25 ஆகஸ்ட் 2020

 

நாடகம்                                                                  ”விவஸ்தை”         

     ----------------------         

 

கதாபாத்திரங்கள் – 1) நாராயணன் – கணவர்  (2) சௌம்யா – மனைவி

இடம்            வீடு.

 

 

 

சௌம்யா –       பல்லைக் கடித்தவாறே ள்ளே வாங்க, சட்னு…” –.

நாராயணன் -    என்ன? என்ன? எதுக்கு ப்டி அவசரமாக் கூப்பிட்டே?

சௌம்யா   -    (கோபமாக) ம்ம்ம், பொங்கல் திங்கறதுக்கு.

நாராயணன் -    போச்சு, அதுக்குள்ளே கோபம் வந்திருச்சா…? விஷயத்தைச்                      சொல்லு

சௌம்யா -      நீங்க என்னா, பக்கத்து வீட்டுத் துணியையெல்லாம் தொட்டு              எடுத்திட்டிருக்கீங்க…? அசடு மாதிரி…?

நாராயணன் -    மாடில உலர்த்தப் போட்டிருக்காங்க…அது பறந்து நம்ம                    வீட்டுப் பக்கம் விழுந்திருக்கு…எடுத்துப்                                  போட்டேன்…இதிலென்ன தப்பு? இதுக்கு ஒரு அசடு                       சொல்லணுமா?

சௌம்யா -      மாடில அப்டி கல்லைப் பாரமா வச்சு உலர்த்தாதீங்க…இந்தப்               பக்கம் பெருக்கி சுத்தம் செய்ய வர்றப்போ காத்தடிச்சு                     தலைல விழுந்திடுச்சின்னா சங்கடம்னு                                    எத்தனையோவாட்டி அவுங்ககிட்டே சொல்லிட்டேன்…                        கேட்குறாப்புல இல்லை….கொடில உலர்த்துற துணிகளுக்குக்             கிளிப்பும் போட மாட்டேங்குறாங்க…இதுல நீங்க வேறே                  வசதியா துணிகளை  எடுத்துப் போடுறீங்க…ரொம்ப                          நல்லதாப் போச்சுன்னு விட்ருவாங்க….வேணும்னா வந்து                  எடுத்துக்கட்டுமே…

நாராயணன் -    வந்து எடுக்கணும்னா, ரோட்டுப் பக்கமா வந்து, நம்ம வீட்டு               கேட்டைத் திறந்து, பர்மிஷன் கேட்டு, உள்ளே வந்து                           எடுக்கணும்…எதுக்கு இவ்வளவு சிரமம்…போகுது விடு….

சௌம்யா -      அப்போ தினமும் எடுத்துப் போடறேங்கிறீங்களா?

நாராயணன் -    போட்டா போச்சு….ஒரு உதவிதானே…கல்லு வைக்காத                    துணிக காத்துல பறந்து விழுகுது…அப்டி                                 விழுந்திருக்கோன்னு அவுங்க தெரிஞ்சிக்கிறதுக்கு                        முன்னாடி நாம       எடுத்துப் போட்டுட்டா பிரச்னை                   முடிஞ்சிது பாரு…

சௌம்யா -      ரொம்ப சமத்து…உங்களுக்குக் கொஞ்சங் கூட விவஸ்தையே              கிடையாது…அவ்வளவுதான்…

நாராயணன்-     இதிலென்ன விவஸ்தை கெட்டுப் போச்சு…? உதவி செய்றது               தப்பா?

சௌம்யா -      உதவிங்கிறது கேட்டு செய்றது…இது நல்லால்லியே….

நாராயணன் -    உனக்கு நல்லால்லே…எனக்கு அப்டி ஒண்ணும்                                 தோணலை…அவுங்கவுங்க மனசைப் பொறுத்த விஷயம்…

சௌம்யா -      அந்தம்மா பாவாடை, ரவிக்கைன்னு வித்தியாசம் பார்க்காம               எடுத்துப் போடுவீங்களாக்கும்….போதாக்குறைக்கு நம்ம                    வீட்டுக்கு வர்ற கேபிள் வயர்லயும் உலர்த்துறாங்க…மாடில                    கைக்கு வாகா எதெது தெரியுதோ அங்கெல்லாம்                       துணிகளைப்போட்டுடுவாங்க                                                 போலிருக்கு…உள்ளாடைகளெல்லாம் வீட்டுக்குள்ளே                        உலர்த்தணும்னு தெரிய வேண்டாம்? இப்டியா ஊர்                       பார்க்கிறமாதிரிப் போடுறது? அவுங்க மனசுக்கு அசிங்கமாத்                      தெரிலன்னு அர்த்தம்…

நாராயணன் -    நீயே நா சமீபத்துல சொன்ன பின்னாடிதானே அப்டிச்                           செய்ய ஆரம்பிச்சே…? ராத்திரி பாரா போகுற போலீஸ்                    லட்டியால கேட்டுக்கு மேலே  கொடியைத் தூக்கிப்                      பார்த்திட்டுப் போறான்னு அவன் சந்தேகத்தைச் சொன்ன                 பின்னாடிதானே உனக்கே பயம் வந்தது?

சௌம்யா -      அவன் செய்திட்டா? அது சரியா? வீட்டுக்குள்ளதானே                           காம்பவுன்ட் உட்பக்கமா உலர்த்தப் போட்டிருக்கோம்?                          தெருவுலயா துணி உலருது சந்தேகப்படுறதுக்கு?

நாராயணன் -    போலீஸ்காரங்களே அப்டித்தான். அவனுக்கு சந்தேகமாத்                 தோணினா நோண்டாம விடமாட்டான்….

சௌம்யா -      போதும் அபத்தப் பேச்சு…இனிமே துணி எடுத்துப்                         போடுறதெல்லாம் நீங்க செய்யாதீங்க…பக்கத்து வீடு, எதிர்                 வீடுன்னு பார்த்தாங்கன்னா அசிங்கம்…என்னமாவது தப்பா                     தோணும்…இந்தாளுக்கு வேறே வேலையே இல்லையான்னு               நினைப்பாங்க…சிவனேன்னு வீட்டுக்குள்ள கிடக்க                         மாட்டீங்களா?

நாராயணன் -    சிவனேன்னு நான் எங்க கெடக்குறது…அந்த செவன்தான                  நம்மள இந்தப் பாடுபடுத்திறான்….

சௌம்யா      போச்சு…சினிமா வசனம் பேச ஆரம்பிச்சாச்சா….அதான்                           உங்களுக்கு எதுக்கும் விவஸ்தையே கிடையாதுன்னு                    முதல்லவே சொன்னேன்…யாரு என்ன நினைச்சா                        உங்களுக்கென்ன? பொழுது போகணும் உங்களுக்கு…அதுக்கு               எதையாச்சும் செய்திட்டே                                              இருக்கணும்…அவ்வளவுதான்…எதைச் செய்யணும், எதைச்                  செய்யக் கூடாதுங்கிறதெல்லாம்தான் கிடையாதே….

நாராயணன்      யாரு என்ன நினைச்சா என்ன? அடுத்தவன் இதை                       நினைப்பானோ, அதை நினைப்பானோன்னு எல்லாம் நாம                      தயங்கிட்டேயிருந்தா இந்த உலகத்துல எதையுமே செய்ய                      முடியாது…எதுத்தாப்ல அப்டி நினைக்கிறதா நீ                            சொல்றவங்களுக்குக் கூடத்தான் நான்                                  உதவுறேன்…வித்தியாசமா பார்க்கிறேன்…எதோ என்னாலான                     உபகாரம்…அவ்வளவுதான்…

 

                           காட்சி – 2

இடம் – வீடு     கதா பாத்திரங்கள் – நாராயணன் மற்றும் சௌம்யா

    

 

சௌம்யா -      உபகாரம் செய்றதையும் சந்தேகப்படுறமாதிரி செய்யக்                    கூடாது….தெளிவாச் செய்யணுமாக்கும்…

நாராயணன் -    கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நா சொன்னதை இன்னும் நீ               மறக்கலியா? என்ன சொல்ல வர்றே? புரியல எனக்கு…

சௌம்யா -      எதிர் வீட்டுல அவர் ஊர்லர்ந்து வந்தவுடனே தபால்களைக்                      கொண்டு கொடுத்தீங்களே….அப்போ நா சொன்ன மாதிரிச்                  செய்தீங்களா? செய்யலியே?

நாராயணன் -    இதிலென்னடி இருக்கு…அவர் என்ன நம்மளைச் சந்தேகமா                      படப்போறார்? அதான் தபாலோட தபாலாக் கொடுத்திட்டு                 வந்திட்டனே…!

சௌம்யா -      கொடுத்திட்டீங்க சரி, அதுல அந்த ஒரு கவரை அட்ரசைப்                      பார்க்காமக் கட் பண்ணிட்டேன்னு சொல்லி ஸாரி                        கேட்டீங்களா? இல்லியே…? நான் சொல்லித் தந்தேன்ல…ஏன்                    கேட்கலை?

நாராயணன் -    ஸாரி சொல்லாட்டி என்ன? அவர்தான் ஒண்ணும்                        கேட்கலியே…அது சாதா தபால்தாண்டி….எங்கயோ                         மியூச்சுவல் ஃபன்ட் போட்டிருப்பார் போலிருக்கு…அதுக்கு                                                                                  அக்கவுன்ட்ஸ்டேட்மென்ட்வந்திருக்கு…அவ்வளவுதான்…நமக்கு              வந்த      தபால்களோட அது இருந்ததுனால வரிசையா                 நுனியைக் கட்      பண்ணும்போது, அதையும் சேர்த்துக் கட்                     பண்ணிட்டேன்…இதிலென்ன தப்பிருக்கு…

சௌம்யா -       தப்புக்கு நா சொல்லலை…அந்த விபரத்தை அவர்ட்டச்                     சொல்லியிருக்கலாமே…வேணும்னே அவங்க தபாலைப்                  பிரிச்சுப்      படிச்சதா ஆகாதா?

நாராயணன் -    அம்மா தாயே…ஆள விடு….கொடுத்தாச்சு…முடிஞ்சு                         போச்சு….ஒரு மாசம் ஓடிப்போச்சு…இப்பப் போய் இத நீ                    நோண்டாத…அவரே ஒண்ணும் கேட்கலை…நீ இப்பப்                       பேசறதப் பார்த்தா, அவர் ஊர்லருந்து வந்தவுடனே போயி,                    அந்தப் பழைய விஷயத்தைச் சொல்லி ஸாரி கேட்டுட்டு                     வாங்கன்னுவ போலிருக்கு…நல்லாருக்கு உன் கத…

சௌம்யா -      இதத்தான் நான் அப்பவே சொன்னேன்….எதுக்கும்                         உங்களுக்கு விவஸ்தையே                                            கிடையாதுன்னு….விவஸ்தைன்னா என்னன்னு முதல்ல                   புரிஞ்சிக்குங்க…தோணினபடியெல்லாம் இருக்கிறதுங்கிறது                      அழகில்ல…

நாராயணன் -    ஆரம்பிச்சிட்டியா பழையபடி….இல்லாட்டிப் போகட்டும்…நீ                  நிறைய விவஸ்தையோட இருக்கேல்ல…அது போதும்….

    

சொல்லிவிட்டு தன் அறைக்குள் புகுந்து கொண்டு தனக்குள் முனகுகிறார் நாராயணன்.

    

நாராயணன் –    அப்பாடீ, என்ன வாங்கு வாங்குகிறா? ஈரைப் பேனாக்கி,                   பேனைப் பெருமாளாக்குற கதையால்ல இருக்கு?                         ஸ்ஸ்ஸ்….அப்பாடா…இவளோட பேசி டயர்ட் ஆயிப்                       போச்சு….கண்ணை மூடிட்டு அப்டியே கொஞ்ச நேரம்                           இருக்கலாம் போலிருக்கு… அடி ஆத்தி…இந்தோ இது                      அத்தனையும் எதிர் வீட்டு ராஜாராமுக்கு வந்த தபால்தான்.                     எத்தனை பத்திரமா  ரப்பர் பேன்ட் போட்டு பாதுகாப்பா                   வச்சிருக்கேன்…இவ என்னடான்னா என்னென்னமோ                      சொல்றாளே….குறை சொல்றதே இவளுக்கு வேலையாப்                  போச்சுய்யா..மனுஷன நிம்மதியா இருக்க விடமாட்டா                    போலிருக்கு…   

சௌம்யா -      அங்க என்ன சத்தம்? என்ன நீங்களாப் பேசிக்கிறீங்க?

நாராயணன் -    ஒண்ணுமில்ல தாயி…என்னவோ புலம்புறேன்…விடுவியா?

                           காட்சி – 3 . (Flash Back – பின்னோக்கு உத்தி)                             ----------------------   

(கடந்த வாரம் நடந்தது இங்கே காட்சியாக மலர்கிறது. )     

கடந்த வாரம் ஒரு நாள்….. ( அறிவிப்பாக…)         

கதாபாத்திரங்கள் – (1) நாராயணன்  (2) எதிர் வீட்டு ராஜாராம்

ஒரு வாரம் முன்பு நடந்ததை நினைத்துப் பார்த்துக் கொண்டிருக்கிறார் நாராயணன். 

 

    

ராஜாராம் -           ஸார்…நாராயணன் ஸார்….

நாராயணன்      யாரு, ஓ…ராஜாராமா…வாங்க…வாங்க…..உள்ளே வாங்க….

ராஜாராம் -           இல்ல இருக்கட்டும்…ஊருக்குப் போயிட்டிருக்கேன்…இப்ப                    ஆட்டோ வந்திடும்…கொஞ்சம் வீட்டைப்                                 பார்த்துக்குங்க…சாயங்காலம் மட்டும் வாசல் லைட்டைப்                  போட்டு, பத்து மணிக்கு அணைச்சிடுங்க….

நாராயணன் -    ஓயெஸ்…வழக்கமாச் செய்றதுதானே…நான்                               பார்த்துக்கிறேன்…நீங்க கவலைப்படாமப் போயிட்டு                       வாங்க….பாருங்க…இந்த டார்ச் லைட்டை…நாலு                            பேட்டரியாக்கும்…ராத்திரி உங்க வீட்டுப் பக்கம் மொட்டை                 மாடிக்குப் போயி ஒரு சுத்து சுத்திட்டுத்தான்                             வருவேன்…நீங்க கிளம்புங்க….

ராஜாராம் -           அப்டியே தபாலும்….

நாராயணன்      அதான் வாங்கி வச்சிடுவேனே…நா போஸ்ட்மேன்கிட்டயே                       சொல்லிடுவேன்….எதுத்த வீட்டுத் தபாலை எங்கிட்டக்                          கொடுத்திடுங்கன்னு…பத்திரமா வச்சிருக்கேன்….

ராஜாராம் -           அதுக்கில்லேசார்…பையனோட  பாஸ்போர்ட் வரும்…அதை                 உங்ககிட்டே     தரமாட்டேன்னுவான்..அதுக்காகத்தான் இந்த                  ஆதரிசேஷன் லெட்டர் (சொல்லிக் கொண்டே தயக்கத்தோடு              நீட்டுகிறார்.

நாராயணன் -   அதுக்கென்ன வாங்கி வச்சிட்டாப் போச்சு…லெட்டர் கொடுத்தா              மாட்டேன்னா சொல்லப் போறான் போஸ்ட்மேன்….யூ                           டோன்ட் ஒர்ரி….சந்தோஷமா ஊருக்குப் போயிட்டு                        வாங்கோ….

 

நினைவுக்கு வருகிறார் நாராயணன். நடப்புலகம்.

 

நாராயணன் தனக்குத்தானே பேசிக் கொள்கிறார் – லெட்டர நீட்டினவுடனே கொடுத்துட்டானா என்ன?.

           போஸ்ட் மாஸ்டர் என்ன சொல்லுவாரோ, தெரிலயே ஸார்…கொடுத்துப் பார்க்கிறேன்…..நாங்க பாஸ்போர்ட்டையெல்லாம் வேறே யார்ட்டயும் கொடுக்கிறதில்லை…ஆதரிசேஷன் இருந்தாலும்….எங்களுக்கு உத்தரவு அப்டி…!

     படுபாவிப்பய….. சங்கடப்பட்டுட்டேதான கொடுத்தான்.

     ராஜாராமுக்கு வந்திருந்த தபால்களை மீண்டும் ஒருமுறை நன்றாக அடுக்கி வைக்கிறார்.

 

                           காட்சி – 4  

                              -------------------

கதா பாத்திரங்கள் – நாராயணன் மற்றும் மனைவி சௌம்யா. மற்றும்                               ராஜாராம்

    

 

சௌம்யா -      உங்களை மாதிரி ஒருத்தர் அவருக்கு கிடைக்கணுமே?

நாராயணன் -    உதவி செய்றதுன்னு ஏத்துண்டுட்டோம்னா பர்ஃபெக்டா                    செய்துடணும்…இல்லன்னா ஏத்துக்கப்படாது….

சௌம்யா -      நல்லா செய்யுங்கோ…யார் வேண்டான்னா? அகஸ்மாத்தா                 ஏற்பட்ட அந்தத் தவறைச் சொல்லிட்டுக்                                      கொடுத்துடலாமேன்னுதான் சொன்னேன்…-

     சொல்லிவிட்டு வேலையைக் கவனிக்கப் போய்விடுவாகிறாள்சௌம்யா.

 

     நாராயணன் தனக்குள் பேசிக் கொள்கிறார்.   

 

நாராயணன் -    போஸ்ட் மேன் இரண்டு வீட்டுத் தபாலையும் ஒண்ணா                   வச்சுக் கொடுத்திட்டுப் போறான். அவனுக்குக்                            கையைவிட்டுப் போனாச் சரி. நமக்கு அப்டியா…எத்தனை கவனமா இருக்க வேண்டிர்க்கு…அவன்பாட்டுக்குக் கொடுத்திட்டுப் போக, நானாவது நிதானிச்சனா? எனக்கு அவசரம்? வழக்கம்பால சிசர வச்சுக் கவரைக் கட் பண்ணைல, அவரோட ஒரு தபாலும்  சேர்ந்து கட் ஆயிடுச்சி…இந்தப் பழிக்கு என்ன பண்றது? உதவி செய்றதுல இவ்வளவு பிரச்னையா? இதுக்கு ஒரே வழி அதுதான். பேசாம சொல்லிக் கொடுத்திர வேண்டிதான். தெரியாமக் கட் ஆயிடுச்சின்னு…பிரச்னை அப்பவே முடிஞ்சி போகும்…அதுதான் நிம்மதி... அட மணி ஒன்பதாச்சு போலிருக்கு…எதிர் வீட்டு வாசக் கதவு திறக்குற சத்தம் வேறே கேட்குது… வந்திருப்பாரோ  வாசல்ல போய் பார்ப்போம்…. 

சௌம்யா -      அவர் வந்துட்டார் போலிருக்கு. போங்கோ…போய்                         தபால்களைக் கொடுத்திட்டு        வந்திடுங்கோ…. –    

 

நாராயணன் –    இப்பத்தானே வந்திருக்கார்…கொஞ்சம் பொறு…மூக்குல                           வியர்க்குமா உனக்கு…இப்டி ஓடி வர்றே?      …இதோ                         போறேன்…

 

நாராயணன் -    இப்பத்தான் வந்தீங்க போலிருக்கு…இருங்க…இருங்க…டயர்டா                     இருப்பீங்க….- சொல்லிக்கொண்டே கையிலிருந்த                          தபால்களை நீட்டுகிறார்.

ராஜாராம் -           அதெல்லாம் ஒண்ணுமில்ல…ஏ.ஸி.கோச்லதான் வந்தேன்.                  இந்த வெயில்ல எங்க செகன்ட் ஸ்லீப்பர்ல வர்றது…?                          வெந்து போகும்…..

நாராயணன் -    ஆமாமா…சரி…பாருங்க…நா வர்றேன்….

ராஜாராம் -           ஒண்ணுமில்ல, சும்மா வாங்க ஸார்…நீங்க என்ன…?                       வந்தவுடனே கிளம்புறீங்க?  உட்கார்ந்திட்டுப் போங்க…..

                தவிர்க்கமுடியாமல் உள்ளே நுழைந்து அமர்கிறார்.

நாராயணன் -     ஸ்ஸ்ஸ்…அப்பாடா…வர வர உட்கார்ந்து எழுந்திரிக்கிறதே                 பெரிய சிரமமாப் போச்சு…

-               என்ன, போன காரியமெல்லாம் முடிஞ்சிதா?

ராஜாராம் -      முடிஞ்ச மாதிரித்தான். அஸ்தினாபுரத்துல ஒரு                                அபார்ட்மென்ட்….அட்வான்ஸ்                                            பண்ணியிருக்கு…..அவ்வளவுதான்….

நாராயணன்      அஸ்தினாபுரமா? பெயரே வித்தியாசமாயிருக்கு? புராணப்                 பெயர் போல… அது எங்க இருக்கு மெட்ராசுல?

ராஜாராம் -           குரோம்பேட்டைக்குப் பின்னால வருது ஸார்…எனக்கே                     இப்பத்தான் தெரியும்….என் பையன் அங்கதான்                                 வாங்கணும்னுட்டான்….நமக்கென்ன…அவன்தான                                இருக்கப்போறான்னுட்டு நானும் ஓ.கே. ன்னுட்டேன்.                           ஆபீசுக்கு வசதியா, கிட்டக்க இருக்கட்டும்ங்கிறதாச்                       சொல்றான்…

நாராயணன் -    அது சரி….அவனோட வசதிதானே முக்கியம். நாம இங்கே                       இருக்கப் போறோம். எப்பவாச்சும் போயிட்டு வரப்                        போறோம்…அவ்வளவுதானே…சரி…ரெஸ்ட் எடுங்கோ…நான்                  போயிட்டு வர்றேன்…. .

     ராஜாராம் - இருங்க ஸார்…பால் காயுது…ஒரு வாய் காபி சாப்டுட்டுப்                   போங்க….எனக்கு வந்தவுடனே ஒரு காபி                                      சாப்பிடணும்…அப்பத்தான் மத்த காரியமே ஓடும்….என்                          ஒய்ஃப் இன்னும் பத்து நாள் கழிச்சிதான் வருவா…பாருங்க                      டிபன் வாங்கிட்டு வந்திட்டேன்….பத்து மணிக்கு மேலேதான்                    சாப்பிடுவேன்…..

நாராயணன் -    ஓ.கே…ஓ.கே….நா இப்பக் காபியெல்லாம் சாப்பிடுறதில்லே.                       சாயங்காலம் ஒரு காபி. அத்தோட                                           சரி….வரட்டா…பார்க்கலாம்…

    

(கிளம்பி வாசல் வரை வந்தவர் நினைவு வந்தவராக…).

 

நாராயணன் -    அடடே….எதுக்கு வந்தனோ அதைச் சொல்ல மறந்திட்டேன்                      பாருங்கோ…அந்தத் தபால்ல ஒண்ணை, தெரியாம என்                    தபால்களோட சேர்த்துக் கட் பண்ணிட்டேன்….பிறகுதான்                  தெரிஞ்சிது…ஒட்டிண்டிருந்திருக்கு…கட் ஆனவுடனே பிரிஞ்சி                     விழறது….ஸாரி…கொஞ்சம் பார்த்துக்குங்கோ….நான் வரேன்…

ராஜாராம் -      (நாராயணன் சொன்ன அந்தக் குறிப்பிட்ட தபாலை உருவி                      எடுத்தவராக…)

               ஓ…! இதத்தான் சொல்றேளா……..!!

நாராயணன் -                                                               அதான்…அதேதான்…கவனிக்கலை….பார்த்துக்கறேளா….(.இவரையறியாமல் வாய் குழறுவது போல் பிரமை.)

     (வாசலை எட்டி கேட்டைத் திறக்கும் சத்தம்). (ராஜாராம் குரல்சற்றுச் சன்னமாக)

ராஜாராம் -           போனவாட்டி கூட இதே போல ஒரு தபால் திறந்துதான்                  இருந்திச்சி…..

     நாராயணனுக்கு காலில் எதுவோ சுறுக்கென்று குத்தியது போலிருக்கிறது.(நெஞ்சுக்குள்ளும்தான்)ஸ்ஸ்ஸ்…..யப்பாஆஆஆஆஆஆஆ…..சௌம்யா சொன்ன விவஸ்தைக்குப் பலன் இதுதான் போலிருக்கு…. – தனக்குத்தானே சங்கடத்தோடு முனகிக் கொள்கிறார்.

                           ----------------------------------

                               

                                                                                   

 

 

                                                                                    

கருத்துகள் இல்லை: