17 செப்டம்பர் 2019

இமையம் சிறுகதை “திருநீர்சாமி” - வாசிப்பனுபவம் - உஷாதீபன்



இமையத்தின் எந்தவொரு கதையும் சோடை போனதில்லை. அவரின் இந்தத் திருநீர்சாமி... நான் படித்த பல கதைகளில் மிகச் சிறந்த கதை என்று சொல்வேன். குலசாமியைக் கும்பிடுதல், கொண்டாடுதல் என்கிற பழக்கம் நம் கிராமத்து மக்களின் காலம் காலமான ஒழுக்க நடைமுறை. அந்த நம்பிக்கையை யாராலும் குலைக்க இயலாது.
கிராமத்து மக்களின் என்று மட்டுமில்லை. நம் குடும்ப அமைப்பில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு குலதெய்வம் என்று ஒன்று உண்டு. அந்த தெய்வத்திற்கு வருடாந்திர வழிபாடும், குலம் தழைக்கவென்று குடும்பத்தில் நடைபெறும் அனைத்து விழாக்களிலும் அவர்களின் குலதெய்வத்தை முன்னிறுத்தலும், வழிபடுதலும், அதன் மூலம்தான் சந்ததி செழித்தோங்கும் என்கிற ஆழ்ந்த நம்பிக்கையின்பாற்பட்ட செயல்பாடும் வழி வழியாக வந்த பெரியோர் வகுத்த வழிமுறை.
அதில் ஆழமாய் ஊன்றிப்போன அண்ணாமலை தன் குழந்தைகளுக்கு முடி எடுக்கவும், காது குத்தவும் என்று சென்றுதான் ஆக வேண்டும் என்று மனைவியோடு பொருதுவதும், இதுக்காக டெல்லியிலிருந்து தமிழ்நாட்டுக்குப் போகணுமா என்று அவள் வாதிப்பதும்...அதனால் சண்டை மூளுவதும்....ஒவ்வொரு வாக்கியமும்...ஆழமாகவும்...அழுத்தமாகவும் சொல்லப்பட்டு படிக்கும் வாசகனை முழுமையாக உள்ளே இழுத்துக் கொள்கிறது.
தமிழ்நாட்டிலேயே பெண் எடுத்து....குலதெய்வ வழிபாட்டிற்குச் சென்றாக வேண்டும் என்று சொல்லி...அதற்கு அவள் மறுத்து...என்று கதை சொல்லப்பட்டிருந்தால் இந்த அளவுக்கு வீரியம் இருந்திருக்காது...இருக்காது என்றுதான் இன்னொரு மாநிலப் பெண்ணைக் காதலித்துக் கல்யாணம் செய்து கொண்டதாய்ச் சொல்லி...அதன் மூலம் கிராமத்து நம்பிக்கைகளை அழுத்தமாய் நிலை நிறுத்தியிருக்கிறார் இமையம்.
தமிழ்நாட்டுப் பெண்ணே அப்படி மறுதலிக்க வாய்ப்பில்லை என்பதும், இதற்காக வெகுதூரம் அலைதல் என்ற கருத்து பொருந்தி வராது என்பதும் உணர்ந்து, டெல்லிப் பெண்ணாய் வகுத்து, அந்த மனைவி மறுதலிப்பதாய்க் கதை சொல்லியிருப்பது அவரது புத்திசாலித்தனத்தைக் காட்டுகிறது. மனைவியும், அவளின் தாயாரும் ஒத்த கருத்தினராய் நிற்பதும், மனைவியைத் தன் முன்னேயே கைநீட்டியதில் கோபம் கொண்டவளாய் தாயார் மருமகனை இழித்துரைப்பதும், மனைவியி்ன் அண்ணன், அண்ணாமலையிடம் பொறுமையாக விஷயங்களைக் கேட்டு குலசாமியின் மகிமைகளை உணர்ந்து கொள்வதும்.....அவர்களுக்கு எடுத்துச் சொல்ல முயல்வதும், அப்படியும் கடைசிவரை அவர்கள் ஏற்றுக் கொள்ள மறுப்பதும்...எப்படியானாலும் என் குழந்தைகளுக்கு முடி இறக்குறதும், காது குத்துறதும் என் குல சாமி முன்னாடிதான் நடக்கும் என்று அண்ணாமலை இறுதிவரை உறுதியாக நிற்பதோடு கதை முடிந்து போகிறது.
கதை வெறுமே முடிவதில்லை. படிக்கும் வாசகர்களின் மனதிலும் அவரவர்களின் குலதெய்வ நம்பிக்கைகளை மேலும் உறுதிப்படுத்திவிட்டு நகர்கிறது. தான் சொல்ல நினைத்ததை மனதுக்குள்ளேயே இத்தனை அழுத்தமாய் வடித்துக் கொள்ளவில்லையென்றால் அதை எழுத்தில் கொண்டு வருவது மெத்தக் கடினம்.
எழுதிக் கொண்டே போவோம்...அது தானாய் ஒரு முடிவைத் தேடிக் கொள்ளட்டும், விதி போல இருக்கு.... என்பது போன்றதான வெறும் வாசிப்பு ரசனைக்கான படைப்பல்ல இது.அழுத்தம்...அழுத்தம்...அப்படியொரு அழுத்தம்...திருத்தம்....ஒவ்வொரு வரியும் கடைந்தெடுத்து எழுதியது போன்று. காலத்தால் நிற்பது. அழுந்தி, ஊன்றி, நிமிர்ந்து, தன்னை நிலை நிறுத்திக் கொள்வது. இமையத்தின் இந்தத் திருநீர்சாமி .


கருத்துகள் இல்லை:

  'குற்றம் புரிந்தவன்'  - சிறுகதைத் தொகுப்பு - புஸ்தகா.கோ.இன்  - ல் வெளியிடப்பட்டுள்ளது.    (www.pustaka.co.in) --------------------...