22 பிப்ரவரி 2020

“ரெஜிஸ்தர் ஆபீஸ் மசிகுண்டு”-ஜெயந்தி ஜெகதீஷ் - சிறுகதைத் தொகுப்பு -


“ரெஜிஸ்தர் ஆபீஸ் மசிகுண்டு”-ஜெயந்தி ஜெகதீஷ் - சிறுகதைத் தொகுப்பு -

  எழுத்தாளர் ஜெயந்தி ஜெகதீஷின் நடையில் கவித்துவம் தெறித்து விழுகிறது. கதைகளை எழுதுவதைவிட கவிதைகள் எழுதுவதில் இவருக்கு ஆர்வம் அதிகம் என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. தொடர்ந்து கவிதைகளே எழுதிக் கொண்டிருந்தவர்கள், கதைகள் எழுத முனையும்போது அறிந்தோ, அறியாமலோ அவர்களுக்குள் படிந்திருக்கும் கவித்துவ உணர்வுகள், வர்ணனைகள் தாமாகவே வந்து உரைநடையில் புகுந்து கொள்கின்றன. இப்படியான வரிகளைச் சற்று ஒதுக்கிவிட்டு உரைநடையை இன்னும் கொஞ்சம் அழுத்திச் சொல்வோமே, அதன் மூலம் சொல்ல வந்த கதையின் செறிவு இன்னும் கூடுமே  என்று முயன்றாலும் கூட அது அவர்களை விடுவதில்லை. கவிதை நடையோடு கதையையும் சொல்லிச் செல்வதிலேதான் அவர்களுக்கே திருப்தி இருக்கிறது என்பதை உணர்த்துகிறார்போல இவரது கதைகள் நளின நடை பயில்கின்றன.                                                    எழுத வந்தவர்கள் எல்லோருமே ஆரம்பத்தில் கவிதையின் வழிதான் நுழைந்திருப்பார்கள் என்பது நிச்சயம். நானும் கூட ஒரு தொகுதி அளவுக்குக் கவிதைகள் எழுதி அத்தனையையும் ஒன்றுவிடாமல் பிரசுரம் கண்டவன்தான். அதைப் புத்தகமாகப் போட முயலும்போது, காலம் கடந்த ஒன்றாக நான்  அதைக் கருதியதால் அதை அப்படியே ஒதுக்கி நிறுத்தி விட்டேன். கணையாழி, தீபம், விகடன், தாய், இதயம் பேசுகிறது, சாவி, மின்மினி, கல்கி, குங்குமம், மதன்,...இன்னும் என்னென்னவோ பத்திரிகைகள்...ஆனாலும் ஒரு குறிப்பிட்ட கால கட்டத்திற்குள்ளேனும் அவை புத்தகமாகியிருக்க வேண்டும் என்பதுதான் நியாயம். அது தவறியது. எனவே மதிப்போடு  ஒதுங்கிக் கொண்டது.                                                                 ஜெயந்தி அவர்களும் அந்தத் தவறைச் செய்து விடக் கூடாது என்கிற நன்னோக்கில் அவருக்கு நினைவூட்டவே இதை இங்கே வலியுறுத்துகிறேன்.               ஒரு புத்தகத்தைப் படிக்க ஆரம்பிக்கும்போதே, கொஞ்சம் உள்ளே நுழையும்போதே தெரிந்து போகிறது...படைப்பாளியின் அன்பும், கருணையும், பாசமும், உறவுகளுக்கும், நட்புக்கும், கை கொடுக்கும் நற்குணமும், சக மனிதர்களின்பால் ஏற்படும் நேயமும், அவர்கள் படும் துன்பத்தின்பாற்பட்டு எழும் வருத்தமும், உதவும் மனப்பான்மையும்...வாழ்வியலின் போக்கில் எழும் சிறு சிறு சங்கடங்களையும், தடங்கல்களையும் சோர்வடையாது எதிர்கொண்டு செல்லும் தன்மையையும் படைப்பாளியின் குணநலன்கள் என்று கருத்திற்கொண்டே கடந்து செல்ல வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.                                                                வாழ்க்கை எங்கே அர்த்தமுள்ளதாக ஆகிறது....எந்த இடத்தில் நீட்சி பெறுவதாக உணரப்படுகிறது?  தமயந்தி திருமணம் ஆகி 15 ஆண்டுகள் முடிந்த நிலையில் தாய்மைப் பேறு பெறுகிறாள். அது சமயம் கணவன் வெளிநாட்டில்...ஆருயிர்த் தோழியைப் பல வருடங்கள் கழித்துப் பார்க்கும்போது  இந்த நினைவுகள் தந்த அழுத்தம் அவளைச் சற்றே பதற்ற முற வைக்கிறது. கிடைக்காதோ என்று ஏங்க வைத்து, அவ நம்பிக்கை கொள்ள வைத்து, பின் அது கிட்டும்போது ஏற்படும் சந்தோஷமே தனி. என் குழந்தை...என் குழந்தை என்று சங்கரியிடம் உணர்ச்சி வசப்படுகிறாள். இந்த இடத்தில்தான் வாழ்க்கை நீட்சி கொள்வதின் பொருள் ஸ்தாபிதமாகிறது. தாய்மைப் பேறு பெற்ற நேரம் கணவனை மனம் நாடுவது பெண்கள் இயல்பு.  ஆருயிர் தோழியிடம் ஆறுதல் பெறுவது பொருத்தம்.  கச்சிதமாய் அளந்து சொல்லப்பட்ட அழகான கதை.                                                  பெண்கள் பூப்பெய்திய பின் பள்ளி செல்வதை நிறுத்திய காலம் இருந்தது. வீட்டு வாசற்படி தாண்டாத, வீட்டிலேயே வெளி மனிதர்கள் கண்ணில் படாத, ஏன் அப்பா அப்பா என்று அன்பொழுகத் தழுவிக் கொண்ட தந்தையரிடமிருந்தே விலகி நிற்றல் என்கிற நடைமுறையைப் பின்பற்றிய சமுதாயம் இன்று எந்தளவுக்கு மாறிப் போய்க் கிடக்கிறது? எவ்வளவுக்கெவ்வளவு வித்தியாசமான (இது வித்தியாசமானதா? மோசமானதா?) தகவல்களையெல்லாம் கேள்விப்படுகிறோம். கண்ணையும், கருத்தையும் மூடிக் கொள்ளும் காலமாகவல்லவா இருக்கிறது காதில் விழும் சேதிகள்?            மகளையே தந்தை திருமணம் செய்து கொள்ளலாம்-அண்டை நாட்டில் அதற்கான சட்டம். இதிலென்ன தப்பு? ஆதியில் மனிதம் தன்னை அப்படித்தானே பெருக்கிக் கொண்டிருந்தது? அப்படியானால் இன்று ஏற்பட்டிருக்கும் இத்தனை வளர்ச்சியும் எதற்காக? பின்னும் நாம் அங்குதான் போய் நிற்க வேண்டுமென்றால் எதற்காக இத்தனை கண்டுபிடிப்புகள்? காட்டுமிராண்டித் தனமான செயல்களை மீண்டும் அரங்கேற்றுவதற்கா? மனிதன் வெறும் மிருகம்தானா?                             காலம் எப்படி மாறிப் போய்விடுகிறது. பொண்ணுகளுக்கு எட்டு ஒம்பது வயசாச்சுன்னா அப்பாக்கள் தொட்டுப் பேச மாட்டார்கள். இன்று? கல்யாணம் வரைக்கும் கூட மடில வச்சுக் கொஞ்சுறாங்களே...! தீர்த்தமாடிக் கொண்டிருக்கும் நான்கு இளைஞர்கள் மத்தியில் விவாதமாகும் இந்த விஷயங்கள் நம்மைச் சற்று சிந்திக்கத்தான் வைக்கிறது. உண்மையை உரத்துப் பேசும் நேரம் அதுதானோ? கடல் சேறு சிறுகதை பெண்கள் சார்ந்த அவரது சிந்தனையைச் சீர்படுத்தும் நோக்கில் நம்மை கைகோர்த்து இழுத்துச் செல்கிறது.                                                         ரிஜிஸ்தர் ஆபீஸ் மசிகுண்டு- நிலம் வாங்கும், விற்கும், வீடு விற்கும் வாங்கும் பரிவர்த்தனைகளின் பத்திரங்களிலும், பாரங்களிலும், பட்டாக்களிலும், பிற சான்றுகளிலும் அந்த ரிஜிஸ்திரார் ஆபீஸ் மசிகுண்டு தன் முத்திரையை விடாது பதித்துக் கொண்டு அந்த இடமே சதம் என்று தன்னை நிலை நிறுத்திக் கொண்டு பலர் மீதும் தன் அழுத்தமான பார்வையைச் செலுத்திக் கொண்டேயிருக்கிறது. விரும்பியும், விரும்பாமலும், கடனுக்காகவும், கட்டாயத்திற்காகவும் என்று பல்வேறு நிலைகளில் அங்கு முத்திரைக்கு வரும் பத்திரங்கள் அத்தனையும் அந்த மசிகுண்டைப் பொறுத்தவரை ஒன்றுதான். அந்த இடத்தை அடையும்போது விழும் முத்திரைதான் அந்த இறுதி நிமிடங்களைத் தீர்மானிக்கிறது. அங்கே பாசத்திற்கோ, பந்தத்திற்கோ, கண்ணீருக்கோ, மகிழ்ச்சிக்கோ, இடமில்லை. எல்லாம் அங்கு, அந்த ஸ்தானத்தில், அந்தப் புள்ளியில் ஒன்றுதான். அந்த மசிகுண்டின் பார்வையில் அங்கு அன்றாடம் வந்து போகும் பல்வேறு மனிதர்களின் மன நிலைகளைப் படம் பிடிக்கும் படைப்பாக இந்தக் கதை அமைந்திருப்பது சிறப்பு.
  இப்படி முத்திரை பதித்தாற்போல மொத்தம் 15 சிறுகதைகளை உள்ளடக்கிய இந்தத் தொகுப்பு தமிழ்ச் சிறுகதைகளின் கட்டுமானத்திற்கு ஒரு புதிய சேர்க்கை. யட்சி வாசம், கொலு பொம்மை, கொப்பரை, வேலைக்காரி, எனக்குள் நான், ஆழிக்காதல்,  சூழ் விசை, அதே குரல், இறைமை, மனவெளி, ஸ்ரீ, கிருஷ்ணவாசம் என்று இவர் அனைத்துக் கதைகளுக்கும் வைத்திருக்கும் வித்தியாசமான தலைப்புகளை இவரால் தொடர்ந்து சிறுகதையுலகத்தில் சிறப்பாகப் பயணிக்க முடியும் என்கிற நம்பிக்கையை நமக்கு ஏற்படுத்துகிறது.                                                                 ஒரு சிறுகதைத் தொகுப்பின் அத்தனை சிறுகதைகளைப் பற்றியும்  விலாவாரியாகச் சொல்லிவிடுவது என்பது அதை வாங்கிப் படிக்கும் மனநிலையைத் தடை செய்து விடும் அபாயம் உண்டு என்கிற உண்மையான நோக்கில் ஜெயந்தி ஜெகதீஷின் எழுத்துப் பணி எதிர்காலங்களில் இன்னும் வீறு நடை போடும் என்பது திண்ணம் என்று சொல்லி அவருக்கு நமது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வோம். 
                             -------------------------------                                         

கருத்துகள் இல்லை:

  சிறுகதை                 “பாதிப்பு” - ”சிற்றுளி” கலை இலக்கிய இதழ், அக்டோபர் 2024 முதல் டிசம்பர் 2024 வரை             வி த்யாபதி அந்தத் தெ...