09 அக்டோபர் 2020

ஒய்.ஜீ. மகேந்திராவின் “நான் சுவாசிக்கும் சிவாஜி” - வாசிப்பனுபவம்

ஒய்.ஜீ. மகேந்திராவின்நான் சுவாசிக்கும் சிவாஜி” - வாசிப்பனுபவம்வெளியீடு:- கண்ணதாசன் பதிப்பகம், தி.நகர், சென்னை-17

                நடிகர் ஒய்.ஜீ.மகேந்திரன் நடிகர்திலகம் சிவாஜி அவர்களின் முதன்மை ரசிகர். சிவாஜி வெறியர் என்றே என்னைச் சொல்லிக் கொள்ளலாம்...அதில் எனக்குப் பெருமைதான் என்று மகிழ்ச்சியோடு சொல்கிறார். நடிகர்திலகமும் அவரை அந்தளவுக்கு மதித்து தன்கூடவே அன்போடு வைத்திருந்தார் என்றே குறிப்பிடுகிறார். காரணம் ஒய்.ஜி.எம்.-ன் குடும்பத்தோடு அவருக்கு அப்படி ஒரு நெருக்கமும், அந்நியோன்யமும் வாய்த்திருந்தது என்பதே உண்மை.

       ஒவ்வொரு ஆண்டும் நடிகர்திலகத்தின் பிறந்த நாளன்று அன்னை இல்லம் சென்று அவருடைய படத்திற்கு அஞ்சலி செலுத்துவது இவரின் வழக்கம். ஒவ்வொரு வருடமும் அவரது பிறந்த நாளை ஒட்டி இசை நிகழ்ச்சி ஒன்றையும் நடத்தி வருவதாகத் தெரிவிக்கிறார். அந்த நிகழ்வின்போது சமகாலக் கலைஞர்களை அழைத்துப் பாராட்டி, கௌரவித்து, “சிவாஜி அவார்ட் ஆஃப் எக்சலன்ஸ்” என்ற விருதை வழங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கிறார்.

       திரு ஒய்.ஜி.மகேந்திரனின் இந்த “நான் சுவாசிக்கும் சிவாஜி“ என்ற புத்தகம், நடிகர்திலகம் அவர்களோடு அவருக்கு ஏற்பட்ட பல்லாண்டுப் பழக்கமும், அவரது குடும்பத்தோடு உள்ள நெருக்கத்தையும், அவரோடு பல படங்களில் நடிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுக் கிடைத்த அனுபவங்களையும், வெளிநாடு செல்கையில் நேர்ந்த அனுபவங்களையும் சுவையாகவும், ஆத்மார்த்தமாகவும் இப்புத்தகத்தில் விவரிக்கிறார். அவர் மீது உள்ள அளவிட முடியாத பிரியத்தினாலும், பக்தியினாலும் “நான் சுவாசிக்கும் சிவாஜி” என்றே தலைப்பிட்டு தினமலர் வாரமலரில் அவர் எழுதிய இந்தக் கட்டுரைகள் சிவாஜியைப் பற்றி நாம் பல்வேறு வகைகளில் அவரது நடிப்பின் மீதான அர்ப்பணிப்பினையும், செய்யும் தொழிலின் மீதான பக்தியையும், கடமையுணர்வினையும் அவரது நற்குணங்களையும், கொடையுணர்வினையும், விளம்பரம் இல்லாமல் அவர் செய்த பல தான தர்மங்களையும் நமக்கு விளக்குகிறது, அரசுக்கு ஆதரவான நிதி திரட்டல் நிகழ்வுகளையும், போர்க் காலத்திலான கலைஞர்களின் கடமையணர்வினையும் என பல்வேறு வகைகளில் அவரின் செயல்பாடுகளை நமக்கு விளக்குகிறது.

       அதனாலேயே ஒவ்வொரு அத்தியாயத்தையும் சுவாசம் - 1 சுவாசம் -2 என்று பிரித்து சொல்லிச் செல்கிறார் ஒய்.ஜீ.. என் தந்தையைப் பற்றிய விவரங்கள் மற்றும் அவரின் நடிப்பின் நுணுக்கங்கள் பற்றி அறிய  வேண்டுமாயின் ஒய்.ஜி.மகேந்திராவைக் கேளுங்கள் என்று பிரபுவே தெரிவிப்பதோடு மட்டுமல்லாமல் எங்கள் குடும்பத்தின் மூத்த சகோதரர் அவர் என்றும் மகுடம் சூட்டிப் பெருமைப் படுகிறார்.

       கௌரவம் படத்தின்  இரண்டு ரோல்களையும் நீங்களே ஏன் செய்கிறீர்கள்? என்று கேட்க, வேறொரு நடிகரைப் போட்டு அன்டர் ப்ளே பண்ணு என்று கூற முடியுமா? நானே கண்ணனாகவும், பாரிஸ்டர் ரஜினிகாந்த்தாகவும் நடித்தால் கண்ணன் ரோலில் அன்டர் ப்ளே பண்ணி இன்னொன்றைத் தூக்கி நிறுத்தி இரண்டையும் பெருமைப் படுத்துவேன்...செய்து காண்பிக்கிறேன் பார்...என்று சிவாஜி சவாலாய் ஏற்று வெற்றி கண்டதைச் சொல்லிப் பூரிக்கிறார்.

       நீயும் நானுமா? பாடல் காட்சியிலான இங்கிலாந்து அரசர் மற்றும் ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் தோற்றத்தில் இருந்த அந்த கம்பீரமும், மிடுக்கும் சிவாஜிக்கு மிகவும் பிடித்த காஸ்ட்யூம் என்றும் அவர் வீட்டில் மாடிப்படியேறும் இடத்தில் அந்தப் பெரிய படம் மாட்டப்பட்டிருக்கும் என்பதையும் விவரிக்கும்போது அப்படியான அவர் ஏற்ற பல வேடங்களின் படங்களை மாட்டினால் அதுவே அவரின் இமாலய சாதனைக்குச் சான்றாக அமையும் என்று நமக்குத் தோன்றுகிறது.

       பரதனைக் கண்டேன் என்று மூதறிஞர் ராஜாஜி சம்பூர்ண ராமாயணம் பார்த்துவிட்டு ஒற்றை வரியில் தன் கருத்தை வைத்துவிட்டுச் சென்ற பெருமை நடிகர்திலகத்திற்கு மட்டுமே உரியதுதானே!

       புட்டபர்த்திக்கு அவரது நண்பரான சிதம்பரம் அவர்களோடு சிவாஜி சென்ற போது அவரைச் சிறப்பு வழியில் சட்டென்று அவரது இருப்பிடத்திற்கு அழைத்துச் செல்லாது சாதாரண பொது  நுழைவாயில் வழியே நடந்து, கடந்து வரச் செய்த போது, மெயின் நுழைவாயிலிலிருந்து நடக்க வைத்து விட்டேனே என்று கோபம்தானே உனக்கு? உன் நடையழகு அவ்வளவு சிறப்பு என்றும் ரசிக்கத்தக்கது என்றும் சொன்னார்களே என்று அதைக் கண்ணாரக் கண்டு ரசிக்க விரும்பினேன் என்று சாயிபாபா சிவாஜியிடம் சொன்னது நடிகர்திலகத்தை நெகிழ வைத்ததோடு மட்டுமல்லாமல் நம்மையும் நெகிழ்த்தி விடுகிறது.

       பரீட்சைக்கு நேரமாச்சு-நரசிம்மாச்சாரி வேடத்திற்காக ஒரு நாள் திருவல்லிக்கேணி சென்று அங்கு அய்யங்கார்களின் இயல்பு எவ்வாறிருக்கிறது என்று கண்டு புரிந்து வந்த நடிகர்திலகம் அந்த வேடத்தை எப்படிச் செய்திருந்தார் என்பதை நாம் அறிவோம்தானே!  என் படத்தை இங்கே ஏன் சாலையில் வைத்திருக்கிறார்கள் என்று மகாப் பெரியவா காரில் செல்லும்போது தற்செயல் பார்வையில் கண்டு கேட்க, அது பெரியவா இல்லை, அப்பர் பெருமான் வேடத்தில் நடிக்கும் நடிகர்திலகம் சிவாஜி அவர்களின் திருவருட்செல்வர் என்ற படத்திற்கான போஸ்டர் என்று சொன்னபோது, அவரை வரச் சொல்லுங்கள் என்று பெரியவர் சொன்னதும், சிவாஜி சென்று மகாப்பெரியவாளை தரிசித்து ஆசி பெற்று மீண்டதும். அது எனக்குக் கிடைத்த பெரும் பாக்கியம் என்று சிவாஜி மெய்சிலிர்த்ததும் நம்மைக் கண் கலங்கத்தான் வைத்து விடுகிறது.

       சென்னை சாந்தியில் “பாவ மன்னிப்பு“ ரிலீஸின்போது ஒய்.ஜீ.யின் பாட்டி சிவாஜி முஸ்லீமா நடிச்சிருக்கானாமே...அதை நான் பார்க்கணும்டா...என்று ஆசையாய்ச் சொல்லி அழைத்துப் போகச் செய்து பார்த்து ரசித்தார்களாம். அந்தப் படத்தில் எம்.வி.ராஜம்மா வேடத்தில் முதலில் கண்ணாம்பாதான் ஒப்பந்தமாகி சில காட்சிகள் நடித்திருந்தார் என்கிற செய்தி...நமக்குப் புதிய தகவலாயும், கண்ணாம்பா நடித்திருந்தாலும் அந்தப் பாத்திரம் சிறப்புப் பெற்றிருக்கும் என்கிற திருப்தியையும் அளிக்கிறது.

       சேரனின் தேசிய கீதம் படத்தின் இளைஞர்களுக்கு வழிகாட்டியாக உள்ள பெரியவர் பாத்திரத்தில் முதலில் கதை கேட்டு ஓ.கே. சொல்லி எல்லாம் முடிந்த வேளையில், படப்பிடிப்பு வெளியூரில்தான் என்கிற போது நடிகர்திலகத்தின் உடல்நிலை அதற்கு ஒத்துழைக்காத நிலையில் அப்படத்தில் அவர் பங்கு பெற முடியாமல் போனது தனக்கு மிகுந்த வருத்தத்தை அளித்தது என்று இயக்குநர் சேரன் பதிவு செய்கிறார்.

       பாகப்பிரிவினை படம் எடுத்த காலம் சிவாஜி கொடி கட்டிப் பறந்து கொண்டிருந்த காலம். ஸ்டைலிஷ் உறீரோவாகத் தன்னை நிரூபித்தவர் ஊனமுற்றவர் கதாபாத்திரத்தில் தன்னை விகாரப்படுத்தி கன்னையன் காரெக்டர் செய்தது எத்தனை பெரிய சாதனை. கனவுக் காட்சி ஒன்றை வலியப் புகுத்தி, படாடோபமாய் வெளிப்படும் உறீரோக்கள் மத்தியில் சிவாஜியின் சாதனையும், தைரியமும், தன் திறமையின் மீதான் நம்பிக்கையும். முயற்சியும் நினைத்துப் பார்த்து வியக்கக் கூடியதல்லவா?

       தன் சொந்தப் படத்தில் நெகடிவ் ரோலில், கொலைகாரனாக, வில்லனாக தயங்காமல் நடித்தவராயிற்றே சிவாஜி. அவரின் அப்பாவாக நடித்த இயக்குநர் தாதாமிராசி, புதியபறவையை வெற்றிப் படமாக்கிய பெருமையும், என்னுடைய உறீரோ மிகச் சிறந்த நடிகர் என்று பெருமைப் பட்டதும்....எளிய சாதனைகளா...?

       தமிழ்க் கலாச்சாரத்தைப் பற்றித் தெரிஞ்சிக்க, சிவாஜி பத்மினி நடிச்ச தில்லானா மோகனாம்பாள் வாங்கிட்டுப் போங்க என்று அமெரிக்காவில் ஒரு கடையில் ஒருவர் கூற. நீங்கள் குறிப்பிடும் அந்தப் படத்தில் சிவாஜியுடன் நடித்த அந்த பத்மினி நான்தான் என்று அந்த நபரை மகிழ்ச்சிப்படுத்த. அது சிவாஜிக்குக் கிடைத்த பெருமையாகத்தானே அமைகிறது.

       பராசக்தி படத்தில் சிவாஜி நடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த அஞ்சலிதேவி அவரின் நடிப்பைப் பார்த்துவிட்டு வசனம் பேசும் திறமையைப் பார்த்து உடனே தன் படத்திற்கு புக் செய்தார் என்கிற ஒரு செய்தியும் நமக்கு இதில் கிடைக்கிறது.

       என்னை விட எட்டு வயது சின்னவன் ஆனாலும் சிவாஜி திறமையான நடிகன்...என்று ஜெமினிகணேசன் பாசமலரில் இருவருக்குமிடையிலான விவாதக் காட்சியில் நடித்து முடித்தபோது சொன்ன பாராட்டுரைகளைப் படிக்கும்போது, அந்த மிடுக்கான காட்சியை எவரும் இனி நினைத்துக் கூடப் பார்ப்பதற்கில்லை என்றே நமக்குத் தோன்றுகிறது.

       பாலாஜியுடனான நட்பு, மோட்டார் சுந்தரம் பிள்ளையில் பல குழந்தைகளுக்குத் தகப்பனாக நடித்தது (அப்போது அவரது வயது 38) வியட்நாம் வீடு படத்தில் பிரஸ்டிஜ் பத்மநாபய்யர் காரெக்டரைத் தன் நடிப்பாற்றலால் காலத்திற்கும் நிலைக்குமாறு தூக்கி நிறுத்தியது, நடிகை லட்சுமிக்கு நடை சொல்லிக் கொடுத்தது, தில்லானா மோகனாம்பாள் படத்திற்காக சேதுராமன் சகோதரர்களைத் தன் வீட்டுக்கு வரச்சொல்லி நாதசுரம் வாசிக்கச் செய்து, நேரடியாகப் பார்த்து உணர்ந்து, மனதில் ஏற்றி அவர்களுக்கு சிறப்பு செய்து, படத்தில் சிக்கல் சண்முக சுந்தரமாகவே வாழ்ந்தது, மிருதங்கச் சக்ரவர்த்தி படத்திற்காக உமையாள்புரம் சிவராமனிடம் பயிற்சி பெற்றது, அவரை வாசிக்கச் செய்து, உள்வாங்கியது,  என்று அவரைப்பற்றிய பெருமைகளைச் சொல்லிக் கொண்டே செல்கிறார் ஒய்.ஜி.மகேந்திரன் அவர்கள்.

       இன்னும் திகட்டாத ஏராளமான வியக்கும் செய்திகள் உண்டு இப்புத்தகத்தில். அத்தனையையும் நானே சொல்லிவிட்டால் பிறகு புத்தகத்தை வாங்கிப் படிக்கும் ஆர்வம் விட்டுப் போகும் அபாயம் உண்டு என்பதால் இந்த அளவில் ஒய்.ஜி.மகேந்திரனின் “நான் சுவாசிக்கும் சிவாஜி”  என்ற இந்த நூலுக்கான அறிமுகத்தை இத்தோடு நிறைவு செய்து கொள்கிறேன்.                                                      இலக்கியம் சார்ந்த நூல்களுக்கிடையே சற்றே ரிலாக்சேஷனுக்காக இம்மாதிரியான சுலப வாசிப்புக்குரிய புத்தகங்களையும் இடை இடையே படிப்பதன் மூலம் மனதையும், நம் செயலூக்கத்தையும் புதுப்பித்துக் கொள்ள முடிகிறது என்கிற உண்மையை இங்கே சொல்லித்தான் ஆக வேண்டியிருக்கிறது.

                                  ------------------------------------------------------------------

 

 

 

 

கருத்துகள் இல்லை: