26 நவம்பர் 2019

“ஒரு கொத்துப் புல்“- எழுத்தாளர் திரு எஸ்.வைத்தீஸ்வன் சிறுகதைத் தொகுப்பு - “முத்தம்மா“-சிறுகதை வாசிப்பனுபவம் - உஷாதீபன்


“ஒரு கொத்துப் புல்“- எழுத்தாளர் திரு எஸ்.வைத்தீஸ்வன் சிறுகதைத் தொகுப்பு -                   “முத்தம்மா“-சிறுகதை வாசிப்பனுபவம் - உஷாதீபன்
வெளியீடு:- வித்யுத் பப்ளிகேஷன்ஸ், குரோம்பேட்டை, சென்னை-44 (போன்-9003107654)
       டன்கட்டை ஏறும் வழக்கம் ஒழியாத ஒரு காலகட்டக் கதை முத்தம்மா. அந்தக் காலத்தில் இளம் பிராயத் திருமணம் நடைமுறையிலிருந்தது. பெண்கள் வீட்டில் இருக்குமிடம் தெரியாமல் வாழ்ந்த காலம். ஆண்கள் வெளியே சென்றிருக்கும் நேரம்தான் அவர்களுக்கு சுதந்திரம். குழந்தைகளுடன் குதூகலமாக விளையாடிக் கொண்டிருப்பார்கள். வீட்டுக்குள் நுழையும் ஆண்களைக் கண்டதும் அது அப்பாவோ, கணவனோ யாராயினும் ஓடிப்போய் மறைவில் தங்களை ஒளித்துக் கொள்வார்கள். வீட்டு ஆம்பளைகள் அழைத்தால் வெளித் தோன்றுவார்கள். சுருக்கமாய், அமுத்தலாய் பதில் சொல்வார்கள். இருக்கச் சொன்னால் தூ’ண் மறைவில் மறைத்துக் கொண்டு நிற்பார்கள். தேவையில்லையெனில் சடக்கென்று உள்ளே போய் விடுவார்கள். பெண்கள் ஒடுங்கிக் கிடந்த காலம் அது. ஆண்களின் அன்பு, பிரியம், பாசம் என்பதெல்லாம் தனிமையில்தான் வெளிப்படும். வீட்டின் பொது வெளியில் மருந்துககும் தென்படாது. அப்படித் தென்பட்டால் அது தனி காரெக்டர்.
       மனைவியைக் கொடுமைப்படுத்திய கணவன், மருமகளைக் கொடுமைப்படுத்திய மாமனார், மாமியார் என்று பலவகை உண்டு. தான் அனுபவித்த கொடுமைகளை நினைத்து நினைத்துப் புழுங்கி, அந்தக் குரோத மனப்பான்மையில், இவள் மட்டும் சந்தோஷமாக இருப்பதாவது? என்று தன் மருமகளைக் கொடுமைப்படுத்திய மாமியார்கள் அநேகம்.
       ராஜபேட்டையாய் நீண்டு கிடக்கும் வீட்டினை சாணி போட்டு மெழுகி, பூச்சி பொட்டு வராமல் வைப்பது அந்தக் கால வழக்கம். அந்த மாதிரி மொத்த வீட்டையும் ஒரே ஜீவனை குனிந்து அமர்ந்து, நகர்ந்து மெழுக வைத்து, குத்தம் குறை சொல்லி, பார்த்து ரசித்த ஜீவன்கள் எத்தனையோ. இரவில் வலது கையில் தடியோடு, இடது கையில் லாந்தரோடு தலையை விரித்துப் போட்டுக் கொண்டு வலம் வரும்  மாயக் கிழவிகள் போல் ஆண்டு கொண்டிருந்தவர் பலர். கடைசியாகச் சாகக் கிடந்த நாட்களில் நீதான் எனக்கு செய்வே, உன்னை விட்டா எனக்கு வேறே யாருமில்லே...என்று கண்களில் நீர் மல்க உருகி, தாங்கள் பண்ணிய கொடுமைகளுக்கு மன்னிப்புக் கோரி பாவங்களைக் கழுவிக் கொள்ள முயன்றவர்களும் அவர்களே...!
       ரெண்டே ரெண்டு மண் ஆலச்சட்டி விளக்கு கைதவறி உடைந்து விட்டது என்பதற்காக நாள்பூராவும் அம்மாவை வீட்டுக்கு வெளியே நிறுத்தி வைத்திருந்த (சோறு தண்ணியின்றி) தாத்தாவைத் தெரியும் எனக்கு. முட்டாப்பயலுங்க...!என்று அந்தச் சின்ன வயதில்  உடனுக்குடன் எதிர்வினையாற்றியிருக்கிறேன் நான்.
       இப்படியாகப் பெண்ணடிமைத் தனம் விஞ்சித் தலை தூக்கியிருந்த அந்தக் காலத்தில் யாரும் எதிர்பாராத மிதமிஞ்சிய அந்நியோன்யத்துடன் வாழ்ந்த தம்பதியர் ரொம்பவும் அபூர்வம். என் பெண்டாட்டியக் கொஞ்சுறதுக்கு நான் யார்ட்டப் பர்மிஷன் கேட்கணும் என்று வெளிப்படையாகவே கொஞ்சி, கெஞ்சி மகிழ்ந்த ஆதர்ஸ  தம்பதியரும் உண்டுதான்.
       அப்படி ஒரு தம்பதியரின் கதைதான்  இந்த “முத்தம்மா“.    அந்தக் காலத்தில் வீதிவரைதான் மனைவி. இப்பொழுதும் அதே நிலைதான். ஆனால் சில இடங்களில் மனைவியும் மயானம் வரை செல்வதை, சென்றதைக் கேள்விப்படுகிறோம். வாரிசு உறவு என்று யாரும் இல்லாதபோது மனைவியே கொள்ளி வைத்த நிகழ்வு கூடத் தெரிய வருகிறது.
       இந்த முத்தம்மா அப்படியில்லை. ஆசைக் கணவன் இறந்த துக்கம் தாங்காமல் யார் தடுத்தாலும் கேளேன் என்று கணவனின் சிதையில் சென்று படுத்துக் கொண்டு எரிந்து போகிறாள். எம்பேரைச் சொல்லுங்கள், யாருக்கும் நெருப்பு சுடாது என்று கத்திக் குரல்கொடுத்துக் கொண்டே இறக்கிறாள்.
       தீபாவளிப் பண்டிகையின்போது தீக்காயம் பட்டுக் கொண்ட பேரனுக்கு கதை சொல்லும் பாட்டி முத்தம்மா முத்தம்மா என்று சொல்லிக் கொண்டே பேரனுக்கு வெண்ணையையும், விளக்கெண்ணெயையும் மாறி மாறித் தடவி காயத்தின் வேதனை போக்குகிறாள். சில நாளில் அந்தப் புண்ணும் ஆறிப்போகிறது.
       குழந்தைகளுக்கு வீட்டுப் பெரியவர்கள்,முதியோர், மூதாதையர் மீது நம்பிக்கையும், மரியாதையும் எழுவதற்கும், அவர்கள் இழைத்த தவறுகள் தொடரக் கூடாது என்று உணர்த்துவதற்கும், எப்படிப்பட்ட காலங்களையெல்லாம் கடந்து வந்திருக்கிறோம் என்பதை அறிந்து உணர்ந்து திருந்துவதற்கும், பக்குவப்படுவதற்கும் இந்த அனுபவப் பகிர்வுகள் பெரிதும் உதவுகின்றன என்பதை எவரும் மறுப்பதற்கில்லை.
       கொடுமைப் படுத்திய கணவன் மிகக் குறுகிய காலத்தில் மரித்தபோது பெண்கள் அந்தக் கொடுமைகளிலிருந்து விடுதலை பெற்றார்கள் என்றே நாம் நினைக்க வேண்டியிருக்கிறது. மனதுக்குள் எழுந்த வருத்தத்தை விட, சோகத்தைவிட அவர்களின் ஆழ்மனது அந்த விடுதலையை எண்ணி சந்தோஷமே கொண்டிருக்கும் என்றே நினைக்க வேண்டியிருக்கிறது.  ஆனால் மறுமணமின்றி உடனுக்குடன் வெள்ளைச் சேலை தரிக்கச் செய்து, தலையை மழிக்கப் பண்ணி அழகு சிதைக்கப்பட்ட அந்தக் கொடுமை எவராலுமே பொறுத்துக் கொள்ள முடியாத கொடுமைகள்.
       கொள்ளுப்பாட்டி முத்தம்மா வாழ்ந்து மறைந்த காலம் 1800க்குப் பக்கமாக இருக்கலாம் என்று ஆசிரியர் குறிப்பிடுவதும், பின்னர்தான் சதிவழக்கை எதிர்த்து 1825 கால கட்டத்தில்தான் சட்டம் அமுலாக்கப்படுகிறது.
       ஆனாலும் தீக்காயம் பட்டால் “முத்தம்மா...முத்தம்மா” என்று சொல் எனப் பாட்டி சொல்லிக் கொடுத்த பிற்காலம் இன்றைய மூத்த தலைமுறையினரின் மனதில் ஓடிக் கொண்டிருக்கும் படமாக விரிந்து நம் பேரக் குழந்தைகளுக்கு நாமும் ஏதோவொரு வகையில் புனைவு வெளியில்  அவர்களைத் தைரியப்படுத்தும் ஒன்றை கற்பனைத்து உருவாக்கத்தான் வேண்டும் என்கிற ஆர்வத்தை, அவசியத்தை  இக்கதை நமக்கு ஏற்படுத்துகிறது.
       எழுத்தாளர் திரு எஸ்..வைத்தீஸ்வரனின் இந்தத் தொகுதியிலான இக்கதையை நாம் படித்து முடிக்கையில் நாற்பது, ஐம்பது, அறுபதுகளைத் தாண்டிய வாசகர்கள் நிச்சயம் தங்கள் இளமைக் காலத்து அனுபவங்களை அசைபோட்டுத் தங்களைப் புதுப்பித்துக் கொள்ள நிச்சயம் முயல்வாரகள் என்பது திண்ணம். ஒரு கொத்துப்புல் சிறுகதைத் தொகுதிக்கு பெருமை சேர்க்கும் கதைகளில் இதுவும் ஒன்று என்பது நிச்சயம்.
                                  ----------------------------------------------------------                                         

கருத்துகள் இல்லை:

  சிறுகதை                 “பாதிப்பு” - ”சிற்றுளி” கலை இலக்கிய இதழ், அக்டோபர் 2024 முதல் டிசம்பர் 2024 வரை             வி த்யாபதி அந்தத் தெ...