என் இசை ரசனை
-----------------------------------
சின்ன வயதில் சினிமாப் பார்க்கும் பழக்கம் எனக்கு அதிகம் இருந்தது. . வாரம் தவறினாலும் சினிமாப் பார்ப்பது தவறாது. அதிலும் குறிப்பாக நடிகர்திலகத்தின் படங்கள் என்றால் தவறவே விட மாட்டேன்.வீட்டுக்குத் தெரிந்து பார்ப்பது. தெரியாமல் பார்ப்பது என்று இப்பழக்கம் தொடர்ந்தது.அதனால் படிப்பிலும் கோட்டை விட்டேன். வாசிப்பவர்கள் மனதில் தோன்றும் இக்கேள்விக்குப் பதில் சொல்லாமல் இருந்தால் எப்படி?
நான் நடிகர்திலகத்தின் தீவிரமான ரசிகன். அவரது கட்டபொம்மன் வசனம் - அதுதான் ஜாக்சன் துரையைச் சந்திக்கும் கட்டம் - அப்படியே எனக்கு மனப்பாடம். வீட்டுக்கு விருந்தினர்கள் வந்தால் இவ்வசனத்தைச் சொல்லச் சொல்லிக் கேட்பார்கள் சிலர். ஒன்றிரண்டு முறை அதுவும் நடந்திருக்கிறது.
பேசு...சும்மாப் பேசு...என்று பெரியண்ணா வற்புறுத்துவான். எனக்கு கூச்சம் அதிகம். அந்தக் கூச்சத்தோடேயே ஒரு முறை அவ்வசனம் முழுவதையும் பேசி முடித்ததாக நினைவு.அந்தக் கூச்சம் இன்றுவரை தொடர்கிறது.
சா்வீசில் இருக்கும் காலத்தில் கூட பெண் பணியாளர்களை நேருக்கு நேர் பார்த்ததில்லை நான். அங்கும் இங்குமாக நோக்கிக் கொண்டேதான் பேசுவேன். கூச்சம் ஒழுங்கின் அடையாளம் என்கிற வகையில் அதன் மீது எனக்கு மிகுந்த மதிப்பு உண்டு.
இன்று நான் எழுத்தை எனது பொழுதுபோக்காக, பழக்கமாகத் தேர்ந்தெடுத்துக் கொண்டிருப்பதற்குக் கூட அது ஒரு காரணமாக இருக்கலாம். யாரையும் முகம் கொண்டு பார்க்க வேண்டாமே...! பேப்பரும், பேனாவுமோடு தனிமை கிடைத்தால் போதுமே...! (இப்போது கணினி) .
கொஞ்சம் குரலுமுண்டு எனக்கு. கொஞ்சும் குரல் அல்ல. டி.எம்.எஸ்.மாதிரி அப்டியே பாடுறியே என்று சொல்லியிருக்கிறார்கள் நண்பர்கள் சிலர். புகழுரைதான். பஞ்சாயத்துப் பள்ளியில் படிக்கும் போது வகுப்பில் பாடச் சொல்வார்கள். ஒவ்வொருவரும் அவர்களுக்குத் தெரிந்ததைச் செய்து காட்ட வேண்டும். என்னைப் பாடச் சொல்லியபோது நான் “சத்தியமே...லட்சியமாய் கொள்ளடா....தலை நிமிர்ந்து உனை உணர்ந்து செல்லடா...” என்ற பாடலைப் பாடினேன். அந்தப் பாடல் எனக்கு ரொம்பவும் பிடிக்கும். நீலமலைத் திருடனில் குதிரை மீது பவனி வந்துகொண்டே நடிகர் ரஞ்சன் பாடிக்கொண்டு வருவார். வெற்றிப்படம் அது. சபாஷ் என்று டீச்சர் சொல்ல .... எல்லோரும் கை தட்டினார்கள்.
அப்பொழுதே எனக்குக் கொஞ்சம் சங்கீத ரசனை உண்டு. சினிமாப் பாடல்களிலேயே கர்நாடக சங்கீத ராகங்களில் போடப்பட்ட பாடல்கள் என் மனதை ஈர்த்தன. அது கர்நாடக சங்கீத ராகம் என்று அப்போது எனக்குத் தெரியாது.
திரு ஜி.ஆர்.ராமநாதன் இசை அமைத்த பாடல்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். நாலைந்து இசைக் கருவிகளைக் கொண்டே காலத்துக்கும் அழியாத பாடல்களைத் தந்தவர் அவர்.
குறிப்பாக சிவாஜி பானுமதி நடித்த அம்பிகாபதி படத்தின் அரசவைப் போட்டிப் பாடல் காட்சி....சிந்தனை செய் மனமே....என்று துவங்கும் கல்யாணி ராகப் பாடல்...என்னை மிகவும் கவர்ந்தது. அதில் நடிகர் திலகம் சம்மணமிட்டு அமர்ந்திருக்கும் அழகும், கண்மூடி இறைவனைத் துதித்துக் கொண்டு பாட ஆரம்பிக்கும் பாங்கும், பாடலின் ஒவ்வொரு வார்த்தைக்கும், வரிக்கும் அவர் வாயசைக்கும், நாக்கு அபிநயிக்கும் அழகும்....காணக் கண்கொள்ளாக் காட்சி. நூறென்ன...ஆயிரம் கூடப் பாடுவேன்...என்கிற தன்னம்பிக்கை மிளிற, ஆசை ஆசையாய்ப் பாடுவார்....கடவுள் வாழ்த்தையும் சேர்த்து நூறாகி விடும் அமராவதிக்கு. எழுந்து முகம் காட்டிவிட, சிருங்கார ரசம் பாடி விடுவார் அம்பிகாபதி..
. இங்கே ஒட்டக்கூத்தரான நம்பியார்தான் மகாவில்லன். 3 சோழ மன்னர்களின் அரசவையில் ஒரு இலக்கியவாதியாகத் திகழ்ந்தமையும், மன்னனின் குழந்தைகளைப் பாதுகாத்த பெரும் பொறுப்பையும் ஏற்றவர் என்பதுதான் ஒட்டக்கூத்தருக்கான பெருமை. ஆனால் இந்தப் படத்தின் ஒரு காட்சியின் தீவிரம், நம்பியார் ரூபத்தில் ஒட்டக்கூத்தரையே காலத்துக்கும் பழிவாங்கிவிட்டது .
அம்பிகாபதியின் தந்தை கம்பர் பெருமானாக எம்.கே.ராதா நடித்திருப்பார். விழுந்து வணங்க வேண்டும் போலிருக்கும் அவரைப் பார்க்கையில். அதிலும் அவரது குரல் ரொம்பவும் நம்மை உருக வைக்கும். தொண்ணூற்று ஒன்பதுதான் ஆகியிருக்கிறது....என்று ஒட்டக்கூத்தர் பழியோடு எழுந்து நிற்க....போட்டியில் தோற்றான் அம்பிகாபதி என்று முடிவு சொல்ல, காத்திருந்த மன்னர் கடூரமாக வெறுப்பை உமிழ, அந்தக் கட்டத்தில் கம்பரான எம்.கே.ராதா பதறும் பதற்றம் இருக்கிறதே...அதை வார்த்தைகளில் சொல்லி மாளாது...மன்னரிடம் மகனுக்கு உயிர்ப்பிச்சை கொடுங்கள் என்று கெஞ்சிக் கதறும் காட்சி, . பார்க்கும் நெஞ்சையெல்லாம் உருக்கி விடும்.
இட்ட அடி நோக...எடுத்த அடி கொப்பளிக்க....என்று ஒரு காட்சியும் உண்டு இப்படத்தில். வட்டில் சுமந்து மருங்கசைய...என்று அம்பிகாபதி பாட...மகனின் மன நிலையை உணர்ந்த கம்பர்....பயந்து போய்....பழி வந்துவிடுமோ என்று அஞ்சி....சரஸ்வதி தேவியை வணங்கி...கொட்டிக் கிழங்கோ கிழங்கென்று....கூவுவார்.....என்று அதைத் தொடர....பொறிக்கும் வெயிலில் கொட்டிக் கிழங்கைக் கூடை நிறையச் சுமந்து கொண்டு சரஸ்வதி தேவியே ஒரு கிழவி ரூபத்தில் அங்கே நுழைய.....இறையருள் மிகுந்த அந்தக் காட்சியை எவரும் மறக்க முடியாது..அந்தக் காட்சிக்குத் தேர்வு செய்து போட்டிருக்கும் கிழவி, வெள்ளையுடையோடு அவர் வந்து நிற்கும் காட்சி- மெய் சிலிர்ககும். ..கம்பர் நிம்மதிப் பெருமூச்சு விடும் அந்தக் கணம்....நம் மனதும்...அப்பாடி...அம்பிகாபதி காப்பாற்றப்பட்டான் என்று அவனது தந்தை கம்பருக்காகக் கனிந்து நிற்கும்.
கர்நாடக இசை சினிமா மூலம்தான் எனக்குப் பரிச்சயமானது. அதிலிருந்துதான் அசலுக்கு வந்தது.
எங்களூர் வத்தலக்குண்டில் நாங்கள் குடியிருந்த வாடகை வீட்டிற்கு ரெண்டு வீடு தள்ளி ஒரு பணக்காரக் குடும்பம் இருந்தது. அந்தக் காலத்தில் டிரான்சிஸ்டர் வைத்திருந்தால் அவர்கள் பணக்காரர்கள். அந்த வீட்டுக்காரர் தினமும் ராத்திரி ஒன்பதே முக்கால் மணிக்கு டெல்லி வானொலியைத் திருகி விடுவார். அதிலிருந்து கர்நாடக சங்கீதம் வழிந்து கொண்டிருக்கும்.கம்பி அழி போட்ட நீண்ட திண்ணையில் லைட்டை அணைத்து விட்டு, தெரு விளக்கின் மெல்லிய வெளிச்சம் படர்ந்திருக்க, இருட்டில் தரையில் படுத்துக் கால் மேல் கால் போட்டுக் கொண்டு கண்ணை மூடி ரசித்துக் கொண்டிருப்பார் அவர். விடாமத் தெனமும் கேட்கிறாரே....என்று கவனித்து அடுத்த ரெண்டாவது வீடான எங்கள் வீட்டுத் திண்ணையில் அமர்ந்து தெருவிளக்கின் படிப்பிற்கிடையே நானும் அந்த இசையை உன்னிப்பாகப் பல சமயம் கவனித்திருக்கிறேன். நீண்ட ஆலாபனைகள் அப்போது எனக்குப் பெரும் அலுப்பைத் தரும். இப்டி இழுத்திட்டிருந்தா...எப்பத்தான் பாட்டை ஆரம்பிக்கிறது....என்று நினைப்பேன். எப்டித்தான் இதையெல்லாம் ரசிக்கிறாங்களோ என்றும் நினைத்திருக்கிறேன்.
அந்த அமைதியான பொழுதில் ஆரம்பத்தில் என்னை ஈர்த்தது வயலின் இசைதான். ஆலாபனைக்குப் பின்னே அப்படியே நெறி தவறாமல் அதில் இழைகிறதா என்று கவனிக்க ஆரம்பித்தேன். பிறகு காலப் போக்கில்தான் பாடலில் ஆர்வம் வந்தது. இன்னொன்று....அப்போதும் மிருதங்கத்தின் தனி ஆவர்த்தனம் எனக்குப் பிடித்தமானதாய் இருந்தது. கச்சேரியில் பலரும் எழுந்து கான்டீனுக்குப் போகும் நேரம் அது. தனி ஆவர்த்தனம் முடிவதற்குள் ராத்திரி டிபனை முடித்து வந்து விட்டால் பிறகு துக்கடா கேட்பதற்கு ஏதுவாகும் என்று புறப்பட்டு விடுவார்கள்.
மிருதங்க வித்வான்களின் மனசு என்ன பாடு படும் என்று வருத்தமாய் இருக்கும் எனக்கு. ஆனால் அவர்கள் அதைப் பொருட்படுத்துவதில்லை என்றுதான் தோன்றுகிறது. பாடகரின் , அல்லது வயலின் வித்வானின் தாளத்திற்கேற்ப, கன கச்சிதமாக வாசிப்பதிலேயே கவனமாய் இருப்பார். வெளுத்து வாங்கும் எத்தனையோ வித்வான்களின் தனி ஆவர்த்தனத்தைக் கேட்டு மிரண்டு போயிருக்கிறேன் நான். பாடகர் மூன்று மணி நேரம் பாடிச் சம்பாதிக்கும் பெயரைத் தனக்குக் கிடைத்த அந்த அரை மணி நேரத்தில் தனதாக்கிக் கொள்ளும் சாமர்த்தியம், அர்ப்பணிப்பு பலருக்கும் உண்டு.
பெரிய பாடகராக வேண்டும் என்பதுதான் என் மனமார்ந்த ஆசை. வறுமையின் பிடியில் அது சாத்தியமில்லாமல் போயிற்று. இந்த வயதில், இந்த ஜென்மத்தில் ஆழ்ந்த ரசனையோடு நின்று போயிற்று.
இப்போதும் மொட்டை மாடியில் நடந்து கொண்டே நானாக வாய்விட்டுப் பாடிக் கொள்ளும் பொழுது சுற்றிலும் வெகுதூரத்திற்கு என் பாடலைக் கேட்க ஜனத்திரள் மிகுந்திருப்பதாகக் கற்பனை செய்து கொள்வேன். தினமும் இப்படி நினைத்துக் கொள்வதில் அப்படி ஒரு ஆத்ம திருப்தி எனக்கு.
நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அடுத்த ஜென்மத்தில் நான் ஒரு சஞ்சய் சுப்ரமண்யன்....!!!
நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அடுத்த ஜென்மத்தில் நான் ஒரு சஞ்சய் சுப்ரமண்யன்....!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக