“இரகசியங்கள்”
- சிறுகதை - அசோகமித்திரன் - வாசிப்பனுபவம் - உஷாதீபன் வெளியீடு:- அசோகமித்திரன்
சிறுகதைகள் - (2 தொகுதிகள்) - காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோயில்.
-------------------------------------------------------------------------
இரகசியங்கள்
என்று தலைப்பு வைக்கப்பட்டால் அது கடைசி வரை காப்பாற்றப்பட வேண்டும். படிக்கும் வாசகனுக்கு
அந்த ரகசியம் பத்திரமாகக் கூட வருகிறது என்கிற பாதுகாப்பு உணர்வு வேண்டும். அது என்ன
ரகசியம் என்கிற கேள்வியோடேயே கதை நெடுகப் பயணிக்க வேண்டும். ரகசியம், ரகசியமாகவே இறுதிவரை
தொடர வேண்டும். கடைசியில்தான் முடிச்சு அவிழ வேண்டும்.
சாதாரண மனிதனின் படைப்புக்கள் சாதாரணமாகத்தான் இருக்கும் என்று நினைத்து விடக்
கூடாது. சாதாரண மனிதரான அசோகமித்திரன் அசாதாரணமான கதைகளை ஏராளமாய் எழுதியிருக்கிறார்.
இதெல்லாம் ஓல்டு என்றும் ஒதுக்கி விடக் கூடாது. நமக்குத்தான் நஷ்டம். படைப்பின் ரகசியங்கள்
இவர் எழுத்தில் ஏராளமாய்ப் புதைந்து கிடக்கின்றன. உலகின் மிகச் சிறந்த படைப்பாளிகளில்
அசோகமித்திரனும் ஒருவர் என்று சொன்னால் அதை யாராலும் மறுக்க முடியாது என்பதுதான் உண்மை.
ஒருவர் இரவில் இறந்து போனால் மறுநாள் பொழுது்
விடிந்து படிப்படியாக எல்லாமும் ஆகி, அந்தப் பிரேதத்தைக் கொண்டு செல்லும் வரைக்கும் அந்த வீடு எப்படியிருக்கும்? இரவில் இறந்து
போன உறவினரின் உடலைப் போட்டு வைத்துக் கொண்டு, வெளியூரிலிருந்து வர வேண்டியவர்களுக்காகக்
காத்துக் கிடந்து, இருக்கவும் முடியாமல், படுக்கவும் இயலாமல் மூலைக்கு ஒருவராய் அமர்ந்து,
சாய்ந்து அதுவும் நெடுநேரம் இயலாமல் கால்மாடு தலமாடாய்ச் சரிந்து, அந்தப் பிணத்தோடு
இராப் பொழுது முழுவதும் தூங்கி வழிந்து, தூங்கித் தூங்கி எழுந்து.....சற்றே அந்தக்
காட்சியை மனதில் கொண்டு வந்து பாருங்கள்....
அந்த நிலையில்தான் இறந்து போன வேலாயுதத்தின்
மகன் முருகன் அவரைச் சந்திக்க வருகிறான். அந்தப் புள்ளியில்தான் அந்த இரகசியம் ஆரம்பிக்கிறது.
என்ன இரகசியம் என்றா பேசிக் கொள்கிறார்கள்? அதுவல்ல. ஒருவன் வருவதும், வேளை கெட்ட வேளையில்
வந்து அழைப்பதும், அந்த அழைப்பையும் அல்லசலுக்குக் கேட்காமல், ஏன் வீட்டிலேயே வேறு
யாருக்கும் தொந்தரவு இல்லாமல் அவர் மட்டும் அறிவது போல் அல்லது அவருக்கு மட்டுமே என்று
தெரிவிப்பதுபோல் அடங்கச் சொல்லிவிட்டு அவரின்
கிளம்பலுக்காக நிற்கும் ஒருவனை அந்த விடிகாலை நான்கு மணிப் பொழுதில் சற்றே உங்கள் கற்பனையில்
வரித்துத்தான் பாருங்களேன்...
அந்தக் காட்சி அசோகமித்திரன் எழுதியதுபோல் இருக்கிறதா
என்பதையும் கொஞ்சம் பொருத்திப் பார்த்துக் கொள்ளுங்கள்.....அப்போதுதான் அவர் எழுத்தின்
வலிமையை நாம் உணர ஏதுவாகும்.
கதவைச் சாத்திக்கோ என்று மனைவியிடம் இவர் சொல்வதும்,
தகவல் கேட்டுவிட்டு இப்பயே கிளம்பி என்ன செய்யப் போறீங்க...? அங்க போய் பொணம் காக்கப்
போறீங்களா...எல்லாம் காலைல போய்க்கலாம் என்று மனைவி சொல்ல...என்ன பிரச்னைன்னு தெரில...கையோட
அழைச்சிண்டு வரச்சொன்னாங்கிறான் பையன்...என்று இவர் தடுமாற...ராத்திரி பூராவும் ஒரே
தலைவலின்னீங்க.....? என்று மனைவி மீண்டும் தடுக்கிறாள். அப்போது சொல்கிறார் அவர்:-
“தலை வலிக்கத்தான் செய்றது...ஆனா ஒரு ஆள் ஒரு
தடவைதானே சாக முடியும்.....?“
அதற்குமேல் ஒருவரைத் தடுக்க முடியுமா என்ன?
மகிழ்ச்சியான விசேடங்களில் கலந்து கொள்கிறோமோ இல்லையோ....துக்க நிகழ்வுக்குத் தலையைக்
காட்டியே ஆக வேண்டும் என்பதுதானே முறை...-மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்த அந்தப் பொழுதில்
இவர் கிளம்ப, மீண்டும் வந்து விடுகிறது. முதல் நாள் ஒருவரிடம் கடன் வாங்கி வைத்திருந்த
பணம் ஞாபகத்திற்கு வர அதையும் எடுத்துப் பாக்கெட்டுக்குள் பத்திரமய் வைத்துக் கொள்கிறார்.
அங்கு சென்று கிடத்தப்பட்டிருக்கும் வேலாயுதத்தின்
பிணத்தைப் பார்க்கிறார். சுற்றிலுமான அந்த அமைதியும் இறுக்கமும் இவரை அச்சப்படுத்துகிறது.
உண்மையில் வேலாயுதம் திடீரென்று எழுந்து, தண்ணீர்
வேண்டும் என்று கேட்டால் கூட யார் காதிலும் விழுந்திருக்காதுதான். அந்தச் சூழலை நமக்குத்
தெரிவிக்க இந்த ஒரு வரி போதாதா? அவர் வீட்டை விட்டுக் கிளம்பும்போதுதான் நாமும் அவரோடு
கிளம்பி விடுகிறோமே? பிறகு நடப்பைகளைக் கண்டுதானே ஆக வேண்டும்?
வேலாயுதத்தின் முகத்தில் கடைசிவரை ஒரு சிடுசிடுப்பு
இருந்தது. ஒரு ரகசியமும் இருந்தது என்பது அவருக்கும் அவனின் மனைவிக்கும் மட்டும்தான்
தெரியும். அந்த ரகசியத்தின் தகவல் இப்போது அவள் ஒருத்திக்குத்தான் தெரியும்.
தழைந்த குரலில் அவள் சொல்கிறாள். நேத்து அவர் சொல்லிட்டாரு.....
என் தலைவலி, தூக்கமின்மை எல்லாமும் நொடியில்
பறந்து போகிறது.
பணத்தை எங்க கொடுத்து வச்சிருக்கேன்னு சொல்லிட்டாரு.....
ஷண்முகத்துக்குத் தெரியுமா?
தெரியாது......
சரி...இத இப்போதைக்கு செலவுக்கு வச்சிக்க...மத்ததைப்
பிறகு பார்ப்போம்.....
வேண்டாம்...எங்க அண்ணன்மார்கிட்ட சொல்லியிருக்கேன்...அவுங்க
பார்த்துப்பாங்க...நீங்க இப்ப பணம் கொடுத்தீங்கன்னா விபரீதம் ஆயிடும்.....
சூழலை உணர்ந்து நகர்கிறார் அவர். ஒவ்வொருவராக
புதிய ஆட்கள் வர ஆரம்பிக்கிறார்கள்.
உங்களை அவர் மோசம் பண்ணியிருக்காரு...எங்கிட்ட
சொல்லி அழுதாரு....ராவெல்லாம் ஒரே புலப்பம்....-ஒரு முறை வேலாயுதத்தின் மனைவி என்னிடம்
சொன்னாள். அந்த இலங்கை ஆள் எங்களிடம் அதைக் கொடுத்து ஒரு மணி நேரத்துக்கெல்லாம் லாரியடியில்
மாட்டிக்கொண்டு அடையாளம் தெரியாத பிணமாகிப் போய்விட்டான். செத்தவனுடைய கூட்டாளி வேலாயுதத்தை
அடித்துப்போட்டுவிட்டுப் பணத்தைப் பிடுங்கிக் கொண்டு போய்விட்டான் என்று சொல்லப்பட்டது.
வேலாயுதத்தின் முகத்தில் கடைசிவரை சிடுசிடுப்பு.
அதில் ஒரு ரகசியமும்....அதன் தகவல் அவளுக்கு மட்டும்தான்... அவன் மனைவிக்கு மட்டும்தான்.....
இந்த ரகசியங்களுக்கு நான் தேடிப் போகவில்லை.
கூட இருந்தேன் என்பதைத் தவிர. வேலாயுதம் போன பிறகு அவளைச் சென்று பார்ப்பது என்பது.....தரகு
வேலையில் சில சில்லரைப் பொய்கள் உண்டுதான்...ஆனாலும்...
இனிமே இங்க வந்தே.....கொலை விழும்.....! அவள்
அண்ணனின் மிரட்டல் - நான் ஏன் போகிறேன்.....உதவுவோமே என்று போனது. அதையும் அவள் மறுத்துவிட்டாள்.
பிறகு? அடங்கிக் கிடந்ததை மீண்டும் கிளர ...அதுவா என் வேலை?
அந்தப் பணம்பற்றி யாருக்கும்
எதுவும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதுதான் சொல்லியாயிற்றே...அடித்துப் பறித்துக்
கொண்டு போயாயிற்று என்று. ரெண்டு மாதத்துக்கும் மேலாயிற்று. நான் எட்டிப் பார்க்கவில்லை.
பிறகு ஒரு பகலில் போய் நின்ற போது....இப்டி பட்டப் பகல்ல வந்திருக்கீங்களே...யாராச்சும் பார்த்துட்டா? அதிருக்கட்டும்...வேலாயுதம்
என்ன சொன்னான் கடைசியா...அதச் சொல்லு...?
அவள் சொன்னாள். சொன்னது ஆச்சரியம்தான். யோசித்தால்
பெரிய ஆச்சரியம் என்றும் சொல்வதற்கில்லை. சில சில்லரைப் பொய்கள் பெரிதாக விரிந்து பூதமாகக்
கவ்வும் ரகசியங்களாகவும் மாறிவிடுகின்றன.
வேலாயுதம் அவ்வளவு பணத்தையும் என் மனைவியிடம்
கொடுத்திருந்தான்.
ஏமாற்றக் கூடாது என்கிற நட்பின் ஆழமும், அதே
நல்லெண்ணத்தில் இருக்கும் வேலாயுதத்தின் மனைவியும், உங்களுக்குத் துரோகம் பண்ணிட்டாரு
என்று முதலில் அழும் அந்த நேர்மையும், அண்ணன்க கிட்டச் சொல்லிட்டேன்...இப்ப இந்தப்
பணம் வேண்டாம் என்று மறுக்கும் தன்மையும், விஷயத்தை ஆறப்போட்டு இரண்டு மாதங்கள் கழிந்த
பொழுதில் சாவகாசமாய் அந்த இரகசியத்தை வெளிப்படுத்தும் அழகும், இரகசியம் புதைக்கப்பட்ட
இடம் பாதுகாப்பானதாய் இருவரும் உணரும் அந்தப் பொழுதும், இப்பயே நாலு மணிக்கு அங்க போய்
என்ன செய்யப் போறீங்க...பொணம் காக்கப் போறீங்களா....? என்று தடுக்கும் அவரின் மனைவியின்
உஷார்த்தன்மையில் பொதிந்திருக்கும் இரகசியமும்....எல்லாவற்றையும் கோர்வையாய் இப்போது
நினைத்துப் பாருங்கள்.....கதையை அசோகமித்திரன் சொன்ன விதம் எத்தனை இரகசியமானது என்று
நமக்குப் புலப்படும்.
இரகசியத்தை வாசகனுக்கு எந்தவித ஊகத்துக்கும்
இடமின்றி ரொம்பவும் பூடகமாய் நகர்த்தி கடைசிவரை கட்டிக் காத்த எழுத்து அசோகமித்திரனின்
இந்த அருமையான படைப்பு.
சாதாரண மனிதனின் படைப்புக்களும் சாதாரணமாய்த்தான்
இருக்கும் என்று அசோகமித்திரனை நினைக்க முடியுமா? முதிர்ச்சியும் நுட்பமும் கூடிய சொல்முறையினால்
இக்கதை மிகுந்த சிறப்புப் பெறுகிறது.
---------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக