29 ஏப்ரல் 2020

பூமணியின் ”விடுதலை” – சிறுகதை வாசிப்பனுபவம் –உஷாதீபன் -----------------------------

பூமணியின் ”விடுதலை” – சிறுகதை வாசிப்பனுபவம் –உஷாதீபன்                                           ----------------------------------------------------------------------------------------------------------------------------------------------


       காக்காயை அடிப்பதுதான் கதை. காரணம் அது படுத்தும் பாடு. கோழிக்குஞ்சைக் கொத்திக் கொண்டு போய் காயப்படுத்தி வீசி விடுகிறது. பறித்து, உரித்து வைத்திருக்கும் கடலையைக் கொத்திக் கொத்தி சிதைத்து விடுகிறது. தானியந் தவசம் காயப் போட்டிருந்தால் சிதறடித்து விடுகிறது. ஆர்ப்பாட்டம் தாங்க முடியவில்லை. ஒராள் எந்நேரமும் காவலுக்கு நிற்க முடியுமா?  எப்போதடா, எதுடா கிடைக்கும் என்று கொல்லைப் புறத்திலேயே அலைகிறது.அதனிடமிருந்து பாதுகாப்பதே பெரும்பாடாய்ப் போகிறது. அதைக் கண்டாலே அவருக்கு எரிச்சல்.
       வக்காளி…இதவும்போயி ஒரு உசுப்பிராணின்னு படச்சிருக்கான் பாரு..மூஞ்சியும் மொகறையும்…என்னா தோரிணியெல்லாம் பண்ணுது…?
       இதுதான் கதை என்றாலும் அதைச் சொல்லும் விதம் அதற்குரிய கரிசல் பாஷையிலேயே வெளிப்படுத்தும்போது, அது அதற்கான பேசு மொழிகள் வழி சொல்லும் போது, அந்தந்த பொருத்தமான வார்த்தைகள் அந்தந்த வட்டார வழக்குகளில் பதிவு பெறும்போது, இன்னின்ன பொருள்தான் என்று சற்றுக் கடினப்பட்டு உணர்ந்து கொண்டாலும் அதை அப்படிச் சொன்னால்தான் அழகு பெறும் என்பதை அதுநாள்வரையிலான வாசிப்பனுபவத்தில் உணருகையில், எழுதுபவரோடு சேர்ந்து நாமும் சந்தோஷமாய்ப் பயணிக்கத்தான் வேண்டியிருக்கிறது.
       தோப்பில் முகமது மீரான் அவர்களின் படைப்புக்களைப் படிக்கும்போதும் இம்மாதிரி உணர்ந்திருக்கிறேன் நான். என்ன பொருளை உள்ளடக்கி இந்த வார்த்தை என்று உணர, திரும்பத் திரும்பவும், அதே வார்த்தை வேறுவேறு இடங்களில் பயன்படுத்தப்பட்டிருக்கும் விதங்களில் இருந்தும் அறிந்து கொள்ள முயன்றிருக்கிறேன்.
       இந்தச் சிறு – கதையில் பூமணி அந்த அனுபவத்தை நமக்குத் தருகிறார்.
       உசுப்பிராணி -  தோரிணி – இணுக்கிணுக்காக – உழத்தும்போது – இம்மாதிரிப் பல வார்த்தைகள்.
       கதையை ரசிப்பதை விட, அதை எழுதியிருக்கும் வட்டார மொழி வகை மிகுந்த ரசனைக் குரியது. அங்கங்கே விரியும் வார்த்தைகள் நம்மை நின்று நின்று அர்த்தம் உணர்ந்து நகரச் செய்கின்றன.
       முதலில் தொந்தரவு செய்வது ஒரு ப்ராந்துதான். நம் உணவுக்கு இது பங்குக்கு வருகிறதே என்று காக்கைக் கூட்டமே அதை விரட்டி விரட்டி ஒரு எல்கைக்கு மேல் கொண்டு விட்டு விட்டுத் திரும்புகின்றன. அத்தோடு ப்ராந்து தொல்லை ஒழிந்தது என்று நிம்மதியடைய…இப்போது இதுவேயல்லவா பெருந் தொல்லையாகிப் போனது?
       இணுக்கிணுக்காய்ப் பிய்த்தெறியணும் போல ஒரு வெறி. மரக்கொப்பில் அமர்ந்து கொண்டு ஒரு கள்ளப் பார்வை. பறக்கப்போவது போல் ஒரு பம்மல். காலிடுக்கிலிருக்கும் கறித்துண்டில் ஒரு கொத்து. எலும்பில் ஒட்டியிருக்கும் கறியை பிரயாசைப்பட்டு இழுத்துக் கிழிக்கையில் துண்டு நழுவிக் கீழே விழ, மெல்ல இறங்கி தத்திப்போய் துண்டுக்கு அண்டம் போடுகிறது.
       ஒண்ணொண்ண சொட்டையில் அடிச்சாத்தான் சனங்க பயமில்லாம தானியந் தவசம் போட முடியும்…நடுச்சந்தி வேம்பில் பெரிய கூடு. தெருவில் சிந்திச் சிதறும் தானியத்தைப் பொறுக்கும் கோழிக் குஞ்சுகளை பிராந்துக்குப் பறிகொடுக்கும் கோழியின் ஏக்கக் கெக்கரிப்பு. எதையும் கண்டு கொள்ளாமல் கூட்டுக்குள் செத்தைப் பொதிவில் சுகமாய்ப் படுத்திருக்கும் காக்கை.
       ஒரு இளவட்டம் விறுவிறுவென்று ஏறிப்பார்க்க…எலே….விடுறா..அதுபாட்டுக்கு இருந்திட்டுப் போகட்டும்…பிராந்த விரட்ட அதுதான் ஒதவும். முட்டைக கெடக்குதா பாரு…
       ரெண்டு குஞ்சிதான் கெடக்குது…புட்டாணி கூடத் தெறிக்கல…. குஞ்சைப் பார்த்த ப்ராந்து குறிவைக்க… காக்கா அத்தனையும் சேர்ந்து காச்சாம்பூச்சாமென்னு மேலக்கம்மா வரிசைப்பனைவரைக்கும் விரட்டிவிட்டுத்தானே ஓய்ந்தன?
       கோயில் கிணற்றோரம் கொடுக்காப்புளி மரத்தில் கொடைக்குப்பியாய்ப் பழங்கள். தாவாரத்திலிருந்து பார்க்கையில் காக்காய்களின் பழப்பிடுங்கல் தெளிவாகத் தெரிகிறது. முற்றத்தில் குருதவாலிப் புழுங்கலைக் காயப்போட, வீட்டுக்குள் போய் ஒரு போகணித் தண்ணீர் குடித்துத் திரும்புவதற்குள் கூரை முகட்டிலிருந்து அவசரமாய் இறங்கி ஏழெட்டு வாய் கொத்தித் தின்று விட்டதே…! இத ஒழிக்க என்னதான் வழி…? பிசாசு…..
       பழுதில்லாமல் ஏழு குஞ்சு. தாய்க் கோழி அருகிலேயே பழி கிடக்கிறது. பொடிசு எதுவோ பஞ்சாரத்தைத் திறந்து விட, முற்றத்துக்கு வந்து விட்டன. மாட்டுக்கு முக்குறுணிக் கயிறு திரித்துக் கொண்டிருந்த இவர் அதைக் கவனிக்கவில்லை. ஆனால் எங்கிருந்தோ காக்காய் கவனித்திருக்கிறது. ஒரு குஞ்சைச் சடக்கென்று தூக்கிக்கொண்டு பறக்க, அது கிய்யா…கிய்யா…என்று ஓலம். பாத்திகட்டுக்காரன் ஒருத்தன் கல்லெடுத்து வீச, கீழே போட்டுவிட்டது. அரைகுறை உயிருடன் பனைத்தூரில் அந்தக் குஞ்சு. என்ன அநியாயம்…என்ன ஆர்ப்பாட்டம்…இது தொல்லை தாங்கவே முடியவில்லையே…!
       களவாணிக் கழுத…இதுக்கு எப்படியும் ஒரு வழி செஞ்சாகணும்….அன்னைக்கு ஒரு நரிக்கொறவன் இந்த மரத்துலதான் வில்லுவச்சு ஒரு குடுப்புக் குடுத்தான். சொத்னு செத்து விழுந்துச்சு அண்டங்காக்கா. அப்டித்தான் செய்யணும் இதுக்கு.
       வீட்டில்தான் என்றில்லை. காட்டிலும் இதன் தொல்லை நீள்கிறது. ஒரு நாள் ஆசைப்பட்டு பாசிப்பயறுத் துவையலைக் கலயத்தில் அப்பி வைத்திருந்தார். அதைப் படுத்தியிருந்த பாடு இருக்கிறதே…! கேப்பைக்களி உருண்டையை உருட்டி விட்டு, கொத்தி வைத்திருந்ததே…! மத்தியானம் என்ன பசி…! கழுவியல்லவா உள்ளே தள்ளும்படியாகிவிட்டது.
       ஒழிச்சிட்டே மறுவேல……
       கீழக் கரிசலில் பருத்தி விதைப்பு. பருத்திக்கு ஊடே நிலக்கடலை போட்டால் கொஞ்சம் துட்டு.
       உழவுக்குப் பின்னால் அவர் சம்சாரமும், இன்னொரு பொம்பளையும் சால்பருப்புப் போட, ஒரே காக்காய் கும்பல். வரிசை பிடித்து இறங்கி பொறுக்க ஆரம்பித்து விட்டன.
செத்த நேரம் உழுங்கப்பா…இதோ வந்துடறேன்… - சொல்லிவிட்டு வீடுவரை நடையைக் கட்டினார்.
காக்காயப் பத்திட்டிருங்க…திங்க விட்ராதீங்க….முழுக்க அழிச்சிப்பிடும்…
திரும்பி வரும்போது கையில் சிறு வெண்டை மருந்து டப்பா. ஒரு உடைந்த ஓடு. கடலப் பருப்பை ஒரு சிரங்கைக்கு அள்ளி ஓட்டிபோட்டு, மருந்தை அதில் ஊற்றிக் கலக்கி ஊற வைத்தார். உழவு மண்ணை ஓடு தெரியாமல் பரத்தினார.
நாலஞ்சு காக்காய்கள் ஓட்டை மொய்த்தன. ஓரே வீச்சில் காலியாக்கி விட்டுப் பறந்தன. நா வறட்சியில் தண்ணீர் தேடி கிணறுகளற்ற கரிசலில் அலைமோதின. ஒண்ணு மட்டும் பறக்க முடியாமல் கொணங்கி சுருண்டு விழுந்தது. ஓடிப்போய் ஆவலாய்க் கையில் எடுத்தார். வாயை அகலமாக்கி, பிடிக்கும்மட்டும் மண்ணள்ளிச் செலுத்திக் கிட்டித்தார். கோவணத்துணியின் ஓரத்தில் கயிறு கிழித்தார்.காக்காயின் காலிரண்டையும் விளார் நுனியில் கட்டினார். புஞ்சை மூலையில் செண்டா நட்டுவிட்டு ஓரமாய் ஒதுங்கிக் கொண்டார். சுற்றிலும் காக்காய்க் கூட்டம். ஒரே கூச்சல். பய பீதியில் சிதறியோடின.
மற்றவர்களைப் பார்த்து ஒரு வெற்றிச் சிரிப்பு. அவர்களும் சிரித்தார்கள்.இப்போது நிலத்தில காளைகளின் கழுத்து மணி ஓசையைத் தவிர வேறெதுவுமில்லை. உழவுச் சாலில் வரிசையாகக் கிடந்த நிலக்கடலைப் பருப்புகள் வெயிலில் மின்னின. அடுத்த மடக்குல ஒழவப் பிடிப்பா….. – சொல்லிவிட்டு கம்பீரமாய் நடந்தார்.
       கதை முடிந்ததும் ஒரு கிராமத்து  அனுபவம் கிட்டுகிறது நமக்கு.
நெல் வயல்களே பார்க்காத தலைமுறை இப்போது. பள்ளிகளில் எக்ஸ்கர்ஷன் என்று சொல்லி அருகருகிலே கூட்டிக்கொண்டு போய் காண்பிக்கிறார்கள். அவர்களுக்குஇந்த அனுபவங்களையெல்லாம் சொன்னால் எந்த அளவுக்கு ரசிக்குமோ…!  கிராமங்களில் இருந்து வளர்ந்து, படித்து நகர்புறங்களில் குடியேறியவர்களுக்கு இவையெல்லாம் இழந்து போன கனவுகள். இருந்து அனுபவித்தவர்களுக்கு இனிய நினைவுகள்.
பறவைகளிடமிருந்து விளைச்சலை, தானியங்களைக் காப்பாற்றுதல் என்பதான அனுபவம் கிராமத்து மண்ணில் இருந்து பார்த்தவர்களுக்குத்தான் அருமை புரியும். நாம் அந்த அனுபவத்தை பூமணியின் கரிசல் மண்ணோடு கலந்த உயிரோட்டமான எழுத்து அனுபவத்தின் மூலம் அடைகிறோம். இந்த “விடுதலை” ஒரு ஏழை விவசாயிக்குக் கிடைத்த மகத்தான விடுதலையாகத் தோன்றி நம்மையும் திருப்தி கொள்ள வைக்கிறது.
                           -----------------------------------------------

      
      
      

      


கருத்துகள் இல்லை:

  சிறுகதை                 “பாதிப்பு” - ”சிற்றுளி” கலை இலக்கிய இதழ், அக்டோபர் 2024 முதல் டிசம்பர் 2024 வரை             வி த்யாபதி அந்தத் தெ...