21 மே 2020

”ஏன்…?” – மௌனியின் சிறுகதை – – வாசிப்பனுபவம்-உஷாதீபன்.

                   
       ”ஏன்…?” – மௌனியின் சிறுகதை – “மௌனியின் கதைகள்“ தொகுப்பிலிருந்து –
 வாசிப்பனுபவம்-உஷாதீபன்.
வெளியீடு  - பீகாக் பதிப்பகம், வடக்கு கோபாலபுரம், சென்னை-86.



“மௌனியின் கதைகள்” – புத்தகம் எப்பொழுதும் என் வாசிப்பிலேயே இருக்கும். என்ன சொல்கிறார்…. ….என்று புதுசாக மனசு தேடும்.  படித்ததையே திரும்பப் படித்துக் கொண்டிருப்பேன். ஆனால் இன்றுவரை அவர் உணர்ந்து எழுதிய முழு அர்த்தத்தோடு புரிந்து கொண்டிருக்கிறேனா என்பதில் சந்தேகம் இருந்து கொண்டேதான் இருக்கிறது.
       மௌனியைப் படித்திருப்பதாகச் சொல்பவர்கள் யாரும் முழுப்  புரிதலோடு எழுதியிருக்கிறார்களா என்ற கேள்வியும் இருந்து கொண்டுதான் இருக்கிறது. இருந்தால் தெரிந்தவர்கள் சொன்னால் நலம்.  மொத்தமே 23 கதைகள்தான் அவர் எழுதியிருக்கிறார். திரு கி.அ. சச்சிதானந்தம் தொகுத்து பீகாக் பதிப்பகம் வெளியிட்ட அந்தத் தொகுதி என்னிடம் உள்ளது.
       28.04.2019 தினமணி ஞாயிறு கொண்டாட்டம் இணைப்பில் எழுத்தாளர்  திரு சா. கந்தசாமி அவர்கள் எழுதியுள்ள “என்றும் இருப்பவர்கள்” பகுதியில் மௌனியைப் பற்றிய கட்டுரை வந்திருக்கிறது. அதைப் படிக்க நேர்ந்தபோது, அதில் மௌனியின் முதல் கதையான “ஏன்” பற்றிச் சொல்கையில் மணிக்கொடியில் வந்த அந்தக் கதை சற்று வக்கிரமானது என்றும் எடுத்துச்  சொல்லக் கூடியது அல்ல என்றும் சொல்லிவிட்டு, முதல் கதை பலருக்கும் சிறந்த கதையாக அமைவதில்லை என்பது மௌனிக்கும் பொருந்தித்தான் போகிறது என்றும் சொல்கிறார்.
சுசீலா வக்கீல் ராஜமய்யரின் மூத்த பெண். சிறு வயதிலிருந்தே வசீகரத் தோற்றமுடையவள். அவள் இரு விழிகளும் அதிகக் கருமையாகவும், புருவங்கள் செவ்வனே வளைந்து மிகக் கருப்போடியனவாகவும் இருக்கின்றன. ஏன்? ஏன்? என்ற  கேள்விகளை அவள்  கண்கள் சதா கேட்பவை போன்று தோன்றும்.
கண்கள் அந்தளவுக்கு தீட்சண்யமானவையாய் விளங்கின என்று புரிந்து கொள்ளலாம். அவளைக் கண் கொண்டு பார்ப்பவர்கள் ஆச்சரியமும் அமைதி இன்மையும் அடைவர். இத்தனை அழகா என்றும் அந்த அழகின்பாற்பட்ட பாதிப்பில் மன அமைதி குலைவர் என்றும் விவரிக்கிறார். அவளது பதினான்கு வயதில் பார்வையின் ஒளி கொஞ்சம் குறைவுற்றது. பளீரென்று மின்னல் போல் தாக்காமல், வசீகரச் சோர்வுற்று (ஏற்கனவே இருந்த பார்வை வசீகரமாய் இருந்ததனால் அது சோர்வுறும்போது வசீகரச் சோர்வுற்று என்ற பதத்தைப் பயன்படுத்துகிறாரோ என்று எண்ண வைக்கிறது-இதனிலும் புரிந்தவர்கள் விளக்கலாம்) வருத்தமுற்ற கேள்விக்குறியாகத் தோன்றின. பதினாறும் நிறையாத பருவ மங்கை…என்று அந்த வயதினை எட்டிச் செல்கையில் ஏற்படும் பருவகாலச் சோர்வுதான் அந்தப் பார்வை என்று புரிந்து கொள்ளலாம்.
எதிர் வீட்டில் மாதவன் இருந்தான். மிராசுதார் கிருஷ்ணய்யரின் ஒரே புதல்வன். நல்ல சிவப்பு நிறமும், அழகிய தோற்றமும் உடையவன். முகத்தில் சதா ஆனந்தமும்> சுறுசுறுப்பும் குடி கொண்டிருக்கும். சுசீலா படிக்கும் பள்ளியிலேயே அவனும் படிக்கிறான். பார்த்தது ஒழிய பேசியது கிடையாது. தன் வீட்டு மாடியில் அவன் சில வேளைகளில் உலவும்போது,சுசீலாவை அவள் வீட்டுத் திண்ணையில் நிற்கப் பார்த்ததுண்டு. ஒரு நாள் பள்ளிவிட்டு வருகையில் பாதி வழியில் சுசீலாவைக் கண்டு பின் தொடர்கிறான். அவளை நெருங்க நெருங்க அவள் தூரத்தில் இருப்பதாக உணர்கிறான்.
நானும் வீட்டிற்குத்தான் போகிறேன்…சேர்ந்து போகலாமா? என்று கேட்கிறான். அவள் அவனை நிமிர்ந்து ஏன்…ஏன்…? என்று கேட்பதுபோல் பார்க்கிறாள். மனக் கட்டுப்பாட்டை இழந்து சுசீ…நான் உன்னை மறக்க மாட்டேன்….நீயும் என்னை மறக்காமல் இருக்கிறாயா? என்று சம்பந்தமில்லாமல், பொருத்தமில்லாமல் ஒரு கேள்வியைக் கேட்கிறான்.  பருவ வயதின் படபடப்புக்கு ஆளாகுகையில் இம்மாதிரியான தடுமாற்றங்கள் ஏற்படுவது தவிர்க்க முடியாதது என்பதை இப்படி உணர்த்துகிறார்.
 என்ன…ஏன்….? என்று அவள் ஏதோ கேட்டதாக அவனுக்குத் தோன்றுகிறது. ஏன் அவள் தன்னிடம் இப்படி இருக்கிறாள்? என்று எண்ணலாகிறான். இப்படியான அவளைப்பற்றிய சிந்தனை அவனைப் பற்றிக் கொள்கிறது.
சுசீலாவுக்குக் கல்யாணமாகி விடுகிறது. அப்போது மாதவன் ஊரிலில்லை. அவளுக்குக் கல்யாணம் ஆன விஷயம் அவனுக்குத் தெரியாது.    மறு வருஷம் மேற்படிப்பிற்காகப் பட்டணம் போய் விடுகிறான்.. சுசீலாவைப் பற்றிய எண்ணமே அவனிடம் இல்லை. கோடை விடுமுறைக்கு வருகையில் வழக்கம் போல் மாடியில் உலாவுகையில் எதிரே சுசீலா வீட்டுத் திண்ணையில் அவள் உலாவுவதாகக் கற்பனை செய்து  கொள்கிறான். அர்த்தமில்லாமலும், ஏன் என்று தெரியாமலும் பார்ப்பதான நிகழ்வாகிறது அது.
அடுத்து இரண்டு ஆண்டுகள் ஓடி விடுகின்றன. ஊருக்கு வந்திருக்கும் அவன் ஒரு நாள் யதேச்சையாக சுசீலா வீட்டுத் திண்ணையைப் பார்க்கிறான். சுசீலா அங்கே தன் குழந்தையோடு நின்று கொண்டிருக்கிறாள். தெருவில் போகும் வண்டிகளை விளையாட்டுக் காண்பித்துக் கொண்டிருக்கிறாள். அவளையே பார்த்துக் கொண்டு கற்சிலை போன்று நின்று கொண்டிருக்கிறான் மாதவன்.
அவனையறியாமல் சுசீலாவைப்பற்றிய எண்ணங்கள், சித்திரங்கள் அவன் மனதில் படிந்து போய்க் கிடந்து, அவனை விடாது அலைக்கழித்துக் கொண்டிருந்திருக்கின்றன என்பதை நாம் உணர்ந்து கொள்ள முடிகிறது. ஏன் இப்படி ஆகிவிட்டோம் என்பதான கேள்வி அவன் மனதுக்குள் முளைக்க, மூளையை இழந்தவன் போன்றவனாகி விடுகிறான். .
நான்கு வருஷங்களுக்குப் பிறகு பார்க்கும் அவனிடம் இருக்கும் மாறுதல்களை அவளால் உணராமல் இருக்க முடியாதுதான். ஆனால் எதுவும் கேட்காமல், வெறும் பார்வையோடு முடித்துக் கொண்டு வீட்டுக்குள் சென்று விடுகிறாள்.  மாதவன்தான் நிலை தடுமாறியவனாய், ஏன்? என்ற கேள்வியைத் தன்னுள் கேட்டுக் கொண்டே இருக்கிறான்.
அவள் பார்வையின் கேள்விக்குறி இவனைத் தாக்கி, அதற்குத் தன் மனத்தில் தனக்குச் சாதகமாக அளித்துக் கொண்ட விடையும் அவனை பெரிதும் அலைக்கழிக்கிறது.
அதன்பின் அவன் சோர்வுற்றவனாகிறான். உடலளவில் ஒடுங்கிக் கொண்டே போகிறான். தேகம் மெலிந்து இளைக்கிறான். தன்னையறியாமல் பிதற்றுகிறான். அவனது கல்வி சார்ந்த விஷயமாய் அந்தப் புலம்பல்கள் அமைந்து விடுகிறது.  இந்தச் சிந்தனைகளினால், பாதிக்கப்படும், கை நழுவிப் போகும் கல்வி அவன் உடலின் நலத்தைப் பெரிதும் பாதிக்கிறது.
சுசீலா திரும்பப் புக்ககம்  சென்று விடுகிறாள். கலாசாலை திறக்கும் நாளுக்கு முதல் நாள் எவ்வகை சிகிச்சையும் பயன்தராது மாதவன் இறந்து போகிறான். நோயின் அதீதத் தாண்டவத்தில், கசப்பின்  வேகத்தில் என்ன சொல்கிறோம் என்று அறியாத நிலையில் பிதற்றுபவனாக மூட்டையைக் கட்டு, பட்டணம் புறப்படணும் என்று புலம்பிக்கொண்டே இறக்கிறான். சுசீலாவின் இழப்பு தவிர்க்க முடியாத நிலையில், செயல்பூர்வமாய் எதுவும் நிகழாத சூழ்நிலையில், வெறும் எண்ண ஓட்டங்களின் பாதையிலேயே காலத்துக்கும்  ஏக்கமாய் விரிந்து, அது கேடாய் முடிந்து அவனையே காவு கொண்டு விடுகிறது. ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாமல் அவன் பெற்றோர்கள் புலம்பியழும் காட்சி அதை உறுதிப்படுத்துகிறது. சுசீலா அவன் பிரேதம் சுடுகாட்டிற்குப் போகையில் நின்று பார்த்துக் கொண்டிருக்கிறாள். எப்போதும்போல் ஏன் என்பதாய் அவள் புருவங்கள் நெறிகின்றன. முத்துப்போன்று இரு சொட்டுக் கண்ணீர் அவனுக்காக உதிர்கின்றன. அவன் மரணத்தைப் பற்றி அறியாத பட்டணத்து சிநேகிதர்கள் ஆச்சரியம் கொள்கின்றனர்.
புக்ககம் சென்று திரும்பும் சுசீலாவின் கண்கள் சோகம் கலந்த வசீகரத்தோடு திகழ்வதை அவள் கணவன் பார்த்து ஆனந்தமடைகிறான்.
கடைசியாக ஒன்று சொல்கிறார். இதையெல்லாம் விடாது கவனித்துக் கொண்டிருந்த இன்னொரு ஜீவன் அது.
“எல்லாம் தெரிந்தும், ஒன்றும் தோன்றாமல் என் நண்பன் இறந்ததைக் குறித்து மனம் புகைந்து கொண்டிருக்கிறேன்.“
அவளை அவன் விரும்பி, மனதிலேயே வைத்திருந்து, தன்னை அழித்துக் கொண்டான் என்பதை  அந்த நண்பன் மட்டும் முழுக்க முழுக்க .அறிந்திருக்கிறான்.
இக்கதையில் வெளியே சொல்ல முடியாத வக்ரம் என்ன இருக்கிறது? என்ற கேள்வி மட்டும் இருந்து கொண்டேயிருக்கிறது. 
                     ---------------------------------------------------------





கருத்துகள் இல்லை:

  சிறுகதை                 “பாதிப்பு” - ”சிற்றுளி” கலை இலக்கிய இதழ், அக்டோபர் 2024 முதல் டிசம்பர் 2024 வரை             வி த்யாபதி அந்தத் தெ...