16 ஆகஸ்ட் 2020

“மரபு சார்ந்த கதாபாத்திரங்கள்“-தி.ஜானகிராமனின் மூன்று சிறுகதைகள்-ஒரு பார்வை ---------------------------------------------------------------------------------------------------------------------

கட்டுரை         உஷாதீபன்

“மரபு சார்ந்த கதாபாத்திரங்கள்“-தி.ஜானகிராமனின் மூன்று சிறுகதைகள்-ஒரு பார்வை                                                                        ---------------------------------------------------------------------------------------------------------------------


      ரு கதையின் கதா பாத்திரங்கள் மௌனமாக-குறைவாக-மிகச் குறைவாகப் பேசி நகரும்போது – எதற்காக இப்படி  என்கிற புதிரோடேயே நாமும் தொடர்கிறோம். எப்பொழுதாவது பேசும்போது-என்ன சூட்சுமம் அதில் என்று தேட ஆரம்பிக்கிறோம். படைப்பாளியை நினைத்து வியந்து போகிறோம். வாசிப்பை விரிவு செய்கிறோம்.

       தன் செயல்களை வெகு அமைதியாக, நிதானமாக மேற்கொள்ளும் ஒருவர், எதை எதிர்நோக்கி, எதை நிறைவேற்ற இப்படி செயல்படுகிறார் என்று யோசனையோடேயே வாசிப்பைத் தொடர்கிறோம். விளைவு என்னவாகப் போகிறது என்பதில் நமக்கொரு ஆர்வம்.      நன்மையோ-தீமையோ அல்லது அந்தப் பாத்திரத்தின் நியாயமோ அதை உணர்கையில் ஆஉறா என்று வியந்தோ அடடா…! என்று பரிதாபம் கொண்டோ கடந்து போகிறோம்.

       வரிக்கு வரி ரசனையை மிதக்க விடும் அழகு தி.ஜா..வினுடையது. அங்கொன்றும் இங்கொன்றுமாக தொட்டுச் சென்று கதையை ஓட்டுவதில்லை.  எதுவும் ரொம்ப நுணுக்கமாய் இருக்கணும். ஒரு மனிதனின் இயல்புகள், செயல்கள், தனித்தன்மை என்று உணரப்பட வேண்டும்.அதன் மூலம் படைப்பு ஆழம் பெற வேண்டும். அதை ஒரு எளிய வாசகனும் ரசிப்பது போல் சிக்கனமான, பொருத்தமான வார்த்தைகளில் வழங்கும் திறன் வேண்டும்.

       தி.ஜா..வின் “ஸ்ரீராமஜெயம்“ கதையைப் படிக்கும்போது இப்படிப் பலவும் தோன்றுகின்றன. இப்படியொரு தலைப்பை வைத்து, ஒரு காரெக்டரையும், அதன் மன உணர்வுகளையும், ஒழுக்க சீலத்தையும், மறைபொருளாக-பாத்திர அமைதியாக உணர்த்திக்கொண்டே வாசகனை ஊடுருவி அறியச்செய்து கொண்டே செல்லும் ஆழமான பயணம் இக்கதையில் சீராக இயங்குகிறது.

       அந்த அச்சாபீஸில் காவல்காரராக இருக்கும் வேலுமாரார் இருபது வருஷம் சர்வீஸ் போட்டவர். இவர் பார்வையிலேயே முழுக்கதையும் சொல்லப்படுகிறது. அவருக்கு மூத்த மூதாதை ராகவாச்சாரி இருபத்தாறு வருஷம் சர்வீஸ் போட்ட ப்ரூப் ரீடர். வேலுமாரார் ராகவாச்சாரிக்கென்று இதயத்தில் ஒரு இடம் ஒதுக்கியிருந்தார். அவர் மீது மிகுந்த மதிப்புக் கொண்டிருக்கும் வேலுமாராருக்கு அவரின் ஒரு குறிப்பிட்ட நாளைய செய்கைகள் வியப்பையும் சந்தேகத்தையும் ஊட்டுகின்றன. சந்தேகப்படுவதுதானே அவர் வேலையே! பாவம்...ராகவாச்சாரி...என்னய்யா இது அசட்டுப் பிசட்டு வேலை...என்கிற முதலாளியின் வார்த்தைகளிலேயே விஷயம் முடிந்து போகிறது. அத்தோடு விடுவதே அவருக்கான ஸ்தானம். அவர் கௌரவம் காப்பாற்றப்படுகிறது. ரொம்ப நல்லவர்கள் வாழ்க்கையின் அபூர்வ சந்தர்ப்பங்களில் ரொம்பவும் பாவமாகி விடுவதுண்டு. அத விடுங்க...என்பதுபோலான நிகழ்வுதான் இது. தலைப்புதான் தவறைப் புரிய வைக்கிறது. இதற்காகவா....? என்று நம்மையும் துணுக்குறச் செய்கிறது.                                                               ராகவாச்சாரி எதற்காக அந்த ஐநூறு பக்க பைன்ட் நோட்டை எடுத்தார்….? நாமும் அவர் சார்பாகவே நிற்கத் தலைப்படுகிறோம். அதுவே மனிதாபிமானம்.       பரந்த வாழ்க்கையின் ஒரு சிறு கீறலை துல்லியப்படுத்த என்ன மாதிரியான உழைப்பு? வியந்து நிற்கிறோம். ;தி.ஜா.வின் உரையாடல்கள் பாத்திரங்களின் குணாதிசயத்தை வெளிப்படுத்துபவையாகத் துல்லியமாய் அமைகின்றன. அதன் போக்கு சொல்லும் கதையின் ஆழத்தைத் தெரிவிப்பவையாக அமைகின்றன.

       வித்தியாசமான கூறு முறைகளி்னால் தி.ஜா.வின் கதைகள் திரும்பத் திரும்ப நம்மை வாசிக்கத் தள்ளுகின்றன.. அப்படியான முயற்சிகள் அவரின் மொத்தக் கதைகளில் குறைவுதான் என்றாலும், அந்தக் குறிப்பிட்ட  சில படைப்புக்களே தொடர்ந்து நம் சிந்தையில் பயணம் செய்து மலைக்க வைக்கின்றன.

       .ஆரஞ்சுப் பழத்தைக் பிழிந்து எடுத்தது போல் இருக்க வேண்டும் தலைப்பு என்பார் எழுத்துச் சித்தர் ஜெயகாந்தன். அப்படி அர்த்தப்படுகிறது ஒரு படைப்பின் தலைப்பு. வலியத் திணித்ததல்ல. தானே வந்து பாந்தமாய் உட்கார்ந்து கொண்டது. கதை கூடி வரும்போது அந்தத் தலைப்புக்கு அப்படி ஒரு அர்த்தம் வெளிப்படுகிறது.                              “வேண்டாம் பூசணி“ - தலைப்பைப் பார்த்தவுடனேயே உள்ளே போகத் தோன்றுகிறதல்லவா?

       யசானால் சின்னச் சின்ன  வேலைகள் கூட மனதுக்கு மாச்சலாய்த் தெரியும். உட்காருவதும், எழுவதும் கூட சிரமம்தான். அதிலும் போஷிக்க ஆள் இல்லையானால் ஏன் வாழ்கிறோம் என்றிருக்கும். உயிர் போகாதா? என்று மனம் வெறுக்கும். வயதானவர்களுடைய பாடுகளை, சிரமங்களை உணர்ந்திருக்கிறீர்களா? அதை தி.ஜா. சொல்லிக் கேட்க வேண்டும்

       தான் தன் மாமியாருக்கு செய்த சிஸ்ருஷைகளை நினைத்துப் பெருமூச்சு விட்டுக் கொண்டே, உனக்கு ஒரு குறையும் வராதடி அம்மா என்று  அவள் வாழ்த்தியிருந்தும் அந்த உத்தமி வாக்குக் கூடப் பலிக்கவில்லையே என்று மூன்று பிள்ளைகளையும், இரண்டு பெண்களையும் கல்லுக் கல்லாகப் பெற்றுவிட்டு இந்தக் காடு அழைக்கிற வயசில் தனியாய்க் கிடந்து அல்லாட வீங்கின காலும் வீங்கின கையுமாக….ராதைப்பாட்டி.

       சாயங்காலம் திண்ணையில் காலை நீட்டி உட்கார்ந்து கொண்டுவிட்டால் பொழுது போவதே தெரியாது. இயந்திரம் மாதிரி கை ருத்ராட்சக் காய்களை எண்ணும். வாய் ராமாயணத்தைச் சொல்லும். ஆனால் மனம் மட்டும் பழைய முகங்கள் ஆசைகள் எல்லாவற்றையும் பார்த்துப் பார்த்து ஏங்கிக் கொண்டிருக்கும்.

மூத்த பிள்ளையைப் பார்த்து ரெண்டு வருஷம் ஆகி விட்டது. எப்போதாவது நான்கு வருஷத்திற்கு ஒரு தடவை வருவான். வந்தால் தாயாரைப் பார்க்கத் தோன்றாது. அவனுக்கு தாயார், தகப்பனார் இருவர் மீதும் கோபம். சின்னப் பிள்ளைக்கு  அதிகமாகச் செய்து விட்டார்கள் என்பது அவன் எண்ணம். இந்த மாதிரி அசட்டு எண்ணங்கள் தோன்றிவிட்டால் படைத்தவன் கூடத் திருத்த முடியாது. அதுவும் அவனுக்காகப் படாமல், பொண்டாட்டி சொல்லி ஏற்பட்டு விட்டால், அது கல்லில் செதுக்கினாற் போலத்தான்….

தகப்பனார் செத்தபோது வந்தான். ஈமக் கடன் செய்ய முடியாது என்று ஒற்றைக் காலில் நின்றான். கடைசியில் நடுப்பிள்ளை அவனுக்குப் பணத்தைக் கொடுத்து செய்யச் சொன்னான். ஸ்வீகாரம் போய்விட்டோமே என்று நினைக்காமல். மூத்த நாட்டுப் பெண் வந்து எட்டிக் கூடப் பார்க்கவில்லை. யாருமே அப்படித் துவேஷம் பாராட்ட மாட்டார்கள். பரம அசடுதான் அப்படிச் செய்யும். இல்லைன்னா மனுஷ ஜென்மமா இருக்காது அது…

-இதெல்லாம் பாட்டி தனக்குத்தானே அசைபோட்டுக் கொண்டு சமாதானம் செய்து கொள்ளும் மன ஆதங்கங்கள். பாட்டி அறுபது வருஷமாய்க் குடியிருந்த வீட்டில் பிதுரார்ஜிதமாய் இருக்கிறான் கடைசிப் பிள்ளை. அவன் பெண்டாட்டி சொன்ன வார்த்தை அத்தனை லேசில் மறந்து போகுமா?

சிவராத்திரியன்று பாட்டி நடுப்பிள்ளை வீட்டுக்குப் புறப்பட்டு விட்டாள். வண்டி கைலாசத்தை நோக்கிப் போவதுபோல் தோன்றுகிறது அவளுக்கு. ஈசனே…என்னை ஏமாற்றித் திருப்பியனுப்பி விடாதே…!  வேண்டாத பூசணிக்காயை நீதான் எடுத்துக் கொள்ளணும்… இவ்வளவு வயசாகி மனுஷா உயிரோட இருக்கலாமா? ஈசனே உனக்கா தெரியாது…? மனம் உருகி வேண்டுகிறது பாட்டிக்கு.

வேண்டாத பூசணியை இறைவன் எடுத்துக் கொள்கிறார். மொத்த வாழ்க்கையில் பாட்டியின் வேண்டுதல் இப்போதுதான் முதல்முறையாய் நிறைவேறுகிறது

ஒரு இடம் என்று இல்லாமல் யாரும் அல்லல்படுதல் கூடாது. ராதுப் பாட்டியின் கதை நாம் அதிக வயது இருக்கக் கூடாது. இருக்க நேர்ந்தால் நிரந்தரமாய், அன்பாய் வைத்துப் போஷிக்க ஆள் வேணும். இதை வலியுறுத்தி இக்கதை மனதை உருக்கி நெகிழ வைத்து விடுகிறது.

தி.ஜானகிராமனின் கதைகளின்      தனித்துவம் அதில் வரும் உரையாடல்கள். கதாபாத்திரங்களின் வழி உண்டாகும் சம்பாஷனைகள். சம்பவங்களின் வீர்யத்தோடு, கதையின் உருவத்தையும் அவர் கொண்டு வந்து விளக்கி நிறுத்தும் அழகு.

தி.ஜா.வின் உன்னதமான பாத்திரங்கள் பெண்கள்தான் என்று அசோகமித்திரன் சொல்கிறார். அது ராதுப்பாட்டியாய் இருந்தாலும் நம்மால் ரசிக்க முடியும். நடைமுறை உலகின் எல்லாவிதமான மனிதர்களும், அனைத்து மனித நடவடிக்கைகளும்  அவரது படைப்புக்களில் இடம் பெறுகின்றன.    

        ம்ம எம்.கே.ஆர்.கிட்டப் போய்ப் புலம்பினேன். நம்ம பையனுக்கு ஒரு ஒரு வழி பண்ணப்படாதா செட்டியார்வாள்...இப்டி உதவாக்கரையாத் திரியறானே....என்று புலம்பப் போக...அன்பும் ஆதரவும் செழித்திருந்த அந்த நாட்களில்....அக்கணாக்குட்டிக்கும் ஒரு இடம் கிடைக்கிறது. உதவி செய்வதற்கும் ஒரு மனம் வேண்டுமே...! தெரிந்தவர்கள், நமக்கு வேண்டியவர்கள் என்று எல்லோரையும் அரவணைத்துச் செல்லும் தர்மம் ஓங்கியிருந்த காலம். ஏழை, பணக்காரன் வித்தியாசமின்றி மதிக்கப்பட்ட காலம்.

        ஒரு பெரிய மனுஷன் வீட்டுல கூடமாட ஒத்தாசையா இருக்கணுமாம்...அனுப்புறீரா...? புள்ளைங்கள பள்ளிக்கூடத்துல கொண்டு விட, கூட்டிவர, கடை கண்ணிக்குப் போக...ன்னு...சாப்பாடு போட்டு நல்லாப் பார்த்துப்பாங்க....சம்மதமா...? – அப்படிப்போனவன்தான் அக்கணாக்குட்டி. தன் அசட்டுப் பிள்ளைக்கும் ஒரு காலம் வந்து விட்டதே...! அவனாலும் நாலு துட்டு சம்பாதிக்க முடியும் என்று உலகம் காட்டிவிட்டதே...! எல்லாம் பகவான் செயல்...!

        அதுசரி....அதென்ன...வர வர மோசமாகிக் கொண்டே போகிறதே...! ஏன் பணம் அனுப்ப இவ்வளவு தாமதம்? போய் ஒரு பார்வை பார்த்து வந்துவிட்டால்தான் என்ன? என்னதான் அப்படி வேலை செய்கிறான் என்று அறிந்து கொள்ளக் கூடாதா? மனம் பரபரக்க, சமையலுக்கு உதவ என்று கிளம்பிவிடுகிறார் வக்கீல் அண்ணாவையரோடு. இந்தச் சாக்கில்  பட்டணம் போனால்தான் உண்டு. அப்படியே அக்கணாக்குட்டியையும் பார்த்து விடலாமே!.

        நீங்கதான் அக்கணாக்குட்டியோட தோப்பனாரா...வாங்கோ...உட்காருங்கோ.....-கறுப்புக் கண்ணாடி. உதடு அறுந்து தொங்குகிறது. துவண்ட சரீரம். பெரியவர் கன்னத்தைச் சொரிந்து கொள்கிறார். மடங்கிய விரல்கள். அத்தனை பெரிய பங்களாவின் இருண்ட சூழலில் பாதி இருட்டும், பாதி வெளிச்சமுமாய் அந்த உருவம் முழுமையின்றி.

        எல்லோரும் நகத்தால்தான் முகத்தைச் சொரிவார்கள். இவரென்ன...மடங்கிய விரல்களின் பின் பக்க நடுப்பகுதி கொண்டு.....? – அதிர்ந்து போகிறது மனசு. முத்துவுக்கு உட்கார முடியவில்லை. மேலெல்லாம் அரிப்பது போலிருக்கிறது. புரிந்து கொள்கிறார். போயும் போயும் இந்தவேலைக்கா பையனை அனுப்பினேன். மனம் அதிர்கிறது. வக்கற்றவனுக்கு இப்படியா வந்து அமைய வேண்டும்?

        அதெல்லாம் இல்லேப்பா....அது ஒண்ணும்  தொத்து வியாதி இல்லையாம். இந்தோ போட்டிருக்கா பாரு பேப்பர்லே.... – ஒரு புத்தகத்தைப் பிரித்து அதிலிருந்து ஒரு தினசரித்தாள் ஒன்றை எடுத்து...அதில் ஒரு வெள்ளைக்காரப் பெண்....யாரோ ஒரு ஆணின் கையைப் பிடித்துத் தடவிக் கொண்டு நிற்கிறாள்..

        இது யாரு தெரியுமா...ராணி...மகாராணி....வெள்ளைக்கார தேசத்துலே... ஒரு கிராமத்துக்குப் போயி அங்க இதமாதிரி இருக்கிறவாளை கவனிக்கிறாளாம். மருந்து சாப்பிட வைக்கிறாளாம். அவாள் எல்லாரையும் பார்த்து கையைத் தடவிக் கொடுக்கிறா வெள்ளைக்கார ராணி.....ஒட்டிக்கும்னா செய்வாளா....பேத்தியம் மாதிரிப் பேசிறியே...! –

        பேத்யம்...மாதிரி நானா...?

        படத்தை மட்டும் பார்க்கிறியே....கீழே என்ன எழுதியிருக்கு பாரு....அக்கணாக்குட்டி காண்பிக்கிறான்.

        பாலாம்பிகே வைத்யோ...-சுலோகம் வாயில் முணுமுணுக்க மூக்குக் கண்ணாடியை எடுத்து மாட்டிக்கொண்டு இடது காதுக்கு தொங்கும் நூலைச் சுற்றிக்கொண்டு அந்தச் செய்தியைப் படிக்கத் தலைப்படுகிறார் முத்துவைய்யர். சூழ்நிலையும் உணர்வும் மனிதர்களை ஆட்டுவிக்கும் தன்மை இங்கே வெளிப்படுகிறது.                                                                               மனிதர்களின் களிப்பு, துயரம், வீழ்ச்சி, தடுமாற்றம், பிறழ்வு  ஆகிய பல்வேறு நிலைகளைத் துல்லியமாக வெளிப்படுத்தும் தி.ஜா. வின் படைப்புக்கள்  நம்மைக் கட்டிப் போட்டு விடுகின்றன.

        கதை முழுக்க ஒருவருக்கொருவர் செய்யும் உதவியும், அதில் ஒட்டி உறவாடும் மனிதாபிமானமும், அன்பும் இருக்கும் குறைபாடுகளை மீறி நல்லதே  என்று நம்மை உணர வைக்கிறது. சாப்பாடு போட்டு நாற்பது ரூபாய் - கதையின் தலைப்பே நம்மைச் சங்கடப்படுத்தி உள்ளே ஆழமாய்ப் பயணித்து மனமுருக வைத்து விடுகிறது.

        சொற்களைச் சிக்கனமாகப் பயன்படுத்தி, உணர்வுகளை அப்பட்டமாய் உணர வைக்கும் தி.ஜா.வின் எழுத்து வன்மை நம்மை வியக்க வைக்கிறது. சின்னச் சின்னக் கதா பாத்திரங்கள்தான். ஆனால் அத்தனையும் நம் மனதில் நிலைத்திருப்பதுபோல், அவை பேசும் பாங்கும், எடுத்து வைக்கும் வியாக்கியானங்களும் அதிரச் செய்கின்றன. அப்படியென்ன....எளிய உரையாடல்கள்தானே....என்று ஒரு புதிய வாசகனுக்குக் கூடத் தோன்றக் கூடும். ஆனால் மிகுந்த சொற்சிக்கனத்தோடு அதை எழுதிப் பார்த்தால்தான் தெரியும்....ஏழ்மையிலும், இயலாமையிலும், அடுத்தவரை நாடி நிற்கும் நிச்சயமற்ற இயங்குதள வாழ்க்கை நிலையிலும்....மனம் தடுமாறி...நிலையற்ற குழப்பமான சூழலில் சாதாரண மனிதனின் மனோ நிலை எவ்வகையிலெல்லாம் தடுமாறி அலைபாயக் கூடும் என்பதை இப்படைப்பில் மிகுந்த ஆழத்தோடு நமக்குச் சொல்கிறார். இந்த வாழ்க்கையின் அனுபவம், தன் அசட்டுப் பையனைக் கூட  எப்படி மாற்றியிருக்கிறது, என்ன மாதிரி ஒரு பக்குவம் கொள்ள வைத்திருக்கிறது  என்று வியக்கும் தந்தையின் மன நிலையை வெகு அழகாகப் படம் பிடித்துக் காட்டியிருக்கிறார் தி.ஜானகிராமன்.

        தி.ஜா.வின் படைப்புக்கள், அவரது மனப்பாங்கு, மரபு சார்ந்து அழுத்தமாகப் பயணிக்கின்றது. அவைகளைக் மீற வேண்டும் என்று வலிய யோசிப்பதில்லை.. மனிதனின் இயல்பான வாழ்க்கை சார்ந்த சுதந்திரம் பாதிக்கப்படும்போது, ஒரு கட்டாயத்தின் பேரில் அங்கங்கே சில மீறல்கள் அவரது படைப்பினில் நிகழ்ந்து கொண்டேயிருக்கின்றன.   காலத்தின் வாழ்வியல் கருதி படைப்பினில்  அவைகளை வாசகன் ஏற்றுக் கொள்ள வேண்டிய நிலைக்கு ஆளாகி, அந்த நியாயத்தை உணர்ந்து அதிசயிக்கிறான். சரளமான கதையோட்டம், கதா பாத்திரங்களின் நுட்பமான, சாதுர்யமான உரையாடல்கள்...இப்போது படிக்கும்போதும் புத்துயிர் பெற்று நிற்கி்ன்றன. அந்த மனிதர்கள் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதுவே நிஜம்.  இவை எழுதப் புகுந்தவர்கள், எழுதிக் கொண்டிருப்பவர்கள் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள்….!       

                  --------------------------------------------------------------------------

 

 

 

 

 

 

 

 

 

கருத்துகள் இல்லை: