22 ஜூன் 2020

சுப்ரமண்யராஜூ சிறுகதைகள் - நாக்கு - சிறுகதை - வாசிப்பனுபவம்


நாக்கு”  - சிறுகதை - வாசிப்பனுபவம் -

சுப்ரமண்யராஜூ சிறுகதைகள்                             
            சுப்ரமண்ய ராஜூவின் கதைகள் தமிழ் இலக்கிய உலகில் நுழைய யத்தனிக்கும்  இளம் எழுத்தாளர்களுக்கு நிச்சயம் வழிகாட்டியாக அமையும். அறுபதுகளின் இறுதியிலும். எழுபதுகளின் தொடக்கத்திலும் தமிழ் வாசகர்கள் மத்தியில் ஒரு மாற்றம் நிகழத் தொடங்கியது. சிறு பத்திரிகைகள் புதிதாகத்  தோன்றி, சிறந்த இலக்கியப் படைப்புகள் மூலம் தங்களை, புதிய இளம் படைப்பாளிகளை அடையாளப் படுத்திக் கொண்டிருந்தன. அன்றைய பிரபலமான படைப்பாளிகளின் படைப்புக்களைத் தீவிரமாக விமர்சித்துக் கொண்டிருந்த கால கட்டம் அது. அந்தச் சூழலில் தன்னை ஸ்தாபித்துக் கொண்டவர்தான் சுப்ரமண்யராஜூ.
       காலத்தைக் கடந்தும் படிக்கிற மாதிரியாக இருக்கக் கூடிய `25 சிறுகதைகளுக்காகக் காத்துக் கொண்டு இருக்கிறேன். இதுவரை பத்துதான் தேறி இருக்கின்றன. அதில் சுப்ரமண்யராஜூவின் கதை ஒன்று – என்று சுஜாதா கணையாழி 1976-ல் எழுதி இருக்கிறார் என்று பதிவு சொல்கிறது.
       தனிமனித ஒழுக்கம், மனசாட்சி இவைகளிலிருந்து மனிதன் விலகிப் போய்விடக் கூடாது, விலகி ஓட முடியாது என்பதை ஆதாரமாகக் கொண்டு இவரின் பல படைப்புக்கள் விளங்கின.
       படிக்கும்போது நாம் படிக்கிறோம் என்ற உணர்வைக் கூட எழுப்பாமல் படிப்போர் முழு கவனமும் எழுத்தின் செய்தியிலும் அது வெளிப்படும் அமைப்பிலும் ஆழ்ந்திருக்கும்படி செய்வது சிறந்த உரைநடைக்கு அடையாளம் என்று கூறி, சுப்ரமண்யராஜூவின் பல கதைகளில் இதைக் காண முடிகிறது என்கிறார் திரு.அசோகமித்திரன்.
       ஒரேயொரு கதையை மட்டும் சொல்லி சுப்ரமண்யராஜூவின் படைப்பின் தன்மையை வெளிப்படுத்துவதே இக்கட்டுரையின் நோக்கம்.
       கதையின் கரு பழையதுதான். இதுபோல் அதற்குப்பிறகு சில கதைகள் வந்துவிட்டன என்பதாகக் கூட வாசிப்பு அனுபவம் மனதுக்குச் சொல்கிறது. ஆனாலும் இந்தக் கதையைச் சொல்லியாக வேண்டிய கட்டாயம் இருக்கிறது என்றுதான் தோன்றுகிறது.
       நாக்கு எப்படி வேண்டுமானாலும் பேசும். அதுவும் பணம் என்ற ஒன்று இடையே புகுந்து விட்டால் அவரவர் இடத்திற்குத் தகுந்தாற்போல் வெவ்வேறுவிதமாய்ப் பேசும். நல்லவன்போல் நடிக்க வைக்கும். அடுத்தவரை ஏவிவிட்டு விளையாட வைக்கும். மனித ஒழுக்கத்தை விலை பேசும்,  ஆள் இல்லாதபோது இஷ்டப்படி புரள வைக்கும். இருக்கும்போது பம்மிக் கொண்டு நிற்க வைக்கும். இவையெல்லாவற்றிற்கும் நடுவே யதார்த்தமாய் இந்த உலகத்தை நோக்கும், மனசாட்சிக்கும்  இடம் கொடுக்கும், யாரேனும் ஒருவர் மூலம் தன்னைத் தூசு என்று எண்ண வைத்து, நல்லதையும் செய்ய வைக்கும். பணம் பத்தும் செய்யும்…நாக்கு மூலம்.
       அப்படித்தான் இந்தக் கதையின் நாயகன் தன்னைச் சுற்றியுள்ளவர்களைப் பார்க்கிறான். மனைவி உட்பட. ஆபீஸ் மானேஜர் கோபாலன், அவரிடம் கடன் வாங்கிய வெங்கடேசன், அவரது மனைவி, என்று ஒவ்வொருவரும் அவரவர் நிலையில் நின்று பேசுவதைப் படு நிதானமாக நோக்கி, சரியான முடிவொன்றை எடுக்கிறான். அது அவனைப் பொறுத்தவரை நல்ல முடிவு. அதற்குக் காரணம் அவனிடம் ஒட்டியுள்ள இரக்க குணம். பொதுவாக இம்மாதிரி யாரும் செய்ய மாட்டார்கள் என்றாலும் அப்படிப் பிறர் யாரும் செய்யாததை யோசிப்பதுதானே எழுத்தாளனின் வேலை. அதன் மூலம் தானும் ஒரு இக்கட்டிலிருந்து விடுபடுகிறோம் என்கிற சுயநலமிருந்தாலும், அதற்காக கை நஷ்டப்பட எவனும் முன் வரமாட்டான் என்பதுதான் யதார்த்தம். ஆனால் இந்தக் கதையின் நாயகன் அதைச் செய்கிறான். அதன் மூலம் இருவருக்கு நெடுநாளாக இருந்த பிரச்னை தீர்கிறது. இவனுக்கும் ஒரு தலைவலியிலிருந்து விடுபட முடிகிறது.
       அதாவது நீ குடியிருக்கும் குரோம்பேட்டை துரைராஜ் தெரு ஆறாம் நம்பர் வீட்டில் குடியிருக்கும்  வெங்கடேசனிடம் நான் கொடுத்த கடன் தொகை ரூபாய் ஐநூறைத் திரும்ப வாங்கி வா என்று ஆபீஸ் மானேஜர் கோபாலன் இவனை அனுப்பிவிட, தயங்கித் தயங்கி இவன் அவர் வீட்டுக்குச் செல்ல, அவரின் வீட்டின் சூழ்நிலையும், சாப்பாட்டுக்குக் கூட இல்லாத கஷ்ட நிலைமையும், அந்த தரித்திர நிலையிலும் அவரது  சுபாவமான பேச்சும் இவனைப் பெரிதும் சங்கடப் படுத்துகிறது.
       ரொம்ப நல்ல மனுஷன்…சரியான நேரத்துல பணம் குடுத்து உதவினார்.. என் மனைவிக்கான பிரசவ டயத்துல அவர் செஞ்ச அந்த உடனடி உதவியை என்னால மறக்கவே முடியாது….நான் என்ன பண்ணட்டும் சொல்லுங்கோ…எனக்கு நிரந்தர வேலையும் இல்லை…வேறே வருவாயும் இல்லை…ஒவ்வொரு நாளையும் தள்றதே பெரிய கஷ்டமாயிருக்கு….என்ற புலம்பல் இவனை ரொம்பவும் நெகிழ வைக்கிறது.
       இந்த வெங்கடேசனைப் பார்த்து வா என்று சொன்ன அந்த மானேஜர் கோபால் சொன்ன வார்த்தைகளைப் பாருங்களேன்….
       அவன் எனக்கு ஒரு ஐநூறு ரூபா தரணும்…ரொம்ப நாளா ஏமாத்திண்டு வரான். அவனைப் போய் நீ பார்க்கணும். வெறுமே போய்ப் பார்த்தாப் போறாது. நாலு வார்த்தை அவனை சூடாக் கேட்கணும்…உன்னை அலைக்கழிப்பான்…விடாமப் போயிண்டேயிருந்தாத்தான் தருவான்…..அபடித்தான் வசூல் பண்ண முடியும்….இல்லைன்னா கதையாகாது….
       அன்று ஆரம்பித்த வசூல் படலம் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது இவனுக்கு. வெங்கடேசனுக்கு நிரந்தர வேலை எதுவும் இல்லை என்று தெரிந்து கொள்கிறான். அப்படியே வேலை கிடைத்தாலும் மூன்று மாதத்திற்கு மேல் அது நிலைப்பதில்லை. அல்லது இருப்பதில்லை. ஊரில் அவர் பாக்கி வைக்காத இடமேயில்லை. இரவு வெகு நேரம் கழித்துத்தான் வீடு வருகிறார். அவரைத் தேடி வந்தவர்கள் சோர்ந்து போய்த் திரும்ப அதுதான் ஏது. இவனுக்கே ஒரேயொரு முறைதான் அவரைப் பார்க்கக் கிடைக்கிறது. அதுவும் வெறும் பதிலாய்ப் போய்விடுகிறது. எப்படிப் போய் இந்த வெறும் பதிலை மானேஜரிடம் சொல்வது? அதன் மூலம் இவனுக்குக் கிடைப்பதோ விடாத திட்டு, வசவு.  உனக்கு சாமர்த்தியமில்லை என்ற ஏச்சு. எதிர்த்துப் பேசினால்தான் வேலை போய்விடுமே…!
       வெங்கடேசனின் ஏழ்மை நிலை இவனைப் பெரிதும் பாதிக்கிறது. வீட்டோடு விருந்துக்கு அழைக்கிறான் இரக்கம் மிகுதியில். நீங்க ஒருநாள் குடும்பத்தோட எங்க வீட்டுக்கு சாப்பிட வரணும்…. சரியென்று ஒப்புக் கொள்கிறார் வெங்கடேசன். ஒரு காலத்தில்,தாத்தா இருக்கையில் என்று…. தங்கள் வீடு ரொம்பவும் வசதியாய் இருந்த பிரலாபத்தை எடுத்து விடுகிறார். என் மனையாள் வந்தப்புறம்தான் அதெல்லாம் நின்னது….இது என்ன சத்திரமா…ஊர்ல இருக்கிற அன்னக்காவடிக்கெல்லாம் சோறு போட…? அவ்வளவுதான்…இப்போ நாங்களே அன்னக்காவடி ஆயிட்டோம் என்கிறார்.
       இன்னிக்கே வர்றீங்களா…? என்று கேட்க ….சரி…என்கிறார் வெங்கடேசன்.
       ஒரு வழி பண்ணுகிறான் இவன். மானேஜரின் அனத்தலிலிருந்து விடுபட வேண்டும். அதே சமயம் வெங்கடேசனுக்கு உதவியது போலவும் இருக்க வேண்டும். அவரின் குடும்ப ஸ்திதி, அவனை அப்படியொரு முடிவு எடுக்க வைக்கிறது.
       அலுவலகம் சென்று அக்கௌன்டண்டிடம் ஐநூறு ரூபாய் அட்வான்ஸ் வாங்குகிறான். நேரே சென்று மானேஜர் கோபாலிடம் வெங்கடேசன் கடனைத் திருப்பித் தந்துவிட்டதாகச் சொல்லிக் கொடுக்கிறான்.
       எப்படிக் கொடுத்தான்? ஏதாவது சொன்னானா? பாவம்…நல்லவன்தான்…அவன் போறாத வேளை…அவன் குடும்பம் எல்லாருக்கும் குடுத்தே அழிஞ்சு போச்சு….நாமளும் அப்டியே இருக்க முடியுமா? அப்புறம் அவன மாதிரி நாமளும் நடுத்தெருவுல நிக்க வேண்டிதான்….என்கிறார். மானேஜர் கோபால்.
       அன்று இரவு குடும்ப சகிதமாய் மனைவி, பெண்டுகளோடு வெங்கடேசன் இவன் வீட்டுக்கு வருகிறார். மனைவி லலிதா கிட்டத்தட்ட ஒரு விருந்து மாதிரி அமர்க்களப்படுத்தி விடுகிறாள்.
       சாப்பாடு முடிந்து வழியனுப்ப வெளியே வரும்போது விஷயத்தைச் சொல்கிறான் இவன்.
       உங்களால எப்ப முடியுமோ அப்பத் திருப்பிக் கொடுத்தாப் போறும் என்கிறான். எனக்கும் உங்க வீட்டுக்கு அடிக்கடி வந்து தொந்தரவு கொடுக்கக் கஷ்டமாயிருந்தது என்று மனசாட்சியின் உந்துதலில் பேசுகிறான். நீங்களே பணத்தைத் திருப்பிக் கொடுத்திட்டதா அவர்ட்டச் சொல்லிட்டேன். அவரை எப்பவாச்சும் வெளியே பார்த்தீங்கன்னா இதப்பத்தி எதுவும் சொல்லிக்க வேணாம் என்கிறான்.
       வெங்கடேசன் தழு தழுக்கிறார். காலில் விழாத குறையாக என்னென்னவோ உணர்ச்சி வசத்தில் பேசுகிறார். இவனுக்குப் பெரும் திருப்தியாகி விடுகிறது. அவரைச் சமாதானப்படுத்திவிட்டுத் திரும்புகையில் தன்னாலும் ஒருவருக்கு உதவ முடியும் என்பதில் மனது பெருமிதம் கொள்கிறது. தன்னம்பிக்கை பிறக்கிறது.
       மனைவியிடம் வந்து அதே திருப்தியில் பேசுகிறான்.
       இந்த மாதிரிப் பசிக்கிறவாளைக் கூப்பிட்டு சாதம் போட்டா ஒரு சந்தோஷம் வரலை…?
அவள் வாய் கூடி இருக்கிறாள். நீ என்ன சொல்றே? என்று அழுத்துகிறான்.
       சந்தோஷம்தான். ஆனா ஏதோ ஒரு தடவைன்னாப் பரவால்லே. அதுவே பழக்கமாயிடக் கூடாது. இவாள்லாம் ஒட்டுண்ணிகள் மாதிரி. யாராவது கிடைக்க மாட்டாளான்னு காத்துண்டிருப்பா…அதுவும் உங்களை மாதிரி ஒருத்தர் கிடைச்சாப் போறும். அப்டியே பிசினா ஒட்டிண்டிடுவா…நாம என்ன சத்திரமா வச்சு நடத்துறோம்…ஊர்ல பட்டினியா இருக்கிறவாளையெல்லாம் கூட்டிண்டு வந்து விருந்து படைக்க? என்கிறாள்.
       இந்த வார்த்தைகளில் பொறுமையிழக்கிறான் இவன். கல்யாணமான அந்த இரண்டு வருடங்களில் முதன் முறையாக மனைவியைக் கை நீட்டி அடிக்கிறான்.
       நாக்கு என்றால் ருசியைப் பற்றிச் சொல்லும் எத்தனையோ கதைகள் நம்மிடையே உள்ளன. அவருக்கு நாக்கு கொஞ்சம் நீளம் என்றால் ஒருவரது பேச்சைப் பற்றியும், அவருக்கு நாக்கை அடக்க முடியாது, தெரியாது என்றால், வரைமுறையின்றித் தின்பதில் இருக்கும் ப்ரீதி குறித்தும்  அர்த்தப்படும். இந்த நாக்கு பக்குவமற்ற, எளிய, சராசரி மனிதர்களின் சமய சந்தர்ப்பம் நோக்காத பேச்சுத் தன்மை பற்றியும், எந்த சூழலிலும் தடுமாறாத மனப் பக்குவமுள்ள மனிதர்களின் பதவாகமான, தன்மையான சொல்முறைப் பண்பாடு  பற்றியும்….வெகு அழகாக எடுத்துரைக்கிறது சுப்ரமண்யராஜூவின் இந்தச் சிறுகதை.
       “இன்று நிஜம்“ என்ற தலைப்பில் 1985 ல் நர்மதா பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்ட, கணையாழி, தீபம், ஞானரதம், சதங்கை, வாசகன், குமுதம், ஆனந்தவிகடன், கல்கி, தினமணிகதிர், சாவி. குங்குமம் ஆகிய இதழ்களில் வெளிவந்த சுப்ரமண்யராஜூவின் இந்தத் தொகுப்பிலுள்ள சிறுகதைகளையும் சேர்த்து “சுப்ரமண்யராஜூ கதைகள்” என்று மொத்தம் முப்பத்தியிரண்டு கதைகளை (இன்று நிஜம்-என்ற குறுநாவலும் சேர்ந்து) இவரது கதைகளின் மொத்தத் தொகுப்பாக கிழக்கு பதிப்பகம், சென்னை வெளியிட்டிருக்கிறது.
       சுப்ரமண்யராஜூவுக்கு முன் மாதிரி என்று யாரையும் குறிப்பிடத் தோன்றவில்லை. அவருடைய எழுத்தில் சமகாலத்து சமூக, தனி மனித ஒழுக்கச் சிக்கல்களும், மனசாட்சி நெருக்கடிகளும் சமகாலத் தமி-ழ் நடையில் வடிவம் தரப்பட்டிருக்கின்றன. இதை இவர்தான் எழுதியிருக்க முடியும் என்று தோன்றுகிறது என்கிற அசோகமித்திரனின் கூற்று இவரது கதைகளைப் பொறுத்தவரை மெய்யாகிறது.
                                         ------------------------------------------------------  

      
    
                                                                  

            
                    

கருத்துகள் இல்லை:

  சிறுகதை                 “பாதிப்பு” - ”சிற்றுளி” கலை இலக்கிய இதழ், அக்டோபர் 2024 முதல் டிசம்பர் 2024 வரை             வி த்யாபதி அந்தத் தெ...