என் சொந்த ஊர் திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு. மூன்று அக்ரஉறாரங்கள் உண்டு அங்கே. நடுத்தெரு, ஒற்றைத் தெரு,கோயில்தெரு என்று. இந்தக் கோயில் தெருவில் “பெரிய அகம்“ என்று ஒரு வீடு. இன்றும் இருக்கிறது. அதற்கு எதிர் வீடுதான் சி.சு.செ.யின் நினைவகம்..
இந்தத் திண்ணையில் தனியாக அமர்ந்துகொண்டுதான் எழுத்து இதழுக்குப் பின் அடித்துக் கொண்டிருப்பார் சி.சு.செ. . சுத்தியலை வைத்துக் கொண்டு மடக்கி மடக்கி அக்கறையாய் பின் போடும் அழகு எழுத்தில் அவர் எதிர்பார்த்த நேர்த்தியை நமக்கு அடையாளப்படுத்தும்.
இதழ்களையும் வேறு சில புத்தகங்களையும் ஒரு பழைய வேட்டியில் வைத்துக் கட்டி தோளில் சுமந்து கொண்டு செல்லும் காட்சியை நாங்கள் பார்த்திருக்கிறோம். மதுரை காமராசர் பல்கலைக்கு அந்த சுமையோடு அவர் போனதை நாங்கள் அறிவோம்.
வாசலில் சரக் சரக் சரக்கென்று டயர் தேய ஒரு சத்தம் வருகிறதென்றால் வீட்டுக்குள்ளிருந்தே சொல்லிவிட முடியும் அது அவர்தான் என்று. நீர்க்காவி ஏறிய ஒரு நாலுமுழ வேட்டி...கை வைக்காத காடா பனியன்...தோளில் ஒரு துண்டு.....இதுதான் அவரது தோற்றம். திரு சி.சு.செல்லப்பா அவர்களின் தலையாய பணி என்று எப்படி வாடி வாசலும், சுதந்திர தாகம் நாவலும் சொல்லப்படுகிறதோ அது போல் அவர் கமலாம்பாள் சரித்திரம் எழுதிய திரு பி.ஆர்.இராஜம் அய்யர் அவர்களின் நூற்றாண்டு விழாவினைப் பெருமுயற்சி எடுத்து வத்தலக்குண்டில் கொண்டாடியதுதான் அவரது மாஸ்டர் பீஸ். இன்றும் ஒற்றைத் தெருவில் இவரது நினைவு இல்லம் இருக்கிறது. வாசல் சுவற்றில் ஒரு சிறிய கல் பதித்த நிலையோடு. சென்னையிலிருந்து தனி பஸ் அமர்த்தி பிரபல எழுத்தாளர்கள் பலரையும் கொண்டுவந்து இறக்கினார். எஸ்.வி.சகஸ்ரநாமத்தின் சேவா ஸ்டேஜ் நாடகக் குழு தேரோட்டி மகன் நாடகம்தான் அப்பொழுது அரங்கேறியது. சிறுகதை மன்னன் திரு பி.எஸ்.ராமையா அவர்கள் ரிஉறர்சலில் நடிப்பு சொல்லிக் கொடுக்கும் அழகை நேரே கண்ட பாக்கியம் எங்களுக்கு. இன்று சி.சு.செ. நினைவகமாக இருக்கும் வீட்டில்தான் அந்த நாடகத்தில் நடித்த எஸ்.வி.சகஸ்ரநாமம், நடிகர் முத்துராமன் மற்றும் பலர் தங்கியிருந்தார்கள்.
மாலையில் மேல மந்தை ராஜாஜி மேடையில் கூட்டம் துவக்கப்பட்டு, ஊர்வலம் கிளம்பி நாதஸ்வரக் கச்சேரியோடு மேளதாளத்துடன் அவரது நினைவகம் நோக்கிச் சென்ற ஊர்வலம் இன்றும் எங்கள் கண் முன்னே. நா.பா.வோடு அவரின் அழகையும் கம்பீரத்தையும் பார்த்து ரசித்துக் கொண்டே அவர் அருகே நடப்பதே பெரிய பெருமை என்று (அப்படித்தானே...!) அவர் கூடவே அந்த ஊர்வலத்தில் ஒட்டி ஒட்டி நடந்து பெருமை கொண்டோம் எதுவொன்றில் இறங்கினாலும் உயிரைக் கொடுத்து அதில் ஒரு perfectness ஐக் கொண்டு வரும் திரு சி.சு.செல்லப்பா அவர்களை வாழ்நாள் முழுவதும் எங்களால், எங்கள் ஊரான அந்த வத்தலக்குண்டு இளைஞர்களால் மறக்கவே முடியாது.
எங்களூர் பல பெருமை பெற்றது. சுதந்திரப்போராட்டத் தியாகி திரு.சுப்ரமணியசிவா பிறந்தது இங்குதான். சிறுகதை மன்னன் திரு பி.எஸ்.ராமையா ஊர் இதுதான். பிரபல பெண் எழுத்தாளர் மேடம் ஜோதிர்லதா கிரிஜா ஊர் இந்த வத்தலக்குண்டுதான். அந்த வாசனையில்தான் இன்று நானும் கொஞ்சம் கொஞ்சம் எழுதக் கற்றிருக்கிறேன் என்று சொல்லிக் கொள்ள எனக்கு முழுத் தகுதி உண்டுதான்.
------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக