24 மே 2020

சிறுகதை சொல்வனம் இணைய இதழில் என் சிறுகதை (24.05.2020) “ஒரு கோப்பின் சுயசரிதை”

      சிறுகதை                                                                                                    “ஒரு கோப்பின் சுயசரிதை”                                                                                  
        னக்கு முடிவே கிடையாது என்று தோன்றியது. அப்படியானால் நான் என்ன மார்க்கண்டேயனா? கிழண்டு போனவன். கையிலெடுத்து கவனமாய்ப் பிடிக்கவில்லையென்றால் சரிந்து விடுவேன்தான். அவ்வளவு தளர்ந்துதான் இருந்தேன்.  ஆனால் என்னை அதி கவனமாய், அக்கறையாய்த்தான் கையாண்டார்கள். அடிக்கடி நான் தேவைப்பட்டேன். குறிப்பாக மேலாளருக்கும் அதிகாரிக்கும். அப்படிக் கூடச் சொல்லக் கூடாது. தினமும் வருடம் முழுவதும். என்னுடைய இருப்பிடம் மேலாளரின் மேசை. அதை விட்டால் அலுவலரின் மேசை. இந்த இரண்டு இடத்தில்தான் மாறி மாறி. சொந்தமான அந்தப் பிரிவுக்கு என்றுமே நான் சென்றதில்லை. அவனும் என்னைப் பற்றிக் கவலை கொண்டதில்லை. அவனுடைய பொறுப்பான நான், மேசையில் பத்திரமாக இருக்கிறேனா என்பதைக் கூட அவன் கவனித்ததில்லை. தன்னிடம் இருப்பதைவிட அங்கிருப்பதே மேல் என்று நினைத்திருக்கலாம். அல்லது என்ன முயன்றாலும் அது தன் கைக்கா வரப்போகிறது? என்கிற அவநம்பிக்கையாயும் இருக்கலாம். ஆனாலும் நான் அவனைச் சேர்ந்தவன் என்கிற முறையில் எங்கும் தொலைந்துவிடக் கூடாதே என்கிற பயம் அவனுக்கு வேண்டாமா? மேலாளரிடம் உள்ளதென்றால் அவரென்ன கையொப்பம் இட்டா வாங்கிக் கொண்டிருக்கிறார்? அல்லது பெற்றுக் கொண்டேன் என ஒப்புதல் கொடுங்கள் என்று கேட்க முடியமா? தலைவலிதான் அவனுக்கு. ஆனால் சுகமான தலைவலி. என்னிடம் இருக்கும் சிடுக்கும் பிடுங்கலும் அவனுக்கில்லையே? ரகசியங்களோடேயே பயணிக்க வேண்டாமே? எதை மறைக்கணும், எதைத் தெரிவிக்கணும் என்கிற சூட்சுமம் தேவையில்லையே? அதிலுள்ள குழப்பங்கள்பற்றி அறிந்து கொள்ள வேண்டியதில்லையே...! ஏதேனும் கேட்டாலும் தெரியாது என்று சொல்லி மேலாளரைக் கையைக் காண்பித்து விடலாமே...!
       சூட்சுமம் என்றா சொன்னேன். தவறுதான். தப்பு செய்வது எப்படி சூட்சுமம் ஆகும். அதென்ன திறமையா? சூட்சுமம் என்ற வார்த்தை சற்று நாகரீகமானது. பூசி மெழுகக் கூடியது. உண்மையை மறைப்பது. திறமையாய்ச் சொல்லிக் கொள்வது. பெருமையாயும் சொல்லிக் கொள்வதுதான். நல்ல விஷயங்களுக்குத்தான் சூட்சுமம் வேண்டும். தவறாய் ஜெயிப்பதற்கு எதற்கு? தவறாய் ஜெயிப்பதே தவறுதானே...!. ஆனால் என்னுள்ளும் பலவித சூட்சுமங்கள் அடங்கியிருக்கிறதுதான்.
       அவனைப் பார்த்தால் பிரச்னை இல்லாத பையனாகத்தான் எனக்குத் தோன்றியது. தான் உண்டு தன் வேலையுண்டு என்று. சமீபமாய்த்தான் அவன் புதிதாக வேலைக்குச் சேர்ந்திருந்தான். அவன் தந்தை இத்துறையில் வேலை பார்த்தவர்தான். ஒரு சாலை விபத்தில் மரணமடையப் போக, கருணை அடிப்படையில் இவனுக்கு இந்த வேலை. பையன் ஃபீ்ல்டுக்குப் புதுசு. அந்த பயமாயும் இருக்கலாம். கருணை அடிப்படையில் வேலைக்குச் சேர்ந்தால் முதலில் கற்றுக் கொள்ள வேண்டியது வேலைதானே...! வேலை காண்பிப்பது என்பதெல்லாம் பிறகுதானே...! அது அனுபவ அறிவு. பார்த்துப் பார்த்து வருவது.
       முதலில் வேலையை நன்றாகக் கற்றுக் கொள்ள வேண்டும். பிறகுதான் மற்றதெல்லாம் என்று அன்று ஒரு நாள் மேலாளர் அவனிடம் சொல்லிக் கொண்டிருந்ததை நான் கேட்டேன். நான்தான் அவர் அருகிலேயே இருக்கிறேனே...! அவர் எவ்வளவு குசுகுசுவென்று பேசினாலும் அது எனக்கு மட்டும் கேட்டு விடும்தான். எதுவும் என்னிடமிருந்து மறைக்க முடியாது.
       வேலையை நன்றாகக் கற்றுக் கொள்ள வேண்டும் என்று சொன்னது சரி...மற்றதெல்லாம் பிறகுதான் என்று அவர் எதைச் சொன்னார்? எதற்காகச் சொன்னார்? எதற்காகச் சொல்ல வேண்டும்? அதுதான் தானே வருமே...ஒரே குட்டையில் ஊறிய மட்டையாய்...! அவன் அதன் அர்த்தத்தைப் புரிந்து கொண்டானா தெரியவில்லை. முகத்தில் எந்தச் சலனமும் இல்லை. அமுக்குளியாய் இருப்பானோ என்றும் ஒரு சந்தேகம் வந்தது எனக்கு. எப்படியிருந்தால் என்ன...நானோ அவன் கைக்குப் போகப் போவதில்லை. பிறகு அவனிடம் என்ன பயம் எனக்கு? அவனுக்கும் என்னிடம் பயம் தேவையில்லைதானே...!
       அன்றாடம் என்னோடு சேர்த்து வைக்க சில தாள்களை எடுத்து வந்து, மேலாளர் முன் நின்று சார்..என்பான். அவரோ சற்றே பதற்றமடைந்தவராய்... வெடுக்கென்று பிடுங்கிக் கொள்வார். சரி...சரி...நான் பார்த்துக்கிறேன்....என்பார். கொடுத்தவை அத்தனையையும் என்றுமே என்னோடு இணைத்ததில்லை. தேர்வு செய்து சிலவற்றை மட்டும் சேர்ப்பார். மீதியை தன் காலுக்கடியில் குப்பைக் கூடைக்குள் சரக்கென்று கிழித்துப் போட்டு விடுவார். சில்லுச் சில்லாகக் கிழிப்பார். யாரும் எதையும் எடுத்து பார்ப்பதோ, படிப்பதோ ஆகாது,ஆகிவிடக் கூடாது என்கிற ஜாக்கிரதை உணர்வு. அவரைப் பார்த்து மற்றவரும் பழகிக் கொண்டனர் என்பது தனிக் கதை. அவர்களும் அவற்றை யாருக்கும் சொல்லாமல், யாருக்கும் தெரியாமல்தான் செய்தனர். அப்படித்தானே செய்ய முடியும்...செய்ய வேண்டும். குற்றங்கள் தண்டிக்கப்பட வேண்டியவை என்பதுபோல் தவறுகள் மறைக்கப்பட வேண்டியவைதானே...! அலுவலகங்களிலேயே இதெல்லாம் வழக்கம்தான் போலும்...
       சிலர் ரொம்பவும் கடமையில் கண்ணும் கருத்துமாய் இருப்பவராய் தங்களை வரித்துக் கொண்டு,வீட்டுக்கு என்னைப் போன்ற சகோதரர்களை அக்கறையாய்ச் சுமந்து கொண்டு போய், கூடவே அதற்கான கடிதங்களையும் வசதியாய்க் கொண்டு போய் வீட்டில் பயமில்லாமல் சுதந்திரமாய் கிழித்துப் போட்டு அல்லது வெந்நீர் அடுப்புக்கு இரையாக்கி மறுநாள் காலை கோப்புகளை அதிகவனமாய்த் திருப்பிக் கொண்டு வந்தனர். வீட்டுக்குக் கொண்டு போய் வேலை செய்ற அளவுக்கா பணிச்சுமை? இக்கேள்வி எனக்குள் இருந்து கொண்டுதான் இருக்கிறது. அலுவலக நேரத்தில் வேலை செய்யவில்லையானால் அப்படித்தானே செய்தாக வேண்டும்? ஆனால் ஆபீஸ் கோப்புகளை வீட்டுக்குக் கொண்டு போவது விதிப்படி சரியா? ஏதேனும் விபரீதம் நிகழ்ந்தால்? யார் பொறுப்பாவது? கேள்வியெல்லாம் சரிதான்.  ஆனால் கடமையுணர்வு மிக்க ஊழியர்கள் பலர் பார்க்க, பலர் மெச்ச இப்படித்தான், இதைத்தான் செய்கிறார்கள்.
       அவன் கொடுத்த பேப்பர்களை மேலாளர் அப்படிக் கிழிக்கையில் அவன் பார்த்துக் கொண்டுதான் இருந்தான். எதுவும் சொன்னதில்லை. பலரும் பார்க்கத்தான் செய்வார்கள். ஏதும் சொல்ல மாட்டார்கள். பெரியவர் செஞ்சால் பெருமாள் செய்த மாதிரி...அவரைப் பார்த்து மற்றவர்களும் சிலர் அதற்குக்  கற்றுக் கொண்டிருக்கிறார்கள்தான். தேவைப்படுகிறதே..! நானே அவர் மேசையில் நிரந்தரமாகத் தஞ்சமாகியிருக்கும்போது  எனக்குள் எது சேர்ந்தால் என்ன சேராவிட்டால் என்ன? நாளுக்கு நாள் என் கனம் கூடிக் கொண்டுதான் போகிறது ஆனாலும். இரண்டாக, மூன்றாக என்பது கூடக் கிடையாது. ஒரே தொகுதியாகத்தான் அலைக்கழிகிறேன். அப்படிப் பிரிப்பதில் என்ன பங்கம் வந்து விடுமோ தெரியாது. அதுவும் கூட ஏதேனும் காரணமாகத்தான் இருக்கக் கூடும். ஒரே மொந்தையாக இருந்தால் எங்கே எது என்று யாரும் தேடவோ, தேடி எடுக்கவோ முடியாதல்லவா? பழகினவனுக்குத்தானே அது சட்டென்று தெரியும் வாய்ப்பு.? காரணத்தோடுதான் நான் ஊதிக் கொண்டிருந்தேன். ரொம்ப ஊத்தம் ஆகாதுதான். என்று வெடிக்கப் போகிறேனோ எனக்கே தெரியாது.
       என்னோடு தோன்றிய நண்பர்கள் இங்குள்ள பல பிரிவுகளில் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களெல்லாம் சொகுசான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். தினமும் அடிக்கடி கைபட்டு கைபட்டுச் சீரழிவது நான்தான். அவர்களுக்கெல்லாம் தினசரி என்கிற கேள்வியே எழுவதில்லை. ஒரு முறை எடுத்தால் அடுத்தாற்போல் பதினைந்து தினங்களுக்கு அவர்களுக்கு ஓய்வுதான். என்னைப்போல் அதிக கனமுமின்றி, அதிகப் புரட்டலின்றி, பலரின் கைபடாத வகையில் பிரிவின் ஆளுகையோடு சுகவாசியாய்க் கழிக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் முடிவு என்று வந்தாலும் வந்து விடுகிறதுதான். பிறகு ஆவண அறைக்குள் சென்று முடங்கிக் கொள்கிறார்கள். யாரும் தேடி வராத வாசம். சுகவாசம். ஓய்வு என்பதை அறியாமல் வாழ்ந்து நசிந்து கொண்டிருப்பது நான்தான். அநியாய ஊத்தம் அழுகலில்தானே போய் முடியும்?
       எப்போது ரகசியம் என்னிடம் புகுந்ததோ அப்போதே நான் அந்த மேசையிலேயே இருப்பதற்கான காரணத்தை நீங்கள் ஊகித்திருக்கக் கூடும். இம்மாதிரி நிறைய ரகசியங்கள் அடங்கியதுதான் நான். நானிருக்கும் அலுவலகமும்தான். . . ஆள் மாறினாலும் தொடரும். இடம் மாறினாலும் தொடரும். ஆள் மாறும்போது, நான் வேறு கைக்குப் போனாலும் ஏற்கனவே பழக்கப்பட்டவராய்த்தான் எனக்கு அவர் தோன்றுவார். என்னைக் கையில் எடுத்து அவர் புரட்டும் லாவகத்திலிருந்தே நான் அதைப்  புரிந்து கொண்டு விடுவேன். அவருக்கும் இஷ்டமானவராய்த்தான் நான் இருப்பேன். சொல்லப்போனால் முன்னிருந்தவரைவிடச் செல்லமாய், அதி கவனமாய் அவர் என்னைப் பாதுகாக்கக் கூடும். அவரிலும் திறமைசாலியாய் இவர் இருக்கக் கூடும்.
       ரகசியங்கள் அடங்கியிருக்கும் என்னை எப்படி மேசை மேலேயே வைத்திருக்கிறார்கள்? என்றுதானே நீங்கள் நினைக்கிறீர்கள்? மாலை அலுவலகம் விட்டுப் போகும்போது பீரோவுக்குள் போய்விடுவேன் நான். அதிகாரியிடமும் ஒரு சாவி உண்டு. மேலாளர் இல்லாத சமயங்களில் அவரே எங்கள் உறாலுக்கு வந்து அந்த பீரோவைத் திறந்து என்னை எடுத்துக் கொண்டு போவார். அவர் அந்தஸ்துக்கு அதையெல்லாம் செய்யக் கூடாதுதான். யாரிடமாவது சாவியைக் கொடுத்து, அதை எடுத்து வா என்று அவர் சேம்பரில் இருந்து கொண்டுதான் கேட்க வேண்டும். அதுதான் நியாயம். கௌரவமும் கூட. ஆனால் அவரே வந்து எடுத்துப் போகிறார் என்றால் நான் எத்தனை முக்கியமானவன் என்பதைத் தயவுசெய்து புரிந்து கொள்ளுங்கள் இங்கே. எத்தனை ஜாக்கிரதை உணர்வு பார்த்தீர்களா? மனதுக்குள் பயம் உள்ளவன்தான் இப்படி முறையற்ற செயலையெல்லாம் செய்வான் என்றெல்லாம் நீங்கள் கேட்கக் கூடாது.
       இன்னொருவரை எடுக்கச் சொல்லப்போக அவர் அதை எடுக்கிறேன் என்று வேறு ஒன்றை நோண்டப் போக அல்லது என்னையே திறந்து நோக்கப் போக...ஏதாவது விபரீதத்திற்கு அது வழி வகுத்து விட்டால்? கூடியானவரை ரகசியங்களைப் பாதுகாப்பதுதானே அலுவலகங்களின் வேலை. அதுதான் கடமையும் கூட.. தவிர்க்க முடியாமல் கை மீறிப் போகும்போது, சாண் போனால் என்ன முழம் போனால் என்ன என்று இருப்பது அபூர்வம். அப்பொழுது என்னென்ன செய்ய வேண்டுமோ அதை கன கச்சிதமாய்ச் செய்து எல்லாவற்றையும் சரி செய்து விடுவார்கள்தான். அதனால்தான் உங்களிடம் ஆரம்பத்திலேயே நான் சொன்னேன். எனக்கு முடிவே கிடையாது என்று. இப்போது புரிகிறதா அந்தப் பூடகமான வார்த்தையின் பொருள்?
       இது உங்க டேபிள்லயே இருக்கட்டும்...நீங்களே மெயின்டெய்ன் பண்ணுங்க...என்று மட்டும் சொன்னதை நான் பார்த்திருக்கிறேன்.. அந்த ஒரு சொல்லில் ஆயிரம் அர்த்தங்கள் புதைந்திருக்கும்... ஓ.கே...ஓ.கே....என்பார் அதைப் பெற்றுக் கொள்பவர். ஏனென்றால் அவருக்கும், அவர் முன்பு இருந்த அலுவலகத்தில் இந்த மாதிரியான அனுபவத்தைப் பெற்றிருப்பார். அந்த அனுபவங்களைச் சுமந்துகொண்டுதான், மனதில் இருத்திக் கொண்டுதான் இங்கே மாறுதலில் பணியேற்க வருவார்.
       ஒவ்வொரு அலுவலகங்களும் ஒவ்வொரு விதமான ரகசியத்தைத் தன்னகத்தே கொண்டு தடையின்றி இயங்கி வருகின்றன. நிர்வாகம் என்பது ரகசியங்களின் கிடங்கு. அங்கே கிளரக் கிளர ஏதாவது வந்து கொண்டேயிருக்கும். பிசுக்கு நாற்றம் அடித்துக்கொண்டேதான் இருக்கும். அந்த நாற்றத்தை நறுமணம் என்று கருதித்தான் அங்கே இயங்கியாக வேண்டும். அங்கு இயங்குபவர்கள் அனைவரும் அறிந்ததுதான், நுகர்ந்ததுதான். ஆனால் சொல்லி வைத்தாற்போல் அது நறுமணம்தான் அத்தனை பேருக்கும். நுகர்ந்துகொண்டே நகர்ந்து செல்பவர்கள்தான் அதிகம். வாழ்க்கைன்னா கஷ்டம், நஷ்டம், சந்தோஷம், சோகம், துன்பம், இன்பம் என்று பலவும் இருப்பது போல் அலுவலகம் என்றால் இந்த மாதிரி நாற்றங்கள் வெவ்வேறு மணங்களில் மூக்கை நிரடிக் கொண்டுதான் இருக்கும் என்பதை எல்லோரும் அறிவர்.
       வாசலில் அந்தாள் வந்து நிற்பது தெரிந்தது. பெரிய ஒப்பந்ததாரர். அவர் பெயருக்கு என்று ஒன்றும் இராது. அவரைச் சுற்றியுள்ளவர்கள்தான் அவருக்காக இயங்கினார்கள். சுற்றியுள்ளவர்கள் அலுவலகத்தைச் சுற்றிச் சுற்றி வந்தே வலை போட்டிருந்தார்கள். வலைக்குள் அகப்பட்ட மீன்களாய்த் தவித்தார்கள் பணியாளர்கள். அவ்வளவு ஏன்...அந்தக் கட்டிடமே அந்த வலைக்குள் மாட்டிக் கொண்டு திணறியது. சின்ன மீன், சின்னஞ் சிறிய மீன், கொஞ்சம் பெரிய மீன், பெரிய மீன், மிகப் பெரிய மீன், கையில் அகப்படாத மீன், வழுக்கும் மீன், துள்ளும் மீன், துள்ளித் துள்ளி யார் கையிலும் நிற்காத மீன், சமயங்களில் கையைக் கடிக்கும் மீன், முகத்திலேயே பாயும் மீன், விலுக்கென்று பாய்ந்து தரையில் துடித்து எகிறும் மீன், தரையில் விழுந்து துடித்துத் துடித்து ஓய்ந்து விடும் மீன், மூச்சை நிறுத்திக் கொள்ளும் மீன் என்று பல்வேறு வகைகளில் மீன்கள் அங்கே விடாது துள்ளிக் கொண்டேயிருந்தன. அத்தனை மீன்களுக்கும் நேரம் காலம் கருதி தீனி போடப்பட்டது. கொதிக்கும் குழம்பில் விழாமல் பாதுகாக்கப்பட்டது. தக்க அளவிலான தண்ணீர்த்தொட்டியைக் காட்டி மிதக்க விடப்பட்டது. உனது எல்கை இதுதான் என்று நிர்ணயிக்கப்பட்டது. இதற்குள்தான் நீ வட்டமிட்டாக வேண்டும் என்றும் இதிலிருந்து துள்ளி வெளியே விழுந்தாயானால் செத்துத்தான் ஒழிய வேண்டும் என்றும் சொல்லி அது நிகழ்ந்து விடாமல் கனமான மூடி போட்டு தடுத்து நிறுத்தப்பட்டது.
       அந்த ஆண்டுக்கான ஒப்பந்தப்பணிகளைச் செவ்வனே செய்து முடிப்பதற்கு முந்தைய ஆண்டின் பிணைப் பத்திரங்கள் காவு கொடுக்கப்பட்டன. அவரே நிரந்தர ஒப்பந்ததாரர் என்பதால் ஒவ்வொரு ஆண்டும் புதிய புதிய பிணையங்கள் என்று வேண்டியதில்லை என எழுதாத சட்டம் அமல்படுத்தப்பட்டது. முந்தைய ஆண்டில் செய்த பணிகளின் ஆய்வறிக்கை இன்னும் ஒப்புதல் செய்யப்படாத நிலையில் நடப்பாண்டின் புதிய பணிகளுக்கு அந்தப் பழைய பிணையங்களை எப்படி ஏற்றுக் கொள்வது என்பதுதான் நியாயமான கேள்விகளாய் முளைத்தாலும், தியரிடிக்கல் என்பது வேறு, பிராக்டிகல் என்பது வேறு என்கிற விதியின் கீழ், செய்யும் பணிகளே முக்கியம், எவ்வளவுக்கெவ்வளவு விரைவில் திட்டப் பணிகளை, மராமத்துப் பணிகளை முடிக்கிறோமோ அவ்வளவுக்கவ்வளவு சலுகைகள் தானே கிடைக்கும் என்கிற சொல்லப்படாத நியதியின் கீழ், எந்த மாற்றமுமின்றி, தடங்கலுமின்றி அங்கே பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன.
       சொன்னாச் சொன்னபடி செய்து கொடுக்கிறவன்தான் வேணும். அப்பத்தான் நிதி ஆதாரத்த தடையில்லாமப் பெற முடியும்....என்கிற மையப்புள்ளியில்தான் மொத்த நிர்வாகமும் நின்று கொண்டிருக்கிறது எனும்போது சதா ரூல்ஸ் பேசி என்ன பயன்?
       இப்போது நான் அந்தாள் கையில். அவர் கைக்கு நான் எப்படிப் போனேன். எனக்கும் அவருக்கும் என்ன சம்பந்தம்? நான் உறவாடுவது என் அலுவலக அளவில்தானே...! எதிரில் உட்கார வைத்தால் எதையும் தொடலாமே...! எப்போது அவன் பாக்கெட்டுக்குள் நாம் இருக்கிறோமோ அப்போது ஆபீசே அவனோடதுதானே...!
       இதுக்குள்ள பதிவேடு இருக்கும்ல சார்...அத எடுக்கச் சொல்லுங்க.. - அவன் வேலை வாங்கினான் எங்களை. எந்தப் பதிவேட்டில் எத்தனாம் பக்கத்தில் தனக்கான பதிவுகள் உள்ளன என்பது அவனுக்குத் துல்லியமாகத் தெரிந்திருந்தது. மொத்தம் இவ்வளவு தொகைக்கு பிணையம் ஏற்கனவே கொடுக்கப்பட்டிருக்கிறது என்றும் அவையெல்லாம் இன்னும் நான்கு ஆண்டுகள்  உயிரோடு வலம் வந்து பிறகுதான் முதிர்ச்சி பெறுகின்றன என்கிற விபரத்தை அவன் மனனமாய் எங்களுக்குச் சொன்னான். அது போன வருட ஒப்பந்தப் பணிகளுக்கானது என்று என்னால் ஏன் சொல்ல முடியவில்லை. என்னுள் அந்த விபரங்கள் அடங்கித்தானே கிடக்கின்றன? பிறகும் ஏன் மௌனம்? நான் மட்டும் வாய் பேசும் ஆளாய் இருந்திருப்பேனானால் ஒருவேளை என் வாயையும் அடைத்திருப்பார்களோ? அதனால்தான் கையில் வைத்துக் கொண்டு ஆட்டுவிக்கிறார்களோ?
       சார்...போன வருஷம் டோட்டல் காஸ்ட் ஆஃப் ஒர்க்ஸ் இவ்வளவு....இந்த வருஷம் இவ்வளவு....இத்தன பர்சன்டேஜூக்கு பிணையம் எடுத்தாகணும்ங்கிறது ரூல். அதுப்படி இன்னும் இவ்வளவு தொகைக்கு கூட எடுத்தாகணும் சார்....- இதை அவன் என் சார்பாக  மேலாளரிடம் சொன்னபோது அவர் அவனை ஒருமாதிரியாகப் பார்த்துவிட்டு...இருக்கட்டும்...இருக்கட்டும்...இதுபத்தி சீஃப்போட டிஸ்கஸ் பண்ண வேண்டிர்க்கு....பிறகு முடிவு பண்ணிக்கலாம்....என்றார். அத்தோடு நின்றிருந்தால் கூடப் பரவாயில்லைதான். அவன் எழுதியிருந்த குறிப்பினைப் பிரித்துத் தனியே எடுத்து...இதை உங்க டேபிள்ல போடுங்க...பிறகு தேவைப்பட்டா எடுத்துக்கலாம் என்று வேறு சொன்னார். மீதி இவ்வளவு தொகைக்கு என்றுதான் அவன் சொன்னான். விதிப்படி அந்தந்த வருடப் பணிகளுக்கு என்று புதிதாக குறிப்பிட்ட அளவு சதவிகிதத்திற்குப் பிணையப் பத்திரங்கள் புதிதாக,மொத்தமாக வாங்கியாக வேண்டும். இங்கே அப்படியில்லை என்பதை அறிந்தே அவன் தன்னை இளக்கிக் கொண்டு  அப்படிச் சொல்லியிருக்கிறான். அந்த மீதிக்கே அங்கே வக்குமில்லை வகையுமில்லை.
       பேசாம என்னைத் தூக்கி அந்தாள்ட்டயே கொடுத்துடலாம்..எல்லாத்தையும் முடிச்சிட்டு நீங்களே திருப்பிக் கொடுங்க என்று...சொல்லி விடலாம். .எனக்கே இப்படித்தான் தோன்றியது. எதற்கு எனக்கென்று ஒரு அலுவலகம்...அந்தஸ்து...பராமரிப்பு...பங்களிப்பு...? அந்தஸ்து என்றா சொன்னேன். அப்படி ஒன்று எனக்கிருக்கிறதா என்ன? எப்போது என்னுள் பொய்மை புகுந்து கொண்டதோ அப்போதே அந்த வார்த்தைக்கு அங்கு இடமில்லையே...! என் பராமரிப்பு என் கையிலா இருக்கிறது? அல்லது அந்தப் புதுப் பையன் பொறுப்பிலா? மேலாளர்தானே அதிகாரி சார்பாய் என்னைப் புரட்டி எடுக்கிறார்? கக்கத்தில் இடுக்கிக்கொண்டு உள்ளே போகவும் வரவுமாய் பரபரப்பது அவர்தானே...!
       அவன் டேபிளில் என்னென்னவோ குப்பைகள் ஏற்கனவே அடைந்து கிடக்கின்றன. ஓரிரு சமயம் நான் அங்கு அடைந்து கிடந்திருந்தபோது ரொம்பவும் கஷ்டப்பட்டிருக்கிறேன். அந்தப் பிரிவுக்கு யார் யார் இதற்கு முன் இருந்தார்களோ அவர்களெல்லாம் சிறிது சிறிதாய்ச் சேர்த்த குப்பைகள் அவை. அவரவர் அந்த அலுவலகம் விட்டுப் போகும்போது அதைச் சுத்தம் செய்து விட்டுப் போவது என்கிற நடைமுறையெல்லாம் கிடையாது. நம்ம டேபிள்தானே...டிராயருக்குள்ளதானே...அடுத்து வர்ற ஆள் பார்த்திட்டுப்  போறான்....என்று விட்டு விட்டுப் போவதுதான் வழக்கமாயிருந்தது. அதில் கொண்டு அந்தக் குறிப்புத் தாளை செருகு என்றால் என்ன அர்த்தம்...அதற்கு மேல் அதுக்கு விலையில்லை என்பதுதான். விலையில்லாததையெல்லாம் அழிப்பதுதானே முறை. ஏனென்றால் பின்னால் அவை தடயங்கள் ஆகும் வாய்ப்பு நிறைய உண்டே...! இந்த ஆண்டு மட்டும் இந்த ஒப்பந்தம் ஏன் இன்னும் முடியாமல் இழுவையாய்க் கிடக்கிறது? எது படியவில்லை?
       என்ன மாற்றம் நிகழ்ந்து விடப் போகிறது? அரைத்த மாவையே அரைப்பதுதானே வேலை...மாவாட்டுவது ஒரே ஆள்தானே!. எல்லாவற்றையும் கண்கொண்டு பார்த்துக் கொண்டு பொய்மையாய் என் உடம்பை வளர்த்துக் கொண்டு நான் அந்த மேசையில் கிடந்தேன். என் அருகில் வரும் மற்ற பிரிவினர், மற்ற பணியாளர்கள் என்று எவரும் என் மீது விரல் வைத்ததில்லை. அத்தனை பயம் எல்லாருக்கும்.
        ஆனால் அன்று அப்படிப் பொழுது விடியும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். யாருமே எதிர்பாராத தருணத்தில்தான் அது நடந்தது.
       அவர் எப்படி அங்கே வந்தார்? எனக்கே அது புதிராய்த்தான் இருந்தது. யாருக்கு அந்த வருடப் பணி ஒப்பந்தம் என்று இன்னும் முடிவுறாத வேளையில்தான் அது நடந்தது. எனக்கு எனக்கு என்று கெஞ்சிக் கெஞ்சி வருடக் கணக்காய் அலைந்து கொண்டிருப்பவர். இந்த முறையேனும் தனக்குக் கிட்டும் என்று நம்பிக்கையில் வந்து போனவர். உமக்கு வேறே வேலையே இல்லையா? என்ற கேள்விக்கணையை, கேலியை எதிர்கொண்டவர்.
       இருக்கட்டும் சார்...இருக்கட்டும் சார்...எல்லாம் நீங்க சொன்னபடிதான்...எதுவும் குறைக்கல...நிதானமா பாருங்க....சரியாயிருக்கும்...எல்லாருக்கும்தான்...பாஸூக்கும் சேர்த்துத்தான் உள்ளவைங்க...நீங்கதான் பார்த்து செய்யணும்...இந்த வருடம் எனக்கே கொடுக்கணும்... செய்து கொடுங்க...பெறவு எப்படி நிலைக்கணும்னு நான் பார்த்துக்கிறேன்...எல்லா எடமும் போயிட்டு வந்திட்டேன்...கவனிச்சிட்டுத்தான் வந்திருக்கேன்...உங்ககிட்டத்தான் கொஞ்சம் லேட்......எதுவும் நெனைக்க வேண்டாம்...எல்லாம் மொறப்பிரகாரம் நடக்கும்... பார்த்துக்கலாம் பெறவு...இத்தோடவா முடியப் போவுது....பயப்படாமப் பிடிங்க சார்.... இவ்வளவு தயங்குறீங்க...? உங்க சர்வீஸ்ல நீங்க பார்க்காததா...? இந்த ஆண்டு நமக்குக் கொடுத்து உதவுங்க சார்...நல்லா பண்ணுவோம் சார்...பொத்தாம் பொதுவாய்ப் பலதையும் சொல்லிக் கொண்டே...
       அவர் கைகளில் திணிக்கிறார். வேறு வழியில்லாமல், முகம் நிரம்பிய திருப்தியோடு மேலாளர் அதை வாங்குகிறார். எதிர்பாரா தருணத்தில் மின்னல் வேகத்தில் அது நிகழ்ந்து போகிறது.  சடாரென்று மறைவிலிருந்து நாலு பேர் அங்கு உதிக்கிறார்கள். கண்ணிமைக்கும் முன் மேலாளரின் கையைப் பற்றுகிறார்கள். இருவர் அவரின் பக்கவாட்டில் சரேலென்று புகுந்து நின்று அவரின் தோளைப்பற்றி அமுத்தி உட்கார வைக்கிறார்கள்.  என்ன ஏது என்று புரியாமல் அதிர்ச்சியில் அவர் உறைந்து போக, அவரின் மேல் சட்டை கழற்றப்படுகிறது. அலுவலகப் பணியாளர்கள் அனைவரின் முன்னும் உடம்பு தெரிய அவர் அமர்த்தப்படுகிறார். எதிரே டேபிளில் இரு கண்ணாடி கிளாஸில் தண்ணீர் கொண்டு வந்து வைக்கப்படுகிறது. அவரிக் கைகள் அதில் முக்கப்படுகிறது. தெளிந்த நீர் கலங்கிய நீராகத் தன்னை உரு மாற்றிக் கொள்கிறது.
       போகலாமா.....? - அமைதியும், நிதானமும் கலந்த அந்தக் குரலில் இருந்த அழுத்தம் சற்றே பயமுறுத்தத்தான் செய்கிறது.  
       மேலாளரின் மேசையிலிருந்த நான் அந்த அதிகாரியின் கைகளுக்கு மாறுகிறேன். என்று மீண்டும் அங்கு திரும்புவேனோ...? யாம் அறியோம் பராபரமே...!
                           -----------------------------------------------------------------
      






கருத்துகள் இல்லை:

  'குற்றம் புரிந்தவன்'  - சிறுகதைத் தொகுப்பு - புஸ்தகா.கோ.இன்  - ல் வெளியிடப்பட்டுள்ளது.    (www.pustaka.co.in) --------------------...