31 மே 2020

“சொல்லத் துடிக்குது…!” கட்டுரை


கட்டுரை                        உஷாதீபன்,                                                                            
 “சொல்லத் துடிக்குது…!”                
 -----------------------------------------                                      
     லகமயமாக்கலின் தாக்கத்திலும், ஐ.டி. கலாச்சாரத்தின் நடைமுறையிலும்  குடும்பங்களுக்குள் எத்தனையோ விதமான மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன என்று சொல்லலாம். அந்த மாற்றங்கள் பொருளாதார ரீதியாக சற்று விசாலமாக மேம்பட்டிருந்தாலும், ஒழுங்கு, பண்பாடு, செயல்முறை என்கின்ற வகையில் நிறையத் தாக்கங்களை ஏற்படுத்தியிருக்கின்றன என்றுதான் சொல்ல வேண்டும்.
     ராத்திரித் தூக்கம் இல்லாதவன் காரியம் எதுவுமே, வௌங்காது, உருப்படாது…. என்பார்கள் கிராமத்தில்.. ஐ.டி. பணியாளர்கள் பெரும்பாலும் இரவில் பணிபுரிபவர்களாகத்தான் இருக்கிறார்கள். பன்னிரெண்டு மணி, ஒரு மணி, ரெண்டு மணி என்று வீடு வந்து சேருபவர்கள் அதற்கு மேற்கொண்டு வேளை கெட்ட வேளையில் டிபனை முழுங்கிவிட்டு உட்கார்ந்து படம் பார்க்க ஆரம்பித்து விடுகிறார்கள். தொலைக்காட்சியிலோ அல்லது செல்ஃபோனில் சேமித்து வைத்திருப்பதை நேர் தொலைக் காட்சிக்குக் கொண்டு சென்று அகன்ற திரையில் பார்க்கிறார்கள். இப்பொழுதுதான் என்னென்னவோவெல்லாம் வசதி வந்துவிட்டதே…அதுதான் வினையே…! நன்மையும் நிறைய இருக்கே என்று சொல்வதும் காதில் விழுகிறதுதான். வினைக்குத்தான் பயன்படுகிறது பலவும் என்பது மூத்தோர் சொல் வார்த்தை. மூன்றாம் ஜாமத்திற்குமேல்  மூன்றரை, நாலு என்று தூங்க ஆரம்பித்து மறுநாள் பகல் பன்னிரெண்டு போல் எழுந்து, குளிக்க, சாப்பிட கிளம்ப என்று புறப்பட்டு விடுகிறார்கள். ஒரு வார்த்தை வீட்டிலுள்ளோரிடம் முகம் கொடுத்துப் பேசக் கூட இந்த இளைஞர்களுக்கு நேரம் இருப்பதில்லை. நேரம் இருக்கும் வேளைகளில் பேசப் பிடிப்பதில்லை. இவர்களுக்குத்தான் வயதாகித் தொங்கிப் போன முகங்களையே பார்க்கப் பிடிப்பதில்லையே? அதிலும் அவர்கள் தப்பித் தவறி வாயைத் திறந்து விட்டால்…கேட்கவே வேண்டாம். ஓட்டமாய் ஓடி விடுகிறார்கள். இந்த நடைமுறை இன்று பல வீடுகளில்.
     பக்கம் பக்கமாய் அவர்களது துணி மணிகளைத் அவிழ்த்து வீசுவது, துவைத்தது எது, கழித்துப் போட்டது எது என்று தெரியாதபடி, போட்டது போட்டபடி, இருந்தது இருந்தபடி என்று எதுவொன்றிலும் இவர்களிடம் ஒழுங்கோ, கட்டுப்பாடோ இருப்பதில்லை. ஒரு செய்தித்தாள் புறட்டுவதானாலும் சரி, விறுவிறுவென்று புரட்டியெடுத்துவிட்டு பக்கவாட்டில் வீசிவிட, அது மேலே ஓடும் ஃபேன் காற்றில் நாலா பக்கமும் வீடுகளில் பறந்து கொண்டிருக்கிறது. இன்னின்ன பொருளை இப்படி இப்படித்தான் வைக்க வேண்டும், இங்கிங்கேதான் வைக்க வேண்டும், பாதுகாக்க வேண்டும், பயன்படுத்த வேண்டும் என்பதெல்லாம் எதுவும் இல்லை இவர்களுக்கு. தூக்கி கண்டமேனிக்கு வீச வேண்டியது, கொஞ்சம் மங்கிப் போச்சா, ஒதுக்கிவிட்டுப் புதுசு வாங்க வேண்டியது…அதுவும் அளவு சரியில்லையா, போய்த் திரும்பவும் கேட்டுப் பார்ப்போம் என்ற யோசனைகூட அன்றி (கேட்டால் கேவலமாம்)வாங்கிய புதிதை அப்படியே போட்டு வைத்து விடுவது, அடேயப்பா…காசு தண்ணீராய்த்தான் ஐயா செலவு ஆகிறது இவர்களுக்கு…அதற்கு ஒரு மரியாதை என்பதே இல்லாமல் போனது இவர்கள் மத்தியில்தான்.   அவர்களுக்குத்தான் வீட்டிலுள்ளோர்களிடம் மனது விட்டு ரெண்டு வார்த்தை பேசக் கூடப் பொறுமையிருப்பதில்லையே? ஏதாவது பேசினால்தானே ஆலோசனை சொல்ல…? ஒருவேளை நம்மை இவர்களுக்குப் பிடிக்கவில்லையோ என்று வயதானவர்கள் மனதுக்குள் குமையும் நிலைதான் இன்று பல வீடுகளிலும் உள்ளன.
     இந்த இளைஞர்கள் அவரவர் வீட்டிற்கென்று எந்த உதவியும் செய்வதாய்த் தெரியவில்லை. கடைக்குப் போய் ஒரு காய்கறி வாங்குவதென்றாலும் அதையும் வீட்டிலுள்ளவர்களேதான் செய்து கொள்ள வேண்டியிருக்கிறது. மளிகை சாமான்கள், காய்கறிகள், இதர அயிட்டங்கள் என்று எதுவுமே என்னென்ன மாதிரி விற்கின்றன என்று தம்பிடி கூடத்  தெரியாது. தெரிந்த ஒரு சிலரும் கேட்டதைக் கொடுத்துவிட்டு வரும் ரகம்தான். அவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் கணினி ஒன்றுதான். அதற்கு முன்னால் உட்கார்ந்து மணிக்கணக்காய் அதோடு பேசிக் கொண்டிருப்பார்கள். வீட்டிலுள்ளோரிடம் தப்பித் தவறிக் கூட ரெண்டு சொல் உதட்டை அசைத்து விட மாட்டார்கள். அத்தனை பிஸியாம். எதையாவது நாம் அசட்டுப் பிசட்டு என்று கேட்டு வைத்தால் “உனக்கொண்ணும் தெரியாதுப்பா….” என்று ஒரே வார்த்தையில் முடித்து விடுவார்கள். மூஞ்சியைத் தொங்கப் போட்டுக் கொண்டு உட்கார வேண்டியதுதான். நம்மைத்தான் ”பெரிசு…பெரிசு…” என்கிறார்களே…!
அட, அன்றாடம் அந்த சோற்றின் முன்பாவது சற்றுப் பொறுமையோடு அமர்ந்து சாப்பிட்டுச் செல்கிறார்கள் என்று நினைக்கிறீர்களா? அதுவும் இல்லை.  சாப்பாட்டின் வகையிலும் இவர்களுக்கு எல்லாமும் படு காரசாரமாய் வேண்டியிருக்கிறது. அலுவலகக் கேன்டீனிலும் நகர்ப்புறங்களின் நாகரீகமான உணவகங்களிலும் தின்று தின்றே (அதுதான் மாதா மாதம் பார்ட்டி…பார்ட்டி என்று சென்று விடுகிறார்களே…! காசு தண்ணீராய்த்தான் பாய்கிறது அங்கே)  பழகியவர்களாய் இருப்பதால் அம்மாதிரியான மசாலா ஐட்டங்கள் கொண்டதாயும், நல்ல கனமான நிறப்பிரிகைகளோடு உப்பு, உரப்பு, புளிப்பு என்று எல்லாமும் தூக்கலாகவும் சாப்பிட்டே பழகிப் பழகி, வீட்டில் பதமாய், வயிற்றுக்கு உபத்திரவம் செய்யாததாய்ப் பக்குவமாய்,  தயார் பண்ணி வைத்திருக்கும் உணவு வகைகள் இந்த இளைஞர்களுக்கு இறங்குவதில்லை. மண்ணு மாதிரி இருக்கு என்று கமென்ட் வேறு. எப்பப்பாரு…சாம்பார்…ரசம்…கூட்டு…கறி…இத விட்டா வேறே சாப்பாடே கிடையாதா? ச்சே….ஒர்ரே போரு….என்று அவர்கள் அந்த சோற்றுத் தட்டைத் தள்ளி விடும் அழகைப் பார்க்க வேண்டுமே…! அடா…அடா…அடா…காணக் கண்கோடி வேண்டும் அதற்கு….! அப்படியொரு வெறுப்பு அந்த முகத்தில்.  காலையிலிருந்து பாடாய்ப்பட்டுச் செய்து வைத்த அந்தத் தாயின் முகம் வதங்கின கத்தரிக்காய் போல் இம்புட்டாய்ச் சுருங்கிப் போகிறது. பெத்த மனம் பித்து…பிள்ளை மனம் கல்லுடீ பாவி…!  வியட்நாம் வீடு வசனம்தான் நினைவுக்கு வருகிறது எனக்கு….
     இந்த இளைஞர்களுக்கு புத்தியில் இருக்கும் எண்ணமெல்லாம் சதா ஆபீஸ் வேலைபற்றித்தான். கொடுத்திருக்கும் ப்ராஜக்டை எப்படி நேரத்தில் முடிப்பது. குறிப்பிட்ட கால அளவுக்குள் முடித்து விட முடியுமா, முடியாதா? எதாகிலும் பிரச்னை ஆகிப் போச்சுன்னா என்ன செய்வது? டெக்னிகல் லீடிடமிருந்து வரும் கேள்விகளுக்கு எப்படிப் பதில் சொல்வது, எப்படி சாமர்த்தியமாய்ச் சொல்லி சமாளிப்பது அல்லது எவனைச் சாட்டி விட்டுத் தப்பிப்பது அல்லது தான் நல்ல பெயர் எடுத்துக் கொள்வது என்பதாகத்தான். நீங்கள் நன்றாகக் கவனித்தீர்கள் என்றால் போட்டியும் பொறாமையும் செழித்து வளர்ந்து மண்டிப் புதராய்க் கிடக்கும் இடம் இதுதான் என்று தெரியும். எப்பொழுது பார்த்தாலும் தன்னை மீறி ஒருவன் போய் விடக் கூடாது என்ற சிந்தனையும், இவனைக் கீழே தள்ளினால் அவன் என்ன செய்வான், அவனோடு தொடர்பு கொண்டால் இவன் என்ன நினைப்பான், இவனுக்குத் தெரியாமல் அதை எப்படிச் செய்வது, செய்து முடித்து விட்டு எப்படிச் சொல்லிச் சமாளிப்பது என்கின்ற வகையிலான குயுக்தியான புத்தி இவர்களுக்கு மத்தியில் வேலை செய்வது போல் வேறு எங்கும் இருக்காது எனலாம். நம்பியாரின் வில்லத்தனம் நாராசமாய்ப் பரவிக் கிடக்கும் இடங்கள்தான் இந்த ஐ.டி. நிறுவனங்கள்.
இதனாலேயே இந்த இளைஞர்கள் வீட்டில் ஒரு சின்னக் காரியத்திற்குக் கூடப் பொறுமையற்றவர்களாய் இருக்கிறார்கள். மனம் விட்டு யாருடனும் பேசுவதில்லை. அப்படியே பேசினாலும் மூத்த தலைமுறையின் விலாவாரியான பேச்சு இவர்களுக்குப் பிடிப்பதில்லை, அவர்கள் சொல்லும் ஆலோசனைகளை மதிப்பதில்லை அல்லது காதிலேயே வாங்கிக் கொள்வதில்லை.
குறிப்பாக இவர்களுக்குப் பெரியவர்கள் அட்வைஸ் பண்ணுவது பிடிப்பதேயில்லை. இந்த இளைஞர்களுக்குத் தங்களுக்கு எல்லாமும் தெரியும் என்ற நினைப்பில், எல்லாமும் கணினியில்தான் என்று  வேலை செய்பவர்களாய் இருப்பதனாலேயே, அதனை இந்த மூத்த தலைமுறை அறியாததனாலேயே அவர்களுக்கு ஒன்றும் தெரியாது என்றும் நாம் செய்யும் வேலைபற்றியெல்லாம் எதுவும் இவர்கள் புரிந்து கொள்வதற்கில்லை என்கிற வகையிலும், ஏதாவது நாம் சொல்லப் புகுந்தால் ”மொக்கை போடாதே…” என்று தற்காலத்தில் இவர்களுக்கு மத்தியில் புழங்கும் ஒரு வார்த்தையை அலட்சியமாய் நம்மை நோக்கி வீசிவிட்டு நகர்ந்து விடுகிறார்கள். வெறுமே நகர்ந்து விட்டாலும் கூடப் பரவாயில்லை. ரூமுக்குள் சென்று கதவைச் சாத்திக் கொள்கிறார்கள். பெற்றோர்களை, வீட்டில் உள்ள மற்றோரைப் பார்ப்பதைக் கூட இவர்கள் விரும்புவதில்லை என்பதுதான் ஜீரணிக்க வேண்டிய உண்மை.
இந்தக் கால இளைஞர்களுக்கு மத்தியில் எத்தனையோ கொச்சையான வார்த்தைகள் புழங்குகின்றன. அவை எவையும் ஒழுக்கத்தின்பாற்பட்ட சொற்கள் அல்ல என்று அடித்துச் சொல்லலாம். அப்பா, அம்மாவிடம், பெரியோர்களிடம், குடும்பத்தின் இதர உறுப்பினர்களிடம் இம்மாதிரி வார்த்தைகளையெல்லாம் பயன்படுத்திப் பேசக் கூடாது என்பது கூட இவர்களுக்குத் தெரிவதில்லை. அது மரியாதைக் குறைவானதாக அமையும் என்று இவர்கள் உணர்வதில்லை. எங்கேயிருந்து யார் கொண்டுவந்து இறக்குமதி செய்தார்கள் என்றும் தெரியவில்லை.
சப்ப மேட்டரு….என்கிறார்கள். மொக்கையாப் பேசாதே….கடல போடாதே…..ஜல்லியடிக்காதே…. தீயா இருக்கு, பத்திக்கிச்சு…செம கட்ட…. … லவுட்டிக்கிட்டு … - இன்னும் என்னென்னவோவெல்லாம் பேசுகிறார்கள். நான் ரொம்பக் கொஞ்சம்தான் சொல்லியிருக்கிறேன்.  யாருக்கு ஞாபகம் இருக்கிறது? நல்ல வார்த்தையே நிற்கமாட்டேன் என்கிறது? இல்லை, இதையெல்லாம் வலைத்தளத்தில்தான் தேட முடியுமா? டிக்-ஷ்னரியா போட்டிருப்பார்கள்?
அப்படி ஜாலியாய் இருக்கிறார்களாம். நாளைக்கு இவனுக்குக் கல்யாணம் பண்ணி வச்சா, அந்தப் பொண்ணு இவனைப்பத்தி என்ன நினைக்கும்? என்னா இப்டிப் பிள்ளை வளர்த்திருக்காங்கன்னு கேவலமா நினைக்காது? என்று நீங்கள் நினைத்தீர்கள் என்றால் படுபாவம். ஏனென்றால் பெண் பிள்ளைகளே இன்று அப்படித்தான் இருக்கிறார்கள். ஒரு காலத்தில் வீட்டிலுள்ள பெண் குழந்தைகள் அம்மாவிற்குக் காரியத்தில் உதவியாய் இருந்தன. இன்று? உபகாரம் இல்லாட்டாலும், உபத்திரவம் இல்லாம இருந்தாச் சரி…என்கிற கதைதான். என்னவோடியம்மா….வேலைக்குப் போயிட்டா…இன்னும் கொஞ்ச நாள்ல எவனாவது ஒருத்தன்டப் பிடிச்சுக் கொடுத்தாப் பொறுப்பு விட்டுது….என்றுதான் பெற்றோர்கள் நினைக்கும் நிலையிருக்கிறது.
சரி, அதாவது ஒழுங்காப் போயி, சரியான இடத்தில் முடியும் என்கிறீர்களா? அதற்கு சதா சர்வகாலமும் வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டுதான் இருக்கிறார்கள் இன்றைய பெற்றோர்கள். இல்லையென்று யாராவது மறுக்க முடியுமா? எதிர்பாராத வகையில் காதல் நிகழ்வுகள் நடந்து போகின்றன. கொஞ்சம் நாகரீகமாய்ச் சொல்வோமே என்று சொல்கிறேன். ஒன்றும் ஒன்றும் ரெண்டு என்பதற்குப் பதிலாக ஒன்றும் ரெண்டும் மூன்று என்று ஆகிப் போகின்றன. ஒன்றும் ஒன்றும் என்பதிலேயே இந்த ஒன்றும் அந்த ஒன்றும் என்று நடந்து போகிறது. எதையும் வாய்விட்டுச் சொல்வதற்கில்லை.  காது கொடுத்துக் கேட்பதற்கில்லை. யாரும் மறுப்பதற்கில்லைதான். பலமாதிரியும்தான் இருக்கும் என்கிற காலமாகிப்போனது. பாவம் இன்றைய பெற்றோர்கள். ஈஸ்வரோ ரக்க்ஷது…! ஐ.டி. கலாச்சாரம் கொண்டு சேர்த்திருக்கும் இடம் இதுதான்….! மறுக்க முடியுமா?
மேலே சொல்லியிருப்பதெல்லாம் ரொம்பவும் சுருக்கம். கோடிட்டுக் காட்டியவை.  ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம். அது நல்லதற்கு!   இது?
                     -----------------------------------------------
            

30 மே 2020

‘விகாசம்“ சுந்தர ராமசாமி-சிறுகதை - வாசிப்பனுபவம் -----------------------------------

‘விகாசம்“                                                                     சுந்தர ராமசாமி-சிறுகதை        - வாசிப்பனுபவம்
--------------------------------------------------------------        


              வாழ்க்கையில் நாம் எத்தனையோ பேரோடு பழக நேரிடுகிறது. அப்படிப் பழகுபவரோடெல்லாம் நெருக்கம் ஏற்பட்டு விடுவதில்லை. ஒரு சிலர் மட்டுமே மனதுக்கு மிகவும் நெருக்கமாகி,  நம் வாழ்க்கையோடும் நெருங்கி விடுகிறார்கள். அப்படி நெருங்கி விட்ட பின்னால் நமது குற்றங் குறைகள் அவர்களுக்கும், அவர்களது குற்றங் குறைகள் நமக்கும் தெரிவதில்லை. தெரிந்தாலும் அதைப் பெரிதுபடுத்திக் கொள்வதில்லை. சகித்துக் கொண்டு செல்லப் பழகிக் கொள்கிறோம். குறைகளைச் சரி செய்ய உதவிக் கொள்கிறோம். கஷ்ட நஷ்டங்களில் பங்கெடுக்கத் தயாராகி விடுகிறோம்.
மனதோடு ஒன்றி விட்ட சிலர் நம் வாழ்க்கையோடும் ஒன்றிவிட்டவர்களாகிவிடுகிறா்கள். அவர்களுடனான பயணம் தவிர்க்க முடியாததாய் கடைசிவரை தொடர்ந்து செல்கிறது. இருவரில் யாருக்கு என்ன நஷ்டம் ஏற்பட்டாலும் பரஸ்பரம் அதைப் பெரிதுபடுத்தாமல், சமன் செய்து கொண்டு போகப் பழகிக் கொள்கிறோம். சந்தோஷ காலங்களில் கூடிக் குலாவிக் கொள்கிறோம். அவர்களோடு ஏதேனும் பிணக்கு ஏற்பட்டாலும் அது தற்காலிகமானதாகி, உரிமையோடு மீண்டும் கூடிக் குலாவப் பழகிக் கொள்கிறோம்.
அம்பிக்கு நன்றாகத் தெரிந்துதான் இருக்கிறது ராவுத்தருக்கும் அப்பாவுக்குமான தற்காலிக மன வருத்தங்கள். இது அடிக்கடி நிகழ்வதுதான்…பிறகு சரியாவதுதான்….என்று. அம்மாவுக்கும் இது தெரிந்த கதைதான். கேட்பதற்கு உரிமை உண்டுதான்.
அவர் இல்லாம உங்களுக்கு முடியுமா, முடியாதா? எத்தனை வருஷமா இந்தக் கூத்து? விலகறதும் சேர்த்துக்கறதும்…. – அப்பாவின் முகம் சிவப்பதை அம்பி பார்க்கிறான்.
குளிச்சு சாப்டு, ஆனைப்பாலம் போய் ராவுத்தரைக் கையோட கடைக்குக் கூட்டிட்டு வந்திடு….நான் போய் வண்டி அனுப்பறேன் என்று மகனிடம் சொல்ல…அது பொறுக்கமாட்டாமல்தான் அம்மா கேட்கிறாள்.
ஓணம் வர்றது…நீ கடைக்கு வந்து பில் போடு…. – என்று கோபமாய் இரைகிறார். உதடுகள் கோணி,வலித்துக் காட்டுவதுபோல் அப்படியொரு கோபம். ராவுத்தரை இருக்கச் சொல்வதும், போகச் சொல்வதும், திரும்ப அழைத்து வரச் சொல்வதும் என் உரிமை சார்ந்த விஷயம். அதில் யாரும் தலையிடக் கூடாது…என்பதன் அடையாளமான கோபம் அது. அதை மனைவி கேட்டது பிடிக்கவில்லை.
இந்த லோகத்துல ராவுத்தர் ஒருத்தர்தான் பில் போடத் தெரிஞ்சவரா? – மறுபடியும் அம்மாவின் கேள்வி.
வாயை மூடு….நீ எழுந்திருடா….போ…நான் சொன்ன மாதிரி செய்….. – என்ன கேள்வி வேண்டிக் கிடக்கு என்கிற வேகம். வீடு வாயடைத்துப் போகிறது.
பையன் அப்பாவுக்குக் கேட்காமல் மெதுவாய் அம்மாவிடம்….ஏம்மா…முன் கோபின்னா பரவால்ல….முன்கோபமே அப்பான்னா எப்டி…? என்று சொல்ல சிரிக்கிறாள் அம்மா. ஆனாலும் கருணை சுரக்கும் உள்ளம். தெரிஞ்சவாளையும், கூடவே வந்துண்டிருக்கிறவாளையும் அவ்வளவு சாதாரணமா உதறிட முடியுமா? அது மனுஷத் தன்மையா என்ன?
ரொம்ப லட்சணந்தான்…புத்தியுள்ள பிள்ளைன்னா ராவுத்தரைக் கூட்டிண்டு கடைக்குப் போ….என்று விட்டு, தன் நெஞ்சின் மீது வலது கையை வைத்து….“அவர் என்ன பேசியிருந்தாலும் அதற்காக நான் வருத்தப்படறேன்னு அவர்ட்டச் சொல்லு…” என்கிறாள்.
வீட்டு ஐயாவை விட வீட்டு அம்மாவின் வார்த்தைகளுக்கு அதிக மதிப்பிருக்கும், அந்தக் கருணையை எதிராளி உணர வாய்ப்புண்டு என்கிற நம்பிக்கை. பண்பாடு செறிந்த சமூகம் நிலவிய காலம். மனிதர்களுக்குள் ஏற்றத் தாழ்வுகள் பேணப்படாத அன்பு மட்டுமே பிரதானமாய் கோலோச்சிய நாட்கள்.
ப்படி என்னதான் சண்டை அப்பாவுக்கும்…ராவுத்தருக்கும்….? மின்னல் பொறியாய் மனக்கணக்கிடும் ராவுத்தரை அத்தனை சீக்கிரத்தில் ஒதுக்கிவிட முடியுமா? அவரும் சரி, வரிசையாக ஐந்து பேர் உட்கார்ந்து காகிதத்தில் எழுதி கூட்டிக் கழிப்பதும் சரி….சாதாரண மனித மூளையா அது? வாடிக்கையாளர்களே பார்த்து வியக்கும் அமானுஷ்யமல்லவா அது?
சாதாரண மனுஷ ஜென்மந்தானா இவர்….? காதால் கேட்டே இப்படி போடுறாரே….கண்ணால பார்க்க முடிஞ்சா…? இத்தனைக்கும் ஸ்கூல் படிப்பு வெறும் மூணாங்கிளாஸ். கடையைக் கூட்டிச் சுத்தம் பண்ணித் தண்ணி எடுத்து வைக்கும் கோமதியை விட ரெண்டு கிளாஸ் கம்மி…..ஆனா அவரது அனுபவத்துக்கு வயசுண்டா? அவரில்லாமல் ஓணம் விற்பனையை எப்டிச் சமாளிக்கிறது?
ஆனாலும் இப்படிச் சண்டை வந்து விட்டதே….!
தனக்கு வேண்டிய துணிகளை எல்லாம் பொறுக்கித் தன் பக்கத்தில் குவித்து வைத்துக் கொண்டு, பிறகு ராவுத்தர்  கடன் கேட்டதுதான் தப்பாய்ப் போயிற்று. கடனை இப்படி ஏத்திட்டே போனா எப்படி, தொகை ஏறிப் போச்சே…? என்ற அப்பாவின் பேச்சுக்குப் பிறகும்….கோலப்பா…பில் போட்டுக் கொடுத்திடு…என்கிறார். தான் சம்மதம் தரும்முன் பில் போடச் சொன்னால் எப்படி? அவ்வளவு இளக்காரமா? மட்டுப் படுத்தறேன்….அவர் கறுவிக் கொள்கிறார். என்ன பண்ணச் சொல்றீக…வீடு முழுக்கப் பொட்டைக…மகன் கூறில்ல…மாப்பிள்ளை கூறில்லே….மருமக நாலு, பேத்திக எட்டு, பேரன்க எட்டு…ஆளுக்கொண்ணு எடுத்தாலும் தொகை ஏறிப் போகுதே….-வார்த்தைகள் காதில் விழவில்லை இவருக்கு.
இந்தத் தவா கடன் தரச் சந்தர்ப்பம் இல்லை…..குரலில் கடுமை.
அப்டீன்னா நம்ம உறவு வேண்டாம்னுதானே ஐயா சொல்றீங்க…குட்டீ….என்னைக் கொண்டு வீட்ல விட்டுரு….-கோமதியிடம் சொல்லிக்கொண்டே எழுந்து விடுகிறார் ராவுத்தர். வழக்கமான வரேன் ஐயா கூட இன்று இல்லை. போகட்டும்…..விட்டு விடுகிறார். அவர் கோபப்படுவதும், இவர் உடனே எழுந்து நடையைக் கட்டி விடுவதும் எல்லாமும் சட்டுச் சட்டென்று நடந்து விடுகின்றன. மனதுக்குள் ஆழமான அன்பு உள்ளவர்களின்-இப்படி எடுத்தேன் கவிழ்த்தேன் என்று வெளிப்பட்டு விடுகிறது.
இன்று…வியாபாரத்துக்கு ராவுத்தர் இல்லாமல் முடியாது. என்ன செய்ய…?
அம்பி வந்திருக்கேன்…..ராவுத்தர் வீட்டு வாசலில், “ நான்தான் அம்பி…“
வா…வா…. –உற்சாகம் கொப்பளிக்கும் குரல். சாணி மெழுகிய தரையில் சப்பணம் கட்டி கம்பீரமாய்  ராவுத்தர். துழாவும் கரங்கள். கண்கள் மலங்க மலங்க….இழந்துவிட்ட ஜீவ ஒளியை மீண்டும் வரவழைக்க நினைக்கும் துடிப்பு….உணர்ச்சி வசப்பட்டதில் அதிக நெகிழ்ச்சி.
இன்னிக்கு என்ன வேட்டி…கட்டிக்கிட்டாப்ல…?
தோணிச்சி….
என்ன கரை…?
குண்டஞ்சி….
ஐயர் மாதிரியே….பார்க்கவும் ஐயர் மாதிரியே…..இருக்கேன்னு கடைப்பையன்க சொல்வானுக….இப்படிச்  சொல்லிவிட்டு அம்பியின் கன்னம், கழுத்து, நாடி, வாய், மூக்கு, கண், நெற்றி, காதுகள் என்று தடவிப் பார்க்கிறார்…எல்லாம் கணக்கா வச்சிருக்கான்….என்றுவிட்டுச் சிரிக்கிறார்.
அம்மா….. – ஆரம்பிக்கிறான் அம்பி.
எப்படியிருக்காங்க…உடம்பு சௌரியமா…?
அப்டியேதான்…
நம்மகிட்ட தூதுவளை, கண்டங்கத்திரி லேகியம் இருக்கு. இழுப்புக்கு அதுக்கு மேலே மருந்தில்லே…
வந்த விஷயத்தைச் சொல்ல இதுவே நல்ல தருணம். “அம்மா உங்களை கடைக்குக் கூட்டிண்டு போகச் சொன்னாங்க…ஏதாவது முன் பின்னாப் பேசியிருந்தாலும் அம்மா வருத்தப்படுறதா சொல்லச் சொன்னாங்க….தட்டப் படாதுன்னும் சொன்னா…..
ராவுத்தர் முகத்தில் பரவசம்.  தாயே…நீ பெரிய மனுஷி….இரு கரங்களையும் மேலே உயர்த்தி வணங்குகிறார்.   எழுந்திரு…இப்பவே போறோம்…..
-முடிந்தது விஷயம். அந்த வருடம் ஓணம் விற்பனை நன்றாக இருக்கிறது.  படு உற்சாகமாக ராவுத்தர் சமாளித்து விடுகிறார். துணியின் அளவும், விலையும் காதில் விழுந்த மறு கணம் விடை. பதினாறு அயிட்டங்களுக்குப் பெருக்கி விடை சொல்லிவிட்டு, அயிட்டம் பதினாறு, கூட்டுத் தொகை ரூபா.1414, பைசா 25…அந்தப் பொறியை மனித மூளை என்று எப்படிச் சொல்ல முடியும்?
துள்ளல் கொஞ்சம் கூடிப் போச்சு அந்த மனுஷனுக்கு…ரெண்டு தட்டுத் தட்டி வைக்கணும்… - அப்பா. இரவில் கண் விழித்ததுதான் மிச்சம். ஒரு தவறைக்கூடக் கண்டு பிடிக்க முடியவில்லை.
ராவுத்தரின் வீடு ஏலத்திற்கு வந்து விடுகிறது. சாமான்களைத் தூக்கி வீசுகிறானாம் அமீனா. தகவல்.  குழந்தை மாதிரி அழுகிறார். அழும்போதே கடைச் சிப்பந்தி கோலப்பன் பில்லுடன் வந்து நிற்கிறான். 13 ரூபா. 45 பைசா…45 மீட்டர்…70 சென்டிமீட்டர்…. – எழுதிக்கோ…616 ரூபா…66 பைசா…
ஐயா…வட்டியும் முதலுமா  ஐயாயிரத்துக்கு மேலே கோர்ட்டுல கட்டணும்…. அடுத்த நாள் கடைக்கு வரவில்லை ராவுத்தர்.
என்ன அநியாயம்…இப்பத்தான் அவருக்காக கோர்ட்ல பணம் கட்டிட்டு வர்றேன்…காலை வாரி விட்டாரே…நன்றி கெட்ட மனுஷன்…
கோலப்பனுக்கோ மித மிஞ்சிய கோபம்.“கணக்குப் போடத் தெரியுமே தவிர…அறிவு கெட்ட ஜென்மமில்ல அது…இதோ போய் தர தரன்னு இழுத்திட்டு வர்றேன்…”
ரொம்பப் பொல்லாத உலகம் இது…பெத்த தாயை நம்ப முடியாத காலம்… - சோர்ந்து போகிறார்.
சிறிது நேரத்தில் கோலப்பன்…சைக்கிள் கேரியரில் ராவுத்தர்.
ஐயா…புத்தி மோசம் போயிட்டேன் ஐயா…. – இரு கையையும் கூப்பிய நிலையில் ராவுத்தர்.
உம்ம கொட்டம் அடங்கிற காலம் வரும்…. - 
அப்டிச் சொல்லாதீங்கய்யா…வேலைக்கு வா…பணம் கட்டுறேன்னார் செட்டியார்…புத்தி மோசம் போயிட்டேன்…
உம்ம கொட்டம் அடங்குற காலம் வரும்… - மீண்டும் சொன்னார் அப்பா.
என்ன ஒரு அன்பின் இறுக்கம்..? ரத்தமும் சதையுமாய் உள்ளவர்களிடம்தான் சண்டை வரும்….சமரசங்கள் ஆகும்….படிக்கும் நாமோ இந்தச் சின்னச் சின்ன வரிகளை….நெருங்கி அடங்கிய சம்பாஷனைகளை….வரி வரியாய்…வார்த்தை வார்த்தையாய் உணர்ந்து நெஞ்சுருகிப் போகிறோம்..
ஆச்சரியம் நிகழ்கிறது  அடுத்தாற்போல்…உம்ம கொட்டம் அடங்கும் காலம் வரும்….வந்து விட்டதோ அந்தக் காலம்….
அந்தத் தடவை கொள்முதலுக்கு பம்பாய் சென்று வந்த அப்பா…ஒரு சிறு மிஷினை அம்மாவிடம் காட்டுகிறார். இது கணக்குப் போடுமாக்கும்…
மிஷி்னா…?
போடும்…
அம்மா கணக்குச் சொன்னாள். அப்பா பித்தான்களை அழுத்தினார். மிஷின் விடை சொல்லிற்று.
ராவுத்தர் மூளைய, மிஷினாப் பண்ணிட்டானா? – அம்மாவின் கேள்வி.
மூளையில மூணு நரம்பு அதிகப்படியா இருக்கு என்று சொன்ன ராவுத்தருக்கே அதிசயம்.
தாத்தாவை விட இது பொல்லாது… - கோமதியின் அதிசயம் இது. வெளிறிப் போகிறது ராவுத்தரின் முகம். ஆண்டனே…இதென்ன சூட்சுமம்….? விளங்கலியே….!!!-வாய் கெட்டித்துப் போகிறது ராவுத்தருக்கு.  நடைப்பிணம் போல் கடைக்கு வந்து போய்க் கொண்டிருக்கும் நாட்கள். சிரிப்பு, சந்தோஷம், கிண்டல், கேலி, குத்தல்  எல்லாமும் இருக்குமிடம் தெரியாமல் மறைந்து போயின. குரல் கம்மிப் போயிற்று. உடம்பு கூட சற்று இளைத்தாற்போல்….அப்பா அவரைப் பில் போடச் சொல்லவேயில்லையே…!
அடடா…இதென்ன சோதனை….?-ஆனால் ஒன்று…அன்று பிற்பகல் அது நடந்தது. முருகன் வெட்டியிருந்த துணிகளுக்கு நான் கணக்குச் சொல்ல…நடுவில் “இந்தாப்பா நில்லு…” – குறுக்கிட்டார் ராவுத்தர்.
பாப்ளின் என்ன விலை சொன்னே…?
மீட்டர் 15 ரூபா…10- பைசா…
தப்பு….பீஸை எடுத்துப் பாரு….16 ரூபா 10 பைசா…. – பீஸைப் பார்த்த முருகனின் முகம் தொங்கிவிட்டது.
கிழித்த துணிகளுக்கு மிஷின் கணக்குப் போடும்தான். ஆனால் எழுதிய விலையை தப்பாய்ச் சொன்னால்….? அந்தக் காசை எவன் கொடுக்கிறது….? ஐயர் நஷ்டப்படுறதா? துணில எழுதினதக் கரெக்டாச் சொல்றதுக்கும் ஒரு மூளை வேண்டாமா? என்ன ஒரு அபார ஞாபக சக்தி….?
பத்து மீட்டர் கொடுத்திருக்கே….பத்து ரூபா போயிருக்குமே….ஐயர் முதல அள்ளித் தெருவுல கொட்டவா…வந்தே…? – அதட்டுகிறார் அவனை.
உங்களுக்கு விலை தெரியுமா…? -  அப்பாவின் கேள்வி ராவுத்தரை நோக்கி….அதிசயம் அவருக்கு விலகியபாடில்லை. ஆஉறா…இப்படி ஒண்ணு இருக்கு போல்ருக்கே…இதுக்கு ராவுத்தர் இல்லாம முடியாதோ? மனுஷன் கடையவே கணக்குல வச்சிருப்பார் போலிருக்கே…!
ஒரு ஞாபகம்தான் ஐயா…. -   என்ன ஒரு அடக்கமான பதில்…. என்ன ஒரு முதலாளி பக்தி….என்ன ஒரு மரியாதை…..
எல்லாத்துக்குமா….? அப்பா திரும்பவும் கேட்கிறார்.
ஆண்டவன் சித்தம்…. – ராவுத்தரின் பதில்.
சின்ன டவல்…?
4 ரூபா. 10 பைசா….
ஆகப் பெரிசு…?
36 ரூபா…40 பைசா……   - அப்பா கேட்கக் கேட்க, விடை உடனுக்குடன்…. ஆச்சரியத்தில் விரிந்தார் அப்பா. சாதாரண மனுஷ மூளையா இது? இப்டியா எல்லாத்தையும் ஒருத்தம் மண்டைக்குள்ள ஏத்தி வச்சிருப்பான்…?
இனி பில் போடறச்சே…விலை சரியா இருக்கான்னும் பார்த்துக்கும்….சரியா….?
முடிஞ்ச வரையிலும்…. ஐயா, இன்னிக்கு மின்சாரக் கட்டணம் கட்டியாகணும்…கடைசி நாள்….
ஐயோ…கட்டலியே….கோலப்பா…..!
அவன் வரலியே…இன்னிக்கு….
உமக்கு எப்படித் தெரியும்…வரலேன்னு…?
ஒவ்வொருத்தருக்கும் ஒரு குரல் இருக்குய்யா…ஒரு மணம் இருக்கு…ரெண்டும் இல்லே இன்னிக்கு…முருகா…..!
நேத்து ஒரு வாடிக்கைக்கு ரெட்டை வேட்டி இல்லேன்னான் இவன்…கண்டியுங்க ஐயா…
என்ன சொல்றீர்…?
பத்து வேட்டிக்கு விலை  போட்டு வச்சீங்கல்ல…ஏழுதானே வித்திருக்கு…மூணு இருக்கணுமே…
தேடினால் மூணு சரியாக இருக்கிறது.
இருக்கிறத இல்லேன்னு சொல்றதுக்கா உட்கார்ந்திருக்கோம் – ராவுத்தரின் கோணல் குரல்….
இதுதான் ராவுத்தர்….கடையே அதிசயித்து வாயடைத்துப் போகிறது. அன்று மாலை அப்பா அருகில் பில் போடும் பகுதியில் ராவுத்தர். நெருங்கி விடுகிறார்.
உங்க பக்கத்துல இருந்தா இன்னும் கொஞ்சம் உபயோகமா இருப்பேன்….மின் விசிறியக் கொஞ்சம் கூட்டி வைக்கலாமே….அடியேனுக்கும் கொஞ்சம் காத்து வரும்…. – கடமை சீராக நிறைவேறும் இடத்தில் தானே கிடைக்கும் உரிமை….அந்த உரிமையின் உள்ளே பொதிந்திருக்கும் ஆழமான அன்பும் கௌரவமும்…மதிப்பும், மரியாதையும்….பண்பாட்டின் எல்கை தாண்டாத பக்குவம்…
கடை சாத்தும் நேரம்.
ஐயா…அம்மாவுக்கு மருந்து வாங்கணும்னு சொன்னீங்களே…வாங்கிட்டீங்களா….?
வாங்கறேன்….
ஐயா, தாயாருக்குத் திதி வருதுன்னு சொன்னீங்களே…முருகன் கிட்ட சொன்னா…போகுற பாதையிலே புரோகிதர்ட்ட ஒரு வார்த்தை சொல்லிடலாமில்ல….
சொல்றேன்….
கடைச்சிப்பந்திகள் ஒவ்வொருவராக நகர… கோமதி ராவுத்தரின் கைகளை எடுத்து தோளில் வைத்துக் கொண்டு நடக்கையில்…“தாத்தா…இனிமே கணக்குப் போட வரவே மாட்டீங்களா…?
ராவுத்தரின் நிலை உயர்ந்து போகிறது.
இப்ராகீம் உறசன் ராவுத்தர் இப்போது வெறும் கணக்கு மிஷின் இல்லை…மானேஜராக்கும்….
ஆண்டவன் சித்தம்…
 சபாஷ்….!!! – சொல்லத் தோன்றுகிறதா…. உங்களுக்கு….தோன்றினால்தான் நீங்கள் சிறந்த வாசகர். கலை இலக்கியங்களை ரசிப்பது என்பது என்ன சாதாரண நிகழ்வா? அதற்கு ஒரு தனிப் பயிற்சி வேண்டுமய்யா…! பழகப் பழகத்தான் அது கைகூடும்….அந்த உலகமே தனி…!
எந்தப் பணியிலுமே முழுமையான ஈடுபாடு கொண்டவனுக்கு என்றுமே எந்தக் குறைவும் ஏற்பட்டு விடாது…அது ஆண்டவனால் எழுதப்படும் கணக்கு… ராவுத்தரின் கணக்கு…“ஆண்டவன் சித்தம்”
கதையா இது….காவியமய்யா…காவியம்…!!!! எழுத்தாளர் சுந்தர ராமசாமி அவர்களின் பாதங்களுக்கு அன்பும் மரியாதையும் நிமித்தம் அனந்தகோடி நமஸ்காரங்கள்….!!!
                     ----------------------------------------------------------------------------------------------------.











29 மே 2020

எடை போடுபவன்


எடை போடுபவன்                                                         
            எங்கள் தெருவில் தினமும் காலையில், பொழுது விடிந்தவுடனேயே...அதாவது ஏழு மணியைப் போல்... அந்த நேரம் அவனைப் பொறுத்தவரை பொருந்தாத நேரம்...மற்றும் வீடுகளிலுள்ளோருக்கும் சற்றும் பொருந்தி வராத நேரம்...ஆனால் இதையெல்லாம் பொருட்படுத்தாது (அல்லது அவனின் மனதில் தோன்றவேயில்லையோ என்னவோ) நியமமாகத் தினமும் அவன் வந்து கொண்டேயிருப்பான். என் பிழைப்பு அது...என்னை என்ன செய்யச் சொல்றீங்க... என்பதாய்.
          பேப்பர்...பேப்பர்....பழையபேப்பர்...பிளாஸ்டிக்....இரும்பு......என்று விடாது கத்திக் கொண்டே வருவான். தெரு ஆரம்பத்தில் நுழைகிறான் என்றால் தெருக் கடைசியில் இருக்கும் எங்கள் வீட்டுக்குள் கேட்கும் அந்தச் சத்தம். அவன் வருகையை வைத்து நேரம் குறித்துக் கொள்ளலாம். எனக்குத் தெரிய அந்த நேரத்தில் அவனிடம் யாரும் பழைய பேப்பர் எடுத்துப் போட்டதாய்த் தெரியவில்லை. அப்படி உண்டென்றால் அவன் அத்தனை சீக்கிரம் தெருக் கடைசியை அடைந்திருக்க முடியாது.
காலை நேரத்தில் எல்லோரும் வீட்டு வேலைகளில் கவனமாய் இருப்பார்களே...பழைய பேப்பர், சாமான்களை ஒழிப்பதிலா கருத்தைச் செலுத்துவார்கள்? இது அவனுக்குத் தெரியாதா? இந்த நேரத்தில் போனால் வியாபாரம் போணியாகாது என்பதை உணர வேண்டாமா?
          பெரும்பாலும் சனி, ஞாயிறு விடுமுறை நாட்களைத்தான் வீட்டிலுள்ளோர் இந்தப் பணிக்காகத் தேர்ந்தெடுப்பார்கள். அதுவும் கூடக் கடந்து போய்விடக்கூடும். இனி இடமில்லை என்கிற நிலையில் அடைத்து அடைத்து வைத்து, அவர்களுக்கே பொறுமை கழன்று என்றேனும் ஒருநாள் திடீரென்று இந்தக் குரல் கேட்டு விழிப்புற்று தூக்கிக் கொடுத்து இடத்தைக் காலி செய்து விடுவதும் உண்டு.
         பேப்பர்...பேப்பர்....பழைய சாமான்...இரும்பு....பழைய துணி....பால் பை....என்று இடைவிடாது கத்திக் கொண்டே வருவான். காது கிழிவது போலிருக்கும் அவன் சத்தம். ஆனாலும் பிழைப்பைப் பார்த்தாக வேண்டுமே....அவன் பாடு அவனுக்கு.
        ஏங்க...இந்த நேரத்துல வர்றீகளே...வீட்டு வேலைய விட்டிட்டு இந்தக் காலை நேரத்துல யாராவது பழைய பேப்பர எடுத்துப் போட்டிட்டிருப்பாங்களா...? ஒரு பதினோரு மணி...மதியம் ரெண்டு மணிக்கு மேலேன்னு வந்தீங்கன்னா....உங்களுக்கு லாபமா இருக்கும்....இப்ப யாரும் போட மாட்டாங்களே...?
அவன் கேட்டதேயில்லை. அந்தத் தெருவில் நுழைந்து மீண்டால்தான் ராசியோ என்னவோ...? வேறு சிலரும் வரத்தான் செய்கிறார்கள். வேறு நேரத்தில்....அந்த நுட்பம் இவனுக்கு மட்டும் தெரிவதில்லை. எடை போடுபவனுக்கு வீட்டு வாசிகளின் மனங்களை எடை போடத் தெரிய வேண்டாமா?
         சார்...பேப்பர்...பழைய பேப்பர் இருக்குங்களா....உடைஞ்ச ப்ளாஸ்டிக் சாமான்...இரும்பு..... - என்னிடமும் கேட்டிருக்கிறான். தலை தெரிந்தால் கேட்டு விடுவான். உண்மையைச் சொல்கிறேன்...நான் ஒரு நாள் கூட அவனிடம் போட்டதில்லை.
        சார் நம்பகிட்டப் போட்டு ரொம்ப நாளாச்சு.... - என்பான் . என்றோ இவனிடம் போட்டிருப்போமோ...என்று யோசிப்பேன் . இப்படிச் சொல்வது அவன் பண்பாடு போலும்....
        கடையில் ஒரு சாமான் வாங்கச் சென்றால், அது இல்லையென்றால்....இல்லைஎன்ற வார்த்தையைச் சொல்ல மாட்டார்கள்....தீர்ந்திருச்சு என்று கூடச் சொல்வதைக் கேட்க முடியாது. வரணும் சார்...என்பார்கள்...இல்லையென்றால் சாயங்காலம் வாங்க சார் என்பார்கள்....ஆர்டர் போட்டிருக்கு என்று சொல்வதும் உண்டு....ஆனால் தங்கள் கடையில் ஒருவர் கேட்கும் பொருள் இல்லை என்று யாரும் சொல்வதில்லை. அது ஒரு வகைப் பண்பாடு....வியாபாரம் பெருக வேண்டும் நிலைக்க வேண்டும் என்று நல்ல வகையில் மட்டுமே நினைக்கத் தெரிந்தவர்கள். அப்படித்தானே விரும்ப முடியும்.
        அதுபோல....அவன்ரொம்ப நாளாச்சுஎன்றுதான் சொல்கிறான். என்னிடம் போட்டதேயில்லை என்று ஒரு முறை கூடச் சொன்னதில்லை. இந்த உலகத்தில் எவரிடமிருந்தும் நாம் எதையும் கற்றுக் கொள்ள முடியும். எங்கேனும் ஒரு சின்ன ஸ்பார்க் நமக்குக் கிடைத்துக் கொண்டேயிருக்கும்.
       அவனுக்கு நான் ஒரு வழி செய்தேன். என்னாலான உதவி.... மனதோடு செய்த அது அவனுக்குப் பெருகியது....இன்று அவன் இந்த வியாபாரத்தில் பெரிய கில்லாடி.
        அது எனக்கு ஒரு கதையானது. “முதல் போணி
Image may contain: one or more people
Image may contain: one or more people



  சிறுகதை                 “பாதிப்பு” - ”சிற்றுளி” கலை இலக்கிய இதழ், அக்டோபர் 2024 முதல் டிசம்பர் 2024 வரை             வி த்யாபதி அந்தத் தெ...