15 நவம்பர் 2020

தி.ஜா.நூற்றாண்டு - “துணை” - சிறுகதை - வாசிப்பனுபவம் -

தி.ஜா.நூற்றாண்டு - “துணை” - சிறுகதை - வாசிப்பனுபவம் - உஷாதீபன்                    (வெளியீடு: தி.ஜா.சிறுகதைகள்-முழுத் தொகுப்பு-காலச்சுவடு, நாகர்கோயில்)


       1950 ல் எழுதப்பட்ட கதை இது. இக்கதையில் சொல்லப்படும் ஒரு விஷயம் இன்று வரை நீடிக்கிறது. இனியும் நீடிக்கும்.

       மனிதன் குழந்தையாய் இருக்கும் பொழுதிலிருந்தே அவனுக்குத் துணை தேவைப்படுகிறது.  திருமணம் செய்யும் வரை பெற்றோரின் துணை. அதன் பிறகு மனைவியின் துணை. வயதான காலத்தில் அவளின் கட்டாய பரஸ்பரத்  துணை. இறக்கும்போதுதான் துணையின்றிச் செல்கிறான். தனியாய்த்தான் வருகிறோம். ஒருவர் மூலமாக வருகிறோம். தனியாய்த்தான் செல்கிறோம். வரும்போது எதுவும் கொண்டு வருவதில்லை. போகும்போதும் எதுவும் கொண்டு செல்வதில்லை.

       ஆனால் இருக்கும் காலங்களில் ஒரு துணை கட்டாயம் தேவைப்படுகிறது. துணையின்றி எவனும் இருப்பதில்லை. தனி்த்திருப்பவன் கூட மனதிற்குள் ஒரு துணையோடுதான் வாழ்கிறான். அது யாராகவும் இருக்கலாம். அம்மா, அப்பா, மனைவி, காதலி,  மகன், மகள், பேரன், பேத்தி, ஏன் நண்பனும் கூட என்று இப்படி யாரையேனும் நினைத்துக் கொண்டே, அவர்களோடு சிந்தனையளவிலேனும் சேர்ந்து பயணித்துக் கொண்டேதான் இருக்கிறான். ஆக இந்த வாழ்க்கை துணையின்றிக் கழிவதேயில்லை. தனித்த பயணத்தை ஒப்புவதேயில்லை. இவையெல்லாம் வாழ்க்கைத் துணை. வழித் துணை என்று ஒன்று இருக்கிறதல்லவா? அதுவும் ஒரு மனிதனுக்குத் தேவைப்படாமல் இருப்பதில்லையே? எந்த மனிதனும் அப்படியிருந்தான் என்று சொல்ல முடியாதே...! அந்த வழித் துணையைப் பேசும் கதைதான் இது.

       .அந்தக் காலத்தில் அநேகக் குடும்பங்களில் நூறு வயது தாண்டியவர்கள்  நூற்றி எட்டு, பத்து என்று இருப்பதை நம்மில் சிலர் பார்த்திருக்கலாம். அதுபோல் தொண்ணூறுகள் தாண்டி நூறை எட்டிக் கொண்டிருப்பவர்களும் இருப்பார்கள். தற்போதைய வாழ்க்கையிலேயே நாம் எண்பதைத் தாண்டி, தொண்ணூறைத் தொடுபவர்களைக் கண்டு கொண்டுதான் இருக்கிறோம்.

       அப்படி எண்பது, தொண்ணூறு என்று தாண்டிச் சென்று கொண்டிருப்பவர்களின் கதைகளைக் கேட்டீர்களென்றால் அவர்கள் பெரும்பாரும் பால்ய விவாகம் செய்தவர்களாக இருப்பார்கள். பால்ய விவாகம் என்றால் பதினைந்து, பதினேழு, இருபது என்ற வயதிலேயே திருமணம் முடித்து, அந்த இளம் வயதிலேயே அரசாங்க உத்தியோகத்தையும் தாவிப் பிடித்திருப்பார்கள். இதை Boy service என்று சொல்வதை நாம் கேட்டிருப்போம். டீன் ஏஜ்லேயே சிலர் உத்தியோகத்திற்கு வந்திருப்பதை நம் அலுவலகங்களிலேயே நாம் கண்டிருக்கலாம்.

       அதுபோல் அப்படியானவர்கள் ஐம்பத்தி ஐந்து (அப்போது)  வயது வரை பணியாற்றி ஓய்வுபெற்று, நீண்ட ஆயுசு பலத்தில் தொண்ணூறு தாண்டியும் ஓய்வூதியம் பெற்றுக் கொண்டிருப்பார்கள்.  சர்வீஸ் போட்டது என்னவோ முப்பது வருஷங்களுக்குள்தான் இருக்கும். ஆனால் ஓய்வூதியம் என்பதை முப்பத்தைந்து நாற்பது ஆண்டுகளுக்கும் மேல் வாங்கிக் கொண்டு வாழ்ந்து கொண்டிருப்பவர்களைப் பார்த்திருப்போம்.

       ஆண்டுதோறும் ஓய்வூதியர்கள் தான் உயிரோடுதான் இருக்கிறேன் என்பதற்கடையாளமாக கருவூலங்களுக்குச் சென்று தன்னை ஆஜர்படுத்திக் கொண்டு, அவர்களுக்குரிய ஓய்வூதியப் புத்தகத்தில் ஒரு சான்று முத்திரை பெற்று வர வேண்டும். அப்பொழுதுதான் தொடர்ந்து அவர்கள் பிரதி மாதமும் ஓய்வூதியத்தைப் பெற முடியும்.

       இந்த நடைமுறை தி.ஜா. எழுதிய துணை என்கிற இந்தக் கதையைப் படிக்கும்போது  1950 களிலேயே இருந்து வந்திருக்கிறது என்று தெரிய வருகிறது நமக்கு. 98 வயதான ஒரு பெரியவர், 79 முடிந்து எண்பதைத் தொடும் ஒருவர் (சின்னக் குழந்தை) இவர்களுக்கு மேற்சொன்ன “மஸ்டர் டே” வந்து விடுகிறது. 98 வயதானவர் 79 முடிந்தவரைத் துணைக்குத் தேடி வந்திருக்கையில் 98 ம் 79 ம் சேர்ந்து 79 ன் பையனை அழைத்துக் கொண்டு போகச் சொல்கிறார்கள். அப்படியான மஸ்டர் டேக்குப் போய் வருவதுதான் இந்தக் கதை.

       வெறும் கதையா என்ன? ஒற்றை வரியில் சொல்லி முடித்து விடக் கூடியதா என்ன? ஒரு பெரிய பாரம்பரியத்தையே கதைக்கு இழுக்கிறார் தி.ஜா. அப்படிச் சொல்லும்போதுதான் அவரது 98 வயதிற்கான நியாயம் பிறக்கிறது. அத்தோடு அத்தனை வயதிலும் பென்ஷன் பெற்று வருவதும் நம்மை ஆச்சரியப்படுத்தி நாம் வேணுமென்றால் அவருக்குத் துணையாய்ப் போய் வருவோமே என்கிற எண்ணத்தை ஏற்படுத்துகிறது. நம் இடத்தை அந்த சப்-ரிஜிஸ்திராரின் (79) பையன் பிடித்துக் கொள்கிறான். அதுக்கென்ன மாமா, தாராளமாக கூட்டிப் போறேன்...என்று திருப்தியாய்ச் சொல்ல நிறைவாய்க் கிளம்புகிறார்கள். இந்த வயசான கிழங்களை இத்தனை பொறுப்பாய் அழைச்சிண்டு போறியே...நீ நன்னா தீர்க்காயுசா இருக்கணும்...என்று ஆசீ்ர்வதிக்கிறார்கள். லேடி...லேடி என்று அழைக்கப்படும் அந்தத் 98 வயசுக்காரப் பெரியவரையும் தன் அப்பாவையும் அழைத்துக் கொண்டு போகிறான் அவன்.

       அவ்வளவு ஆஜானுபாகுவா இருப்பர்...தலையிலே கரு கருன்னு சுருட்டையா இருக்கும் மயிர்.தொடையில் வந்து இடிக்கும்...மத்தியானம் படுத்துண்டார்னா அந்த மயிரையே பந்தாக முடிஞ்சு தலைக்கு அடியிலே தலையணையா வச்சிண்டுடுவார்....லேடி லேடின்னு அதனாலதான் பேர் வந்தது அவருக்கு. கர்லாக்கட்டை சுற்றியவர். தண்டால் எடுத்தவர், பஸ்கி போட்டவர்.  ஆனாலும் இப்போது 98 ல் என்னதான் செய்வது?

       ஒரு கிழவர், அவருக்குப் பிள்ளை, அவருக்கு ஒரு பிள்ளை, அவருக்கு ஒரு பிள்ளை, அவருக்கு ஒரு பிள்ளை என்று ஐந்து தலைமுறையைக் கண்ட பெரியவர். இவர் பிள்ளை காசிக்குப் போயிருக்கார்.அவர், இவர், இவர் அப்பா மூணும் சேர்ந்துதான் ஒரு ஒற்றை மாட்டு வண்யிலே மஸ்டர் டேயன்றைக்குப் னெ்ஷன் வாங்கப் போகும். நாலு வருஷமா இப்டித்தான் நடக்கிறது. பெரிய கிழம் இருக்கே, அது உத்தியோகம் பார்த்தது இருபத்தாறு வருஷம், ஐம்பத்தாறு வருஷத்திற்கு மேல் பென்ஷன் வாங்கிவிட்டது. இந்தக் கிழமும் இருபத்திரண்டு வருஷம் பென்ஷன் வாங்கியிருக்கும். குட்டிக் கிழம்-காசிக் கிழம், ரிடயராகி நாலு வருஷமாகிறது. இப்போ சர்வீசில் இருக்கிற தாசில்தாரும் சேர்ந்துக்கிறவரைக்கும் கிழம் உசிரோட இருக்குமோ?

       இப்படி முப்பது, ஐம்பது ஆண்டுகளுக்கு மேல் பென்ஷன் வாங்கிக் கொண்டிருக்கும் ஐந்து தலைமுறைக் குடும்பத்தைப் பற்றிச் சொல்லி பாரம்பரியப் பெரியவர்களை உள்ளடக்கிய பெருமைகளை எடுத்துரைக்கிறார் தி.ஜா. மஸ்டர்க்குப் போய்விட்டுத் திரும்பும் போது மாட்டு வண்டி கவிழ்ந்து அந்தப் பையனுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டு அவனை ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போய் கட்டுப் போட்டு வீட்டிற்குக் கூட்டி வருவதோடு கதை முடிகிறது.

       நானாயிருந்தா மஸ்டருக்கு இவ்வளவு நேரமா நிறுத்தி வைப்பேன் எல்லாரையும்...? ஒரு மணி நேரத்துல பென்ஷன் கொடுத்து, வீ்ட்டுக்குப் போய் உறாய்யாய் தூங்குங்கோன்னு அனுப்பியிருப்பேன்...என்னமோ 55 வயசாயிடுத்துன்னா முட்டாளாப் போயிடறான்.கபோதியாப் போயிடறான்னு கவர்ன்மென்ட் நினைச்சிண்டிருக்கு. ரிடயராகாமல் வேலை செய்றதுதான் சரி. அவாவா பலத்துக்கேத்தாப்போல வேலை பார்க்க பாத்யம் இருக்கணும். சகட்டு மேனிக்கு 55 ன்னு வக்யறது என்னடா பேத்தல்? என்று அவர் வயதொத்த ஓய்வூதியக் கிழங்கள் முன்னே லெக்சர் கொடுத்த லேடி, சின்னக்குழந்தையின் பையனுக்கு ஏற்பட்ட விபத்துக்காக மிகவும் மனம் வருந்துகிறார். எங்களோட வந்ததுக்கு தண்டனை.படுகிழங்கள் நாங்க இருக்கமே..எங்களுக்கு ஏதாவது வரப்படாதோ, ராஜா மாதிரி அழைச்சிண்டு போனான்...என்று புலம்புகிறார் சின்னக் குழந்தை. 

       மூணு மாசம் மெடிக்கல் லீவு போட்டுடுடாப்பா...என்று கண் கலங்குகிறார் லேடி. வண்டி குடை சாய்ந்து எல்லோரும் கீழே உருள, இந்தக் காலப் பையனான கூட்டிச் சென்ற இளைஞனுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுப் போகிறது. கிழங்கள் கிழங்கு மாதிரி நிற்கின்றன....என்று சொல்லாமல் சொல்லி உணர்த்துகிறார் தி.ஜா.

       ஒரு பெரிய பாரம்பரியத்தைப் பக்குவமாய்ச் சொல்லி, அடுத்தடுத்த தலைமுறைகளின் பெருமைகளைப் படிப்படியாய் இந்தக் கதையில் எடுத்துரைக்கிறார். எல்லாம் இருந்தும் வயசு ஆக ஆக...மனசு ஒடுங்கிப் போகும் என்கிற உண்மையும், உலகுக்கும், பலருக்கும் பாரம்தான் என்கிற யதார்த்தமும்  புலப்படுகிறது. அந்தந்தக் கதாபாத்திரங்களின் உரையாடல்களை அவரவர் அளவுக்கேற்றவாறு கட்டியமைப்பதில் பெருமையும், மரியாதையும் ஏற்படுத்துகிறது நமக்கு. மதித்துப் போற்றப்பட வேண்டிய மூத்த தலைமுறைகளை தி.ஜா.வின் இப்படைப்பு வழி உணர்ந்து அவரது கதைக் கலையின் செய் நேர்த்தியை வியந்து நிற்கிறோம்.

                            ------------------------------------------------------------------------

      

      

 

 

கருத்துகள் இல்லை: