“மொட்டை மாடி“ – சிறுகதை
– விஜய ராவணன் – வெளியீடு:- “நடுகல்” – இலக்கிய இதழ் -5 வாசிப்பனுபவம்
– உஷாதீபன் ---------------------------------
எழுத்தாளர் வா.மு.கோமு
ஒரு இலக்கிய இதழ் நடத்துகிறார். பெயர் “நடுகல்”. அவர்தான் அதன் ஆசிரியர். இதழ் வடிவமைப்பு
பிரமாதமாயிருக்கிறது. உடனே வாங்கிப் படித்து விட வேண்டும் என்கிற ஆவலைத் தூண்டுகிறது.
இதுவரை நான்கு இதழ்கள் கடந்து விட்ட நிலையில் இனியும் தாமதிக்கக் கூடாது என்று ஐந்தாவது
இதழை அனுப்பச் சொல்லி வாங்கிவிட்டேன். கையில்
வைத்துப் படிக்கவே திருப்தியாய் இருந்தது.
நிறையப் புதியவர்கள் இப்போது எழுத வந்திருக்கிறார்கள்.
நன்றாகவும் எழுதுகிறார்கள்.
புதிதாக எழுத வந்திருக்கும் இளைஞர்கள் பலர்
(இந்தக் கதையை எழுதியுள்ள விஜய ராவணன்
இளைஞர் என்றே நினைக்கிறேன். வயது எப்படியோ…எழுத்துக்கு இளைஞர் என்றால் இளைஞர்தானே)
விடாது எழுதுவது மட்டுமின்றி, பதிப்பகங்களோடு கைகோர்த்து, புத்தகங்களும் கொண்டு வருகிறார்கள்.
செலவு செய்து விழாவும் எடுக்கிறார்கள். எல்லாம் மாறிப் போய்விட்டது. பழைய மாதிரி எதுவுமில்லை.
எழுத்து அதுவாக அடையாளம் காணப்பட வேண்டும்,
பிரசுரகர்த்தர்கள் தேடி வர வேண்டும், அவர்கள் இவர்களின் மதிப்பை உணர்ந்து தூக்கிச்
சுமக்க வேண்டும் என்பதெல்லாம் சிலரைத் தவிர மற்றோருக்கு இல்லை என்பது நிதர்சனம்.
ஆனாலும் நாமே எழுதிக் கொள்ளலாம், நாமே வெளியிட்டக்
கொள்ளலாம் என்கிற முனைப்பில் இப்போது வலைத் தளங்களிலும், முகநூலிலும், வாட்ஸ்அப்பிலும்
தினந்தோறும் பலரும் எழுதிக் குவித்துக் கொண்டிருக்கிறார்கள். இதனால் பலதும் பார்வைக்கு
வந்து விடாமல் போகும் அபாயம் நிறைய இருக்கத்தான் செய்கிறது.
நடுகல் போன்ற சிற்றிதழ்களில் படிக்கும் வாய்ப்பு
ஏற்படுமானால் நல்ல படைப்புக்கள் நம் கவனத்துக்கு வரும் சந்தர்ப்பம் கிட்டிவிடலாம்.
அப்படி ஒரு கதைதான் விஜய் ராவணன் எழுதிய “மொட்டை
மாடி” சிறுகதை.
இந்த நடுகல் 5-வது இதழ் ஒரு மொழிபெயர்ப்புச்
சிறுகதையை உள்ளடக்கி மொத்தம் 12 சிறுகதைகளைக் கொண்ட சிறுகதைச் சிறப்பிதழாகவே வந்திருக்கிறது.
ஒரு சிற்றிதழுக்கு கதைகளைத் தேர்வு செய்வது என்பது மிகவும் கவனமாகக் கையாள வேண்டிய
விஷயம். முடிந்தவரை திருப்தியான கதைகளாகத்தான் தேர்வு செய்திருக்கிறேன் என்கிறார் அதன்
ஆசிரியர். ஒவ்வொன்றையும் படிக்கப் படிக்க அவை திருப்தியான கதைகளாகத்தான் இருக்கின்றன
என்று என் வாசிப்பனுபவமும் சொல்கிறது.
குழந்தை பிறந்து ஓராண்டு கழித்து மொட்டை போட்டுக்
காது குத்தி விழாக் கொண்டாடுவார்கள்.. மொட்டை போடுதல் என்பது அப்பொழுதுதான் ஆரம்பிக்கிறது.
பிறகு வெவ்வேறு சந்தர்ப்பங்களில் வேண்டுதல் பொருத்தும், துக்க நிகழ்வுகளுக்கும் என்று
அது நிகழ்கிறது. பல குடும்பங்களில், சில பிரிவுகளில், இறப்பு போன்ற நிகழ்வுகளுக்குக்
கூட மொட்டை போடுதல் என்பது கிடையாது.
இளம் பிராயத்தில் முடி வெட்டிக் கொள்ளவென்று
நம்மை பாட்டி அல்லது அப்பாவோ, அம்மாவோ, பார்பரிடம் அழைத்துக் கொண்டு சென்ற நிகழ்வு
நம் எல்லோருக்கும் நினைவிருக்கும். இந்தக் கதையைப் படித்தபோது என் பாட்டி முடி வெட்டவென்று
ஆற்றங்கரையில் ஆலமரத்தடியில் அமர்ந்திருக்கும் கந்தனிடம் அழைத்துக் கொண்டு போன நிகழ்வு
எனக்கு ஞாபகம் வந்துவிட்டது.
கந்தா…இந்தா சொளையா நாலணா…பிள்ளைக்கு ஒட்ட வெட்டி
கிராப் வச்சு விடு…தெரிஞ்சிதா…?
சரிங்கம்மா….என்று அவனும் நம்மை சடக்கென்று
இழுத்து உட்கார்த்தி கையில் மெஷினை எடுத்துக் கொண்டு ஓட்ட ஆரம்பித்துவிடுவார். காட்டை
அழிக்கப் புறப்பட்ட மிகப் பெரிய யந்திரம் மாதிரியான அந்தக் கருவி இஷ்டத்துக்கு நம்
தலையில் புகுந்து விளையாடும். கையகலக் கண்ணாடி
ஒன்று வைத்திருப்பார். அதைக் கூட நம்மிடம் கொடுக்க மாட்டார். கடைசியாய்த்தான் நம் பார்வைக்கு
அது வந்து சேரும். அதுவும் அவன் பிடித்துக் கொண்டு காண்பிப்பதுதான். கண்ணுக்கு முன்னால்
அவன் பெட்டியில் இருக்கும் அதை நாம் தொடவே முடியாது.
எல்லாம் முடியும் நேரத்துக்கு பாட்டி வந்து
நிற்க….வெட்டிச் சாய்த்த அந்தத் தலையைப் பார்த்து அப்போதும் பாட்டிக்கு திருப்தி வரவே
வராது. ஒட்ட வெட்டுன்னு சொன்னேனோல்லியோ…என்ன பண்ணி வச்சிருக்கே நீ….என்று அவனைச் சாடி,
இன்னும் கொஞ்சம் குறைக்கச் சொல்லுவாள். ஐயோ…பாட்டி..போறுமே…என்று நாம் கத்தினால் கேட்கமாட்டாள்.
ஒட்ட
வெட்டி கிராப் வை….என்ற சொற்றொடர் இன்றும் என் காதுகளில் ஒலித்துக் கொண்டேயிருக்கிறது.
ஒட்ட வெட்டிய பிறகு எப்படி கிராப் வைப்பது? அப்படியென்றால் கிராப் என்பதற்கு பாட்டி
என்ன அர்த்தம் பண்ணிக் கொண்டிருக்கிறாள்? பாட்டி சொல்வதை அவன் எப்படிப் புரிந்து கொண்டிருக்கிறான்?
சீப்பால் வகிடு எடுத்தால் விழவே விழாதே…? அப்படி
வகிடு தெரியாத, வகிடு நிற்காத, படிய ஒதுக்கிச் சீவ முடியாத க்ராப் என்பது எது? இன்றுவரை எனக்கு விளங்காத புதிர்
அது.
எனக்கு
க்ராப் பிரச்னை என்றால் இந்தக் கதையின் நாயகனுக்கு
மொட்டைப் பிரச்னை. அடர்த்தியாக முடி வளரப் பார்த்து, அதை அழகாகபடியச் சீவிக் கண்ணாரக்
காண வேண்டும் என்று அவனுக்கு ஆசை.. ஆனால் அது நிறைவேறவே மாட்டேனென்கிறது. விவரம் தெரிந்த
நாள் முதல் விடாமல் அரங்கேறுகிறது இது வீட்டில் அவன் தந்தை ஒவ்வொரு வேண்டுதலுக்கும்
அவனுக்கு மொட்டை போடுவதற்கு வேண்டிக் கொண்டு விடுகிறார். அதற்காக ஒரு வார்த்தை அவனைக்
கேட்பதேயில்லை. தன்னுடைய விருப்பம் கேட்கப்படாததும், அவர்கள் இஷ்டத்திற்கு சாமிக்கு
வேண்டிக் கொள்வதும், வேண்டிக் கொண்ட நாளில் கோயிலுக்குச் சென்று தலையைக் கவிழ்த்து
அமர்த்தி, தண்ணீர் அடித்து வழித்து
மொட்டை
ஆக்கி விடுவதும், அவனுக்குப் பெரிய குறையாகவும், அவமானமாகவும் இருந்து கொண்டேயிருக்கிறது.
பள்ளியில்
உடன் படிக்கும் பையன்களின் கேலிக்கும் உள்ளாகிறான். தொப்பி அணிந்து போனாலும் அதைத்
தட்டிவிட்டுக் கேலி செய்கிறார்கள். ஒவ்வொரு மொட்டைக்குப் பிறகும்…
அடுத்து
பையன எப்போ கூட்டி வரீங்க…? அடித்த மொட்டையில்
இன்னும் சந்தனம் கூடப் பூசாத நிலையில் அடுத்த மொட்டைக்கு அச்சாரம். ஒரே பலன் மொட்டை
போட்டதற்கு புதுத் துணி. அவ்வளவுதான்.
அடுத்த
பரிட்சை நல்லபடியா முடியட்டும்…என்கிறார் அப்பா.
அவன்
போட வேண்டிய சட்டையைக் கூட அவன் அம்மாதான் தீர்மானிக்கிறாள். ஒரு வகையான கட்டம் போட்ட
சட்டையையே தேர்ந்தெடுக்கிறாள். அதுவும் அவனுக்குப் பிடிக்கவில்லை.
முடி
படிப்படியாய் வளருவதை அடுத்த மொட்டையை நினைத்து பயந்து பயந்தே ரசித்துக் கொண்டிருக்கிறான்.
நீண்டு வளர்ந்த கேசத்தைக் கண்டு ஆச்சரியப்பட்டு, மகிழ்ந்து, அதை யாரோ ஒட்ட வெட்டுவதுபோல்
கனவு கண்டு தூக்கத்தில் அலறுகிறான். அந்த அளவுக்கு மொட்டை விஷயம் அவனைப் பாதித்து விடுகிறது.
அம்மாவின்
வயிறு கொஞ்கம் பெரிதாய் இருப்பதைப் பற்றிப் பாட்டியிடம் கேட்கிறான். உனக்கு தங்கச்சிப்
பாப்பா வரப்போகுது….என்கிறாள் பாட்டி. சந்தோஷமாகிறான். அது வருவதற்குள் தனக்கு முடி
வளர்ந்து விட வேண்டும் என்று இஷ்ட தெய்வத்தைக் கும்பிடுவதற்கு அடையாளமாய் புட்டபர்த்தி சாய்பாபாவை நினைத்துக் கொள்கிறான். அவருக்கு முடி
இருப்பதுபோல் தனக்கும் வளர வேண்டும் என்று.
கண்ணாடியவே
பார்த்திட்டு இருந்தா முடி வளர்ந்திடுமா?
எனக்கு
மட்டும் ஏன் பாட்டி மொட்டை அடிக்கிறீங்க…?
அப்பத்தாண்டா
முடி நல்லா வளரும்…
இவன்
அப்பா தாடியையே ஏக்கத்தோடு பார்க்க….மொதல்ல தலைல வளரட்டும்…அப்புறம் தாடியப் பத்தி
யோசிப்போம் என்கிறார் அப்பா. ரெண்டு பேரும் அவனைக் கேலி செய்வதாய் உணர்ந்து வருந்துகிறான்.
பார்க்கும்
முகங்களுக்கெல்லாம் இருக்கும் அடர்ந்த முடியே இவன் சிந்தையைத் தொந்தரவு செய்கிறது.
என்னைத் தவிர ஒவ்வொருவருக்கும் எத்தனை விதமான முடிகள்? என்று ஏங்குகிறான்.
பள்ளியில்
நடக்கும் மாறுவேடப்போட்டிக்கு காந்தி வேஷம் தனக்கு ஒத்துப்போகும் என்று நினைக்கிறான்.
ரொம்பக் கஷ்டமில்லை…வேட்டியை ஒரு மாதிரிக் கட்டி, கையில் ஒரு குச்சியை வைத்துக் கொண்டால்
போதும் காந்தி ரெடி என்று நினைக்கிறான்.
உனக்கு
தங்கச்சிப் பாப்பா வேணுமா, தம்பிப் பாப்பா வேணுமா என்று கேட்ட நர்சிடம் தங்கச்சிப்
பாப்பாதான் வேணும் என்கிறான். அப்பத்தான் நிறைய முடி இருக்கும் என்று அவன் மனது ஆசைப்படுகிறது.
அப்போ
உனக்குத்தான் மொட்டை…ஒரு மண்டைக்கு இத்தனை மொட்டையா..? அய்யோ பாவம்…என்று பரிதாபப்படுகிறாள்.
குழந்தை பிறந்து…
பாப்பா
நல்ல கலரா இருக்கு…ஆனா தலைல முடி மட்டும் ஏன் இவ்வளவு கம்மியா இருக்கு? – அவன் சொன்னதைக்
கேட்டு அவனைப் பார்த்து அனைவரும் சிரிக்கிறார்கள்.
அதுக்கென்ன
மொட்ட போட்டாப் போச்சு….வளரப் போகுது….என்கிறார் அப்பா. ஷ
யாருக்கு?
என்று அவர் சொல்லாததால் பயத்தோடு சிரிக்கிறான் இவன்.
ஐயோ
பாவம் அவன விட்ருங்களேன்…என்று நமக்கும் சொல்லத் தோன்றுகிறது. வீடுகளில் வேண்டுதல்
நிறைவேற்றுதல் என்பதான வெவ்வேறு நிகழ்வுகளில் குழந்தைகளுக்கு மொட்டை போடுதல் என்பதை
நாம் வழக்கமாகக் கொண்டிருக்கிறோம். ஆனால் அந்தக் குழந்தைகளின் மனசு அதை எப்படி வரவேற்கிறது
என்பதை நாம் யாரும் எண்ணுவதேயில்லை.
அதை
நினைக்கும்போது இந்தப் பையனின் ஏக்கம் சரிதான் என்று இந்தக் கதையைப் படிக்கும்போது
நமக்குத் தோன்றுகிறது. எந்தக் கருவை எடுத்துக்கொண்டேனும் கதை எழுதலாம். அதை எப்படிச்
சொல்கிறோம், சம்பவங்களை எப்படிக் கோர்க்கிறோம், அதன் மூலம் சொல்ல வந்த விஷயம் எப்படி
அழுத்தம் பெறுகிறது என்பதே சிறுகதைக்கான வடிவ நேர்த்தியாகவும், கலை உத்தியாகவும், சிறந்த
உள்ளடக்கமாகவும் உருப்பெற்றுச் சிறக்கிறது.
இளம்
தலைமுறை எழுத்தாளரான விஜய ராவணனின் இந்தச் சிறுகதை அந்த திருப்தியையும், நிறைவையும்
நமக்கு வழங்குகிறது. -----------------------------------------------------
-------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக