10 ஆகஸ்ட் 2019

“கால் விலங்கு…!” நெடுங்கதை


நெடுங்கதை                    உஷாதீபன்,                                                  
                 “கால் விலங்கு…!”                  
    ----------------------------------   
ந்த இடத்தில் கடை அமைந்ததில் இன்னும் அவருக்குத் திருப்தி வந்திருக்கவில்லை. அனலாய் நெஞ்சிலிருந்து கிளம்பும் மூச்சுக் காற்று நாள் பூராவும் இதை அழுத்தமாய்ப் பறைசாற்றிக் கொண்டிருந்தது. யாரிடமும் வாய்விட்டுச் சொல்ல முடியாத அமைதியில் கழித்தார். சொந்த மனைவியிடமும் துயரத்தைப் பகிர்ந்து கொள்ள இயலாத பொழுதுகள். தனக்குச் சாதகமான பதில் யார் தருவார்கள் என்பதாய் எதிர்நோக்கி அவாவிய மனம்.. அப்படியான பதிலைத் தருபவர் யார் என்று நினைவில் கொண்டுவர முடியவில்லை. புதிய இடம். வந்து செல்வோர் எவரும் இதைப்பற்றிப் பேச வாய்ப்பில்லை. தன்னுடைய தற்போதைய நிலைதான் தன்னை இந்த அளவுக்கு யோசிக்கத் தூண்டியிருக்கிறது. பொருத்தமில்லாத காலத்தில், பொருத்தமில்லாத முடிவை எடுத்து இப்படி வந்து உட்கார்ந்திருக்கிறோமோ என்று தோன்றிக்கொண்டே இருந்தது. இன்னும் தானே அந்த இடத்தோடு இஷ்டமாய்ப் பொருந்தவில்லை. கடந்து செல்லும் நாட்கள் தன்னைப் பொருத்திவிடும் என்கிற நம்பிக்கையும் ஆழமாய் எழவில்லை.
     எடுத்து வைத்த அடுத்த அடியில் இப்படியொரு சிக்கல் வந்து உட்கார்ந்து கொள்ளும் என்று நினைத்திருக்கவில்லை.  வேறு வழியில்லாமல்தான் இந்த முடிவு எடுத்தார். தனக்கு சாந்தி ஏற்படுகிறதோ இல்லையோ, குடும்பத்திற்கு அது உதவும். தனது இருப்பு தரும் நிம்மதிதான் இப்போது முக்கியம். அதிலேயே எல்லாமும் கிடைத்துவிட்டதுபோல் இருக்கிறார்கள் வீட்டில். ஆனால் தான் இன்னும் ஸ்திரப்படவில்லை. போகப் போக எல்லாமும் சரியாகலாம் என்கிற சராசரிச் சிந்தனைக்குள் தன்னை இழுத்துக்கொள்ள அவர் மனம் ஒப்பவில்லை. அதற்குக் காரணம் அவர் அதுநாள்வரை காலம் கழித்த இடங்கள் அந்த அளவுக்கு நம்பிக்கையைத் தந்திருந்தன. தனக்கென்றே, தன் வசதிக்கென்றே ஒதுக்கப்பட்ட இடங்களாய்த்தான் இதுவரை அமைந்துள்ளன. அந்த இடங்களை மதித்து அவரும் தன்னைத் தரமாய் நிலைநிறுத்திக் கொண்டார். அமைஞ்சா இப்டி அமையணும்யா என்று எல்லோரும் சொன்னார்கள். அவர்களை அவர் மதித்தார். பதிலுக்கு அவர்களும்.
     அலைந்து, அலைந்து அந்தப் பகுதியைக் கண்டு பிடித்து, இருக்கும் போக்குவரத்து நெரிசலையும், ஜன நடமாட்டத்தையும், கடை கண்ணிகளையும் கண்ணுற்று, அமைந்தால் நன்றாய்த்தான் இருக்கும் என்று நினைத்தது என்னவோ வாஸ்தவம்தான். அப்போதும் ஒரு வேளை….என்ற ஒர் ஐயமும் மனதில் இருந்து கொண்டிருந்ததை மறுதலிக்க முடியவில்லை. அந்தச் சந்தேகம் வந்தது நியாயம்தான். அது காலம்வரை இருந்த இடங்கள் பெரிய நகர்ப்புறங்கள் அல்ல. அப்படி மாறிக் கொண்டிருந்தவை. ஆனால் அவர்பாடு நன்றாய்த்தான் கழிந்தது. எல்லாம் தன் அதிர்ஷ்டம்தான் என்று நினைத்திருக்கிறார். வியாபார ஸ்தானம் தன்னிடம் பலமாய்த்தானிருக்கிறது என்கிற நம்பிக்கை இருந்தது. அந்தச் சந்தேகம் எழுந்துள்ளது முதன்முறையாய் இப்போதுதான்.
     அப்படி வந்தால் பார்த்துக் கொள்ளலாம் என்பதாய் மனம் சமாதானம் சொல்லியதையும் இப்போது நினைத்துப் பார்த்துக் கொண்டார். அந்த வார்த்தைக்கு என்ன பொருள் என்று மனம் மீண்டும் தோண்ட ஆரம்பித்திருப்பதையும், அந்தப் பார்த்துக் கொள்ளலாமிற்கு அப்போதே ஏன் விடை சொல்லிப் பார்க்கவில்லை என்ற கேள்வியும் இப்போது இடித்தது.
     கண்ணாடிப் பெட்டியின் மீது கையை ஊன்றி, மோவாயில் விரல்களை வைத்துத் தாங்கி, இடதும் வலதுமாகப் பார்வையைச் செலுத்தினார். எதிரே சுவற்றில் மாட்டியிருந்த கண்ணாடியில் முகம் தெரிந்தது. தலை முடி முழுக்க வெளுத்துப் பஞ்சாய்ப் பறந்திருந்ததை இன்றுதான் உற்றுக் கவனித்ததாய் உணர்ந்தார். ஊருக்கு ஊர் கடை வைத்து அலைந்து அலைந்தே அவர் காலம் கழிந்து விட்டது. எதிலும் ஸ்திரமாய் நிற்க முடியவில்லை என்பதுதான் துரதிருஷ்டம். முன்னோர்களின் ஜவுளி வியாபாரத்தில் ஆரம்பித்து, சில காலம் தொடர்ந்து, இடம் பெயர்ந்து பெயர்ந்து ஊர் மாறி நாடோடி போல் கழித்து,  இன்று எண்ணெய்ச் சரக்குப் போடும் இந்த கைபாகத்தில் வந்து நிற்கிறது பிழைப்பு. காலம்தான் ஒரு மனிதனை எப்படியெல்லாம் அலைக்கழிக்கிறது? யதாஸ்தானம் என்று ஒன்று நிரந்தரமாக அமையாமலே போனதே? ஜாதக விசேஷம் போலும் என்று நினைத்து சமாதானம் கொள்வார்.
ஜனம் நிறையப் போய்க் கொண்டும் வந்து கொண்டும்தான் இருந்தது. வாகனங்களும் பறந்து கொண்டுதான் இருந்தன. நாலு கடை தள்ளி ஒரு டீக்கடையில் கூட ரெண்டு மூன்று பேர் நின்று கொண்டிருந்தார்கள். அது பழம் பெரும் கடை என்பதை அதன் இருப்பே சொல்லியது. பழகிய இடம். பழகிய மனிதர்கள் அங்கங்கேதானே போவார்கள், வருவார்கள். இங்கும் வந்து பழகிவிட்டார்களெனில் பிறகு வந்து நிற்கப் போகிறார்கள், இதென்ன பெரிய அதிசயம்?  ஆனால் எதன், எவர்  பார்வையும் இந்தப் பக்கம் திரும்பாதது கண்டு மனம் பெருவாரியாகத் துணுக்குற்றது. ஒரு புதிய கடை சமீபமாய் இங்கே உருவாகியிருக்கிறதே என்று ஏன் தோன்றவில்லை. என்னன்னுதான் பார்ப்பமே என்று நினைத்து அணுக மாட்டார்களா?
     சற்று உள்தள்ளிக் கட்டடம் ஒடுங்கலாக அமைந்து போனதோ என்பதாக நினைத்து இருபக்கக் கடைகளையும் ஒரு முறை திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டார். ஒரு பக்கம் பெரிய பாத்திரக்கடை ஒன்றும், இன்னொரு பக்கம் பலசரக்குக் கடை ஒன்றுமாக அகல விரிந்திருந்ததும், இரண்டுக்கும் நடுவே தன் கடை உள் ஒடுங்கிக் காணப்படுவதையும் அப்போதுதான் அவர் மனம் தெளிவாய் வாங்கியது. வாசலில் வரிசையாகத் தொங்க விடப்பட்டிருந்த அலுமினியப் பாத்திரங்கள் வெயிலில் ஜொலித்தன. அவை தன் கடையின் பார்வையை மறைப்பதாய் இருந்ததைக் கவனித்தார். இடது பக்கத்துப் பலசரக்குக் கடையிலும் அப்படியே. சணல் அடுக்குகள், உருண்டையாய்,  சரம் சரமாய்த் தொங்கிக் கொண்டு, துடைப்பங்களும், ப்ளாஸ்டிக் வாளிகளும், குழந்தைகளுக்கான பந்து மற்றும் விளையாட்டுச் சாமான்களும் ஊருக்கே தெரிவதுபோல் தொங்கின. அந்தா, அங்க ஒரு கடை இருக்கு பார்…என்று ஒரு பர்லாங்கிலிருந்து கூட கை காட்டிக்கொண்டு  வந்து விடலாம் போலும்…!
எல்லாமாய்த் தங்களைப் பளீரென்று வெளிப்படுத்திக் கொண்டு, இவரிடத்தை உள்ளே தள்ளிவிட்டனவாய்த் தோன்றியது. கடை வைக்க என்று ஏற்ற இடத்தைத்தான் பார்க்க முடியும். இப்படியெல்லாமும் சங்கடங்கள் வரும் என்று எதிர்பார்க்க முடியுமா? இன்றைய தேதியில் பார்க்கத்தான் வேண்டும் என்று அவர் மனம் சொல்லியது. போகிற போக்கில் அப்படியே கஷ்டமில்லாமல் ஒதுங்கி ஓரமாய் நின்று கையை நீட்டி வாங்கிச் சட்டுச் சட்டென்று விண்டு, விழுங்கி விட்டுத் தூக்கி எறிந்து விட்டுச் செல்லும் சுலபமான வசதி வேண்டும். நாலு படி ஏறவோ, நெரிசலை ஒதுக்கிக்கொண்டு உள்புகவோ, கையை நீட்டி நீட்டிக் காத்திருந்து வாங்கவோ, தேடிப்பிடித்து எங்கே என்று வந்து நிற்கவோ யாரும் எவரும் தயாராயில்லை. எல்லாமும் எளிதாய் இருக்க வேண்டும் என்று மாறிவிட்ட காலம்.
     பதினாலுக்குப் பத்து என்ற அளவில் அந்தச் சிறிய இடம் தன்னுடைய வியாபார நடைமுறைக்குப் போதும்தான். எடுத்த எடுப்பில் அந்த அளவே இவருக்கு உதைத்தது. அதென்ன பதினாலு… வைத்தால் பதினாறு, இல்லையெனில் பதினெட்டு…இதுதானே கணக்கு…என்று வாஸ்து மனத்தில் இடத்தை அளவிட்டார். அகலமாவது பன்னிரெண்டு என்று இருக்கக் கூடாதா? என்று தோன்றியது.
     என்ன பார்க்குறீக…? அளவுதானே…? அதுக்குத்தான் ரெண்டு ப்ரொஜெக் ஷன் ஷெல்ஃப் கொடுத்திருக்கேன் பாருங்க….நீங்க நினைக்கிற இடசாஸ்திரம் அதுல அட்ஜஸ்ட ஆயிடும்…..கடைகளுக்குன்னா இப்டி எதாச்சும் பண்ணிக்கிடலாம்….வீட்டுக்குத்தான் ஆகாது….
     இடத்தை வைத்திருக்கும் அவர் சொல்லிவிட்டார். வியாபாரம் பார்க்க வேண்டிய இவருக்குத் திருப்திப் பட வேண்டாமா? ஆனாலும் அந்த இடத்தை விட ஏனோ மனமில்லாமல் போனது.
அதற்கு மேலும் பெரிய இடமாகப் பார்த்து வாடகை கொடுத்துக் கட்டுப்படி ஆகாது. இடம் இன்னும் முன்னோக்கி நின்று, சற்றுப் பார்வையாய் அமைந்திருக்கலாம் என்கிற அளவில் மட்டும் சமாதானமாய் நினைக்க வேண்டியிருந்தது.
     முன்னால் ஒரு அடி தூரத்திற்கு ஒரு அரை அடி உயர மேடையை நீளமாக அமைத்து, அணைப்பாய் வைக்கும் கண்ணாடிப் பெட்டியை மட்டும் இன்னும் கொஞ்சம் வெளி உலகத்திற்குத் தெரிவது போல் பார்வையாய்க் கொண்டு நிறுத்தினால், சரியாய்  இருக்கும் என்று மனம் சொல்லியது.
     தோன்றுவதையெல்லாம் வாய்விட்டுச் சொல்லுவதில் தன்னிடம் வாழ்நாள் பூராவும் ஏதோ ஒரு தயக்கம் கூடவே இருந்து கொண்டு வந்திருப்பதை உணர்ந்தார். அப்படிச் சொல்லாததினாலேயே, கட்டாயமாய்ச் சொல்லப்பட வேண்டியவை சொல்லாமல் போனதுவும்,அமைதி காத்ததினாலேயே அல்லது சொல்லத் தெரியாததினாலேயே, தான் பற்பல நஷ்டங்களை எதிர்நோக்க வேண்டி வந்து விட்டதையும், எண்ணிப் பார்த்துக் கொண்டார். அமுங்கி அமுங்கி இருந்து இருந்து, எதிர்நோக்கிய நஷ்டங்கள்தான் அதீதம்.
     முதலாளிகளுக்கு வேலை பார்த்துப் பார்த்து, அல்லது ஒருவனுக்கு உழைத்து உழைத்தே ஒடுங்கிப் போனோம் என்பதைத் தவிர வேறு என்ன கண்டோம் வாழ்வில். வருடக் கணக்காய் இன்னொருவனுக்குத் தத்தம் செய்த இந்த உழைப்பை என்றோ தனக்கானதாய்த் திருப்பி விட்டிருந்தால், தான் இருக்கும் இடமே இன்று வேறு…! அது ஏன் தோன்றாமலே போனது? இப்பொழுது புலம்பினால் சிரிப்பார்கள்.
     ஆசையிருக்கு தாசில் பண்ண, அதிர்ஷ்டம் இருக்கு கழுதை மேய்க்க……
     மனைவி சிவகாமியின் வார்த்தைகள் உடனே வந்து அவர் கன்னத்தில் அறைந்தன. எப்பொழுது பேசினாலும் அவள் இதைச் சொல்லாமல் இருக்க மாட்டாள். அதைச் சொல்லிக் காட்டிக் குத்திக் குதறுவதில் அவளுக்கு ஏதோவோர் இன்பம்தான். சொன்னால் சொல்லிவிட்டுப் போகிறாள்… இந்த உரிமை கூடவா அவளுக்குக் கிடையாது? ஆனாலும் இதை அவ்வப்போது சொல்லும் அவள், தன்னின் அடுத்தடுத்த கட்ட நடவடிக்கைகளை ஏன் தடுத்து நிறுத்தவில்லை? தன்னைத் திசை திருப்பி விட்டிருந்தாளானால் இதை இன்னும் அழுத்தம் திருத்தமாகச் சொல்ல அவளுக்கு உரிமை இருக்கிறதுதான். அப்படிச் செய்யவில்லையே?
     மீண்டும் மீண்டும் வியாபாரம் என்று போனபோதெல்லாம். இதுவாவது நிலைக்கிறதா பார்ப்போம் என்பதாகத்தானே அவளும் மௌனம் காத்தாள். நிச்சயம் இந்த முறை எல்லாம் ஜெயம்தான் என்று ஒரு முறை கூட அவள் தன்னை வாழ்த்தி அனுப்பியதில்லையே…! ஆதரவும் இல்லை, விலகலும் இல்லை என்று இருந்துவிட்டு,
     நாளப்பின்னே திரும்பி வந்தால், இடித்துக் கூற ஏதுவாய் இருக்கும் என்று நினைத்தாளோ? என் முழு இஷ்டம் இதில் இல்லை என்பதை அவளின் அடர்ந்த மௌனம் மூலம் பறைசாற்றினாளோ? நான் சொன்னால் கேட்கவா போகிறீர்கள்? உங்க இஷ்டப்படி என்ன செய்யணுமோ செய்யுங்க….இப்படியான இருப்பா?  
     என் தீர்மானமும் முடிவும் இதுதான், நீங்களாக எதுவோ செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று விலகி நிற்கும் தன்மை. அத்தோடு அவள் பொறுப்பு முடிந்ததா இந்தக் குடும்பத்தில்? நாளைக்கு நான் கொடி கட்டிப் பறந்தேனென்றால் அதை அனுபவிக்க மட்டும் வருவாயே, அது சரியா?
     ம்ம்ம்….அது என் உரிமை….அதை யாரும் கேட்க முடியாது….. – சிவகாமி பதிலிறுப்பதுபோல் நினைத்து சிரித்துக் கொண்டார் பஞ்சு.
                                ( 2 )
     ற்கனவே பல நாளா இருக்கிற கடையைப் போல சகஜமாத் திறந்திட்டீங்களே சாமி…..ஒரு மைக் செட்டு, பாட்டு….ஒண்ணு இல்லையே….?
     அதெல்லாம் நமக்கெதுக்கு? விற்கிற  பண்டம் பேசணும். அவ்வளவுதான்.  நம்ப கைபாகத்தைப் பத்தி….தெரிஞ்சு, புரிஞ்சு வர்றாங்களா இல்லையா பாருங்க…..
     ம்…ம்….நல்லாத்தான் இருக்கு, யாரு இல்லேன்னு சொன்னா…..இந்த ஏரியாவுக்கு இந்த ருசி புதுசுதான்….ஆனாலும் சேவு இருக்கு பாருங்க….அதுல இன்னொரு வெரைட்டி போட்டுடுங்க….இந்தப் பக்கத்து சனம் அதுக்குப் பழகிப் போச்சு….சிவப்பா, பட்ட மிளகாயை அரைச்சு ஊத்துவாங்களே….நுனி நாக்குல சுள்ளுன்னு உரைக்கும்…..அது வேணும் இந்த ஆளுங்களுக்கு…..அந்தக் காரம் இருந்திச்சுன்னு வைங்க….உங்களப் பிடிக்க முடியாதாக்கும்…..
     ச்ச்சை…..அதை மனுஷன் பண்ணுவானா? சனங்களக் கெடுக்கிறதுக்காகவா கைபாகம்? அவுங்க ருசியை மேம்படுத்துறதுக்காகத்தான், உடல் நலத்தைப் பாதுகாக்குறதுக்காகத்தான்  எல்லாமே….மிளகுக் காரம் வேணும்னா இன்னும் கொஞ்சம் ஏத்திடுவோம்….மிளகாய்க் காரம் ஆகாது….அப்டி பிஸ்னஸ் நமக்கு வேணாம்…..அப்புறம் கடைக்கு முன்னால மயங்கி நிற்கிற கூட்டமாப் போகும்….
     நின்னா நின்னுட்டுப் போறாங்க…உங்களுக்கென்ன? துட்டு வருதுல்ல… வியாபாரம் முக்கியமா, ருசி முக்கியமா?
     ருசியை முதலா வச்சித்தான்யா வியாபாரமே….! அது உடம்புக்குக் கேடு பண்ணாததா இருக்கணும்….அதான் நம்ப தாத்பரியம்…..இத்தனை வருஷமா எத்தனை எடத்துல கடை நடத்துனாலும், இதை மட்டும் நான் கைவிட்டதில்லையாக்கும்….நாளப்பின்ன நான் அடைச்சிப் போட்டாலும், நாலு பேராவது என்னைப் பத்திப் பேசணும்….நான் கொடுத்த பொருளுக்காக ஏங்கணும்…அதுதான் எனக்கு வேணும்….
     அந்த கார மிளகாய்ச் சேவை, குடு குடுங்கிறவங்க…மத்ததையும் விட்டு வைக்கவா போறாங்க….உங்க கை பாகத்துக்கு எல்லாமும் தூள் தட்டிடும் சாமீ….
அமைதியாய் இருந்து விட்டார் பஞ்சு. ஏற்றுக் கொண்டாரா, மறுத்தாரா? – பாலுச்சாமி, மீசையை விடாமல் முறுக்கிக் கொண்டே இருந்தார். ஏற்றுக்கொள்ளாத கோபம் அதில் தெரிகிறதா பார்த்தார் பஞ்சு.  அந்த கவனத்தில் அவர் மேலும் தொடர மாட்டார் என்று உணர்த்தியது. கட்டடச் சொந்தக்காரரிடம் மேற்கொண்டு எதற்குப் பேச்சை வளர்த்துக் கொண்டு? ஆரம்பமே இடிக்கிறதோ? அவரிடத்தில் வாடகைக்கு இருந்தால், அவர் சொல் பேச்சைக் கேட்க வேண்டுமா? இதென்ன கூத்து? எத்தனை வருஷமா இந்த ஃபீல்டில் இருக்கேன் நான்? எனக்கேவா யோசனை?
ரசு…அங்க என்ன பண்றே? – என்றார் பஞ்சு. இடையிடையே கவனம் இருந்து கொண்டுதானிருந்தது. திசை திருப்ப வேண்டியிருக்கிறது. அவன் நிலை அப்படி.
ம்உறீம்…ஒண்ணுமில்லே……. – பதறியவனாய்த் தனக்குத்தானே தலையாட்டிக் கொள்வது தெரிந்தது.
சொல்லப் போனால் அவனுக்காகத்தான் இந்த முறை உள்ளூரிலேயே கடை போட்டது. கடைசியாய் வைகை அணைக் கடை வியாபாரம் படுத்துப் போனதற்கே அவன்தான் காரணம் என்று அவர் மனம் சொல்லியது. எத்தனை ஜரூராய் நடந்த வியாபாரம். கொஞ்சம் கொஞ்சமாய்ப் பெருக்கி விடலாம் என்று கட்டிய ஆசைக் கோட்டை தகர்ந்து போனதே…! சும்மாச் சும்மா மூடி விட்டு வந்தால், பிறகு எவன் நாடி வருவான்?
என்னைக்குத் திறக்கும்னே தெரில…ஏஞ்சாமி, பிறவு உங்களை நம்பி எப்டி வர்றது? கூலி  வேலை செய்யும் தொழிலாளிகள், ஒரு நாள் மொத்தமாய் நின்று கேட்டார்கள். தள்ளித் தள்ளி வெகு தூரத்தில் வேலை பார்த்தாலும் தேடிக் கொண்டு வரும் நாக்கு ருசி அறிந்தவர்கள். தரம் உணர்ந்தவர்கள்.
சாமிட்ட வந்து பசியாறினாத்தான் மனசுக்குத் திருப்தி….அடிக்கடி இல்லாமப் போயிடுறீகளேய்யா….? எங்களுக்காகவாவது திறந்து வைக்கக் கூடாதா?
இவன் வீட்டில் பண்ணும் கலாட்டா பொறுக்க முடியாமல் பஸ் ஏறி ஓடி ஓடி வந்து, அவனைப் போட்டு மிதித்து, துவைத்து….
புத்தி சரியில்லாத பிள்ளையைப் போட்டு இப்டியா அடிக்கிறது? உங்களைக் கண்டுட்டா ஒரு மாசத்துக்கு அப்புறம் சரியா இருப்பான்கிற நம்பிக்கைல வரவழைச்சேன்… மிதிச்சு சவட்டவா கூப்பிட்டேன்…..இடங்கேடா எங்கயாவது பட்டுத் தொலைச்சிதுன்னா? அப்புறம் அதுக்கும் நாமதானே படணும்…? பேசாம உங்க கூடவே கூட்டிண்டு போயிடுங்கோ….இங்க என் பிள்ளேளாச்சும் நிம்மதியா இருக்கட்டும்…படிக்கிற பிள்ளைகளுக்கு கவனம் சிதர்றது….
அப்போ இவன் உன் பிள்ளையில்லையா? சொல்லுடீ…இவனை நீதானே வளர்த்தே….அந்தப் பாசம் போயிடுத்தா? உன்னை நம்பித்தானே ஒப்படைச்சிட்டு மூத்தவ வானகத்துக்குப் போனா….அதுக்குள்ளேயும் மறந்துட்டியா? அவ அங்கிருந்து பார்த்திண்டிருக்காடீ…! கை விட்டேன்னா அந்தப் பாவம் உன்னைத்தான் சேரும்…உன் பிள்ளைகள் உருப்பட வேண்டாமா? நன்னாயிருக்க வேண்டாமா?
ஆமாம்…எங்கிட்டஒப்படைச்சதைமறந்துட்டேன்….இருபத்தஞ்சுவருஷமாச்சு…இப்பக்கேளுங்கோ….     அதுனாலதான் கூடவே வச்சிண்டு பாடாப் பட்டுண்டிருக்கேன்….துரத்தியா விட்டுட்டேன்…நீங்க அடிக்கப்படாதுங்கிறதுக்கு அப்டிச் சொன்னேன்…மனசு கேட்கலை…அது தப்பா?
ஒரு முறையா, இரு முறையா? எத்தனை தடவைதான் ஓடி ஓடி வருவது?
கலகம் பண்றதே உனக்குத் தொழிலாப் போச்சா…தாய்ளி…இன்னைக்கு உன்னை வகுந்துப்புடறேன்…. – சே…! என் வாயிலுமா கெட்ட வார்த்தைகள்? சதா மந்திரம் ஜெபிக்கும் வாயில் நாராசமான வார்த்தை எப்படிப் புகுந்தது? ஈஸ்வரா…என்னை ஏன் இப்டிச் சோதிக்கிறே? தவறைச் செய்வதை விட, தவறாய் நினைப்பது கூடத் தண்டனைக்குரியது என்பதுதானே ஆன்மீகம்…! அதனால்தானே இந்த மனதுக்குள் முழுவதும் நல்லதைப் போட்டு நிரப்பி விடு என்கிறார்கள்.
உன்னை எந்த எச்சிப் பிசாசுடா போட்டு ஆட்டறது? அதை என் முன்னாடி வரச்சொல்லு…நெரிச்சிப்புடறேன்….தனிக்குடித்தனம் போகாதடா…போகாதடான்னு தலையால அடிச்சிண்டேன்….கேட்டியா? எங்கயோ போய், என்னவோ கருமாந்திரத்தை சுருட்டிண்டு வந்து இப்டி நிக்கிறே…! எவளோ எங்கியோ எதுக்கோ தூக்கு மாட்டிண்டான்னா, அவள் உன்னையா வந்து பிடிக்கணும்? உன்னை உன் பெண்டாட்டில்ல பிடிச்சிருக்கணும்? இல்லைன்னா அவளை நீ பிடிச்சிருக்கணும்…பதிலா பிசாசப் பிடிச்சிண்டிருக்கே…!  எனக்கென்னன்னு அவ கம்பி நீட்டிட்டா…இங்க உக்கார்ந்திண்டு மூக்கைச் சிந்திண்டிருக்க முடியுமா? அதாச்சும் உனக்குத் தெரியுமா? உன் புத்திக்கு அது ஏறித்தா? புத்தியிருந்தாத்தானே ஏர்றதுக்கு? ஸ்வாதீனமில்லாதவன்ட்ட என்னத்தன்னு சொல்றது? எல்லாம் என் தலையெழுத்து…!
திரும்பிப் பார்த்தார் பரசுவை. எங்கோ வெட்ட வெளியில் நிலைத்த வெறித்த பார்வை. கண் முன்னால் தெரியும் எதையோ நினைத்து, வெளிப்படும் அசட்டுச் சிரிப்பு.வாய் ஓரத்தில் ஒழுகும் எச்சில்கூடத் தெரியாமல். வழியும் சளியைத் துடைக்கத் தெரியாமல்,  அந்த அமானுஷ்ய உருவத்தோடு இஷ்டமாய்ப் பேசும் மாயப் பித்து.. அசட்டுச் சிரிப்பு, சந்தோஷம்…உருவம் தெரியாத வார்த்தைகள்…பின் அழுகை…விசும்பல்….இத்யாதி…இத்யாதி….
இவனை இந்த நிலையில் இங்கே பார்த்தால், வர நினைப்பவர்கள்கூட நின்று கொள்வார்களோ? அங்கங்கே தரையில் சிந்தியிருக்கும் சட்னி, சாம்பாரை, ஒழுகி ஓடும் தண்ணீரைத் துடைத்து விட வேண்டும் என்ற உணர்வு கூட இல்லாமல்…இம்மாதிரி உப்புக்குச் சப்பாணியாய் இருப்பான், இருக்கட்டும் என்றுதானே அழைத்து வந்தது. சொன்னால்தான் தன்னுணர்வு பெறுவான், செய்வான். இல்லையெனில் அவன் உலகம் தனி. சுற்றிலும் பூகம்பம் வந்தாலும்…நெருப்பு பற்றி எரிந்தாலும்….எதுவும் தெரியாது….
ஏன் சாமி இவரு இப்டி இருக்காரு…? தம்பி உங்க பையனுங்களா?
ம்…என்று தலையசைத்தார் பஞ்சு. அதற்கு மேல் ஒன்றும் சொல்லாதது அவரை என்ன செய்ததோ?
இப்டி ஒருத்தரையும் வச்சிக்கிட்டு இங்க எப்டி ஓட்டுவீங்க சாமீ…? வர்ற ஆளுக ஒருமாதிரி நினைக்க மாட்டாகளா?
நீங்க நினைக்கிற மாதிரியெல்லாம் இல்லை….உசுப்பி விட்டா அவன்பாட்டுக்கு வேலை செய்வானாக்கும். சும்மா உட்கார்த்தி வச்சா இப்டித்தான்…அதுக்கு விடப்படாது…..
டே பரசு, அந்தக் குடத்துத் தண்ணிய எடுத்து, வாசல் தொட்டீல ஊத்து…..தண்ணி குறைஞ்சிருக்கு பார்…..-ஏதோ சகஜமான மனுஷனுக்குச் சொல்வதுபோல் இயல்பாய்ச் சொன்னார் பஞ்சு. அவர் முன்னால் அவனைக் குறைத்துக் காட்டிக் கொள்ள விரும்பாதவர் போல…
அதற்கு இப்போது அவசியமில்லைதான். அரைத்தொட்டித் தண்ணீர் அப்படியே கிடந்தது. காலையிலிருந்து வியாபாரம் அத்தனை வேகமில்லை என்பதைக் காட்டும் அடையாளம். கடை திறந்து ஒரு மாசத்துக்கும் மேல் ஆயிற்று. இன்னும் சூடு பிடிக்கவில்லை. மனதுக்குள் கிடந்து அடித்துக் கொள்ளும் துக்கம். இதுவரை வாழ்நாளில் பார்க்காதது. தன் தொழிலை நம்பி வாழ்ந்தாயிற்று இதுகாறும். இப்போது அதற்கு சோதனை.
நன்றாய் நடந்த வைகை அணை உணவு விடுதி. எவனாவது வியாபாரம் உச்சத்துல இருக்கிற போது கடையை மூடுவானா? அடைச்சிட்டு, அடைச்சிட்டுக் காணாமப் போவானா? எல்லாம் இந்தப் பாழாப் போன கிறுக்குத் தாயளியினால….இவனுக்கு எழவு கூட்டவே என் ஆயுசு போயிடும் போலிருக்கு….ச்சே…! ஏனிப்படி வாயில் நாராசமாய் வருகிறது? ராம்…..ராம்….ராம்….ராம்…..! கன்னத்தில் மாறி மாறிப் போட்டுக் கொண்டார்.
இன்னும் அப்பகுதிச் சனம் தன்னைத் தேடிவரவில்லைதான். வருவார்கள் என்கிற நம்பிக்கையில்தான் அவர் சரக்குகளைப் போட்டு அடுக்கியிருந்தார். கண்ணாடிப் பெட்டியில் எல்லாம் நிரம்பி வழிந்தன. அதன் பளபளப்பைப் பார்த்தே ஆட்கள் வந்து நிற்க வேணும். அதுதான் அவர் ஆசை. ஜிலேபியும் அது மிதக்கும் ஜீராவும்…சீட்டுக் கட்டாய் அடுக்கி வைத்திருக்கும் நெய் பளபளக்கும் மைசூர்பாகும்…வாயில் போட்டால், நிதானிக்கும் முன்,  கணத்தில் நழுவி ஓடும் கோதுமை அல்வாவும். வறுத்த அவலும், பொட்டுக் கடலையும், சிவந்து கறுத்த நிலக்கடலையும், வாழைக்காய் வறுவலும், நன்றாய்ப் பொடித்துக் கலந்த  ஓமப்பொடியும், காராபூந்தியும், காட்டும் கலவை அழகூட்டும் அந்த மிக்சர் அந்த ஏரியாவிலேயே ஒரு பயலிடமும் கிடையாது என்று சொல்லும் நாள் என்று வரும்?
அவரிடமிருந்து பெருமூச்சு வெளிப்பட்டது. ஒரு இடத்தின் வியாபாரத்தைக் கணிக்க ஒரு மாதம்தான் அளவுகோலா? தனக்குத் தன் பொருட்கள் மதிப்புமிக்கதாய், தரமானதாய் இருக்கலாம். தெரியலாம். ஆனால் அந்தப் பகுதியில் இவர் ஒருத்தர் கடை மட்டும்தானா ? வேற்று இடங்களில் பழகிய ஜனங்களை இங்கே இழுக்கச் சற்றுக் கால அவகாசம் வேண்டாமா? அண்ணன், தம்பி, மாமன் மச்சான் என்று உறவு கொண்டாடிக் கொண்டு கைகோர்த்து நிற்கும் சனம் அத்தனை சீக்கிரத்தில் மறு திசையில் பயணிக்குமா? திசை மாறி அடி பெயர்க்குமா? அந்த நேசத்தைத் தானும் வழங்குவோம்தான் என்றாலும், மெல்ல மெல்ல ஆட்கள் வர ஆரம்பித்தால்தானே ஆயிற்று.    
அட்டைப் பெட்டியில் அடுக்கப்பட்டிருக்கும் பேப்பர் ப்ளேட்டுகள் அப்படியே இருந்தன. கடை திறந்த அன்றைக்கு வாங்கிப் போட்டவை.
எங்களுக்கு இதுலெல்லாம் வச்சுச் சாப்பிடத் தெரியாது சாமி…நியூஸ் பேப்பரைக் கிழிச்சு, அதுல கொடுத்துடுங்க…சாப்பிட்டு, அதுலயே துடைச்சித் தூக்கி எறிஞ்சிடுவோம்….….
நம்ப பஜ்ஜில நீங்க எண்ணெய்யைப் பிழியவே வேண்டாம்….எடுக்கிறபோதே நன்னா வடிச்சித்தான் எடுப்பேன்…நேற்றைக்குப் போட்ட எண்ணெய்யை இன்றைக்கு ஊத்தமாட்டேனாக்கும்…அது வீட்டுக்குப் போயிடும்…அன்னன்னிக்குப் புதுசுதான்….டேஸ்ட்டைப் பாருங்கோ…ஏற்கனவே சுட்ட எண்ணெய்ன்னா தொண்டைல ஒரு கடுப்பு வரும்….கமறும்…பஜ்ஜி உங்க கைக்கு வர்ற போதே ஒருமாதிரி வாசனை காட்டிக் கொடுத்துடும்…அதெல்லாம் என் சரக்குல இருக்காது…நீங்க நம்பலாம்… தைரியமாச் சாப்பிடலாம்….வயித்துக்கு எதுவும் பண்ணாது…நா காரன்டீ…! – நம்பிக்கையை ஊட்டினார். அவர் நாலு பேரிடத்தில் சென்று சொல்லுவார்….அவர் வந்து சாப்பிட்டுப் பார்ப்பார்….அப்புறம் மேலும் நாலு பேருக்குப் பரவும்…இப்படியே…..பிறகு?
பிறகென்ன? மணி மூன்றரைக்கு மேலேயாயிடுச்சின்னா நம்ப சாமி கடைக்குப் போவோம்னு வர ஆரம்பிச்சிட மாட்டாங்களா? நல்லதுக்கு ஆதரவு கொடுக்கிறதுதானே ஜனங்களோட என்னைக்குமான குணம்….அடையாளம் தெரியணும் அவ்வளவுதான்….கப்புன்னு பிடிச்சிண்டுடுவாங்களே?
                                ( 3 )
ஞ்சு அய்யர் கன்னத்தில் வைத்த கையை இன்னும் எடுக்கவில்லை. எதற்கு இன்று இப்படி உட்கார்ந்து கொண்டிருக்கிறேன்? தனக்குத்தானே கேட்டுக் கொண்டார்.
மன விசாலங்கள் அவரை எங்கெங்கோ கொண்டு நிறுத்தின. கடையைத் திறந்து வைத்துக் கொண்டு இயங்குவது போய், இப்படியா இடிந்து கிடப்பது?
கண்ணாடிப் பெட்டியில் இனிப்பு மற்றும் காரச் சரக்குகள் இன்னும் குறைந்தபாடில்லை. ஒரு வாரத்திற்கான அளவு அவருக்குத் தெரியும். அதற்கு மேல் போனால் சிக்கு வாடை வந்து விடும் என்பதையும் அறிவார். ஒரு வாரம் என்பதே அவருக்கு ஒப்புதல் இல்லைதான். ரெண்டு நாள், அதிகபட்சம் மூணு நாள்… சரக்கு மாத்தியாக வேண்டும். அதுதான் சரி….காலம் அப்படிக் கை கொடுக்குமா? அதைப் பரிசோதிக்கத்தான் தினமும் வீடு செல்கையில் கொஞ்சம் எடுத்துச் செல்கிறார். சாப்பாட்டுக்கு வைத்துக் கொள்ள. அப்படியே அதன் ருசியையும் கணக்கிட்டு விடலாமே…! குறிப்பாக சிவகாமி கரெக்டாகச் சொல்லிவிடுவாள்.
இது வேண்டாமேண்ணா….அகத்துக்குக் கொண்டு வந்துடுங்கோ மிச்சத்தை….நாளைக்கு புது சரக்கு ஏத்துங்கோ…….
அவள் சொன்னால் வேத வாக்குத்தான் அவருக்கு. உடனே பரபரவென்று இயங்க ஆரம்பித்து விடுவார்…. எதைச் சொன்னாளோ அதை உடனே கடையிலிருந்து அகற்றி விடுவார்….
யாரும் பார்த்து, அதுதான் வேண்டும் என்றோ, சும்மாக் கொடுங்க சாமீ…உங்க ருசி எங்களுக்குத் தெரியாதா? என்று உரிமையோடு கேட்டாலும் மறுத்து விடுவார். இதுவரை வந்து பழகியவர்களில் ஓரிருவர் அப்படியும் கேட்கத்தானே செய்கிறார்கள். அந்த நாலு பேர் நாற்பது பேராக எவ்வளவு நாளாகும்? நம்பிக்கைதான் வாழ்க்கை…..
ஏ….! சாமி சொன்னாக் கேளுங்கப்பா….அவுர் சரக்கு படு சுத்தம்யா…..
பரசு, வா கடைக்குப் போய் பலசரக்கு சாமான் வாங்கிண்டு வருவோம்…
சிவகாமியின் ஆக்ஞையை நிறைவேற்றுவதில் முனைந்து விடுவார்.
அவன் என்னத்துக்குத் துணைக்கு…நீங்க போயிட்டு வாங்கோ…..
வரட்டும்டீ…இங்க மலங்க மலங்க உட்கார்ந்திண்டு  என்ன செய்யப் போறான்….? என் கூட வந்தாலாவது புத்தி மாறாட்டம் ஆகாதிருப்பான் இல்லையா…?
உள்ளூரில் கடை என்று ஆரம்பித்த பிறகு அவள் கை பாகம்தானே வேலை செய்கிறது. எதற்கும் சலித்துக் கொண்டதில்லை, பாவம். மாவில் பிள்ளையார் பிடித்து வைத்து, அதற்குக் குங்குமம் இட்டு, வணங்கி, இடது காலைக் குத்த வைத்துக் கொண்டு அமர்ந்த நிலையில், வளைய வளையமாய் அவள் முறுக்குச் சுற்றிய அழகிருக்கிறதே….அந்தக் கைக்குத்தான் என்னவொரு லாவகம்? கை எடுக்கும் மாவு அளவு,  அவள் நினைக்கும் சுற்று எண்ணிக்கைக்கு எப்படி இத்தனை சரியாக வருகிறது? எங்கே கற்றாள் இந்தக் கலையை? இவள் திறமையை வைத்துக் கொண்டு கல்யாண ஆர்டர்களையே கவனித்து ஜமாய்த்து விடலாம் போலிருக்கிறதே….
ஆசையிருக்கு தாசில் பண்ண…அதிர்ஷ்டம் இருக்கு…..தேவையில்லாமல் அவளின் எப்போதாவதுமான வார்த்தைகள் நினைவுக்கு வந்தன.  சிரித்துக் கொண்டார்.
அவள் வேலை ஆரம்பித்த அன்று உன் கைராசிக்கு நான் நின்னு நிலைப்பேண்டி….இது சத்தியம் என்றார் உணர்ச்சி மேலீட்டில்….
பதில் ஒன்றும் சொல்லவில்லை அவள். அப்படியானால் ஏன் வெளியூர் கடைகள் ஏதும் நிலைக்கவில்லை? என் கை பட்டால்தான் அது ராசியா? – மனதுக்குள் கேட்டுக் கொண்டிருப்பாளோ?
வாரச் சந்தையை எதிர் நோக்கியே பஞ்சுவின் மனம் பயணித்துக் கொண்டிருந்தது. வியாழக்கிழமைச் சந்தை அந்தப் பகுதிக்கு. நகரின் வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு கிழமைகளில் சந்தை நடக்கிறது. அன்று வழக்கமான வாடிக்கையாளர்களைவிட, புதிய நபர்களை எதிர்பார்ப்பார். பக்கத்துக் கிராமங்களிலிருந்து தேடிக் கொண்டு வர ஆரம்பித்திருந்தார்கள். போகும்போது வீட்டுக்கு  வாங்கிக் கொண்டு போனார்கள்.
அங்கு வந்து மூன்று, நான்கு சந்தைகளைப் பார்த்து விட்டார். இரண்டாவது சந்தையின்போதே அவர் மனம் கணக்குப் பண்ணி விட்டது. அடுத்த சந்தைக்கு கலந்த சாதங்களை அறிமுகப்படுத்தியாக வேண்டும் என்று. தன் எண்ணத்தை சிவகாமியிடம் சொன்னார்.
அதுக்குத் தாமரை இலை வேணுமேன்னா….என்றாள் அவள்.
தாமரை இலைக்கு இங்கே எங்கே போறது? வாழை இலை போதும்….தட்டு அளவுக்கு வட்டமா வெட்டி எடுத்துண்டு போறேன்…அடில துண்டுப் பேப்பரை வச்சு, நீட்டினா கைக்கு அடக்கமா வாங்கிச் சாப்டுடுவா….ரெடி பண்ணு….என்றார் பஞ்சு உற்சாகமாக.
பாவம் சிவகாமி….வெளியூரில் இருக்கையில் கொஞ்சம் விட்டேற்றியாக, ஃப்ரீயாக இருந்தாள். பரசுவுக்காக இங்கேயே வந்துவிட, இப்போது அவளின் பொறுப்பு அதிகமாகிவிட்டது. இந்த யோசனையே அவளுடையதுதான். அது அவளுக்கே பாரமாய் அமைந்தது.  கொஞ்சமாவது அந்த முகம் வாட வேண்டுமே…! சலிப்பாய்  ஒரு வார்த்தை இல்லை அவளிடம். எப்போதும் மலர்ந்த முகம். எது கேட்டாலும் கனிவாய்ச் சொல்லும் பதில். வாயில இருக்கு வார்த்தை என்பார்கள். அது சாமர்த்தியமாய்ப் பேசுவதற்கு மட்டுமில்லை. பதமாய் எல்லோரையும் அரவணைப்பதற்கும்தான் என்பதை அவளிடம்தான் கற்றுக் கொள்ள வேண்டும்.  பரணில் கிடந்த அளவான தூக்குச் சட்டிகளை வரிசையாய் எடுத்து, பளீரென்று விளக்கி வைத்திருந்தாள். இப்டிப் பாத்திரமெல்லாம் நம்ம வீட்ல  இருக்கா? என்று சொல்லிக் கொண்டார் இவர். அத்தனையும் சூரிய ஒளியில் ஜொலித்தன. ஒரு காரியத்தை நல்லபடியாய்ச் செய்ய வேண்டும் என்று நினைக்கும்போதுதானே அதன் தொடர்புடைய தேவைகள் மனதில் தோன்றுகின்றன. வக்கிரமாய் நினைத்தால்? எதுவுமே விளங்காது.
பொருள் சுத்தமா இருக்கும்ங்கிறதுக்கு அதை வச்சிருக்கிற பாத்திரமும் ஒரு அடையாளமாக்கும்…அந்த அடையாளம் நம்மையும் சேர்த்து அடையாளப்படுத்தும்… அவளாகவே சொல்லிக் கொண்டாள். தன் யோசனையின்படியான இந்த உள்ளூர் இருப்பு வெற்றி காண வேண்டும் என்ற ஆவல் அவளுக்கு.
பழைய நியூ சினிமாத் தியேட்டர் பக்கத்துல சாயங்காலம் ஆச்சுன்னா பால்கடை போடுவான். கள்ளிச் சொட்டா பால் மணக்கும். சுடச்சுட அதை வாங்கி உதட்டுல வைக்கிறதே தனிச்சுகம். மூக்குல ஏறும் அந்தப் பால் மணம்.  அதை விட அந்தப் பாலை வச்சிருக்கிற பெரிய குழாய்க் கேன் இருக்கே…எவர்சில்வர்ல….அதைப் படு சுத்தமா,  பளிச்சின்னு ஆக்கி, விபூதியைக் குழைச்சு மூணு கோடுகளைப் பட்டையாப் போட்டு நடுவுல சந்தனமும்,அதுக்கு மேலே  குங்குமப் பொட்டும் வச்சிருப்பான். அசல் சிவலிங்கத்தைப் பார்க்கிறா மாதிரியே இருக்கும். அவன் தொழில் பக்திக்கு அது அடையாளம். ஆட்களைத் தேடி இழுக்கிற உத்தி, நல்ல அடையாளமா இருக்கணும்ங்கிற கருத்து அவனுக்கு.  தொழில்லதான் என்னவொரு பக்தி….அவன் கடையைச் சுத்தி எப்பவும் கூட்டம்தான். ராத்திரிக்கு ஒன்பதுதாண்டினா பால்கிடைக்காது. கரெக்டா அந்த அளவுக்குத்தான் விற்பனை.….போதும்னு கடையை மூடிட்டுப் போயிடுவான்….தண்ணீர் கலக்காத அந்தக் கடைப் பாலைக் குடிச்சவங்க, வேறே இடத்தை நினைச்சே பார்க்க மாட்டாங்க….அதே மாதிரி ஆக்கணும்னா நம்ப கடையையும்….அதுக்குத்தான் உங்க லைனை நான் உள்ளூர்லயே திருப்பி விட்டேன்….நிலைக்கும் பாருங்கோ……
பரமேஸ்வரி…ராஜேஸ்வரி…ஜெகதீஸ்வரி….பாகேஸ்வரி…..நல் வாக்குத் தருவாயடீ…..
எங்கோ ஒலிக்கும் பாடல் காதுக்கு வந்தது.  அதன் அடுத்த வரி நினைவுக்கு வர மெல்லச் சிரித்துக் கொண்டார் பஞ்சு.
அன்று சந்தை என்று காலை ஏழுக்கெல்லாம் கடையைத் திறந்தாயிற்று.வாசலில் கூட்டிப் பெருக்கி, தண்ணீர் தெளித்து கோலமிட்டு, எல்லாமும் பஞ்சுவே செய்து விட்டார். சின்ன நட்சத்திரக் கோலம்தான். மங்கலமாய் ஆரம்பிக்க வேண்டும் என்பதே குறிக்கோள்.  பரசுவையும் குளிக்க வைத்து  நல்ல வெளுத்த வெள்ளை வெட்டி, சட்டை போட்டுக் கொள்ளச் செய்து, கூட இழுத்துக் கொண்டு வந்துவிட்டார்.
இன்னைக்கு வாரச் சந்தையாக்கும்….திகைச்சுத் திகைச்சு உட்காரப்படாது….பம்பரமா வேலை செய்யணும்….யாரும் எதுவும் சொல்ற மாதிரி வச்சுக்கக் கூடாது… யார்ட்டயும் வாயைக் கொடுக்காதே….வேலைமட்டும்தான் கவனம்….புரிஞ்சிதா? .
தலையாட்டிக் கொண்டான் பரசு. பாவமாய்த்தான் இருந்தது அவருக்கும். வேண்டுமென்றேவா அவனும் இப்படி இருக்கிறான். அவனையறியாமல் செய்துவிடுவதுதானே? தன் எண்ணங்களை மறப்பதும், தன்னை மறப்பதும், வேறோர் உலகில் சஞ்சரிப்பதும் அவனறிந்தா செய்கிறான்? வயது வந்த பிள்ளையை, அதுவும் கல்யாணம் ஆன ஒருத்தனை, எத்தனை முறை கைநீட்டி அடித்திருக்கிறேன்? புத்தியில்லாமல் இருக்கக் கண்டுதானே அத்தனையும் பொறுத்துக் கொண்டு கிடக்கிறான். அதைத் தடுக்கவாவது அந்தப் பெண் இருந்ததா? கட்டிய மனைவிக்கு என்ன கருத்து இருந்தது?
வேண்டாம், அவரை என்கிட்டே விட்டிடுங்கோ…நான் பார்த்துக்கிறேன்…. சொல்ல வேண்டாமா? அதைச் சொல்லியும் குற்றமில்லை. ஒருவருக்கொருவர் கலந்திருந்தால்தானே அந்தப் பாசமெல்லாம் வரக்கூடும். அதுதான் இருவரும் சேரவேயில்லையே? அதற்குள்ளேயும்தான் இந்த மாய்மாலம் நடந்துவிட்டதே…!
நான் எங்கண்ணாட்டப் போய் இருந்து, எதாச்சும் வேலைக்கு முயற்சி செய்றேம்ப்பா…..என்னை மன்னிச்சிடுங்கோ – சொல்லிவிட்டுக் கிளம்பிப் போனதுதான். அவனோடும் ஒட்டவில்லை. இந்தக் குடும்பத்தோடும் ஒட்டவேயில்லை. எல்லாம் காலத்தின் கோலம்.
அந்தப் பெண்ணைக் கட்டியதால் இவனுக்கு இப்படி வந்ததா? அல்லது கல்யாணத்துக்குப் பின் அவன் இப்படித்தான் இருப்பான் என்கின்ற தலைவிதியா? ஒரு வேளை திருமணம் பண்ணி வைக்காமல் இருந்திருந்தால் நன்றாய் இருந்திருப்பானோ? இந்த புத்தி பேதலிப்பு என்பது இருந்திருக்காதோ? எல்லாமும்தான் நினைத்துப் பார்க்கத் தோன்றுகிறது. மனித மனம்தானே?
பரசு….சட்னி கேட்கிறா பாரு….இலையைப் பார்த்துப் போடு…..நிக்கப்டாது….பார்சல் என்னன்னு கேளு… - உசுப்பி விட்டுக் கொண்டிருந்தார். என்னதான் ஜரூர் பண்ணினாலும் இயக்கம் மந்தம்தான். தனக்குச் சரி…பெற்ற பிள்ளை…விடலாகாது. கடைக்கு வருபவர்களுக்கு?
சாமீ, எடுத்தாங்க….நின்னுட்டே இருக்கீகளே…விரட்டத்தான் செய்தார்கள். அந்த உரிமை எடுத்துக் கொண்டாவது கடைக்கு வரட்டும்….அவனையும் மீறித் தன் கடை நிற்க வேண்டும். அதுதான் இப்போது முக்கியம் பஞ்சுவுக்கு. மனிதர்கள் இரக்க சித்தமுள்ளவர்கள். அத்தனை சீக்கிரத்தில், எளிதாய் ஒருவனை ஒதுக்கக் கூடிய உலகமல்ல இது. இருக்கும் இருப்பை உடனே புரிந்து கொண்டு அதற்கேற்றாற்போல் தங்களை மாற்றிக் கொள்கிறார்களே…! இறைவா, இப்படிப்பட்ட நேயமிக்க மனிதர்களுக்கு மத்தியில் என் பிள்ளையை நேராக்கி விடக் கூடாதா? அவர்களின் கருணையே அவனைப் பழைய பரசுவாக்கி விடாதா?
ஐயா, பரசுராமனுக்கு என்னவோ வந்திடுச்சி….அவர் உடம்புல எதுவோ புகுந்துக்கிட்டிருக்குன்னு தோணுது…அது என்னான்னு பாருங்க….இப்போதைக்கு என்னால அவ்வளவுதான் சொல்ல முடியுது…..கைக் கடிகாரத்தைத் தூக்கி அடுப்பிலே எறிஞ்சிட்டாரு….ஆர்டர் கொடுக்காமயே தோசையா வார்த்து, மலைபோல அடுக்கிட்டாரு…..தண்ணி எடுக்கிற ஆளை தோசைக் குரூப்பியால அடிக்கப் போயிட்டாரு…..தங்கமான பையன்….என்னவோ கிரகம்….சீக்கிரம் சரி பண்ணப் பாருங்க…பரசுவை என்னைக்கானாலும் என்கிட்டே திரும்பக் கொண்டு வந்து உரிமையோட நீங்க விடலாம்…தம்பி தங்கக் கம்பி….நான் வச்சிக்கிறேன்…நீங்க அதைப்பத்திக் கவலையே பட வேண்டாம்….நான் வர்றேன்யா…. – வேலை பார்த்த கடை முதலாளிதானே கொண்டு வந்து விட்டுப் போனார்…! அன்றிலிருந்து வீட்டோடுதான் அவன். அவனால் கொஞ்ச நஞ்சப் பாடா? கடவுள் கடையாணியை வைத்து என் தலையில் எழுதி விட்டானோ? என்னை இந்தப் பாடு படுத்திப் பார்ப்பதில்தான் அவனுக்கு என்னவொரு சந்தோஷம்?
                                ( 4 )
முன் ஜாக்கிரதையாய் வேனில் கொண்டு வந்து இறக்கியிருந்த இரண்டு  நீள பெஞ்சுகள் நிறைய ஆட்கள். அது போக நாலைந்து பேர் வேறு வாசலில் காத்திருந்தனர். காலையிலிருந்தே போட ஆரம்பித்திருந்த வடையும், பஜ்ஜியும் நிற்காமல் பறந்து கொண்டிருந்தன. கலந்த சாதங்கள் பகல் பதினோரு மணிக்கெல்லாம் வர ஆரம்பித்திருந்த கூட்டத்திற்கு  நகர்ந்து கொண்டிருந்தது. சாயங்காலம் நாலு, நாலரை வரை சமாளிக்க முடியுமா என்ற ஐயம் வந்தது பஞ்சுவுக்கு.
இன்னும் பெரிய பாத்திரங்களை ரெடி பண்ணி எடுத்து வந்திருக்கலாமோ என்று தோன்றியது. இத்தனைக்கும் தேங்காய் சாதம், புளியஞ்சாதம், லெமன் சாதம், சாம்பார் சாதம், தயிர்சாதம் என்று ஐந்து வகையான அன்னங்களைத் தயார் செய்வதற்குள் சிவகாமிதான் என்ன பாடு பட்டு விட்டாள்? இதில் இன்னொரு பங்கு வேணும் என்றால் அவளும்தான் என்ன செய்வாள் தனியொரு ஆளாய் நின்று. தன்னால் அந்த அளவுக்கு அவளுக்கு உதவ முடியவில்லையே? அத்தோடு மற்ற சரக்குகளைத் தான் ரெடி பண்ண வேண்டியிருக்கிறதே?  இந்த உதவாக்கரைப் பிள்ளையை வைத்துக் கொண்டு இன்னும் என்னதான் பண்ணுவது?
அவன் மட்டும் நல்லநிலையில் இருந்தான் என்றால் இந்தக் கஷ்டங்கள் எல்லாம் வந்திருக்குமா? இல்லை நான்தான் இங்கு இருந்திருப்பேனா? அவன் எங்கிருப்பானோ? நான் எங்கிருப்பேனோ? அதற்குத்தான் கொடுப்பினை இல்லையே? ஒருவனுக்காக இன்று எல்லோரும் கிடந்து லோல் பட வேண்டியிருக்கிறது. எல்லாமும் இந்தக் குடும்பத்திற்காகத்தான் என்றாலும், அவன் ஒருவனை மையமாக வைத்துத்தானே இயங்க வேண்டியிருக்கிறது?
கொண்டு போய் ஆஸ்பத்திரியிலா சேர்க்க முடியும்? அல்லது வேறே எங்காவது சிகிச்சைக்கென்று அனுப்ப முடியுமா? எதுவுமில்லாமல், பிழைப்பைப் பார்க்காமல், இவனை இழுத்துக் கொண்டு, பாவங்களைத் தொலைக்க சேத்திரங்களுக்குச் செல்ல முடியுமா?
எத்தனையோவிதமான மன அவசங்கள்…..எல்லாவற்றிற்கும் காலம்தான் விடை சொல்ல வேண்டும்….எண்ணச் சுழல்களுக்கிடையே இயங்கிக் கொண்டிருந்தார் பஞ்சு.
தண்ணீர் தீர்ந்து விட்டதென்று குடத்தைத் தூக்கிக் கொண்டு கிளம்பிப் போயிருந்தான் பரசு. அது மட்டும் எப்படித் தெரிந்தது? தொட்டியை நிறைத்து, குடங்கள் காலியாய் நின்றனவே அதுதான் அவன் கணக்கு போலும்…
வெகு நேரமாயிற்றே…! போனவனை இன்னும்  காணவில்லை? நினைத்தபோது பக்கென்றது மனசு. ஒருவேளை அப்படியே சினிமாப் பார்க்க உட்கார்ந்து விட்டானோ?
எப்பயாச்சும் ரொம்ப அத்தியாவஸ்யம், அவசரம்னா தியேட்டர்ல போய் பிடிச்சிக்குங்க சாமி….நான் சொல்லிப்புடறேன்….. – தேவர் சொல்லியிருந்தது  நினைவுக்கு வந்தது. சந்தை நாட்களிலெல்லாம் அங்கு சென்று பிடிப்பதுதான் வழக்கமாயிருக்கிறது. ஏதோ புண்ணியத்திற்கு நடந்து கொண்டிருக்கிறது. வேறு யாரையும் அவர்கள் இவ்வாறு அனுமதிப்பதில்லை.
தம்பி பரசு….போனமா, பிடிச்சமா, வந்தமான்னு இருக்கணும்….அங்க இங்க உட்கார்ந்துடப்படாது….புரிஞ்சிதா…..மெயின் கேட்டு வழியா போயிடாதீங்க….சைடு சிங்கிள் கேட் இருக்குல்ல….அங்க போய் நில்லுங்க….திறப்பான்….சொல்லியிருக்கேன்….போயிட்டு சடுதியா வாங்க பார்ப்போம்…..அக்கறையாய்ச் சொல்லித்தான் அனுப்பியிருந்தார். எல்லாத்துக்கும் தலையாட்டிக் கொண்டான் பரசு. உணர்ந்து ஆட்டினானா இல்லை பொம்மலாட்டமா என்பதை இப்போது நினைக்கத் தோன்றுகிறது. மனசு பதறியது பஞ்சுவுக்கு. இவ்வளவு நேரம் எப்போதும் ஆனதேயில்லை. வியாபாரத்தில் கவனமாய் இருந்தாயிற்று. அடுப்பில் வேகும் பண்டத்தையும், சாப்பிட்டுக் கொண்டிருக்கும் வாடிக்கையாளர்களையும், புதிதாய் சந்தை நாளன்று வந்திருப்போரையும் தான் மட்டுமே கவனித்தாக வேண்டும். யாரிடமும் கணக்கு விடுபட்டு விடக் கூடாது. ஒவ்வொருக்கும் எதெது கொடுத்தோம் என்பதை மனதில் வைத்திருக்க வேண்டும். அதற்குக் காசு வாங்க வேண்டும். கூட வாங்கி விட்டால் பிரச்னை. குறைய வாங்கினாலும் பிரச்னைதான். அதுவாவது தன்னோடு போகும். அதிகமாய் வாங்கி விட்டால் நாணயம் போய் விடுமே…!
மன்னிக்கணும்….அவனுக்குப் புத்தி சரியில்லே…..அதான் தப்பாச் சொல்லிட்டான்….நீங்க சொல்றதுதான் கரெக்ட்….அதுவே கொடுங்கோ….. – என்று கடந்த வாரச் சந்தையின்போது நடந்த சம்பவத்தை நினைத்துக் கொண்டார் பஞ்சு.
என்னா சாமி….காசு புழங்குற இடத்துல இப்டி ஆளை வச்சிட்டிருக்கீங்க….உள்ளாற போய் உட்காரச் சொல்லுங்க…..-ஒருத்தன் சொல்லிவிட்டுப் போனான்.
யேய்…அதெல்லாம் இல்லப்பா….எல்லாம் நல்ல பையன்தான் அவுரு….. – சொல்லிச் சமாளித்தவர் தேவர்.   ஒருவகையில் அவர் அங்கு வந்து காப்போனாய் உட்கார்ந்து கொள்வது இவருக்குப் பாதுகாப்பாய்த்தான் இருந்தது. கடையை வாடகைக்கு விடாமல் இருந்த போதும், தினமும் திறந்து வைத்துக் கொண்டு அப்படி அமர்ந்து வருவோர் போவோரிடம் பேச்சுக் கொடுத்துக் கொண்டு கழிப்பது அவர் வழக்கமாயிருந்திருக்கிறது. அதை இப்போது கூடாது என்று சொல்ல முடியுமா? எப்பொழுதும் போல் வருகிறார். அவருக்கென்று உள்ள நாற்காலியை எடுத்து, வழக்கமான இடத்தில் போட்டுக் கொண்டு அமர்ந்து விடுகிறார். இருந்துவிட்டுப் போகட்டுமே, நமக்கென்ன நஷ்டம் என்று விட்டுவிட்டார் பஞ்சு. ஒருவகையில் அவர் இருப்பது இவருக்கும் பாதுகாப்புத்தான். புது இடம், புது மனிதர்கள்…..தன்னைப் பொறுத்தவரை பதமான மனிதர் தேவர். இதற்கு முன் வாடகைக்கு விட்டிருந்த போதெல்லாம் இப்படி அவர் வந்து உரிமையாய் அமர்ந்ததில்லை என்றும், இப்போதுதான் வழக்கமாக்கியிருக்கிறார் என்றும் சொன்னார்கள்.. தன் மீது அவருக்குள்ள பிரியத்தை இப்படி வெளிப்படுத்துகிறார் என்று நினைத்துக் கொண்டார் பஞ்சு.
என்னாச்சு…? பரசுவை இன்னும் காணலே……திடீரென்று நினைப்பு வரப் பதறி விட்டார்.
அய்யய்ய…!ஆளக் காணமா…? பின் பக்கமா வந்திருப்பாருன்னுல்ல நினைச்சேன்…..
அரை மணி நேரத்துக்கும் மேலே ஆச்சு….நானும் வேலை மும்முரத்துல மறந்துட்டேன்…. - பதறினார் பஞ்சு. உடம்பு நடுங்க ஆரம்பித்திருந்தது.
இருந்தமேனிக்கே சத்தம் கொடுத்தார் தேவர். நாலு கடை தள்ளி நின்றவர்கள் ஓடி வந்தார்கள்.
ஏய்…சாமி பையன் தியேட்டர் பக்கம் தண்ணி பிடிக்கப் போனாரு….என்னன்னு பார்த்திட்டு வாங்கடா…… -
ஓடினார்கள் அவர்கள். பஞ்சுவுக்கு, தான் போய்ப் பார்க்க வேண்டும் என்ற பரபரப்பு. கடையை விட்டு விட்டு, எரியும் எண்ணெய்ச் சட்டியைப் பாதியில் அணைத்து விட்டு எங்கே செல்வது? ஆட்கள் சாப்பிட்டுக் கொண்டு வேறு இருந்தார்கள். அவர்களைக் கவனிக்க ஆரம்பித்தார். கவனம் முழுவதும் சாலையிலேயே இருந்தது. அடுத்து நின்று கொண்டிருந்தவர்கள் வந்து உட்கார்ந்தார்கள். நல்லவேளை…அன்று வடையும், பஜ்ஜியும், பகோடாவும், சாதங்களும் எல்லாமுமாய் சரிவிகிதத்தில் நகர்ந்து கொண்டிருந்தது. அடுப்படிக்கும், சப்ளை செய்யும் இடத்திற்கும், கல்லாவிற்குமென விசுக் விசுக்கென்று நகர்ந்து கொண்டிருந்தார் பஞ்சு. ஒரே அறையில் தட்டி மறைப்புக்குப் பின்புதான் அடுப்படி. பக்கத்தில் ஒரு அலமாரி. எடுக்க, போட என்று ஓரளவு வசதிதான். அங்கேயே அமர்ந்து செய்பவர்களுக்கு சாவகாசமாய், பதமாய் காரியங்கள் முடியும். உள்ளுக்கும் வெளிக்குமாகச் சீரழிந்தால்…..தனியொருவராய்க் கவனிக்கத் திணறினார் பஞ்சு. வயசாகிப் போனதில் தள்ளாமை வந்துவிட்டதோ என்று கூட ஒரு சந்தேகம் வந்தது. முன்னமாதிரி அதிரடியாய்ச் செய்ய முடியவில்லையே என்று நினைத்துக் கொண்டார்.
போனவர்கள் திரும்பியிருந்தார்கள்.
அங்க ஆளில்லீங்களே அய்யா….என்றார்கள் ஒரு முகமாய். அடுத்து அவர் என்ன சொல்வார் என்ற எதிர்பார்ப்பில் நின்றார்கள்.
கொட்டகைக்குள்ள பார்த்தீங்களாடா….. என்றார் தேவர்.
அதான் Nஷா முடிஞ்சிருச்சே….என்றார்கள். அப்போதுதான் மணியைப் பார்த்தார் தேவர்.அட, ரெண்டு தாண்டிடிடுச்சா….நேரம் போனதே தெரிலயே…..என்றவாறே எழுந்தார்.
சாமி, பயப்படாம இருங்க….எங்கயாச்சும் பக்கத்துல போயிருப்பாரு….வந்திடுவாரு….வீடு வரைக்கும் போயிட்டு வாரேன்….போகைல கவனிச்சேன்னா தள்ளி விடுறேன்….என்றுவிட்டு நடந்தார்.
அவர் செல்லும் திசையையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு நின்றார் பஞ்சாபகேசன். மனதில் கலக்கம் புகுந்திருந்தது இப்போது.
அவன் கொண்டு போனானே…சிவப்புக் குடம்…அதாச்சும் இருந்திச்சா. அங்கே? என்றார் நின்றவர்களைப் பார்த்து. அவர்கள் இவரை ஒருமாதிரிப் பார்த்தார்கள்.
குடம் போனாப் போகட்டும் சாமி…ஆளைக் காணலியே…..என்றார்கள்.
நான் அதுக்குக் கேட்கல்லே…அங்கதான் போனானாங்கிறதை உறுதிப்படுத்திக்கத்தான்….கேட்டேன்…..
பார்க்கலியே சாமி…..சொல்லியிருந்தீங்கன்னா அதையும் பார்த்திட்டு வந்திருப்போம்….என்றுவிட்டு அவர்களும் நகர்ந்து விட்டார்கள்.
கடையில் சாப்பிடுபவர்களைத் தவிர வேறு யாருமில்லை. ஒவ்வொருவராய் எழுந்து கை கழுவிக் கொண்டிருந்தார்கள். உள்ளே போய் எண்ணெய்ச் சட்டி அடுப்பை அணைத்தார் பஞ்சு. கடையில் புகை வெப்பம் படிப்படியாய்க் குறைய ஆரம்பித்தது. அவர் மனதுக்குள் புழுக்கம் புகுந்திருந்தது.
எல்லோரும் போயிருந்தார்கள். அவரைத் தவிர யாருமில்லை. ஜீவனில்லாதது போல் என்னவோ ஒரு சத்தம் வந்தது. என்னதிது? என்று திரும்பியபோதுதான் அது தனது செல்போன் மணிச் சத்தம் என்பதே அவருக்கு உரைத்தது. எடுத்து, உறலோ…! என்றார் தீனக் குரலில்.  
என்னண்ணா….பரசு நன்னா வேலை செய்றானா…? அவனை வெறுமே உட்காரவே விடாதீங்கோ….ஏதாச்சும் வேலை குடுத்துண்டே இருங்கோ….அப்பத்தான் மூளை அந்தக் காரியத்துலயே கண்ணா இருக்குமாக்கும்… – எதிர் வரிசையில் சிவகாமியின் உற்சாகமான குரல் இவரைத் துணுக்குற வைத்தது.
அது…. வந்து….இல்லை…..அவன்….. …… என்னவோ சொல்ல வாயெடுத்தார் பஞ்சு. வார்த்தை வரவில்லை. தொண்டைக் குழி அடைத்தது. நா அப்புறம் பேசறேனே……என்றார்.
சாப்டேளா…..ரெண்டு பேரும் முதல்ல சாப்பிடுங்கோ…மணி இரண்டரைக்கு மேல் ஆயிடுத்து….வேலை செய்யத் தெம்பு வேண்டாமா…,?
சரி….சரி….. – சொல்லிக் கொண்டே ஃபோனைக் காதிலிருந்து எடுத்தார். மேலும் சிவகாமி என்னவோ சொன்னது போலிருந்தது. அதைக் காதில் வைத்துக் கேட்கும் மனநிலையில் அப்போது அவர் இல்லை.
எங்கே போயிருப்பான்? இப்போது அவனை எங்கே என்று  போய்த் தேடுவது? – இந்தக் கேள்வி அவர் மனதை அரிக்க ஆரம்பித்தது.
நான்தான் சொன்னனேல்லியோ….அவனைக் கண் பார்வையிலேர்ந்து விலக்கிடாதீங்கோன்னு….எதுக்காகச் சொன்னேன், கவனமா இருக்க மாட்டேளா? உங்களை யாரு அவனைத் தண்ணியெடுக்க அனுப்பச் சொன்னா….? வழக்கமா எடுத்து விடுற ஆள்ட்டயே சொல்ல வேண்டிதானே?…கண்ணுக்குக் கண்ணா அவனை வச்சிக்கணும்னு கருத்தாச் சொன்னது இதுக்குத்தான்னு நீங்க புரிஞ்சிக்கலையா? இப்போ என் பிள்ளையை நான் எங்கேன்னு போய்த் தேடுவேன்? ஐயோ, பகவானே….ஈஸ்வரா….இதென்ன சோதனை?  பரசு, ஏண்டா இப்டிச் செஞ்சிட்டே? அம்மாவை விட்டுப் போக உனக்கு எப்பிடிறா மனசு வந்தது?
சிவகாமியின் அடுக்கடுக்கான கேள்விகளும் புலம்பல்களும்  அடுத்தடுத்துக் குடைய ஆரம்பிக்க, மனம் பேதலித்துப் போய் செய்வதறியாது நின்று கொண்டிருந்தார் பஞ்சு என்கிற பஞ்சு மனசு கொண்ட பஞ்சாபகேசன்.  
                     /*************************************************************/“
    






கருத்துகள் இல்லை:

  நெஞ்சறுப்பு - நாவல் - இமையம் - எழுத்தாளர் சுகுமாரன் விமர்சனம் - மற்றும் கருத்து. இதில் ஏற்க முடியாதது...சுகுமாரன் சொல்லிய கருத்தில்...எந்த...