08 ஆகஸ்ட் 2019

என்னத்த சொல்லி-என்னத்த செஞ்சு உஷாதீபன், பேசும் புதிய சக்தி ஆகஸ்ட் 2019 இதழ் “என்னத்தே கன்னையா“


என்னத்த சொல்லி-என்னத்த செஞ்சு                   உஷாதீபன்,                                 பேசும் புதிய சக்தி ஆகஸ்ட் 2019 இதழ்                                                             என்னத்தே கன்னையா“                                                                              
ப்படி ஆரம்பிக்கும்போதே நமக்கே ஒரு அலுப்பு வந்து விடும்தான். அதுதான் உண்மை. மனிதன் கூடியானவரை எந்தப் பிக்கல் பிடுங்கலும் இல்லாமல் வாழ விரும்புபவன்தான். நாளையும் பொழுதையும் தங்கு தடங்கலின்றி, சுலபமாக நகர்த்தி விட வேண்டும் என்பதில்தான் அவனுக்கு விருப்பம். அப்படியாப்பட்டவனுக்கு சிக்கல் வந்தாலோ, சிக்கல் மேல் சிக்கல் வந்தாலோ அல்லது இழுவையான காரியங்கள் வந்து அமைந்தாலோ, ஒன்றை முடிக்க வேண்டும் என்று கிளம்பி தடங்கல் வந்து நீட்டித்தாலோ, முடிக்க முடியாமல், முடிவில்லாமல்  இழுத்துக் கொண்டே போனாலோ அலுப்பு சலிப்பு என்பது சர்வ சாதாரணமாக வந்து விடுகிறது. ஆளே அசந்து போய் உட்கார்ந்துவிடும் அபாயமும் உண்டு. மனித இயல்பு அது. அல்லாமல் எதைத் தொட்டாலும் விடாது அலுத்துக் கொண்டே நகர்பவர்களும், இருக்கத்தான் செய்வார்கள். நடப்பது நடக்கட்டும் என்று கிடப்பார்கள். அவர்களுக்கு எதிலும் முழு நம்பிக்கை சட்டென்று வந்து விடாது. தானும் அலுத்துக் கொண்டு, சுற்றியிருப்பவர்களையும் சோர்வடையச் செய்து விடுவார்கள். உரிய காலக் கெடுவில் காரியங்கள் தானே முடிவடையும்போது, அப்பாடா…ஒரு வழியா முடிஞ்சிதுப்பா….என்று ஆசுவாசம் கொள்வார்கள்.
என்னய்யா இது…இருக்கவும் மாட்டேங்குது…போகவும் மாட்டேங்குது…காலப் பிடிச்ச சனி மாதிரி….சரி… போ…இனி என்னத்த செய்றது…? வந்தா வருது…போனாப் போவுது……..விட்டுத் தொலைப்போம்…-என்று உதறுபவர்களும் உண்டுதான்.
அப்டியெல்லாம் இல்லீங்க….சொல்ல வேண்டியதச் சொல்லி…செய்ய வேண்டியதக் கச்சிதமாச்  செய்திருவோம்….கவலைப்படாதீங்க….
“என்னத்த…சொல்லி…..என்னத்த…செஞ்சு….. – அந்த அலுப்பு எத்தனை பொருத்தமாய் தக்க இடத்தில்  வந்து உட்கார்ந்து கொள்ளுகிறது பாருங்கள்…..கேட்கும் ஒவ்வொரு மனிதனும் தனக்குத்தானே சொல்லிக் கொள்வது போலான வசனம் இது…! அதைச் சொன்னால்தான் அவன் மனது சமாதானமாகிறது. அதுவே அவன் டென்ஷனைக் குறைக்கிறது.
இப்படிப் படு பொருத்தமான காட்சிகளில் இந்த வார்த்தைகளைப் புலம்பி, கூடவே நம்மையும் புலம்ப வைத்து, தன்னை அந்தக் காட்சிகளின் மூலம் நிலை நிறுத்திக் கொண்டார் இவர். படத்தில் வரும் காட்சிகளில் இவர் இருந்தால், சொல்ல வேண்டிய நேரத்தில் படம் பார்க்கும் ரசிகர்களே இவருக்கு முந்திக்கொண்டு அந்த வசனத்தைச் சொல்லி தங்களைக் குஷிப் படுத்திக் கொண்டார்கள். அவர்கள் சொல்ல நினைத்த அந்தக் குறிப்பிட்ட காட்சியில் அந்த நடிகர் இந்த வசனத்தைச் சரியாக உச்சரித்ததும், தாங்கள் நினைத்தபடியே, சொன்னபடியே படத்திலும் அவர் சொல்லி அலுத்துக் கொள்வதைக் கண்டு விழுந்து விழுந்து சிரித்தார்கள். பின்னர் அதுவே அவர் பிரான்ட் ஆகிப் போனது. என்றால் அந்த ஒரு வரி வசனம் எவ்வளவு பிரபலம் என்று எண்ணிப் பாருங்கள். பட்டப் பெயராய் முன் நின்று அவரை ஞாபகப்படுத்தும் அளவுக்குப் பிரபலமாகிவிடுகிறது. பிரபலமாகிவிட்டது. அதன் உயிர்த்துவம் அப்படி இடம், காலம், நேரம் பார்த்துப் பொருந்திப் போய்த் தன்னைத் தகவமைத்துக் கொள்கிறது.
ஒரு நடிகன் ஒரு படம் முழுக்க தன்னை நிலை நிறுத்திக் கொள்ள நடிப்பாய் நடித்துத் தள்ள வேண்டியதில்லை. ஏதேனும் ஒரு குறிப்பிட்ட காட்சியிலான அவனது பாவங்களில், அசைவில், ஒரு சின்ன ஸ்டைலில், ஒரு சிறு, யாரும் எதிர்பாராத, புதிய, ஆளுக்கும், காரெக்டருக்கும் பொருத்தமான   வசன உச்சரிப்பில், அதன் மறுபடியும் மறுபடியுமான இடம் பொருந்திய வெளிப்பாட்டில் தன்னை நிலைநிறுத்தி, காலத்துக்கும் ரசிகர்களிடம் தங்களை அடையாளப்படுத்திக் கொண்டு நின்று விட முடியும்.
அப்படி தமிழ் சினிமா ரசிகர்களால் நின்று நிலைத்து நினைக்கப்பட்டவர்தான் பழம்பெரும் நகைச்சுவை நடிகரான திரு என்னத்தே கன்னையா…..! இவர் நடிப்பில் கண், வாய், மூக்கு, காது, கன்னம், நெற்றி, தாடை மற்றும் பேசும் பேச்சு  என்று பலவும் கோணிக்கொண்டு நகைச்சுவையை அள்ளித் தெளிக்கும்.
தமிழ் சினிமாவின் தலையெழுத்து சிறந்த நடிகர்களைத் தொடர்ந்து ஆதரிக்காதது. அவருக்கு ஏற்ற கதாபாத்திரம் இருந்தால்தானே…! என்று பதில் வரலாம். ஏற்ற பாத்திரம், ஏற்காத பாத்திரம் இப்படி எல்லாவற்றிலும் சோபிக்கக் கூடியவர்கள்தான் அவர்கள். காரணம் அவர்களின் நாடக அனுபவம். அங்குதான் அவர்கள் நடிப்பின் இலக்கணத்தைக் கற்றுக் கொண்டார்கள். தன் பாணி என்னவாக இருக்கும், இருந்தால் பொருந்தும், பொருந்தினால் ரசிக்கப்படும் என்பதை உணர்ந்தார்கள். வசன உச்சரிப்பு எப்படி இருக்க வேண்டும், உடல் மொழி அந்தந்தப் பாத்திரத்திற்கேற்றபடி எப்படி இயங்க வேண்டும், எப்படிப் பார்க்க வேண்டும், எப்படிப் பேச வேண்டும், எப்படிச் சிரிக்க வேண்டும், எப்படி முறைக்க வேண்டும், எப்படித் திரும்ப வேண்டும், எப்படி விலக வேண்டும்…எப்படி…அமைதி காக்க வேண்டும்……என்று அணு அணுவாய்த் தங்களைச் செதுக்கிக் கொண்டு தேர்ந்த சிற்பியின் வடிவாய் கலை நயத்தோடு உருப் பெற்றார்கள்.
‘முதலாளி கன்னையா’ என்று அறியப்பட்ட என்னத்தே கன்னையா 1942 முதல் நாடகக் குழுவில் இயங்கி வந்தவர். அங்குதான் தன் கலைப்பயணத்தைத் துவக்கியிருக்கிறார். எம்.ஜி.சக்ரபாணி மற்றும் டி.கே.ஷண்முகம் நாடகக் குழுவில் பணியாற்றிய, நடித்த அனுபவம் இவருக்கு நிரம்ப உண்டு. 1950ல்தான் ஏழைபடும்பாடு  என்ற திரைப்படத்தில் முதன் முதல் நடித்தார். திரைப் பயணம் ஆரம்பமான முதல் படம் அது. எஸ்.எஸ்.ராஜேந்திரன், தேவிகா, எம்.என்.ராஜம் ஆகியோர் நடித்த முதலாளி திரைப்படம்தான் இவருக்கு நல்ல பெயரை ஈட்டித் தந்தது. ஆகையால் அது முதல் “முதலாளி கன்னையா” ஆனார். பிறகு படங்கள் ஒவ்வொன்றாய்ச் சேர ஆரம்பித்தன. மொத்தம் 250 படங்களுக்கும் மேல் நடித்திருக்கிறார் என்னத்தே கன்னையா. ஆனாலும் வாழ்க்கை செழிப்பாய் இருந்ததாய்த் தெரியவில்லை. இரண்டு மகன்கள், நான்கு பெண் பிள்ளைகள் என்று இவரது குடும்பம் பெரிசு. மனைவியை இழந்த நிலையில் குடும்பத்தை எப்படிக்  கடைத்தேற்றினார் என்பது தெரியவில்லை.
ஃபிரெஞ்சுக் கவிஞர் விக்டர் ஹியூகோவின் les miserable-ஐ  கவியோகி சுத்தானந்தபாரதி மொழிபெயர்த்து “ஏழை படும் பாடு” என்ற நாவலாகி பின்னர்  திரைப்படமாக வந்தது. பழைய முதுபெரும் நடிகர் நாகையா இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தார். ஜாவர் என்ற போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்த சீதாராமன் என்ற எழுத்தாளர் பின்னாளில்  ஜாவர் சீதாராமன் ஆனார். உடல் பொருள் ஆனந்தி…என்ற மெஸ்மெரிஸக் கலையைப் புகுத்திய புதுமையான நாவல் இது.  இதுதான் என்னத்தே கன்னையாவின் முதல் படமாக அமைந்தது. இந்த ஏழைபடும்பாடு நாவலை முதலில் சுத்தானந்த பாரதியே புத்தகமாக வெளியிட்டார். பின்னர் தனலெட்சுமி பதிப்பகம் அதை வெளியிட்டது. அதன் பின்னர் மணிவாசகர் பதிப்பகம் இந்நாவலை வெளியிட்டிருக்கிறது.
கண்ணதாசனின் கருப்புப்பணம் படத்திலும் ஒரு படத் தயாரிப்பாளர் வேடத்தில்  என்னத்தே கன்னையா நடித்துப் பிரபலமானார். பாசம் படத்தில் நடித்தும் புகழ் பெற்றார். நான் மேலே சொன்னதுபோல யாரும் எதிர்பாரா வண்ணம், இதற்குமுன் யாராலும் செய்யப்படாத வகையில்,புதிய முறையில் நகைச்சுவைக் காட்சியில் அறியப்பட்டால் நினைவு கூறுவதாகவும், புகழ் மிக்கதாகவும் அமையும் என்பதை நிரூபணம் செய்யும் வகையில் பாசம் படத்தில் கன்னையா தன் வசன உச்சரிப்பை அமைத்துக் கொண்டு நடித்தார். அந்தப் படத்தில் “ப“ என்ற எழுத்து உச்சரிப்பு அவருக்கு முழுமையாக இரு உதடுகளும் ஒட்டிக் கொண்டு அழுத்தமாகப் பேச வராது. பதிலாக அப்படி வரும் வார்த்தைகளையெல்லாம் காற்று ஊதுவதுபோல் “ஃப.“ என்றே உச்சரிப்பார். உதாரணமாக பக்கீர்  என்பதை ஃபக்கீர் என்று சொல்வார். -  உங்களுக்கு ஆனாலும் பழுத்த அனுபவம்….என்பதை  ஃபழுத்த அனுஃபவம் என்று மிகச் சரியாக உச்சரிப்பார்.  அவர் ஃபேசியது மிகவும் ரசிக்கப்பட்டது. அப்படிக் ஃபேசுவதைக் கேட்டால் நமக்கே அந்த ஃபழக்கம் வந்து விடும் என்ஃபது உறுதி. படம் வந்த புதிதில் நிறையப் பேர் இப்படிப் பேசிக் கொண்டு அலைந்தார்கள் என்பது உண்மை.
வசனங்களை ஏற்றுக் கொண்டிருக்கும் பாத்திரங்களுக்கு ஏற்றாற்போல், முற்றிலும் பொருந்தி வருவதுபோல், சுள்ளுச் சுள்ளென்று பேசுவதும், அதன் பொருள் புரிந்து பாவங்களைக் கச்சிதமாகக் காட்டுவதும், வெடுக் வெடுக்கென்று துடிப்பதும், இவரின் நடிப்பின் இலக்கணமாக இருந்து அது தமிழ் ரசிகர்களால் மிகவும் சந்தோஷமாக ரசிக்கப்பட்டது. வரவேற்கப்பட்டது.
முதலாளி படத்தில் இவர் வீட்டு வேலைக்காரர் செந்தாமரை. அழுத்தம் திருத்தமாக இவர் பேசும் வசனம், வேலை செய்யும் இடத்தில் எடுத்துக் கொள்ளும் உரிமை, ஆகியவை அந்த வீட்டில் பல வருஷங்களாக வேலை பார்க்கும் ஒரு பணியாளுக்குக் கிடைத்த சுதந்திரத்தைப் பறைசாற்றும் விதமாய் இருக்கும்.
செந்தாமரை….வீட்டுல வேலை மள மளன்னு நடக்கணும்…. –
ஆம்மா…இப்பத்தான் வசந்த் தம்பி இறங்கினமாதிரிப் பேசுறீங்க….
மாதிரி என்னடா மாதிரி…வந்தாச்சு….தந்தி வந்திருக்கு பாரு….
ஆஉறா…தந்தி வந்தாச்சா….சர்த்தான்…சர்த்தான்….சர்த்தான்…..என்று சொல்லிக் கொண்டே ஆடிக்கொண்டே சுறுசுறுப்படைவார் கன்னையா……
போதும்…போதும்…காலா காலத்துல போய் ஆக வேண்டிய காரியத்தப் பாரு….
 ஆஉறா…காலா காலத்துல வேல எல்லாத்தையும் முடிச்சிர்றேன்….
மானேஜர் தம்பி…காபி சாப்பிடுங்க….. – இது டி.கே.ராமச்சந்திரனைப் பார்த்து முதலாளியம்மாள்.
ஏ… நம்ம வசந்த் தம்பி வர்றதுக்கு இன்னும் மூணே மூணு நாள்தான் இருக்கு….
அதுக்குள்ள நம்ம பங்களாவ சும்மாப் பளபளன்னு சிங்காரிச்சிப்புடறேன் சிங்காரிச்சு….என்று விரல் சுண்டி அவர் பேசும் வசனம் நம்மை உற்சாகப்பத்தும்.
ஆம்மா…அய்யா பெரிய சித்திரக்காரரு…பள பள பளன்னு  சிங்காரிச்சுப்புடுவாரு…..சிங்காரிச்சு…-இது முத்துலட்சுமி.
ஏய்….உனக்கென்னடி தெரியும்….நீ நேத்து வந்தவ….
ஆம்மா…முந்தா நேத்து வந்தவ….
எதுத்தா பேசுற….உன்னச் சொல்லிக் குத்தமில்லடி…காலம்தான் கலிகாலமாச்சே…ஆம்பளையப்  பொம்பளை மதிக்காத காலம்…
டே…டே…டே…போதும் நிறுத்துறா….ஏ…செண்டு…போ உள்ளே….
என்னங்க…நீங்க… - கொஞ்சியவாறே தலையைச் சொறிவார் முத்துலெட்சுமி.
ஏய்ய்ய்….சும்மா போகாத….காய்கறிப் பையைக் கைல பிடிச்சிக்கிட்டு மூச்சு விடாம நட…..-என்று சொல்ல…ஒரு இடி இடித்துவிட்டு நகர்வார் முத்துலட்சுமி.
ஐய்ய்யி…..என்று வெட்கத்தில் நெளிவார்…கன்னையா…..முதலாளியம்மா முன்னால் நடந்த அந்த சரசம் அவரை வெட்கப்படுத்தி விடும்.
காட்சிகளும் வசனங்களும் என்னவோ சாதாரணமாய்த்தான் தோன்றும். ஆனால் இந்தச் சாதாரண வசனங்களையும் மெருகூட்டி சுவைப்படுத்தும் கன்னையாவின் கோணங்கி நடிப்பு பார்ப்பவரைப் பரவசப்படுத்தும்.
நான், நம்நாடு, சொர்க்கம், மூன்றெழுத்து என்று இயக்குநர் டி.ஆர் ராமண்ணா  படங்களில் நடித்து மிகவும்  பேசப்பட்ட நடிகரானார். நான் - படத்தில்தான் எப்பொழுதும் விரக்தியடைந்த மனத்தினராய் அந்தப் பிரபலமான வசனத்தைப் பேசினார்.   ஊறீம்…அந்த வசனம் இவரால் பேசப்பட்டபிறகு பிரபலமானது. தொட்டதற்கெல்லாம் “என்னத்த பேசி…என்னத்த செஞ்சு…….என்னத்தச் சொல்லி…என்னத்த செஞ்சு….என்று அலுத்துக் கொண்டே செல்வார். அந்த வசனமும் அந்தக் காரெக்டரும்…படத்தின் வெற்றியோடு கைகோர்த்துப் பயணம் செய்த காலம் அது. அதன் பிறகுதான் “என்னத்தே கன்னையா” என்ற அடைமொழிக்கே ஆளானார். அதன் பிறகு வந்த படங்களில் அவரது பெயர் அப்படியே போடப்பட்டது. நம்நாடு படத்தில் எஸ்.வி.ரங்காராவோடு இருக்கும் ஒரு துணைக் கதாபாத்திரத்தில் வருவார். சொர்க்கம் படத்தில் நாகேஷ் சொல்லும் ஜோசியத்தின் பலனாய் பணக்காரராகி விடுவார்.
சமீபகாலம் வரை …அதாவது 2012 ல் இறக்கும்முன்பு வரை அவ்வப்போது நடித்துக் கொண்டுதான் இருந்தார். வடிவேலுவுக்கு அப்பாவாக வந்து நடு நடுங்குவார். சாயங்காலம் ஆறு மணிக்கு மேல் வேறு  ஆளாக இருக்கும் வடிவேலு வீடுவந்து, தந்தையான இவரையும், தாயாரையும் விரட்டும் விரட்டில் நமக்கே இவர் நடுங்கும் நடுக்கம் பார்க்கப் பரிதாபமாய் இருக்கும். அது வேற வாய்…இது நாற வாய்…என்று வடிவேலு அந்தக் குடிகாரன் பாத்திரத்தில் வெளுத்து வாங்குவார்.
ஏ…கோவிந்தசாமியேவ்….ஏ…கோவிந்….சாமி….. – என்று குடி போதையில் அவர் அலற மனைவிக்குப் பின்னால் ஒளிந்து கொண்டு கன்னையா பதறும் பதற்றம்…மறக்க முடியாதது. வயது முதிர்ந்த அவரது தோற்றம் நம்மைப் பெரிதும் பாதிக்கும். நல்ல கலைஞர்கள் வயசான காலத்தில் வசதி வாய்ப்பின்றி எப்படி நலிந்து போய்க் கிடக்கிறார்கள் என்று தோன்றும்.
இவரும் வடிவேலுவும் சேர்ந்து நடித்த காட்சிதான் கடைசியான பிரபலமாய் அமைந்தது. அதுதான் “வரும்…ஆனா வராது….”   -   வண்டி வருமா என்று வடிவேலு கேட்க….கார் டிரைவரான கன்னையா…..வரும்ம்ம்ம்….ஆனா…வராது….என்று பதில் சொல்ல குழம்பிக் கோபப்படுவார் வடிவேலு.
திடீர்னு ஒரே சமயத்துல ரெண்டு மூணு படம்னு வந்து சேரும்…இல்லன்னா ஒண்ணுமே வராது….என்று இயக்குநர் பி.வாசுவிடம் அவர் நொந்து சொன்ன வார்த்தைகள்தான்….இயக்குநரை உறுத்தி உசுப்பிவிட….அந்தச் சோகமே ஒரு பிரபலமான நகைச்சுவைக் காட்சிக்கு சாட்சியாய் அமைந்து போனதுதான் இங்கே வேதனை..தொட்டால் பூ மலரும் என்பது படத்தின் பெயராய் அறியப்படுகிறது.
இன்னொரு விஷயத்தையும் இங்கே சுட்டிக்காட்டியே ஆக வேண்டியிருக்கிறது. பலரையும் போலவே என்னத்தே கன்னையாவுக்கும் பல லட்சங்கள் பாக்கி என்பதுதான் அது. ஓரிரு ஆண்டுகளுக்கு முன் செந்தில் அவரது பேட்டியில் இதே விஷயத்தைச் சொல்லி வருத்தப்பட்டிருந்தார். திரும்பி வந்த செக் எல்லாம் பணமாகியிருந்தா, இன்னொரு சம்பாத்தியம் சம்பாதிச்ச மாதிரி என்றிருந்தார். சில ஆண்டுகளுக்கு முன் இறந்து போன கதாநாயக நடிகர் ஜெய்சங்கரின் டாக்டராய் இருக்கும் மகன் அம்மாதிரியான பாக்கி சில கோடிகள் தேறும் என்று கூறி  அந்தக் காசோலைகளை எடுத்துக் காட்டினார். அதுபோலவே நம் என்னத்தே கன்னையாவுக்கும் லட்சங்கள் தேறும் பாக்கிதான் என்று அறிய முடிகிறது. பாவம்…நாம் என்ன செய்ய முடியும்?அவர்கள் பொது வெளியில் இதனை வெளிப்படுத்துவதால் நாம் நினைத்துப் பார்க்க வேண்டியிருக்கிறது. அவ்வளவே…!
தமிழ் சினிமா எத்தனையோ நகைச்சுவை நடிகர்களைக் கடந்து வந்திருக்கிறது. கடத்தி வந்திருக்கிறது.  கருப்பு-வெள்ளைப் படங்களில் சோபித்த அந்தப் பழம் பெரும் நடிகர்கள் பலர் பின்னர் காலப் போக்கில் காணாமல்தான் போனார்கள். தொடர்ந்த வாய்ப்புக்கள் ஏனோ அவர்களுக்கு இல்லாமல் போனது. பிறகு சில வருட இடைவெளியில் ஏதேனும் ஒரு படத்தில், ஒரு காட்சியில் அல்லது ஒரு சில காட்சிகளில் அவர்கள் தோன்றும்போது அந்தப் பழைய மெருகு மறைந்து, பரிதாபமான தோற்றம் அவர்கள் மீது இரக்கம் கொள்ள வைத்தது நம்மை. எனக்கு வாய்ப்புக் கொடுங்கள் என்று யாரிடமும் போய்க் கேட்காத, கேட்டு நிற்காத நடிகர்கள் அவர்கள். படம் முழுக்க வரும் பெரிய கதா பாத்திரங்களையும், ஒன்றிரண்டு சீனில் வரும் சிறிய கதா பாத்திரங்களையும் பெருமையோடு ஏற்று, தொழில் பக்தியோடு வேலை செய்தவர்கள்.  கலர்ப் படங்கள் வர ஆரம்பித்த எழுபது கடைசியிலும்…எண்பதுகளுக்குப் பின்னாலும்  அந்தப் பழைய அருமையான நடிகர்களும் தொடர்ந்து ஆதரவும், பட வாய்ப்பும் பெற்றிருப்பார்களேயானால், அவர்களின் சொந்த வாழ்க்கையும் நன்றாய் செழித்து ஓங்கியிருக்கும்…தமிழ் ரசிகர்களுக்கும் மிகுந்த ரசனையோடு கூடிய படங்கள் கிடைத்து அவர்களைக் கொண்டாடியிருப்பார்கள் என்பது நிச்சயம்.
வசன உச்சரிப்பினாலும், ஆழமான, கச்சிதமான உடல் மொழியுடன் கூடிய அனுபவ நடிப்பினாலும், ஏற்றுக் கொண்ட பாத்திரத்துக்கு அர்த்தபூர்வமாய் அழுத்தம் தந்து, கடமையைச் சரியாகச் செய்த,  தொழிலின் மீது மிகுந்த பக்தி கொண்டிருந்த அந்தப் பழம் பெரும் நடிகர்கள் இன்றைய இளையதலைமுறை நடிகர்களுக்கு என்றும் வழிகாட்டியாய் இருப்பார்கள் என்பது மட்டும் நிச்சயம்.
              --------------------------------------------------------------------------------------                           

கருத்துகள் இல்லை: