18 ஜூலை 2019

“முழு மனிதன்” - சிறுவாணி வாசகர் மையம் வெளியீடு-கோவை- சிறுகதைத் தொகுதி முன்னுரை


“முழு மனிதன்” –சிறுகதைத் தொகுதிக்கு          
முன்னுரை    
          வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கவும் சிறந்த எழுத்தாளர்களின் படைப்புக்களை இன்றைய இளைய தலைமுறையினருக்குக் கொண்டு செல்லவும் என்று ஏற்படுத்தப்பட்ட “சிறுவாணி வாசகர் மையம்” மூலம் எனது இந்தச் சிறுகதைத் தொகுதி வெளிவருவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியும், பெருமையும் அளிக்கிறது. மாதம் ஒரு புத்தகம் என்கிற செய்திதான் என்னை முதலில் ஈர்த்தது. வெளியிட்ட புத்தகங்களின் தரமும் அந்த ஆர்வத்தைத் தூண்டியது. இத்தனை சிறந்த புத்தகங்களை வெளியிட்டுள்ள மையத்தின் மூலம் என் புத்தகமும் ஒன்று வந்தால் எப்படியிருக்கும் என்ற ஆவல் பிறகு ஏற்பட்டது. அது இப்போது நிறைவேறியிருக்கிறது. இதற்காக இந்த அமைப்பைத் திறம்பட நடத்தி வரும் திரு.ஜி.ஆர்.பிரகாஷ் அவர்களுக்கும் அவருக்கு மிகுந்த உறுதுணையாய் இருக்கும் மேடம் திருமதி சுபாஷிணி அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
       ஐந்து பேர் கொண்ட குழு பரிசீலித்துத்தான் இத் தொகுதி ஒப்புதல் செய்யப்பட்டிருக்கிறது. அதுவே சிறுவாணி வாசகர் மையத்தின் தர நிர்ணயம்.  இது எனது 16-வது சிறுகதைத் தொகுதி. எண்ணிக்கையா முக்கியம்? எத்தனை கதைகள் நிற்கின்றன என்பதே முக்கியம். எனக்கு நானே இதை உணர்ந்தவன்தான்.  எப்பொழுதும் ஜனரஞ்சகமான கதைகளை எழுதுவதையே விரும்புபவன் நான். அதுதான் எனக்கு சரளமாக வருகிறது. ஒரு குறிப்பிட்ட விஷயம் என் மனதைப் பாதிக்கிறது என்றால் அதை வலியுறுத்த எந்த வழியில் சொன்னால் படிப்போர் மனதில் இடம் பிடிக்கும் என்றுதான் யோசித்து எழுதுகிறேன். எங்கே துவக்க வேண்டும் என்பது மட்டும் தோன்றிவிட்டால் பிறகு அது தானாகவே வளர்ந்து சரியான இடத்தில் நின்று விடும். .. முழுக்கத் திட்டமிட்டுக்கொண்டு என்றுமே நான் கதை எழுதியதில்லை. எழுத எழுத வந்ததுதான், வளர்ந்ததுதான். உருவம், உத்தி என்பதையெல்லாம் விட உள்ளடக்கம் எதைச் சொல்கிறது என்பதைப் பிரதானப்படுத்தித்தான் கதைகளை எழுதுவேன் நான்.  சொல்ல வந்த கருத்துத்தான் முக்கியம் எனக்கு.
       இலக்கியத்தரம் வாய்ந்த சிறுகதைகள், பத்திரிகைத் தரம் வாய்ந்த சிறுகதைகள் என்று க.நா.சு சொல்வார். பத்திரிகைத் தரம் வாய்ந்த சிறுகதைகளிலும் இலக்கியத் தரம் அமைந்து விடுவது உண்டு. அப்படியான கதைகளில் எனக்கும் பங்கு உண்டு.  இங்கு பல எழுத்தாளர்களின் சிறந்த கதைகளை எவரும்  வாய்விட்டு, மனம்விட்டுச் சொன்னதில்லை.  அது போல் என் கதைகளும் நிறையத் தப்பியிருக்கின்றன. அல்லது கண்டுகொள்ளாமல் விடப்பட்டிருக்கின்றன. அதுபற்றிக் கவலை கொள்வதற்கில்லை. காரணம் நான் என் மனசாந்திக்கு எழுதுகிறேன். எனக்குப் பிடித்திருக்கிறது, எழுதுகிறேன். எனக்கு வருகிறது, எழுதுகிறேன். என் வாசிப்புப் பழக்கத்திலிருந்து அந்த உந்துதல் கிடைக்கிறது, கிடைத்துக்கொண்டேயிருக்கிறது, எனவே எழுதுகிறேன். எழுதுவேன். அது ஒன்றுதான் என் வாழ்வை செழுமையாக நகர்த்திக் கொண்டு செல்கிறது.
       விடாது எழுதுபவன், தொடர்ந்து எழுதிக்கொண்டேயிருப்பவன் என்கிற முறையில் என்னை, என் எழுத்தை அறியாதவர்கள் பெரும்பாலும் இருக்க முடியாது என்பது என் துணிபு. சொல்லாதவர்கள் என்று வேண்டுமானால் இருக்கலாம். அது தமிழ்ப் படைப்புலகச் சூழலில் தவிர்க்க முடியாமல் அமைந்து போன அவலம். என்னைச் சொல்லாதவர்களைப்பற்றி நான் நிறையச் சொல்லியிருக்கிறேன். அது என் பண்பு. எதைக் கொண்டு வந்தோம், கொண்டு செல்ல…என்கிற பதமான மனநிலை.  தொடர்ந்து எழுதிக்கொண்டேயிருப்பவன் என்பதுதான் எனக்குக் கிடைக்கும் சந்தோஷம், நிறைவு.
       இத்தொகுதியில் குடும்ப அமைப்பின் உளவியல் ரீதியிலான பிரச்னைகள் வெளிப்படையாக விவாதிக்கப்பட்டு, படைப்பாளியின் மன உலகம் கதை உலகமாக விரிந்திருக்கிறது. பாவனை எதுவுமின்றி, பகட்டு இன்றி, மனமொழி நடையே எவ்வித ஒப்பனையுமில்லாமல் நேர்மையுடன் வெளிப்பட்டிருக்கிறது.
       அங்கு கொஞ்சம், இங்கு கொஞ்சம் என்று இருவேறு இடங்களில்  இல்லாமல் தன்னிடமிருக்கும் எல்லாப் புத்தகங்களோடும், நினைத்த நேரம் நினைத்ததை எடுத்துப் படிக்கும் வசதியோடு வாழ்வதுதான்,  தான் முழு மனிதனாக இருப்பதற்கான அடையாளம் என்று கருதும் பெரியவர்,
தாங்கள் அறிந்த தந்தையை விட, தங்கள் அம்மா அறிந்த அப்பா வேறு வகையிலானவர் என்பதைப் பிள்ளைகள் உணரும் உணர்ச்சிகரமான தருணம்,
சுயநலம் மட்டுமே பிரதானமாகக் கொண்டு அலையும் மனிதர்களை பொது நலச் சங்கத்தில் அடையாளம் காணும் பிரம்மநாயகம்,
பழகி விட்டால் பாசத்தைக் கொட்டும் மக்கள், உறவுகளினின்றும் மேம்பட்டு அன்பு செலுத்தும் நாயுடு, கடன் கொடுத்த மனிதன் அதைத் திருப்பித் தரப்போவதில்லை என்று புலம்பும் மனைவி, கடனாளியின் மனையாள் இறந்துவிட குழந்தைகளோடு அவர் தனித்துவிடப்படும் கொடுமை தாங்காது எதையும் பொருட்படுத்தாது சமயம் பார்த்து அவருக்கு உடனடியாக உதவும்  தன்மை,
மனைவியைக் களவாடிய போலீஸைப் பழிவாங்கும் தருணம்,  பொதுச் சொத்தாக இருக்க வேண்டிய ஒன்று ஒரு தனிப்பட்ட குடும்பத்திற்கு மட்டும் விடாது உபயோகப்படுவதைக் கண்டு கொதிக்கும் தருணம் நகர்ப்புற வளர்ச்சியின் ஊடாக அவர்கள் இடத்தைக் காலி செய்ய வேண்டிய நிலை கண்டு வருந்தும் மனம்,
மகனோடு வந்து இருக்கும் தந்தை மனையாளும் உடன் வந்திருந்தால்தான் பூரணத்துவம் என்று உணரும் நேரம்
தொண்டைக்குக் கீழே போனால் எல்லாம் ஒன்றுதான் என்று மனதுக்குப் பிடிக்காவிடினும் இருக்கட்டும் என்று வறுமை கருதி இடம் கொடுக்கும் அவன் கருணை,
இதெல்லாம் போகாது, போகாது என்று சொல்லியே பலவற்றையும் விலையற்றுப் பெற்றுச் செல்லும் அவனிடம், அவனின் அனுபவ சாரம் கலந்த கதைகளைக் கேட்டாலே போதும் என்று இன்புறும் அவர்
வாடகை கொடுக்காத எதிர் வீட்டு மாடிக்காரன் மீதான போலீஸ் புகாருக்கு, அவன் தன்னைப் பொருத்தவரை எந்த இடையூறும் இல்லாதவனாகத்தானே இருந்திருக்கிறான் என்று நினைத்துத் தயங்கும் மனது,
மில் கூலி வேலைக்குக் கூட்டம் கூட்டமாய் சென்று திரும்பும் வயதுப் பெண்களின் பாடு, பெற்றவர்கள் வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டு அவர்களின் வீடு திரும்பலுக்காகக் காத்திருக்கும் அவலம்,
கூலி வேலை செய்பவன், கம்பிக்கட்டு வண்டி இழுப்பவன் என்றாலும் மனைவி சொல்லே மந்திரம் என்று குடும்பம் நடத்தும் அவன், பொறுப்பான மனைவியின் பொருத்தமான யோசனையினால் ஒரு நல்ல வேலையை அடையும் அதிருஷ்டம்,
அரசியல் கட்சிப் பேச்சாளனாய் இருந்து, இன்று அத்தனையும் ஒதுக்கி கட்டினவளே சதம் என்று கிடக்கும் தாண்டவன்,
எதிர்வீட்டுக்காரருக்கு மட்டும் எல்லாமும். எல்லா நல்லதுகளும் நடந்து விடுகிறது, தன் வாழ்க்கையில் எதுவுமேயில்லையே என்று புகையும் மனம் கொண்ட ஒருவர்,
மனநலமில்லாத பிள்ளையை வைத்துக் கொண்டு அல்லல்படும் ஒரு குடும்பம்.,
சின்ன வயதில் செய்த தப்பு, நாய் புத்தியாய்த் தொடர, வயதான பின்பும் அந்த எண்ணங்கள் மறையாமல் துடித்திட, தற்செயலாய் அவளைச் சந்திக்கும்போது அவளோடு கழித்த காலம் இப்போதும்  இனிக்கும் விடாத நாய் புத்தி கொண்ட அவர்…
இப்படிப் பல்வேறு பரிமாணங்கள் கொண்ட கதாபாத்திரங்கள் இந்தத் தொகுப்பில் ஸ்வாரஸ்யமாய் உலா வருகின்றன.
       வாசக மனம் சற்று எடுத்துக் கொடுத்தாலே போதும், பின் தொடர்ந்து செல்லும் என்கிற நம்பிக்கையில் தொகுப்பின் சாற்றைப் பிழிந்து இங்கே வழங்கியிருக்கிறேன். எடுத்தால் முடிக்காமல்  கீழே வைக்க முடியாது என்பது மட்டும் நிச்சயம். வாசிப்பு அனுபவம் என்பது அவரவர் கற்பனை சார்ந்தும், ஆழ்ந்த ரசனை சார்ந்தும் அமையும் அற்புதமான தனி உலகம்  என்பதால்,  இந்தத் தொகுதி மிகுந்த சிறப்புப் பெறும் என்கிற பலமான நம்பிக்கை எனக்கு நிச்சயம் உண்டு.
       இக்கதைகளை வெளியிட்ட செம்மலர், தினமணி கதிர், இருவாட்சி இலக்கிய இதழ், தாமரை, கணையாழி, அந்தி மழை மற்றும் உயிர் எழுத்து ஆகிய இதழ்களுக்கு நன்றி.
       என் அன்பு வேண்டுகோளை ஏற்று தன் உடல்நிலையையும் பொருட்படுத்தாது அக்கறையோடு படித்து அருமையான அணிந்துரை வழங்கிய புகழ்பெற்ற எழுத்தாளர், மதிப்பிற்குரிய  திரு பாவண்ணன் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.
       உங்கள் கையில் இதோ “முழு மனிதன்” -  முழுத் திருப்தியோடு.                                                                                                        அன்பன்,
                                                                    உஷாதீபன்
        

                    

கருத்துகள் இல்லை:

  சிறுகதை                 தினமணி கதிர் 29.12.2024  பிரசுரம் “நெத்தியடி”             எ தையாவது சொல்லிட்டே இருப்பியாப்பா? – எதிர்பாராத இந்...