08 ஆகஸ்ட் 2019

சிந்துஜாவின் “நிழல்கள்” – சிறுகதை வாசிப்பனுபவம் – உஷாதீபன் – இதழ்:-‘பேசும் புதிய சக்தி”-ஆகஸ்ட் 2019.



சிந்துஜாவின் “நிழல்கள்


” – சிறுகதை வாசிப்பனுபவம் – உஷாதீபன் –
இதழ்:-‘பேசும் புதிய சக்தி”-ஆகஸ்ட் 2019.
                                                                                   
     மூத்த தலைமுறை அப்பாக்கள் பெரும்பாலும் மோசம்தான். அப்படியென்றால் ஒழுக்கம் குன்றியவர்கள் என்று பொருளில்லை. ரொம்பவும் கண்டிப்பானவர்கள். கண்டிப்பு என்றால் அதற்குத் தகுதியானவர்களாய் இருந்தார்கள். அப்படித் தங்களைப் பொறுப்பான இடத்தில்  வைத்துக் கொண்டார்கள். பொறுப்பும் கண்டிப்பும் மிக்கவர்களாய் விளங்கினார்கள்.  அந்த ஸ்தானத்திலிருந்து இறங்காது அங்கிருந்துதான் மற்றவர்களை நோக்கினார்கள். மற்றவர்களிடமிருந்த நல்லவைகளை விட குற்றம் குறைகள்தான் அவர்களின் கண்ணுக்குப் பட்டன. ஏதாவது நொண்டு, நொடை சொல்லிக் கொண்டேயிருந்தார்கள். அதைக் குடும்பத்திலுள்ளவர்கள் அவர்கள் மீதான மதிப்பில் பொறுத்துக் கொண்டார்கள். சொன்னால் சொல்லிவிட்டுப் போகட்டும் என்று ஒதுக்கிவிட்டு மதித்தார்கள். ஆனால் அந்த அப்பாக்கள் மிகுந்த பற்று பாசம் மிக்கவர்களாயும் இருந்தார்கள் என்பதும் அங்கே உணரப்பட்டது, உணரப்படாமலும் போனது. ஆனாலும் கூட பெற்ற பிள்ளைகளால், சுற்றங்களால் மதிப்பு மிக்கவர்களாய்த் திகழ்ந்தார்கள். இந்தக் குடும்ப அமைப்பின் மதிப்பு மிக்க,  மாட்சிமை பொருந்திய அனுபவங்களாய், சாட்சிகளாய்  விளங்கியவை அவைகள்.
       ஒவ்வொரு மனிதனிடமும் அவரவர்களின் குற்றம் குறைகளோடு சேர்த்துப் பார்ப்பதும் பழகுவதும்தான் மனித சமுதாயத்தின் இயல்பு. குறைகளே இல்லாத பியூரான மனிதன் எவனுமில்லை. அதுபோல் விலக்கு என்று யாரும் யாரையும் ஒதுக்கி விடுவதுமில்லை எல்லாமும் கலந்ததுதான் இந்த வாழ்க்கை என்று  இந்த உலகம் இதுநாள்வரை அப்படித்தான் இயங்கிக் கொண்டிருக்கிறது. அனுபவச் செழுமைதான் மனிதனுக்கு அந்தப் பக்குவத்தை வழங்கி, அவனை நிதானிக்க வைத்து, பெரும் விவேகியாக மாற்றி வைத்து விளையாடிக் கொண்டிருக்கிறது.
       ஒவ்வொரு குடும்பங்களில் என்னென்னவோ நடந்து போகின்றன. எதிர்பாராதவைகள் நிகழ்ந்து, புள்ளி வைத்து ஒழுங்காக இழுக்கப்பட்டிருந்த கோலம் எப்படி எப்படியோ கலைந்து போகிறது. அதனால் அந்தக் குடும்பங்களில் அமைதி குலைந்து போகிறது. நிம்மதியற்றுப் போகிறது. பரஸ்பரம் ஒருவருக்கொருவர் பகிரங்கமாய், வெளிப்படையாய்ப் பேசிக் கொள்ள முடியாமல், சண்டை போட்டு விலகவும் முடியாமல், மனதுக்குள்ளேயே புழுங்கிக் கொண்டு, நடப்பது நடக்கட்டும் என்று விதியின் மீது பாரத்தைப் போட்டு விட்டு  முகத்துக்கு முகம் பார்க்காது, பேசாது, சிரிக்காது, நடை பிணமாய் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். பொருளாதாரத் தேவை மிதமிஞ்சி நிறைந்த இடங்களும் கூட அப்படித்தான் இருந்து கொண்டிருக்கின்றன. பணம் வாழ்க்கையின் ஒரு காரணி. அதுவே வாழ்க்கையாகி விடாது என்பதற்கு இவையே சாட்சி.
       பொருளாதாரத் தேவை எதுவுமில்லாத, வசதி வாய்ப்பு மிகுந்த மேல் நடுத்தரக் குடும்பங்களில் நிம்மதி தவழ்ந்து கொண்டிருக்கிறதா என்ன? அப்படியும் கிடையாது. இந்த வாழ்க்கை யாரையும் விட்டு வைப்பதில்லை. காரணம் அதில் தவழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்கள். அவர்கள் ஒவ்வொருவரின் வித்தியாசமான குணாதிசயங்கள். குணக் கேடுகள் என்றுதான் அவைகளைச் சொல்லியாக வேண்டும். மனிதர்கள் இருக்குமிடமெல்லாம் பிரச்னைகள் இருந்து கொண்டுதான் இருக்கும். அப்படித்தான் இன்றுவரை இந்த உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது.
       அப்படியிருக்கையில் தந்தையின் மீது மிகுந்த பாசம் கொண்ட மகன், என்னதான் பிணக்கு இருந்தாலும், அது ஒரு பக்கம் இருந்துவிட்டுப் போகிறது என்று உடம்பு முடியாமல் கிடக்கும் அவரைப் பார்க்காமல் இருப்பது தவறு என்று கருதி வந்து பார்த்துச் செல்வதுதானே இந்த உலக நடைமுறை. வந்து நின்றது தவறா? தந்தையின் மீது மிகுந்த மரியாதை கொண்ட சேஷூ. உடல் நலமின்றி படுக்கையில் கிடக்கும் அவரைப் பார்க்க வந்த வேளையிலும் அவரிடமிருந்து வாங்கிக் கட்டிக் கொள்கிறான். வேற்று ஜாதிப் பெண்ணைக் கல்யாணம் செய்ததால் வெளியே போ என்று விரட்டியவரை இப்போதுதான் பார்க்கிறான். அதே நினைவுகளில்தான் அவர் இருக்கிறார்.
       நடுங்கும் உதடுகளோடு சொல்கிறார்.  “அவ நல்லவ இல்ல. நீதான் ஏமாந்துட்டே….“
       கைக்குழந்தையோடு உடன் வந்து நிற்கும் மனைவியை ஏற்றுக் கொள்ளா விட்டாலும், அந்தக் குழந்தையைப் பார்த்து அவர் மனம் இரங்குகிறது. அதன் கைகளைப் பிடித்து முத்தமிடுகிறார். கண்களிலும் நீர் கசியத்தான் செய்கிறது. பிறகு வார்த்தைகள் மட்டும் இவ்வாறு வருகிறது. அவன் மிகுந்த வேதனைக்குள்ளாகிறான்.
       இப்பதான் என்னை முதல் தடவையாப் பார்க்கிறார். பளார்னு கன்னத்துல அறைஞ்ச மாதிரிச் சொல்றாரே…? என்கிறாள் அவள். வெளியேறுகிறார்கள் அத்தோடு.
       காலம் எல்லாவற்றையும் சரி செய்து விடும் என்று பார்த்தால் இவர் விஷயத்தில் ஒன்றும் நடக்கவில்லையே? அம்மாவைப் பிடிக்காது. என்னைப் பிடிக்காது. இப்போது ராணியையும் பிடிக்கவில்லை. எதில் சேர்ப்பது இந்த மனுஷனை?
                அப்பாவின் சிநேகிதர் நரசிம்மன் சொல்கிறார். ரெஸ்ட்டுல இருக்கட்டுமேன்னு டாக்டர் மருந்து கொடுத்திருக்கார். மனசுல பீதியோ, சந்தேகமோ, பிரமையோ எதுவோ ஒண்ணு அவனை நிம்மதியில்லாம அடிச்சு அலைக்கழிச்சிண்ட இருக்கு. டெலூஷனல் டிஸார்டர்னு டாக்டர் சொல்றார். இந்த வயசுல இப்படி வியாதி வரச்சே…நாமதான் பொறுமையா இருக்கணும்…எப்ப, எப்படி யாரோட பழகறோம்ங்கிற வித்தியாசமெல்லாம் இந்த மாதிரிப் பேஷன்ட்கிட்டே இருக்காதாம்… ஜிம்மி மாதிரி தான் இவனும் (நாய்க்குட்டி) நம்ப காலை, கையை வந்து நக்கினா நாம கோவிச்சிக்கிறோமா? அதுபோலத்தான்….
       அதுவே கையையோ, காலையோ கடிச்சு விட்டுண்டே இருந்தா? என்கிறான் இவன். அப்பாவின் நண்பரோடு திரும்பவும் உள்ளே செல்கிறார்கள். யார் வந்திருக்கான்னு தெரியறதா?-நரசிம்மன் கேட்கிறார்.
       சேஷூ…என்கிறார் அப்பா. அடி சக்கே…அப்ப எழுந்திரு…ஒரு வாக் போயிட்டு வரலாம் என்கிறார். அதைக் காதில் வாங்காதது போலிருந்த அவர்…ஜானு எங்கே…? இங்கதானே விளையாடிண்டிருந்தது? என்கிறார். அத்தையின் பெண் பத்மாவுடைய குழந்தை அது. முறையாக அத்தையின் பெண்ணைத்தான் சேஷூ கல்யாணம் செய்திருக்க வேண்டும். அந்த விருப்பம் நிறைவேறாதது சேஷூவின் தந்தைக்கு அதிர்ச்சி. அதனாலும் ஏற்பட்ட வெறுப்பு.
அப்பாவைப் பார்க்கப் பரிதாபமாய் இருக்கிறது இவனுக்கு. எப்படியிருந்த மனுஷன்….? உலர்ந்த சருகாய்க் கிடக்கிறார். ஆனாலும் அவர் பேச்சு? அத்தையிடம் ஆதங்கத்தைப் பகிர்ந்து கொள்கிறான் சேஷூ.
       ஏண்டா வந்தோம்னு இருக்கு எனக்கு. என்னோட பாசத்தையெல்லாம் பொசுக்கிடுவார் போல்ருக்கு. இவ்வளவு கஷ்டப்படுறாரேன்னு நான் வருத்தப்பட்டுண்டு இருக்கிறப்போ, சூட்டுக் கோலால இழுத்த மாதிரி இப்படி சுடு சொல் பேசறாரே…! இவருக்கு ராணியைப் பத்தி என்ன தெரியும்? எத வச்சு அவ கெட்டவ, கெட்டவன்னு புலம்பறார்? நான் ஏமாந்துட்டேன்கிறார்…என்னத்தைக் கண்டாராம் இவர் இப்படிச் சொல்றதுக்கு? நான் செய்தது பிடிக்கல…வீட்டை விட்டுப் போன்னார்..போயிட்டேன். அதுக்கப்புறம் அம்மாவைக் கூடப் பொணமாத்தான் பார்த்தேன்….இவர் ஆடின ஆட்டத்துக்கெல்லாம், ஒரு பேச்சும் பேசாம நானும் பார்த்துண்டுதானே கெடக்கேன்…? ஒரு பொண்ணைப் பத்தி இப்படிக் கேவலமாப் பேசினார்னா என்ன அர்த்தம், அப்பாங்கிற மரியாதையையே போக்கிடுவார் போல்ருக்கே? தங்க ஊசின்னா எடுத்து கண்ணைக் குத்திக்க முடியுமா என்ன?
       அவனின் இந்தத் தாளாத வருத்தத்துக்குப்பின்தான் அத்தையிடமிருந்து அந்த வார்த்தை வருகிறது. யாருக்கும் தெரியாத அந்த உண்மை அது.
       சொல்ல வேண்டாம்னுதான் இருந்தேன் இத்தனை நாளா…என்னோட போகட்டும்னு பார்த்தேன்…
       என்ன சொல்ல வருகிறாள் அத்தை…? கவனிக்கிறான்.
       அவன் ராணியைப் பத்தி சொல்றான்னு நீ நினைச்சிண்டு இருக்கே. அவனுக்கு அவளைப் பத்தி என்ன தெரியும் நீ கேட்ட மாதிரி?
       அப்படீன்னா?
       அவனுக்கு இந்தாத்துல வேற யாரு நன்னாத் தெரிஞ்சா? அவ ஏன் அப்படிப் போனா? எதுக்காகங்கிறதெல்லாம் இன்னைவரைக்கும் பதில் கிடைக்காத கேள்விகள்தான்….
       அத்தையின் வார்த்தைகள் இவனை அதிர வைக்கின்றன. தலையில் பாறாங்கல் விழுந்ததுபோல் உணர்கிறான் இவன்.
       நிழல்கள் எங்கு, எப்படி விழுந்திருக்கின்றன என்பதை நாமும் இந்தக் கடைசி வரியின் மூலம் உணர முயல்கிறோம்.
       பிராம்மண பாஷையில் இன்று யாரும் கதை எழுதுவதில்லை. தி.ஜா.விடம்தான் அந்த சுகத்தை அனுபவித்து உணர முடியும். ஸிந்துஜா அவரது கதைகளில் பயன்படுத்தும் பிராம்மண பாஷையும், உரையாடல்களும் மிகுந்த ரசனை மிக்கதாக,பொருத்தமான வார்த்தைப் பிரயோகங்களாக, படிப்போர்க்கு ஆத்ம சுகமளிக்கின்றன. இந்தக் கதையை ஆகஸ்ட் 2019 மாதத்தின் சிறந்த சிறுகதையாகக் கொள்ளலாம் என்று அறுதியிட்டுச் சொல்கிறேன் நான்.
                     ---------------------------------------------------------------------------------------------
      
      
             


                                                


கருத்துகள் இல்லை:

  சிறுகதை                 தினமணி கதிர் 29.12.2024  பிரசுரம் “நெத்தியடி”             எ தையாவது சொல்லிட்டே இருப்பியாப்பா? – எதிர்பாராத இந்...