கனவுக்கதை” சார்வாகன்-சிறுகதை
-----------------------------------------------------
வாசிப்பனுபவம்-உஷாதீபன்
---------------------------------------------------------------------------------- 1971-ம் ஆண்டின், இலக்கியச் சிந்தனை அமைப்பின் ஆண்டின் சிறந்த சிறுகதையாக சார்வாகனின் “கனவுக்கதை” திரு.சுந்தரராமசாமி அவர்களால் தேர்வு செய்யப்பட்டது. திரு சார்வாகன் தொழுநோய் மருத்துவத் துறையில் நீண்டகாலம் பணியாற்றியவர். உலகப்புகழ் பெற்ற அறுவை சிகிச்சை நிபுணர். தீபம், கணையாழி, தாமரை போன்ற இலக்கிய இதழ்களில் இவரது கதைகள் வந்துள்ளன. இவரது துறை நிமித்தப் பணியில் சிறந்த சேவைக்கான பத்மஸ்ரீ விருது பெற்றவர். எழுத்தாளரும் இலக்கியச் செயல்பாட்டாளருமான திரு பாரவி அவர்களின் “தளம்” காலாண்டிதழ், திரு சார்வாகனுக்காக, அவரது மறைவையொட்டி அற்புதமான நினைவுச் சிறப்பிதழ் ஒன்றை வெளியிட்டுப் பெருமைப்படுத்தியது.
இவரது படைப்புக்கள் வெளிவந்த காலத்திலேயே வீர்யமிக்க படைப்பாளியாகவும், தனித்துவமிக்கவராகவும் அடையாளம் காணப்பட்டவர்.
கனவுக்கதை என்ற இவரது இந்தப் படைப்பு எந்த அடிப்படையில் இம்மாதிரியான ஒரு தலைப்பைச் சுமந்து நிற்கிறது என்கிற கேள்வியை எழுப்புகிறது. இன்னின்ன காரணங்களினால்தான் என்பதாகச் சிலவற்றை ஊகம் செய்யவும் முடிகிறது. இப்படியாகவும் கொள்ளலாம் என்பதாகவும் இன்னும் சிலவற்றைப் பலர் ஊகிக்க முடியும் என்பது என் துணிபு.
இந்த உலகில் ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு கனவு அவர்களின் மனதுக்குள் குடி கொண்டிருக்கும். அது அவரவரின் தொழில் சார்ந்து, வாழ்வியல் சார்ந்து, இருக்கும் சூழல் சார்ந்து அமையலாம். அந்தக் கனவின் மூலமாக மற்றவரை மகிழ்ச்சிப் படுத்துவதும், தன்னைத்தானே மகிழ்ச்சிப்படுத்திக் கொள்வதும், உற்சாகமாக்கிக் கொள்வதும், மேலும் முனைப்புடன் செயல்பட உந்திக் கொள்வதுமான செயலாக அமையலாம்.
நேஷனல் ஸ்டோர் வைத்திருக்கும் நடேசனுக்குக் கூட அப்படியான கனவுகள் இருந்து கொண்டிருக்கின்றன. ரொம்பவும் நிதானமான வியாபாரம் கொண்ட சாவகாசமான கடை அவனுடையது. அங்கே பரபரப்பு என்ற பேச்சுக்கே இடம் இருப்பதில்லை. அவ்வப்போது ஒவ்வொருவர் அவன் கடையில் பொருட்கள் வாங்கத் தென்படுவர் என்பது என்னவோ உண்மைதான். ஆனால் ஒரே சமயத்தில் பலர் கூடி இருந்து, அல்லது ஒருவருக்கொருவர் இடித்துக் கொண்டு எனக்கு, உனக்கு என்று கத்திக் கேட்டுக்கொண்டு அவன் கடையில் எப்போதும் கூட்டமாக வியாபாரம் நடப்பதில்லை.
ஆனால் அவனுக்குள் ஒரு கனவு இருக்கிறது. ஒரே சமயத்தில் பலர் வந்து நின்று கேட்டு, தன்னால் அவர்களைச் சமாளிக்க முடியாமல் போனால் என்ன செய்வது…அப்படியான கூட்டத்தை தனியொருவனாய் எப்படி எதிர் கொள்வது….அப்படியொரு சந்தர்ப்பத்தில் அவரவர் கேட்கின்ற பொருட்களைத் தாமதமின்றி, தடங்கலின்றி வழங்கி, வாடிக்கையாளர்களின் விருப்பத்தை அதிருப்தியின்றி எப்படிப் பூர்த்தி செய்வது…..என்றெல்லாம் தன் கடை குறித்து, அதன் வாடிக்கையாளர்கள் குறித்து பெருமிதத்தோடு யோசித்து வைத்திருக்கும் நடேசன், அதீதமான ஒரு சூழலில் குறை ஏதும் வந்து விடக் கூடாது என்று முன்னெச்சரிக்கையாக ஒரு வழி செய்கிறான். தான் உண்டு, தன் கடையுண்டு என்று கழிக்கும் அவன் பொழுதுகள் இம்மாதிரியான புதுமைக் கனவுகளிலேயே நகர்கின்றன. அதன் மூலம் தன்னை எப்போதும் முனைப்பான ஒருவனாக வைத்துக் கொள்கிறான் அவன்.
நான், சிவப்பிரகாசம், ரெங்கன் ஆகியோர் நடேசனின் கடையை அணுகியபோது அவன் முகத்தில் குறும்பு தெறித்துக் கொண்டிருந்தது வாங்க…வாங்க….என்று வரவேற்கும் நடேசன், குனிந்து மேசைக்கடியிலிருந்து ஒரு பொருளை எடுத்துக் காண்பித்து இது என்ன சொல்லுங்க பார்ப்போம் என்கிறான். அதற்குள் அதைக் கையில் ரெங்கன் எடுத்துப் பார்க்க, வெறும் தராசு என்று நினைத்த அது, சாதாரணத் தராசல்ல என்று தோன்றுகிறது. என்னவோ ஒரு விசேஷம் அதில்…!
இது என்னன்னு சொல்லிட்டா ஆளுக்கு ரெண்டு ஸ்வீட் தர்றேன்…என்று மீண்டும் பெருமிதப் புன்னகையோடு கூறுகிறான் நடேசன். அது ஒரு பக்கம் ஒரு தட்டும் மறு பக்கம் ஒன்றன் கீழ் ஒன்றாக மூன்று தட்டுகளும் இருக்க, தராசு புதிய அமைப்போடு இருப்பதைக் கண்டு அதற்கு என்ன பெயர் சொல்வது என்பது தெரியாமல் ரெங்கனைத் தவிர மற்ற இருவரும் தோற்றதுபோல் இருந்து விட, ரெங்கனும் ஏதாவது சொல்லியே ஆக வேண்டும் என்று யோசித்துக் கொண்டிருக்க….கடைசியாக நடேசன் கூறுகிறான்.
பரவால்ல…பரவால்ல…தெரிலேன்னா பரவாயில்ல…. இத எடுத்துக்குங்க….என்று பெப்பர்மிட்டுப் பாக்கெட்டுக்குள் கையை விட்டு மிட்டாய்களை அள்ளி அவர்களிடம் நீட்டுகிறான். நானும் ரெங்கனும் எடுத்துக் கொள்ள, சிவப்பிரகாசம் வேண்டாம் என்று மறுத்துவிடுகிறான். சிவப்பிரகாசம் எதிலும் ஒரு ஒழுங்கை அல்லது சுயகௌரவத்தைக் கடைப்பிடிப்பவன் என்பதற்கடையாளமாய் நடேசனின் கடைக்குள் நுழைவதற்கு முன் வெளியே எச்சிலைத் துப்பி விட்டு அவன் நுழைவதை எடுத்துரைக்கிறார் ஆசிரியர். கடைக்குள் துப்பினால் நடேசனுக்குப் பிடிக்காது என்கிற கடைக்காரனின் ஒழுங்கு.
சாதாரணமாய் மனிதர்களுக்கு எதுவும் சுலபமாய்க் கிடைப்பதில் அல்லது இலவசமாய்க் கிடைக்குமென்றால் அதில் ஒரு அசாதாரண சந்தோஷம். அதுவும் வலியத் தேடி வருகிறதென்றால் எதற்காக விட வேண்டும் என்கிற மனப்பான்மை. இந்தமாதிரி எளிய மனப்பான்மை என்பது மனிதர்களுக்குள் எந்த வித்தியாசமுமின்றி அதாவது ஏற்ற இறக்கமின்றி, உயர்வு தாழ்வின்றி, மத மாச்சர்யமின்றி பரவிக் கிடக்கும் பொதுவான ஒரு குணாதிசயம். அங்கே தருபவன், பெறுபவன் என்பதான உயர்வு தாழ்வு வித்தியாசமின்றி கிடைப்பதை சுலபமாய் அடைந்து அப்போதைக்கு அந்த மகிழ்ச்சியைக் கொண்டாடித் தீர்ப்பதே சிறப்பு. இது மனித குணாதிசயங்களுக்குள் பரவிக் கிடக்கும் மனப்பாங்கு.
ஒரே சமயத்துல மூணு பேர் வந்து ஒரே சாமானக் கேட்கிறாங்கன்னு வச்சிக்குங்க…ஒவ்வொருத்தருக்கும் தனித்தனியே நிறுத்துக் கொடுத்திட்டிருக்க முடியுமா….? அதுக்காக ஒரே முறைல நிறுத்து, நேரத்தையும், சக்தியையும் மிச்சப்படுத்துறதுக்காகத்தான் இந்த சாதனத்தை இப்படி அமைச்சது….எப்டி நம்ம யோசனை… என்று மூன்று தட்டு வைத்துள்ள தராசுபற்றி விளக்கமளிக்கிறான் நடேசன்.
இவர்கள் மனதுக்குள் எண்ணிக் கொள்கிறார்கள். அப்படி ஒரே சமயத்தில் பலரை, ஏன் வெறும் மூவரைக் கூட நடேசன் கடையில் ஒரு முறை கூடப் பார்த்ததில்லையே என்று. இருந்தாலும் இந்த சுய யோசனைக்காக அவன் பெருமைப் பட்டுக் கொள்வதும், அதைக் கொண்டாடும் நிமித்தம் அவர்களுக்கு இனிப்பு வழங்கியதும்….இவர்களை எண்ண வைத்து, அவனது அந்த உற்சாகத்தைக் கெடுப்பானேன் என்று வாளாவிருக்க வைத்து விடுகிறது.
அந்த சமயம் பார்த்துத்தான் அந்த சாமியார் அங்கு ஓடி வருகிறான். சாமியார் என்றால் முற்றும் துறந்த அப்படியான ஒருவன் அல்ல. சாமியார் போன்ற சாமியார். நீண்டு வளர்ந்து கிடக்கும் முடிக் கற்றைகளோடு, ஒரு நாலு முழ வேட்டியின் தட்டுச் சுற்றோடு நெற்றியில் பெரிய குங்குமப் பொட்டு மிளிர, கண்களில் கனன்ற பொறி பறக்க ஓடி வரும் அவன், ஒரு கிலோ பெப்பர்மிட்டுக் கொடுங்க…என்று கேட்கிறான். ஒரு கிலோ அஞ்சு ரூபா என்று நடேசன் சொல்ல…இடுப்பில் எட்டாய் மடித்து வைத்திருந்த அழுக்கேறிய அந்த நோட்டை அவன் எடுத்து நீட்ட, நடேசன் உற்சாகமாய் மிட்டாயை நிறுத்து பொட்டணம் கட்டப் போக….ம்ம்ம்…அதெல்லாம் வேண்டாம்…அப்டியே கொடுங்க…என்று காகிதத்தில் வைத்துக் கொடுக்கும் பெப்பர்மிட்டுக்களோடு மணிக்கூண்டின் பக்கமாய் ஓடுகிறான் அவன். மக்களை எப்படியான செயல் மூலம் ஒருங்கிணைக்க முடியும் என்கிற மனோதத்துவம் அறிந்த விவரமான சாமியாராக அவன் செயல்.
எந்தக் கவனத்தையும் கலைக்க, சற்றே வித்தியாசமாய் நடுத்தெருவில் ஒருவன் ஏதாவது செய்வானாகில் மொத்த ஜனத்தின் கவனமும் அவன் பக்கம் போய்விடும் என்பதற்கடையாளமாய் அந்தப் பகுதியின் அத்தனை பேர் கவனமும் அவன் பக்கம் திரும்பி நகர்ந்து நெருங்க….விளக்கு வைக்கும் அந்த நேரத்தில் ஆரவாரத்தோடு கலகலக்கும் அந்த கூட்டத் தினருக்கு மிட்டாய்களை எடுத்து வழங்குகிறான். இதை வேடிக்கை பார்த்த இவர்கள் மூவரும், கூட்டம் இடித்துத் தள்ளத் தள்ள கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வந்து விடுகிறார்கள். ஊர்வாசிகள் என்ன பெப்பர்மிட்டே பார்த்ததில்லையா அல்லது இதற்கு முன் சாப்பிட்டதேயில்லையா….அதெல்லாம் கேட்கக் கூடாது….இலவசமாய்க் கிடைக்கிறதே….ஓசியாய் ஒருவன் தரும்போது அதைப் பெறுவதற்கு என்ன வலிக்கிறதா….பெப்பர்மிட்டு வாங்க என்ன குழந்தைகள்தான் இடித்துப் பிடிக்க வேண்டுமா…பெரியவர்கள் செய்தால் ஆகாதா….அப்படியெல்லாமா விவஸ்தையோடு செயல்பட முடியும்? அவ்வப்போதைய மகிழ்ச்சிக்கு நமக்கு நாமே தடை போட்டுக் கொள்வதா என்ன? வர்றத அனுபவிச்சிட்டுப் போறதுதானே புத்திசாலித்தனம்…! சாதாரண உயிர்களின் எளிய சிந்தனை.
வெள்ளைச் சட்டைக்காரர்கள், கம்பிக்கரை வேட்டிக்காரர்கள், சட்டையேயின்றிச் சாயவேட்டி கட்டினவர்கள், டெரிலின் பனியன்கள், மணிக்கட்டில் கடியாரம் கட்டினவர்கள், கயிறு கட்டினவர்கள், வெள்ளிக் காப்பு போட்டவர்கள், நரை மீசைகள், வழுக்கைத் தலைகள், முறுக்கு விற்றுக் கொண்டிருந்த பல்லேயில்லாத கிழவி, அவள் பேரன், பளபள ரவிக்கையுடன் பஜாருக்கு வந்திருந்த கைக்குழந்தைக்காரி, குருவிக்காரிகள், பெட்டிக்கடையில் பீடி,சிகரெட், பழம், புகையிலை, சோடா கலர் வாங்க வந்தவர்கள், இவர்கள் கால்களுக்கிடையே புகுந்து, நுழைந்து, குனிந்து வளைந்து ஓடின நிர்வாணச் சிறுவர் சிறுமியர்…அடேயப்பா…கண்ணை மூடித் திறப்பதற்குள் கூட்டம் எப்படி அலை மோதுகிறது?…..
யாரும் சத்தம் போடக் கூடாது…எல்லாருக்கும் உண்டு….எங்கே எல்லாரும் சேர்ந்து மணிக் கூண்டு பெருமாளுக்கு ஒரு பெரிய நமஸ்காரம் போடுங்க….என்று கூற, சடசடவெனக் கூட்டம் கீழ் நோக்கி விழுந்து வணங்கச் சாய்கிறது….பின்கால்களில் முன் தலை இடிக்க….பின்னாலிருப்பவன் மேலேயே காலை வைத்தும், இடித்தும் பிடித்தும்…சீட்டுக்கட்டு மாதிரிச் சாய்கிறது கூட்டம்.
ஓசி மிட்டாய்க்கு என்ன கௌரவம் பார்த்தது கூட்டம்? நாய், பன்றி, மாடு, குதிரைச் சாணம்….எச்சில் மூத்திரக் கறை, வாழைப்பழத்தோல், பீடி, சிகரெட் துண்டுகள் சிதறல், தெருப்புழுதி, மல்லாக்கொட்டைத் தோல், எண்ணற்ற காலடித் தடங்கள்….ஆண் பெண் – சின்னவன் பெரியவன் – காளை கிழவன் வித்தியாசமின்றி எல்லோரும் சம தருமமாய், சாஷ்டாங்கமாய்
உறரிஓம்…..என்று கத்திக் கொண்டே அந்தச் சாமியாரல்லாத சாமியார் கூட்டத்தை நோக்கி அந்தப் பெப்பர்மிட்டுக் காகிதத்தை உதறுகிறான். ஜனக் கூட்டத்தின் மேல் மிட்டாய் மழை…..ஜனக்கூட்டம் சில்வண்டுகள் போல் தரையைத் துளைத் தெடுக்கிறது மிட்டாய்களுக்காக. சிறுவர், பெரியவர், ஆண் பெண், இந்து கிறித்துவன் முஸ்லிம் நாத்திகன், ஆத்திகன் குமரி, குமரன், கிழவன், கிழவி…எந்த வித்தியாசமுமின்றி கூட்டம் முட்டி மோதுகிறது.
சாமியாரைக் காணோம்….மிட்டாய்க் காகிதத்தை விசிறியவுடன் ஆள் ஓடியிருக்க வேண்டும். ஐந்து நிமிட இடைவெளியில் சேர்ந்ததுபோலவே கரைந்தும் விட்டது.
நாங்கள் நேஷனல் ஸ்டோருக்குத் திரும்பினோம். நடேசன் எங்களைப் பார்த்துச் சிரித்தான்.
பார்த்தீங்களா…பைத்தியம் போல இருக்குதில்ல…ஆனா அதால யாருக்கும் நஷ்டமில்லே….என்கிறான். நாங்கள் அவனைப் பார்த்து ஆமாம்…ஆமாம் என்றோம்….இப்போது சிவப்பிரகாசம் எச்சில் துப்ப கடைக்கு வெளியே போனான். கனவுக் கதை இத்தோடு முடிகிறது. சார்வாகனின் இந்தப் படைப்பைப் பற்றி மேற்கொண்டு என்னவாக இருக்கலாம் என்பதாக நம் சிந்தனை தொடர்ந்துகொண்டேயிருக்கிறது.
க்ரியா வெளியீடான “எதுக்குச் சொல்றேன்னா” என்ற இந்தச் சிறுகதைத் தொகுப்பின் கதைகளையும் சேர்த்து, சார்வாகனின் மிகச் சிறந்த படைப்பான“அமர பண்டிதர்” என்ற படைப்பைத் தலைப்பாகக் கொண்டு காலச்சுவடு ஒரு புதிய தொகுதியை வெளியிட்டிருக்கிறது.
சார்வாகன் எழுதிக் கொண்டிருந்த காலத்தில் வேறு எந்த எழுத்தாளரோடும் ஒப்பிட முடியாத வகையில் தனிச் சிறப்போடு படைப்புகளை வழங்கியிருக்கிறார் என்பதே இலக்கிய உலகில் இவர் தன்னை நிலை நிறுத்திக் கொண்டதற்கான அடையாளம்.
-----------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக