்திட்டு காசைத் திரும்ப வாங்கிட்டு வா...என்னால இதையெல்லாம் கட்ட முடியாது...நானே போய் வாங்கிக்கிறேன் எனக்கு வேண்டியதை. உனக்கும் வேணும்னா சொல்லு...பெஸ்ட் க்வாலிட்டியா வாங்கித் தர்றேன்...முதல்ல போய் இதை அவன்ட்ட வீசி எறிஞ்சிட்டு வா.... எதாச்சும் வியாதி கீதி வந்திச்சின்னா. எவன் படுறது? -பையன் கூச்சலிடுவதுபோல் ஒரு பிரமை. படுபாவிகள்...என்ன பேச்சுப் பேசுகிறார்கள்?
மகனே.....இப்படியான செலவுகளாய்ச் சுருக்கிச் சுருக்கித்தான் சேமிப்பைப் பெருக்கித்தான் உன்னை வருஷக் கணக்காய்ப் படிக்க வைத்தேனடா....அன்று நான் இப்படி ஆட்களைத் தேடிப் போகவில்லையென்றால், செலவைச் சுருக்கவில்லையென்றால், என் வருமானத்திற்கு உன்னைக் கல்லூரியில் படிக்க வைத்திருக்க முடியாதடா...! இப்படிச் சின்னச்சின்ன விஷயங்களில் அன்று என்னை வளர்த்தவர்களை, எனக்குக் கை கொடுத்தவர்களை இன்று நான் மறந்து விட முடியுமா? உதறித் தள்ள முடியுமா? நீ சொல்கிறாய் என்று தூக்கி எறிந்து விட முடியமா? அவர்கள் நம்மவர்கள்....அல்லது என்னவர்கள்....என் ரத்தத்தோடு கலந்தவர்கள்...அவர்களை நான் ஒதுக்க முடியாது மகனே... இளம் வயது முதல் வறுமையைக் கண்ட எனக்கு அவர்கள்தான் பல்வேறு சந்தர்ப்பங்களில் கை கொடுத்தார்கள். வாழ்க்கையை உணர்த்தினார்கள்...நிதானமாய் அடியெடுத்து வைக்கக் கற்றுக் கொடுத்தார்கள்...அதுதான், அவர்கள்தான் என் மன ஆறுதல்.... என் உடன் பிறவா சொந்தங்கள்....!
கையில் அந்த இன்னொரு கைலியை வைத்துக் கொண்டு, கொஞ்சம் முன்னதான நிகழ்விலும், பழைய நினைவுகளிலும் மூழ்கிப் போனார் ரங்கநாதம்.
பேருந்து நிழற்குடை ஓரமாய் அமர்ந்து தைத்துக் கொண்டிருந்த தையல்காரனிடம் கைலிக்கு இருபது ரூபாய் கொடுத்து ரௌன்ட் அடித்ததைச் சொல்லவே கூடாது என்று முடிவு செய்து கொண்டார்.
பையனுக்கு என்று அந்தக் கடைக்காரர் எடுத்துக் கொடுத்த அதை வேண்டாம் என்று விட்டு, இவருக்கு என்று வாங்கி வந்ததை அவன் விரும்பி எடுத்துக் கொண்டு போனதை நினைத்தபோது, சற்றே விலையுயர்ந்த அந்தக் கைலி தனக்குத் தேவைதானா என்று சங்கடப்பட்டார். அதைக் கட்டும்போதெல்லாம் மனம் அழுமே...! விரயம்...விரயம்...என்று புலம்புமே...! உள்ளம் ஏற்காதே...!
டேய் மோகன்....இதுதான் ஆறு மீட்டர் கைலி...உனக்குன்னு விலை ஜாஸ்தியா வாங்கினதுப்பா... .இந்தா இதையும் நீயே வச்சிக்கோ...நான் அப்புறமா வாங்கிக்கிறேன்...என் பழைய கைலியே இன்னும் கிழியலை....இந்தா பிடி.....என்று கத்தியவாறே அவன் அறையை நோக்கி வேகமாய் ஓடினார் ரங்கநாதம்.
---------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக