“மாலன்
சிறுகதைகள்” கவிதா பதிப்பகம்,
. “கூலி” - சிறுகதை வாசிப்பனுபவம்
“சிறுகதை சமுத்ரம் என்பதை மாலனின் கதைகள் நினைவுறுத்துகின்றன. கடலில் மூழ்குவோர்,
அர்த்தம், அனர்த்தம், அர்த்தமற்றவை, செத்தை, குப்பை, செல்வம் என்று தத்தம் நோக்கத்திற்கு
திறமைக்குத் தக்கவாறு எடுக்கிறார்கள். மாலன் ஆழ்ந்து மூழ்கி, ஜீவதயை, பரிவு, அன்பு,
மனிதனின் ஷேமம், இந்தப் பிரபஞ்சத்தில் அவன் அல்ப ஆயுசில் போய்விடாமல் நிலைத்து நிற்க
வேண்டும் என்ற ஆசை, தன்னில் பிறர்கள், பிறர்களில்தான் என்று அர்த்தங்களைக் கொண்டு வருகிறார்.
இரக்கப்பட்டும் எள்ளியும் பல சமயங்களில் கோபத்தோடும் வயிறு எரிந்தும் வெடுக் வெடுக்கென்று
சூரிக் கத்தி கொண்டு சொற்களால் பேசுகிறார். இந்தக் காலத்தில் சொரணையுள்ளவர்கள் கோபப்படாமல்,
வயிறு எரியாமல் எப்படி இருக்க முடியும்? அப்படியான கோபமும் சொல்லாட்சியும மாலனின் சொத்துக்கள்.
இது தி.ஜானகிராமன் அவர்களின் கூற்று.
கவிதா பதிப்பகம் வெளியிட்டிருக்கும்
அவரது “மாலன் சிறுகதைகள்“ தொகுப்பில் “கூலி” என்கிற கதையைப் படிக்கும்போது தி.ஜா.ரா.
குறிப்பிட்ட மேற்கண்ட கருத்துக்களை நினைக்க வைக்கின்றன. இந்த ஒரு கதையே இந்த எண்ணங்களைக்
கிளர்த்தி விடுகின்றன என்றால், பிரபஞ்சன் அவர்கள் சொல்லியிருப்பதுபோல் சமூக நோக்கம்
கொண்டு, நிர்ப்பந்தம் வருகிறபோது எழுத்தாகிற எழுத்தாக இந்தத் தொகுதியில் உள்ள அனைத்துக்
கதைகளுமே சிறந்து விளங்கும் என்கிற தூய நோக்கிலான நம் ஆவல் புத்தகம் முழுவதையும் படித்துவிட்டுத்தான்
அடுத்த வேலை என்பதாக நம்மைத் தூண்டி நிறுத்துகிறது.
நாட்டில் எத்தனை எத்தனையோ பணிகளில்
சொகுசாய் அமர்ந்து கொண்டு தங்கள் கடமையைச்
சரிவரச் செய்யாமல் கதை பேசிக்கொண்டிருப்பவர்கள்
மத்தியில், சொந்த வேலை பார்ப்பவர்கள் மத்தியில், கடமையிலிருந்து மனசாட்சியின்றித்
தொடர்ந்து தவறுபவர்கள் மத்தியில், அத்துக்கூலிக்கு வேலை செய்துவிட்டு அந்தக் கூலி கூட
ரொக்கக் காசாய்க் கிடைக்காமல், காசோலையாய்க் கைக்கு வருவதை எண்ணி நொந்து, ஐயா….பணமாக்
கொடுத்திருங்க…புண்ணியமாப்போகும்…என்னும் கருப்பசாமியை நினைக்கையில் எடுத்த எடுப்பில்
நம் மனம் வேதனைப்பட்டுத்தான் போகிறது.
பணமாத் தந்தா என் உத்தியோகம்
போயிரும்யா…அம்பது ரூபாய்க்கு மேல ஒத்த ரூபா கூடினாலும் செக்குதான். ஏழு நாள் வேலை
பார்த்திருக்க…நாளைக்கு எட்டு ரூபா மேனிக்கு அம்பத்தாறு ரூபா…இந்தா பிடி செக்கை….போய்
பாங்குல மாத்திக்க என்கிறார் காசாளர்.
என்னங்கய்யா….வெறும் தாளக் கொடுக்கறீங்க…?
– கருப்பசாமியின் குரலில் அத்தனை ஏமாற்றம்.
வெறும் தாளாய்யா இது….செக்குய்யா…அரசாங்க
செக்….பாங்குல கொண்டு கொடு…பணம் தந்திடுவாங்க….
வாணாங்கய்யா…பணமாவே கொடுத்திடுங்க…..
என்னய்யா உன்னோட பெரிய துயரமாப்போச்சு…அம்பது
ரூபாவுக்கு தம்பிடி எகிறினாலும் செக்குதான்னு அரசாங்கம் சொல்லிடுச்சி….ஏழுநா கூலி உனக்கு
அம்பத்தாரு….எப்பிடி பணம் தர்றது நான்…
ஐயா…அம்பது ரூபா கொடுத்திடுங்க
போதும்…..
என்னப் பிடிச்சு உள்ள போடுறதுக்கா…சொன்னா
கேட்கமாட்டே…? எடுத்திட்டுப் போய்யா….போய் பாங்குல கொடுத்தேன்னா உடனே பணத்தைக் கொடுத்திடுவாங்க……
ஐயா என்று திரும்பவும் வற்புறுத்தும்
கருப்பசாமியைத் திட்டுகிறார் அவர். செருப்பு பிஞ்சு போகும் ராஸ்கல்…சொல்லச் சொல்லக்
கேட்க மாட்டே…?
இங்கே சோற்றுக்கு இல்லையென்று
காசுக்கு அல்லாடும் மனிதன். அங்கே வங்கியிலோ…..
ஏன்யா…உங்களுக்கெல்லாம் நேரம்
காலமே கிடையாதா? இதென்ன பாங்கா….இல்ல வட்டிக்கடையா? மூணு மணிக்கு வர்றே? பன்னெண்டு
மணியோட கணக்கு முடிச்சாச்சு….
அரை மணி முன்னாடிதான் இந்தத்
தாளைத் தந்தாங்கய்யா…..
அது உங்க ஆபீஸ் விவகாரம்…அதுக்கு
என்னை என்ன பண்ணச் சொல்றே…?
ரூவா வேணும் சாமி…அதோ அவர்ட்ட
இருக்கு…
அவர்ட்ட இருந்தா…? அள்ளிக் கொடுத்திற
முடியுமா?
பத்திரிகை ஆசிரியரின் கேள்வி
–
நியாயமாய்ச் சொல்லுங்கள்…பாங்க்காரர்களின்
சம்பளம் குறைவுன்னா சொல்கிறீர்கள்?
எங்கள் ஆபீசர்களின் சம்பள விகிதங்கள்
மாற்றி பன்னிரண்டு வருடங்கள் ஆயிற்று….ப்ரமோஷன் வேண்டாம்னு உள்ளூர்லயே இருக்கிற குமாஸ்தா
ஆபீசரவிடக் கூட வாங்குறான்…
ஆபீசரென்ன…குமாஸ்தா என்ன…பொதுமக்களுக்கு
நீங்க எல்லாரும் ஒண்ணுதான்….உங்களைப்போன்றே உங்கள் அலுவலகத்தில் உழைக்கிற இன்னொலு கூலிக்காரன்
அதிகமாகப் பெறுகிற ஐம்பது ரூபா உங்களை உறுத்துது…இல்ல…?
ஆனால் நண்பரே…வாழ்க்கை முழுதும்
உழைத்தாலும் ஒரு பாங்க் ஊழியனோ கல்லூரி ப்ரொபஸரோ அரசாங்க குமாஸ்தாவோ சம்பாதிக்க முடியாத
பணத்தை நாற்பது நாளில், அதிக பட்சம் ஆறு மாசத்தில் ஒரு சினிமா நடிகன் சம்பாதித்து விடுகிறான்.
நம் சமூக முரண்பாடுகள் யாருக்கும் கவலை தருவதில்லை. பியூன்களுக்கும் குமாஸ்தாக்களுக்கும்
கூடுதல் சம்பளம் என்று கொதித்து எழுகிற குரல்கள், இந்த அவலம் குறித்து முணுமுணுப்பது
இல்லை. உங்களுக்கு உங்களைத் தவிர வேறு கவலை இல்லை.
சமூகத்தின் அடிப்படைகளைத் தருவதற்காக உழைப்பவன் இந்த அமைப்பில்
மிகக் குறைவாகவே அவற்றைப் பெறுகிறான். நம்முடைய விவசாயிகள் பாதி நாட்கள் பசித்திருக்கிறார்கள்.
நெசவாளிகள் ஏழைகளாகவும், கடனாளியாகவும் இருக்கிறார்கள். எவருக்கும் எந்தப் பிரயோசனமும்
இல்லாமல் வெறுமனே கிச்சுக் கிச்சு மூட்டி கேளிக்கை ஊட்டுகிற சினிமாக்காரன் லட்சங்களில், கோடிகளில்
சம்பளம் பெறுகிறான். எவ்வளவு பெரிய விசித்திர
அவலங்கள் இது.!
வங்கி –
திறக்க மாட்டாங்களா சாமி…
இன்னிக்கு ஆபீசருங்க ஸ்டிரைக்…சாவி
அவங்க கையில் இருக்கு..வந்தா திறக்கிறோம்.
காலைல வா பணம் தர்றேன்னு சொன்னீகளே…
சொன்னேன்…தப்புத்தான்…இன்னிக்கு
ஸ்டிரைக்ங்கிறது ஞாபகம் இல்லாமப் போயிடிச்சி….
இன்னிக்கி ரூவா கிடைக்காதா சாமி…
ம்உறீம்…சான்ஸே இல்ல. நீ நாளைக்கு….இரு…இரு…நாளன்னிக்கு…ஒண்ணாந்தேதியில்ல…மே
தினம்….நீ பேசாம போயிட்டு ரெண்டு நாள் கழிச்சி வா….
இன்னும் ரெண்டு நாளா? அவுங்க
தாளு கொடுத்தே ரெண்டு நாளாச்சுங்கய்யா…
பாவந்தான்…ஆனா நாங்க என்ன பண்ண
முடியும்? நாங்களும் உன்ன மாதிரிக் கூலிக்காரங்க தான்….நீ படிக்காத வாரக் கூலி….நாங்க
படிச்ச மாசக் கூலி….
என்னப்பா அங்க அரட்டை…தலைக்குத் தல பேசிட்டே நின்னா
எப்டி? குரல் கொடுங்க…
ஜிந்தாபாத்…ஜிந்தாபாத்…. தொழிலாளர்
ஒற்றுமை ஜிந்தாபாத்…..!!!
மாலன் தரும் ஆக்ஸிஜன் பற்றி பிரபஞ்சன்….
நம் ஒழுக்கக் கோட்பாடுகள் பெருமையின்,
சொத்தின், பொருளாதாரத்தின் அடிப்படையில் விளைந்தவை. அவை மனித மனங்களைக் கணக்கில் கொள்வதில்லை.
மாலன் இளைஞர்களைக் குறி வைத்து
இந்தக் கதைகளை எழுதியிருக்கிறா். அவர்களே நாளைய நம்பிக்கைகள். எழுத்துக்கு ஒரு விளைவு
உண்டு. அது சக்தி பொருந்திய பட்சத்தில்.
இங்கே மாறுதல் வரும். உங்களுக்குப்பின்
வருபவரின் நிர்ப்பந்தத்தினால்…கலாசாரம் மீட்கப்படாதவரை இந்த மண்ணில் எந்த மாற்றமும்
நிகழாது. இளைய தலைமுறையினர் குறித்து மாலன் அளவுக்குச் சிந்தித்தவர் எவருமில்லை.
அந்த ஐம்பத்தாறு ரூபாய் செக்கைக்
காசாக்க முடியாமல் கருப்பசாமி படும்பாடு நம்மை நோக வைக்கிறது. பொது மக்களுக்கான அரசாங்க
அலுவலகங்கள், வங்கிகள் இன்னும் பல நிறுவனங்கள் அவர்களை எவ்வாறெல்லாம் அலைக்கழிக்கின்றன,
எப்படி மெத்தனமாய்க் கிடக்கின்றன என்பது நாமறிந்ததுதான். அந்த வேதனைகள் இன்றும் தொடரத்தானே செய்கின்றன?
ஒரு முழுமையான சிறுகதைத் தொகுப்பு
எப்படியிருக்கும் என்பதற்கு மாலனின் இந்தத் தொகுப்பே சான்று.
------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக